அகல் விளக்கு/அத்தியாயம் 22

அங்கங்கே வேலைகளுக்கு முயன்றேன். சில இடங்களுக்கு எழுதினேன். சில இடங்களில் நேரில் சென்றும் முயன்றேன். சர்வீஸ் கமிஷனுக்கு விண்ணப்பம் எழுதினேன். அதற்கு உரிய தேர்வும் எழுதினேன். தொழிலும் இன்றிக் கல்வியும் இன்றி வாலாசாவில் பொழுது போக்குவது ஒரு துன்பமாக இருந்தது. பெரிய குடும்பத்தில் ஒரு சின்னக் குடும்பமாக எங்கள் இல்வாழ்க்கை நடந்தது. ஆகையால் குடும்பச் சுமை உணரவில்லை.

மனைவி கயற்கண்ணிக்கு எங்கள் வீடு புதிது அல்ல; எனக்கும் அவள் புதியவள் அல்ல. இடையிடையே வேளூர்க்கும் வேலூர்க்கும் போய் வந்தது தவிர மாறுதல் ஒன்றும் இல்லை. மாலன் வீட்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு போய்வர எண்ணினேன். முதலில் அவன் அல்லவா குடும்பத்தோடு இங்கே வந்து போகவேண்டும். அவன் வந்தபிறகு வேண்டுமானால் நாம் போகலாம் என்று போலி மானம் தடுத்தது. ஆகையால் அங்கும் போகவில்லை. அவனுக்கு ஒரு மகன் பிறந்த செய்தி தெரிவித்திருந்தான். அதற்கு மறுமொழியாக என் வாழ்த்தை அறிவித்திருந்தேன். அதற்குப் பிறகு தேர்வுக்குப் படித்து வருவதாக எழுதியிருந்தான். பிறகு தன் மனைவி எங்கே இருப்பதைப் பற்றியும் அவன் குறிக்கவில்லை. தேர்வு எழுதி முடித்த செய்தியைத் தெரிவித்து இந்த முறை நம்பிக்கையோடு இருப்பதாகக் குறித்திருந்தான்.

அவன் தேர்வில் வெற்றி பெற்ற செய்தியை அறிந்ததும் அவனுக்குக் கடிதம் எழுதி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். வேலை தேடும் முயற்சியைக் குறித்து என் அறிவுரையைக் கோரி மறுமொழி எழுதினான்.

என் நிலையே சோர்வாக இருக்கும்போது, நான் எப்படி அவனுக்கு வழி காட்டுவது என்று அவனுக்கு ஒன்றும் எழுதாமல் இருந்தேன். எதிர்பாராத வகையில், என்னை நேரில் வருமாறு சர்வீஸ் கமிஷன் அழைத்திருந்தது. அவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடைகள் தந்தேன். சில நாட்களுள் வேலைக்கு உத்தரவும் வந்தது. கோயமுத்தூரில் கூட்டுறவுத் துணைப்பதிவராக வேலை வந்திருந்தது. மனைவியை வீட்டிலேயே விட்டுக் கோவைக்குப் புறப்பட்டுத் தொழிலில் சேர்ந்தேன்.

தொழில்துறை புதியது ஆகையால் இரவும் பகலும் என் சிந்தனை அதில் மூழ்கியிருந்தது. 'செய்வன திருந்தச் செய்' என்ற அறிவுரையைக் கடைப்பிடித்துத் தொடக்கத்திலிருந்தே சிறு கடமையையும் செம்மையாய்ச் செய்து வந்தேன். இரண்டு வாரங்களுள் வேலையில் பழகிவிட்டேன். எனக்கு மேலதிகாரியாக வாய்த்தவர் நல்லவராகவும் திறமையுடையவராகவும் இருந்தார். ஆகையால் வேலையைக் கற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருந்தது. கோவையில் மூன்று மாதங்கள் பயிற்சி போல் இருந்து கற்றுக் கொண்ட பிறகு வேறு எந்த இடத்திற்காவது மாற்றுவார்கள் என அறிந்தேன். ஆகையால் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கோவையில் குடும்பம் நடத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.

இடையே ஒருமுறை ஊர்க்குப் போயிருந்தேன். தங்கை மணிமேகலை அப்போது புக்ககத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். ஒருநாள் நான் பகலுணவுக்குப் பிறகு கட்டிலில் படுத்துறங்கி விழித்தபோது தங்கையும் கயற்கண்ணியும் பாக்கிய அம்மையாருடன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.

"எதிலும் பிடிவாதக்காரராக இருக்கிறார். எதை எடுத்தாலும், ஒரு கோடு போட்டாற்போல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இல்லாவிட்டாலும் இது தப்பு அது தப்பு என்கிறார்" என்றாள் தங்கை.

"அய்யய்யோ! இதைக் கேட்டாலே பயமா இருக்குது அம்மா" என்றாள் என் மனைவி.

"என் அண்ணன் ஒரு நாளும் அப்படிக் கண்டிப்பாக நடக்கமாட்டார். நான் சொல்கிறேன் அண்ணி" என்றாள் தங்கை.

"மணிமேகலை! நீ சொல்வதைப் பார்த்தால் அவர் ஒன்றும் கெட்டவராகத் தெரியவில்லையே" என்றார் பாக்கியம்.


"கெட்டவர் அல்ல. பிடிவாதக்காரர். உலகத்தில் அங்கங்கே குடும்பங்களில் மனைவியின் விருப்பம்போல் விட்டு விட்டுக் கணவன்மார் எதிலும் தலையிடாமல் இருக்கிறார்கள். நம் வீட்டில் அப்பா இல்லையா? என் வீட்டுக்காரர் நான் கட்டுகிற புடைவை முதல் வாங்குகிற பொருள்கள் வரையில் எதற்கும் இப்படி அப்படி என்று கட்டளை போடுகிறார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கொடுத்த உரிமைகூட இவர் கொடுப்பதில்லை. சிவப்பு மையில் எழுத வேண்டியதைக் கறுப்பு மையில் எழுதினால் ஆசிரியர்கள் பெரிய குற்றமாகக் கருதுவதில்லை. இரண்டு பக்கம் எழுத வேண்டியதை இரண்டரைப் பக்கமாக எழுதினால் கோபித்துக் கொள்வதில்லை. ஒரு நாள் இரண்டு நாள் படிக்காமலே வந்தாலும், நேரம் கழித்து வந்தாலும் மன்னித்து விடுகிறார்கள். இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறதே."

