அகத்தியன்விட்ட புதுக்கரடி

அகத்தியக் குள்ளன் ஆரியர் கொள்கையைப் புகுத்தினான் செந்தமிழ் பொன்னா டதனில்! ஆதலால் "குள்ளனை அணுவும்நம் பாதே" என்ற பழமொழி அன்று பிறந்தது!

பழைய திராவிடம் செழுமை மிக்கது. வழுவா அரசியல் வாய்ப்பும் பெற்றது. செந்தமிழ் இலக்கணச் சிறப்புற் றிருந்தது. வையக வாணிகம் மாட்சிபெற் றிருந்தன. ஓவியம் தருநறும் பாவியம் புனைநரும் ஆடல் பாடல் வல்லுநர் அனைவரும் திராவிடர் தமக்குப் பெரும்புகழ் சேர்த்தனர் இராத தொன்றில்லை திராவிட நாட்டில் இந்த நிலையில் வந்தான் அகத்தியன்.

ஒருநாள் குறுங்கா டொன்று தீப்பட் டெரிந்தது;சிற்றூர் எரிந்தது!மக்கள் தெய்யோ தெய்யோ என்றே அரச னிடத்தில் அலறினார் ஓடி! அங்கிருந்த அகத்தியன், "அரசே! தீஒரு தெய்வம் செம்புனல் தெய்வம் நிலம்ஒரு தெய்வம் நீ இதை உணர்க தெய்எனல் அழிவு! தெய்வம் அழிப்பது இந்திரன் தெய்வம் எதற்கும் இறைவன். மந்திர வேள்வியால் மகிழும் அவ்விந்திரன்" என்று கூறி ஏகினான் அகத்தியன்.

அரச மன்றின் அருந்தமிழ்ப் புலவர் அரசன், அகத்தியன் ஆட்டும் பாவையாய் இருத்தல் கண்டார் இரங்கினார். தீய கருத்து நாட்டிற் பரவுதல் கண்டு கொதித்தார் உள்ளம். என்செயக் கூடும்?

ஒருநாள் அரசனின் உறவினள் ஒருத்தி பகைவனை அன்போடு பார்த்தாள், அவனும் அவள்மேல் மிகுந்த அன்பு கொண்டான். இருவரும் உயிர்ஓன் றிரண்டுடல் ஆனார். அரசன் எரிச்சல் அடைந்தான். அகத்தியன் இத்தனை அறிந்தான். அறைவான் ஆங்கே: "மணமுறை மிகுதியும் மாறுதல் வேண்டும்; ஒருத்தியும் ஒருவனும் உள்ளம் ஒப்பினால், மணம்எனக் கூறுதல் வாய்மை யன்று! மணம்எனல் பார்ப்பனர் மந்திர வழியே இயலுதல் வேண்டும்" என்று கூறினான். அரசன். 'ஆம்ஆம் ஆம்'என் றோப்பினான். அகத்தியன் அரசனே அடிமை யானான். தமிழர் கலைபண் பொழுக்கம் தகர்ந்தன. பழந்தமிழ் நூற்கள் பற்றி எரிந்தன. அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்.