அங்கும் இங்கும்/ஒரு படிப்பினை


4. ஒரு படிப்பினை

தாஷ்கண்ட் மகளிர் கல்வி ஆர்வத்தைக் கண்டேன் உங்களுக்கும் காட்டினேன். முதிய மகளிர், வெறும் வீட்டாட்சியர் அல்லர்; பகலெல்லாம் தொழில் புரிந்த மாதர், இரவுக் கல்லூரியில் சேர்ந்து, புதுமொழி ஒன்றைக் கற்கும் காட்சியினைக் கண்டேன். யான் பெற்ற அறிவு இன்பத்தை உங்களுக்கும் அளித்தேன்.

இன்று தாஷ்கண்ட் நகரிலிருந்து, மாஸ்கோவிற்கு இட்டு செல்லுகிறேன், வாரீர். உலகப் பெருநகரங்களில் ஒன்றாகிய அங்கு நடந்த நிகழ்ச்சிகள், வரலாற்றுப் புகழ் பெற்ற நிகழ்ச்சிகள் எத்தனை, எத்தனையோ! நான் கண்ட நிகழ்ச்சியோ, எளிய நிகழ்ச்சி. ஆனால் அறிவுடையோர் அறிய வேண்டிய நிகழ்ச்சி. இரஷியர் ஆட்டும் சுண்டு விரல் கண்டு வையம் ஆடப் போகிறதோ என்று அஞ்சுவோர் அனைவரும் உணர வேண்டிய நிகழ்ச்சி.

மாஸ்கோ நகரில் பள்ளிக்கூடம் ஒன்றைக் காணச் சென்றோம். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அங்கு நிறைய இருந்தன. எனவே மூன்று மணிகள் ஒடிவிட்டன.

பின்னர், வெளியே வந்தோம். குளிர்காற்று சீறிக் கொண்டிருந்தது. மாலை வெயில் விலகிவிட்டது. எங்களை அழைத்து வந்த வாடகைக் கார், பள்ளியின் எதிரே. தெருவோரம் காத்துக்கொண்டிருந்தது. தெருவில், மக்கள் கூட்டம் அதிகம்; வாகனப் போக்கு வரத்து நிறைய.

இந்நிலையில், நான் முதலில் காரை நெருங்கினேன், கதவைத் திறக்க முயன்றேன் ; முடியவில்லை. அது பூட்டிக் கிடந்தது. கண்ணாடிகளும் உயர்த்தப்பட்டிருந்தன. காரோட்டி தம்மிடத்தில் உட்கார்த்திருக்கக் கண்டேன். எனவே, கதவை மெல்லத் தட்டினேன். அது, அவர் செவியில் விழவில்லை. அவர் மெய்மறந்து எதையோ படித்துக் கொண்டிருந்தார். சில நொடிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் வந்துவிட்டனர். எங்களோடு பயணஞ் செய்யும் இரஷிய மொழிபெயர்ப்பாளர். கதவைத் தடதடவென்று ஓங்கித் தட்டினர். கரோட்டியின் காதும் கேட்டது. சட்டென்று, கையிலிருந்த நூலை மூடி வைத்தார். கதவுகளைத் திறந்தார்.

நாங்கள், உரிய இடங்களில் அமர்ந்தோம். கதவுகள் மூடப்பட்டன. கார் எங்கள் ஒட்டலை நோக்கிப் பிறந்து சென்றது.

