அகல் விளக்கு/அத்தியாயம் 12
நாடகம் சிறப்பாக நடைபெற்றது. சந்திரனுடைய நடிப்பு எல்லோரும் போற்றத்தக்க வகையில் இருந்தது. கதைத் தலைவியாகிய சிவகாமி ஆண் உடை உடுத்துவெளியே செல்லவேண்டி நேர்ந்தது. பெண் உடையில் பெண்ணாக நடித்த சந்திரன், அந்த ஆண் உடையிலும் அருமையாக நடித்தான். வெளிக் கல்லூரி மாணவரும் மாணவியரும் பலர் வந்திருந்தார்கள். அவர்கள் சந்திரனுடைய நடிப்பை மிகப் போற்றினார்கள்.
சந்திரனுடைய நடிப்பு முடிந்து ஒவ்வொரு காட்சியிலும் திரை விடப்பட்டபோதெல்லாம், கைத்தட்டு அரங்கு அதிரும்படியாக இருந்தது. நாடகத்தில் சிறந்த நடிகரைத் தேர்ந்தெடுப்பதற்கு மூவர் நடுவணராக இருந்தனர். அவர்கள் மூவரும் ஒரு முகமாகச் சந்திரனையே முதற் பரிசுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுத்தனர். பரிசு வழங்கிய தலைவர் சந்திரனை மிகப் பாராட்டி, அவன் கலையுலகத்துத் திங்களாக விளங்க வேண்டும் என்று வாழ்த்திப் பரிசு வழங்கினார். பரிசு வழங்கிய போதும் சந்திரனுக்காகவே, கைத்தட்டு அளவு கடந்திருந்தது.
விழா முடிந்தவுடன் கூட்டம் கலைந்து சென்றது. எல்லோரும் போகட்டும் என்று நான் பின் தங்கினேன். மாலன் என்பின் வந்து தோள்மேல் கைவைத்து, "என்ன வேலு! போகலாமே, இன்னும் என்ன?" என்றான்.
"பரிசு பெற்ற சந்திரன் எனக்கு வேண்டியவன். அவனைப் பார்த்து என் மகிழ்ச்சியைத் தெரிவிக்காமல் போவது நல்லதா?" என்றேன்.
"அவன் வெளியே வர இன்னும் சிறிது நேரம் ஆகுமே" என்றான்.
"ஆகாது, வந்துவிடுவான்" என்று நாடக அரங்கிலிருந்து வரும் வழியில் காத்துக்கொண்டிருந்தோம்.
அங்கே எங்களுக்கு வலப்புறத்தில் நாலைந்து பெண்கள் வெளிக் கல்லூரி மாணவியர் காத்திருக்கக் கண்டேன். அவர்களும், "நேரம் ஆகுமோ என்னவோ" என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் சந்திரன் விரைந்து வந்தான். வழியில் நின்ற என்னைப் பார்த்தான். ஆனால் அவனுடைய கண்கள் யாரையோ தேடின. என்னைக் கடந்து அந்தப் பெண்கள் இருந்த இடத்திற்குச் சென்று, "மிகவும் நன்றி! எவ்வளவு நேரம் இருந்தீர்கள்" என்றான். அவர்களுள் ஒருத்தி "மிக மிக நன்றாக இருந்தது உங்கள் நடிப்பு; பெரிய வெற்றி. எங்களுடைய பாராட்டுக்கள். அடுத்த வாரத்தில் எங்கள் நாடகத்திற்கு நீங்கள் தவறாமல் வரவேண்டும்" என்றாள். மற்றப்பெண்களின் முகத்திலும் புன்முறுவல் இருந்தது. அவர்கள் புறப்பட்டார்கள். சந்திரனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.
"இன்னும் இருக்கவேண்டுமா?" என்று மாலன் கேட்டான்.
"சரி, போகலாம்" என்று ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்தேன்.
"இதுதான் காதல்" என்றான் மாலன்.
என் மனம் அதை வேடிக்கையாகக் கொள்ளவில்லை. பெருங்காஞ்சி சாமண்ணா சொன்ன சொல் நினைவுக்கு வந்தது. நம் சந்திரனா இப்படி ஆனான்? என்னைப் பார்த்தும் பேசாமல் அந்தப் பெண்களின் பின் ஓடினானே என்று எண்ணிக் கொண்டே வந்தேன்.
உணவுக் கூடத்திற்குச் சென்று உண்ட பிறகு சந்திரனுடைய அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். சந்திரன் இருந்தான். பலர் அவனைச் சூழ்ந்து நின்று பாராட்டிக்கொண்டும் சிரித்து ஆரவாரம் செய்துகொண்டும் இருந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து அவனெதிரில் நின்று புன்முறுவலால் பாராட்டிவிட்டுத் திரும்பினேன்.
நாடகம் முடிந்த பிறகு நாள்தோறும் சந்திரன் இரவில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான். ஆனால் அவனுடைய அறையில் யாரேனும் போய்ப் பேசிக்கொண்டிருந்ததையே பெரும்பாலும் கண்டேன். பகலில் சந்திரனை அவனுடைய அறையில் காண்பது அரிதாயிற்று. மாலையில் நானும் மாலனும் எறிபந்து, உதைபந்து முதலிய ஆட்டங்களில் ஈடுபட்டோம். சந்திரன் அங்கும் வருவதில்லை. இடையிடையே காண நேர்ந்தபோது, என்றேனும் ஒருநாள், "என்ன செய்தி? நன்றாகப் படிக்கிறாயா?" என்று கேட்பான். நானும், "உன் படிப்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்பேன். அந்த அளவில் எங்கள் உறவு நின்றது. நானாக வலிய அவனுடைய அறைக்குச் சென்றாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்துவிட்டு வந்தேன். ஏதாவது தொடங்கிப் பேசினாலும், பேச்சில் அவன் அவ்வளவாக ஈடுபடாமல், புறக்கணித்தாற்போல் இருந்தான். இவ்வாறு எங்கள் உள்ளங்களுக்கு இடையே ஏதோ ஒரு திரை இருந்து வந்தது.
