மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9/013

இணைப்பு: 4

புத்தர் புகழ்ப் பாக்கள்

கீழ்க்கண்ட செய்யுள்கள் வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் பழைய உரையிலும் வேறு நூல்களின் உரையிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.


1. போதி, ஆதி, பாதம், ஓது!

2. போதி நீழல்
    சோதி பாதம்
    காத லால் நின்று
    ஓதல் நன்றே!

3. உடைய தானவர்
    உடைய வென்றவர்
    உடைய தாள்நம
    சரணம் ஆகுமே!
 
4. பொருந்து போதியில்
    இருந்து மாதவர்
    திருந்து சேவடி
    மருந்தும் ஆகுமே

5. அணிதங்கு போதி வர்மன்
    பணிதங்கு பாதம் அல்லால்
    துணிபொன் றிலாத தேவர்
    பணிதங்கு பாதம் மேவார்

6. விண்ணவர் நாயகன் வேண்டக்
    கண்ணினி தளித்த காதல்
    புண்ணியன் இருந்த போதி
    நண்ணிட நோய்நலி யாவே.


7. மாதவா போதி வரதா அருளமலா
பாதமே யோது சுரரைநீ - தீதகல
மாயா நெறியளிப்பாய் வாரன் பகலாச்சீர்த்
தாயா யலகிலரு டான்.

8. முன்றான் பெருமைக்கண் நின்றான் முடிவெய்து காறும்
நன்றே நினைந்தான் குணமே மொழிந்தான் தனக்கென்
றொன்றானும் உள்ளான் பிறர்க்கே யுறுதிக் குழந்தான்
அன்றே இறைவன் அவன்தாள் சரணாங்க ளன்றே

9. தோடார் இலங்கு மலர்கோதி வண்டு
வரிபாட நீடு துணர்சேர்
வாடாத - போதி நெறிநீழல் மேய
வரதன் பயந்த அறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை
குணனாக நாளும் முயல்வார்
வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப
வினை சேர்தல் நாளும் இலரே!

10. எண்டிசையும் ஆகி இருள் அகல நூறி
எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி
வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து
மழைமருவு போதி உழை நிழல்கொள் வாமன்
வெண்டிரையின் மீது விரிகதிர்கள் நாண
வெறிதழல் கொள் மேனி அறிவனெழில்மேவு
புண்டரிக பாதம் நம சரணம் ஆகும்
எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார்

11. மிக்கதனங் களை,மாரி மூன்றும் பெய்யும்
வெங்களிற்றை, மிகுசிந்தா மணியை, மேனி
ஒக்கஅரிந் தொருகூற்றை, இரண்டு கண்ணை
ஒளிதிகழும் திருமுடியை, உடம்பில் ஊனை,
எக்கிவிழுங் குருதிதனை, அரசு தன்னை,
இன்னுயிர் போல் தேவியை, ஈன் றெடுத்த செல்வ
மக்களைவந் திரந்தவர்க்கு மகிழ்ந்தே யீயும்
வானவர்தாம் உறைந்தபதி மானா வூரே.


12. வான் ஆடும் பரியாயும், அரிண மாயும்,
வனக்கேழல் களிறாயும், எண்காற் புள்,மான்
தானாயும், பணைஎருமை ஒருத்த லாயும்,
தடக்கை யிளங் களிறாயும், சடங்க மாயும்,
மீனாயும், முயலாயும், அன்ன மாயும்,
மயிலாயும், பிறவாயும், வெல்லுஞ்சிங்க
மானாயும் கொலைகளவு கள்பொய் காமம்
வரைந்தவர்தாம் உறைந்தபதி மானா வூரே.

13. வண்டுளங்கொள் பூங்குழலாள் காதலனே உன்றன்
மக்களைத்தா சத்தொழிற்கு மற்றொருத்த ரில்லென்(று)
எண்டுளங்கச் சிந்தையளோர் பார்ப்பனத்தி மூர்க்கன்
இரத்தலுமே நீர்கொடுத்தீர் கொடுத்தலுமத் தீயோன்
கண்டுளங்க நும்முகப்பே யாங்கவர்கள் தம்மைக்
கடக்கொடியாலே புடைத்துக் கானகலும் போது
மண்டுளங்கிற் றெங்ஙனே நீர்துளங்க விட்டீர்
மனந்துளங்கு மாலெங்கள் வானோர் பிரானே..