காரோட்டி மெய்மறந்து படிப்பதைக் கண்டதும், எனக்கு ஓர் ஐயம் மின்னிற்று. சந்தடி மிகுந்த இச்சாலையில். மக்கள் நடமாட்ட வேடிக்கை நிறைத்த இந்தச் சாலையில், இவ்வளவு ஈடுபாட்டோடு படித்த நூல் எதுவாக இருக்கும் ; எது பற்றி இருக்கும்? காதல் கதையோ? போர்ப் பரணியோ ? இதுவே என் ஐயம். இந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளத் துணிந்தேன். அந்நூல் என்ன நூல் என்று, கேட்டுச் சொல்ல முடியுமா என்று, மொழி பெயர்ப்பாளரை ஆங்கிலத்தில் வினவினேன். அவர் காரோட்டியை இரஷ்ய மொழியில் வினவினார். அது விஞ்ஞான நூல் என்று பதில் வந்தது. "அதைப் பார்க்கலாமா?" என்றேன். "'ஆகா'வென்று நூலைக் கொடுத்துவிட்டார். புரட்டிப் பார்த்தோம். நிறையப் படங்கள். என்ன படங்கள்? கவர்ச்சிப் படங்களா ? இல்லை. கவர்ச்சிப் படங்களால் பிழைக்கத்தான் நாம் பிறந்திருக்கிறோமே ! பின் என்ன படங்கள் ? விஞ்ஞானச் சோதனைப் படங்கள். கண்ட தாளிலா? இல்லை. நல்ல தாளில் அழகான அச்சு தெளிவான விளக்கப் படங்கள் தென்பட்டன. விஞ்ஞான நூலென்று புரிந்துகொண்டோம். பாட்டாளி படிக்கும் அவ் விஞ்ஞான நூல் எத்தகையது? விளையாட்டு விஞ்ஞானமா ? தொடக்க நிலை விஞ்ஞானமா? இந்தக் கேள்விகளைக் கிளப்பினேன்.

மொழிபெயர்ப்பாளர் என் கையிலிருந்த நூலை வாங்கினார். சில வினாடிகள் புரட்டினார். "இது கல்லூரி மட்ட விஞ்ஞானம்" என்று பதில் உரைத்தார். காரோட்டி கல்லூரி விஞ்ஞானத்தைக் கற்பதா? கல்லுாரிக்குள் அல்லாது தெருவில் தொழிலுக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது கற்பதா என்று வியந்தேன். அவர் கல்லூரி மாணவரா என்று எல்லையற்ற வியப்போடு கேட்டேன்.

"ஆம்; இப்போது கல்லூரிகளுக்கு விடுமுறை கல்லூரிகள் திறந்ததும். மாலைக் கல்லூரி ஒன்றில் சேர்ந்து விஞ்ஞானம் கற்கப் போகிறேன். ஆகவே, கல்லூரிக் கல்விக்கு முன் கூட்டியே, ஆயத்தஞ் செய்து கொள்கிறேன்" என்று காரோட்டி பதில் கூறினார். வருமுன் கற்போர், இரஷிய மாணவர்; பாட்டாளி மாணவர்கூட என்பதை அறிந்து உண்மையில் மகிழ்ந்தேன்.

இந்நிகழ்ச்சி என் சிந்தனையைத் தூண்டிற்று. நமக்கு ஓர் அரிய படிப்பினையன்றோ ? ஏழ்மையுற்ற நம் நாட்டிலே நாளெல்லாம் பாடுபட்டாலும் கிடைப்பது அரை வயிற்றுக் கஞ்சியே. அறிவாற்றலும் சேர்த்தால்தானே உழைப்பின் பயன் பெருகும் ? இவ்வறிவாற்றலைப் பெறுவது எவ்வாறு ? பகலெல்லாம் உழைப்பவர்களும் இரவில் பள்ளி யில் தொழில் பயின்றால் அறிவு வளரும் ; ஆற்றல் மிகும். உழவர்களும் ஆலைத் தொழிலாளிகளும் தொழில் பற்றிய அறிவைப் பெருக்க, ஒய்வு நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். அத்தகைய பகுதிநேரப் படிப்பால் அறிவு வளர, ஆற்றல் பெருகும். ஆற்றல் பெருக, தொழில் சிறக்கும். தொழில் சிறக்க, நாடு வளம்பெறும். நமக்கு வேண்டியதும் அது தானே ?