அகமும் புறமும்/001-008

அகம்

அகத்தின் அடிப்படை

சீரும் சிறப்புடனும், உயர்ந்த குறிக்கோளுடனும் ஒரு சமுதாயம் வாழ வேண்டுமாயின், அவ்வாழ்வில் அமைதி நிறைந்திருத்தல் வேண்டும். அமைதி இல்லாத வாழ்வில் பண்பாடு, நாகரிகம், குறிக்கோள் என்பவை தோன்றா; தோன்றினாலும், நிலைத்து வளரா. பழந்தமிழன் வாழ்வில் சிறந்த குறிக்கோளும், பண்பாடும் நிறைந்து காணப்பெற்றன எனில், அவனுடைய வாழ்வு அமைதி நிறைந்ததாய் இருந்திருக்கும் என்று கூறத் தேவையில்லை. அமைதி என்பது புறத்தே இருந்து வருவதன்று; அகத்தே தோன்றுவது. எத்துணை விரும்பினாலும், விலைகொடுக்க முயன்றாலும் சிலருக்குக் கிட்டாத இவ்வமைதி, ஒரு சிலருக்கு எளிதாகக் கிடைத்து விடுகிறது.

அமைதி தோன்றுவது எங்கே?

அமைதி அகத்தே தோன்றி மலர்வதாயினும் அதனுடைய வளர்ச்சிக்குப் புறமும் ஓரளவு உதவி புரிகின்றது. பல சந்தருப்பங்களில் புறப்பொருள்கள் அமைதியின் வளர்ச்சிக்குத் துணை புரியாவிடினும், இடையூறு செய்யாமல் இருந்தாற்போதும் என்று கூறத் தோன்றுகிறது. இதனாலேயே அமைதியை நாடி அலையும் பெரியோர்கள், மக்கட் கூட்டம் இல்லாத காடு முதலியன நோக்கி ஓடிவிடுகிறார்கள் போலும். காடு நோக்கி ஓடினாலும் புறத்தே அமைதியான சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்ளலாமே தவிர, அகத்தே—மனத்தின் உள்ளே—அமைதியைப் பெற முடியாது. அது தானே முகிழ்ப்பது. அகத்தே அமைதி பிறக்கப் புறச்சூழ்நிலை ஓரளவு துணைக் காரணமாகலாம். 

அமைதி வேட்டை

உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனும் இவ்வமைதியை நாடி அலைகிறான். எத்தகைய சூழ்நிலையில் வாழ்ந்தால் இது எளிதில் கிட்டும் என்றறியப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித சமுதாயம் வாழ்ந்து பார்க்கின்றது. தனி வாழ்க்கை, சமுதாய வாழ்க்கை, கூட்டு வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை என்ற பலவகை வாழ்க்கையிலும் மனிதன் நாடி அலைவது இவ்அமைதியையே.

தமிழன் கண்ட விடை

ஏனைய சமுதாயத்தார் இத்தகைய அமைதி வேட்டையில் இறங்குமுன்னரே தமிழன் அமைதியை அடைய மிகுதியும் உதவும் ஒரு சூழ்நிலையைக் கண்டான். அதுவே இல்வாழ்க்கை எனப்படும். பிறநாட்டார் இல்வாழ்வின் இன்றியமையாமையை அறியுமுன்னரே இவன் அதன் பெருமையை நன்குணர்ந்தான்.

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்கு.
                                                             (குறள்–49)

என்றும்,

இல்லறம் அல்லது நல்லறம் அன்று

என்றும் எழுந்த கூற்றுக்கள் இவ்வுண்மையை உணர்த்துகின்றன. அறத்தின் வழி வாழ்வதன் சிறப்பை உணர்த்திய வள்ளுவர், அடுத்து ‘அறன்’ எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று கூறுவாராயின், இல் வாழ்வின் சிறப்பை வேறு எவ்வாறு விளக்குவது? மேலும், அறம் என்ற சொல்லையே பெய்து ‘இல்லறம்’ என்று பெயரும் இடுவாராயின், எத்துணைத் தூரம் அதன் சிறப்பை அறிந்திருந்தனர் இத்தமிழர் என்பது கூறவும் வேண்டுமோ?

இரு வகை அறிவு

மிகப் பழைய காலத்தேகூட மனிதன் தன் வாழ்வு முழுத்தன்மையுடையதாய் இருத்தல் வேண்டும் என்று விரும்பினான். முழு வாழ்வு என்று எதனைக் குறிக்கின்றோம். மனிதனிடத்துக் காணப்படும் பொறிபுலன்களும் அறிவும் நன்கு பயன்படும் பொழுது அதனை முழுவாழ்வு எனக் கூறுகிறோம். ஏனைய விலங்கினங்களிலிருந்து மனிதனைப் பிரிப்பது அவனுடைய நுண்மை பொருந்திய மூளை. இம் மூளையின் பயனாக அவனுக்குக் கிடைத்தது அறிவு. அறிவு ஆயப் பயன்பட்டது. பரந்துபட்ட உலகில் பல்வேறு வடிவுடனும் உருவுடனும் இயல்புடனும் பொருள்கள் காட்சி வழங்குகின்றன. வடிவு, உருவு, இயல்பு என்ற இவற்றை நன்கு ஆய்ந்து இப்பொருள்களின் இடையேயுள்ள வேற்றுமையைக் காண்கிறது சாதாரண அறிவு. அது கண் முதலாய பொறிகளின் வழிப்பட்ட அறிவும் ஆம். இதனையடுத்து நுண்ணிய அறிவு தொழிற்படத் தொடங்குகிறது. பொருள்களின் இடையே காணப்படும் இவ்வேற்றுமைகளில் பொதுத்தன்மை உண்டாவென ஆய்கிறது அந்நுண்ணறிவு. பொதுத் தன்மையைக்கண்டு வேறுபட்ட வடிவு, உருவு இயல்புடைய பொருள்களில் ஒற்றுமையைக் காண முற்படுகிறது நுண்ணறிவு; சுருங்கக்கூறின், வேற்றுமையில் ஒற்றுமையையும் ஒற்றுமையில் வேற்றுமையையும் காண்பதே நுண்ணறிவாகும். பொறிகளின் மூலம் கண்டோ கேட்டோ பொருள்களின் வேறுபாட்டை அறியும் அறிவைப் பொதுமறை,

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
                                                           (குறள்–423)

என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நுண்ணறிவை,

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
                                                                    (குறள்-355)

  என்றும் கூறிச்செல்கிறது. பின்னையது முன்னையதை விடச் சிறந்தது 
  என்பதையும் எளிதில் உணரலாம். அதனாலேயே வள்ளுவரும் 
  பொருளின் தன்மையை அறியும் நுண்ணறிவை 'மெய்யுணர்தல்'என்ற 
  அதிகாரத்தில் வைத்துள்ளார், இரண்டையும், ‘அறிவு’ என்றே குறள் 
  குறிப்பிட்டாலும், இரண்டிற்கும் ஒரளவு வேறுபாடு உண்டென்பதை 
  யாரும் எளிதில் அறியமுடியும்.

முழு வளர்ச்சி

   மனிதன் முழுத்தன்மையடைய (Development of full personality) 
   இவ்வறிவு மிகவும் இன்றியமையாதது. ஆனால், எத்துணைச் 
   சிறந்ததாயினும் அறிவு ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மனிதன் 
   வாழ முடியாது. வாழ்ந்தாலும், அதனை முழு வாழ்வு என்று கருத 
   முடியாது. மனித வளர்ச்சியில் அறிவு ஒரு பகுதியேயாம். அளவு மீறி 
   இதனையே பெரிதெனப் போற்றி வளர்த்தால் மற்றொரு பகுதியின் 
   வளர்ச்சியை இது தாக்கும்.

உதாரணம்

  குத்துச்சண்டை செய்கிறவர்களைப் பார்க்கிறோம். அவர்கட்குப் 
  போரில் பயன்படுவன இரண்டு கைகளுமே, ஆனால், கைகளில் 
  மட்டும் முழு வன்மையைப் பெற்று விட்டதால் ஒருவன் சிறந்த 
  குத்துச்சண்டை வீரன் ஆதல் இயலுமா? இயலவே இயலாது. ஏனைய 
  உறுப்புக்களையும் உடன் வளர்க்காமல் கைகளை மட்டும் 
  வலுவடையச் செய்த ஒருவன் குத்தினால் அதைப் பொறுப்பது 
  எதிரிக்கு இயலாதுதான். ஆனால், பொறுத்துக் கொண்டு அவன் 
  மீண்டும் குத்தினால் அதனைப் பொறுக்கவும் நைவின்றி ஏற்றுக்கொள்ளவும் இவனுக்கு மார்பிலும் முகத்திலும் வலுவேண்டாவா? குத்துச் சண்டை வீரன் உடல் முழுவதும் வன்மை பெறாமல் கையில் மட்டும் வன்மை பெற்றிருந்தால், அவன் ‘வீரன்’ என்ற பெயருக்கு இலக்காக முடியுமா? அவன் முழு வீரன் ஆதல் கூடுமா? வீரன் என்ற பெயருக்கு உரியவனாக வேண்டுமாயின், முழு உடலிலும் வன்மை பெற்றிருக்க வேண்டும்; எல்லா உறுப்புக்களிலும் வன்மை பெற்றிருக்க வேண்டும்.

