வேங்கடம் முதல் குமரி வரை 2/பட்டினத்துறை பல்லவனீச்சுரர்

14

பட்டினத்துறை பல்லவனீச்சுரர்

காவிரிப்பூம் பட்டினம் காவிரியாறு கடலுடன் கலக்கும் இடத்தில் அன்று இருந்தது. இன்று அதன் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டு விட்டது. சங்க காலச் சோழ மன்னர்களுக்குத் தலைநகரமாக விளங்கிய பட்டினம் அது. கடற்கரைத் துறைமுகப்பட்டினம் ஆனதால் அங்கு வியாபாரம் நன்றாகச் செழித்து வளர்ந்திருக்கிறது. பிற நாட்டிலிருந்து தமிழ்நாட்டுக்கு வாணிகம் செய்ய வந்தவர்கள் வந்திறங்கும் துறைமுகம் அதுதானே. திருமாவளவன் கரிகாலன் காலத்தில் அந்தப் பட்டினத்துத் தெருக்களின் சிறப்பை, கடியலூர் உத்திரங் கண்ணனார் பட்டினப் பாலையில் விரிவாகச் சொல்கிறார்.

நீரின்வந்த நிமிர் பரிப்புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப்பிறந்த மணியும் பொன்னும் குடமலைப்பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும், குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காளகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெறிய ஈண்டி

வளம் தலைமயங்கி நின்றது அந்த நகரத்திலே அன்று என்பது நன்கு அறியக் கிடக்கிறது. காப்பிய நாயக நாயகியான கோவலனும் கண்ணகியும் பிறந்து வளர்ந்து மணம் புரிந்திருக்கிறார்கள் அங்கு.

சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் இந்தக் காவிரிபூம் பட்டினத்தைப் புகார் என்றும், அங்கு இருந்து அரசாண்ட சோழ மன்னனைக் காவிரிநாடன் என்றும் குறித்திருக்கிறார்.

அந்தப் பட்டினத்தில் உள்ளவர்கள் எந்தப் பொருளையும் விரும்பி வேறு இடங்களுக்குச் செல்ல மாட்டார்கள். ஆதலின் அந்த நகரத்தாரே 'புகார்' என்ற பெயருக்கு உரியவர்களாக இருந்திருக்கிறார்கள். (ஐயகோ! பின்னால் அப்பட்டினம் கடல் கொள்ளப்பட்டு அங்குள்ள தன வணிகர்கள் எல்லாம் ராமநாதபுரம் வட்டாரத்தை அல்லவா தேடி வந்து அங்கு புகுந்திருக்கிறார்கள். அவர்கள் தானே இன்று நகரத்தார் என்று அழைக்கப்படுகிறார்கள்.)

நிறைமதியும் மீனும் என
அன்னம் நீள் புன்னை
அரும்பிப் பூத்த
பொறைமலி பூங்கொம்பு ஏற,
வண்டு ஆம்பல் ஊதும்
புகாரே எம் ஊர்.

என்று அந்த நகர மக்கள் பெருமையோடு பாடும் நிலையில் இருந்திருக்கிறது அந்நாளில் அந்தப் பூம்புகார்ப்பட்டினம். அந்தக் காவிரிப்பூம்பட்டினத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