ஒரு நாள் காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்தவுடன் வெளியே மாணவர்கள் இங்கும் அங்கும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன். என் அறைப்பக்கம் ஒருவன் தலைநீட்டி "இன்று கல்லூரிக்கு யாரும் போகக்கூடாது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்" என்று சொல்லிவிட்டு விரைந்து பக்கத்து அறைக்குச் சென்று அங்கும் அவ்வாறே சொல்லிவிட்டு விரைந்தான். என் மனம் அமைதி இழந்தது. "எவ்வளவு துன்பம்! காலம் எல்லாம் இப்படிச் சிறைக்குப் போய்க்கொண்டே இருந்தால், அவருடைய வாழ்க்கை என்ன ஆவது?" என்று அவருடைய வாழ்வுக்காக இரக்கப்படுவது போல் கலங்கினேன். என்னுடைய அனுபவமும் காந்தியடிகளைப் பற்றி அறிந்த அறிவும் அந்தக் காலத்தில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த ஆண்டில் திரு.வி.க. எழுதிய "காந்தியடிகளும் மனிதவாழ்க்கையும்" என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான், அவருடைய உண்மையான பெருமையையும் உயரிய குறிக்கோளையும் உணர்ந்தேன்.
அறையைப் பூட்டிவிட்டு வெளியே சுற்றி வந்து பார்த்தேன். சில மாணவர்கள் கண்கலங்கி உட்கார்ந்திருந்தார்கள். வேறு சிலர், "படிப்பும் வேண்டா, மண்ணாங்கட்டியும் வேண்டா. ஆங்கிலேயனைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சில மாணவர்கள், "இன்றைக்கு ஒரு விடுமுறை; நம்பாடு கொண்டாட்டம் தான். நல்ல சினிமாவுக்குப் போகலாம்" என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர், "நம் தலைமுறையில் ஒரு பெரிய உத்தமரைப் பெற்றிருக்கிறோம். திருவள்ளுவர், புத்தர், ஏசு, திருநாவுக்கரசர் காலத்தில் நாம் இருந்திருந்தால் அவருடைய அடியாராகி அவர் வழியில் நடக்கமாட்டோமா? காந்தியடிகள் காலத்தில் நாம் பிறந்து வாழ்ந்தும், இப்படிப் பயன் இல்லாத கல்லூரிப் பட்டத்துக்காக நல்ல வாய்ப்பை நெகிழவிடலாமா?" என்று வருந்திக் கொண்டிருந்தார்கள். மாணவர் இருவர், பெட்டி படுக்கை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஊர்க்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள்.
"எங்கள் ஊருக்குப் போய் அங்கே சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்து சிறைக்குப் போகப்போகிறோம்" என்று சொன்னார்கள். ஒரு மாணவன் புத்தகம் முதலியவற்றைத் தன் நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னையில் உள்ள சத்தியாக்கிரகக் குழுவை நாடிப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். அந்த நிலையில் மாலன் வந்து என்னோடு கலந்து கொண்டான். அவனிடம் நான் சில செய்தி சொல்லுமுன்பே அவன் பல செய்திகளைச் சொல்லத் தொடங்கினான். "பெரும்பாலும், தேர்வுக்கு நன்றாகப் படிக்காத மாணவர்கள் தான் இதில் மிகுதியாக ஈடுபடுவார்கள். நீ பார். தேர்வுக்குப் போய்த் தவறிவிட்டுப் பெற்றோரிடம் கெட்ட பெயர் வாங்குவதைவிட இப்படி இயக்கத்தில் ஈடுபட்டுப் பத்திரிகையில் நல்லபெயர் வாங்கலாம் என்பது அவர்களுடைய திட்டம்" என்றான். நான் உடனே மறுத்தேன். அவன் ஆணித்தரமாகப் பேசினான். "பொய்,பொய்" என்று உறுதியாக மறுத்தேன்.
ஒன்பது மணிக்குள் விடுதி மாணவர்கள் கல்லூரியின் எதிரே திரண்டுவிட்டார்கள். இன்று கல்லூரிக்குள் யாரும் நுழையக்கூடாது என்று வெளியே இருந்து மாணவர்களுக்குச் சொல்லித் தடுத்தார்கள். என் வகுப்பில் கற்கும் மாணவர் சிலர் என்னிடம் வந்து, "என்ன செய்வது?" என்று கேட்டார்கள். "நம் நாட்டுப் பெரியவர் இப்படி அடக்குமுறை செய்து அவரைத் தண்டித்தபோது, நாம் வகுப்புக்குப் போய் இருப்பது நல்லது அல்ல. இன்று ஒரு நாளாவது நம்முடைய வருத்தத்தை தெரிவிக்கவேண்டும்" என்றேன்.
ஆனால் மாணவர் பலரிடையே வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். தம் வேண்டுகோளை மீறிக் கல்லூரிக்குள் சென்றவர்களைப் பார்த்து, "கருங்காலிகள்" என்று கூச்சலிட்டு அவர்கள் திரும்பிப் பார்க்காதவாறு செய்தனர். பலர் முகத்தில் புன்முறுவல் இருந்தது. எள்ளி நகையாடும் மனநிலை அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். காந்தியடிகளுக்காகச் செய்வதைவிட, தங்கள் வாழ்க்கையில் ஒரு மாறுதல் காணவேண்டும் என்று செய்ததாகத் தெரிந்தது. அந்த மாறுதலைக் கட்டுப்பாடாக எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும், கட்டுப்பாட்டை மீறுகின்றவர்களை இகழ்ந்து பேசவேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். உண்மையான துயரத்தோடு காந்தியடிகள் துன்பத்தில் பங்கு கொண்டவர்கள் போல் முகம் வாடிச் சோர்ந்து நின்றவர்களும் சிலர் இருந்தார்கள்.
முதல் வகுப்புக்கு உரிய மணி அடித்தது. மாணவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வகுப்புக்குப் போவது தம் கடமை என்று ஆசிரியர்கள் சென்று உட்கார்ந்திருந்தார்கள். ஊர்வலம் போல் கூட்டமாகக் கல்லூரியைச் சுற்றிவர வேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். அவ்வாறே எல்லாரும் உடன்பட்டுக் கூடினார்கள். சுற்றி வந்தபோது வகுப்பறைகளில் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்டபோது கூட்டத்தில் பலர் ஆரவாரம் செய்தார்கள். குறும்புப் பெயர்களிட்டுக் கூவினார்கள். "கருங்காலிகள் ஒழிக" என்றார்கள். வெள்ளைக்காரர்களின் வால்கள் ஒழிக" என்றார்கள். "ஆங்கிலேயர்களின் அடிமைகள் ஒழிக" என்றார்கள். கூட்டம் சுற்றி வந்து ஒரு மரத்தடியில் நின்றது. உயரமான ஒரு மாணவன் - கதர் அணிந்தவன் - "காந்தியடிகள் வாழ்க" என்று மும்முறை முழங்கினான். "மாணவ நண்பர்களே!" என்று விளித்தான். கூட்டம் அமைதியடைந்தது.
