அகல் விளக்கு/அத்தியாயம் 14

அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை - பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன். அந்தத் திறமை அவனுள் எப்படித்தான் அடங்கிக் கிடந்ததோ என்று வியந்தேன். சிறப்பான கலைத் திறமை எப்படி அவனுள் அடங்கிக் கிடந்ததோ அப்படியே காதலுணர்ச்சியும் அடங்கிக் கிடந்தது போலும் என்று எண்ணினேன்.

கலைத்திறமை இயல்பாகவே வெளிப்பட்டு விளங்கக் கூடியது; நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாதது. பாடத் தெரிந்தவன் எங்கேனும் எப்படியேனும் பாடித் தீர்வான்; ஓவியம் வரையத் தெரிந்தவன், தரையிலேனும் விரல்களால் கீறித் தீர்வான்; நடிக்கும் கலைத்திறமையும் அப்படிப்பட்டதுதான். வெளிப்படுத்தாவிட்டால் அது மனித உள்ளத்தைக் கொன்றுவிடக் கூடியது. அதனால் சந்திரன் மேடை ஏறி ஆடிவிட்டான்.

ஆனால் காதலுணர்ச்சி அப்படிப்பட்டது அல்ல; பிறர்க்குப் புலப்படாமல் மறைப்பதிலேயே காதலர் கருத்தாக இருக்கின்றனர். சந்திரனும் அப்படித்தான் இருந்துவிட்டான். பைத்தியக்காரன். தன் காதலை என்னிடம் மறைத்தது மட்டும் அல்லாமல், தன் காதலியிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறான்! இவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த போது விடுதி வேலையாள் வந்து, "அய்யா! உங்களை யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள்" என்றான். "என்னையா?" என்று மாலன் எழுந்தான். "அவரை, அவர்தானே வேலு" என்றான். நான் எழுந்து சென்றேன். ஒருவேளை சந்திரன் வேறு எங்கிருந்தாவது என்னை அழைத்திருக்கலாம். வேறு யார் என்னைத் தொலைபேசியில் அழைக்கக்கூடும் என்று ஒருவகை மகிழ்ச்சியோடு சென்றேன். மாலனும் உடன் வந்திருந்தான்.

"வேலு பேசுகிறேன்."

"இமாவதி, வணக்கம்."

என் மகிழ்ச்சி குலைந்தது. "வணக்கம்" என்றேன். உடனே ஒரு நம்பிக்கை பிறந்தது. சந்திரனைப் பார்த்ததாகச் செய்தி சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு "ஏதாவது செய்தி உண்டா?" என்றேன்.

"அதைக் கேட்பதற்குத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ஒன்றும் தெரியவில்லையா? இன்னும் அவர் வரவில்லையா?"

"இல்லையே!"

"நீங்கள் வந்து சொன்ன அன்று முதல் எனக்கு மனமே நன்றாக இல்லை. பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது. சந்திரன் நல்லவர்; மிகவும் நல்லவர்; குழந்தை மனம் உடையவர். மிக நல்ல குணம். அவர் மனம் ஏன் இப்படி மாறியதோ, தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. நாளைக் காலையில் வீட்டுக்கு வருவீர்களா? நேரில் சொல்வேன். உங்களோடு பேசினால்தான் என் மனம் ஆறுதல் அடையும்."

"வருவேன்."

"வீட்டு முகவரி தெரியுமா?"

"10, நடுத்தெரு, இராயப்பேட்டை."

"அதுதான். தேர்வு முடிந்துவிட்டது அல்லவா? ஓய்வுதானே?

"ஆமாம், வருவேன்."

"அம்மாவும் தங்கைகளும் இருப்பார்கள். அவர்களுக்குச் சொல்லிவைப்பேன்.

"சரி."

"என்னவோ, போங்க. எனக்கு இந்த மூன்று நாளாக மனமே கலங்கிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை எனக்குத் திருமணம். வீடெல்லாம் ஒரே அமர்க்களமாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்திதான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் எனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா என்று கேட்கிறார்கள். நான் என்ன செய்வது? இப்படி இருக்கிறது என் கதை. போகட்டும். நீங்கள் கட்டாயம் வரவேண்டும்."

"வருவேன்."

"வணக்கம். நன்றி"

"வணக்கம்" என்று சொல்லிப் பேசும் கருவியைக் கீழே வைத்தேன். மாலனைத் திரும்பிப் பார்த்தேன்.

"பெரிய புதிராக இருக்கிறது" என்றான் மாலன்.

"இமாவதிதான்."

"அது தெரிந்து கொண்டேன். அரைகுறையாகத் தெரிந்தது. அவள் நிறையப் பேசினாள். நீ இரண்டொரு சொல்லே சொன்னாய்."

"இப்போது சொல்லமாட்டேன். பிறகு விரிவாகச் சொல்வேன். தவறாக எண்ணவேண்டா. அவள் பேச்சிலிருந்து எனக்கும் விளக்கம் ஏற்படவில்லை. காலையில் வரச் சொல்லியிருக்கிறாள். போய்ப் பேசிய பிறகுதான் விளங்கும்."

"விழிப்பாக நடந்துகொள். இந்தப் பட்டினத்தில் யார் எப்படி என்று இரண்டொரு நாளில் தெரிந்து கொள்ள முடியாது. நம் கெட்ட காலம் எப்படி இருக்குமோ? எங்கும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது" என்றான் மாலன்.