இந்தக் காவிரிப்பூம்பட்டினம் இன்று பொலிவிழந்து கிடக்கிறது. நகரத்தின் பெரும் பகுதி கடல் கொள்ளப்பட்டு விட்டது என்கின்றனர். எஞ்சிய பகுதியும் ஒரே மணற் பரப்பாகவே இருக்கிறது. வெள்ளாமை விளைச்சல் அதிகம் இருப்பதாக தெரியவில்லை. அந்தப் பழைய பட்டினத்துப் புகழை ஏதோ ஓர் அளவுக்காவது இன்று வைத்துக் கொண்டிருப்பது அங்குள்ள பல்லவனீச்சுரர் கோயிலே. கோயிலும் கோயிலைச் சார்ந்த கிராமமும் பல்லவனீச்சுரம் என்றே அழைக்கப்படுகின்றன. இக்கோயிலில் தான் பல்லவனீச்சுரர் சௌந்தர நாயகியுடன் கோயில் கொண்டிருக்கிறார். இப்பல்லவனீச்சுரர் கோயில் சென்று சேர, ரயிலிலிருந்து, சீகாழியில் இறங்க வேணும். அங்கிருந்து தென்கிழக்காகப் பத்து மைல் பஸ்ஸிலோ, வண்டியிலோ போக வேணும். வழியில் இருக்கும் வெண்காட்டில் இறங்கி சுவேதாரண்யேசுரரையும் வணங்கிவிட்டே மேல் நடக்கலாம். பல்லவனீச்சுரர் கோயில் பெரிய கோயில் அல்ல, நல்ல மதில், ராஜகோபுரம் விமானம் எல்லாம் உடைய சிறிய கோயில் தான். இந்த இருபதாம் நூற்றாண்டில்தான் ஒரு பெரிய தனவணிகர், கோயிலுக்குத் திருப்பணி செய்து கோயிலை முழுக்க முழுக்கப் புதுப்பித்திருக்கிறார். 'ஆலயம் புதுக்குக, அந்தணாளர்தம் சாலையும் சதுக்கமும் சமைக்க' என்று அன்று கவிச்சக்கரவர்த்தி கம்பன் பாடினானே. அவன் கட்டளையைத் தலைமேற்கொண்டு, இந்தப் பட்டினத்துறை பல்லவனீச்சுரர் கோயிலைப் புதுப்பித்திருக்கிறார். சமீப காலத்தில் இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்திருக்கிறது. 1951-ம் வருஷம் இங்கு மிகவும் விமரிசையாகச் சிலப்பதிகார மகாநாடு ஒன்றும் நடந்தது.

பல்லவ அரசனால் கட்டப்பட்ட காரணத்தால் பல்லவனீச்சுரம் என்று பெயர் பெற்றது என்பர். எந்தப் பல்லவ அரசன் என்று தெரியக் கூடவில்லை , கல்வெட்டுக்கள் ஒன்றும் இல்லாத காரணத்தால், இந்தப் பல்லவனீச்சுரத்துக்கு சமய குரவர்களில் சம்பந்தர் ஒருவரே வந்திருக்கிறார். அவர் பாடிய பதிகமும். ஒன்றுதான் என்றாலும் பாடிய பாடல்கள் பதினொன்றும் அழகாக இருக்கின்றன.

பரசு பாணியர் பாடல் வீணையர்
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
அரசு பேணி நின்றார்
இவர் தன்மை யாரறிவார்?

என்று மயக்கமுற்றார்போல் தொடங்கி, செம்மேனி எம்மானாகிய சிவபெருமானது மேனி அழகினையும் இயல்புகளையும் விரித்தே சொல்கிறார். பவளமேனியர், திகழும் நீற்றினர், பண்ணில் யாழினர், பச்சைமேனியர், பிச்சைகொள்பவர், பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பாதம் கைதொழ வேதம் ஓதுவர் என்றெல்லாம் பாடிப் பரவியபின் இந்த இறைவனைப் பற்றிச் சொல்வதற்கு வேறு ஏதேனும் மிச்சம் இருக்கவா போகிறது?

இந்தப் பாடல்களைப் பாடிக்கொண்டே நாமும் கோயிலுள் நுழையலாம். கோயிலின் வெளிப் பிராகாரத்திலே தெற்கு மதிலையொட்டி ஒரு சிறு கோயிலைக்கட்டி அங்கு பட்டினத்து அடிகளை இருத்தி யிருக்கிறார்கள். இது சமீபத்தில்தான் ஏற்பட்டிருக்கிறது. பட்டினத்துப் பிள்ளையார் என்பதனாலேயே அவர் இந்தக் காவிரிப்பூம்பட்டினத்துக்காரர் என்பதை அறிவோம். அவர் அந்தப் பட்டினத்திலே சிவதேயர் என்னும் தனவணிகரின் மகனாய்த் தோன்றுகிறார். பக்கத்திலேயுள்ள, திருவெண்காடரது பெயரையே தாங்குகிறார். நீண்ட காலமாகப் பிள்ளை இல்லாதிருந்து, கடைசியில் திருவிடை மருதூர் மருதவாணனையே குழந்தையாகப் பெறுகிறார். அந்த மருதவாணன் வளர்ந்து பெரியவனாகிய பின், ஒருநாள் தன் தாயாரிடத்து ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து விட்டு மறைந்து விடுகிறான். மனைவியிடம் இருந்த பெட்டியை வெண்காடர் வாங்கித் திறக்க. அதனுள்ளே ஓர் ஓலைச் சுருளும் ஒரு காதற்ற ஊசியும் இருப்பதைக் காண்கிறார். ஓலைச் சுருளை நீட்டிப் படித்தால் அதிலே 'காதற்ற ஊசியும் வாராது காண் உம் கடை வழிக்கே' என்று எழுதப் பட்டிருக்கிறது. அவ்வளவுதான், ஞானோதயம் உண்டாகி விடுகிறது வெண்காடருக்கு.

