அகல் விளக்கு/அத்தியாயம் 27

எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு மணியார்டர் கொண்டு வந்து கையில் நீட்டினார். "நூறு ரூபாய்" என்றார்.

"எங்கிருந்து?" என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன்.

மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு ரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது? நெல் ஆலை வேகமாக முன்னேறிப் பணம் நிறையக் கிடைத்தது என்று எண்ணுவதா? அல்லது சாமியாரின் ரசவாத வித்தை பலித்து வீட்டில் உள்ள செம்பு இரும்பு எல்லாம் பொன்னாகி விட்டன என்று எண்ணுவதா? என்ன என்று தெரியாமல் வியப்போடு அவன் அதில் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன்.

"அன்புள்ள நண்பா! மன்னிக்க மன்னிக்க மன்னிக்க என்று பல முறை கேட்டுக் கொள்கிறேன். பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பிக் கொடுக்காமல் உன்னைப் பார்ப்பதும் இல்லை என்று நோன்பு கொண்டிருந்தேன். அதனால்தான் இதுவரையில் மறைவும் மவுனமும். பணம் சேர்த்துக் கவலை தீர்ந்துவிடவில்லை; மனம் திருந்திக் கவலை தீர்ந்து விட்டது. கடிதத்தில் விரிவு, அன்புள்ள, மாலன்" என்று எழுதியிருந்தான். அதில் கையெழுத்து இட்டுத் தபால்காரரிடம் கொடுத்தேன்.

அவர் கொடுத்த நூறு ரூபாயும் எண்ணி வாங்கும்போது என் மகள் மாதவி ஓடி வந்து, "அப்பா! அம்மா கூப்பிடுகிறாங்கோ" என்றாள். அவளுடைய பாவாடையும் சொக்காயும் பளபள என்று மின்னுவதையும், அவளுடைய சின்ன நெற்றியில் செந்நிறத் திலகம் பட்டொளி பரப்புவதையும், வாயின் புன்சிரிப்பு என் உள்ளத்தை கொள்ளைக் கொள்வதையும் உணர்ந்தபடியே, "இந்தா! கண்ணு! இதைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு" என்றேன். அவள் அதை எண்ணுவது போல் விரல்களால் புரட்டிக்கொண்டே நடந்தாள். அவளுடைய தலையின் சின்ன கூந்தல் அழகாகப் பின்னப்பட்டிருந்ததையும் தாழம்பூவும் மல்லிகையும் அதற்குத் தூய அழகு தந்து விளங்கியதையும் கண்டேன். "அம்மா! அம்மா! அப்பா ரொம்ப ரூபா கொடுத்தாங்கோ" என்று அவள் சொன்னது கேட்டது.

உடனே அங்கிருந்து என் மனைவி அந்த நோட்டுக்களுடன் விரைந்து வந்து பல்லெல்லாம் தெரிய என் எதிரே நின்று, "பணமே இல்லை, சம்பளம் வந்தால்தான் உண்டு என்று ஏமாற்றினீர்களே? இப்போது மட்டும் எந்தச் செடியிலிருந்து முளைத்தது?" என்றாள்.

மாலன் பணம் அனுப்பியதாகச் சொன்னேன். அயர்ந்து நின்றாள். "அப்படியானால் கற்பகத்துக்கு ஏதோ நல்ல காலம் வரப் போகிறது. வரட்டும். நல்ல பெண் நல்ல படியே வாழ’ணும்" என்று உளமார வாழ்த்தி நின்றாள்.

அன்று அவளை ஊருக்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால் மாதவிக்கு அணிவன எல்லாம் அணிவித்து, தானும் புதிய சேலை உடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இரண்டாம் குழந்தைக்குத் தாய் ஆகும் நிலையில் இருந்தபடியால், வாலாசாவுக்கு அனுப்பும்படியாகப் பெற்றோர் வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். அவர்களுடைய விருப்பப்படியே அன்று பகல் ரயிலில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து, கையில் கொடுத்தனுப்பப் பணம் இல்லாமல் திகைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் தபால்காரர் மணியார்டரோடு வந்து நின்றது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக மகிழ்ந்தேன். மனைவியோ அதில் கற்பகத்தின் நல்வாழ்வையும் கண்டு மகிழ்ந்தாள்.

அவள் மகிழ்ந்ததற்கு ஏற்பவே மாலன் மனம் திருந்திக் கடிதம் எழுதியிருந்தான். அவள் ஊருக்குப் போவதற்கு முன் அந்தக் கடிதம் வந்திருந்தால், அவளுடைய மகிழ்ச்சி பலமடங்கு மிகுதியாகியிருக்கும்.

"நெல் ஆலையை என்னால் தனியே நடத்தமுடியாது என்று தெரிந்து கொண்டேன். அந்த லாரிக்கார நண்பன் முன்வந்து பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இப்போது கூட்டு முயற்சியாக நடைபெறுகிறது. இருந்தாலும் பொறுப்பு அவருடையதே. நான் சம்பளக்காரன் போல் இருந்து அவர் சொன்னபடியே உழைக்கிறேன்.

மாதம் நூற்றைம்பது ரூபாய் குடும்பச் செலவுக்கும் ஐம்பது ரூபாய் பழைய கடன் அடைப்புக்கும் என்று கொடுக்கிறார். அவர் கிழித்த கோட்டை விட்டு விலகாமல் நடக்கிறேன். அதனால் கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு நன்மையாகச் சில மாறுதல்களும் ஏற்பட்டுவிட்டன. மற்றொரு நெல் ஆலைக்காரரின் போட்டி வேகம் தணிந்துவிட்டது. லாரிக்கார நண்பரோடு பகைத்துக் கொள்ள அவரால் முடியாது. ஆகவே வீம்புக்குச் செய்யும் போட்டியை விட்டுவிட்டார்.

நானும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் கவனம் செலுத்துகிறேன். மாமனாரும் கடைசியில் இரண்டாயிர ரூபாய் தருவதற்கு உடன்பட்டுச் சொல்லியனுப்பினார். நீ முதலில் எழுதிய கடிதத்தை நினைவில் வைத்துக்கொண்டு நான் வேண்டா என்று சொல்லிவிட்டேன். ஆனால் கற்பகத்தை இங்கே அழைத்து வருவதற்காகப் பெருங்காஞ்சிக்கு வரப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். ஊருக்கு வந்து நிலபுலங்களைப் பார்த்துக்கொண்டு அங்கேயே வாழுமாறு மாமனார் எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை.

உன்னுடைய அறிவுரையும் எனக்கு வேண்டும். நான் இன்னும் பெருங்காஞ்சிக்கு போகவில்லை கற்பகத்தின் பிடிவாதமான வெறுப்புக்காக அஞ்சி நிற்கிறேன். உன்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போக எண்ணியிருக்கிறேன். நீதான் என் திருமணத்திற்கும் தொடக்கத்தில் உதவியாகக் கடிதம் எழுதியவன். எங்கள் இல்வாழ்க்கை இனிமேல்தான் செம்மையாகத் தொடங்க இருக்கிறது. இதற்கும் நீ முன்வந்து உதவி செய்யவேண்டுகிறேன். நீ வந்து சொன்னால் தான், அவள் பழைய வருத்தத்தை எல்லாம் மறந்து என்னை வரவேற்பாள். நீ மறுக்காமல் வரவேண்டும். அடுத்த வாரத்தில் வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ அங்கே வந்து உன்னை அழைத்து கொண்டு பெருங்காஞ்சிக்குப் போக எண்ணியிருக்கிறேன். வருவேன். மற்றவை நேரில். உன் அன்பன் மாலன்."

இந்தக் கடிதம் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாக்கியது. அதனால் அன்று பிற்பகல் நான் அலுவலகத்தில் வேலையும் அவ்வளவாகச் செய்யவில்லை. பெரிய விருந்து உண்டு மயங்கியவன்போல் பொழுதைப் போக்கிவிட்டு மணி நாலரை ஆனதும் அலுவலகத்தை விட்டு புறப்பட்டேன். முன் வாயிலருகே வந்தபோது, "அய்யா சாமி" என்பதுபோல் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலே வந்தேன். "வேலு" என்பது போலவே இரண்டு முறை கேட்டது.

யாரோ இந்தப் பெயருடையவன் ஒருவனை அழைக்கும் குரல், இதற்காக நம்மைப்போன்ற ஓர் அதிகாரி திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நகர்ந்தேன். மறுபடியும் அதே குரல் இரண்டு முறைகேட்கவே சிறிது திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டே இருந்தேன். "வேலய்யா! வேலு!" என்றதும் நின்றேன். மறுபடியும் நடந்தேன். "அய்யோ மறந்து விட்டாயா? கடவுளே மறந்து விட்டாயா? வேலு!" என்றதும் திகைத்து நின்றேன். சிறிது தொலைவில் ஒருவன் தொப்பென்று தரையில் விழுந்தது கண்டேன்.

எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த ஒருவர், "உங்களைப் பார்த்துத்தான் கூப்பிட்டுக் கொண்டே வந்து கால் தடுக்கி விழுந்துவிட்டார். யாரோ, பாவம்" என்றார். உற்றுப் பார்த்துக்கொண்டே விழுந்தவனை நோக்கி நடந்தேன். குப்புறவிழுந்திருக்கவே யார் என்று தெரியவில்லை. அப்போது அலுவலகத்து வேலையாள் ஒருவன் அந்தப் பக்கம் வந்தான். அவனை நோக்கி, "யார் பார்" என்றேன். அவன் குனிந்து பார்த்து, "யாரோ நோயாளி" என்றான். அதற்குள் பத்துப் பதினைந்து பேர் அங்கே கூடிவிட்டார்கள்.

விழுந்தவனுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு புத்தகம் சிறிது வெளியே வந்திருந்தது. அதை எடுத்துப் பார்க்குமாறு வேலையாளிடம் சொன்னேன். அவன் தயங்கித் தயங்கி எடுத்தான். "திருவருட்பா. சந்திரன் என்று பெயர் எழுதியிருக்கிறான்" என்று அவன் சொன்னவுடனே, "ஆ" என்று திகைத்து அலறினேன். "சந்திரா" என்று குனிந்து அழைத்தேன். குரல் இல்லை.

மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. "அய்யோ! சந்திரா!" என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன்.

காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன். மூர்ச்சை தெளிந்ததும் கண் விழித்துப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. என்னைப் பார்த்து, "வேலு! வேலு!" என்றான். "என்ன சந்திரா?" என்றேன். "வேலு! வேலு! வேலு!" என்று தலைகுனிந்து விம்மினான். "வீட்டுக்குப் போகலாம், வா. அப்புறம் பேசலாம்" என்று பிடித்து டாக்சியில் உட்கார வைத்தேன்" என் பை எங்கே?" என்றான். வேலையாள் தரையிலிருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.

டாக்சியில் வந்தபோது, அவனுடைய அழகிய முகம் பார்க்க அருவருப்பாக மாறியிருந்ததைக் கண்டு வருந்தினேன். தொழுநோய் அவனுடைய, காதுகளையும் மூக்கையும் அழகிய உதடுகளையும் கெடுத்துப் பாழ்படுத்தி அச்சமான தோற்றத்தை உண்டாக்கியிருந்தது. அவனுடைய இனிய குரல் - பெண் வேடம் போட்டு நடித்துப் பாடிப் புகழ்பெற்ற அந்தக் குரல் - கம்மலாய்க் கரகரப்பாய்க் கெட்டும் போனதை எண்ணி வருந்தினேன்.

"அய்யோ! வேலு! உன்னைப் பார்க்கப் போகிறேனா என்று ஏங்கினேன். பார்த்துவிட்டேன் அப்பா, இனி நான் செத்துப் போனாலும் கவலைப் படமாட்டேன். சாகத்தயார்" சாவு வரட்டும், வரட்டும்" என்றான்.

"அப்படி எல்லாம் பேசாதே. கவலைப்படாதே. எங்கே இருந்து வருகிறாய்?" என்று கேட்டேன்.

"திருமணியில் இருந்தேன், அங்கிருந்துதான் வருகிறேன்."

"ஆஸ்பத்திரியிலா?"

"ஆமாம். மருந்து மருந்து ஊசி ஊசி என்று எல்லாம் பார்த்து விட்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. மனம் தாங்கவில்லை. உடம்பும் தேறவில்லை. மனத்தையாவது தேற்றிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன் அப்பா" என்றான்.

டாக்சியிலிருந்து இறங்கியதும், நான் சாவி எடுத்து வீட்டைத் திறந்ததைப் பார்த்து, "வீட்டில் யாரும் இல்லையா?" என்றான்.

"ஊருக்கு அனுப்பியிருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றேன்.

"நல்லதாச்சு. நான் செய்த புண்ணியம், வீட்டில் யாரும் இல்லை. இந்த நோய் அப்படிப்பட்டது அப்பா. எங்கே போனாலும் இருக்கிறவர்களுக்குத் துன்பம் கொடுக்கிற நோய் இது. இரண்டே நாள் இருந்துவிட்டுப் போய்விடுவேன்" என்றான்.

"இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதம் இரு. எனக்கு ஒரு துன்பமும் இல்லை" என்றேன்.

அவன் கட்டியிருந்த ஆடையில் இரத்தக் கறையைக் கண்டேன். என் மனம் அருவருப்பும் கொண்டது; வருத்தமும் கொண்டது. இருந்தாலும், நட்பாய்ப் பழகிய பழைய மனம் வந்து இரக்கம் கொண்டது. நாற்காலியைக் காட்டி "உட்காரு" என்றேன்.

தலையை அசைத்து மறுத்தான். "எனக்கு இங்கே இடம் தகாது; யாராவது வருவார்கள்; பார்ப்பார்கள். உனக்கு என்னால் ஒரு குறைவும் வரக்கூடாது வேலு, தோட்டத்துக்குப் போய் அங்கே ஒரு மூலையில் இருப்பேன். அங்கே வா. இடம் காட்டு" என்று முன்னே நடந்தான். அவனுடைய கால்களைப் பார்த்தேன். நான் பார்த்த வீக்கமும் வெடிப்பும் புண்ணும் என் நெஞ்சைப் புண்ணாக்கின. பார்த்த என் நெஞ்சு வெடிப்புகள் உடையதாய் இரத்தம் கசிவது போல் உணர்ந்தேன். கைவிரல்கள் என் கண்ணுக்கும் படாதவாறு மடக்கி வைத்திருந்தான். தோட்டத்தில் தாழ்வாரத்தில் இடம் காட்டினேன்.

"அய்யோ! இந்த இடம் சுத்தமாக இருக்கிறதே. இங்கே நான் இருக்க வேண்டுமா? வேறு ஏதாவது இடம் மாட்டுத் தொழுவம் போல் ஒன்றும் இல்லையா? ஒரு மூலையாக யார் கண்ணுக்கும் படாத இடமாக இருந்தால் போதும்" என்றான்.

"இங்கே யாரும் வரமாட்டார்கள். கட்டில் பிடித்துப் போட்டுவிட்டால் இங்கேயே இருக்கலாம்" என்றேன்.

"கட்டிலா? எனக்கா?" என்று என்னை நிமிர்ந்து பார்த்த போது என் கண்கள் அவனைப் பார்க்கக் கூசின. "ஒரு பழைய பாய் கொடு. அது போதும். நான் போன பிறகு அதைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடவேண்டும்" என்றான்.

உள்ளே சென்று, ஒரு நல்ல பாயும் மெல்லிய மெத்தையும் ஒரு தலையணையும் கொண்டு வந்தேன்.

"வேலு சொன்னால் கேள். விருந்தாளிக்குக் கொண்டு வருவதுபோல் நல்ல பாயும் மெத்தையும் கொண்டு வருகிறாயே. வேண்டாம்’பா. ஏதாவது கந்தல் கொடுபோதும்" என்றான்.

"என் மனம் கேட்காது. பேசாமல் இரு. மறுக்காதே. என் கடமை இது" என்று வற்புறுத்திப் பாய்மேல் மெத்தை பரப்பி உட்காரச் சொன்னேன். அவன் மெத்தையை நீக்கி விட்டுப் பாய்மேல் உட்கார்ந்தான். "குடிக்கத் தண்ணீர் வேண்டும்" என்றான்.

தண்ணீர் எடுக்கச் சென்றபோது அவன் இரண்டு கைகளாலும் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவனுடைய கைவிரல்களைப் பார்த்து விட்டேன். என்னைக் கண்டதும் அவன் சொரிவதை நிறுத்தி விட்டுக் கைகளை மடக்கிக் கொண்டான். தண்ணீரை நீட்டினேன். "வை கீழே. நான் எடுத்துக் குடிப்பேன். உனக்கு ஏதாவது வேலை இருந்தால் முன்னே போய்ப்பார். அப்புறம் பேசலாம்" என்றான்.

"எனக்கு இப்போது ஒரு வேலையும் இல்லை. உனக்கு வேண்டியதைச் சொல்."

"சாப்பாடு யார் சமைப்பது?"

"வேலைக்காரன் வருவான். ஓட்டலிலிருந்து எடுத்து வந்து கொடுப்பான்."

"சரி போதும்."

நான் உட்கார முயன்றேன்.

"நீ ஏன் இங்கே உட்காரணும். என் அழகைப் பார்க்கணுமா? வேண்டா, வேண்டா, போ" என்று தடுத்தான்.

"அப்படி எல்லாம் சொல்லாதே. உன் அழகையும் பார்த்தேன். உன் துன்பத்தையும் பார்க்கிறேன். என்ன செய்வது?" என்று உட்கார்ந்தேன்.

"வேலு!" என்று தரையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.

"தண்ணீர் குடிக்கவில்லையே" என்றேன்.

"உன் எதிரில் இந்தக் கைகளை நீட்டித் தண்ணீர் எடுப்பதற்கு மனம் வரவில்லை, அப்பா. நான் செய்த வினை அப்பா, வினை!"

"புதிய இடத்தில் அச்சப்பட்டுத் தயங்குவதைப்போல் இங்கே இருக்காதே. நோய் வந்துவிட்டது. உன் அழகைப் பாழாக்கிவிட்டது. என்ன செய்வது? நான் பார்க்கிறேன் என்று இப்படித் தயங்கினால் இங்கே நீ வந்து பயன் என்ன? உன் உடம்புக்குத் தகுந்தபடி நடந்துகொள். கைகாலை நீட்டி வசதியாக இரு" என்றேன்.

"வசதியா? எனக்கு இன்னும் வசதி வேண்டுமா?" என்று இருமினான்.

அவன் இருமுவதைக் கேட்கத் துன்பமாக இருந்தது.

"மருந்து வாங்கி வருகிறேன். என்ன மருந்து, எதற்கு என்று சொன்னால்."

"மருந்தா? இனிமேல் ஒரே மருந்துதான் தேவை; சாவுக்கு மருந்து."

என் மனம் வாடியது. "நீ இங்கே இருக்கும் வரையில் சாவு இது அது என்று ஒரு பேச்சும் பேசக்கூடாது. இப்படிப் பேசினால் எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா?" என்றேன்.

"சந்திரன் இப்படி ஆவான். உடம்பெல்லாம் புண்ணாய் சீழும் இரத்தமுமாய் உன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்தாயா?" என்று சொல்லிக்கொண்டே தண்ணீரை எடுத்துக் குடித்தான். பிறகு, "எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் வேறே யார் வீட்டுக்குப் போவேன்?" என்று கலங்கினான்.

அவனுடைய வீட்டாரைப் பற்றிப் பேசலாம் என்று எண்ணினேன். அந்தப் பேச்சால் அவனுடைய மனம் மேலும் என்ன துன்பப்படுமோ என்று தடுத்துக் கொண்டேன். அவனாகவே அவர்களைப் பற்றிப் பேசும் வரையில் காத்திருப்போம் என்று இருந்தேன்.

தரையைப் பார்த்தபடியே எதையோ சிந்தித்து ஒரு முறை தலை அசைத்தான். வந்தவன் சிறிது களைப்பாறட்டும். புதிய இடத்தில் மனமும் அமைதியுறட்டும் என்று அவனைத் தனியே விடும் நோக்கத்தோடு எழுந்தேன்.

"ஆமாம். ஏதாவது வேலை இருக்கும், போய்ப்பார். நானும் கொஞ்சம் படுத்துக்கொள்வேன். களைப்பாக இருக்கிறது" என்றான்.

"இரண்டு பழம் கொண்டு வருவேன். தின்றுவிட்டுப் படுத்துக்கொள்" என்று மலைவாழைப்பழமும் உலர்ந்த திராட்டையும் கொண்டு போனேன்.