தங்கையின் இந்தப் பேச்சைக் கேட்டு என் மனைவி சிரித்தாள்.

பாக்கிய அம்மையாரின் சிரிப்புக் கேட்கவில்லை. "ஊ-ம்?" என்ற குரல் மட்டும் பெருமூச்சோடு கலந்து கேட்டது. "கோடு போட்டு வாழ்க்கை நடத்துவது நல்லதுதானே அம்மா! போட்ட கோட்டில் நடப்பது எளிது அல்லவா? ஒரு காட்டில் நடக்க வேண்டுமானால், வழி இல்லாமல் நடந்து போவதுதான் துன்பம். ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தால், அதில் நடந்து போவதில் கவலையே இல்லை. ஒரு பாதையும் இல்லாத இடத்தில் இப்படி நடப்பதா அப்படி நடப்பதா, வலக்கைப் பக்கம் திரும்பலாமா இடைக்கைப் பக்கம் திரும்பலாமா, இந்தத் திசையா அந்தத் திசையா என்று நூறு முறை தயங்கித் தயங்கிப் போகவேண்டும். அப்போதும் மனக்குறை தீராது. அல்லலாக முடியும். ஒற்றையடிப்பாதை இருந்துவிட்டால் போதுமே. கவலை இல்லாமல் போகலாமே" என்றார்.

"மெய்தான் அக்கா! உலகத்தார் போகிய போக்கில் நாம் போகலாமே. துன்பம் இல்லாமல் இருக்குமே!"

"நீ சொல்வது நல்லதுதான். நம்முடைய முன்னோர் காலத்தில் அப்படித்தான் வாழ்க்கை நடத்தினார்கள். கவலையே இல்லாமல் இருந்தது. பெண்களுக்குக் குடும்பப் பண்பாடு என்று இருந்தது. ஆண்களுக்கு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று இருந்தது. இப்போது நம் நாட்டில் பலவகையான நாகரிகம் வந்து கலந்துவிட்டன. பணம் ஏற்பட்டு வாழ்க்கையைப் பலவகையாகப் பிரித்துவிட்டது. யாரை யார் பின்பற்றுவது என்று தெரியவில்லை. ஐம்பது ரூபாய் வருவாய் உள்ளவர் ஐந்நூறு ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா? அவர் ஐயாயிர ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா?" எல்லோரும் ஒரே ஊரில் அடுத்தடுத்து வாழவேண்டியுள்ளது.

போக்கு வரவுக் கருவிகள் பலரைக் கொண்டுவந்து கலந்துவிட்டன. பத்திரிகை, சினிமா முதலானவை பல கருத்துகளைக் கொண்டு வந்து கலந்துவிட்டன. இப்போது குடும்பப் பண்பாடு என்று ஒன்று தனியே எப்படிக் கற்றுக் கொள்வது? உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று சொன்னாலும் உலகில் எந்த வகையான மக்களைப் பார்த்து நடப்பது? முன்காலத்தில் நம் நாட்டு நாகரிகமே ஒரு கிராம அமைப்புப் போல் தெளிவாக எளிமையாக இருந்தது.

இப்போது நம் நாட்டு வாழ்க்கை ஒரு சந்தைபோல் பெருங் கலப்பாக ஆவாரமாக ஆகிவிட்டது. ஆகையால் இப்போது உலகத்தாரைப்போல் நடப்பது என்றால் யாரைப் பார்த்து நடப்பது? கணவன் மனைவி என்ற இரண்டே பேர் தனிக்குடும்பம் நடத்துகிறவர்கள் இதோ நம்முடைய பெரிய குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? கிராமத்துக் குடும்பம் நகரத்துக் குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? நகரத்தில் பஸ் பயணத்துக்குக் காசு இல்லாதவர்கள் கார் வைத்து வாழ்பவர்களைப் பின்பற்ற முடியுமா?"

"இதே போராட்டம்தான். எல்லாம் வரவு செலவு வகையில் வரும் துன்பங்கள்தான்."

"பார்த்தாயா, மணிமேகலை! இப்போது தெரிந்து கொண்டாயா? அடிப்படையில் இந்தக் குறை இருக்கும்போது உலகத்தைப் பார்த்து வாழவேண்டும் என்று ஏன் சொல்கிறாய்?"

"நான் வரவு செலவு வகையில் தலையிடப் போவதே இல்லை அம்மா! பேசாமல் சமைத்துப் போட்டுக்கொண்டு கவலை இல்லாமல் இருக்கப்போகிறேன்" என்றாள் என் மனைவி குறுக்கிட்டு.

"உனக்கு என்ன அண்ணி! அண்ணனுக்குச் சம்பளம், படி எல்லாம் முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். தடபுடலாகக் குடும்பம் நடத்தலாம். நாங்கள் எழுபது ரூபாய்க்கு ஏங்குகிறோம். நீ கேட்டு வந்தவள்" என்றாள் தங்கை.

தங்கையின் சொல்லைக் கேட்டதும் என் உள்ளம் வருந்தியது. ஏழைக்குக் கொடுத்தோமே என்று கவலை எங்கள் உள்ளத்திலே முதலிலிருந்தே இருந்துவந்தது. இருந்தாலும், அன்று தங்கையே வாய்விட்டுக் குடும்பத் துன்பத்தைச் சொன்னபோது வேதனையாக இருந்தது. என்ன செய்வது. கொடுத்துவிட்டோம், இனி எப்படியாவது வாழவேண்டும் என்று மனம் ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழி இல்லை.

முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான அறிவை எண்ணி வியந்தேன். படிப்புப் பல படித்துப் பரந்த உலகத்தில் பழகிய நான் உணராத, சிக்கல்களை எல்லாம், மூலைவீட்டில் தொண்டு செய்து வாழும் ஒருவர் உணர்ந்தது வியப்பாக இருந்தது. அவர் மேலும் பேசத் தொடங்கவே, ஆர்வத்தோடு கேட்டேன்.

