மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/012
இணைப்பு: 3
புத்தர் பொன்மொழிகள்
பாவஞ் செய்தவன் இம்மையிலும் துக்கமடைகிறான்; மறுமையிலும் துக்கமடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் துக்கமடைகிறான். தான்செய்த தீய செயல்களைக்கண்டு விசனம் அடைந்து அழிந்துபோகிறான்.
புண்ணியம் செய்தவன் இம்மையிலும் மகிழ்ச்சியடைகிறான்; மறுமையிலும் மகிழ்ச்சியடைகிறான். அவன் இரண்டிடங்களிலும் மகிழ்ச்சியடைகிறான். தான் செய்த நல்ல செயல்களைக்கண்டு மனம்மகிழ்ந்து மேன்மேலும் இன்பம் அடைகிறான்.
ஒருவர் தாம் உபதேசிப்பதுபோல செய்கையில் நடக்காமல் இருந்தால் அவருடைய உபதேசங்கள், மணம் இல்லாத பூவைப்போலப் பயனற்றவை ஆகும்.
ஒருவர் தாம் உபதேசிப்பது போலவே செயலிலும் செய்வாரானால், அவருடைய போதனைகள், மிக அழகான பூவுக்கு நறுமணம் அமைந்திருப்பதுபோல, மிக்க பயனுடையவை ஆகும்.
மூடர்கள் அறிஞருடன் தமது வாழ்நாள் முழுவதம் பழகினாலும், அகப்பை குழம்பின் சுவையை அறியாததுபோல, அவர்கள் அறநெறியை அறிகிறதில்லை.
அறிவுள்ளவர்கள் அறிஞருடன் சிறிதுநேரம் பழகினாலும், நாவானது குழம்பின் சுவையை அறிவதுபோல, அவர்கள் நன்னெறியை அறிந்து கொள்கிறார்கள்.
குற்றங்களைச் சுட்டிக்காட்டிக் கண்டிக்கிற ஒருவரைக் கண்டால், செல்வப்புதையல் இருக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறவர் எனக்கருதி, அவரோடு நட்புக்கொண்டு பழகவேண்டும். அப்படிப்பட்டவரை நண்பராகக் கொண்டு அவருடன் பழகுவது நன்மை பயக்குமேயன்றித் தீமை பயக்காது.
தீயவர்களோடு நேசம் செய்யாதே; அற்பர்களோடு இணங்காதே. நேர்மையுள்ள நல்லவர்களோடு நட்புக்கொள். மேன்மக்களோடு சேர்ந்து பழகு.
பயனற்ற ஆயிரம் செய்யுள்களைப் படிப்பதைவிட மனஅமைதியைத் தருகிற ஒரே ஒரு செய்யுளைப் படிப்பது மிக மேலானது.
மனஅமைதியைத் தருகிற ஒரு செய்யுளானது பயனற்ற ஆயிரம் செய்யுள்களைவிட மிக மேலானது.
முயற்சி இல்லாமல் சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையைவிட, ஆற்றலோடும் ஊக்கத்தோடும் முயற்சிசெய்கிற ஒருவருடைய ஒரு நாள் வாழ்க்கை மேன்மையுடையது.
உத்தம தர்மத்தை அறிந்த ஒருவருடைய ஒரு நாளைய வாழ்க்கையானது, அவ்வுத்தம தர்மத்தைக் காணாத ஒருவருடைய நூறுஆண்டு வாழ்க்கையைவிட மேலானது.
சாவு வராமல் தடுத்துக்கொள்ள இவ்வுலகத்திலே ஆகாயத்திலாயினும், கடலின் நடுவிலாயினும், மலைக் குகைகளிலாயினும் ஒளிய இடம்இல்லை.
யாரிடத்திலும் கடுஞ்சொற்களைப் பேசாதே. கடுஞ்சொல் பேசியவர் கடுஞ்சொற்களால் தாக்கப்படுவர். சுடுசொற்கள் மெய்யாகவே துன்பந்தருகின்றன. அடிக்குஅடி திருப்பி அடிக்கப்படும்.