மலைவாழைப்பழம் தின்று, மறுபடியும் தண்ணீர் கேட்டுக் குடித்து விட்டுப் படுத்தான்.

சிறிது நேரத்தில் வேளையாள் வந்தான். இரண்டு பேருக்குக் காப்பி வாங்கி வருமாறு சொன்னேன். காப்பி வந்ததும் நானே ஒரு குவளையில் கொண்டு போனேன். சந்திரன் குறட்டை விட்டுத் தூங்குவதைக் கண்டு எழுப்பாமல் திரும்பினேன்.

வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்" என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. "அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் அய்யா இன்று வரமாட்டாராம் என்று சொல்லி விடு" என்றேன்.

வேலையாள் சென்ற பிறகு தோட்டத்திற்குத் திரும்பி வந்து பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்த சந்திரனுடைய முகம், நாற்பது ஐம்பது வயதுள்ள ஒருவனுடைய முகம்போல் இருந்தது. இளமையின் சாயலே இல்லாமல் அந்த முகத்தை நோய் மூடியிருந்தது. கால் விரல்களையும் கை விரல்களையும் நன்றாகப் பார்த்தேன். என் உள்ளத்தில் முன் இருந்த அருவருப்புச் சிறிதும் இல்லாமல் மறைந்து, இரக்கம் மட்டுமே நின்றது. பார்த்துப் பார்த்து வருந்தினேன்.

தொடக்கப் பள்ளியில் நான் படித்திருந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஒருவர் எப்படியோ தொழு நோய்க்கு ஆளானார். தொழு நோய் அவருடைய முகத்திலும் கை கால்களிலும் உருவெடுத்தபோது நான் உயர்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டேன். அப்போது அவர் எதிரே வரப்பார்த்ததும் நான் பேசாமல் ஒதுங்கிவிடுவேன்.

அவருடைய கண்ணுக்குப் படாத படி சிறு சந்துகளின் வழியாகத் திரும்பிச் சென்று விடுவேன். வழக்கமாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் அன்பும் பணிவும் உடையவனாய் நடந்த நான் அந்த ஓர் ஆசிரியரிடம் மட்டும் அவ்வாறு நடக்க முடியாமற் போயிற்று. அவரே ஒருநாள் வீட்டுக்கு வந்து, "வேலு" என்று கூப்பிட்டார். வந்து பார்த்தபோது அவர் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு தொலைவில் இருந்தபடியே பேசிவிட்டுப் போய்விட்டேன். அவர் உட்கார்ந்திருந்த திண்ணைமேல் மூன்று வாளித் தண்ணீர் கொட்டிக் கழுவச் செய்தேன். அதன் பிறகும் அந்தத் திண்ணை மேல் உட்காராமலே இருந்தேன். அவ்வாறு அளவுக்குமேல் பயந்திருந்த நான் இப்போது சந்திரனோடு நெருங்கிப் பழகுவதோடு அவனை வீட்டிலேயே வைத்துப் போற்றும் படியாகவும் நேர்ந்ததை எண்ணினேன்.

திரும்பி வந்து என் அறையில் உட்கார்ந்தபடி என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபோது அவன் இருமும் ஒலி கேட்டது. எட்டிப் பார்த்தேன். அவன் அசைவதைக் கண்டு, காப்பி எடுத்துச் சென்றேன். முதுகைச் சொரிந்து கொண்டிருந்த அவன் என்னை நிமிர்ந்து பார்த்து, "என்னால் உனக்குப் பெரிய துன்பம்" என்றான்.

காப்பி குடித்த பிறகு, "உன் தங்கையின் திருமணத்திற்கு நான் ஊருக்கு வந்தபோது, உன் காதுகளைப் பார்த்துச் சந்தேகப்பட்டுச் சொன்னேன்."


"ஆமாம். என் மூக்கிலும் மினுமினுப்பு மிகுதியாக இருந்ததாகச் சொன்னாய்; சொன்னாய்; மெய்தான். நான் கொஞ்சமும் சந்தேகப்படவில்லையே. மேலும் மேலும் ஆட்டங்கள் ஆடினேன். மேலும் மேலும் உடம்பைக் கெடுத்துக் கொண்டேன். வைத்தியர் பார்த்து, மேகம் என்று சொன்னாரே தவிர, இந்த மேகம் இப்படித் தொழுநோயாக முற்றும் என்று சொல்லவில்லை. யாரோ ஒரு பைத்தியக்காரன் என்னைக் கெடுத்தான். உடம்பில் இந்திரியம் தேங்கிப் புளிப்பதால்தான் இப்படி மேகம் ஏற்படுகிறது என்று பொய் சொல்லிக் கெடுத்தான்.

வெறி பிடித்த நாய்க்குச் சாராயம் ஊற்றியது போல ஆயிற்று. இந்திரியம் உடம்பில் தேங்காமல் வெளிப்பட வேண்டும் என்று கண்ட பெண்களை எல்லாம் தேடினேன். நல்லவள் கிடைப்பாளா? கெட்டு அழுகிப் போனவள்தான் நினைத்தவுடன் கிடைக்கிறாள். தப்பித்தவறி நல்லவள் ஏமாந்து கிடைத்தால், அவளையும் அழுகல் நோய் உடையவளாகச் செய்து ஒழித்தேன். நான் செய்தது கொஞ்சமான கொடுமையா? அப்போது தெரியலையே" என்று தலையை இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டான்.

என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. சந்திரனோ, உள்ளம் திறந்து தன் குற்றங்களைச் சொல்லி ஆறுதல் பெற முயன்றான்.

"அதன் பிறகு, என் நோய் எனக்கே தெரியத் தொடங்கியது. விரல்களில் மினிமினுப்பு ஏற்பட்ட பிறகும் தெரிந்துகொள்ளவில்லை. நகங்களைச் சுற்றி, கணுக்களைச் சுற்றித் தடிப்பு ஏற்பட்டபோது உடம்பெல்லாம் தடிப்பும் தழும்பும் ஏற்பட்டபோது உணர்ந்து கொண்டேன். அந்த ஏமாந்த பெண் - என் மனைவி - உடம்பெல்லாம் இப்படி இருக்கிறதே. மருத்துவரிடம் கவனிக்கக் கூடாதா, கவனிக்கக் கூடாதா, என்று நாலைந்து நாள் முறையிடத் தொடங்கினாள். "சே! கழுதை! வாயைமூடு" என்று அவளை அடக்கிவிட்டேன். மருத்துவரிடம் போனேன். சொல்லிவிட்டார்."

இப்படிச் சொல்லி நிறுத்தித் தனக்குத்தானே தலையை அசைத்துக் கொண்டான். நான் ஊம் கூட்டவும் இல்லை. அமைதியாக நின்றேன்.

"என் கதையை இன்னும் கேட்கணுமா?" என்றான். அதற்கும் பேசாமல் இருந்தேன். "ஏன் வேலு, நிற்கிறாய்? கேட்கணுமா என் கதையை? சரி சொல்கிறேன் கேள். அதற்குத் தானே நான் இங்கே வந்தேன்? ஆமாம், சொன்னால்தான், என் மனம் சுத்தமாகும், சுத்தமாவது ஏது? பளு குறையும் பாவ மூட்டையைக் கொஞ்சம் இறக்கி வைத்தாற்போல் இருக்கும். வேறு யாரிடம் சொல்வேன். யாரிடம் சொன்னால் எனக்கு ஆறுதல் ஏற்படும்? அதற்குத்தான் உன்னைத் தேடி வந்தேன்" என்று சொல்லிக்கொண்டே இருமினான். இருமலுக்குப் பிறகு மார்பைப் பிடித்து அழுத்திக் கொண்டான். பெருமூச்சு விட்டான். முகத்தில் வியர்வையைத் துடைத்தான். தலையைச் சொரிந்து கொண்டான்.

"அப்புறம் என்ன? இன்னொரு படுபாவி வந்து சேர்ந்தான்; பக்கத்து ஊரான். அவன் என்னைப் போல் நோயாளி. உனக்குமா இது வந்துவிட்டது" என்றான். "விதி" என்றேன். "இதற்கு ஒரு வழி சொல்கிறார்கள். செய்வாயா?" என்றான். நீ செய்து பலன் கண்டாயா? என்றேன். "என்னால் முடியாது. கையில் காசு இல்லை. உனக்குப் பணம் இருக்கிறது நீ செய்யலாம் என்றான்.

"கன்னிப் பெண்ணின் உறவு ஏற்பட்டால் இந்த வெப்பு அடங்கி விடும்" என்றான். நான் நம்பவில்லை. பட்டணத்தில் ஒரு படித்த பணக்காரர் இருக்கிறார் என்று அவருடைய கதையைச் சொன்னான். அவருக்கு இந்த நோய் வந்துவிட்டதாம். பெரிய பணக்காரராம், பெரிய பங்களாவாம். ஒரு கூட்டாளியைப் பிடித்தாராம். அந்தக் கூட்டாளி அழகாக இருப்பானாம். அவனைக் காட்டி அவனுக்காக என்று சொல்லி இளம் பெண்கள் பலபேரை காசு கொடுத்து மயக்கிக் கொண்டுவரச் செய்தாராம். என்ன என்னவோ சொன்னான். நான் நம்பிவிட்டேன்.

எண்ணிப் பார்க்காமல் நம்பி விட்டேன். அந்தப் பணக்காரப் பாவிக்கு நோய் போய் விட்டதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யாமலே நம்பி விட்டேன். ஆசுபத்திரிக்குப் போன பிறகு அந்தப் பணக்காரனைப் பற்றிச் சிலரிடத்தில் என்னைப்போல் நோயாளிகளிடத்தில் சொன்னேன். அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். சுத்தப் பிதற்றல் என்று சொன்னார்கள். அந்தப் பணக்காரன் அதே நோயால் அழுகி அழுகி முகமெல்லாம் கெட்டு அழிந்து செத்தான் என்று சொன்னார்கள். நான் அப்படி ஆராய்ந்து பார்க்கவில்லை.

பக்கத்து ஊரான் சொன்னதைக் கேட்டு நம்பிவிட்டேன், நிலத்தின்மேல் கடன் வாங்கத் தலைப்பட்டேன். காசை வாரி இறைத்தேன். சில ஏழைக் குடும்பங்களைக் கெடுத்தேன், கெடுத்தேன். அய்யய்யோ! வேலு! இந்தப் பாவத்துக்கு நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன் வேலு! நினைத்தால் மனம் பகீர் என்கிறதே" என்று கவரில் தலையை மோதிக்கொண்டு அழுதான். "அய்யய்யோ" என்று தலையைச் சுவரிலிருந்து எடுத்தபோது, தலையில் ஒரு புண்நைந்து இரத்தம் கசிந்தது.