காலையில் எழுந்ததும் ராயப்பேட்டைக்குச் செல்லும் பஸ் ஏறி நடுத்தெருவுக்கு வழி கேட்டுச் சென்றேன். பத்தாம் எண்ணுள்ள வீடு சின்ன வீடுதான். மாடியில் இமாவதி வீட்டார் குடியிருந்தார்கள். நான் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் என் பெயரைத் தெரிவித்தேன். அவள் என்னை அங்கே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். இமாவதி போலவே இருந்தபடியால், அவளுடைய தங்கையாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். வீட்டில் பலர் இருந்தார்கள்; பரபரப்பாக இருந்தார்கள். திருமணத்திற்காக வந்த உறவினராக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்.

இமாவதி வந்தாள். வரவேற்றாள். ஆனால் அவளுடைய முகத்தில் புன்முறுவல் இல்லை; மலர்ச்சி இல்லை. ஏதோ வேண்டா வெறுப்போடு வரவேற்பவள் போல் "வாங்க" என்றாள். கூடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே என்னை உட்காரச் செய்து தானும் உட்கார்ந்தாள். அவளே பேச்செடுப்பாள் என்று எதிர்பார்த்துப் பேசாமல் இருந்தேன். அவளோ தரையைப் பார்த்தபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். நாம் ஏன் வந்தோம் என்று வருந்தும் அளவிற்கு என் உள்ளம் மாறியது. வரவேண்டும் என்று வற்புறுத்தித் தொலைபேசியில் பேசியவள் இவள்தானா, அல்லது வேறு எந்தப் பெண்ணாவது குறும்புக்கு அப்படிப் பேசி வம்பு செய்தாளா. மாலன் சொன்னது போல் இந்தச் சென்னையில் உண்மையை எளிதில் உணர முடியவில்லையே என்று தடுமாறினேன்.

இமாவதி கற்பகத்தைப் போல் அவ்வளவு அழகானவள் என்று சொல்லமுடியாது. பல ஆண்டுகளாகப் படிப்பின் சுமையும் தேர்வின் தொல்லையும் காரணமாக இமாவதியின் அழகு வற்றிப்போயிருக்கலாம். இருந்தாலும் முகத்தில் கவர்ச்சி இருந்தது. நல்ல சிவப்பு மேனியும் அளவான உடற்கட்டும் உடையவள்; சின்ன நெற்றியும் சுருட்டை மயிரும் அவளுடைய முகத்திற்கு அழகு செய்தன.

உழைப்பவரின் உடம்பு போல், தசைப் பெருக்கம் இல்லாமல் கைகள் கடைந்தெடுத்தவை போல் இருந்தன. இருந்தாலும் அவளுடைய கவர்ச்சி, கற்பகத்தின் அழகுபோல் முற்றிலும் இயற்கையழகின் கவர்ச்சி என்று சொல்வதற்கில்லை. அன்று அவள் அணிந்திருந்த ரோசா நிறப் புடைவையும் பொன்னிறச் சோளியும் அவளுடைய அழகுக்குக் கவர்ச்சி ஊட்டின. கோடுகளும் பூக்களும் இல்லாத புடைவையும், மிகச் சிறு புள்ளிகள் அமைந்த சோளியுமாக இருந்தமையால் அவை அழகாக இருந்தன. இன்னும் சிலநாளில் மணப்பெண் ஆவதற்கு இருந்த அவள் சுமையான நகைகளை அணியாமல், காதில் தோடும் கழுத்தில் பொன் சங்கிலியும் கையில் இரண்டு இரண்டு வளையலும் மட்டும் அணிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. கையில் கடிகாரமும் காணப்படவில்லை.

அந்த வழியாக யாரோ போனார்கள். "என்ன’மா! கல்யாணப் பெண் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?" என்று ஒருத்தி கேட்டுச் சென்றாள். "எனக்கு என்ன வேலை இருக்கிறது, மாமி! எல்லாவற்றிற்கும் நீங்கள் இருக்கிறீர்கள் பார்த்துக் கொள்வீர்கள்" என்று இமாவதி சொன்னபோது, ஒரு சிறு புன்முறுவல் மின்னல்போல் தோன்றி மறைந்தது. அதன் பிறகு என்னைப் பார்த்து, "நீங்கள் எப்போது ஊருக்குப் புறப்படுவீர்கள்?" என்றாள்.

"நாளைக்கு"

"அவரைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையா?"

"இல்லை."

"நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை."

"இப்படிச் செய்யக்கூடியவன் என்று நான் கனவிலும் கருதவில்லை."

"ஏன் இப்படிச் செய்தார் என்றுதான் தெரியவில்லை. நீங்கள் வந்து போனதுமுதல் நான் நன்றாகப் படிக்கவும் முடியவில்லை. தேர்வு வரையில் எப்படியோ மூச்சுப் பிடித்தேன். தேர்வு நாட்களில் விடுதியிலேயே இருந்து படித்தேன். அங்கே வகுப்புப் பெண்கள் பலருடைய சூழலில் இருந்த காரணத்தால் மனம் எப்படியோ ஒரு வகையாகத் தேறியிருந்தது. இங்கே வந்த பிறகுதான் பைத்தியக்காரி போல் ஆகிவிட்டேன். உனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா, மாப்பிள்ளை விருப்பம் இல்லையா, அதை முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா என்று பலரும் கேட்கத் தொடங்கினார்கள். நான் என்ன செய்வது? சொன்னால், உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடியவர்களும் அல்ல. அம்மாவுக்கு மட்டும் சொன்னேன். அம்மாவுக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும். அதனால் சொன்னதும் விளங்கிக்கொண்டார்கள்."

இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, நாற்பத்தைந்து ஐம்பது வயது உள்ள ஒருவர், சிறிது வழுக்கையாய் மாநிறமாய் வெள்ளாடை உடுத்தியவராய் அந்தப்பக்கம் வந்தார். அவரைக் கண்டதும், இமாவதி எழுந்து "எங்கள் அப்பா" என்றாள். "இவர் சந்திரனுடைய நண்பர்; அவருடைய ஊரார்; பக்கத்து அறையில் உள்ளவர்" என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.

அவர் உடனே என்னைப் பார்த்து, "சந்திரன் இன்னும் வரவில்லையா?" என்றார்.

"இல்லை" என்றேன்.

"திருமண வேலைக்கெல்லாம் எவ்வளவோ உதவியாக இருப்பான் என்று மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்" என்று சொல்லி, அந்தப் பக்கம் போனவர் ஒருவரைக் கூப்பிட்டு, "சரி வரட்டுமா? கொஞ்சம் வேலை இருக்கிறது" என்று நகர்ந்தார்.

"இந்தப் பிள்ளைக்குக் காப்பி சிற்றுண்டி கொடு அம்மா" என்று தம் மகளுக்குச் சொல்லிக்கொண்டே சென்றார்.

மறுபடியும் நானும் அவளும் உட்கார்ந்தோம்.

"திருமண வேலையாக இருக்கிற வீடு. நீங்கள் வந்த வேளையில் பரபரப்பாக இருக்கிறோம். மன்னிக்கவேண்டும்" என்றாள்.

"அதற்கு என்ன? இருக்கட்டும்."

"அவர் போவதற்கு முன் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா? கடிதம் ஏதாவது எழுதி வைத்துவிட்டுப்போகவில்லையா?"

"இல்லை."

"அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? குழந்தை போன்ற மனம் உடையவர். அழகாக இருப்பவர்கள் பலர் பொல்லாதவர்களாக, வஞ்சகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு தீமையும் அறியாதவர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய பேச்சு. ஒரு கெட்ட சொல் அவருடைய வாயிலிருந்து வராது. ஒரு கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. உங்களுக்குத்தான் தெரியுமே நானும் அவரும் ஒரே பாடம் எடுத்திருந்த காரணத்தால், அவர் எழுதி வைத்திருந்த குறிப்பை எல்லாம் என்னிடம் கொடுத்தார். எனக்குக் கணக்கில் அடிக்கடி சந்தேகம். தெரியாத கணக்கை எல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தார். கற்றுக் கொடுக்கும்போது எவ்வளவு பொறுமை. எவ்வளவு எளிமை!"

"எனக்கு உயர்நிலைப் பள்ளியில் அவன்தான் கணக்குக் கற்றுக்கொடுத்தான். அவனுடைய உதவி இல்லாவிட்டால் நான் தேர்வில் வெற்றி பெற்றிருக்கமாட்டேன்."

"எங்கள் ஆசிரியர்க்கும் அவ்வளவு திறமை இல்லை என்று சொல்லலாம். நல்ல வருவாய் மட்டும் கிடைப்பதாக இருந்தால் அவரை ஆசிரிய வேலைக்கே போகச் சொல்வேன்."


"கடைசியில்....." என்று வாய் திறந்து பேசத்தொடங்கி நிறுத்தி விட்டேன்.

"கடைசியில்?"

"ஒன்றும் இல்லை, சொல்லுங்கள்."

"இதை எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறுதல் அடையும். அம்மாவிடம் சொன்னேன். கொஞ்சம்தான் சொன்னேன். முதலில் அவருடைய பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? கல்லூரியில் இண்டரில் சேர்ந்ததற்கு அடுத்த மாதம் ஒரு நாள் மாலையில் கடற்கரையில் தனியே வந்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரியில் பெண்களிடையிலும் எனக்கு நண்பர்கள் குறைவு. என் பக்கத்தில் முரடன் ஒருவன் நடந்து வந்தான். அவன் முன்னே போகட்டும் என்று நான் பின் தங்கினேன். அவன் என்னை ஒரு கண்ணால் பார்த்தபடியே மெல்ல நடந்து ஓர் இடத்தில் நின்றான். நான் பரபரப்பாக நடந்து முன்னே சென்றேன். அவன் தொடர்ந்து என் பக்கத்தில் வந்தான். மறுபடியும் நின்றேன். அவன் முன்போலவே செய்தான். பஸ் நிற்கும் இடத்திற்கு நடந்தேன்.

அவனும் அங்கே வந்து உராய்வது போல் சென்றான். நான் ஒதுங்கியும் பயன் இல்லை. என்மேல் உராய்ந்து கொண்டு முன்சென்று நின்றான். பஸ் வந்து நின்றது. பெண்கள் முந்திக்கொள்ளட்டும் என்று ஆண்கள் ஒதுங்கினார்கள். எனக்கு முன்னே ஒரு கிழவி ஏறட்டும் என்று வழிவிட்டு, பிறகு நான் ஏறினேன். அந்த முரடன் என் பின்னே வந்து நெருங்கி ஏறி, நான் உட்கார்ந்த இடத்திற்குப் பக்கத்திலேயே நின்றான். "தொலையட்டும், இனிமேல் என்ன?" என்று பேசாமல் இருந்தேன். நல்ல பட்டுச்சொக்காயும் நீலக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது இருபது இருபத்தைந்துதான் இருக்கும். சந்திரன் என்னையும் அவனையும் கடற்கரையிலிருந்தே கவனித்து வந்திருக்கிறார்.

எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பஸ்ஸிலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்டமுறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை.

எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது. ஆனாலும் யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? இன்னும் சிறிது நேரத்தில் இறங்கப் போகிறோம் என்று பொறுத்துக் கொண்டிருந்தேன். அவனுடைய பார்வை என் மேலேயே இருந்தது. இந்தப் பாவிகள் எல்லாரும் அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? இவர்கள் தங்கள் குடும்பத்தில் பெண்களையே பார்த்ததில்லையா? என்ன நாடு இது! என்ன நாகரிகம் இது என்று வெறுப்போடு இருந்தேன். நான் இறங்கும் இடம் வந்தது. எழுந்தேன். அவன் என் பக்கத்தில் உராய்ந்து நின்றான். வழிவிடுங்கள்" என்றேன்.

வழிவிடுவது போய் விலகி நான் முன்னே சென்றவுடன், என் பக்கத்தில் நெருங்கி வந்து தானும் இறங்கத் தொடங்கினான். பஸ்ஸை விட்டு இறங்கித் தரையில் கால் வைக்கும் நேரத்தில், என் கையில் இருந்த புத்தகங்களையும் சிறு தகரப் பெட்டியையும் வேண்டும் என்றே தட்டிக் கீழே விழச் செய்தான். பிறகு தானே விரைந்து பரபரப்பாக அவற்றை எடுத்துத்தர முனைந்தான். "வேண்டா விட்டுவிடு. நான் எடுத்துக் கொள்வேன். வேண்டும் என்றே தட்டிவிட்டு இப்போது எடுத்துத் தர வருகிறாயா?" என்று கோபத்தோடு கேட்டேன்.

'யார்? நானா? நல்லதற்குக் காலம் இல்லை'மா என்று எதிரே நின்று மீசைமேல் கைவைத்தான். அப்போது அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு அறைகள் விழுந்தன. அறைந்தவர் வேறு யாரும் இல்லை, சந்திரன்தான். உடனே முரடன் அவரை அடிக்கக் கை ஓங்கி ஓர் அடி கொடுத்தான். அதற்குள் பஸ்ஸில் இருந்தவர் இருவர் இறங்கி அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு இருவரையும் விலக்கினார்கள். 'இந்த ஆள் கடற்கரையிலிருந்து என்னைத் தொடர்ந்து வருகிறான்' என்று வழியில் நடந்தவற்றை எல்லாம் நான் சொன்னேன்.

முதலிலிருந்தே தாம் எல்லாவற்றையும் பார்த்து வருவதாகவும் மனம் கேட்காமல் தாமும் அந்தப் பஸ்ஸில் ஏறி வந்ததாகவும் சந்திரன் கூறினார். 'வேண்டும், வேண்டும், அந்த முரட்டுப் பயலை நன்றாக உதையுங்கள்; நாங்களும் கவனித்தோம். அவன் வேண்டுமென்றே செய்ததுதான்' என்று பஸ்ஸில் இருந்த இரண்டு மூன்று பேர் குரல் கொடுத்தார்கள். 'சரி விட்டுத் தொலையுங்கள்' என்றனர் சிலர். 'அப்படியே கையோடு அழைத்துக்கொண்டு போய்ப் போலீஸ் நிலையத்தில் எழுதி வைக்கவேண்டும்' என்றனர் சிலர். 'விடுங்கள் அவனே பி.ஏ. படித்துப் பிறகு போலீசு இன்ஸ்பெக்டர் வேலைக்கு வந்தாலும் வரலாம். சொல்லிப் பயன் இல்லை. நாகரிகம் வரணும்' என்றார் ஒருவர். அந்த முரடன் சந்திரனை உற்றுப் பார்த்தபடியே அப்பால் நகர்ந்தான். 'சரி நான் போய் வருகிறேன். வணக்கம்' என்றார் சந்திரன். வீட்டு வரைக்கும் வந்து போகுமாறு கேட்டுக்கொண்டேன்.

"சந்திரன் உண்மையாக அடித்தானா?" என்று நான் வியப்போடு கேட்டேன்.

"உண்மையாக, அவருக்கு என்ன துணிச்சல் தெரியுமா" என்று சொன்னதும் அவளுடைய முகம் மாறியது. கண்கள் கலங்கின. "அப்படிப்பட்ட துணிவும் தைரியமும் அவருடைய மென்மையான உடம்பில் அடங்கிக்கிடக்கின்றன. அதனால்தான், இப்படித் துணிந்து படிப்பையும் தேர்வையும் விட்டு விட்டுப் போய்விட்டார். நீங்களும் நானும் இப்படிச் செய்வோமா? துணிச்சல்தான் அவரைக் கடைசியில் கெடுத்து விட்டது."

அது உண்மைதான் என்று எனக்குப்பட்டது.

"ஆமாம், உண்மைதான்" என்றேன்.

