மலரும் உள்ளம்-1/வெண்ணிலா
அருமை மிகவுடைய தம்பி—மேலே
அண்ணாந்து பார்த்திடுவாய், தம்பி.
பெருமை மிகவுடைய நிலவு—எங்கும்
பேரின்பம் ஊட்டுதடா, தம்பி.
அம்மா வாசைஇரவில் தம்பி—மேலே
அளவற்ற் மீன்கள் தோன்றும் தம்பி.
இம்மா நிலத்தினிலே தம்பி—அவை
இருளினை ஓட்டுமோடா, தம்பி?
எண்ணற்ற மீன்களடா, தம்பி—வானில்
எத்தனை இருந்திடினும் தம்பி,
வெண்ணிலவு ஒன்றுபோலத் தம்பி—அவை
வீசிஒளி தந்திடுமோ தம்பி!
பெரியோர் ஒருவரைப்போல் தம்பி—பல
பேதையர்கள் கூடிடினும் ஆமோ?
சரியாய் உணர்ந்திடுவாய், தம்பி—இதே
தாழ்வு, உயர்வுணர்வாய், தம்பி.
பெரிதாய் வளர்ந்துநிலா, தம்பி—இன்பப்
பேரொளியை வீசுதடா தம்பி.
பெரியோர் தொடர்பும் அதுபோலே—மிக்கப்
பெருமை வளர்க்குமடா தம்பி.
சிறிது சிறிதாகத் தம்பி—நிலா
தேய்ந்து மறையுமடா, தம்பி.
சிறியோர் தொடர்பும், தம்பி—அந்தத்
தேய்பிறையைப் போன்றதடா, தம்பி
துன்பம் இன்பம்இவைகள் போலே—நிலா
தேய்ந்து வளர்ந்துவரும் தம்பி.
துன்பம் இல்லாவிடிலோ தம்பி—இங்கு
இன்பமும் இல்லையடா, தம்பி.