"இன்று எந்தப் பெரியவருக்காக - உத்தமருக்காக - தலைவர்க்காக - நாம் வருத்தம் தெரிவிக்கக் கூடியிருக்கிறோமோ, அவருடைய கொள்கைகளை உணராமல் வீண் ஆரவாரம் செய்கிறோம். ஆசிரியர்களையும் சில மாணவர்களையும் எள்ளி நகையாடுகிறோம். ஏதோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போல் முகம் மலர்ந்து முழங்குகிறோம். வெள்ளைக்காரர் அழியவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பவில்லை. ஆனால் நம்முடைய ஆசிரியர்களும் நம்முடன் படிக்கும் மாணவர்களும் அழியவேண்டும் என்று ஆரவாரம் செய்கிறோம். இந்த ஒரு நாளாவது அவருடைய தூய கொள்கைகளை உணர்ந்து, அமைதியாக இருந்து நம்முடைய வருத்தத்தைத் தெரிவிக்கும் படியாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றான்.
சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு மற்றொரு மாணவன் தன் கைகளை உயர்த்தி, "காந்தியடிகள் வாழ்க" என்று சிலமுறை முழங்கியபிறகு, வீரமாகப் பேசினான். முடிவில், "இந்தக் கூட்டம் இப்படியே கடற்கரை வரைக்கும் ஊர்வலமாகச் செல்லவேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினான். "ஆமாம்", "இப்பொழுதே புறப்படுவோம்" "தயார் தயார்" என்று பல குரல்கள் எழுந்தன.
கூட்டம் கல்லூரி எல்லையைக் கடந்து வெளியே செல்லப் புறப்பட்டது. சில மாணவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் விடுதியை நோக்கி வந்தனர். முதலில் பேசிய அந்த உயரமான மாணவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல், வாடிய முகத்துடன் விடுதியை நோக்கி நடந்தார். மாலன் என்னைப் பார்த்து, "இதோ பார்த்தாயா? காந்தி பக்தர் போல் பேசினார். ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் விடுதிக்குப் போகிறார் இப்படித்தான் எல்லாம்" என்றான்.
"அதில் தவறு என்ன? அவர் ஊர்வலம் போகவேண்டும் என்று சொன்னாரா? பிறகு அதன்படி நடக்கவில்லையா? அவருக்கு ஊர்வலம் விருப்பம் இல்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை" என்றேன்.
"நீ ஊர்வலத்தில் கலந்துகொள்ளப் போகிறாயா, இல்லையா?"
"இல்லை?"
"அப்படியா? நான் கலந்துகொள்ளலாம் என்று எண்ணினேன்."
"அப்படியானால் நீ மட்டும் போய்வா"
"இல்லை, நீ வராததால் நான் மட்டும் ஏன் போகவேண்டும்? நானும் விடுதிக்கு வருவேன்."
"வேண்டுமானால், சிறிதுநேரம் சாலையிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு வரலாம். அதற்கு வேண்டுமானால் வருவேன்."
இவ்வாறு நான் சொன்னதும், "சரி, அதுதான் வேண்டும். சும்மா பார்த்து வருவதற்குத்தான் போகலாம் என்று இருந்தேன். இல்லையானால், நாம் போவதால் நாட்டுக்குச் சுதந்திரம் வந்துவிடப்போகிறதா?" என்றான்.
நானும் மாலனும் கூட்டத்தின் பின் மெல்லச் சென்று சாலைப்பக்கம் சேர்ந்தோம். அப்போது ஒருவன் சந்திரனைக் கைப்பிடித்து ஊர்வலத்தின் முன்னணிக்கு இழுத்துச் சென்றதைக் கண்டேன். ஒரு துறையில் முன்நின்ற மாணவனை மற்றத் துறையில் பின்தங்கும்படி இளைஞர்கள் விடுவதில்லை. ஆகையால், சந்திரன் கூட்டத்தின் இடையே ஒதுங்கியிருந்தும், மற்றவர்களின் கண்ணில் பட்டபிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை.
திடீரென்று ஒரு பஸ் நிறைய இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் கைத்தடியும் துப்பாக்கியுமாக வந்து இறங்கினார்கள். தடிகளை இங்கும் அங்கும் சுழற்றினார்கள். சீழ்க்கை ஊதப்பட்டது, தடிகளைச் சுற்றுவதோடு நிற்காமல் மாணவர்களைத் தாக்கவும் தொடங்கினார்கள். "விடுதிக்கு போய்விடுவோம் வந்துவிடு" என்றான் மாலன். "இப்போது ஓடிப்போகக்கூடாது. இருந்து பார்த்துவிட்டுப் போவோம்" என்று மாலனுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். கூட்டத்திலிருந்து சில மாணவர்கள் மட்டும் பரபரப்பாக நடந்து தொலைவில் போய்விட்டனர். மற்றவர்கள் இங்கும் அங்கும் போவதுபோல் நகர்ந்துகொண்டிருந்தார்களே தவிர கலையவில்லை.
"வந்தே மாதரம்! வந்தே மாதரம்!" என்ற குரல்கள் வானளாவின. மற்றுமொரு சீழ்க்கை ஊதப்பட்டது. கண்ணீர்ப்புகை விடப்பட்டது. அப்போதுதான் கூட்டம் சிதறத் தொடங்கியது. நானும் மாலனும் விடுதியை நோக்கிச் சென்றோம். கண்ணீர்ப்புகையும் அதற்குள் எங்கள் கண்களைத் தாக்கியது. கண்ணீர் வழிய நகர்ந்து கொண்டிருந்த எங்கள் மேல் தடிகள் பட்டன. மாலனுடைய முழங்காலிலும் அடிப்பட்டது; என்னுடைய இடது தோளிலும் பட்டது. மாலன், "அப்பாடா" என்று அடிப்பட்ட என் தோளைப் பற்றினான். "அய்யோநோகுது! இந்தத் தோளைப் பற்றிக்கொள்" என்று இப்பக்கமாக வந்து வலது தோளைக் கொடுத்தேன். ஆனால் நன்றாக நடக்கமுடியவில்லை. நொண்டிக்கொண்டே வந்தான். விரைவில் கல்லூரி எல்லைக்குள் நாங்கள் வந்துவிட்டோம். திரும்பிப் பார்த்தோம்.