"இப்போது உண்மை வெளிப்படையாகத் தெரிந்து விட்டது அல்லவா? உன் கணவர் ஏன் கோடு போடுகிறார் என்று காரணம் தெரிந்ததா? அவர் தம் குடும்பத்துக்கு என்று தனி வழி வகுத்துக் கொண்டு கவலை இல்லாமல் வாழ முயற்சி செய்கிறார். நல்லதுதானே?"

"சரி, அக்கா! சிக்கனமாக வாழ வேண்டியதுதான். ஒப்புக் கொள்கிறேன். பட்டு உடுத்த வேண்டா என்கிறார். திருமணங்களுக்குப் போனாலும் வேறு அலுவல்களுக்குப் போனாலும் பருத்தியாடையே போதும் என்கிறார். தாம் கதர் உடுத்திக்கொண்டே எதற்கும் போகவில்லையா என்று தம்முடைய பழக்கத்தைக் காட்டுகிறார். அவர் ஆண்மகன், எப்படிப் போனாலும் மதிப்பு உண்டு. நான் அப்படிப் போனாலும் மற்றப் பெண்கள் மதிக்கமாட்டார்களே என்று சொன்னால், அப்படிப் பட்டுக்காக மதிக்கின்றவர்களாக இருந்தால் அவர்கள் நல்லவர்கள் அல்ல என்கிறார். அப்படிப்பட்டவர்களின் உறவும் பழக்கமும் இல்லாமலிருப்பதே நமக்கு நல்லது என்கிறார்.

ஆடம்பரக்காரரோடு பழகினால் ஒரு வேளையாவது மனத்தில் ஏக்கம் வரும்; கவலை வரும்; பழகாமலே இருந்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்கிறார். நாட்டு எலி நகரத்து எலியோடு பழகாமல் இருப்பதே நல்லதாம், பட்டுச் சேலைக்காக நீங்கள் பணம் செலவிட வேண்டா; எங்கள் தாய்வீட்டார் கொடுக்கும் பட்டுச் சேலை போதும் என்று சொன்னேன். அதற்கும் என்னை விடவில்லை. மனத்திலேயே ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்தால்தான் சிக்கன வாழ்க்கையும் கவலையற்ற வாழ்க்கையும் முடியுமாம். தாய்வீட்டுப் பட்டாக இருந்தாலும், அதை விரும்புகிற மனமே நல்ல மனம் அல்லவாம். இன்றைக்கு அந்த ஆசைக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு வேறு பல ஆடம்பர ஆசைகள் மனத்தில் வருமாம். நாம் தனிச்சாதி போல் ஆடம்பரக்காரரிடமிருந்து பிரிந்து வாழலாம் என்கிறார். இது நடைமுறையில் முடியுமா?"

எனக்கு இந்தப் பேச்சு ஒரு முறையீடுபோல் இருந்தது. தங்கையின் நிலைமை இரங்கத்தக்கதாக இருந்தது. அதே நேரத்தில் அவளுடைய கணவரைக் குறை கூறவும் முடியவில்லை.

"நல்ல கதைதான்" என்றாள் என் மனைவி.

பாக்கிய அம்மையாரின் குரலில் இரக்கம் புலப்பட்டது. "என்ன செய்வது அம்மா! அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. அப்படி நடந்தால் நல்லது என்றுதான் சொல்வேன். ஆனால் நீ இங்கே குழந்தை போல் செல்வமாக வளர்ந்துவிட்டாய். உன் மனத்துக்கு எல்லாம் புதுமையாக இருக்கும். பயப்படாதே, கவலை வேண்டா. முதலில் அவர் சொன்னபடியே நட, எதிர்த்துப் பேசாதே, உன்மேல் அன்பு வளரட்டும்; நாளடைவில் உன்மேல் அவருக்கே இரக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் அதுவரையில் பொறுக்க வேண்டும். பொறுப்பது துன்பமாகத்தான் இருக்கும். ஆனாலும் பொறு" என்றார்.

"அவர் நெஞ்சம் கல் நெஞ்சம்; அவருக்கு இரக்கம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை."

"அப்படிச் சொல்லாதே மணிமேகலை; அம்மாவிடம் முதல் முதலில் அப்பா எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா? இன்றைக்கு எப்படி இருக்கிறார்? அம்மாவுக்கு காய்ச்சல் என்றால் மளிகைக் கடையை விட்டு நான்கு முறை வந்து பார்க்கிறார். யாருக்குமே நாளடைவில்தான் அன்பும் இரக்கமும் வளரும். நீ மட்டும் கொஞ்சம் பொறுமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை.

காதல் காதல் என்று ஒரே நிலையில் நின்று திருமணம் செய்து கொள்கிறார்களே, அவர்களுக்கும் இந்தப் பொறுமையும் வேண்டும் விட்டுக் கொடுத்தலும் வேண்டும். நம் ஊரிலேயே பார், அந்த நெல்மண்டிக்காரர் பிள்ளை எதிர்வீட்டுப் பெண்ணோடு பழகிக் காதல் ஏற்பட்டு மணம் செய்து கொண்டான். ஊரெல்லாம் தெரியும். இப்போது அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதாம் தெரியுமா? அந்த வீட்டு வேலைக்காரி ஒரு நாள் இங்கு வந்திருந்தபோது சொன்னாள். எலியும் பூனையுமாக இருக்கிறார்களாம். வேறு வழி இல்லை என்று இப்போது வாழ்கிறார்கள்.

காதல் ஒரு வகை ஆசை. அது வெறிபோல் வளரும்போது குற்றங்களே தெரிவதில்லை. அது தணியும்போது மற்றக் குடும்பங்களின் நிலை வந்து விடுகிறது. அப்போது பண்புகள் இருந்தால்தான் வாழமுடியும். இல்லையானால் வாழ்வு இல்லை. ஆகவே முதலிலே அன்பு இல்லை, இரக்கம் இல்லை என்று நீ கவலைப்படாதே. நம்பிக்கையோடு நான் சொல்வதைக்கேள். எந்த ஆண்களை நம்பக்கூடாது தெரியுமா? தன்னலம் மிகுந்தவர்களைத் தான் நம்பக்கூடாது.

