மலரும் உள்ளம்-1/சட்டை போட்ட குரங்கு

பண்டி கைக்கு வாங்கிய
பால னுடைய சட்டையைக்
கொண்டு சென்று விட்டது,
குரங்கு ஒன்று திருடியே!

அருமை யான சட்டையை
அணிந்து மனிதர் போலவே
குரங்கு காட்டை நோக்கியே
‘குடுகு’ டென்று சென்றது.

ஓடிச் சென்று காட்டிலே
உள்ள நண்பர் முன்னரே
ஆடிப் பாடிக் குதித்தது;
அவைகள் கேட்க உரைத்தது:

மனிதன் போல உடையுடன்
வந்தேன்; என்னைப் பாருங்கள்.
இனிமேல் என்னைக் குரங்கெள்
எவரும் கூற முடியுமோ?”


கூறிக் கொண்டே இப்படிக்
குரங்கு ஓடி மரத்திலே
ஏறிக் கொள்ள லானது;
எழும்பி, எழும்பிக் குதித்தது.

ஆட்டம் ஆடிக் குதிக்கையில்
அங்கே கிளையில் சட்டையும்
மாட்டிக் கொண்டு விட்டது!
வலிந்து குரங்கு இழுத்தது.

இழுத்து, இழுத்துப் பார்த்துமே
எடுக்க முடிய வில்லையே!
கழுத்து நொந்து போனது;
கர்வம் ஓடுங்க லானது.

மரங்கள் தம்மில் தொத்தியே
மகிழ்ச்சி யோடு தாவிடும்
குரங்கே நானும் என்பதைக்
கொஞ்ச மேனும் எண்ணிலேன்.

மாட்டிக் கொண்டேன் சட்டையை
மனிதர் போல. ஆதலால்,
மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்.
வந்து உதவும், நண்பரே”


என்று கெஞ்ச, அவ்விடம்
இருந்த மற்றக் குரங்குகள்
ஒன்று கூடி வந்தன;
உதவி செய்து காத்தன.