14. கூரார் வளைவுகிர் வாளெயிற்றுச் செங்கண்
கொலையுழுவை காய்பசியால் கூர்ந்தவெந்நோய் நீங்க
ஓரா யிரங்கதிர்போல் வாள்விரிந்தமேனி
உளம்விரும்பிச் சென்றாங்கியைந்தனைநீ யென்றால்
காரார் திரைமுளைத்த செம்பவளம் மேவுங்
கடிமுகிழ்த்த தண்சினைய காமருபூம் போதி
ஏரார் முனிவர்கள் வானவர்தங் கோவே!
ஏந்தாய்! அகோ! நின்னை ஏத்தாதார் யாரே!

15. வீடுகொண்ட நல்லறம் பகர்ந்துமன் பதைக்கெலாம்
விளங்கு திங்கள் நீர்மையால் விரிந்திலங்கும் அன்பினோன்
மோடுகொண்ட வெண்ணுரைக் கருங்கடல் செழுஞ்சுடர்
முளைத்தெழுந்த தென்னலாய் முகிழ்ந்திலங்கு போதியின்
நாடுகின்ற மூவகைப் பவங்கடந்து குற்றமான
ஐந்தொடங்கொர் மூன்றறுத்த நாதணாள் மலர்த்துணர்ப்
பீடுகொண்ட வார்தளிர்ப் பிறங்குபோதி யானையெம்
பிரானைநாளும் ஏத்துவார் பிறப்பிறப் பிலார்களே.

16. வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

                                   (தரவு)
திருமேவு பதுமஞ்சேர் திசைமுகனே முதலாக
உருமேவி யவதரித்த உயிரனைத்து முயக்கொள்வான்
இவ்வுலகுங் கீழுலகும் மிசையுலகும் இருணீங்க
எவ்வுலகுந் தொழுதேத்த எழுந்தசெழுஞ் சுடரென்ன
விலங்குகதிர் ஓரிரண்டு விலங்கிவலங் கொண்டுலவ
அலங்குசினைப் போதிநிழல் அறமமர்ந்த பெரியோய்நீ.

                                   (தாழிசை)
மேருகிரி இரண்டாகும் எனப்பணைத்த இரும்புயங்கள்
மாரவனி தையர்வேட்டும் மன்னுபுரம் மறுத்தனையே!

வேண்டினர்க்கு வேண்டினவே யளிப்பனென மேலைநாள்
பூண்டவரு ளாளநின் புகழ்புதி தாய்க் காட்டாதோ!

உலகுமிக மனந்தளர்வுற் றுயர்நெறியோர் நெறியழுங்கப்
புலவுநசைப் பெருஞ்சினத்துப் புலிக்குடம்பு கொடுத்தனையே!

பூதலத்துள் எவ்வுயிர்க்கும் பொதுவாய திருமேனி
மாதவனீ என்பதற்கோர் மறுதலையாக் காட்டாதோ!

கழலடைந்த வுலகனைத்தும் ஆயிரவாய்க் கடும்பாந்தள்
அழலடைந்த பணத்திடையிட் டன்றுதுலை ஏறினையே!

மருள்பாரா வதமொன்றே வாழ்விக்க கருதியநின்
அருள்பாரா வதமுயிர்க ளனைத்திற்கு மொன்றாமோ!

                                   (அராகம்)
அருவினை சிலகெட ஒருபெரு நரகிடை
எரிசுடர் மரைமலர் எனவிடு மடியினை.

அகலிடம் முழுவதும் அழல்கெட வமிழ்துமிழ்
முகில்புரி யிமிழிசை நிகர்தரு மொழியினை.

                                   (ஈரடி அம்போதரங்கம்)
அன்பென்கோ ஒப்புரவென்கோ ஒருவ னயில்கொண்டு
முந்திவிழித் தெறியப்பால் பொழிந்தமுழுக் கருணையை.

நாணென்கோ நாகமென்கோ நன்றில்லான் பூணுந்
தீயினைப் பாய்படுத்த சிறுதுயில்கொண் டருளினை.


                                   (ஓரடி அம்போதரங்கம்)
கைந்நாகத் தார்க்காழி கைகொண் டளித்தனையே!
பைந்நாகர் குலமுய்ய வாயமிழ்தம் பகர்ந்தனையே!
இரந்தேற்ற படையரக்கர்க் கிழிகுருதி பொழிந்தனையே!
பரந்தேற்ற மற்றவர்க்குப் படருநெறி மொழிந்தனையே!
எனவாங்கு


                                   (சுரிதகம்)
அருள்வீற் றிருந்த திருநிழற் போதி
முழுதுணர் முனிவநிற் பரவுதும் தொழுதக
ஒருமன மெய்தி இருவினைப் பிணிவிட
முப்பகை கடந்து நால்வகைப் பொருளுணர்ந்து
ஓங்குநீர் உலகிடை யாவரும்
நீங்கா இன்பமொடு நீடுவாழ் கெனவே.

✽ ✽ ✽