அவர்கள் இன்றைக்கு அன்போடு நடப்பதுபோல் இருக்கும். நாளைக்கு கைவிட்டு விடுவார்கள். உன் கணவர் கொள்கை உடையவர்; ஒரு நெறியை நம்புகிறவர்; சொல்கிறபடி நடக்கிறவர். ஆகையால் நீ அவரை நம்பலாம். உனக்கு ஒரு வழி அவருக்கு ஒரு வழி என்று நடந்தால், அப்படிப்பட்ட ஆளை நம்பக்கூடாது. சில ஆண்கள் வீட்டிலேயே சிக்கனம் பிடிக்கச் சொல்லி வெளியே சீட்டு ஆடிக் காசைத் தொலைப்பார்கள். மனைவி மக்கள் வெறுஞ்சோறு உண்ணச் செய்து தாம் மட்டும் ஓட்டலில் சுவையாகத் தின்பார்கள். மனைவி மக்களை வீட்டில் ஏமாற்றிவிட்டுத் தாம் மட்டும் நாடகமும் சினிமாவும் விடாமல் பார்ப்பார்கள்.

மனைவி மக்களுக்குக் கந்தை போதும் என்று விட்டு விட்டுத் தாம் மட்டும் அலமாரியிலிருந்து மடிப்பு மடிப்பாக எடுத்து உடுத்திக்கொண்டு ஊர் சுற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் நம்பக்கூடாது. அவர்களுக்கு ஒரு நாளும் உண்மையான அன்பு ஏற்படாது. உயிரையே விடுவது போல் உருகி உருகிப் பேசினாலும் அவர்களை நம்ப முடியாது; நம்பக்கூடாது. உன் கணவர் அப்படிப்பட்டவரா, மணிமேகலை! உனக்குப் பட்டு வேண்டா என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் ஆடம்பரமாகத் திரிகிறாரா? திருமணத்தின்போதே அவர் வெள்ளைக் கதர் தவிர வேறு உடுத்தவில்லையே.

அப்பா போட்ட மோதிரத்தையும் மறுநாளே கழற்றி உன் கையில் கொடுத்துவிட்டார் என்று சொன்னாயே. பட்டாசை பொன்னாசை இல்லாமல் அவர் தம் மனத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நீயும் அப்படி ஆகிவிட்டால், வாழ்க்கை கவலை இல்லாததாக இருக்கும் என்று நம்புகிறார். அது உண்மைதான். காந்தியடிகள் பெரிய பெரிய போராட்டம் எல்லாம் நடத்தியும் கவலை இல்லாமல் இருப்பதற்கு அதுதானே காரணம்? கஸ்தூரிபாவின் வாழ்க்கை எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை!

அவ்வளவு தொலைவு உன்னால் நடக்கமுடியாதிருக்கலாம். இருந்தாலும், அந்த வழி நல்ல வழி, நேர் வழி, கவலையற்ற வழி, துணிவான வழி, வீரர் நடக்கும் வழி. அதனால்தான் சத்தியசோதனை படி படி என்று உனக்குப் பலமுறை சொன்னேன். நீ அக்கறையோடு படிக்கவில்லை. அன்று காலையில் தாயுமானவர் பாடலில் ஒரு பாட்டுப் படித்து அப்படியே மனம் உருகிவிட்டது. 'ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கண்டவர்கள், நாடும் பொருளான நட்பே பராபரமே.' அந்த நிலை எவ்வளவு பெரிய நிலை! நாம் அவ்வளவு தொலைவுக்குப் போகவேண்டா. ஆடம்பரத்தில் ஆசை குறைந்தால் போதுமே. உடனே எனக்குத் திருக்குறள் நினைவுக்கு வந்தது. "வேண்டாமை அன்ன விழுச் செல்வம் வேண்டின் உண்டாகத் துறக்க." மனப்பாடம் செய்தாயே, நினைவு இருக்கிறதா? இனிமேல் கொஞ்சம் ஆழ்ந்து படி. மற்றப் பெண்கள் மதிப்பதைப் பற்றிக் கவலைப்படாதே. நீ அவர்களை விட மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று வாழ்ந்து காட்டு. அதுவே பெரிய செல்வம்!"

பாக்கியம் பேச்சைக் கேட்டதும், என்னால் படுக்கையில் அமைதியாக இருக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தால் அதனால் அவர்களின் பேச்சு நின்று விடுமே என்று எண்ணி மறுபடியும் அப்படியே கிடந்தேன். சில புத்தகங்களையும் சில இதழ்களையும் படித்துவிட்டு அந்த அம்மையார் எப்படி இவ்வளவு விரைவில் அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்ததோ என்று வியந்தேன். கல்லூரியிலும் பல நூல்களைப் படித்தேன். அறிவை வளர்த்துக்கொண்டேன்.

ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துக்களை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும் கட்டிகளும் போன்றது. பாக்கியத்தின் அறிவு வளர்ச்சி, உடம்பின் இயற்கையான வளர்ச்சி போன்றது. இயற்கையான வளர்ச்சியில் எவ்வளவு எடை மிகுந்தாலும் சுமையாகத் தோன்றுவதில்லை; உடம்புக்கு ஊக்கமாகவும் வலுவாகவுமே தோன்றும்.

ஆனால் செயற்கையான சிறு கட்டியும் உடம்புக்கு வேண்டாத துன்பமாகத்தான் தோன்றுகிறது. பாக்கியத்தின் அத்தகைய அறிவு வளர்ச்சி இவ்வளவு குறைந்த காலத்தில் ஏற்பட்டதை எண்ணி எண்ணி வியப்படைந்தேன். கணவரைப் பற்றிக் குறை கூறிய தங்கையின் உள்ளம் இரும்பாக இருந்தது. வேறு எந்தப் பெண்ணிடமாவது தங்கை அவ்வாறு கணவரின் குறையைச் சொல்லியிருந்தால், அந்த இரும்பு நெஞ்சம் துருபிடித்துக் கெடுமாறு செய்திருப்பார். என்னிடம் சொல்லியிருந்தாலும், கணவர்மேல் மேலும் வெறுப்பு வளருமாறுதான் செய்திருப்பேன். பாக்கியம் அந்த இரும்பைப் பொன்னாகுமாறு செய்துவிட்டாரே என வியந்தேன். அடுத்துத் தங்கை பேசிய பேச்சிலிருந்து அந்த இரசவாத வித்தை நடைபெற்றுவிட்டதை அறிந்தேன்.