வேண்டப்படுவன இரண்டு

அதே போன்று ‘மனிதன்’ என்ற பெயருக்கு ஏற்ப ஒருவன் வாழ வேண்டுமாயின், அவனுக்கு இன்றியமையாமல் வேண்டப்படுவன இரண்டு. முதலாவது உள்ளத்து உணர்வு; இரண்டாவது அறிவு, இரண்டும் வளம் பெற்றாலன்றி, அவன் முழுத்தன்மையுடையவன் எனக் கருதப்படான். ஒன்றைச் சுருக்கி மற்றொன்றை வளர்ப்பதால் விளைவது தீங்கேயாம். உலக சரித்திரத்தை ஒருமுறை நோக்கினால், இவ்வுண்மை நன்குவிளங்கும். எத்தனையோ சமுதாயங்கள் மிக்க சிறப்புடன் வாழ்ந்தும் நிலைபேறில்லாமல் அழிந்தொழிந்தன. காரணம் யாது? உணர்வு, அறிவு என்ற இரண்டையும் ஒருங்கே வளர்த்திருந்தால் அவை நிலைபெற்றிருக்கக் கூடும். பலமான காற்றடித்தாலும், பிறர் தள்ளிவிட நேர்ந்தாலும் இரண்டு கால்களையும் ஊன்றி நிற்பவன் நன்கு நிற்றல் கூடும். அவ்வாறன்றி ஒரே காலில் நிற்பவன் உயிரைப் பிடித்துக் கொண்டு நிற்றல் கூடுமே தவிர, பிறர் தாக்கினால் விழாதிருத்தல் இயலாது. அதே போலச் சமுதாய வாழ்வுக்குத் தேவையான உணர்வு, அறிவு என்ற இரண்டு கால்களினாலும் நிற்கும் சமுதாயம் காலம் என்னும் பேய்க்காற்றாலும், பிற நாகரிகம் என்ற இடியாலும் தாக்கப்படினும் வீழ்வதில்லை. இதன் மறுதலையாக ஒரு காலில் நிற்கும் நிலை ஏற்பட்ட சமுதாயங்கள் நிலை பெறவில்லை. உணர்வையே பெரிதாகக் கொண்ட நாகரிகம் படைத்த சமுதாயம் வீழ்ச்சியுற்றது–அறிவையே பெரிதாகக்கொண்ட சமுதாயம் வீழ்ச்சியுற்றது. பழந்தமிழன் வாழ்வின் சிறப்பு யாதெனில்: உணர்வு, அறிவு என்ற இவ்விரண்டையும் ஒரு சேர வளர்க்க முற்பட்டமையேயாம்.

அறிவு வளர்ச்சியின் பயன்

மனிதன் அறிவை வளர்ப்பதால் பெறும் பயன் விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல் முதலியவைகளாம். இவற்றின் வளர்ச்சியால் மனிதனின் புறவாழ்வு செம்மையடைந்தது. வெயிலிலும் மழையிலும் அவதியுற்ற மனிதன், வீடு கட்டி, நெருப்பு வளர்த்து வண்டி செய்து வாழக் கற்றுக்கொண்டது விஞ்ஞான அறிவை வளர்த்ததன் பயன். நிலத்திற் கிடைக்கும் பயனை நாளைக்கு வேண்டும் என்று சேமித்து வைத்துப் பிறருக்கும் பகிர்ந்து அளித்து வாழத் தொடங்கியது பொருளாதார அறிவை வளர்த்ததன் பயன். கூட்டங்கூடி வாழத் தொடங்குகையில் ஒருவனைத் தலைவன் என வைத்துக் கொண்டு சட்ட திட்டங்களை ஏற்படுத்தி அவற்றிற்குக் கட்டுப்பட்டு வாழத் தொடங்கியது அரசியல் அறிவை வளர்த்ததன் பயன். இவற்றை மேலும் மேலும் வளர்ப்பதால் மனிதனுடைய அறிவு வளர்ந்தது. மனிதன் நன்முறையில் சமுதாயத்தில் பிறருடன் கூடி வாழும் கலையைக் கற்றுக்கொண்டான். குறைந்த காலத்தில் குறைந்த முயற்சியில் நிறைந்த பொருளைப் பெற்று, நிறைந்த அளவு ஓய்வு நேரத்தையும் பெற வழி செய்து கொண்டான். இவை யாவும் அறிவு வளர்ச்சியால் அவனுடைய புறவாழ்வு பெற்ற பயன்களாகும்.

இனி, மனிதனால் தோற்றுவிக்கப் பெறும் நூல்களும் இரு வகைப்படும். ஒரு வகை, அறிவின் துணை கொண்டு ஆக்கப்பெறும் அறிவியல் நூல்கள். ஏனையவை உணர்வின் துணைகொண்டு செய்யப் பெறும் உணர்வு நூல்கள். இவற்றையே இலக்கியம் என்று கூறுகிறோம். முதல் தொகுப்பில் உள்ளனவாகிய அறிவியல் நூல்கள் கால தேச வர்த்தமானங்களால் மாறுபவை. ஓரளவு எல்லையுடைய அறிவின் திறங்கொண்டு ஆக்கப்பெறும் இந்நூல்கள், மக்கள் சமுதாயம் அறிவு வளர்ச்சி பெற்ற பிறகு தங்கள் பயனை இழந்து விடுகின்றன. விஞ்ஞான உலகின் திறவு கோல் என்று கூறப்பெற்ற ‘நியூட்டனின்’ இயக்கச் சட்டங்கள் (Laws of motion) ‘ஐன்ஸ்டின்’ தோன்றிய பிறகு ஐயுறுதற்கும் ஏதுவாய்விட்டன. அன்றைய அறிவுநிலையில் உண்மையாகக் கருதப்பெற்ற ஒன்று, இன்றைய அறிவு நிலையில் மாறிவிட்டது. உடைக்க முடியாதது என்று கருதி ‘அணு’ (atom) என்று பெயரிட்டார் டால்டன் என்ற பெரியார் நுண்மைப் பொருளுக்கு அன்றைய அறிவுத் திறத்துக்கு அது சரி. ஆனால், இன்றைய அறிவு நிலை, அணுவைத் துளைத்து அதனுள் ஓர் உலகத்தையே காண்கிறது. நேற்றுவரை உண்மையென்று கருதப்பட்ட ஒன்று இன்று பொய்யாவதைக் காண்கிறோம். இன்றைய உலகம் உண்மை என்று நம்புவது நாளை உலகால் எள்ளவும் நகையாடவும் படலாம். இங்ஙனம் வளர்ச்சியடைந்த இந்நூல்கள் அனைத்தும் அறிவின் துணைக் கொண்டு மட்டும் ஆக்கப்பெற்றவை. உணர்விற்கு இங்கு வேலையே இல்லை. உணர்வின் உதவியின்றித் தோன்றும் இவற்றால் ஓரளவு நற்பயன் விளைவது உண்டாயினும், தீப்பயனும் தோன்றத்தான் செய்கிறது. அணுவைத் துளைத்து மின்அணு, பரமாணுவாகப் பிரித்தால் பயன் உண்டா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கத் தீப்பயன் உடன் விளைந்துவிட்டது. உணர்வின் உதவி இன்றி அறிவின் பயனாகத் தோன்றினமையாலேதான் அணுவைத் துளைக்கும் ஆராய்ச்சி அணுகுண்டில் முடிந்தது. உணர்வும் அறிவும் சேர்ந்து வளர்ந்திருந்தால், இவ்வாறு 'அணுகுண்டு தோன்றி இருப்பினும், அது ‘நாகசாக்கி, ஹிரோஷிமா’ மக்கள் தலையில் விழாமல் சமுதாய நன்மைக்குப் பயன்பட்டிருக்கும்.

அறிவின் உதவியால் மட்டுமே தோன்றும் பொருள்கள், அவ்வறிவு வளர்ச்சி பெற்றபின் பயன்படாமல் ஒழிவதைக் கண்டோம். ஆனால், பின்னர்க் கூறப்பெற்ற உணர்வின் அடிப்படையில் தோன்றும் இலக்கியம் இவ்வாறு பயனற்றுப் போவதில்லை. எத்துணைக் காலஞ் சென்றாலும், மக்கள் சமுதாயம் எவ்வளவு அறிவு வளர்ச்சியடைந்தாலும், இவை பழமையானவை என்று கருதப் படுவதில்லை. ஒரு காலத்து வாழ்ந்த மக்கட்கு மட்டுமே விரும்பத்தக்கதாய் இருந்தது என்று கூறுவதற்கில்லாமல் எக்காலத்தும் எவ்விடத்தும் வாழும் மக்கள் அனைவருக்கும் விரும்பத்தக்கதாய் இருந்தது என்று கூறுவதற்கில்லாமல் எக்காலத்தும் எவ்விடத்தும் வாழும் மக்கள் அனைவருக்கும் விரும்பத்தக்கதாய் உள்ள பெருமை இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு. சுருங்கக் கூறின், காலதேச வர்த்தமானம் கடந்த ஒன்றாய் மிளிர்வது உணர்வின் பயனாகத் தோன்றும் இலக்கியம் என்னலாம்.