சந்திரன் நெற்றியில் பலமான அடிபட்டு இரத்தம் கசிய வந்துகொண்டிருந்தான். அவனிடம் சென்று "என்ன செய்தி" என்று கேட்டேன். கண்ணீர்ப் புகை விட்டபோது, இடர்ப்பட்டு விழுந்து விட்டதாகவும் போலிஸ்காரனுடைய தடி பட்டதாகவும் கூறினான். அவன் கையில் இருந்த கைக்குட்டை முழுவதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. உடனே என் கைக்குட்டையை எடுத்து வழிந்த இரத்தத்தை ஒற்றினேன். அவனைப் பற்றினேன். "பிடிக்க வேண்டா; கை காலில் ஒன்றும் அடி இல்லை. நன்றாக நடந்து வருவேன்" என்றான்.
சிறிது நேரத்திற்குள் ஆளுக்கு ஒரு வழியாக மாணவர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் கண்ணீர்ப் புகைக்கு ஆளானவர் சிலர்; அடிப்பட்டவர் சிலர்; ஒன்றும் இல்லாமலே தப்பி வந்துவிட்டவர் பலர். ஊர்வலம் நடத்தித் தீரவேண்டும் என்று வீர முழக்கம் செய்தவன் முன்னே சென்ற காரணத்தால் போலீசாரிடத்தில் அகப்பட்டு கொண்டிருப்பான் என எண்ணினேன். ஆனால் அவன் சிலரோடு பேசிச் சிரித்தபடியே எங்கள் அறைப்பக்கம் போவதைக் கண்டேன். "போலிசு வண்டி வந்ததோ இல்லையோ, அவர்களை ஏமாற்றிவிட்டுக் கல்லூரி எல்லைக்குள் கால்வைத்துவிட்டேன்" என்று அவன் பெருமையடித்துக் கொண்டான். "எனக்கு அந்தப் பயல்களையும் ஏமாற்றத் தெரியும், அவர்களின் பாட்டனையும் ஏமாற்றத் தெரியும்" என்று சொல்லிக்கொண்டான்.
பிற்பகல் மாற்றுடை அணிந்து கொண்டு போலீசார் சிலர் துப்பறிவதாகக் கேள்விப்பட்டோம். விடுதிக்குள் புதியவர்களாக யார் நுழைந்தாலும், துப்பறியும் போலீசார் என்று ஐயுற்றோம். தங்கள் மகனையோ தம்பியையோ பார்க்க வந்தவர்களையும் அவ்வாறு ஐயுற்றுத் தொடர்ந்து சென்று, நாங்கள் அவர்களைத் துப்பறியத் தொடங்கினோம். விடுதியின் வாழ்வில் ஒருவகைச் சுறுசுறுப்பும் பரபரப்பும் எங்கும் காணப்பட்டன. ஆடலும் பாடலும் சினிமாவும் விருந்தும் விழாவும் இல்லாமலே விடுதி உணர்ச்சிமிக்க சூழ்நிலை பெற்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு விடுதி எதிரே போலீசின் வண்டி ஒன்று வந்து நின்றது. நாங்கள் எல்லோரும் பரபரப்பு அடைந்தோம். நேராக ஒரு குறிப்பிட்ட அறையை நோக்கி வருவது போல் போலீசார் வந்தனர். பின்தொடராதபடி எங்களைத் தடுத்துவிட்டு, ஓர் அறைக்குள் நுழைந்தனர். ஒரு மாணவனைப் பற்றிக்கொண்டுவந்தனர். நேரே வண்டியில் ஏற்றிச் சென்றனர். பிறகு மாணவர் சிலர் மிக்க பரபரப்பு அடைந்து, போலீசு நிலையத்துக்குச் சென்று பார்த்தனர். அந்த மாணவன் சிறையில் வைக்கப்பட்டதாகச் செய்தி அறிந்து வந்தனர். அந்த மாணவன் வேறு யாரும் இல்லை; காலையில் கூட்டத்தின்போது ஆசிரியர்களையும் மற்றவர்களையும் இகழாமல் காந்தியடிகளின் கொள்கையை உணர்ந்து அன்பாக அமைதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி ஊர்வலத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் விடுதிக்குச் சென்ற அதே மாணவன் தான். அவன் ஒரு குற்றமும் செய்யக் கூடியவனாகவோ, தீவிரமான நடவடிக்கையில் கலந்து கொள்ளக் கூடியவனாகவோ, இல்லை. அவனைப் போலீசார் பிடித்தது தவறு என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
மாலன் வந்த போது என்ன காரணம் என்று கேட்டேன். போலீசார் துப்பறிய வந்தபோது யாரோ அவனைப் பற்றிச் சொல்லி, அவன்தான் கூட்டத்தில் பேசியதாகவும் எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்ததாகவும் சொல்லிவிட்டார்களாம். அதனால் அவனைச் சிறைப் படுத்தியிருப்பதாகச் சொன்னான். சிறிது நேரத்தில் வேறொருவன் வாயிலாக ஒரு செய்தி வந்தது. காலையில் இரண்டாவதாகப் பேசி வீர முழக்கம் செய்து ஊர்வலம் வேண்டும் என்று தூண்டிய அந்த மாணவன் தான், போலீசாரிடம் அவனை அப்படிக் காட்டிக் கொடுத்து விட்டதாகச் செய்தி தெரிந்தது.
எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி வீர முழக்கம் செய்தவன் தான் போலீசாரை ஏமாற்றிவிட்டதாகப் பெருமையடித்துக் கொண்டதோடு, இப்படி அடாதபொய் சொல்லி நல்லவனைக் காட்டிக் கொடுத்துச் சிறைப்படுத்திவிட்டானே என்று வருந்தினேன். அந்த மாணவன் வீர முழக்கம் செய்தபோது செடி முழுதும் மணம் கமழும் துளசிபோல் விரும்பத்தக்கவனாகத் தோன்றினான். போலீசாரை ஏய்த்துவிட்டு ஓடி வந்ததாகப் பெருமையடித்துக்கொண்டபோது, பூ மட்டும் மணம் கமழும் அரளிபோல் இருந்தான்; இப்படிக் காட்டிக் கொடுத்து நல்லவனுக்குத் தீமை செய்தான் என்று செய்தி கேட்டபோது, மணம் இல்லாத மலர்களைத் தாங்கும் குரோட்டன் செடியே நினைவுக்கு வந்தது.
இந்தச் செய்தி பரவிய பிறகு, மாணவர் ஒருவரை ஒருவர் கண்டாலும் ஐயுறத்தொடங்கினர். பேசினாலும் பிறர் கண்ணில் படாமல், பிறர் செவியிலும் கேளாமல் மெல்லப் பேசினர். மாலனும் பயந்து, "நாம் இருவர் அடிக்கடி பழகிப் பேசினாலும் வம்பு செய்துவிடுவார்கள். இன்னும் நான்கு நாள் தனித்தனியே இருந்து விடுவோம்" என்று சொல்லித் தன் அறைக்குப் போய்விட்டான்.