கல்வி, அறிவு இல்லாத ஆள் எருதைப்போன்று வளர்கிறான். அவனுடைய சதை வளர்கிறது; அவன் அறிவு வளரவில்லை.
இளமையிலே தூய வாழ்க்கையை மேற்கொள்ளாதவரும் செல்வத்தைத் தேடிக் கொள்ளாதவருந் தமது முதுமைக்காலத்தில், மீனில்லாத குளத்தில் இரை தேடிக்காத்திருக்கும் கிழக் கொக்கைப்போல, சோர்ந்து அழிவார்கள்.
ஒருவர் முதலில் தம்மை நல்வழியில் நிறுத்திக்கொள்ள வேண்டும். பிறகுதான் மற்றவர்களுக்கு உபதேசிக்க வேண்டும். இத்தகையவர் நிந்திக்கப்பட மாட்டார்கள்.
நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக்கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார்.
ஆக்கத்தைத் தராததும் தீமையைப் பயப்பதும் ஆகிய செயல்களைச் செய்வது எளிது. நன்மையைத் தருகிற நல்ல காரியங்களைச் செய்வது மிகஅரிது.
அசட்டையாயிராமல் விழிப்பாக இரு. அறத்தை முழுதும் கைக்கொண்டு ஒழுகு. அறவழியில் நடப்பவர்கள் அவ்வுலகத்திலும் இவ்வுலகத்திலும் சுகம் அடைகிறார்கள்.
“பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப்படுத்து!” என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.
புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்காட்சி பெற்று, நான்கு வாய்மைகளான துக்கம், துக்க காரணம், துக்க நீக்கம், துக்கம் நீக்கும்வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்துக்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள் உண்மையான புகலிடத்தை யடைகிறார்கள். இதை அடைந்தவர்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.
கோபத்தை அன்பினால் வெல்க. தீமையை நன்மையினாலே வெல்க. கருமியைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யினாலே வெல்க.
உண்மை பேசுவாயாக; சினத்தைத் தவிர்ப்பாயாக; உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கிறவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவர் தேவர்கள் இருக்கிற இடத்திற்குச் செல்கிறார்.
முற்றும் இகழப்படுபவரும் முற்றும் புகழப்படுபவரும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை; என்றும் இல்லை.
உடம்பினால் உண்டாகிற குற்றங்களை அடக்கிக் காத்துக்கொள். உடம்பை அடக்கி ஆள்க. உடம்பினால் உண்டாகும் தீய காரியங்களை விலக்கி நல்ல காரியங்களைச் செய்க.
வாக்கினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக. வாக்கினை அடக்கி ஆள்க. வாக்கினால் உண்டாகும் தீயசொற்களை விலக்கி நல்ல பேச்சுக்களையே பேசுக.
மனத்தினால் உண்டாகும் குற்றங்களை அடக்குக. மனத்தை அடக்கி ஆள்க. மனத்தில் உண்டாகும் குற்றங்களை நீக்கி நல்ல எண்ணங்களையே எண்ணுக.
உடல், வாக்கு, மனம் இவைகளை அடக்கிஆள்கிற அறிஞர், உண்மையாகவே நல்ல அடக்கம் உள்ளவர் ஆவர்.
அழுக்குகளில் எல்லாம் அறியாமை என்னும் அழுக்கு மிகக்கொடியது. இது பெரிய குற்றம். பிக்குகளே! இந்த அழுக்கை நீக்குங்கள். அழுக்கற்று இருங்கள்.
உயிரைக் கொல்கிறவரும், பொய் பேசுகிறவரும், திருடுகிறவரும், பிறன் மனைவியை விரும்புகிறவரும், மயக்கந்தருகிற கள்ளைக் குடிக்கிறவரும் இவ்வுலத்திலேயே தமது வேரைத் தாமே தோண்டிக்கொள்கிறார்கள்.
பிறருடைய குற்றம் எளிதில் காணப்படுகிறது. பிறருடைய குற்றங்களைக் காற்றில் பதரைத் தூற்றுவதுபோலத் தூற்றுகிறவர், தந்திரமுள்ள சூதாடி தோல்வியை மறைப்பதற்குச் சூதுக்காயை ஒளிப்பதுபோல தனது சொந்தக் குற்றத்தை மறைக்கிறார்.