"என்ன சந்திரா! நீ சும்மா இருக்கமாட்டாயா? இப்படியா தலையை மோதிக்கொள்ள வேண்டும்" என்று புண்மருந்து எடுத்துவரச் சென்றேன்.

திரும்பியபோது, அவன் ஒரு கந்தலால் தலையைத் துடைத்துக் கொண்டிருந்தான். என் கையில் மருந்து இருந்ததைப் பார்த்து, "மருந்து எடுத்துவந்தாயா?" அதைவிடப் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியை எடுத்து வந்து ஒவ்வொரு புண்ணிலும் குத்தினாலாவது என் பாவம் தீருமே" என்றான்.

"நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே" என்றேன்.

"எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? அதோ நினைவு வருகிறதே ஓர் ஏழைப் பெண், என்னால் சீரழிந்த பெண், என்னைப் போல் நோயாளி ஆய்விட்டாளே! அவளுக்கும் தொழுநோய் வந்துவிட்டதே. என்னால் எத்தனை குடும்பங்களில் இது பரவப் போகிறதோ! நான் மட்டுமா அழிந்தேன்? ஊரையும் கொஞ்சம் அழித்து விட்டுத்தானே வந்தேன்" இவ்வாறு சொல்லிச் சிறிது அமைதியானான்.

சரி, போகலாம் என்று அசைந்தேன். மறுபடியும் பேசத் தொடங்கினான்: "ஒன்று நல்லதாச்சு. என் பொண்டாட்டி போய்விட்டாள். நல்லதே செய்தாள். இருந்து நோயால் அழியாமல், தானே செத்து மறைந்தாள்" என்று அமைதியான குரலில் சொன்னான். அப்போது மட்டும் அமைதி இருந்த காரணம் என்ன, ஒருவேளை அந்தத் தற்கொலையைப் பற்றிய பயம் காரணமோ என்று எண்ணினேன். "அடடா! என்ன பாடு படுத்தினேன் அவளை! நல்ல கேள்வி கேட்டாள் என்னை! நீ படித்தவனா என்று சரியான கேள்வி கேட்டாள். எனக்குத் தகும் தகும். நான் படித்தவனா? படிப்பு எங்கோ போச்சு. எப்போதோ போச்சு! படித்தவனா நான்? நான் படித்தவனே அல்ல. நான் ஒரு முட்டாள். இப்போது உணர்கிறேன். அவள் சொன்னபோது உணரவில்லை. இப்படிக் கேட்டாளே என்று அடித்தேன். தடி எடுத்து அடித்தேன். ஆத்திரம் தீர அடித்தேன். அவளும் தன் ஆத்திரத்தை அந்தக் கிணற்றின் அடியில் போய்த் தீர்த்துக்கொண்டாள். வேலு! உனக்குத் தெரியுமா இது?" என்றான்.

நான் பேசாமல் நின்றேன். "தெரியுமா வேலு!" என்று என் முகத்தை பார்த்தான்.

"தெரியும்" என்றேன்.

"உனக்கு மட்டுமா? அம்மாவுக்கும் தெரியுமா?"

நான் பேசவில்லை.

"சொல்லு வேலு! இப்போது சொன்னால் என்ன, சொல்லு வேலு! அம்மா அப்பா எல்லார்க்கும் தெரியுமா?" என்று விடாமல் கேட்டான்.

"தெரியும்" என்றேன்.

"தெரியுமா!" என்று முதலில் மெல்லத் தலையை ஆட்டினான். பிறகு எங்கிருந்தோ உணர்ச்சி மேலிட்டு வந்து அவனை ஆட்டி வைத்தது. "அய்யோ! அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! நான் பொண்டாட்டியைக் கொன்றுவிட்டேன் என்று அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! என்னைப் பற்றி என்ன எண்ணினார்களோ, என்ன எண்ணினார்களோ? அய்யோ! அய்யோ!" என்று உடம்பெல்லாம் நடுங்கிக் கதறினான்.

சந்திரன் இப்படி உணர்ச்சி வசப்பட்டுக் கலங்கியதையும் கதறியதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. "பழைய கதையை எல்லாம் நினைத்து ஏன் மனத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறாய்? வேண்டா. சும்மா இரு" என்று அப்பால் நகர்ந்தேன்.

"பழைய கதையா? நான் நினைக்கிறேனா? அது போக’லையே! மனத்தை விட்டுப் போக’லையே! நான் என்ன செய்வது?" என்று இருமத் தொடங்கினான்.

இரவு எட்டு மணிக்கு வேலைக்காரன் உணவு கொண்டு வந்ததும்; ஒரு பகுதி உணவைத் தனியே எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பகுதியை அந்த உணவுத் தூக்கிலேயே வைத்திருக்கச் சொன்னேன். வேலைக்காரனை விட்டுச் சந்திரனுக்கு உணவு இடச் சொல்லலாம் என்றால் அவனுடைய நொந்த மனம் என்ன நினைத்து வருந்துமோ என்று எண்ணினேன். நான் முன்னே சாப்பிட்டுவிட்டுப் பிறகு அவனுக்குப் போடலாம் என்றால், அதற்கும் மனம் வரவில்லை. வேலைக்காரனை அனுப்பிவிட்டேன். நானே உணவை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றேன். சந்திரன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான், "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.

"வேலு! அம்மாவை நினைத்துக் கொண்டேன்'பா. எவ்வளவு அன்பான மனம் அப்பா! மறுபடியும் எப்போடா பார்க்கப் போகிறேன்? நீலகிரியிலிருந்து நான் வந்த பிறகாவது அம்மா செத்திருக்கக் கூடாதா? அம்மா இருந்திருந்தால் இவ்வளவு கெட்டுப் போயிருக்க மாட்டேன் அப்பா! ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அப்பா வேலு!" என்று மறுபடியும் கண்ணீர் விட்டு அழுதான். நான் ஆறுதல் சொன்னேன்.

"உன்னால் ஆறுதல் பெறலாம் என்றுதான் வந்தேன்’பா. ஆனால் இங்கே வந்த பிறகுதான் என் மனத்தில் மறைந்து போயிருந்த பழைய நினைவுகள் எல்லாம் புறப்பட்டு வருகின்றன. நான் என்ன செய்வேன் வேலு? என்னால் தாங்க முடியலையே! உடம்பின் எரிச்சல் தினவு பாதை எல்லாம் அடங்கிப் போயிருக்கிறாற் போல் தெரிகிறது. என் மனத்தில்தான் இப்போது எல்லாத் துன்பமும் சேர்ந்துவிட்டது. தாங்க முடியவில்லையே" என்று பொருமினான்.

சாப்பிடச் சொன்னேன். ஒரு சொல்லும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான். நான் இலை எடுத்துப்போட முயன்றபோது, "வேலு! உனக்கு இந்த வேலையும் வைக்கணுமா! இந்த ஒன்று மட்டும் நான் செய்கிறேன்’பா" என்று தானே இலையைச் சுருட்டி ஒரு மூலையில் எறிந்தான்.

கைகழுவ நீர் விட்டேன். கையைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், "அப்பா, வேலு! அம்மாவுக்குப் பிறகு என் மனைவி அன்பாகத்தான் சோறு போட்டாள். நான் சாப்பிட்டு முடிகிற வரைக்கும் என் எதிரில் நின்றது நின்றபடி இருப்பாள். ஒரு நாளாவது உட்காரு என்று நான் சொன்னதே இல்லை. அன்பாகத்தான் சோறு போட்டாள். ஆனால் நான் அன்பு காட்டவில்லை. அடக்குமுறைதான். பயந்து நடுங்கினாள். நான் கொஞ்சம் அன்பு காட்டியிருந்தேனோ, அம்மாவுக்கு மேல் இருந்திருப்பாள், கொடுமை செய்துவிட்டேன். கொஞ்சம் அன்பு காட்டியிருந்தால், இப்போது எவ்வளவோ உதவியாக இருந்திருப்பாள், எனக்காக உயிரையும் கொடுத்திருப்பாள். ஆமாம் எனக்காகத்தான் உயிரையும் கொடுத்தாள்" என்று மெல்லச் சொல்லி அடங்கினான்.

இன்னும் இருந்தால் ஏதாவது பேசிக்கொண்டு வருந்துவான் என்று, "சாப்பிடப் போகிறேன்" என்று சொல்லி நகர்ந்தேன். அவன் நான் சொன்னதைக் கவனிக்கவில்லை. ஏதோ சிந்தையில் இருந்துவிட்டான்.

நான் உண்டு முடித்தபிறகு, தண்ணீர் வேண்டுமா என்று கேட்டுவரச் சந்திரனிடம் சென்றேன். "தண்ணீர் வேண்டுமா?" என்றேன். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சிறிதுநேரம் கழித்து, அவனுடைய குரல் கேட்டது. சென்று பார்த்தேன். உறங்கிக் கொண்டே இருந்தான். தாழ்வாரத்தில் மெல்ல நடந்தபடி இருந்தேன். என்னென்னவோ சொல்லி உறக்கத்தில் வாய் பிதற்றிக் கொண்டிருந்தான். திருப்பி வந்துவிட்டேன்.

நான் படுக்கச் செல்லுமுன், அம்மா அப்பா என்று சந்திரன் பெருமூச்சு விடும் குரல் கேட்டது. சென்று, "என்ன வேண்டும்?" என்று கேட்டேன். "தண்ணீர் கொடு! உடம்பு கனகன என்று இருக்கிறது. இங்கும் அங்கும் அலைந்தது உடம்புக்கு ஆகவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது" என்றான்.

"கொஞ்சம் இரு. வெந்நீர் வைத்துக் கொண்டுவருவேன்" என்று அங்கிருந்து வந்து மின்சார அடுப்பில் தண்ணீரைக் காய்ச்சிக் கொண்டுபோனேன். குடித்து "அப்பா!" என்று சோர்ந்து படுத்தான். அவனுடைய மனம் அப்பாவை நினைக்கிறதோ இல்லையோ, வாய் அடிக்கடி சொல்கிறது; அவர் மகனைப் பற்றி மனத்தில் அடிக்கடி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு கிராமத்தில் இருக்கிறார்.