விடுதியில் முன்நாள் இருந்த உணர்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல்லை. ஏதோ பேய் உலாவும் இடம் என்று சொல்லத்தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லோரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.
அடுத்தநாள் முதல் மெல்ல மெல்ல விடுதிக்கு உயிர் வந்தது எனலாம். எல்லோரும் கலகல என்று பேசும் குரல் கேட்டது. சீழ்க்கை அடித்தலும் சினிமா பாட்டுப் பாடலும் மெல்லமெல்லத் தொடங்கின. படிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. அந்த நல்ல மாணவன் மூன்று நாள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான். என்ன நடந்தது என்று விரிவாகச் செய்தி வந்தது. கூட்டம் கூட்டியதாகவும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும், பேசித் தூண்டியதாகவும் போலீசார் குற்றம் சாட்டினார்களாம். முன் சொன்ன இரண்டிற்கும் தன் தொடர்பு இல்லை என்றும், பேசியது மட்டும் உண்மை என்றும், அந்தப் பேச்சிலும் எந்தச் செயலுக்கும் மாணவரைத் தூண்டியதில்லை என்றும் சொன்னானாம். கல்லூரித் தலைவரின் நற்சான்று கேட்டறிந்து பிறகு விடுதலை செய்து விட்டார்களாம். ஆனால் அந்த நல்லவனைக் காட்டி கொடுத்த குற்றவாளியைப் பற்றிய பேச்சே இல்லை. அவனை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போலீசாரை ஏய்த்துவிட்டது போலவே அவன் விடுதியில் உள்ளவர்களையும் ஏய்த்துவிட்டுக் கவலை இல்லாமல் இருந்தான்.
அடுத்த வாரத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. சிறுநீர் அறைக்குப் பக்கத்தில் ஆரவாரம் கேட்டு உடனே அறையை பூட்டிவிட்டு அங்குச் சென்றேன். அதற்குள் அங்கே ஐம்பது அறுபது மாணவர்கள் கூடிவிட்டிருந்தார்கள். சந்திரன் குரல் உரக்கக் கேட்டது. அவனுடைய குரலில் ஆத்திரமும் இருந்தது. அதனால் உடனே கூட்டத்தின் உள்ளே நுழைந்து சென்றேன். சந்திரனுக்கு எதிரே அந்த நல்லவன் - சிறை சென்ற மாணவன் - அமைதியாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். விடுதிச் செயலாளரும் வளர்ந்த மாணவர்கள் சிலரும் குழப்பத்தில் தலையிட்டு, "இங்கே வேண்டா, போகவர இடையூறாகவும் இருக்கிறது. தயவு செய்து படிப்பகத்துக்கு வாருங்கள். குழப்பம் இல்லாமல் அமைதியாக அங்கே பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நமக்குள் இப்படிப் போரிட்டுக்கொண்டால் நல்லதா? விடுதியில் இருப்பவர்கள் ஒரு குடும்பம்போல் வாழ வேண்டாவா?" என்றார்கள்.
சந்திரன் "சரி" என்று அவர்களுக்கு இணங்கினான். அவனுக்கு ஒரு துணை உண்டு என்று காட்டுவதுபோல் நான் அவன் பக்கம்போய் நின்றேன்.
ஆனால் மற்றவன் வரமறுத்தான். "இதோடு விட்டுவிடுங்கள். வேண்டுமானால், நான் சொன்னது தப்பு என்று ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அப்படி யாருக்கும் நல்லதும் சொல்வதில்லை. விட்டுவிடுங்கள்" என்றான்.
வளர்ந்த மற்ற மாணவர்கள் அவனை நோக்கி, "அப்படி அல்ல. இந்த அளவில் விட்டுவிட்டால், உங்கள் இருவர்க்கும் மனக்கசப்பு இருந்துவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நன்றாக இருக்காது. ஆகையால் தயவு செய்து நாங்கள் சொல்வதைக்கேட்டு, எங்களுக்காக, விடுதியின் நன்மைக்காக எங்களோடு வரவேண்டும்" என்றார்கள்.
அதன் பிறகுதான் அந்த மாணவன் வந்தான். அவன் தூய வெள்ளைக் கதர் உடுத்து, அமைதி பொலியும் முகத்தோடு விளங்கினான். அவனிடத்தில் குற்றம் ஒன்றும் இருக்கமுடியாதே என்று எண்ணினேன். ஆனாலும் என்னோடு உடன் படித்த காரணத்தாலும், எங்கள் ஊர்ப்பக்கத்திலிருந்து வந்தவன் ஆகையாலும், சந்திரன் சார்பாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, சந்திரனுக்குப் பக்கத்தில் அவனுடைய வலக்கைபோல் பெருமித உணர்ச்சியோடு நடந்து சென்றேன். மாணவர்களும் கூட்டமாக வந்தார்கள்.
படிப்பகத்தில் உட்கார்ந்தவுடன், செயலாளர் சந்திரனைப் பார்த்து, "ஆத்திரம் இல்லாமல், கோபம் இல்லாமல், நடந்ததைச் சொல்லுங்கள்" என்றார். அந்தக் கதர் மாணவனைப் பார்த்து, "அதுவரையில் நீங்கள் கேட்டிருங்கள். ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் பிறகு சொல்லுங்கள்" என்றார்.
உடனே, கதர் மாணவன், "சொல்லாமலே இருக்க முடியும்" என்றான்.
சந்திரன் சொல்லத் தொடங்கியதும் நான் ஆவலுடன் கேட்டேன். "நான் சிறுநீர் அறைக்குப் போயிருந்தேன். சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். இந்த ஆள் உள்ளே நுழைந்தார். உடனே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டார். 'ஒன்றுக்குப்போனீர்களே, தண்ணீர் பிடித்துக் கொட்டினீர்களா?’ என்று என்னைக் கேட்டார். "நான் இல்லை என்றேன்" இவ்வாறு அவன் சொன்னதும் கதர் மாணவன் குறுக்கிட்டு "அல்ல, அப்படிச் சொல்லவில்லை. அது என் கடமை அல்ல என்று கோபத்தோடு கூறினார்" என்றார்.
உடனே செயலாளர், "நீங்கள் கடைசி வரையில் பொறுத்திருந்து பிறகு பேசுவதாக ஒப்புக்கொண்டு, இப்போது குறுக்கிட்டீர்களே" என்றார்.
