மலரும் உள்ளம்-1/குணங்கள்

பசு

சத்து நிறைந்த பாலினையே
தந்து நம்மைக் காத்திடுமே
இத்தனை சாதுப் பிராணிதனை
எங்கே னும்நீ கண்டாயோ?

காளை

அண்டை ஊர்கள் சென்றிடவே
வண்டி யிழுத்துச் சென்றிடுமே.
மண்டிப் பயிர்கள் வளர்ந்திடவே,
மண்ணை நன்கு உழுதிடுமே.

நாய்

நன்றி உள்ள உயிர்களிலே
நல்ல மிருகம் இதுவொன்றாம்.
வெற்றி கொண்ட வீரன்போல்
வீட்டைக் காத்து நின்றிடுமே.

ஆடு

காந்தித் தாத்தா முதல்யார்க்கும்
கறக்கும் நல்ல பாலினையே
சாந்தம் மிக்கது தாத்தாபோல்.
தஞ்சம் நம்மை அடைந்ததுவே.

சேவல்

கழுத்தை நீட்டிக் கூவிடுமே
காலைப் போதில் சிறகடித்தே
‘எழுந்திரு, விழித்திடு’ என்றதுவும்
எழுப்பித் தூக்கம் ஓட்டிடுமே.

பூனை

பாலைக் குடித்தும் சாதுவைப்போல்
பஞ்சுக் காலால் நடந்திடுமே.
வேலை அதற்கு வேறில்லை.
வீட்டில் எலிகள் பிடிப்பதுதான்!

காக்கை

உற்றார் உறவினர் அனைவரையும்
உண்ண அழைத்து உண்டிடுமே.
செத்தால் ஒன்று அவைகளிலே
சேர்ந்து யாவும் அழுதிடுமே.

எலி
நமக்கென வைத்த பண்டமெலாம்

நாடித் தேடித் தின்றிடுமே.
நமக்கெனத் தைத்த சட்டைகளை
நாசம் ஆகக் கடித்திடுமே.

சிங்கம்
மிரண்டு அஞ்சி நடுங்கிடுவர்

மிருக ராஜன் என்றிடுவர்.
தரணியில் அதற்குக் காடொன்றே
தகுதியென் றீசன் வைத்தனனோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/குணங்கள்&oldid=1724802" இலிருந்து மீள்விக்கப்பட்டது