"வீட்டுக்கு அழைத்து வந்து அதோ அந்த நாற்காலியில்தான் உட்காரவைத்தேன். உள்ளேபோய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா வந்து அவரைப் பாராட்டி நன்றி கூறினார். 'உன்னைப்போல் நல்ல பிள்ளைகளும் இருப்பதனால்தான் இந்த நாட்டில் கொஞ்சம் மழை பெய்கிறது' என்று அவருடைய நல்ல பண்பைப் பாராட்டினார். என்னைக் காப்பி வைத்துக் கொண்டு வரச்சொல்லி அனுப்பிவிட்டுச் சந்திரனோடு பேசிக் கொண்டிருந்தார். ஊர், பேர், குடும்பம் முதலிய எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் காப்பிக் குவளையோடு வந்தபோது, 'உன்னைப்போல் படிக்கிற பிள்ளைதான்'மா. வேறே கல்லூரி; நீ படிக்கும் அதே வகுப்புத்தானாம். இந்தப் பிள்ளையும் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆச்சுதாம்' என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு அவர் புறப்பட்டபோது, விடுமுறையில் அடிக்கடி வந்து போகும்படியாக அம்மா கூறினார். நானும் சொன்னேன் இப்படித்தான் எங்கள் நட்புத் தொடங்கியது" என்றாள்.

நல்ல வகையில்தான் நட்புத் தொடங்கியது என்று எண்ணினேன்.

அப்போது முதலில் வந்த பெண் வந்து, "அக்கா! உன்னை அம்மா வரச் சொன்னார்கள்" என்றாள்.

"வருவேன். அவசரம் இல்லையே. அவசரமாக இருந்தால் வந்து சொல்" என்று அவளை அனுப்பிவிட்டு "இவள் தான் எனக்கு அடுத்த தங்கை. திருமகள் என்று பெயர். இன்னும் இரண்டு தங்கை உண்டு. உயர்நிலைப் பள்ளியிலும் தொடக்கப் பள்ளியிலும் படிக்கிறார்கள்" என்றாள்.

"அப்புறம்? சந்திரன் உங்களோடு நெருங்கிய நட்புக் கொண்டான் அல்லவா?" என்றேன்.

"அன்று அவருடைய பெயரை நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. என்னுடைய பெயரை அவரும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவரைப் பற்றி அடிக்கடி நினைத்தேனே தவிர, கடிதம் எழுதும் வாய்ப்பு இல்லை. நட்பு, ரயில் நட்புப்போல் அன்றே முடிந்து போயிருக்க முடியும். ஆனால் அவர் உண்மையான அன்பு உடையவர். போலி அன்பு, போலி நட்பு எல்லாம் அவருக்குத் தெரியாதவை. இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணிக்கு அவர் இதே இடத்தில் வந்து நின்றார். யார் வீட்டுக்கோ போவதற்காக ஒழுங்காக உடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்த நான், அவரைக் கண்டதும், பெருமகிழ்ச்சி அடைந்தேன். 'எங்கோ புறப்படுவதாகத் தெரிகிறது. போய் வாங்க' என்றார்.

எனக்கோ அவரை விட்டுப்போக மனம் இல்லை. உட்கார்ந்து பேசினோம். என் படிப்பு முதலியவற்றைப் பற்றிக் கேட்டார். என்ன என்ன பாடங்கள் நடந்தன என்று கேட்டார். நானும் சொன்னேன். இன்னார் இன்னாருடைய குறிப்புகள் நல்லவை என்று சொன்னார். கணக்குகள் எல்லாம் தெளிவாகத் தெரியுமா என்று அவரே கேட்டார். உண்மையில் நான் கணக்குப் பாடத்தில்தான் அரைகுறையாக இருந்தேன். தடுமாறிக் கொண்டிருந்தேன். என் நிலையைச் சொன்னதும் கணக்குப் புத்தகத்தைக் கொண்டுவருமாறு சொல்லி, சந்தேகம் என்ன என்று கேட்டார். என் அறியாமை நீங்குமாறு விளக்கமாகச் சொன்னார். அதன் பிறகுதான் அவருடைய பெயரைக் கேட்டறிந்தேன். என் பெயரைப் புத்தகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார். "போன வாரம் எதிர்பார்த்தேன். நீங்கள் வரவில்லையே" என்று உரிமையோடு கேட்டேன். கடற்கரைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்."

அவர்களின் உறவின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. ஆனால் எப்படிக் கேட்பது என்று திகைத்தேன்.

அவளே பேசலானாள்: "அது போகட்டும். என் மனத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு வேதனைப்படுத்தி வருகிறது. அதை உங்களிடம் சொல்லி நான் குற்றம் அற்றவள் என்பதை விளக்கி, ஆறுதல் பெறவேண்டும் என்றே உங்களை இங்கே வரும்படியாகச் சொன்னேன்" என்றாள்.

அப்போது ஓர் அம்மையார் எங்களை நோக்கி வர இமாவதி எழுந்து, "எங்கள் அம்மா" என்றாள். அம்மாவை நோக்கி, "இவர்தான் வேலு, சந்திரன் நம்மிடத்தில் அடிக்கடி சொல்லியிருக்கிறாரே" என்றாள்.

அந்த அம்மா உடனே என்னை ஆர்வத்தோடு பார்த்து "ஆமாம் சந்திரனோடு ஊரில் படித்த பிள்ளையா?" என்றார்.

"ஆமாம் அம்மா" என்றேன்.

"சந்திரன் எங்கே? என்ன இது, கதையாக இருக்கிறதே! என்னால் நம்பவே முடியவில்லையே" என்று சொல்லிக் கொண்டே என் எதிரே உட்கார்ந்தார். நாங்களும் உட்கார்ந்தோம். "அந்தப் பிள்ளை கள்ளம் கரவு இல்லாமல் குழந்தைபோல் பேசும்! என்ன மனக்குறை இருந்தாலும் எங்களிடம் வந்திருக்கக் கூடாதா? நேரில் சொல்லியிருக்கக் கூடாதா? எங்கள் வீட்டு ஆண்பிள்ளைபோல் எண்ணியிருந்தோம். அப்பா பணம் அனுப்பவில்லையானால் கேள் என்று சொல்லி வைத்திருந்தோம். மகன் போல் பழகிவிட்டு, இப்படிச் சொல்லாமல் போனால், மனத்துக்கு வேதனையாக இருக்கிறது. ஒரு சொல் சொல்லியிருக்கக் கூடாதா? நாங்கள் என்ன செய்வது? ஏதாவது சாமியார் பைத்தியம் உண்டா? எங்காவது மலைக்கு, குகைக்கு" - என்றார்.