சூதுற்ற கொங்கையும் மானார்
கலவியும் சூழ் பொருளும்
போதுற்ற பூசலுக்கு என்செயலாம்?
செய்த புண்ணியத்தால்
தீது அற்ற மன்னவன் சிந்தையில்
நின்று தெளிவதற்கோ
காது அற்ற ஊசியைத் தந்து
விட்டான் என்றன் கைதனிலே

என்று பாடிக்கொண்டே வெளியேறிவிடுகிறார். அன்று முதல் இந்த வெண்காடர் பட்டினத்துப் பிள்ளையார் என்ற பெயரோடு, தமிழகம் முழுவதும் உலவி, அரிய உபதேசங்களைப் பாடல்களாகப் பாடி, கடைசியில் திருஒற்றியூர் சென்று முத்தி பெற்றிருக்கிறார். திருஒற்றியூர் கடற்கரையிலே உள்ள சமாதிக் கோயிலைத்தான் முன்பே பார்த்திருக்கிறோமே. அந்தப் பட்டினத்துப் பிள்ளையையே இந்தப் பல்லவனீச்சுரத்து மக்கள், அவர் பிறந்த ஊர்ப் பெருமையுற, கோயில் கட்டி பிரதிஷ்டை செய்து வணங்குகிறார்கள். நாமும் அவரை வணங்கி விட்டுப் பிரதான கோயிலுக்குள் நுழையலாம். கோயில் மகா மண்டபத்தை ஒட்டியே தெற்கு நோக்கியவளாய், சௌந்தர்யநாயகி நிற்கிறாள். அவளையும் வணங்கி அதன்பின் உட்கோயிலுள் சென்றால் அங்கு லிங்கத் திருவுருவில் இருக்கும் பல்லவனீச்சுரரையும் தொழலாம். இந்த அன்னையையும் அத்தனையையும் பற்றிச் சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லைதான். என்றாலும் இக்கோயிலில் உள்ள செப்புச் சிலைகளைப் பற்றி கூறாமல் இருத்தலும் இயலாது. இங்குள்ள சோமாஸ்கந்தர், திரிபுராந்தகர் எல்லாம் நல்ல சோழர் காலத்துச் செப்புப் படிமங்கள்; அழகானவை. இவைகளையெல்லாம் தூக்கி அடிக்கும் அன்னையின் வடிவம் ஒன்றும் இங்கு உண்டு. சாதாரணமாக அன்னையையும் அத்தனையும் சேர்த்துச் சமைத்து இருவருக்கும் இடையிலே கந்தனை நிறுத்தி அந்த மூர்த்திக்கு சோமாஸ்கந்தன் என்று பெயர் சூட்டி வைத்திருக்கும் கோலமே அநேகம். ஒவ்வொரு கோயில் பிரம்மோற்சவத்துக்கு எழுந்தருளப் பண்ணும் வடிவம் இந்த சோமாஸ்கந்த மூர்த்தம் தானே. இங்கே அன்னை மடிமீது தவழ்ந்த முருகன் அவசரம் அவசரமாக இறங்கி எங்கோ ஓட முயலும் நிலை. அன்னை பார்வதி ஒரு காலைத் தூக்கி வைத்து ஒருகாலைத் தொங்கவிட்டு ஒயிலாக இருக்கிறாள். ஓட விரும்பும் பாலனைத் தன் பக்கம் இழுத்துத் தழுவ முனையும் நிலையைச் சிற்பி அற்புதமாக வடித்திருக்கிறாள். இந்தத் தாயையும் சேயையும் சேர்த்து வடிக்கத் தோன்றிய கலைஞனது கற்பனை உயர்ந்தது. இந்தச் செப்புப் படிமம் ஒன்றைக் காணவே இக்கோயிலுக்கு ஒரு நடை போய் வரலாம்.