"பிறகு மறந்துவிடுவேனோ என்று இப்போதே சொன்னேன்" என்றான் கதர் மாணவன்.
மாணவர்கள் மேலும் பலர் வந்து சேர்ந்து வழியெல்லாம் நெருங்கி நின்றனர்.
சந்திரன் தொடர்ந்து பேசினான். "நான் அப்படிக் கோபத்தோடு சொல்லவில்லை. அது என்னுடைய கடமை அல்ல என்று சொன்னது உண்மைதான். சிறுநீர் கழித்த பிறகு ஒவ்வொருவரும் தண்ணீர் பிடித்துக் கொட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனால் என் கடமை அல்ல என்றேன். அதற்கு இந்த ஆள் என்னைப் பார்த்து ஒரு பெரிய சொற்பொழிவு செய்யத் தொடங்கினார். நீங்கள் எல்லாம் பெரிய காந்தி பக்தர்களா? காந்தி சொன்ன வழியில் நடக்கத் தெரியாமல் வீண் ஆரவாரம் மட்டும் செய்கிறீர்கள்; சமுதாய வாழ்க்கையில் பிறர்க்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் வாழ வேண்டுமானால், சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும். அது கடமை என்று உணராதவர்கள் கல்லூரியில் படித்துப் பயன் என்ன? நீங்கள்தான் படித்த பிறகு ஆங்கிலேயனுடைய ஆட்சிக்குத் தூணாக இருந்து நாட்டுமக்களைக் காட்டிக் கொடுப்பீர்கள்; நீங்கள்தான் மக்களிடம் லஞ்சம் வாங்கும் வன்னெஞ்சர் ஆவீர்கள்; அடிப்படையான ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் ஏன் படிக்கீறீர்கள்? உங்களால் கல்லூரிக்கும் கெட்டபெயர்; நாட்டுக்கும் கெட்ட பெயர்; உங்களைச் சேர்த்துப் பட்டதாரிகள் ஆக்கி நாட்டைக் கெடுப்பதைவிடக் கல்லூரியை மூடுவதே நல்லது என்று இப்படிப் பலவகையாக உளறினார். நான் உடனே,' நான்சென்ஸ் வாயை மூடு என்றேன்.'"
இவ்வாறு சந்திரன் சொல்லி நிறுத்தியவுடன் கூட்டத்திலிருந்து பலவகையான குரல்கள் எழுந்தன.
"யாரடா அவன், பெரிய காந்தி பைத்தியம்!"
"பி.ஏ., நான்காம் வகுப்பில் படிக்கும் சாந்தலிங்கமடா."
"அவன் எப்போதும் இப்படித்தான் இடக்குச் செய்வான்."
"ஏன்? வார்தாவுக்குப் போய் வந்து விட்டானோ?"
"அப்படியானால், அந்த மலம் வாருகிறார்களே அப்படி அய்யா இங்கேயும் அந்த வேலையைச் செய்வதுதானே?"
"இவர் இங்கே படிக்க வந்தாரா? சிறுநீர் அறையை மேற்பார்வை பார்க்க வந்தாரா?"
இவ்வாறு பலர் பலவாறு பேசவும், செயலாளர் எழுந்து "அன்புகூர்ந்து அமைதியாக இருக்கும்படியாக வேண்டுகிறேன். இப்படிப் பலர் பலவாறு பேசினால், நாம் கூடிய கடமை ஆகுமா? பாராளுமன்றங்களின் தோற்றம், வளர்ச்சி, விதிகள், பயன்கள் எல்லாவற்றையும் விரிவாகப் படிக்கிறோம். பேசுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் அந்த முறைகளைப் போற்றிக் கையாளாவிட்டால் பயன் என்ன?" என்றார்.
ஆயினும் அவர் பேச்சால் பயன் விளையவில்லை. மறுபடியும் மாணவர்கள் பலவாறு குரல் எழுப்பத் தொடங்கினார்கள். விடுதிச் செயலாளரைப் பற்றியும் தாக்கிப் பேசினார்கள்.
"ஓஓ! செயலாளர் சாந்தலிங்கத்தின் நண்பரோ?"
"கல்லூரியின் பெயரை இவர்தான் காப்பாற்றப் போகிறாரோ?"
"சிறுநீர் அறையைக் காப்பாற்றினால்தான் கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற முடியுமா? சரிதான்."
"இந்த ஆள் போன பிறவியில் தோட்டியாக இருந்திருப்பான்."
"அய்யாவின் முகவரியை யாராவது முனிசிபாலிடிக்குத் தெரியப்படுத்தினால் ஒரு வேலை கொடுப்பார்களே!"
"வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சம் தீருமே".
விடுதிச் செயலாளர் "அமைதி, அமைதி" என்று பலமுறை எழுந்து கேட்டுக்கொண்டார்.
மறுபடியும் சில குரல்கள் கேட்டன.
"நாங்கள் இனிமேல் தண்ணீர் பிடித்துக் கொட்டப் போவதில்லை, சாந்தலிங்கம்!"
"அவனுடைய அறையிலேயே போய் இனிமேல் சிறுநீர் கழிக்க வேண்டும். அதுதான் வழி"
"இங்கே என்ன பஞ்சாயத்து? வார்டனிடம் போங்கள்".
"சந்திரா! உன்னைக் குற்றவாளியாக்கும் முயற்சி இது. இருக்காதே எழுந்து வா"
"இமாவதி சந்திரன் எழுந்து வா."
அப்போது சிலர் கொல்லென்று சிரித்தனர். என் மனம் ஓர் அதிர்ச்சி உற்றது. இமாவதி என்ற பெயரைக் கேட்டதும், அன்று நாடகத்தின் முடிவில் நான் கண்ட அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. சந்திரன் முகம் கவிழ்ந்தபடி இருந்தான்.
"எழுந்து வா? சந்திரன்! எழுந்து வா" என்று தொடர்ந்து சில குரல்கள் கேட்டன.
சந்திரனும் எழுந்தான். செயலாளர் அன்போடு கேட்டுக் கொள்ளவே அவன் மறுபடியும் உட்கார்ந்தான். என் மனம் சாந்தலிங்கம் சொன்னவை சரியென்றும், அவற்றில் தவறு ஒன்றுமே இல்லை என்றும், சந்திரன் தண்ணீர் கொட்டியிருக்கலாம் என்றும், இல்லை என்றாலும் அன்பாகத் தன் குற்றத்தை உடன்பட்டிருக்கலாம் என்றும் பலவாறு எண்ணியது. ஆனாலும், அவனுடைய பழைய தொடர்பையும் குடும்பத் தொடர்பையும் எண்ணிப் பேசாமல் இருந்தேன். இவ்வளவு கூட்டத்தில், மனச்சான்றும் நீதியுணர்ச்சியும் உள்ள மாணவர் சிலராவது இல்லையா? அவர்கள் ஏன் தங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்? அநியாயத்துக்கு ஆட்கள் முந்துகிறார்களே, நியாயத்துக்குத் தயங்குகிறார்களே என்று பலவாறு எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். என் ஏக்கம் தீர ஒரு குரல் துணிவாகத் தெளிவாகக் கேட்டது.