"அதெல்லாம் இருந்தால் நமக்குத் தெரியாதா அம்மா? அவரைப் பற்றி நமக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?" என்றாள் இமாவதி.

"இந்தத் தருணத்தில், நம்மவர்கள், நண்பர்கள் ஆகியவர்களின் உணவு முதலிய வசதிகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைச் சந்திரனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தோம். திருமணத்துக்குள் வந்து சேர்ந்தால், என் வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருக்கும். அவனுடைய அப்பா வந்தாராமே; நம் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கக் கூடாதா?" என்றாள் அந்த அம்மா.

இவர்களின் உறவு முதலியவற்றை எனக்கே தெரிவிக்காமல் மறைத்திருந்தான் சந்திரன். அவன் என்னைவிட்டு ஒதுங்கி நின்ற தன்மையும் இவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை எப்படிச் சொல்வது?

"சரி, சரி, தம்பி! எனக்கு வேலை ஏராளமாக இருக்கிறது. யாரோ இமாவதியோடு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன். சரி, வரட்டுமா? இமாவதி! தம்பி இருக்கட்டும். அங்கே உறவினர்கள், வந்தவர்கள் தப்பாக நினைக்கக்கூடும். அப்படி வந்து அவர்களோடு கூடிப் பேசிக் கொண்டிருக்கலாமே" என்று சொல்லிச் சென்றார்.

"கொஞ்சம் பேசிவிட்டு வருவேன்’மா" என்று சொல்லி விட்டு, இமாவதி என்னை நோக்கினாள்.

"என்னவோ சொல்லவேண்டும் என்கிறீர்கள்?"

"ஆமாம் என்று சிறிது நேரம் அமைதியானாள். பிறகு அவருடைய மனக்கவலைக்கு என்ன காரணம்? உங்களுக்குத் தெரிந்த காரணம் ஏதாவது இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள்" என்றாள்.

உண்மையை எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். தலை குனிந்தேன்.

"தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். என் திருமண அழைப்பிதழ் வந்தபிறகுதான் கவலைப்பட்டாரா?"

"ஆமாம்" என்று சொல்லித் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவள் தன் முந்தானையின் ஒரு முனையை வாயில் வைத்தபடியே தன் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.


"உங்களிடம் ஏதாவது சொன்னாரா?" என்றாள். அவளுடைய உள்ளத்தின் கலக்கம் குரலில் புறப்பட்டது.

"சொன்னார்."

"ஏமாற்றம் அடைந்ததாகச் சொன்னாரா?"

"ஆமாம்."

முந்தானையால் கண்களைத் துடைத்தாள். யாரோ வருவதைக் கண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். "நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் குற்றவாளி அல்ல. அவர் தவறாக எண்ணிக்கொண்டு பழகியிருக்கிறார். அவருடைய எண்ணம் இப்படி இருக்கும் என்று நான் சந்தேகப்பட்டதே இல்லை. தங்கையோடு பழகுவதுபோல் என்னோடு பழகினார்.

நான் அண்ணன் என்று கருதிப் பழகினேன். அதனால்தான் அன்போடு திருமண அழைப்பிதழ் அனுப்பிக் கடிதமும் எழுதியிருந்தேன். அவர் ஏமாற்றம் அடைவார் என்று தெரிந்திருந்தால், தேர்வு முடியும் வரைக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருப்பேனா? அதை ஏன் அவர் உணரவில்லை?" அப்போது அவளுடைய மனக்கலக்கம் தீர்ந்துவிட்டது. தெளிவாகப் பேசினாள். "எல்லாவற்றிலும் வெளிப்படையாகக் குழந்தை மனத்தோடு பழகியவர் இதில் மட்டும் ஏன் இப்படி மறைத்து நடந்தார்? ஆண்களோடு எப்படிப் பழகினாலும் ஆபத்துக்கு இடம் இருக்கும்போல் தெரிகிறது" என்றாள்.

"ஒரு பெண் திருமணம் ஆனபிறகு இப்படிப் பழகினால் இடர்ப்பாடு இல்லை" என்றேன்.

அவள் உடனே மறுத்துப் பேசினாள்: "அப்போதும் உண்டு. அந்தப் பெண்ணின் கணவன் அப்போது அவள்மேல் சந்தேகப்படுவான்" என்றாள்.

"உண்மைதான்" என்று சிரித்தேன்.

"முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். "நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது.

அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு. சந்திரனுக்கே மனம்மாறி உன்னிடத்தில் வேறு வகையாகப் பழகத் தொடங்கினாலும் விலகிவிடு; அல்லது உன் மனமே சந்திரனிடத்தில் வேறு வகையாகச் செல்லுமானாலும் விலகிவிடு. ஏன் என்றால், ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் உங்கள் உணர்ச்சியால் முடிவு செய்யக்கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக்கூடியது. ஆகையால் அனுபவம் நிறைந்த எங்கள் அறிவுரையும் அதற்கு வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே" என்று கூறினார். அந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது. ஆனால் அவருக்கு அப்படி ஒருவர் அறிவுரை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றாள்.