பல்லவனீச்சுரர் கோவிலில் நிற்கும்போதே நம்மிடம் அங்குள்ளவர்கள் சொல்லுவார்கள் 'இது பட்டினத்தாரது அவதாரத் தலம் மாத்திரம் அல்ல, அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான இயற்பகை நாயனாரின் அவதாரத் தலமும் இதுவேதான்' என்று. அவரைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே. காவிரிப்பூம்பட்டினத்து வணிகர் மரபிலே ஒரு பெரியவர், அடியார்கள் எதைக் கேட்டாலும் இல்லை என்று கூறாத இதயம் படைத்தவர் அவர். இப்படி உலக மக்களின் இயல்புக்கே மாறாக இருந்த காரணத்தால் இயற்பகையார் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார். இவரது பெருமையை உலகுக்கு அறிவிக்க இறைவன் திருவுள்ளம் கொள்கிறார், கிழவேதியர் வடிவில் வந்து. இயற்பகையிடம் அவருடைய மனைவியையே தமக்குத் தர வேண்டுகிறார். அவரோ தமக்கு உரிய பொருள் எல்லாம் சிவனடியார்க்கே உரியன என்பவர் ஆயிற்றே, ஆதலால் மனைவியை அழைத்து வேதியரிடம் ஒப்புவித்து விடுகிறார். இந்த அநியாயத்தைப் பார்த்துக் கொண்டு உற்றார் உறவினர் சும்மா இருப்பார்களா? அவர்கள் வந்து தடுக்கின்றனர். இயற்பகையோ அவர்களை யெல்லாம் ஆயுதங்களால் தாக்கி, பக்கத்தில் உள்ள சாய்க்காடு என்னும் தலம்வரை சென்று வழியனுப்பி விட்டுத் திரும்புகிறார். திரும்பவும் இறைவன்

இயற்பகைமுனிவா ஓலம்!
ஈண்டு நீ வருவாய் ஓலம்!
செயற்கரும் செய்கை செய்த
தீரனே ஓலம் ஓலம்

என்று கூவுகிறார். இயற்பகையார் ஓடிவந்தால் வேதியர் விடை ஏறும் வித்தகனாக காட்சி தந்து பக்கத்தில் உள்ள கோயிலுள் சென்று மறைகிறார். இயற்பகையின் பெருமையை உலகம் அறிகிறது அதனால்,

இயற்பகை நாயனார் சரிதம் நம்மைப் பல்லவனீச்சுரத்திலிருந்து சாய்க்காட்டுக்கே இழுத்து வந்திருக்கிறது. வந்ததோ வந்தோம், நாமும் சாயாவனம் என்று இன்று வழங்கும் சாய்க்காடு சென்று அங்குள்ள சாயாவனசுவரரையும் குயிலினும் நன்மொழியாளையும் வணங்கி விட்டே திரும்பலாம். சாய்க்காட்டுக்கு வெகு தூரம் நடக்க வேண்டியதில்லை. உள்ளூர்க்காரரைக் கேட்டால் பல்லவனீச்சுரத்திலிருந்து கூப்பிடு தூரமே என்பார்கள். ஆனால் நடந்து போனால் ஒன்று ஒன்றரை மைலுக்குக் குறைவில்லை. பல்லவனீச்சுரத்துக்கு மேற்கே இருக்கிறது கோயில். ஆதிசேடனது நாகரத்தினம் இந்தக் காட்டில் ஒளி வீசிய காரணத்தால் இத்தலம் சாய்க்காடு என்று பெயர் பெற்றது என்பர். (சாய் என்றால் ஒளி என்று பொருள்தானே) உபமன்யு முனிவர் இங்கு வந்து பூசித்துப் பேறு பெற்றிருக்கிறார். கோயிலுக்கு எதிரே ஐராவதத் தீர்த்தம் இருக்கிறது. கோயிலை ஒட்டித் தேர் போன்ற விமானம் ஒன்றும் சக்கரத்துடன் இருக்கிறது. தேவர் கோனாகிய தேவேந்திரன் தன் தாயாருக்காக இக்கோயிலை அப்படியே விண்ணுலகத்துக்கு எடுத்துச் செல்ல முயன்றான் என்றும், அதில் தோல்வியுற்றான் என்றும் அவன் அன்று கொண்டு வந்த தேரே இன்றும் இருக்கிறது என்றும் அறிவோம். இக்கோயிலில் பதின்மூன்று கல்வெட்டுக்கள். பத்து, சோழர் காலத்தியது, மூன்று பாண்டியர்காலத்தியது. விக்கிரம சோழ தேவன், கோனேரின்மை கொண்டான், மூன்றாம் குலோத்துங்கன், திரிபுவனச் சக்கரவர்த்தி, சுந்தர பாண்டிய தேவன் முதலியோர் ஏற்படுத்திய நிபந்தங்களைப் பற்றியெல்லாம் கல்வெட்டுகள் கூறும்.