உணர்வு வளர்ச்சி

உணர்வு வளர்ச்சியாலேதான் மனிதனுடைய மனம் நிறைவடையவேண்டும். எத்துணை அறிவை வளர்த்துக் கொண்டு போனாலும், மனம் நிறைவடையாது. இது கருதியே போலும் தாயுமானவ அடிகளார்,

சினம்இறக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம்இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே!
                                                 - (பராபரக்கண்ணி, 169)

என்று கூறிப்போனார்! அறிவு வளர்ச்சியால் மட்டும் மனநிறைவடைய முடியாது என்பதற்கு அமெரிக்கா, இரஷியா போன்ற மேனாடுகள் உதாரணமாகும். இத்தகைய ஓர் இக்கட்டான நிலை தோன்றக்கூடும் என்பதை அன்றைத் தமிழன் நன்கு அறிந்தமையின், உணர்வையும் அறிவுடன் வளர்க்கத் தலைப்பட்டான். அதன் பயனே அக வளர்ச்சியாம். உணர்வு வளர்ச்சியை ‘அகம்’ என்று கூறினான் பண்டைத் தமிழன். அகமாவது யாது? –

“ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம், அக் கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறு. இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்த இன்பம் உறுவதோர் பொருள் ஆகலின், அதனை அகம் என்றார் . . . இன்பமேயன்றித் துன்பமும் அகத்தே நிகழுமாவெனின், அதுவும் காமம் கண்ணிற்றேல் (கருதினால்) இன்பத்துள் அடங்கும்.”

(தொல், அகத்திணை. சூ. 1, நச்சி. உரை)

அகம் என்பதற்குப் பண்டைத் தமிழ் கண்ட விரிவுரையாகும் இது. ‘யாண்டும் உள்ளத்துண்ர்வே நுகர்ந்து’ என்று கூறினமையின், இதுவே உணர்வை வளர்க்கும் வழி என்பது அறிய முடிகிறது.

அகத்திணையும் தமிழரும்

உணர்வை வளர்க்கும் அகத்திற்குத் தமிழன் பெரு மதிப்பைக் கொடுத்தான்; வாழ்விலும் அதனைப் புறத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்று கருதினான். இலக்கணம் வகுத்த தொல்காப்பியனாரும் புறத்தினை இயல் என்ற ஒரே இயலால் புறத்தைப்பற்றிக் கூறினார். ஆனால், அகத்தின் சிறப்பை அறிவிக்கப் போலும் அதனை அகத்திணை இயல், களவியல், கற்பியல் என்ற மூன்று இயல்களாற் பேசினார்! அவ்வாறு இலக்கணம் செய்ய ஒரு தனிக்காரணமும் உண்டு. இலக்கியம் கண்டதற்குத்தானே இலக்கணம் கூறினார் ஆசிரியர்? இலக்கியம் எவ்வாறு, வாழ்க்கையைக் கண்டது: இலக்கியம் தன்னிற் பெரும்பகுதியை அகத்திற்கே தந்து விட்டது. பத்துப்பாட்டு என்றொரு பெரிய தொகைநூல் சங்க இலக்கியத்தில் உண்டு. அதில் உள்ள பத்துப் பாடல்களும் புறப்பொருள் பற்றியே பேசுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மையை ஆய்ந்தால் ‘முல்லைப் பாட்டு’, ‘குறிஞ்சிப் பாட்டு’, ‘நெடுநல் வாடை’ என்ற மூன்றும் அகத்தைப் பற்றிய பாடல்களேயாம். இலக்கண நுணுக்கம் காரணமாக இவை புறத்துள் அடக்கப் பெற்றுள்ளன.

அடுத்து எட்டுத் தொகை என்றதொரு தொகுப்பு உண்டு. தொகை நூல்களாக எட்டு நூல்கள் குறிக்கப்படுகின்றன. இவற்றில் ‘புறநானூறு’, ‘பதிற்றுப்பத்து’ என்ற இரண்டு தவிர, ஏனைய ஆறும் அகப்பகுதி நூல்களே யாகும். முழுவதும் புறம் என்று கூறப்படும் பத்துப்பாடல்களில் மூன்று அகம் பற்றியன; எட்டு நூல்களில் ஆறு அகம் பற்றியன. இவற்றிலிருந்து இத்தமிழர் அகம் பற்றி எத்துணைப் பெருமை கொண்டிருந்தனர் என்பதை அறிய முடிகிறதன்றோ?

ஐந்திணைப்பிரிவு

அகம் எதனைப் பற்றிப் பேசுகிறது? ஒருவனும் ஒருத்தியும் பிறர் உதவியின்றித் தாமே எதிர்ப்பட்டு ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். (இவ்வாறு எதிர்ப்படுதலுக்கு ‘விதி கூட்டுவதால்’ என்று பழைய நூல்கள் காரணம் கூறும்). பார்வை நோக்காக முடிகிறது. அந்நோக்கில் ஒருவரை ஒருவர் ஈர்க்கின்றனர். இருவரும் தம் நிலைமை மாறி ஒருவர் இன்றி மற்றவர் வாழ முடியாதென்ற நிலையை அடைகின்றனர்; மனத்தால் கூடிய பிறகு உடலாலும் கூடுகின்றனர்; இவ்வாறு பிறர் அறியாமல் பன்முறை கூடுகின்றனர். இதனைக் ‘குறிஞ்சித் திணை’ என்று இலக்கணம் கூறும்.

இந்நிலை நீடிக்கையில் இவர்கள் தொடர்பைத் தலைவியுனுடன் ஓயாமல் காலங்கழிக்கும் தோழி மெல்ல அறிகிறாள். தலைவனும் தலைவியும் தம் இன்பமே பெரிதென்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இருவரும் உலகில் வாழ்கின்றவர் தாமே! எனவே, இவர்கள் இவ்வாறு கூடிப் பிரிவதால் சமுதாயத்தில் மற்றவர்கள் இவர்களைப் பற்றி யாது பேசுவர் என்பதைத் தலைவியும் தலைவனும் நினைக்க நேரமில்லாவிடினும், தோழி நினைத்துப்பார்க்கிறாள். அவள் தலைவனைப் பார்த்து விரைவில் மணஞ் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்கிறாள். இதுவும் குறிஞ்சித் திணையின்பாற் படும்.

திருமணம் செய்வது என்றால் தலைவனுக்குக் கையில் பொருள் வேண்டுமே! எனவே, தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள்தேடச் செல்கிறான். திருமணம் நிகழ்ந்த பின்னும் பொருள் தேடச் செல்வதுண்டு. இவ்வாறு தலைவன் பிரிந்து செல்வதையும் அதற்குரிய ஏற்பாடுகளையும் கூறுவது ‘பாலைத்திணை’ என்று இலக்கணங் கூறும்.

திருமணம் முடிந்து இல்லறம் நடத்தும் நாளில் தலைவன் பிரிந்து செல்வதும் உண்டு. அந்நிலையில் தலைவி தன் கடமைகளைச் செய்துகொண்டு வீட்டில் இருப்பாள். இதனை ‘முல்லைத் திணை’ என்பர்.

சென்ற தலைவன் குறித்த காலத்தில் மீளாவிடின், தலைவி மிகவும் வருந்துவாள். அவள் வருத்தம் அடக்கும் நிலைநீங்கி வாய்விட்டு அரற்றும் அளவிற்குச் செல்லுதலும் உண்டு. இவ்வாறு அரற்றுவதை ‘நெய்தல் திணை’ என்பர்.

பொருள் முதலியன தேடி மீண்டு வந்த தலைவன் வீட்டிலிருந்து இன்பமாகப் பொழுது போக்குகிறான். அதிக வேலை இல்லையாதலின், அவன் மனம் சும்மா இருப்பதில்லை, ஓரளவு சோம்பியுள்ள மனத்தில் ‘சாத்தான்’ குடி புகுகின்றான். எனவே, தலைவன் தவறான வழிகளில் செல்லத் தொடங்குகிறான். பரத்தையர் நட்பைத் தேடிச் செல்லும் அவனுக்கும் தலைவிக்கும் மன வேறுபாடு தோன்றுகிறது. அது காரணமாகப் பூசலும் புலவியும் ஏற்படுகின்றன. இதுபற்றிக் கூறுவதை ‘மருதத் திணை’ என்பர்.

தனி இரு திணைகள்

இவ்வாறு ஐந்து வகையாக நடைபெறும் வீட்டு வாழ்வை–உணர்வு வாழ்வை–அகம் என்று கூறினர். இவற்றையல்லாமல், சில புற நடைகளும் (Exceptions) உண்டு. சில சமயங்களில் தலைவர் சிலர் தலைவி தம்மை விரும்புகிறாளா என்பதுபற்றிக் கவலையுறாமல் காதல் புரிய முற்படுவதும் உண்டு. ஒருதலைக் காமமாகிய இதனைக் கைக்கிளைத் திணை (Subnormal love) என்பர். சில சந்தருப்பங்களில் தம்மைவிட வயதில் மூத்தாரிடம் தலைவர்கள் அன்பு செய்ய முற்படுவதும் உண்டு. இதனைப் பெருந்திணை (Abnormal love) என்பர்.

அகத்திணையின் மதிப்பு

பெரும்படியாகக் கூறுமிடத்து அகப் பகுதியின் அடிப்படை இவையே. இவை அனைத்தும், நான்கு சுவர்களை எல்லையாக உடைய வீட்டினுள் நடைபெறுவனவே என்று கூறத் தேவை இல்லை. பரந்துப்பட்ட புற உலகில் நடைபெறும் வாழ்வு முழுவதையும் புறம் என்ற ஒரு பிரிவாகப் பிரித்து ‘சிறிய அளவுடைய வீட்டினுள் நடைபெறும் வாழ்வை அகம்’ என ஒரு பிரிவாகப் பிரித்தனர் பழந்தமிழர். இதன் காரணம் யாது? பரந்த இடத்தில் நடைபெற்றாலும் குறுகிய இடத்தில் நடை பெற்றாலும் இவை இரண்டும் ஒத்த மதிப்புடையன எனக் கருதக் காரணம் யாது? அளவால் இவை மாறுபடினும், தன்மையால் ஒத்த மதிப்புடையவை என்றே கருதினர்.