"நீ சொல்வது சரி அக்கா. அவர் கெட்டவர் அல்ல. ஆனால் நாம் மற்றப் பெண்களோடு பழகாமல் இருக்க முடியுமா? திருமணங்களுக்குப் போகாமல் இருக்க முடியுமா?" என்றாள் தங்கை.

"பழகு, போ. ஆனால் நான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையோடு சிறுமை மனப்பான்மையோடு போகாதே. நான் எளிய வாழ்க்கை வாழவல்ல உயர்ந்த பெண் என்று பெருமிதமாக எண்ணிக் கொண்டு போ. கண்ணகி, மணிமேகலை, குயூரியம்மையார், கஸ்தூரிபா முதலான உத்தமப் பெண்களின் நெறியைப் உணர்ந்துவிட்டவள் என்ற உயர்வு மனப்பான்மையோடு போ. அப்படிப்போய்ப் பழகினால் ஒரு நாளும் நம் மனம் ஏக்கம் அடையாதே" என்றார் பாக்கியம்.

யாரோ ஒருவர் கொட்டாவி விட்டது கேட்டது. என் மனைவியாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். அவளுடைய மூளை இந்த அறிவுரையின் சுமை தாங்காமல் சோர்ந்து போயிருக்கும் என எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

"என்ன, தூக்கம் வருகிறதா கண்ணி!" என்றார் பாக்கியம்.

"போய்த் தூங்கு அண்ணி" என்றாள் தங்கை.

"துக்கம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டால் எனக்குப் பயமாக இருக்கிறது! வாழ்க்கை இவ்வளவு தொல்லையாக இருக்கிறதே!" என்றாள் மனைவி.

பாக்கியம் சிரித்தபடியே பேச்சுத் தொடங்கினார்: "பயமாகவா இருக்கிறது? நீ இப்போது படிக்கிற நூல்களை விடாமல் படித்துக் கொண்டு வா! இன்னும் ஆறு மாதத்தில் பயம் இருக்கிறதா, என்று பார். மணிமேகலைக்கு இப்படிச் சொல்லி சொல்லிப் படிக்க வைத்ததனால்தான், இப்போது ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்கிறாள்; சொல்வது விளங்குகிறது. நீயும் படி, உனக்கும் தெளிவு வரும்; பயமே இருக்காது" என்றார்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. பேச்சு முடிந்ததோ என்று எழ எண்ணினேன். மறுபடியும் அவரே பேசினார்: "பயமே இல்லாமல் இருக்கலாம். சுருக்கமான வழி சொல்லட்டுமா? இங்கிருந்து வேலூர்க்குப் போகணும். நீ தனியே போனால் எவ்வளவு பயம், கவலை! உன் அப்பாவுடன் போகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது பயம் உண்டா? கவலை உண்டா? அப்பா போகிற வழியில், அவர் பின்னே அடிவைத்து நடந்துகொண்டே இருக்கிறாய். வழியைப் பற்றியும் சிந்திப்பதில்லை. வழியில் கல்லும் முள்ளும் உண்டா என்றும் பார்ப்பதில்லை.

திருடர்கள் வந்து அப்பாவை அடித்தால் என்ன செய்வது என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை. எல்லாம் அப்பாவின் பொறுப்பு. அவர் நடக்கிறார். அவர் பின்னே நீ நடக்கிறாய் அவ்வளவுதான். இல்வாழ்க்கையில் அப்படி நடக்கிற பெண்களுக்கு ஒரு கவலையும் இல்லை; போராட்டமும் இல்லை. கணவர் நல்லவராக, வாழ வல்லவராக வாய்த்துவிட்டால் போதும்! மனைவி மூளைக்கே வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்கலாம்.

அப்போது பட்டு வேண்டுமா வேண்டாவா, வைரம் வேண்டுமா வேண்டாவா, திருவிழாவுக்குப் போவதா இல்லையா, சினிமாவுக்குப் போவதா இல்லையா என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கை நடத்தலாம். அவர் அழைத்தால் போவது, இல்லையானால் அமைதியாய் வீட்டில் இருப்பது. ஆனால் இது எல்லோராலும் முடியாது. இப்படி வாழ்வதற்கு எவ்வளவோ பண்பாடு வேண்டும்! எவ்வளவோ தியாக மனப்பான்மை வேண்டும். தனக்கு என்று ஒரு சிறு ஆசையும் இல்லாமல் அற்றுப்போன மனநிலை யாருக்கு வரும்? கண்ணகியிடத்தில் பார்த்தோம்! கஸ்தூரிபாவிடத்தில் பார்த்தேன். வேறு யாரிடத்தில் பார்க்கிறோம்" என்றார்.

"படிக்காத பெண்கள், பயங்காளிப் பெண்கள் அப்படி அடங்கி நடக்கலாம். அண்ணியைப் போல் பத்தாவது படித்த பெண் அப்படி ஏன் அடங்கி நடக்கவேண்டும்?" என்றாள் மனைவி.

"பயந்து அடங்கி நடப்பது வேறே. அது தியாகம் அல்ல. அப்படிப் படிக்காத பெண்கள் பயந்து நடப்பதும் காணோமே! கணவன் இல்லாதபோது விருப்பம் போல் நடக்கிறார்கள்! அந்த வாழ்க்கையில் உண்மை இல்லையே! அது ஏமாற்றுகிற வாழ்க்கை, உள்ளத் தூய்மை இல்லாத வாழ்க்கை! போலி வாழ்க்கை! கணவனுக்குத் தெரியாமல் குழந்தைக்கு மந்திர தந்திரங்கள் செய்வது, காட்டேறி பூசை போடுவது, கணவனுக்கு தெரியாமல் சிறுவாணம் பிடித்து வட்டிக்குக் கொடுப்பது, இவைகள் போன்ற உண்மை இல்லாத வாழ்க்கை அது. அதனால் ஒரு பயனும் இருக்காது" என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே "மணிமேகலை! பெண்களில் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்களில் பலர் அப்படி இருக்கிறார்கள்; தாங்களாக ஒரு வழி தேடிக்கொள்ளாமல், தங்கள் தலைவர் ஒருவர் காட்டிய வழியில் கண்ணை மூடி நடப்பார்கள். அதனால் அவர்களுக்குக் கவலை குறைகிறது; ஒரு குறையும் இல்லாமல் தொண்டு செய்யவும் முடிகிறது" என்றார்.