இந்த விவரங்கள் தெரிந்து கொள்ளத்தானா இங்கு வந்தோம் என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. நான் உங்களை இங்கு அழைத்து வந்தது இதற்காக எல்லாம் அல்ல. இங்கு ஒரு மூர்த்தி செப்புச் சிலை உருவில், பார்த்த உடனேயே தெரியும் அவன் சுப்பிரமணியன் என்று. வலது கையிலே சக்தி வேலைத்
சாய்க்காடு வேலவர்

தாங்கியிருப்பதுடன் ஒரு நீண்ட வேலையும் அணைத்தவனாகத் தானே நிற்கிறான். ஆனால் இவன் தன் இடது கையில் ஒரு வில்லையும் தாங்கி யிருக்கிறானே! இவன் என்று வில்லை ஏந்தினான்? என்று ஐயுறுவோம் நாம். வில்லை ஏந்தியவன் ராமன். வேல் எடுத்தவன் முருகன். இந்த இருவரையும் இணைத்து வில் லேந்திய வேலன் ஒருவனை உருவாக்குவதன் மூலமாக சைவ வைணவ வேற்றுமைகளையே தகர்த்து எறிய முடியாதா? என்று எண்ணியிருக்கிறான் ஒரு கலைஞன். வடித்திருக்கிறான் ஒரு திருவுருவத்தை. அந்த வில்லேந்திய வேலனது திருக்கோலத்தை இந்தச் சாய்க்காட்டில் கொண்டு வந்து நிறுத்தியும் இருக்கிறான். நல்ல மூன்று அடி உயரம், தலையிலே நீண்டுயர்ந்த கிரீடம், கழுத்திலே அணிகொள் முத்தாரம் தோளிலே புரளும் வாகுவலயம், காலிலே கழல் என்றெல்லாம் அமைத்ததோடு, வில்லையும் சேர்த்துத் தாங்க இடையினை வளைத்துத் தலையினைச் சாய்த்து நிற்கும் நிலை எல்லாம் கலை உரைக்கும் கற்பனையையும் கடந்து நிற்கிறது. இந்த வில்லேந்திய வேலன் ஆதியில் திருச்செந்தூரில் இருந்தவன் என்றும், பின்னர் காவிரிப் பூம்பட்டினத்தை அடுத்த கடலிலிருந்து வெளி வந்தவன் என்றும் கூறுகின்றனர் அங்குள்ளவர்கள். ஆம்! சூரசம்ஹாரம் முடிந்தபின் இவன் கடலுள் பாய்ந்து கிட்டத்தட்ட இருநூறு மைல் நீந்தி இந்தக் காவிரிப்பூம்பட்டினத்திலே வந்து கரையேறியிருக்க வேணும். இல்லாவிட்டால் இவன் எப்படி இந்தச் சாய்க்காட்டில் வந்து நின்று கொண்டிருக்க முடியும் என்று கேட்கிறேன்? பல்லவனீச்சுரரைக் காணச் சென்ற நாம் வில்லேந்திய வேலனையுமே கண்டு தொழுது திரும்புகின்றோம் இன்று.