தொகை நூல்கள் இதனை நன்குணர்ந்த தோடல்லாமல் ஒரு படி மேலேயும் சென்றுவிட்டார்கள். எட்டுத்தொகை நூல்களுள் ஆறு அகத்திற்குத் தரப்பட்டன. ஏன்? புறத்தைவிட அகம் சிறந்தது என்று அவர்கள் கருதியதே காரணமாகும். ஏன் அவ்வாறு கருதினார்கள்? குறுகிய இடத்தில் நடைபெறுவதாயினும், அகம் சிறப்படையாவிடில், புறம் சிறக்க முடியாது. பெரிய மரமாகப் புறத்தே ஒரு பொருள் காட்சி நல்கினாலும் கண்ணுக்குத் தெரியாத சிறிய வேர்களாலேயே மரத்தின் வாழ்வு நடைபெறுகிறது. இச்சிறிய வேர்கள் நன்கு அமையாவிடில் அப்பெரிய மரம் நன்கு வாழ முடியாது. அதேபோலப் பிறர் அறிய முடியாத சூழ்நிலையில் சிறிய வீட்டில் நடைபெறும் அகவாழ்வு செம்மையாக அமைந்தால்தான் புற வாழ்வு செம்மைப்படும். குடும்பம் நன்கு அமைந்தால்தான் சமுதாயம் நன்கு அமையமுடியும்! தனி மனிதன் சீர்திருந்தினாலன்றிச் சமுதாயச் சீர்திருத்தம் என்பது குதிரைக்கொம்புதான்.


வள்ளுவர் வழி

இவ்வுண்மையை நன்கு உணர்ந்த காரணத்தாலேதான் பொதுமறை தந்த பெரியார், உலகம் முழுவதற்கும் நல்வழி வகுக்கத் தொடங்குகையில் புது முறையைக் கையாள்கிறார். அவருக்கு முன்னர்த் தோன்றிய பிளேட்டோ போன்றவர்கள் நாடு நலம் பெறும் வழியைக் கூறினார்கள். ஆனால், வள்ளுவர் இவ்வழியை விட்டுத் தனி மனிதன், அவன் குடும்பம் என்ற இரண்டையும் முதலில் பேசுகிறார். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், புதல்வரைப் பெறுதல், அன்புடைமை, விருந்தோம்பல், வெஃகாமை, பயனில சொல்லாமை முதலிய அதிகாரங்கள் தனிப்பட்ட மனிதனும் அவனுடைய குடும்பமும் செம்மையடையக் கூறப்பெற்ற வழிகள் அல்லவா? குடும்பம் செம்மைப் பட்டாலன்றிச் சமுதாயமும் நாடும் செம்மையடைதல் இயலாதென்பதை நன்கறிந்தமையின், வள்ளுவர் இவ் வழியை மேற்கொண்டார். இக்கருத்துப் பின்னரும் விரிவாக ஆயப்படும்.


குடும்ப வாழ்க்கை மனிதனைச் செம்மைப்படுத்த அவ்வளவு இன்றியமையாததா? ஆம் என்றே கருதினர் பழந்தமிழர்; அதனாலேயே அகத்திற்கு அத்துணை மதிப்புத் தந்தனர். இது ஏன் என்பதைச் சற்று விரிவாகக் காண்போம்.


மனிதன் பிறந்து வளர்வதன் நோக்கம் முழுத்தன்மை (Perfection) அடைவதேயாம். மனிதன் பிறக்கும்பொழுது தன்னலப் பிண்டமாகவே பிறக்கிறான். காட்டு மனிதனாகப் பிறர் உதவியை நாடாமல் வாழ்கின்ற காலத்தில் இதனால் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், நாகரிகம் மிகுந்த சமுதாயத்தின் ஓர் உறுப்பாக அவன் வாழவேண்டிய நிலையில் இத் தன்னலம் ஊறு செய்யும். எனவே, எத்துணைக்கெத்துணை தன்னலத்தை ஒழிக்கிறானோ அத்துணைக்கத்துணை அவன் சிறந்த மனிதனாக வாழ முடியும். முழுத்தன்மை பெற இது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறாயின், தன்னலத்தை உதறித் தள்ள வழி யாது? இல்லறமே சிறந்த வழி. இவ்வாறு கூறுவதால் துறவறத்தை நேரடியாக மேற்கொண்டோர் சிறந்தவர்களாக முடியாது என்பது கருத்தன்று. அவ்வாறு ஆகின்றவர் ஒரு சிலரேயாவர். அன்னார் புறநடையாவரே (Exception) தவிர விதியாகார்.


தலைவனும் தலைவியும்


இல்லறத்தைத் தமிழன் கூறியமுறையில் மேற்கொள்வதால் மனிதன் தன்னலத்திலிருந்து விடுபட முடியுமா? என்பதே அடுத்து வரும் வினா. ஏனைய நாட்டினரைப் போலத் திருமணத்தைக் கூறாமல் தமிழர் அதனைக் ‘களவு’ என்றும் ‘கற்பு’ என்றும் பிரித்தனர். முதலில் களவு தொடங்கும் பொழுதே தலைவன் ஒன்றை இழக்கிறான். அவ்வாறு இழக்கப்படுவது அவனுடைய அகங்காரம் தலைவனும் தலைவியும் ஒத்த பெருமையுடைய்வர்கள் எனக் கூற வந்த தொல்காப்பியர், அடுத்துத் தலைவன் சற்று உயர்ந்தவனாயினுந் தவறு இல்லை எனக் கூறுகிறார்.


ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப

மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே.

(களவியல்– 2)

என்பதால் தலைவன் பெருமையை ஒருவாறு அறியலாம்.

இத்துணைச் சிறந்த தலைவன் தன் பாங்கரும் ஏவலரும் நண்பரும் புடைசூழ வேட்டை மேற்சென்றவன், தலைவியைக் காண்கின்றான். அவளைக் காணுமுன்னர் அவனைப் பற்றி நினைப்பவர்கட்கு அவன் பெருமை தோன்றாமற் போகாது. இத்துணைப் பெருமை காரணமாக அவனிடம் ஓரளவாவது ஆணவம் இல்லாமற்போகாது. மேலும், அவன், ‘அறிவும் ஆற்றலும் புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும் பழிபாவம் அஞ்சுதலும் முதலியனவாய் மேற்படும் பெருமைப் பகுதியும் கடைப் பிடியும் நிறையும் கலங்காது துணிதலும் முதலிய வலியின் பகுதியும் உடையவன்’, எனத் தொல்காப்பியம் கூறுகிறது. ‘பெருமையும் உரனும் ஆடுஉ மேன’ (களவு—7) இவ்வளவு சிறப்பும் உடைய ஒருவன் தன்னைப்பற்றி உயர்வான எண்ணங்கொண்டு தருக்கி நிற்றலில் தவறு இல்லை.

அகங்காரம் அழிதல்

அகங்காரம் அளவு மிஞ்சினால் பிழையே தவிர, அளவுடன் இருப்பதை யாரும் குறை கூறார். இவ்வாறுள்ள தலைவன் சமுதாயத்திற்கு யாது பயனை விளைத்தல் கூடும்? அவனிடம் காணப்படுவனவாக மேலே கூறிய சிறப்புக்கள் அனைத்தும் அவன் பெருமையை மிகுதிப்படுத்தப் பயன்படுவனவே தவிரப் பிறருக்கு எவ்வாறு பயன்படும்? இத்துணைச் சிறப்பும் உடையான் மனத்தில் அன்பு என்பது பிறந்தாலன்றோ அவனால் பிறர் பயன் பெறமுடியும்? இதுவரை தனது நலத்தின்பொருட்டே பிறர் வாழ்கின்றார்கள் என்ற கருத்துடனேதான் அவன் வாழ்கிறான். இன்றேல், பாங்கரும் நண்பருமாய பலர் தன்னைப் புடை சூழ்ந்து வரவேண்டும் என்று அவன் நினைவானா? தலைவியைப் பார்க்கின்றவரை அவன் தன்னைப் பற்றியும் உலகைப் பற்றியும் கொண்டுள்ள எண்ணமே வேறு. அவளைப் பார்த்தவுடன் அவனது மனத்தில் முதலில் தோன்றும் எண்ணம் அவள் அழகைப் பற்றியதுதான். அழகைக் கண்டபொழுது அனுபவிப்பதில் தவறு இல்லையாயினும், அவன் அதனைத் தன்னலத்துடனேதான் காண்கிறான். ஆனால், சில நேரத்தில், இவ்வனுபவத்தில் அவன் ஒன்ற ஒன்ற அவனுடைய நிலைமை மாறுபடுகின்றது. தான் என்ற முனைப்புக் கொஞ்சங்கொஞ்சமாகக் கழன்று விட அழகில் தன்னை அடிமைப்படுத்தும் நிலையை அவன் அடைந்துவிடுகிறான். இன்னும் சிறிது நேரம் ஆனவுடன் அவளில்லாம்ல் தன் வாழ்க்கை முற்றுப்பெறாது என்று அறிகிறான்—அல்ல—உணர்கிறான். இப்பொழுது அவனுடைய பெருமையும் மதிப்பும், உரனும், நண்பர் குழாமும், தன்மதிப்பும் பொருளற்ற வெறுங்கூட்டமாய்க் காட்சியளிக்கின்றன அவனுக்கு. முழு வாழ்வின் முதற்படியில் கால் வைத்து விட்டான் தலைவன். இதுவரை தன்னையே முதலாக வைத்து எண்ணிய தலைவன், இனித் தன்னினும் உயர்ந்த ஒரு பொருளைக் கண்டுவிட்டான். அவள் இல்லாமல் தனக்கு வாழ்வு இல்லை என்பதை உணர்ந்த அந்த வினாடியிலேயே தலைவனுக்குப் புதுவாழ்வு பிறந்து விடுகிறது.

