மலரும் உள்ளம்-1/எல்லாம் நானே!
“அப்பா, சினிமாப் பார்த்திடவே,
ஆறணா வேண்டும்” எனக்கேட்டால்,
“கரடி யாகக் கத்துவதேன்?
காலணாக் கூடத் தரமாட்டேன்”
என்பார் எங்கள் அப்பாவும்,
என்னே செய்வேன், தோழர்களே !
★★★
அடுப்பங் கரைக்கும், முன்புறத்து
அறைக்கும் இருமுறை போய்வந்தால்,
“புனுகு பூனை போலவேநீ
போவதும், வருவதும் ஏனோதான்!”
என்றே அம்மா திட்டுகிறாள்.
என்னே செய்வேன், தோழர்களே!
★★★
கேள்விகள் ஏதும் தெரியாமல்
கேட்டால், உடனே என் அண்ணா,
அடிப்பார்; உதைப்பார்; அத்துடனே,
ஆத்திர முடனே எனைப்பார்த்து,
“எத்தனை அடிகள் கொடுத்தாலும்
ஏண்டா, உனக்கு வலிக்காதோ?
காண்டா மிருகம்! போடாபோ.
கருத்தாய்ப் படிப்பாய் இனியேனும்”
என்பார், ஐயோ! நானும்தான்
என்னே செய்வேன், தோழர்களே!
★★★
சீப்பைக் காணோம் என்றலோ,
‘சிடுசிடு’ எனவே என்அக்காள்
“ஏண்டா குரங்கே, என்சீப்பை
எங்கே ஒளித்தாய்? சொல்லிடுவாய்”
என்றே என்னைக் கேட்கின்றாள்.
என்னே செய்வேன். தோழர்களே!
★★★
கணக்கைக் கொடுத்ததும், விடைசொல்லக்
கருத்துடன் எழுந்து, “ஸார், ஸார், ஸார்,
எனக்குத் தெரியும் விடை”யென்றால்
ஏனோ ஆசான் சீறுகிறார்!
“ஆமாம், கணக்கில் புலியேதான்,
அமர்வாய் உனது இடத்தினிலே”
என்றே மட்டம் தட்டுகிறார்.
என்னே செய்வேன். தோழர்களே!
★★★
காண்டா மிருகம், கரடி, புலி,
காட்டு மிருகம் எல்லாமே
நான்தான் என்றனர், பெரியோர்கள்
நானொரு வார்த்தை கூறிடுவேன்;
மிருகக் காட்சி கண்டிடவே
வீணாய்க் காசைக் கொடுக்காமல்,
என்னைப் பார்த்தே மகிழுங்கள்.
எல்லா மிருகமும் நான்தானே!