நான் பேசாமல் இருந்ததைக் கண்டு, "என்மேல் தவறு இருந்தால் சொல்லுங்கள்" என்றாள்.

"நீங்கள் அன்பாகப் பழகியதால் அவன் அப்படி எண்ணிவிட்டான்" என்றேன்.

"அப்படியானால் ஒரு பெண் ஆணோடு நட்புக்கொண்டு பொதுவாகப் பழகவே கூடாதா?"

"கூடாது என்று நான் சொல்லவில்லை. நடைமுறையில் தீமையாக இருக்கிறதே!"

"அதை வெல்லவேண்டும். முன் காலம் வேறு. பெண் வாழ்ந்த எல்லை குறுகிய எல்லை. வீடு, வீட்டைச் சார்ந்த அக்கம் பக்கம் அவ்வளவுதான். இப்போது எந்தக் குடும்பத்துப் பெண்ணும் பல ஆண்களோடு பழகவேண்டியுள்ளது. கடைத்தெரு, மருந்தில்லம், பள்ளிக்கூடம், கலையரங்கம் இப்படி எத்தனையோ இடங்கள்; குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக, வியாபாரிகள், டாக்டர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர் முதலானோர் பலருடன் பழகவேண்டியுள்ளது. தந்தையின் நண்பர்கள், கணவரின் நண்பர்கள் இப்படிப் பலரோடு பழகவேண்டியுள்ளது. ஆகையால் பெண்கள் ஆண்களோடு பழகாமல் வாழ முடியாத காலம் இது. பொது அன்பை வளர்த்து நட்பு முறையில் பழகக் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்."

"மெய்தான்."

"நான் குற்றவாளி அல்ல என்று நீங்கள் சொன்னால் போதும். அதுதான் எனக்கு ஆறுதல் அளிக்கும்."

"நீங்கள் குற்றவாளி அல்ல என்பது நன்றாகத் தெரிகிறதே!"

"ஆனால் ஒரு குற்றம் என்மேல் உண்டு. அவருடைய மனம் இப்படி வளர்ந்துவருகிறது என்பதை நான் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன். அது குற்றம்தான். அதற்குக் காரணம், அவர் என்னிடம் அப்படி அண்ணன் போல் பழகினார். சில வேளைகளில் அண்ணன் போல் அதிகாரம் செய்தும் நடத்தியிருக்கிறார். உடம்பு நன்றாக இல்லை. ஆகையால், நாளைக்குக் கல்லூரிக்குப் போகக் கூடாது என்று தடுத்திருக்கிறார். சில பாடங்களில் கேள்விகள் கேட்டுத் தவறு செய்தபோது கடிந்திருக்கிறார். சில பெண்களோடு பழகக்கூடாது என்று தடுத்திருக்கிறார்."

அப்போதுதான் நான் உரிமையோடு சில கேள்வி கேட்டேன். "நீங்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டு போனது உண்டா?" என்றேன்.

"உண்டு! அம்மாவுக்குச் சொல்லிவிட்டுக் கடற்கரைக்குப் போயிருக்கிறோம். சினிமாவுக்குப் போயிருக்கிறோம். தங்கையை அழைத்துக் கொண்டு போனதும் உண்டு. நாங்கள் இருவர் மட்டுமே போனதும் உண்டு."

சந்திரன் தன் அறையில் இல்லாமல் அடிக்கடி வேறு வேலை. வேறு வேலை என்று வெளியே போய்வந்த காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. தொடர்ந்து சில கேட்டேன்.

"அவனை என்னவென்று அழைப்பீர்கள்?" என்றேன்.

"'சந்திர்' என்று பெயர் சொல்லி அழைப்பேன்."

"யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களே என்று எண்ணவில்லையா?"

"வெளிப்படையாகப் பழகினோம்; குற்றம் செய்யவில்லை; ஆகையால் மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிப் பயப்பட்டதில்லை. அண்ணனும் தங்கையும் பழகுவதில்லையா!"

"நான் என் தங்கையோடு நெருங்கிப் பழகுவதில்லையே!"

"அடிக்கடி சண்டையிட்டது உண்டு அல்லவா?"

"உண்டு."

"நானும் சந்திரனும் அப்படி அடிக்கடி சண்டையிட்டிருக்கிறோம். இங்கே வீட்டில், கடற்கரையில் அம்மா அப்பா எதிரில்."

"கல்லூரியில் எங்கள் விடுதியில் மாணவர்கள் சிலர் உங்கள் இருவரையும் காதலர் என்று எண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?"

"இருக்கலாம். உடன் பிறந்த அண்ணனும் தங்கையும் புதிய ஊரில் ஒரு தெரு வழியாக போனால், அந்த ஊரார் பலர் அவர்களைக் காதலர் என்றுதான் எண்ணுவார்கள். அது உலக இயற்கை! மனிதரின் மனத்தில் பொதுவாக உள்ள காம இச்சை அப்படி எல்லாரையும் பார்த்துச் சொல்லச் செய்கிறது!"


அவளுடைய அறிவின் திட்பத்தைக் கண்டு வியந்தேன். இன்னொன்றும் கேட்கவேண்டும் என்று தோன்றியது; கேட்டேன். "இந்த அனுபவத்திற்குப் பிறகு, நீங்கள் உங்கள் தங்கைக்கு என்ன வழி சொல்வீர்கள்" என்றேன்.

"எதைப்பற்றி?"

"ஆண்களோடு பழகுவதில்!"