"சாந்தலிங்கம் சொன்னதில் தப்பு என்ன?" என்று அந்தக் குரல் கேட்டதும், என் செவியில் தேன் வார்த்தது போல் இருந்தது.
"எப்படிக் கேட்கலாம்" என்று மற்றொரு குரல்.
மாணவர்கள் ஒரே கூட்டமாக நெருங்கி இருந்தபடியால், குரல் எழுப்பியவர்கள் யார் யார் என்று ஆட்களைக் காணமுடியவில்லை.
"சாலையில் எச்சில் துப்பினால் கேட்கலாம், சுகாதாரத்துக்குத் தீங்கு என்று."
"பஸ்ஸில் சுருட்டுப் பிடித்தால் கேட்கலாம், பலருக்குத் தீங்கு என்று."
"நடுத்தெருவில் காகிதம் கிழித்துப் போட்டால் கேட்கலாம், பொதுவாழ்வின் விதிகள் தெரியவில்லை என்று."
"இது நடுத்தெரு அல்ல, கேட்கக்கூடாது."
"இது பஸ் அல்ல, கேட்கக் கூடாது."
"இது பொது இடம். கேட்கலாம்."
"கேட்க உரிமை உண்டு."
"சொந்த வீடு அல்ல."
"மற்றவர்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கும்போது மற்றவர்களுடைய நன்மையைக் கவனித்தே நடக்க வேண்டும்."
"சாந்தலிங்கம் தன் நன்மைக்காகக் கேட்கவில்லை."
"சொந்த வீடாக இருந்தாலும், அண்ணன் தம்பி கேட்பதில்லையா?"
"வாழைப்பழத் தோலை நடுத்தெருவில் போடாதே என்று காந்தியடிகள் யங் இந்தியாவில் எழுதவில்லையா?"
"அது பைத்தியம்."
"நீ பைத்தியம்."
"நீதான் பைத்தியம்."
இந்த நிலையில் சாந்தலிங்கம் எழுந்து, "நான் சிறிது நேரம் பேசலாமா?" என்றான். எல்லாரும் அமைதியானார்கள். "என்னால் இவ்வளவு தொல்லை, இவ்வளவு பெரிதாக முடியும் என்று எதிர்பார்த்திருந்தால் நான் வாயைத் திறந்திருக்க மாட்டேன். இன்னும் சில நாளில் பி.ஏ. தேர்வு எழுதி முடித்துவிட்டு நான் விடுதியை விட்டு வெளியேறப் போகிறேன். இரண்டு ஆண்டுகள் வாணியம்பாடியில் இருந்து படித்தேன். இரண்டு ஆண்டுகள் இங்கே இந்த விடுதியில் இருந்தேன். என்னுடைய அனுபவத்தால் - நல்லது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தால் - அவசரப்பட்டுச் சொல்லிவிட்டேன். மன்னிக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தான்.
"மன்னிப்புக்கு இடமே இல்லை."
"குற்றமே இல்லை."
"மன்னிப்புக் கோரவேண்டிய ஆள் நடிகர் சந்திரன்தான்."
"இல்லை.இல்லை."
இந்தக் குரல்கள் மறுபடியும் வளருமோ என்று அஞ்சினேன். ஆனால் நியாயத்தின் குரல்கள் எழுந்தவுடன், மற்றக் குரல்கள் ஒருவாறு குறைந்தன.
செயலாளர், ஏன் அதைத் தொடங்கினோம் என்று திகைத்து வருந்திய நிலையிலிருந்து மாறிச் சிறிது ஊக்கம் பெற்றவராய்த் தோன்றினார். "போனது போகட்டும். நடந்ததை மறந்து விடுவோம். இனி என்ன செய்வோம் என்பதைப் பற்றிப் பேசுவோம்" என்றார். கூட்டத்தில் இருந்த சிலர் மெல்ல நகர்ந்து தம் தம் அறைக்குச் செல்லத் தொடங்கினர். கூட்டம் போதும் என்று செயலாளர் பேசினார். "மேற்கு நாடுகளில் எங்கேயும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்காது. இதை எல்லாம் அவர்கள் இளமையிலேயே கற்று வளர்ந்திருப்பார்கள். காரணம் அங்கெல்லாம் இது குடும்பக் கல்வியாக இருக்கிறது. இங்கே குடும்பங்களில் உள்ளவர்களுக்கே இன்னும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் இரவில் எழுந்து எதிர் வீட்டு ஓரமாகச் சிறுநீர் கழித்து வருவது இங்கே வழக்கம். கண்ட இடமெல்லாம் துப்புவதும், பக்கத்து வீட்டு ஓரமாகக் குப்பையைக் கொட்டுவதும் நம் வீடுகளில் உள்ள பழக்கம். ஆகையால், சந்திரனையோ மற்றவர்களையோ குறை கூறிப் பயன் இல்லை. பொதுவாக நம் நாட்டுக்குறை என்று கருதித் திருத்தவேண்டும்" என்றார்.
அப்போது சாந்தலிங்கம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, "மேற்கு நாடுகளில் இந்த ஒழுக்கங்கள் இயல்பாக இருப்பதற்குக் காரணம் உண்டு. இங்கு இல்லாமைக்குக் காரணம் உண்டு. அங்கே பிறர்க்கு உதவி செய்வதே கடவுளுக்கு விருப்பமானது என்ற நம்பிக்கையின் மேல் சமயம் வளர்ந்திருக்கிறது. இங்கே இந்த உண்மை இலைமறை காய்போல் உள்ளதே தவிர, வெளிப்படையாக இல்லை. நேர்மாறாக, பிறர்க்குத் தீமை செய்தாவது பணம் சேர்த்து அருச்சனை, அபிசேகம் செய்வதைக் கடவுள் விரும்புவார் என்ற மூடநம்பிக்கை வளர்ந்திருக்கிறது.