தெரிந்தால் வந்துவிடுவார் என்று எண்ணிக் கொண்டே படுக்கச் சென்றேன். சந்திரனுடைய காய்ச்சலை எண்ணி வருந்தினேன். உடம்பின் அலைச்சல் காரணம் என்று சொன்னான். உள்ளத்து உணர்ச்சி வேகமே காரணம் என்று எனக்குத் தோன்றியது. நாளை முதல் இப்படிப்பட்ட வேகமான பேச்சுக்கு இடம் தரக்கூடாது; நான் அங்கே நின்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்று எண்ணியபடியே உறங்கிவிட்டேன். நள்ளிரவில் ஒருமுறை விழித்து எழுந்துபோய்ப் பார்த்தேன். உடம்பில் இன்னும் காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்க்க அணுகினேன்.

தொடாமலே பின் வாங்கி வந்துவிட்டேன். காலையில் அவனுடைய குரல் கேட்டு விழித்தேன். "விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது" என்ற அருட்பாவை அவன் உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்தான். பாட்டைக் கேட்டு என் மனமும் உருகியது. அவன் விருப்பம்போல் பாடிக்கெண்டு ஆறுதல் பெறட்டும் என்று ஒருவகை ஒலியும் செய்யாமல் அங்கே போகவும் போகாமல் இருந்தேன். அரைமணி நேரம் கழித்து பாடுவது நின்றது. அப்போது அணுகி காய்ச்சல் இல்லையே?" என்றேன் "நின்றுவிட்டது" என்றான். என் மனம் மகிழ்ந்தது.

"ஊரில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? நீ ஒன்றுமே சொல்லலையே?" என்றான்.

"நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது" என்றேன்.

"அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் அமைதியாக இருக்கிறது. அழுவது நல்லது, மிக மிக நல்லது வேலு" என்றான்.

"ஊரில் எல்லாரும் நல்லபடி இருக்கிறார்கள். அப்பா இருக்கிறார். தங்கை கற்பகம் இருக்கிறாள்" என்றேன்.

"ஏன்? இன்னும் மைத்துனன் வந்து அழைத்துப் போகாமலே இருக்கிறானா?"

"இல்லை, இப்போது அன்பாக இருக்கிறார்கள். மாலன் முன் போல் இல்லை. மனம் திருந்திவிட்டான்."

"அப்பா! நல்ல செய்தி சொன்னாய் அப்பா. என் வயிற்றிலே பால் வார்த்தாற் போல் இருக்கிறது. நல்லபடி இருக்கட்டும்; போ. கற்பகத்தின் வாழ்க்கையும் கெட்டுப் போகுமே என்று பயந்தேன். ஆசுபத்திரியில் இருந்தபோது அவளைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டேன். நல்லபடி வாழணும்" என்றான்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மிக அமைதியாகப் பேசினான். பழைய சந்திரனுடைய அறிவின் தெளிவை அந்தப் பேச்சில் கண்டேன்.

"வேலு! எனக்கு ஒன்று தோன்றுகிறது. எனக்கு இளமையிலேயே காம உணர்ச்சி மிகுதியாக இருந்தது. என்னைப்போல் எத்தனையோ பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா?" என்றான்.

"ஆமாம். உடல்நூல் அறிஞர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அறிவின் ஆற்றல் மிகுதியாக உள்ளவர்களுக்கு இந்த உணர்ச்சியும் மிகுதியாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு போனால் அவர்கள் சிறந்த அறிஞராக விளங்குவார்களாம்" என்றேன்.

"அது சரி. அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெண்ணின் அன்பு இல்லாமல் பட்டினி போட்டால் கெட்டுப் போவார்களே, நான் அப்படித்தான் கெட்டொழிந்தேன். பழங்காலத்தில் போல பதினெட்டு இருபது வயதில் திருமணம் முடித்துவிட்டால்-"

"படிப்புக்கு இடையூறாகப் போய்விடும். வளர வேண்டிய திறமை வளராமலே போய்விடுமே. அது பெரிய இழப்பு அல்லவா?"

"அதுவும் உண்மைதான்" என்று தெளிவாகச் சொல்ல முடியாமல் அவனுடைய தொண்டை கரகரத்தது. கனைத்தான். உடனே இருமல் வந்தது. மார்பைத் தடவிக் கொண்டான். பிறகு தொண்டையை ஒருவாறு சரிப்படுத்திக் கொண்டு, "பெண்களின் அன்பைப் பெற முடியாமல் தடுக்கும்போது, அவர்களின் அழகும் கண்ணில் படாதவாறு தடுக்கவேண்டும். அதை செய்யாமல்-" என்று சொல்லி நிறுத்தினான். பிறகு "சிலர் முகமூடி போட்டு மறைப்பதும் இதற்குத்தானோ, என்னவோ? துறவியாகும் பெண்களையும் விதவைகளையும் மொட்டை யடிக்கும் வழக்கமும் உலகத்தில் இருக்கிறது. ஆமாம், பெண்ணின் அழகு பொல்லாதது. கெடுத்துவிடும் என்று பயந்து தான் செய்திருப்பார்கள்."

"இருந்தாலும் நாகரிகம் அல்ல."

"அது சரி. ஒப்புக் கொள்கிறேன். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? என் பழைய வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கல்லூரியில் படிக்கும்போது அந்தப் பெண்ணின் அன்பு கிடைத்தவரையில் கெடாமல் இருந்தேன். நீலகிரியில் அந்தத் தேயிலைத் தோட்டத்திலும் ஒருத்தியின் அன்பு கிடைத்தது. ஒழுங்காகத்தான் இருந்தேன். அவள் முரட்டுப் பெண். முரட்டுப் பெண்ணாக இருந்தாலும், அன்பில் முரட்டுத் தன்மை ஏது? எங்கள் ஊர்தான் என்னைக் கெடுத்துவிட்டது."

இவ்வாறு அவன் சொன்னபோது, ஊர் அல்ல. ஊரில் இருந்த செல்வம், அதிகாரச் செருக்கு, காசுதான் காரணம் என்று அப்போது எனக்குள் எண்ணிக் கொண்டேன்.

"அவர்கள் நானாகத் தேடிப்போன பெண்கள். என் மனைவி அப்படி நான் தேடியவள் அல்ல. அவள் வரும் போதே பயந்து வந்தாள். நான் அவளிடம் அன்பைப் பெறவில்லை. பயத்தைத்தான் பெற்றேன்."

அவன் முதலில் அன்பைத் தராமல் அதிகாரத்தைக் காட்டியிருப்பான். அதுதான் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.

"ஊரில் கண்ட பெண்களோடு பழகினேன். அவர்கள் பயந்து பயந்து வந்தார்கள். அது ஒரு வாழ்வா! சே! ஊர்ச்சோற்றைத் திருடி உண்பது ஒரு வாழ்வா? நம் உரிமையான உணவு ஆகுமா? இப்படி என்னைப்போல் எத்தனை பிள்ளைகள் கெடுகிறார்களோ என்று எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் பெண்ணன்பு பெறும் வரையில் பெண்ணழகு கண்ணுக்குத் தோன்றாமலே இருந்தால் நல்லது என்று கருதுகிறேன்" என்றான்.

மறுபடியும் அவனே பேசத் தொடங்கினான் "அல்லது, ஐரோப்பியர்களைப் போல் அமெரிக்கர்களைப்போல் நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும். ஆண்களையும் பெண்களையும் இளமையில் பழகவொட்டாமல் பூச்சி பூச்சி என்று பயபடுத்திப் பிரிப்பதை விட்டுவிட வேண்டும். அழகுப் பசி இயற்கையாக இருக்கிறது.

அப்படி இளமையில் கலந்து பழக நிறைய வாய்ப்புகள் இருப்பதால் ஐரோப்பிய இளைஞர்கள் அழகைக் கண்டு கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். இங்கே இயற்கையான பசியை அடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமா நாடகங்களில் அழகும் அலங்காரமும் இருப்பதால், அந்தப் பசி மறைமுகமாகத் தூண்டிவிடப்படுகிறது. சமுதாயத்திலோ பார்த்துப் பேசியும் பழகுவதற்கும் வாய்ப்பு இல்லை. இயற்கையான உணர்ச்சிகளை அடக்குவதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர் கெட்டுப்போகிறார்கள்" என்றான்.

"ஆண்கள் அழகாக இல்லையா? அழகான ஆண்களோடு பழகி அந்த அழகுப்பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூடாதா?" என்றேன். வேண்டும் என்றே கேட்டேன்.

"நீ பெரிய பைத்தியக்காரன்! இயற்கை அப்படிப் படைத்திருக்கிறது. ஆணின் கண்ணுக்குப் பெண்கள் தான் அழகாக இருப்பார்கள். தெருவில் ஏழெட்டுப்பேர் ஆண்களும் பெண்களும் போவதைப் பார்க்கிறாய். யாரை நன்றாகப் பார்ப்பாய்? பெண்களே போகாவிட்டால் ஆண்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்போது ஆண்களின் அழகு உன் கண்ணுக்குப் புலப்படாது. அப்படியே தான் பெண்களுக்கும், இயற்கை ஏற்படுத்திய கவர்ச்சி அது. நாய்க்கு இறைச்சியைப் பார்த்தால்தான் வாயில் நீர் ஊறும். பசுவுக்குப் புல்லைப் பார்த்தால்தான் வாய் ஊறும். அதுபோல்தான்" என்றான்.

இவ்வளவு அமைதியாக அறிவாகப் பேசுகிறானே என்று வியந்தேன். நேற்றோடு அவனுடைய கதறலும் அழுகையும் உணர்ச்சியும் முடிந்தன என்று மகிழ்ந்தேன்.

ஆனால் மலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது, முன் நாள் போலவே உடம்பைச் சொரிந்து கொண்டும் தலையை அசைத்துக் கொண்டும் அமைதி இல்லாமல் இருந்தான். காப்பி குடித்துக் கால்மணி நேரம் ஆனதும், பெருமூச்சும் அய்யோ என்ற குரலும் கேட்டன. "வேலு! நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்? என்னால் இனிமேல் யாருக்கு நன்மை ஏற்படப்போகிறது? பெற்ற தாய் இல்லை. தந்தை முகத்தில் நான் விழிக்கப்போவதில்லை. கட்டின மனைவியும் இல்லை. ஏன்'பா இந்த வாழ்வு?" என்று கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான்.

