மலரும் உள்ளம்-1/மழை

கொட்டி டுவாய் மழையே—நாங்கள்
குதூகல மெய்திடவே.
சொட்டுச் சொட்டாய்த் தொடங்கி—மழையே
‘சோ’வெனப் பெய்திடுவாய்.

வளைவு கட்டி வைத்தே—பெரியார்
வருகை நோக்குதல்போல்
வளைந்த வான வில்லும்—உனது
வருகை காட்டிடுமே.

காரிருள் மேக மதாய்—அலைபோல்
காற்றினில் சென்றிடுவாய்.
மீறியே சென்றி டாது—மலைகள்
மோதிடப் பெய்திடுவாய்.

நெற்றியில் நீர் சொரிய—உழவர்
நிலம் உழுதபின்பும்
வற்றிய குட்டை கண்டால்—உடனே
மாமழை பெய்திடுவாய்.

சூரிய வெப்ப மதால்—வாடிச்
சுருண்ட உயிர்களெல்லாம்
நேரிய உன்செயலால்—நன்கு
நின்று தலைதூக்கும்.

வாரிப் பொருளை யெலாம்—நன்கு
வழங்கி நிற்போரை,
மாரி போலப் பொழிவார்—என்றே
வாழ்த்தும் மனிதகுலம்.

கப்பல்கள் விட்டி டவே—நாங்கள்
காகிதம் சேர்த்து வைத்தோம்.
தப்பியே ஓடி டாதே—கொஞ்சம்
தயவுடன் பெய்திடுவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/மழை&oldid=1724783" இலிருந்து மீள்விக்கப்பட்டது