அங்கே பிறர்க்குத் தொண்டு செய்த சமயத் தலைவர்கள் பலர், இங்கே காட்டில் ஒதுங்கித் தவம் செய்தவர்களும், உலகம் பொய் என்று சொல்லித் தம்மளவில் மோட்சத்துக்குப் பாடுபட்ட பக்தர்களும் பலர். அங்குள்ள சமய அமைப்புகளில் மடங்களில் பல, பிறருடைய வாழ்வுக்கு உதவி செய்வதற்காக ஏற்பட்டவை. இங்கே விவேகானந்தரின் காலத்துக்குப் பிறகுதான் அப்படிப்பட்டவை சில ஏற்பட்டன. அதனால் இங்கே புண்ணியம் பாவம் என்று சொன்னால்தான் மதிப்பு உண்டு; சமுதாய நன்மை என்று சொன்னால் மதிப்பு இல்லை. சட்டம் என்று சொன்னால்தான் அடங்கி நடக்கிறார்கள்; நாகரிக வாழ்க்கை முறை என்று சொன்னால் கேட்டு நடப்பதில்லை. இதை மாற்றினால்தான் நமக்குச் சுதந்திரம் கேட்க உரிமை உண்டு; ஒருகால் அதற்குமுன் நம் தலைமுறையில் சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் அதைக் காப்பாற்ற வழி தெரியாமல் வருந்துவோம்.
இந்த ஆர்வத்தால் ஏதோ பேசினேன். நான் எந்த வகையிலாவது நண்பர் சந்திரனுடைய மனத்தைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படியாக அவரை கேட்டுக்கொள்கிறேன். நீர் கொட்டவில்லை என்பதை மட்டும் கேட்டதாக நண்பர் சந்திரன் சொன்னார். அதுமட்டும் அல்ல. சுவரில் பெய்திருக்கக் கூடாது; பெய்தால் நீர் கொட்ட வேண்டும்" என்று சொன்னேன். சிறுநீர் கழிக்க அதற்கென்று பீங்கான் குழிவு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுநீர் கழிக்காமல், சுவரில் கழிக்கப்பட்டிருந்தது. சுவர் அந்தக் கெட்ட நாற்றத்தை நெடுநேரம் வைத்திருந்து பரப்பும் அல்லவா? எங்கே போனாலும் இந்தக் கொடுமையைக் காண்கின்றேன். இது தவறான பழக்கம் என்று உணர்த்துவதற்காகவே கேட்டேன். நண்பர் சந்திரன் என்னை மன்னிக்க வேண்டும்." என்று சொல்லிச் சந்திரனுடைய கையைப் பற்றி அவனுடைய முகத்தைப் பார்த்தான்.
சந்திரனும் அவனுடைய கைகளைத் தன் கைகளால் ஏற்றுக்கொண்டு தன் பக்கத்தில் உட்காரச் செய்தான்.
"இவ்வளவு தொல்லை இல்லை. மேற்கு நாட்டார் கண்டுபிடித்து அமைத்த மேல் தொட்டி நன்றாக வேலை செய்து வந்தால் போதும். அதில் தொங்கும் சங்கிலியைப் பிடித்து இழுத்தால், தண்ணீர் வேகமாக வந்து சிறுநீரை அடித்துப் போய்விடும்" என்றான் மாணவன் ஒருவன்.
"செயலாளர் கேட்டுக் கொண்டிருக்கிறார். வார்டனுக்குச் சொல்லி, முதலில் அந்த மேல்தொட்டிகளைப் பழுது பார்க்கச் சொல்லுங்கள்" என்றான் மற்றொருவன்.
"அப்படியே செய்தாலும் பீங்கான் குழியை விட்டு விட்டு, சுவரில் பெய்துவிட்டு வருகிறவர்களை எப்படித்தான் திருத்துவது?"
"கடவுள்தான் திருத்தவேண்டும்"
"அது பாவம் என்று புராணங்களில், திருக்குறளில் எழுதி வைத்தால்தான் நடக்கும்."
"அது மட்டும் போதாது. அப்படிச் சுவரில் பெய்தவர்களை மறுபிறவியில் நரகலோகத்தில் கொதிக்கும் இரும்புச் சுவரைத் தழுவுமாறு செய்து யமகிங்கரர் தண்டிப்பார்கள் என்று எழுதினால்தான் ஒழுங்காக நடப்பார்கள்."
"அப்படி எழுதிவிட்டால் மட்டும் போதாது. அந்தப் புத்தகங்களைப் புராணங்களாக்கி, அவற்றைப் பற்றிக் கதாகாலட்சேபங்கள் நடக்குமாறு செய்ய வேண்டும்."
"இப்போது கதா காலட்சேபத்தில் கேட்டறிந்த நல்வழிகளை மக்கள் வாழ்க்கையில் பின்பற்றுகிறார்களா? நாட்டில் பொய் போயிற்றா? விபசாரம் குறைந்ததா? பேராசை தொலைந்ததா? சூதாட்டம் ஒழிந்ததா? அரிச்சந்திர புராணம் முதல் பாரதம் வரையில் படிக்கக் கேட்டும் திருந்தினார்களா?"
"அதனால் புதுவழி காணவேண்டும். சாந்தலிங்கம் போன்றவர்கள் ஊர்தோறும் தெருவுதோறும் வீடுதோறும் பலர் ஏற்பட வேண்டும். அதுதான் வழி."
"அதுமட்டும் போதாது. சாந்தலிங்கம் செய்வது சரி என்று குரல் எழுப்புவதற்கு ஆட்கள் தேவை. ஊர்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் தேவை. உண்மையின் சார்பில், நியாயத்தின் சார்பில் தயங்காமல் குரல் கொடுப்பவர்கள் தேவை."
இப்படிப் பலர் பலவாறு பேசினார்கள். அத்தனைக்கும் செயலாளர் இடம் கொடுத்தார். முடிவில் எல்லோருக்கும் நன்றிகூறி, மேல்தொட்டிகளை விரைவில் பழுதுபார்க்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
சந்திரனோடு தொடர்ந்து வந்தேன். "வீண் வம்பு" என்று இரண்டு சொல் சொல்லித் தன் அறையின் வாயிலில் நின்று எனக்கு விடை கொடுத்தான். நான் வந்துவிட்டேன். அவ்வளவு நடந்த பிறகும் அவனுடைய மனம் திருந்தியதாகவோ, மாறியதாகவோ எனக்குத் தோன்றவில்லை. அவன் நிலையில் நான் இருந்திருந்தால் சாந்தலிங்கத்திடம் மன்னிப்புக்கோரி வருந்தியிருப்பேன். அவனுக்கு அந்த எண்ணமே தோன்றியதாகத் தெரியவில்லை.