மலரும் உள்ளம்-1/விந்தை!

சூறைக் காற்று வந்தது;
சுழன்று சுழன்று அடித்தது;
கூரை வீட்டைப் பிய்த்தது;
குடியைக் கெடுத்துச் சென்றது!

பலத்த மழைதான் பெய்தது;
பயிரை அழித்துச் சென்றது;
ஜலத்தி னாலே மக்களைத்
தத்த ளிக்கச் செய்தது!

நெருப்பு எங்கோ பிடித்தது;
நீண்டு பரவ லானது;
அருமை மிக்க பொருள்களை
அழித்துப் பொசுக்கிச் சென்றது!

பூமி ஆட லானது.
பிளவு நடுவே கண்டது.
ஆவி போக உயிர்களை
அதிலே அழுந்தச் செய்தது!


இருந்து வாழ உதவிடும்
இயற்கை என்று எண்ணினேன்.
இறந்து போகச் செய்யுதே!
இதுவும் விந்தை தானடா!

"https://ta.wikisource.org/w/index.php?title=மலரும்_உள்ளம்-1/விந்தை!&oldid=1737272" இலிருந்து மீள்விக்கப்பட்டது