"ஆமாம்" என்றாள் தங்கை, தொடர்ந்து "சினிமாவுக்கு அடிக்கடி போய்க் காசு செலவழிக்க நமக்கு வசதி இல்லை என்கிறார். சரி என்று நானும் அதைக் குறைத்துக் கொண்டேன். குடும்பக் கடமைகள் பல இருக்கும்போது, சடங்குகளிலும் பூசையிலும் மணிக்கணக்காச் செலவழிக்காதே என்கிறார். ஓய்விருக்கும்போது பக்திப் பாட்டுக்களைப் படித்தால் போதும் என்கிறார். வெள்ளிக்கிழமைப் பூசையையும் குறைத்துக் கொண்டேன்" என்றாள்.

"வீடு வாயில் முதலியவற்றைத் தூய்மையாக்குவதற்கு வெள்ளிக்கிழமை ஒரு நல்ல நாள்" என்றார் பாக்கியம்.

"அதை எல்லாம் அவர் தடுக்கவில்லை. தூய்மையை அவர் மிக விரும்புவார்" என்றாள் தங்கை. அப்போது தங்கையின் பேச்சுப் போக்கைக் கேட்டால் கணவர் மேல் ஒரு குற்றமும் காணாதவள் பேசுவதுபோல் இருந்தது.

பாக்கியம் தவிர வேறு பெண்களிடம் என் தங்கை அகப்பட்டிருந்தால், மேலும் மேலும் தூபம் இட்டு வெறுப்பையே வளர்த்து அவளுடைய மனத்தைக் கெடுத்து வாழ்க்கையைப் பாழ்படுத்தியிருப்பார்களே என்று எண்ணினேன். தங்கைக்கும் மனைவிக்கும் பாக்கியத்தின் பழக்கம் வாய்த்தது எவ்வளவு நன்மை என்று எண்ணி மகிழ்ந்தேன்.

தங்கையும் கயற்கண்ணியும் சந்திரனுடைய தங்கை கற்பகமும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சிறுமியராக இருந்தபோது, ஒன்றாகக் கூடி ஆடிக் குலாவியது நினைவுக்கு வந்தது. பாக்கியத்தின் அறிவின் பயனை இவர்கள் இருவரும் பெறும்போது, கற்பகமும் பெறுவதற்கில்லையே என்று வருந்தினேன்.

மறுநாள் காலையில் பல் துலக்கியதும், தோட்டத்தின் பக்கம் சென்றேன். அங்கே பாக்கியம் அமைதியாக படித்துக் கொண்டிருந்ததையும் ஒரு குறிப்பில் எழுதிக் கொண்டிருந்ததையும் கண்டு பேசாமல் திரும்பினேன். பாத்திரம் துலக்குதல் முதலிய எல்லாக் கடமைகளையும் முடித்து அவ்வளவு காலையில் படிக்க ஓய்வு கிடைத்து விட்டதே என்று எண்ணினேன். கூடத்தில் புத்தக அலமாரியைத் திறந்து பார்த்தேன். முதலில் கிடைத்தது தாயுமானவர் பாடல். அதில் அங்கங்கே ஓரத்தில் கோடிட்டிருந்ததைக் கண்டேன். திருக்குறளிலும் அவ்வாறே கண்டேன். அப்போது தங்கை வந்து, "என்ன அண்ணா பார்க்கிறீர்கள்?" என்றாள்.

"இந்தப் புத்தகங்களில் ஏன் இப்படிக் கோடு போட்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

"நான் போட்ட கோடுகள் அல்ல, அக்கா போட்டார்கள். கோடு போட்ட பகுதிகளைத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்லி அப்படிச் செய்திருக்கிறார்கள்" என்றாள்.

தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக்கதை, மணிமேகலை வசனம் என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன. செய்யுள் வடிவமான மூலத்தைப் படிப்பதற்கு வேண்டிய இலக்கியப் பயிற்சி இல்லாத காரணத்தால், பாக்கியம் இந்த உரைநடைக் கதைகளை மட்டும் படிக்க முடிகிறது.

இலக்கியப் பயிற்சி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினேன். இன்னும் பல உரைநடை நூல்களும் இருக்கக் கண்டேன்.

அன்று இரவு உணவுக்குப் பிறகு நான் திண்ணைமேல் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் எப்படியோ பட்டுப்புடவை பற்றிய பேச்சு நடப்பது கேட்டது. மெல்ல எழுந்து சன்னல் பக்கம் உட்கார்ந்து கேட்டேன். எனக்கு முதலில் கேட்டது மனைவியின் குரல்தான்.

"எல்லாரும் பட்டு உடுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டால், பட்டு நெசவாளர்கள் என்ன ஆவார்கள்? பட்டு வியாபாரிகள் என்ன ஆவார்கள்?" என்றாள் மனைவி.

அம்மா சிரிக்க, மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.

"நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?" என்றார் பாக்கியம்.

இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது.

"பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?" என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள். "வேறுபாடு உண்டு. திருடுகிறவன் பசிக்காகத் திருடுகிறான். ஆடம்பரத்துக்காகத் திருடவில்லை. ஆனாலும் அது குற்றமே. உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுகிறார்கள். அதுவும் குற்றமே. ஆனாலும் ஆடம்பரத்துக்காக கொலை செய்யவில்லை. பட்டுத் தொழில் இந்த இரண்டையும் விடக் கொடுமையானது. பட்டுப் பூச்சிகளைத் தீனியிட்டு வளர்க்கிறார்கள்.

நூலுக்குள் சுற்றிக்கொண்டு கிடக்கும் நிலை வந்ததும் கொதிக்கும் நீரில் அந்தப் பட்டுப் பூச்சிகளை அப்படியே உயிரோடு போட்டுச் சாகடிக்கிறார்கள். பிறகு வெளியே எடுத்து, நுலைச் சேர்த்துக் கொண்டு செத்த உடம்புகளை எரிக்கிறார்கள். ஆடம்பரத்துக்காகச் செய்யும் கொலை இது. ஒருவன் பசிக்கு ஒரு சின்ன கோழி அல்லது அரைக்கால் ஆடு போதும். ஆனால் ஒரு பட்டுச் சேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொதிக்கும் வெந்நீரில் இட்டு வதைத்துக் கொல்ல வேண்டும். நான் கண்ணாரப் பார்த்தேன். அந்தக் கொடுமையை!" என்றார் பாக்கியம்.

