மலரும் உள்ளம்-1/குண்டு

குண்டு! குண்டு! உயிர்களைக்
கொண்டு, கொண்டு போகுதே!
சண்டை போடத் தானடா
கண்டார் இந்தக் குண்டுகள்.

வானம் மீது கப்பலில்
வந்து குண்டு போடுவார்.
ஈன மான புத்தியோ?
இரக்க மென்ப தில்லையோ?

குழந்தை, குட்டி யாவரும்
குலைந டுங்க ஓடியே,
விழுந்து கெட்டு உயிர்களை
விடவோ இந்தக் குண்டுகள்?

கையும் காலும் போகவே
கஷ்ட முற்றோர் எத்தனை ?
ஐயோ, பாவம்! யாரிடம்
அவர்கள் அண்டி வாழ்வதோ?


ஊர்கள் பாழாய்ப் போகவே,
உயிர்கள் யாவும் அழியவே,
மார்பு தட்டிப் பேசுவோர்
மனித ரல்லர்; பேயடா!

ஒன்றும் அறியா மனிதரின்
உடல்கள் சாம்பல் ஆவதைக்
கண்டு மகிழும் நெஞ்சமும்
கடின மான கல்லடா.

குண்டு தன்னை யூகமாய்க்
கண்டு தந்த மனிதரின்
மண்டை மூளை உலகையே
மாய்க்கத் தானோ கண்டது!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/குண்டு&oldid=1737310" இலிருந்து மீள்விக்கப்பட்டது