முழுத்தன்மையின் வளர்ச்சி

தலைவி தனக்கு இன்றியமையாதவள் என்று தலைவன் கருதும் பொழுதுகூடத் தன்னலமே அங்குக் காட்சியளிக்கிறது. என்றாலும், தானே, உலகம் என்ற நிலையிலிருந்து இறங்கிவிட்டான் இப்பொழுது. அவன் அவளை அடைந்து இன்பம் பெற வேண்டும் என்ற நினைவிலும் ஓரளவு தன்னலத்தைக் காண்கிறோம். களவிற் கூடி அவர்கள் இன்பம் பெறுகிறார்கள். இதன் பின்னர்ச் சில காலம் பிறர் அறியாமலும், சில காலம் தோழி, பாங்கன், பின்னர் ஊரார் என்பவர்கள் அறியவும் கூடுகிறார்கள். இக் கூட்டத்தினால் இருவரும் இன்பம் பெறினும் தலைவன் இன்னும் தன்னலக் கலப்புடையவனாகவே இருக்கிறான்; பிறர் பழி தூற்றல் முதலியவற்றால் தலைவி வருந்துவாளே என்பதைப் பற்றி அதிகக் கவலை கொள்ளாமல் களவுக் கூட்டத்தையே விரும்புகிறான். இச்சூழ்நிலை இன்னும் அவன் தனது இன்பத்தையே பெரிதாகக் கருதுகிறான் என்பதையே அறிவிக்கின்றது. தோழி பன்முறை அவனைக் கண்டு அவன் செயல் தகாதது என்று இடித்துக் கூறிய பின்னரே திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்கிறான் தலைவன். சில சந்தருப்பங்களில் அவனுடைய அன்பின் ஆழத்திற்குச் சோதனை நிகழ்வதும் உண்டு. தலைவி தனக்குக் கிடைக்க மாட்டாள் என்ற நிலை ஏற்படுமாயின், தலைவன் ‘மடலூர்தல்’ என்பதை மேற் கொண்டேனும் தன்னுடைய அன்பை வெளியிட முயல்கிறான்.

அன்புக்குச் சோதனை

‘மடலூர்தல்’ என்பது பண்டைய வழக்கம். பனங்கறுக்கினால் குதிரை ஒன்று செய்து தான் விரும்பும் தலைவியின் படத்தை எழுதிக்கொண்டு தலைவன் அப்பொம்மைக் குதிரையின்மேல் ஏறிக்கொள்வான். தெருப்பிள்ளைகள் அக் குதிரையை இழுக்கும்பொழுது தலைவனுடம்பிலிருந்து குருதி பெருகும். இதனைக் கண்ட ஊரார் அப்பெண்ணை அவனுக்கு மணம் முடிக்க முந்துவர்; இப்பழக்கம் எத்தகையதாயினும் தலைவனுடைய மனவளர்ச்சியில் ஒரு படியைக் காட்டுகிறது. தலைவியைப் பெற வேண்டித் தன்மானத்தையுந் துறந்து பனங்கறுக்கினால் செய்த குதிரையில் ஏறத் தலைவன் முற்பட்டான் எனில், அவன் அகங்காரம் முற்றும் அழிந்து விட்டதென்பதற்கு இதனினும் சான்று வேறு வேண்டுமோ?


                                                       . . . .போருள்
அடல் மாமேல் ஆற்றுவேன் என்னை மடல்மாமேல்
மன்றம் படர்வித்தவள் வாழி! சான்றீர்

                                                       . . . வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் – அம்ம, சான்றீர்

                                                       . . . வடிநாவின்
வல்லார் முன்சொல் வல்லேன் என்னைப் பறிர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள் – வாழி, சான்றீர்
                                                (கலித்தொகை – 141)


கலித்தொகையில் காணப்பெறும் இம்மூன்று தாழிசைகளும் உண்மைக் காதலில் அகங்காரத்திற்கு அழிவு ஏற்ப்டுகின்றது என்று மேலே நாம் குறிப்பிட்டதை வலியுறுத்துகின்றன. .

அடல் மாமேல் ஆற்றுவேன்

என்று சொல்லும்பொழுது அவன் உடல் வன்மையும்,


                        . . . வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன்

என்று கூறும்பொழுது அவன் நெஞ்சுரத்தையும்,


                       . . . .'வடிநாவின்
வல்லார் முன் சொல்வல்லேன்',

என்று எடுத்துரைக்கும்பொழுது அவன் கல்விப் பெருக்கம், கற்றன சொல்ல வல்ல ஆற்றல் என்பனவற்றையும் அறிய முடிகின்றது.

இம்மூன்று கருத்துக்களையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்பொழுது தலைவனுடைய முழு ஆளுமையும் (Personality) வெளிப்படக் காண்கிறோம்.

இதுவரை கூறியனவற்றைச் சுருக்கமாகக் கண்டால் சில உண்மைகள் தெற்றென விளங்கும். உலகின் பிற இடங்களில் வாழுகின்றவர்கள் காதலைப் பற்றிச் சிந்தித்த முறையில் இத் தமிழர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஆண் பெண் உறவின் அடிப்படையே காதல் என்று உலகில் வாழ்கின்ற பலரும் நினைத்திருந்த வேளையில் தமிழர் பலப்டி முன்சென்று காதல் என்பது ஒருவகை மனநிலை என்று கூறிப் போந்தனர்.

ஒரு தலைவனுக்கு அன்றாடம் எத்தனையோ பெண்களைப் பார்க்கின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது; இத்தகைய வாய்ப்பு தலைவிக்கும் உண்டாகலாம் எனினும் பார்க்கின்ற பெண்கள்பால் எல்லாம் இவன் மனம் செல்வதில்லை; தலைவிக்கும் இவ்வாறே.

இன்னும் சொல்லப்போனால் பல பெண்கள் ஒரே தலைவனைப் பார்க்கின்றனர். ஒருத்தி தவிர பிறர் எவர் மனத்திலும் எத்தகைய கிளர்ச்சியும் தோன்றுவதில்லை. கூட்டமாக இருக்கின்ற பெண்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே தலைவனை(யே)க் கண்டாலும் இவள் ஒருத்தி தவிர ஏனையோர்க்கு எவ்வித மனச் சலனமும் ஏற்படவில்லையாம்.

இந்த ஒருத்திகூட இதே தலைவனை இதன் முன்னர்ப் பன்முறை கண்டிருந்தும் எவ்விதமான மனப் பேதலிப்பும் கொண்டவள் அல்லள்.

ஆனால் இன்று அவனைப் பார்த்த உடன் மனத்தில் ஒரு மாபெரும் மாற்றம் ஏற்பட்டு விட்டதைக் காண்கிறாள்; கூறுகிறாள்.

புலர் குரல் ஏனல் புழையுடை ஒருசிறை
மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர்
பலர்(தில்), வாழி–தோழி!–அவருள்,
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி
ஓர் யான் ஆகுவது எவன் கொல்,
நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே?

(அகம்–82,13–18)

இன்றும்கூட அத்தலைவன் இவளிடம் நேரே வந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்திப் பேசியதாகத் தெரியவில்லை.

யானை வேட்டம் புக்க அவன் யானை. தப்பிச் சென்ற வழி, ஆயத்தாரொடு கூட்டமாக நின்றவர்களைப் பார்த்தே, –

“ஒரு யானை இப்பக்கம் தப்பிப்போனது. கண்டீரே?” எனப் பொதுவாகத்தான் கேட்டான். தலைவியைத் தனியே கேட்கவும் இல்லை; வினாவிற்கு அப்பெண்டிர் விடை தந்ததாகவும் தெரியவில்லை,

தினைப் புனத்தில் நிற்கும் இவள், தன் உடலின் பெரும் பகுதி மலர் குரல் ஏனலால் மறைக்கப்பட விளங்கினாள். எடுத்த ஓர் வினாவிற்கு எதிர்மாற்றம் பெறாதவனாய் அவன் போய்விட்டான்.

அவனைக் கண்ட, அவன் வினா கேட்ட, பெண்கள் அனைவரும் (தோழியர்) அருமையாய் உறங்குகிறார்கள். அத்துணைப் பெண்டிரிடையே இவள், மட்டும் தலையணையே துணையாய் நெகிழ்ந்த தோள்களோடு, நெக்கு நெக்கு நீடு நினைப்பவளாய் நீர் ஒழுக்கு அறாத கண்களோடு இரவு முழுவதும் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறாள்.


உருவ வல்வில் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல்நெறி வினாஅய்,
புலர்குரல் ஏனல் புழையுடை ஒருசிறை
                                                     
(அகம்–82,11–13)


நின்ற தலைவனைக் கண்ட பலருள்ளும் நெகிழ்தோள் இவளே வருந்துகின்றாள்.

(நன்கு கட்டப்பட்ட அழகிய வில்லை ஒரு கையில் பற்றிக் கொண்டு கூர்மையான அம்புகளை ஆராய்ந்து மற்றொரு கையில் வைத்துக் கொண்டு, 'போர் செய்தலில் வல்ல யானை சென்ற வழி இதுவோ?’ என்று வினவியவனாய் கதிர் முற்றித் தலை சாய்த்த திணைப்புனத்தில் ஒரு பக்கமாக நின்று எம்முடன் பேசிய மலர் மாலை அணிந்த தலைவன் நிற்பதைக் கண்டவர் பலர். அப் பலருள்ளும் செறிந்த இருட்டோடு கூடிய இவ் இரவில் தலையணையொடு பொருந்தி, நான் ஒருத்தி மட்டுமே நீர் நிறைந்த கண்ணொடு நெகிழ்ந்த தோளோடு இருப்பது ஏன்?)