"அம்மா எனக்குச் சொன்னதையே சொல்வேன்."

"அதனால் குறை ஏற்படுகிறதே; இப்படி ஒரு வாழ்வு பாழாகிறதே."

இதைச் சொன்னவுடன், அவளுடைய திட்பமும் தெளிவும் பறந்து போயின. "அதை நினைக்கும்போதுதான் எனக்குத் துயரமாக இருக்கிறது. நான் குற்றவாளி அல்ல என்பதை உங்களிடம் சொல்லி, என் மன வேதனையைத் தீர்த்துக்கொண்டேன். ஆனால் என் அன்புக்குரிய சந்திரனுடைய வாழ்வு கெடுவதை நினைத்தபோது எனக்குத் துயரமாக இருக்கிறது" என்று வருந்தினாள். அவளுடைய முகம் வாடியது. ஒரு பெருமூச்சு விட்டாள். "அன்று உங்களுடைய கல்லூரியில் ஒரு நாடகம் நடந்தது. நான் வந்திருந்தேன்.

அவருடைய நடிப்பைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். மறுநாள் வீட்டுக்கு வந்திருந்தார். அந்தப் பெண் வேடத்தோடு நான் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்; வேண்டாம் என்று மறுத்தார். இயல்பான உடையோடு புகைப்படம் எடுக்கலாம் என்று சொன்னார். அதற்கு நான் இணங்கவில்லை. அதிலிருந்து அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். தேர்வு தொடங்குவதற்கு முன் இங்கு வந்திருந்தபோது அம்மா வீட்டில் இல்லை. எங்கே என்றார். திருமண வேலையாக என்று சொன்னேன். யாருக்கு என்றார்? எனக்குத்தான், என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். அன்று அவர் தெரிந்து கொள்ளாமல் போனது வியப்பாக இருக்கிறது" என்றாள்.

"நீங்கள் நாணத்தால் சிரித்திருக்கலாம். வேடிக்கை பேசியதாகக் கருதி அவன் சிரித்திருக்கலாம்" என்றேன்.

சிறிது நேரம் அசையாமல் சிற்பம் போல் இருந்தாள். "உண்மைதான்! அவ்வாறு கருதியிருக்கக் கூடும். என்ன வாழ்க்கை இது!" என்றாள்.

"நம் நாட்டு நாகரிகம்! எல்லாவற்றிலும் வெளிப்படையாகப் பழகிவிடுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படையான காதலில் - திருமணப் பேச்சில் மட்டும் வெளிப்படையாகப் பேசி விளக்குவதில்லை. பெற்றோரும் மக்களிடம் அப்படி இருக்கிறார்கள்; மக்களும் பெற்றோரிடம் அப்படி இருக்கிறார்கள். அண்ணன் தங்கையும் அப்படி நடக்கிறார்கள்; நீங்களும் அப்படித்தான்" என்றேன்.

"நான் பெண், அவர் இயல்பாகத் துணிவும் அஞ்சாமையும் உடையவர். அவர் வெளிப்படையாகப் பழகியிருக்கலாமே?"

"நீங்கள் பெண்தான்; ஆனால் பழங்காலப் பெண் அல்லவே? வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?"

"அவர் சொல்லியிருக்கலாமே!"

"ஆண் பெண் பழக்கம் என்றால் அது காதல் வரையில் நீளக்கூடியது. அதன்படி அவன் இயற்கையாக நடந்து கொண்டான். நீங்கள்தான், இந்தப் பழக்கம் அதுவரையில் செல்லக்கூடாது என்று கட்டுப்பாட்டோடு பழகினீர்கள். அந்தக் கட்டுப்பாட்டையாவது சொன்னீர்களா?"

மறுபடியும் சிறிது நேரம் திகைத்து நின்றாள். "ஆம்! சொல்லவில்லை. என்னுடைய குற்றம்தான். எவ்வளவோ முன்னேறினாலும், இந்த நாட்டில் வழிவழியாக வந்த பழக்கம் - வெளிப்படையாகச் சொல்லாமல், பழகும் பழக்கம் - இது. என் தவறுதான்" என்று வருந்தினாள்.

மறுபடியும் தங்கை வந்து, "அம்மா கூப்பிடுகிறார்கள்" என்றாள்.

"கடைசியில் உங்களுக்கு வருத்தம் உண்டாக்கி விட்டேனா?" என்று நான் எழுந்தேன்.

"அவருடைய வாழ்க்கையே கெட்டுவிட்டது! நான் சிறிது நேரம் வருந்தினால் என்ன?" என்றாள். "சிறிது உட்காருங்கள்; சிற்றுண்டியும் காப்பியும் உண்டு செல்ல வேண்டும்" என்று உள்ளே சென்றாள். தங்கையிடம் அவற்றைக் கொடுத்தனுப்பினாள். விரைவில் திரும்பி வந்து "திருமணத்திற்கு நீங்களாவது வரவேண்டும்" என்றாள்.

"சந்திரனே அதற்குள் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்றேன்.

"அப்படி அவர் வந்தால், அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. எங்கள் இல்லத்தில் முதல் விருந்து அவருக்கு நடத்துவதாக எண்ணியிருந்தேன். என் எண்ணம் நிறைவேறினால் நன்றாக இருக்குமே" என்று கண் கலங்கினாள்.

அங்கு உள்ள குடும்பப் பொறுப்புகளுக்கு இடையூறாக நிற்கக்கூடாது என்று விரைவில் விடை பெற்றுத் திரும்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_14&oldid=7888" இலிருந்து மீள்விக்கப்பட்டது