மலரும் உள்ளம்-1/பறவை வரம்
என்னிடம் கடவுள் வந்துனக்கு
எவ்வரம் வேண்டும் எனக்கேட்டால்
இன்னிசை பாடும் பறவையதாய்
என்னை ஆக்கிட வேண்டிடுவேன்.
விண்ணில் பறந்து திரிந்திடவே,
‘விர்’ரென மேலே கிளம்பிடுவேன்.
கண்ணுக் கினிய காட்சியெல்லாம்
கண்டே திரும்பி வந்திடுவேன்.
காடுகள் மலைகள் எல்லாமே
கடிதில் சென்று கடந்திடுவேன்.
வீடுகள் மாளிகை யாவிலுமே
விரும்பி யமர்ந்து வந்திடுவேன்.
இதயத் தின்பம் பாய்ச்சிடவே
இனிய கீதம் பாடிடுவேன்.
சுதந்திரம் பெற்ற வாழ்வினிலே
துயரம் இன்றிக் களித்திடுவேன்.
எப்படி உணவைச் சேர்ப்பதெனும்
ஏக்கம் இன்றி இருந்திடுவேன்.
இப்படி நாமேன் இல்லையென
எண்ணிட மாந்தர், வாழ்ந்திடுவேன்.