பிறர் மனைவியிடத்துச் சோரம் போகிறவனுக்குப் பாவம், அமைதியான தூக்கம் இன்மை, பழிச்சொல், நரகம் என்னும் இந்நான்கு தீமைகள் விளைகின்றன. மேலும் அவன் பாவத்தையடைந்து மறுமையில் தீக்கதி அடைகிறான். அச்சம் உள்ள ஒருவன், அச்சம் உள்ள ஒருத்தியோடு, கூடா ஒழுக்கத்தினால் அடைகிற இன்பம் மிகச் சிறியது. அரசனும் அவனைக் கடுமையாகத் தண்டிக்கிறான். ஆகவே, பிறன்மனைவியை விரும்பாதிருப்பாயாக.
தீய காரியத்தைச் செய்யாமல் விடுவது நல்லது. ஏனென்றால், தீய செயல்கள் பிறகு துன்பத்தைத் தருகின்றன. நல்ல காரியத்தை நன்றாகச்செய். ஏனென்றால், நல்ல காரியத்தைச் செய்வதனாலே எவரும் துன்பம் அடைகிறதில்லை.
நல்லொழுக்கமும் நல்லறிவும் உடையவராய்த் தீமைகளை நீக்கிய அறிஞர் கிடைப்பாரானால், அவரிடம் அன்புடனும் அக்கறையுடனும் நட்புக்கொண்டு பழகு.
இவ்வுலகத்திலே தாயை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. தந்தையை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. துறவிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது. பேரறிஞராகிய ஞானிகளை வணங்குவது மகிழ்ச்சிக்குரியது.
முதுமைப் பருவம் வருவதற்கு முன்பே சீலத்தைக் கடைப்பிடிப்பது மகிழ்ச்சிக்குரியது. அறநெறியில் உறுதியான நம்பிக்கையோடு இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அறிவை வளர்ப்பது மகிழ்ச்சிக்குரியது. பாவத்தை விலக்குவது மகிழ்ச்சிக்குரியது.
மனம் வாக்கு காயங்களினால் தீய காரியங்களைச் செய்யாமல் இம்மூன்றினையும் அடக்கிஆள்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.
மயிரை வளர்ப்பதனாலோ, பிறப்பினாலோ, கோத்திரத்தினாலோ ஒருவர் பிராமணர் ஆகமாட்டார். யாரிடத்தில் உண்மையும் அறநெறியும் இருக்கிறதோ அவரே தூய்மையானவர். அவர்தான் பிராமணர் ஆவார். எந்தப் பிராணியையும் அடித்துத் துன்புறுத்தாமலும்; கொல்லாமலும்; கொல்லச் செய்யாமலும் இருக்கிறவர் யாரோ அவரை நான் பிராமணன் என்று அழைக்கிறேன்.
முன்பும் பின்பும் எப்போதும் பற்றுகள் இல்லாமல், உலக ஆசைகளை நீக்கிப் பற்றற்றவர் யாரோ அவரையே பிராமணன் என்று கூறுகிறேன்.
ஒருவர் புத்த தர்மங்களை முழுவதும்கற்று மிக உரக்க ஓதி உபதேசித்தாலும் அவர் அச்சூத்திரங்கள் கூறுகிறபடி நடக்கவில்லையானால், பிறருடைய பசுக்களைக் கணக்கெண்ணிக் கொண்டிருக்கும் இடையனையொப்ப, துறவிகள் அடைய வேண்டிய பலனை அவர் அடையமாட்டார்.
ஒருவர், புத்த தர்மங்களைச் சிறிதளவு ஓதினாலும் அவை கூறுகிறபடி நடந்து, ஆசை, பகை, மோகம் முதலியவைகளை நீக்கி, நற்காட்சிபெற்று மனமாசு அற்று இருவகைப் பற்றுக்களையும் விட்டவரானால், அவரே உண்மையில் துறவிகள் அடையும் உயர்ந்த பலனை அடைவார்.