இப்பாடலில், குறிஞ்சி பாடக் கபிலர் என்ற முதுமொழியையே ஏற்படுத்திய புலன் அழுக்கற்ற அந்தணாளன் ஆகிய கபிலர்பெருமான் குறிப்புப் பொருள் (முன்னம்) என்ற ஒரு கவிதை அழகைப் பெய்துள்ளார்.

பாடலின் முதல் 10 அடிகள் மலை அழகையும், அச்சாரலில் நடக்கின்ற இயற்கை நிகழ்ச்சிகளையும் ஈடு இணையற்ற முறையில் வருணிக்கின்றன.


ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக
பாடு இன் அருவிப் பனிநீர் இன்னிசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக்கலை இகுக்கும் கடுங் குரல் தூம்பொடு,
மலைப் பூஞ்சாரல் வண்டு யாழ் ஆக
இன்பல் இமிழிசை கேட்டு, கலி சிறந்து
மந்தி நல்அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில்”
                                                              (குறிஞ்சிப்பாட்டு)

காற்றில் அசைகின்ற மூங்கிலினிடத்து உள்ள தொளைகள் வழியாக, கோடைக் காற்று புகுந்து புறப்படுவதனால் குழலிசை தோன்றுகிறது; உயர் பாறையிலிருந்து கீழ் நோக்கிப் பாயும் அருவி நீர், கட்டப்பட்ட முழவின் இனிய இசையைத் தோற்றுவிக்கின்றது. கூட்டமாக உள்ள கலைமான்களின் கடிய குரல் பெருவங்கியம் போல் முழங்குகின்றது. மலைச் சாரலில் பூத்துக் குலுங்கும் மலர்களில் உள்ள தேன்துகள் வண்டுகளின் ரீங்காரம் யாழிசை தோற்றுவிக்கின்றது.

ஒரு நடன நிகழ்ச்சிக்குப் பின்னியம் (Back ground music) ஆக இவை அமைகின்றன.

இவ் இனிய இன்னிசைச் சூழலில் மயில்கள் தம் கலவம் விரித்து ஆடுகின்றன. ஆட்டத்தைக் கண்ட நல்ல மந்திகள் மருண்டு நோக்கினவாம். இத்தகைய வளம் செறிந்த மலை நாட்டுத் தலைவன் அவன்.

மேலே கூறப்பட்டுள்ள இயற்கைக் காட்சி, சங்கப் பாடல்கள் பலவற்றுள்ளும் காணப்படும் குறிஞ்சி நில வருணனையே.

என்றாலும் துண்மாண் நுழை புலம் மிக்க இவ்வந்தணாளனைப் பற்றி மட்டும் “குறிஞ்சிக் கபிலன்” என்று ஏன் போற்றினார்கள்?அதற்கு ஏதாவது காரணம் இருக்கத்தானே வேண்டும்.

ஆழ்ந்து நோக்கினால் குறிப்பின்மூலம் தன் கருத்தைக் கவிதையில் வலியுறுத்துவார் இப்புலவர் பெருமகன் என்பதனை அறியமுடிகிறது.

இப்பாடலின் தனிச் சிறப்பு, காதல் என்பது ஒரு மனநிலை என்பதனையும் அது ‘பொள்’ எனத் தோன்றும் என்பதனையும் ஒரே சூழலில் பலர் இருப்பினும் குறிப்பிட்டவர்களையே அது தாக்குகிறது என்பதனையும் பிற்பகுதி எடுத்துக்காட்டுகிறது. இதில்கூட ஒரு நுண்மையான குறிப்பு ஒன்று பெறவைக்கின்றார் கபிலர்.

இம் மலைநாட்டுத் தலைவன், அவனைக் கண்ட பெண்கள் அனைவரும் ஓரூர்க்காரர்களேயாவர். எனவே இத் தலைவி உள்ளிட்ட பலரும் இத் தலைவனை இதற்குமுன் பலமுறை கண்டிருக்கக் கூடும். ஆனால் இத்தனை தடவைகளிலும் அப்பெண்களுக்கோ அல்லது தலைவிக்கோ எவ்வித மனப்பேதலிப்பும் தோன்றியதில்லை.

வேட்டம் புக்க தலைவன் வேட்டம் புகு நாட்கள் தோறும் இவ்வழி உள்ளிட்ட பலவழிகளில் விலங்குகளைத் தேடிச் செல்வதுண்டு.

வழியில் நிற்பவர்களைக் காணின் தான் தப்பிய விலங்கு அவ்வழி போயிற்றோ என்று கேட்பதும் இயல்பானது தானே.

இதற்கு முன்னர்ப் பலமுறை கண்ட தலைவன் பல நாளும் தலைவியின் உடன் வருகின்ற தோழியர், பலவகைகளில் அவன் கேட்கும் வினா.

ஆனால் இதுவரையில் இல்லாத ஒரு புதுமை இன்று நிகழ்ந்துவிட்டது. தலைவி முழுமாற்றம் பெற்றுவிட்டாள். இது எப்படி நிகழ்ந்தது? தலைவி உள்ளிட்ட எவர்க்கும் இதற்கு விளக்கம் கூற முடியவில்லை. இப்படி திடீரென்று தோன்றுகின்ற ஒரு மன நிலையைக் காதல் என்று கூறினர் இத்தமிழர்.

இதுபற்றி இப்பாடல் பகுதியில் எவ்வித விளக்கமும் இல்லையே? இது நாமாக இட்டுக் கட்டிக் கொண்டு கூறுவதா? என்று சிலர் நினைக்கலாம். இதனை இவ்வளவு விளக்கமாகப் பாடினால் இவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அதிலும் சிறப்பாக கபிலனாக இருக்கமுடியாது என்றால் இவ்விளக்கத்தை எங்கே பெறுகிறோம்.

இயற்கை வருணனைக் கூறுகின்ற பொழுது ஓர் அற்புதமான சொல் பெய்து இத்துணைப் பொருளையும் நாம் பெறுமாறு செய்துவிட்டார் பொய்யா நாவிற் கபிலர்.

மூங்கிலிற் காற்றடிக்க குழலோசை பிறப்பதும், அருவியில் முழவோசை எழுவதும், வண்டு யாழ் செய்வதும் மயில் ஆடுவதும் என்றும் மலைச் சாரலில் நிகழ்வனவே,

தினமும் நடைபெறும் இந்த மயிலின் ஆட்டத்தை அங்கேயே வாழும் குரங்குகள் பார்ப்பதும் இயல்பே. இதனைத்தான் புலவரும் கூறியுள்ளார். என்றாலும் அன்றாடம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் இன்று ஒரு புதுமை புகுந்துவிட்டது. இதனை ஒரு சொல்லின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

'மந்தி மருள்வன நோக்க' என்ற சொற்களைக் கவனிக்க வேண்டும். மயிலின் ஆட்டத்தைத் தினமும் காண்கின்ற மந்திகளுக்கு மருட்சி எங்கிருந்து வந்தது? மருட்சி வந்தது என்று புலவர் கூறுவதால் அன்றாடம் போலன்றி இந்த மயில் ஏதோ ஒரு புதுமையான முறையில் ஆடுகின்றது என்று மந்தி தெரிந்து கொள்கிறது என்னலாம். வழக்கமான ஆட்டமாக இருந்தால் மகிழ்வது அன்றி மருள்வது ஏது?

இம் மருட்சிக்குக் காரணம் ஆட்டத்தில் நிகழ்ந்த புதுமை; புதுமை காரணமாக மருட்சி ஏற்பட்டது என்பது வெளிப்படை. இக் குறிப்பு பிற்பகுதியில் சொல்லப் பெற்ற கருத்திற்கு அங்குரமாக அமையக் காணலாம்.

அன்றாடம் காணும் தலைவன் உடன் இருக்கின்ற தோழிமார், எனினும் இன்று ஏதோ ஒரு புதுமை நிகழ்ந்து விட்டது. இன்று மருட்சி ஏற்பட்டது; தலைவிக்கு உறக்கம் போய்விட்டது.

இக் கருத்தை வலியுறுத்தும் வகையில் குறுந்தொகைப் பாடல் ஒன்று விளக்கம் தருகின்றது.


காமம் காமம்’ என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே
                                                           (குறுந்தொகை 136)

(காமம் காமம் என்று உலகினர் கூறும் அது தோன்றும் வருத்தமோ, பீடிக்கும் நோயோ அன்று. நுண்மையதாகி மிகுதலோ குறைதலோ இல்லாதது. தழை உணவை மென்று தின்று அதனால் யானை மதம் கொள்வது போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் வெளிப்படும் செவ்வியையும் உடையது)

இப்பாடலில் காமம் என்ற சொல்லிற்கு இன்று நாம் கருதும் பொருள் தந்து இடர்ப்படக் கூடாது. சங்க காலத்திலும் காமம் காதல் என்பவை ஒரே பொருளுடைய பரியாயச் சொற்களாய் வழங்கப்பட்டன.

யானை தின்பது பச்சை நிற அதிமதுரத் தழை. இதன் பயனாக விளைவது மதம். அது கரு நிறத்தது. மரத்தின் தழைகள் அம் மரத்திற்கு எவ்விதமான மாற்றத்தையும் தருவதில்லை. தழையைத் தின்று முடிக்கும் வரையில் யானை எவ்வித மாற்றமும் பெறுவதில்லை. யானை மட்டுமா, பிற விலங்குகளும் அல்லவா தின்கின்றன. அவை எவ்வித மாற்றமும் பெறுவது இல்லையே.