உடனே அம்மா, "மெய்தான். ஆனால் பட்டுச் சேலைக்குப் போடும் காசு பழுது அல்ல. நன்றாக உழைக்கிறது. அழகாகவும் இருக்கிறது" என்றார்.

"என்ன இருந்தாலும், ஆடம்பரத்துக்காக, அழகுக்காகச் செய்யும் கொலை அது! மூட்டைப் பூச்சிகளை, கொசுக்களை, எலிகளைக் கொல்கிறோம். அவைகள் நம் வாழ்வுக்கு இடையூறு செய்கின்றன. அதனால் கொல்கிறோம். புலி சிங்கங்களையும் அப்படியே வேட்டையாடிக் கொல்கிறோம். ஆனால், ஆடம்பரத்துக்காக அழகுக்காகக் கொலை செய்யலாமா? அது அறமா?" என்றார் பாக்கியம்.

அவ்வளவு தெளிவாக அவர் சொன்னதைக் கேட்டதும் இனிப் பட்டாடையே உடுப்பதில்லை என்ற உறுதி என் நெஞ்சில் ஏற்பட்டது. அந்த உறுதி இன்று வரையில் தளராமல் இருக்கிறது. அப்படி இருப்பதால், அன்று இரவு, பாக்கியம் பேசிய பேச்சும் இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

"என் வீட்டுக்காரர் இதற்குமேலே ஒரு படிபோய் விட்டார்" என்றாள் தங்கை.

"எப்படி" என்றாள் மனைவி.

"தோட்டத்தில் ரோசாச் செடி பூத்திருக்கும். நான் போய்ப் பறிக்கும்போது அவர் பார்த்துவிட்டால், 'அய்யோ பாவம்' என்பார். ஒருநாள் வெள்ளிக்கிழமை பூசைக்காக அரளிப் பூக்களைப் பறித்து ஒரு தட்டில் கொண்டுவந்தேன். அவைகளைத் தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இரக்கத்தோடு பார்த்து, 'மனிதர் கையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?' என்றார்."

இதைக் கேட்டதும் பாக்கியம், "நல்ல மனம்தான். தாயுமானவரும் ஒரு பாட்டில் இப்படி உணர்ந்து பாடி இருக்கிறார். நவசக்தி இதழில் பார்த்தேன். காந்தியடிகளின் ஆசிரமத்தில், யாரும் அங்குள்ள பூக்களைப் பறிக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டாம். ஜெர்மனி நாட்டு ஸ்வெயிட்சர் என்ற மருத்துவர் - பெரிய விஞ்ஞானி ஒருவர் - புல்மேல் கால்வைத்து நடக்கமாட்டாராம்" என்றார்.

"இவைகள் எல்லாம் நடக்க முடியாத விதிகள்" என்றாள் தங்கை.

"நடக்க முடிந்தவை என்று சிலவற்றை ஏற்படுத்திக் கொண்டு, அவைகளையாவது கடைப்பிடிப்போம். அதுவும் செய்யாமல், பழையபடியே இருந்தால் பயன் என்ன?" என்றார் பாக்கியம்.

"அப்படியானால் உனக்குப் பூவும் வாங்கிக் கொடுக்க மாட்டார் உன் வீட்டுக்காரர்" என்றாள் மனைவி.

"அவர் கையால் வாங்கிக் கொடுப்பதில்லை. ஆனால் நானாகப் பூ வாங்கிக் கொண்டால் தடுப்பதில்லை."

பாக்கியம் குறுக்கிட்டு, "பார்த்தாயா? அவருடைய கொள்கையாக இருந்தும், இந்தப் பூ வகையில் உன் விருப்பம் போல் நடப்பதற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார். இந்த அன்பை நீ உணரவில்லையே" என்றார்.

"உணராமலா நல்லபடி வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்? என்ன அக்கா, அப்படிச் சொல்லிவிட்டாயே!" என்றாள் தங்கை.

"தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர். தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால், காலம் செல்லச் செல்ல முழுதும் உன் வழியில் வந்துவிடுவார். உலகத்தில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ்கிறார்கள்? பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா, அன்பால் முழுதும் விட்டுக்கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்" என்றார் பாக்கியம்.

"இரண்டு பேரும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதுதான். ஒரு மாடு மட்டும் இழுத்து இன்னொரு மாடு சும்மா இருந்தால் வண்டி போகுமா?" என்றார் அம்மா.

"சரிதான் அக்கா! கண்ணகிபோல் பயந்து அடங்கிப் பதில் பேசாமல் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று சொல்கிறாய்" என்றாள் தங்கை.

"அதுதான் நல்லது" என்றார் அம்மா.

பாக்கியம் மறுத்தார். "இதுதானா நீ படித்தது? அந்தச் சிலப்பதிகாரக் கதையைப் படித்ததும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையே. கண்ணகியா பயந்த பெண்? அவளைப் போல் அஞ்சாமையும் வீரமும் யாருக்கு உண்டு? காந்தி பட்டினி கிடப்பதைப் பார்த்து அவரைக் கோழை என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உன் பேச்சு! துன்பம் பொறுப்பவர்கள் கோழைகள் அல்ல. கொள்கையோடு அமைதியாய் இருப்பவர்கள் கோழைகள் அல்ல.

கண்ணகி பயந்த பெண் அல்ல என்பதற்கு அந்தக் கதையிலேயே பல இடங்கள் வருகின்றனவே. தோழி ஒருத்தி சந்திர சூரிய வழிபாட்டுக்கு அழைக்கிறாள். கணவனுடைய மனத்தை மாற்றுவதற்கு அது உதவும் என்கிறாள். கண்ணகி அது தகாத வழி என்று உடனே மறுத்துவிடுகிறாள். செப்பனிட்ட பாதைபோல் இருந்தது கண்ணகியின் வாழ்க்கை. அதில் தடுமாற்றமே இல்லை. மதுரையில் அயலார் வீட்டில் இருக்கும்போது கணவன் செய்த தவறு இப்படிப்பட்டது என்று எடுத்துக் காட்டுகிறாள். கணவன் கொலையுண்ட பிறகு, அரசனை எதிர்த்து எவ்வளவு பேசுகிறாள்!" என்றார்.