சிறிது நேரம் அமைதியானேன். ஏதோ பழைய நிகழ்ச்சியை நினைத்துக்கொண்டு குமுறுகிறான் என்பது முகக்குறிப்பால் தெரிந்தது. "நம் தோட்டத்தில் சொக்கான் என்று ஒருத்தன் இருந்தானே, நினைவு இருக்கிறதா? ஏழைக் குடும்பம். அவனுடைய பெண் அழகாக இருந்தாள். பக்கத்து ஊரில் கொடுத்திருந்தான். நான் அந்தக் குடும்பத்தையும் கெடுத்தேன். அப்போது பாவம் என்ற எண்ணமே இல்லாமல் பணம் கொடுத்து ஏமாற்றிவிட்டேன். அப்பா கேள்விப் பட்டிருந்தால், என்னைப் பற்றி என்ன நினைப்பார்? இப்படிப்பட்ட கெட்ட வழி அப்பாவுக்குத் தெரியவே தெரியாது. அந்த உத்தமர் வயிற்றில் பிறந்த நான், எவ்வளவு அநியாயம் செய்தேன். நான் ஏன் அந்தக் குடும்பத்தில் பிறந்தேனோ, அய்யய்யோ!" என்று ஒரு பேதைப் பெண் போல் புலம்பினான்.

உடனே, "அப்போதே அதற்குத் தண்டனையும் அனுபவித்தேன். ஒருத்தி என்னை ஏமாற்றினாள். இரண்டு பவுனில் சங்கிலி ஒன்று செய்து போட்டால் சரி என்று ஒருத்தி ஒப்புக் கொண்டாள். மனைவி கழுத்தில் நாலு பவுன் சங்கிலி ஒன்று இருந்தது. அதைக் கழற்றிக் கொண்டு போனேன். அவளுடைய குடிசையில் அவள் சொன்ன நேரத்தில் நுழைந்து சங்கிலியைக் கொடுத்து விட்டுப் பேசிக் கொண்டிருந்தேன். வெளியேயிருந்து அவளுடைய கணவனும் இன்னொருத்தனும் திடீரென்று நுழைந்தார்கள்.

அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது வாசற்படிக்கு அப்பால் மனைவி கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தாள்.

அத்தையின் கை என் முதுகைத் தடவியது. நான் உடனே எழுந்து உட்கார்ந்து, "என்ன அத்தை! இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் நடத்த வந்து விட்டீர்களா? என்ன சொன்னாள் இந்த நாய்?" என்று கேட்டு எழுந்தேன். அத்தை பரிவுமிக்க குரலில், "ஒன்றும் இல்லையப்பா. ஏன்டா கண்ணு இப்படி, ராசா போல இருப்பதை விட்டுவிட்டு" என்றார். "போ அத்தை போ. போய் உன் வேலையைப் பார்" என்று அங்கிருந்து எழுந்து அவர்களின் கண்ணுக்குப் படாமல் சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன்.

இவ்வளவு தண்டனை பட்ட பிறகும் என்னுடைய ஆணவம் அடங்கியதா? அடங்கவில்லை. வேலு! சொன்னால் நம்புவாயா வேலு! நம்முடைய நண்பன் சந்திரனா இப்படிச் செய்தான் என்று நீ எண்ணுவாய். அவ்வளவு கொடுமை செய்தேன் வேலு! என்னை அடித்துத் துரத்திய அந்த குடிசைக்கு ஒரு நாள் தீ வைத்துவிட்டேன். சந்திரனா செய்தான் என்று எண்ணுகிறாயா நான் அல்ல வேலு. என்னுடைய ஆணவம், என்னுடைய ஆணவம்" என்று பலமுறை கதறினான். மறுபடியும் நேற்றுப் போல் உணர்ச்சி வேகம் அளவுகடந்து போய் உடம்பைக் கெடுக்கக்கூடாதே என்று பயந்து, சொல்லாமல் நகர்ந்து வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து, அம்மா அப்பா என்று அவன் மூச்சுவிடும் குரல் கேட்டுச் சென்று, "என்ன, ஏதாவது வேண்டுமா?" என்றேன்.

"ஒன்றும் தேவை இல்லை. நேற்றுப் போல் காய்ச்சல் வந்துவிட்டது. தலை கனமாக இருக்கிறது" என்று தலையைப் பிடித்துக்கொண்டு வருந்தினான். தலை வலித் தைலம் கொண்டுபோய்க் கொடுத்தேன். பூசிக் கொண்டான். அதன் பிறகும் அப்பா அம்மா என்று துன்பக் குரல் தணியவில்லை. "குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடு" என்றான். சூடாக ஆர்லிக்ஸ் போட்டுக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடித்துவிட்டு, "காய்ச்சல் வரவர ஏறுகிறது. என்ன செய்வேன்? நீ போ. நான் படுத்துப் பார்க்கிறேன்" என்றான். "இன்றைக்காவது மருந்து வாங்கி வந்திருக்கலாமே" என்றேன். வேண்டா என்று தடுத்தான்.

அன்று இரவு இரண்டுமுறை எழுந்து போய்ப் பார்த்தேன். முதன் முதலில் வாய் பிதற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுத் திரும்பினேன். இரண்டாவது முறை சென்றபோது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். மெல்லத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் கன கன என்று மிகுதியாக இருந்தது. தொட்ட பிறகு ஏதோ மனக்குறை ஏற்பட்டது. உடனே சோப் இட்டுக் கையை நன்றாகக் கழுவி விட்டுப் போய்ப் படுத்தேன்.

மறுநாள் காலையில் முன்போலவே அருட்பா பாடிக்கொண்டிருந்தான். "காய்ச்சல் இருக்கிறதா, மருந்து வாங்கி வரட்டுமா?" என்று கேட்டேன். "எனக்கா? எதற்கு மருந்து? காய்ச்சல் இப்போது இல்லையே" என்றான். காப்பி குடித்த பிறகு இன்னும் தெளிவாகப் பேசினாள். உடம்பின் காய்ச்சல் போலவே, உள்ளத்தின் உணர்ச்சி வேகமும் காலையில் அடங்கியிருந்தது. பகலெல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்து, மாலையில் மலர்ந்து விடுகிறதே என்று எண்ணினேன். அன்று காலையில் தான் அவன் என் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மிக்க அக்கறையோடு கேட்டான். அப்போது அவன் காட்டிய அன்பால் என் மனம் உருகியது.

"இல்வாழ்க்கை எப்படி நடக்கிறது? மனைவியும் நீயும் மனம் ஒத்துப் போகிறீர்களா? அன்பாக இருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

"ஒன்றும் குறைவு இல்லை. ஆனால் விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாதவள். உண்மையானவள்; அன்பானவள்" என்றேன்.

"உண்மையும் அன்பும் இருந்தால் போதுமே. நீதான் விட்டுக் கொடுத்துப்போ. அதனால் ஒரு கெடுதியும் இல்லை. என்னைப்போல் தலைக்கொழுப்போடு நடக்காதே."

"நான் விட்டுக்கொடுத்துக் கொண்டுதான் போகிறேன். ஆனால்?"

"என்ன குறை? சொல் வேலு! இங்கு இல்லாதபோது பேசினால் என்ன?"

"ஒன்றும் இல்லை. கொஞ்சம் செருக்கு உண்டு."

"என்ன செருக்கு? பணச் செருக்கா? படிப்புச் செருக்கா அழகுச் செருக்கா?"

"அந்தச் செருக்கு ஒன்றும் இல்லை. அவற்றிற்கு இடமும் இல்லை."

"வேறு என்ன? சிலருக்கு ஒழுக்கச் செருக்கு இருக்கலாம்."

"ஆமாம் அதுதான். மிகப் படித்த பெண்களையும் மதிக்க மாட்டாள். அவர்கள் ஒழுங்கானவர்களா என்று கேட்பாள்."

"அந்தச் செருக்கு இருந்து போகட்டுமே. அதனால் ஒரு கெடுதியும் இல்லை, நல்லதாச்சு. என் தங்கை கற்பகத்துக்கும் அப்படிப்பட்ட செருக்கு உண்டு. தான் ஒழுங்கானவள் என்றும், கெட்டிக்காரி என்றும் எண்ணிக் கொண்டு, தன் கணவனை ஏமாந்த பேர்வழி என்று சொல்கிறாள். அப்படிப்பட்ட செருக்கு இருந்தால் இருந்து போகட்டும். அந்தச் செருக்கு இல்லாத மனைவியாக வேண்டுமானால் முப்பது வயது உள்ள விதவையாகத் தேடிக் கல்யாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்."

நான் சிரித்தேன்.

"நான் சொல்வது தப்பா? உள்ளதைத்தான் சொல்கிறேன். என்னிடத்தில் உண்மையாகப் பணிவோடு நடந்தவர்கள் இரண்டு பேர். ஒருத்தி நீலகிரித் தேயிலைத் தோட்டக்காரி, காரணம் அவளுடைய பழைய குறையான வாழ்க்கை. மற்றொருத்தி - இறந்துபோன மனைவி; காரணம் அவளுடைய பயம். பயந்த மனைவியைவிட, செருக்கு உள்ள மனைவியே மேல்" என்றான். திடீரென எதையோ நினைத்தவன் போல், "உன் மனைவியை நான் பார்க்கவே இல்லையே" என்றான்.

"பார்த்திருக்கிறாயே. வேலூரில் என் அத்தை மகள்."

"ஓ! அந்தப் பெண்ணா? சின்ன வயதில் உன் தங்கையோடும் என் தங்கையோடும் சேர்ந்து விளையாடிக் கொண்டு..."

"ஆமாம் அவளே தான்."

"நீ உன் அத்தை மகளை மணந்து கொள்ளமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாயே, நினைவு இருக்கிறதா? அது சரி. இப்போது ஏன் அதைப் பற்றிப் பேசவேண்டும்? நான் ஒன்று சொல்கிறேன். உள்ளதைக் கொண்டு மகிழ வேண்டும். வியாபாரம், செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும்.

சில இளைஞர்கள் காலை மாலை இரண்டு வேளையும் பூசை, கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து, கடவுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்து, கடைசியில் பயன் கிடைக்காமல் ஏமாந்து திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகிறார்கள். தெரியுமா? அப்புறம் சாமியாவது பூதமாவது என்பார்கள். அதுபோல் மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு பணிவு அடக்கம் ஒடுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் இப்படித்தான் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும்.

குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் வந்தால் போதும் என்று வியாபாரம் செய்கிறவர்கள் அவ்வளவாகக் கெடுவதில்லை. அளவுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக எதிர்பார்த்து வியாபாரம் செய்கிறவர்கள் சிலர் கடைசியில் அடியோடு அழிந்து மண்ணோடு மண்ணாய் போகிறார்கள். சரி, சரி, பட்டுக் கெட்டு நான் கற்றுக் கொண்ட பாடங்களை உனக்கு ஏன் சொல்ல வேண்டும். நீதான் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறாயே. உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நான் தான் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டேன்" என்றான்.

சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு" என்றான்.

அன்று மாலை மறுபடியும் உணர்ச்சி வேகத்தால் கதறுவான், அலறுவான், அதனால் காய்ச்சல் மிகும் என்று எண்ணி அவனெதிரே போய் உட்கார்ந்து பேசாமலே தப்பித்துக் கொண்டிருந்தேன். மாலை சிற்றுண்டியும், காப்பியும் கொடுத்துவிட்டு, அங்கே நிற்காமல் உடனே வந்து விட்டேன். சந்திரன் தானாகவே அழைத்தான். "இன்றைக்குக் காய்ச்சல் முன்னமே வந்துவிட்டது. கண்ணெல்லாம் எரிகிறது. உடம்பெல்லாம் எரிகிறது. கணுவெல்லாம் வலி பொறுக்க முடியவில்லை. மருந்து ஏதாவது வாங்கி வந்தால் தான், தாங்க முடியும்போல் இருக்கிறது" என்றான்.

"உடனே எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் போய், தொழுநோய் என்பது தவிர மற்றச் செய்தி எல்லாம் சொல்லி மருந்து வாங்கிவந்தேன். மருந்தை உட்கொண்டதும், ஏதோ பேசத் தொடங்குவான் போல் தெரிந்தது. அதற்கு இடம் கொடுக்காமல் வந்து விடவேண்டும் என்று எண்ணி உடனே நகர்ந்து வந்துவிட்டேன். ஊருக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணி மேசையருகே உட்கார்ந்து ஏழெட்டு வரிகள் எழுதினேன். சந்திரன் கூப்பிட்ட குரல் கேட்டது. போய் நின்றேன்.

"இன்றைக்கு என் பக்கத்தில் நிற்க மாட்டேன் என்று போய் விடுகிறாயே. என்மேல் வருத்தமா? நான் ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா?" என்றான்.

"அப்படி ஒன்றும் இல்லையே, கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்" என்றேன்.

"யாருக்கு"

"வீட்டுக்கு"

"உங்கள் வீட்டுக்கா? எங்கள் வீட்டுக்கா?"

"எங்கள் வீட்டுக்குத்தான், உங்கள் வீட்டுக்கு உன்னைக் கேட்காமல் எழுதுவேனா?"

"ஆமாம், வேலு! நான் முன்னமே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு என்னைப் பற்றி எதுவும் எழுதி விடாதே. ஒருவேளை அவர்கள் யாராவது வந்தாலும் சொல்லி விடாதே. யாராவது வருவதாகக் கடிதம் வந்தால் எனக்கு முன்னதாகவே சொல்லிவிடு. நான் இங்கிருந்து எங்காவது போய்விடுவேன். என்னிடம் ஒன்றும் மறைக்காதே."

"இப்படி நான் உன்னை மறைத்து வைத்திருப்பது தெரிந்தால் என்மேல் அவர்கள் வருத்தப்படுவார்களே!"

"வருத்தப்பட்டாலும் சரி. எனக்காகத் தாங்கிக்கொள். என் மனது கேட்காது. நீ மீறிச் செய்யமாட்டாய் என்று நம்பித்தான் இங்கே வந்தேன். இல்லையானால் வந்திருக்க மாட்டேன். என்னுடைய கெட்ட அழுகிய வாழ்வைப் பற்றி அவர்கள் யாரும் தெரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். இந்தச் சீர்கெட்ட முகத்தில் அவர்கள் யாரும் விழிக்கக் கூடாது. தங்கை கற்பகத்தை மட்டுமாவது பார்க்க வேண்டும் என்று நேற்று ஆசை வந்தது. அதுவும் வேண்டா என்று மனத்தைக் கல்லாக்கி கொண்டேன். இன்று உறுதியாய்ச் சொல்லியிருக்கிறேன். நான் செத்தாலும் அவர்களுக்கு தெரிவிக்காதே. நீயே எடுத்துப் போட்டுவிடு. ஒழியட்டும். என் வாழ்வு என்னோடு ஒழியட்டும். நீயே எடுத்துப் போட்டு விடு. யாரும் கொள்ளியும் வைக்க வேண்டாம். மண்ணில் சும்மா போட்டு மண்ணைத் தள்ளி விடு. போதும். இது என் வேண்டுகோள். உன் நண்பனுடைய கடைசி வேண்டுகோள். மறக்காதே" என்றான்.

அந்தச் சொற்கள் என்னைக் கலக்கின. என் நெஞ்சம் உடைந்து, கண்ணீர் வழிந்து நின்றேன். சந்திரன் தலை நிமிர்ந்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டான். "அழுகிறாயா? வேலு! எனக்காக அழுகிறாயா? அழு, அழு. ஆசுபத்திரியில் இருந்த போது, நான் செத்தால் அழுகிறவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று எண்ணினேன். நீ ஒருத்தன் இருக்கிறாய். அழு, வேலு. எனக்காக அழுகிறாய். என் அழுகிய உடலை எடுத்து மண்ணில் போட்டுவிட்டு அழுவதற்கு நீ ஒருவன் இருக்கிறாயே, அது போதும்" என்றான்.

உடனே என்ன நினைத்துக் கொண்டானோ, தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுத் தன் வலக்கையால் மார்பைப் பற்றிக் கொண்டு விம்மினான். குப்புறப் படுத்துத் தலையணை மேல் தலை வைத்துக்கொண்டு, மடை திறந்தாற்போல் உணர்ச்சி பொங்கி வர அழுதான். சிறிது நேரம் அப்படியே அழுது கொண்டிருந்த பிறகு மெல்ல உணர்ச்சி தணிந்து வரத் தொடங்கியது. கவிழ்ந்தபடியே இருந்தான். இன்னும் அங்கே இருந்தால், ஏதாவது ஒரு பேச்சைத் தொடங்கி மறுபடியும் உணர்ச்சி வசப்படுவான் என்று எண்ணி, அவன் திரும்பிப் பார்ப்பதற்கு முன் வந்துவிட்டேன்.

அன்று இரவு உணவுக்காகச் சென்றபோது, அவன் அமைதியாகப் படுத்து உறங்கி கொண்டிருந்தான், "சந்திரா சந்திரா" என்று இரண்டு குரல் கொடுத்தும் எழவில்லை. மூன்றாவது குரலுக்கு "ஆ" என்று விழித்து "ஏன் வேலு!" என்றான். "உணவுக்கு நேரம் ஆயிற்று" என்றேன். "பசி இல்லை. மிளகு நீரில் கொஞ்சம் சோறு இட்டுக் கரைத்துக் கொடு. குடித்து விட்டுப் படுத்துக் கொள்வேன். வேறு ஒன்றும் வேண்டா" என்றான். அப்படியே மிளகுநீரும் சோறும் கரைத்துக் கொடுத்தேன். குடித்து விட்டுப் படுத்தான்.

"உடம்பு எப்படி இருக்கிறது?" என்றேன். "உடம்பு காய்ச்சலால் கொதிக்கிறது. உடம்பு எப்படியாவது போகட்டும். சாவுக்காக இப்போது பயமே இல்லை. அழுகின உடம்பு அழியப்போகிறது. அவ்வளவுதானே? நான் தேடி வந்தது கிடைத்து விட்டது. மன அமைதியே இல்லாமல் எவ்வளவோ துன்பப்பட்டேன். அது கிடைத்துவிட்டது. போதும். ஊரை விட்டு வந்த பிறகு, என் மனம் என்றைக்கும் இவ்வளவு அமைதியாக இருந்ததில்லை. இனிமேல் செத்தால் கவலை இல்லை. இதுபோதும்" என்றான்.

இவ்வாறு அவன் தான் பெற்ற மன அமைதியைக் குறித்துப் பேசியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என் வீட்டுக்கு வந்த பிறகு நான் அருமை நண்பனுக்குச் செய்த உதவியால் அந்தப் பயனாவது ஏற்பட்டதே என்று மகிழ்ந்தேன்.

நண்பனுடைய மனம் அமைதியுற்ற அன்று இரவு பத்துமணிக்கு வானத்தில் பெரும்புயல் கிளம்பியது. இடியும் மின்னலும் நான் நீ என்று முந்திக்கொண்டு பெருங்கூத்து நடத்தத் தொடங்கின. காற்று சுழற்றிச் சுழற்றி அடித்தது. மழையும் பெய்யத் தொடங்கியது. உடனே எழுந்து சென்று சந்திரனைப் பார்த்தேன். அவன் முன்போலவே அமைதியாய்ப் படுத்திருக்கக் கண்டேன்.

சன்னல் கதவுகளை எல்லாம் சாத்திக் கொக்கி இட்டுத் திரும்பி வந்தேன். காற்றும் மழையும் நடத்தும் போரைப்பற்றி எண்ணியவாறே படுக்கையில் படுத்தேன். காற்றின் பேரொலி சிறிது அடங்குவதுபோல் இருந்தபோது மழைத்துளிகளின் ஓசை மிகுவதும், மழை ஓசை அடங்கும்போது காற்றின் ஒலி மிகுவதும், போரின் வெற்றி தோல்விகளைக் காட்டுவன போல் இருந்தன. பேரிடியாக இருந்த ஒலி மாறி அமைதியான முழக்கம் மீண்டும் வானத்தில் இடையிடையே கேட்டது. சன்னல் கண்ணாடி வழியாக வானத்தின் மின்னல் ஒளி விட்டுவிட்டு என் அறைக்குள் புகுதல் கண்டேன். இவற்றிற்கு இடையே நண்பன் சந்திரன் பெற்ற மன அமைதியைப் பற்றி எண்ணியவாறே உறங்கிவிட்டேன்.

இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது இயற்கை என்று எண்ணியபடியே மறுபடியும் படுத்து உறங்கிவிட்டேன்.