தினமும் உண்ணும் அத் தழையால் ஏதோ ஒருநாள் மட்டுமே அது மதம் பெறுகின்றது.

எனவே குளகிற்கும், மதத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்று விளங்கிக் கொள்ள முடிவதில்லை.

அது போலவே பலமுறை காணும் தலைவனை ஏதோ ஒருநாள் கண்ட போது தலைவிக்கு மனமாற்றம் ஏற்படுகின்றது. தலைவனுக்கும் இந்த மனமாற்றத்திற்கு அவர்கள் சந்திப்புதான் காரணம் என்று சொல்லமுடியாது. ஏன்? பலமுறை சந்தித்தவர்களேதாம். ஆனால் இன்றுதான் அவர்களுக்குள் இம் மனமாற்றம் நிகழ்கிறது.

இது எது போலத் தெரியுமா? தழையைப் பலகால் தின்றாலும் ஏதோ ஒருநாள் யானைக்கு மதம் ஏற்படுகின்றதே அதுபோல. எனவே இத்தொடர்பை நம்மால் பூரணமாக விளங்கிக் கொண்டு சொல்லமுடியாது என்ற கருத்தை மிளைப் பெருங்கந்தன் இப்பாடலில் பாடியுள்ளான்.

இதே புலவன் குறுந்தொகை பாடலில்,

காமம் காமம்’ என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்,
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோளோயே

(குறுந்தொகை–204)

(காமம், காமம் என்று உலகினர் குறிப்பிடும் அது வருத்தமோ, நோயோ அன்று. மேட்டு நிலத்தில் தழைத்த முதிராத இளைய புல்லை முதிய பசு நாவால் தடவி இன்புறுவது போல நினைக்கும் காலத்து புதிய இன்பத்தைத் தருவதாகும்)

என்று கூறுகின்றான்.

இவ்விரு பாடல்களில் முதல் இரு அடிகள் ஒத்தனவே. இவ்வாறு கூறுகின்றதனால் ஒரு கருத்தைப் பெற வைக்கின்றான்

தொல்காப்பியம் தொடங்கி இக்காலம் வரை அகத்துறை பற்றிப் பெரிய இலக்கியங்களும், பல்வேறு பாடல்களும் தோன்றியிருப்பினும் பலரும் அதனை நன்கு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான் போலும் ‘காமநோய்’ என்றும் கூட அக்காலத்திலேயே கூறினர்.

இப்படித் தவறாக நினைக்கக் கூடாது என்று கருதியே போலும் புலவர் இரு பாடல்களிலும் காமம் என்பது நம்மை வருத்தும் அணங்கோ பிணியோ அன்று எனக் கூறுகின்றான்.

முதற்பாடலில் யானை, குளகு என்று உவமையைக் காட்டி உரியவர்களை உரிய காலத்தில் கண்டால் (காணு நர்ப் பெறினே) இம் மனநிலை தோன்றும் என்கிறான்.

இரண்டாம் பாடலில் இன்னும் செறிவாக ஒரு கருத்தைப் பெற வைக்கின்றான். பின் மூன்றடிகளில் இளம்புல், மூதா, விருந்து என்ற மூன்று காணப்படு கின்றன.

மூதா கூறினமையின் அந்தப் புல்லைப் பற்றிக் கறித்து மென்று தின்னும் நிலை மறுக்கப்படுகின்றது.

முற்றா இளம்புல் என்பதனால் அதற்குரிய பக்குவம் கூறப்படுகின்றது. அதனை உண்ணாமல் தைவரல் என்பது காதல் என்பது உடலுறு புணர்ச்சியைக் காட்டிலும் உள்ளப் புணர்ச்சியையே குறிக்கின்றமை தெளிவு.

உண்மையான காதலில் அன்றாடம் புதுமை தோன்றும் என்பதனை ‘விருந்தே காமம்’ என்பதன் மூலம் பெற வைக்கின்றார்.

கபிலன், மிளைப் பெருங்கந்தன் ஆகியோர் பாடல்களில் சொல்லப் பெற்ற கருத்துகள் ஏறத்தாழ 28 அடிகளில் பேசப்பட்டுள்ளன.

கடுகைத் துளைத்து எழுகடலைப் புகட்டவல்ல வள்ளுவப் பேராசான் தன் ஒரு குறட்பாவில் இத்துணைக் கருத்துக்களையும் பெய்து காட்டுகிறார்.


மலரினும் மெல்லிது காமம்; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

(குறள்–1289)

இக்குறட்பா ஆழமான பொருட் செறிவு உடையது.

மலர் என்ற சொல்லால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கு அமைந்து உள்ள பெயரைக் குறிப்பிடுகிறார்.

அரும்பு, முகை, போது என்பன இதற்கு முன்நிலையைச் சுட்டுவன. வீ, செம்மல் என்பன பின்நிலையைக் காட்டுவன.

எனவே மலர் என்பதால் காதற்குரிய பக்குவத்தை அறிய வேண்டும் என்று நினைவூட்டுகிறார். மேலும் மெல்லிது என்று குறிப்பிடுவதன் வாயிலாய் இம்மன நிலையைத் தெரிந்துகொள்ளா விட்டால் காதல் சாதலாகி விடும் என்பதனையும் பெற வைக்கிறார்.

இரண்டாம் அடியில் செவ்வி (பக்குவம்) என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் இது மனநிலையையே குறிப்பிடும் என்று வலியுறுத்துகின்றார்.

மலரின் பல்வேறு நிலைகளை அறியாமல் பெரும்பான்மையர் அரும்பு முதலாக செம்மல் ஈறாக உள்ள எல்லா நிலைகளையுமே மலர் எனக் கொள்கின்றனர்; கூறுகின்றனர்.

அதே போல் காதல் என்பதன் உண்மைப் பொருள் அறியாதவர்கள் அது ஒரு வகை மனநிலை என்று உணரமாட்டாமே எல்லாவற்றையும் இச்சொல்லால், குறிப்பிடுகின்றனர்.

இதனை வலியுறுத்துவதே,

“சிலர் அதன் செவ்வி தலைப் படுவார்”
என்ற தொடர்.

மனநிலை மாற்றத்திற்கு உரியது.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குரியது.

ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில், ஒரு குறிப்பிட்டவரைக் காணும்பொழுது அமைவது என்பன போன்ற கருத்துக்களையெல்லாம் மேற்காட்டப் பெற்ற குறட்பா விளக்குகிறது. .

இக்குறட்பா, குறுந்தொகை மிளைப் பெருங்கந்தனின் பெருந்தொகை விளக்கம் என்னலாம்.

இதே போலவே குறுந்தொகை 204ஆம் பாடலின் விளக்க உரையாக அமைவது.

அறிதோ றறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு.

(குறள்–1110)

என்ற குறட்பாவாகும்.

'விருந்தே காமம்' என்று கவிஞன் அன்றாடம் விளை கின்ற புதுமை குறித்துப் பேசுகின்றான்.

வள்ளுவர் மனித மனநிலையில் (Human Psychology)  நுண்மை அறிந்து, மிளைப் பெருங்கந்தன் பாடலை வேறுவிதமாகக் காண்பிக்கிறார்.

மனித உளவியல் வல்லுநரான வள்ளுவர் அறிதோறு அறியாமை கண்டற்றால் என்று கூறும்பொழுது 'பலகாலம் இத்தலைவியின் உடன் வாழ்ந்தும் நேற்று இந்தப் புதுமையைக் காணவில்லையே’ என்றும் வியக்கும் தலைவனின் மன நிலையைக் குறிப்பிடுகின்றார்.

இன்னும் ஒருபடி மேலே சென்று பலகாலம் ஒன்றித்து வாழும் தலைவன் தலைவியர் ஒருவரை ஒருவர் பரிபூரணமாக அறிந்துகொண்டதாக நினைக்கும்பொழுதுகூட அது பூரணத்துவம் அடைவதில்லை என்று உணர்வர். இதனையே,

'அறிதோறும் அறியாமை கண்ட அத்தன்மை போல்' என்று பேசுகிறார்.

அறிவு வளரும் இயல்புடையது. எனவே நேற்றைவிட, இன்றும், இன்றைவிட நாளையும் வளர்கின்ற தன்மையது.

அதனால் இன்றைய அறிவு வளர்ச்சியால் நேற்றைய நம் அறியாமையை அறிய முடிகின்றது.

இவ்வாறு கூறுவதன்மூலம் எத்துணை ஆண்டுகள் ஆனாலும் காதலில் தோன்றும் புதுமை, முதல் நாள் அறியாமையை அறிவிக்கின்றது என்று பெற வைக்கின்றார்.

இந்தக் குறட்பாவை இன்னமும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஐம்பதாண்டுகள் இல்லறம் நடத்தி உடல் தளர்ந்த நிலையில் உள்ள தலைவன் தலைவியர் உடலுறவின் மூலம் புதிய இன்பத்தைக் காண முடியுமா? நிச்சயமாக முடியாது.

அப்படியிருக்க, காமம் செறிதோறும் சேயிழையார் மாட்டு அறிதோறும் அறியாமை கண்ட அற்று (அத்தன்மையது) என்று இப்பேராசான் பாடுவானேயானால் நிச்சயமாக இவன் இணை விழைச்சைக் குறிக்கவில்லை என்பது தெளிவு என்று அறிய முடியும்.