"கோவலன்" என்று எதையோ கேட்கத் தொடங்கிப் பேசாமல் நிறுத்தினாள் மனைவி.

"கோவலன் செய்தது தவறுதான். என் மனத்துக்கே அது வருத்தமாக இருக்கிறது. பல ஆண்கள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தது பெருங்குற்றம்" என்றார்.

"ஆண்கள் மட்டும் அப்படித் தவறு செய்யலாமா?" என்றாள் மனைவி.

"செய்யகூடாதுதான். ஆனால்" என்று நிறுத்தினார்.

"ஏதோ சமாதானம் செய்து மழுப்பப் பார்க்கிறீர்கள்! நீங்கள் எப்போதும் ஆண்களின் கட்சியே" என்றாள் தங்கை.

"உண்மையான கட்சி நான் சொல்கிறேன். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறாதவர்களுக்குத்தான் முதல் மதிப்பு உண்டு. ஆனால் ஒன்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிலர் மணலில் நடக்கிறார்கள். சிலர் சேற்றில் நடக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். யார் வழுக்கி விழுந்தால் பெருந்தவறு?" என்றார்.

"சேறு வழுக்கும். விழுந்தால் தப்பு இல்லை, மணலில் நடப்பவன் விழுந்தால் அது தான் பெரிய குற்றம்" என்றார் அம்மா.

"அதுபோல்தான் ஆண்பெண் வாழ்க்கை. ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது அது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து, கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்க வேண்டும் அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்."

இவ்வாறு பேசிய பேச்சு முடிவதற்குள் தங்கை குறுக்கிட்டு, "இந்தக் காலத்தில் பெண்களும் வீட்டைவிட்டு வெளியே போய்ப் பலரோடு பழகவேண்டியிருக்கிறதே" என்றாள்.

"படித்துவிட்டு வேலைக்குப்போகும் பெண்களைச் சொல்கிறாய். அவர்கள் மணலில் நடப்பவர்கள் அல்ல, சேற்றில் நடப்பவர்கள். ஆகவே வழுக்கி விழுந்தால் மன்னிக்க வேண்டும். ஒரு முறை அனுபவப்பட்டு அறிவு பெற்ற பிறகாவது திருந்த வேண்டும். வெளியே பழகும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஊன்றுகோல் இல்லாமல் நடக்கக்கூடாது. புலனடக்கம் கட்டாயம் வேண்டும்.

திருமணம் ஆகாத பெண்களுக்கும், என்னைப் போல் கைம்பெண்களுக்கும் ஊன்றுகோல் இருந்தாலும் போதாது. எங்கள் வாழ்க்கை மலைச்சரிவில் பெருங்காற்றில் நடப்பது போன்றது. நாங்கள் நிமிர்ந்து கைவீசி நடக்க ஆசைப்படவே கூடாது. மண்ணோடு மண்ணாய் ஒட்டிப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டும். இல்லையானால் பெருங்காற்றில் கால் தவறினால் புரண்டு விழுந்து அழிய வேண்டியதுதான்" என்றார் பாக்கியம்.

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையும் வழக்குரை காதையும் எனக்குப் பாடமாக இருந்த பகுதிகள். அவற்றிற்காகச் சிலப்பதிகாரக் கதையை நன்றாகப் படித்தேன். ஆசிரியரும் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். ஆயினும் பாக்கியம் தந்த விளக்கமும் அமைதியும் எனக்குப் புதுமையாக இருந்தன. மூல நூல் படிக்கக்கூடிய பயிற்சியும் அவருக்கு இல்லை; ஆசிரியரின் துணையும் இல்லை. வெறுங்கதையைப் படித்தே இவ்வளவு தெளிவு பெற முடிந்ததே என்று எண்ணி எண்ணி வியந்தேன்.

சன்னலருகே இருந்தபடியே பேசினேன். "சிலப்பதிகாரத்தை நீயே படித்ததுதானே? இவ்வளவு தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறாயே அக்கா?" என்றேன்.

"இல்லை, தம்பி! போன வேனில் விழாவில் இங்கே இரண்டு நாள் சொற்பொழிவுகள் நடந்தன. அப்போது ஒருவர் கண்ணகியைப் பற்றி நன்றாகப் பேசினார். தலைவரும் பேசினார். அப்போது கேட்டதால் தெளிவு ஏற்பட்டது" என்றார் பாக்கியம்.

அது மட்டும் காரணமாக இருக்க முடியாது. இயற்கையான அறிவு வளர்ச்சிக்கு உரிய ஆர்வமும் உழைப்பும் முக்கியமான காரணங்கள் என்று உணர்ந்தேன்.

மறுநாள் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றபோது, ரயில் வண்டியில் அவருடைய அறிவின் சிறப்பை அடிக்கடி எண்ணி வியந்தேன். அந்த வளர்ச்சி, ஓவியன் கைப்பட்டதும் வெறுந்துணி வண்ண ஓவியமாக மாறுவதுபோல் இருந்தது. வெறுங்கல் சிற்பியின் கைத்திறனால் அழகிய சிலையாக மாறுவதுபோல் இருந்தது. இன்னும் உணர்ந்து வியந்து கொண்டிருந்தபோது, மேற்குவானத்தில் கருமுகில்களும் செவ்வொளியும் கூடிப் பலவகைக் காட்சிகள் அமைத்தலைக் கண்டேன். சிறிது நேரத்திற்கு முன் பார்க்கக் கண்கூசும் அளவிற்குக் கதிரவன் காய்ந்து கொண்டிருந்த அந்த வானத்தில் - சிறு சிறு வெண்முகில்கள் தவிர வேறொன்றும் இல்லாதிருந்த அந்த வானத்தில் - இயற்கை இழைத்த அந்தக் காட்சிகள் வியக்கத் தக்கவாறு அமைந்திருந்தன. பாக்கியத்தின் வாழ்க்கையில் விளைந்த இடர்களும் உள்ளத்தின் உயர்ந்த பண்பாடும் கூடி, அவருடைய அறிவை வளர்த்து உயர்த்திவிட்ட விந்தையும் இத்தகையதே என்று உணர்ந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_22&oldid=7902" இலிருந்து மீள்விக்கப்பட்டது