காலையில் விழித்தபோது, வழக்கம்போல் சந்திரன் அருட்பா பாடுவது கேட்கும் என்று செவிகள் உற்று கேட்டன. ஒருகால் பாடி முடிந்திருக்கும் என்று எண்ணினேன். சிறிது நேரம் கண் மூடியவாறே படுத்திருந்து எழுந்தேன். சந்திரனிடம் சென்றேன். அவன் வழக்கத்திற்கு மாறாக, கதிரவன் வந்த பிறகும் படுத்திருந்ததைக் கண்டேன். சரி, உறங்கட்டும் என்று திரும்பிவிட்டேன்.

பல்துலக்கிக் குளித்தபிறகு சென்று கண்டேன். அப்போதும் அதே நிலையில் படுத்திருக்கக் கண்டதும், என் மனம் திக்கென்றது. நான்கு முறை பெயரிட்டு அழைத்தேன். ஒரு குரலும் இல்லை. அப்போதுதான் அவனுடைய உடம்பில் மூச்சின் அசைவும் இல்லாததை உணர்ந்து திடுக்கிட்டேன்! கைவிரலை மூக்கின் அருகே கொண்டு சென்றேன். காற்று இல்லாததை உணர்ந்ததும், என்னை மீறிச் "சந்திரா, சந்திரா!" என்று கூக்குரல் இட்டேன். என் உடம்பில் ஒருவகை அச்சம் ஊடுருவியது. கண்ணின் இமைகளை என் விரலால் நீக்கித் திறந்தேன். ஒளியற்றுப் பஞ்சடைந்திருந்தது. தலைமேல் கை வைத்துக் கொண்டு, "அப்பா சந்திரா இதற்காகவா என் வீட்டை தேடி வந்தாய்? சாவதற்காகக் கடைசியில் என்னைத் தேடி வந்தாயா?" என்று அழுதேன்.

கதவு தட்டும் ஒலி கேட்டு எழுந்து சென்று, "யார் அது? என்றேன். "பச்சைமலை" என்ற குரல் கேட்டுத் திறந்தேன், பச்சைமலையும் பக்கத்தில் வேலையாளும் நின்றிருந்தனர். என் கண்களில் கலக்கத்தையும் முகத்தின் வாட்டத்தையும் கண்ட பச்சைமலை, "என்ன அய்யா! ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்?" என்றார். நடந்ததைச் சொன்னேன். "நேற்று முந்தாநேற்று ஆபீசில் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றுமே சொல்லவில்லையே" என்றார்.

"என்னுடைய வாழ்க்கையிலேயே பெறுவதற்கு அரிய நண்பர், இளமை நண்பர்" என்றேன்.

"முன்னே என் மனைவியும் அவளுடைய அக்காவும் சொன்னார்களே, அந்த நண்பரா?" என்றார்.

"ஆமாம்" என்று சொல்லி உடல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். பச்சை மலை சந்திரனுடைய உடம்பைக் கண்டதும், சிறிது தொலைவிலேயே நின்று திகைப்போடு என்னைப் பார்த்து, "தொழு நோயாளிபோல் தெரிகிறதே" என்றார்.

"ஆமாம்" என்றேன். "இவருடைய வாழ்க்கை குடும்பத்துக்கும் ஊருக்கும் ஒரு பொல்லாத கறைபோல் இருந்தது. ஆனாலும், நெருங்கிப் பழகிய என்னுடைய வாழ்க்கைக்கு இவர்தான் ஒரு நல்ல கரைபோல் இருந்தார். இவர் இல்லையானால் நான் படித்து முன்னேறியிருக்க மாட்டேன். இவர் பட்ட துன்பங்களிலிருந்து எனக்கு அறிவு வரவில்லையானால், நான் இப்படிச் சீராக வாழ்ந்திருக்கமாட்டேன். அப்படிப்பட்ட நல்ல நண்பர் கடைசியில் என்னைத் தேடி வந்து என் வீட்டில் இறந்துவிட்டார்" என்றேன்.

"மனைவி திருமகள் சொல்லியிருக்கிறாள். சந்திர அண்ணா கூர்மையான அறிவுடையவர் சிறந்த குணங்கள் உடையவர் என்று அவள் சொல்லியிருக்கிறாள்" என்றார்.

"அறிவு மட்டுமா? குணம் மட்டுமா? இளமையில் இவரைப் போல் சுறுசுறுப்பும் அழகும் உடையவர்கள் நான் கண்டதில்லை" என்றேன்.

"அய்யோ! அவ்வளவு அழகான உடம்பு இப்படிநோயால் கெட்டு மாறிவிட்டிருக்கிறதே" என்று அவர் பின் வாங்கினார். பிறகு என்னைப் பார்த்து, "சரி, இனிமேல் ஊருக்குத் தந்தி கொடுக்கவேண்டும். முகவரி கொடுங்கள். நான் எழுதிக்கொடுப்பேன். வேலையாளை அனுப்பலாம். ஊரிலிருந்து வீட்டார் வந்த பிறகுதான் மற்ற வேலைகள்" என்றார்.

என் உள்ளத்தே துயரம் மேலெழுந்தது. அழுதேன். அழுதுகொண்டே, "நண்பருடைய வேண்டுகோளின்படி வீட்டார் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது" என்றேன்.

"நோயாளிகள் அப்படிச் சொல்வார்கள். ஆனால் நாம் அப்படிச் செய்யலாமா? அவர்கள் கேள்விப்பட்டால் உங்கள் மேல் வருத்தப்படுவார்கள்" என்றார்.

"அதையும் சந்திரனே சொன்னார். என்ன வருத்தப்பட்டாலும் வேண்டா வேண்டா என்றார். தம்முடைய கடைசி வேண்டுகோள் என்றும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தெளிவாகச் சொல்லிக் கேட்டு கொண்டார்" என்றேன்.

"அப்படியானால் சரி" என்று சொல்லிவிட்டு, நண்பர் வேலையாளிடம் அடக்கத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு ஏவினார். என்னிடம் நெருங்கிவந்து, அப்படியானால் வழக்கமான ஊர்வலத்துக்கு இடம் இல்லை. அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு வண்டி வைத்து இடுகாட்டுக்கு கொண்டுபோய் விடுவோம்" என்றார். அதற்கு இசைந்தேன். ஆனால், வண்டியில் உடம்பை ஏற்றியபோது எதிர் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் அணுகி வந்து பார்த்தார்கள். யார் என்ன என்று என்னைக் கேட்டார்கள். சொன்னேன்.

இடுகாட்டில் வேலையாளும் பச்சைமலையும் வண்டிக்காரனும் தவிர வேறு யாரும் இல்லை. தன் கிராமத்தில் பெரிய வீட்டில் செல்வ மகனாக வளர்ந்த ஒருவனுடைய வாழ்வு இப்படித் திக்கற்ற முடிவு அடைந்து விட்டதே என வருந்தினேன். சந்திரனுடைய முகத்தைப் பார்த்து நெஞ்சு உடைந்து கலங்கினேன். உடம்பைக் குழியில் இறக்குவதற்காக நாங்கள் நான்கு பேரும் பிடிக்கத் தொடங்கியபோது, "இருங்கள் இருங்கள்" என்று ஒலி கேட்டது. "அண்ணா!" என்று கதறிய பெண்ணின் குரல் கேட்டது வண்டி ஒன்று நிற்க, அதிலிருந்து மாலனும் கற்பகமும் இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண்டேன். அழுதுகொண்டே எதிரில் சென்றேன்.

"அண்ணா போய்விட்டாயா? அண்ணாவா?" என்று கதறிக்கொண்டே வந்தாள் கற்பகம்.

"ஆமாம் அம்மா" என்று விம்மினேன்.

உடனே அவள் ஓடிச்சென்று தன் அண்ணனுடைய உடலின் அருகே உட்கார்ந்து அவனுடைய முகத்தைத் தொட்டு அழுதாள். "எங்களை எல்லாம் வெறுத்து வந்து விட்டாயா, அண்ணா! அப்பாவுக்கு என்ன சொல்லுவேன் அண்ணா" என்று கதறினாள்.

"உங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று வற்புறுத்திச் சொல்லி விட்டுச் செத்தார். அதனால்தான் தெரிவிக்கவில்லை" என்று மாலனுக்குச் சொன்னேன். அவன் கண்களைத் துடைத்துக்கொண்டே, "பழைய கசப்பு எல்லாம் தீர்ந்து புது வாழ்க்கை தொடங்கும் போது முதன் முதலில் உன் வீட்டுக்கு வர வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டு வந்தோம். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் வந்து இப்படி ஒரு தொழுநோயாளி செத்து விட்டார் என்ற செய்தியும், நீங்கள் இடுகாட்டுக்குப் போயிருப்பதும் சொன்னார். உடனே தன் அண்ணன்தான் என்று கற்பகம் உணர்ந்துகொண்டு இடுகாட்டுக்குப் போகவேண்டும் என்று வற்புறுத்தினாள். அந்த வண்டியிலேயே நேரே இங்கே வந்தோம்" என்றான்.

கற்பகத்தின் கதறல் எளிதில் ஓயவில்லை. நாங்கள் எல்லோரும் சொல்லி ஓயப்படுத்தினோம். அவள் மகன் திருவாய் மொழியைப் பார்த்து, "மாமா’டா, தெரியுதா’டா" என்றாள். மகள் திருப்பாவையைப் பார்த்து, அழுது கொண்டே "மாமா’டி கும்பிடு" என்றாள். அந்தச் சிறுமியோ, எதையோ கண்டு அஞ்சியவள் போல் தன் தாயைப் பார்த்தபடியே இரு சிறு கைகளையும் எடுத்துக் கூப்பினாள்.

இடுக்காட்டிலிருந்து திரும்பியபோதும் கற்பகத்தின் அழுகை ஓயவில்லை. வழியில் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவன், "டே! எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா. வேகம் உன்னையும் கெடுக்கும். உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்" என்றான். வலப்பக்கத்தே விளையாட்டு வெளியில் ஒரு பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு இடையே, "விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக் கொண்டு, உன் விருப்பம்போல் ஆட முடியாது. தெரிந்துகொள்" என்ற குரல் கேட்டது. சிறிது தொலைவு வந்துவிட்ட பிறகும் பந்தாட்டகாரரின் ஆரவாரம் கேட்டுக்கொண்டிருந்தது.


அகல் விளக்கு முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=அகல்_விளக்கு/அத்தியாயம்_27&oldid=7908" இலிருந்து மீள்விக்கப்பட்டது