எனவே இத்தமிழர் கண்ட காதல், காமம் என்பன உலகின் பிறநாட்டார் கனவினும் சிந்திக்காத ஒன்று; ஒர் ஒப்பற்ற கருத்து என்று முன்னர்க் கூறியது இப் பாடல்களால், (அகம், குறுந்தொகை, திருக்குறள்) தந்துள்ள விளக்கங்களால் வலியுறுத்தப் பெறல் காணலாம்.

வீட்டு ஆட்சி அவளுடையதே!

இத்துணையளவு பண்பட்டுவிட்ட தலைவன், தன் மனத்துக்கிசைந்த மங்கை நல்லாளுடன் இல்லறம் தொடங்குகிறான். வீட்டு வாழ்க்கையில் நல்ல அனுபவம் பெற்ற தமிழர் தலைவனுடைய உரிமைக்கும் அதிகாரத்திற்கும் வரம்பு கட்டினர். வீட்டினுள் தலைவன் தலைவி என்ற இருவர் இருப்பதால் கொண்டு செலுத்தும் உரிமை யாருடையது என்ற வினாத் தோன்றுமன்றோ? இருவரும் அதிகாரம் செலுத்தத் தொடங்கினால் அது இரட்டை ஆட்சியாக (Dual Government) மாறித் தீமை பயக்குமே தவிர நன்மை பயவாது. எனவே, பெருமையும் உரனும் தன்னியல்பாகக் கொண்ட தமிழ் மகன், வீட்டு ஆட்சியைத் தலைவியிடம் ஒப்படைத்து விட்டான். அதனால், அவளுக்கு இல்லாள் என்ற பெயர் தோன்றலாயிற்று. எல்லாப் பெண்பாற் பெயர்கட்கும் ஆண்பாற் பெயர் ஒன்றைக் கூறும் தமிழ் மொழியில் இல்லாள் என்பதற்கு ஏற்ற ஆண்பாற்பெயரே இல்லாது போயிற்று. இது எதனை உணர்த்துகின்றது? வீட்டைப் பொறுத்தவரை அவளே அரசி என்பதையும் வீட்டினுள் தலைவனுடைய அதிகாரம் செல்வதில்லை என்பதையும் உணர்த்துகின்றதன்றோ? ஆண்மகன் தன் மதிப்பை இன்னுங் கொஞ்சம் விட்டுக் கொடுத்துவிட்டான். வீடு வைத்தமையின் அவனுடைய அகங்காரம் பெரும்பகுதி அழியத் தொடங்கி விட்டது. அகங்காரம் அழியத் தொடங்கவே, அன்பு வளரத் தொடங்குகிறது. தன்னைப் பற்றி மட்டும் அன்பு கொண்டிருந்த தலைவனுக்குத் தன்னையல்லாத பிறரிடமும் அன்பு செய்யும் வாய்ப்பைத் தேடித்தந்தது குடும்பமே யன்றோ?

அன்பின் விரிவு

தலைவியினிடம் சென்ற அன்பு, பின்னர் அவளுடைய உயிர்த்தோழி, தாயார், சுற்றத்தார் எனப் பலரிடத்தும் பரவுகின்றது. இதனையடுத்துத் தனக்குப் பிறக்கும் குழந்தைகளிடம் அன்பு விரிகின்றது. இந்த அளவுவரைத் தலைவனுடைய அன்பு விரிந்து அகங்காரம் குறைந்தது உண்மைதான். ஆனாலும், பிறருக்காகத் தன்னலத்தை முழுவதும் விட்டுக் கொடுக்கும் சந்தருப்பம் இன்னும் ஏற்படவில்லை. எனினும், குடும்பத் தலைவன் ஆனவுடன் புதிய கடமைகள் தோன்றுகின்றன. அவனுக்கு!

தான் குடும்பம் வைத்தது தன்னுடைய இடையறா இன்பத்தின் பொருட்டே என்று நினைத்தான் தலைவன்; ஆனால், இப்புதிய கடமைகள் தன்னுடைய இன்பத்திற்கு இடையூறாய் நிற்றலைக் கண்டான். ஒரு பெரிய போராட்டம் நிகழ்கின்றது. அவன் ஓயாது வேண்டி நிற்கும் இன்பத்திற்கும் அவனைப் பிடித்து உந்தும் கடமைக்கும் இடையே பெரும்போராட்டம் நிகழ்கிறது. கடமையை நிறைவேற்ற வேண்டுமாயின், அருமைக் காதலியைப் பிரிந்து செல்ல வேண்டிய கடப்பாடு ஏற்படுகிறது. என்ன செய்வான் தலைவன்! பலநாள் அதுபற்றிச் சிந்திக்கின்றான். இறுதியாகக் கடமை உணர்வே எஞ்சுகின்றது. இல்லறம் நடத்துவதன் பயன் இத்தகைய கடமைகளை நிறைவேற்றுவதே என்பதை அறிகின்றான். மேலும், இக்கடமைகளை நிறைவேற்றுவதில் அவன் புதியதோர் இன்பத்தைக் காண்கிறான். தலைவியுடன் உறைவதே இன்பம் என்று நினைத்திருந்த தலைவனுக்கு இவ்வின்பம் புதுமையாய் உளது. அவன் தனது இன்பத்தை விட்டுக் கொடுத்துப் பிறருக்கு மகிழ்வூட்டப் பழகுகிறான். இதனால், மேலும் அவனுடைய மனம் விரிவடைகின்றது.

குறிக்கோள் மாற்றம்

இவ்வாறு பிறருக்காக வாழ்வதில் இன்பங் காணத் தலைப்படுவதால் விரிவடைந்த அவனது மனம், தன் குடும்பம், சுற்றம், அண்டை வீட்டார், தெருவார், ஊரார், நாட்டார் என்ற முறையில் விரிந்துகொண்டே செல்கிறது. இறுதியில் அவன்,

யாதும் ஊரே; யாவரும் கேளிர்

(புறம்–192)

என்ற உணர்வைப் பெறுகின்றான். இதுவே மனிதன் பெறுகின்ற முழு வாழ்வாகும். தன்னல வடிவாய் இருந்த மனிதனைப் பிறர் நலம் பேணும் பெருந்தகையாக மாற்றியது இல்லறம் என்னும் நல்லறம். தான் பெறும் இன்பம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்த மனிதனுக்கு அக்குறிக்கோள் நாளாவட்டத்தில் மாறத் தொடங்குகிறது. நல்ல முறையில் இல்லறம் நடத்திவரத் தொடங்குகையில் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் ஆவதே அவனது குறிக்கோளாக மாறிவிடுகின்றது. இத்தகைய உயர்ந்த பண்பை அகவாழ்வு நல்குவதாலேதான் புறத்தைவிட அகத்திற்கு அதிக மதிப்புத் தந்தனர் தமிழர்.

இல்லறத்தின் பயன் தன்னலத்தை ஒழித்து வாழ்தலே என்பதைக்கண்டோம். தன்னலம் சிறிது ஒழியத் தொடங்கு கையில் அவ்விடத்தில் அன்பு பிறக்கின்றது என்பதையும் கண்டோம். இறுதியாக அவனுடைய குறிக்கோள் மாறுபட்டுத் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனாக மாறும் பொழுது அன்பு என்ற சிறிய பொருள் இருந்த அவன் உடைய மனத்தில் ‘அருள்’ என்னும் புதிய ஒளி தோன்றுகிறது. தொடர்புடையாரிடம் மட்டுஞ் செல்வதை அன்பு என்றும், தொடர்பில்லாதாரிடத்துஞ் செல்வதை அருள் என்றுங் கூறுவர். இல்லறத்தால், அகவாழ்வால் கிடைக்கும் இவ்வருட் பெருக்கத்தைப் பொது மறையாசிரியர்,

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
                                                                

(குறள்–757)

என்று குறிக்கிறார்.

மனிதன் முழு வாழ்வு பெறும்பொழுது அருள் அவனிடம் முழுவதும் நிறைந்து விடுகிறது. அகவாழ்வு வாழாமலும் ஒரு சில பெரியவர்கள் அருள் வாழ்வைப் பெறுவதுண்டு. இத்தகையார் விதிவிலக்கேயாவர். இவர்களைக் கொண்டு அனைவருக்கும் இது இயலுமென்று நினைத்துவிட வேண்டா. அகவாழ்வு மனிதனை முழு வாழ்வு வாழப் பழக்குகிறது என்பது பொதுச் சட்டம். சட்டத்திற்கு விதி விலக்காகச் சிலர் அமைந்துவிடுவதால், சட்டம் பொய் என்று ஆகி விடுவதில்லை. அவ்விதி விலக்கே சட்டத்தை நிலைநாட்டப் போதிய சான்றாகும்.

இதுகாறும் அகத்திணை வாழ்வின் அடிப்படைத் தத்துவம் யாதென்பதைக் கண்டோம். இத்துணைச் சிறந்த தத்துவங்களையும் மனத்துட் கொண்டு திருவள்ளுவர் தம்முடைய ஒப்பற்ற திருக்குறளில் அகவாழ்வு பற்றி விரித்துப் பேசுகிறார். அதனையும் சற்று விரிவாகக் காண்டல் வேண்டும். நீதிநூல் ஆகலின், குறள் சிறந்த இல்லறம் அமையவேண்டிய அடிப்படைத் தேவைகளையும், அத்தேவைகள் நிரம்ப ஏற்ற வழிகளையும் மட்டும் கூறிச் செல்கிறது. இலக்கியங்களிற் காணப்படுவதுபோல, தலைவர் தலைவியருடைய வாழ்வு எங்ஙனம் அமைய வேண்டும் என்பதைக் குறள் விரித்துக் கூறுவதைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகமும்_புறமும்/001-008&oldid=1347359" இலிருந்து மீள்விக்கப்பட்டது