மலரும் உள்ளம்-1/தொழில்

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

மாட்டைக் கொண்டு கலப்பை பூட்டி.
மண்ணை நன்கு உழுவேனே.
நாட்டில் உள்ள பஞ்சம் போக
நானும் உதவி செய்வேனே.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

நூற்று நெய்து வேட்டி, சேலை
நேர்த்தி யாகத் தருவேனே.
வேற்று நாட்டவர் தயவு ஏனோ?
வேண்டாம் என்று சொல்வேனே.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

கொத்த னாகச் செங்கல் கொண்டு
கோயில், வீடு கட்டுவேன்.
மெத்தப் புகழும் தாஜ்ம ஹாலை
ஒத்தி ருக்கச் செய்குவேன்.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

தச்ச னாகக் கதவு, தூண்கள்
சன்னல் பலவும் பண்ணுவேன்.
மெச்சும் படியாய் வண்டி, கலப்பை,
மேஜை களையும் செய்குவேன்.

அப்பா வைப்போல் பெரியவனாய்
ஆன வுடனே நானுமே,

கருமா னாக இரும்பி னாலே
கம்பி, வளையம், கத்திகள்
அருமையான பூட்டு, சாவி,
அத்த னையும் பண்ணுவேன்.

ஐவரும்

ஒத்துச் சேர்ந்து எங்கள் தொழிலை
ஊக்க மாய் நடத்துவோம்.
சத்தி யத்தைக் கடைப்பி டித்துச்
சகல ருக்கும் உதவுவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/தொழில்&oldid=1724752" இலிருந்து மீள்விக்கப்பட்டது