அங்கும் இங்கும்/பேச்சுரிமையில் பெருமிதம்
இலண்டன் மாநகரம், உலகப் பெருநகரங்களில் ஒன்று. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரம் அது. வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று அது. பாராளுமன்றங்களின் தாயாக விளங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருப்பது அங்கேதான். உலக வாணிக மையங்களில் ஒன்று இலண்டன். அதன் சிறப்புக்கள் எத்தனையோ! எத்தனையோ சிறப்புக்களுடைய இலண்டன் நகருக்கு, நான் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குப் பல நாள் தங்கவும் வாய்ப்புக் கிட்டிற்று ஒரு முறை யன்று; இருமுறை.
முதன் முறை அங்குச் சென்று தங்கியது ; ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றில், பிரிட்டனின் கல்வி முறைகளை நேரில் கண்டு அறிந்து வருமாறு, அப்போதைய , சென்னை கல்வி அமைச்சர், கனம் மாதவமேனன், என்னை அனுப்பியிருந்தார். அந்நாட்டில், நான்கு மாதங்களிருந்து கண்டு கற்று வந்தேன். அப்போது நான் தனியே செல்லவில்லை. என் மனைவியையும் அழைத்துச் சென்றேன். அந்நியச் செலாவணி முடை இல்லாத காலம் அது. ஆகவே, மனைவியையும் அழைத்துப் போவது எளிதாக இருந்தது.
இலண்டனில் காணத் தக்கவை பல. எவை எவை என்பது, அவரவர் ஈடுபாட்டை, சார்பை, சுவையைப் பொருத்தது. அங்கு நாங்கள் கண்டவை சில. அவற்றில் ஒன்று ‘ஹைட் பார்க்’ என்ற பூங்கா. அது இலண்டனுக்கு, வெளியிலோ, அடுத்தோ இருக்கும் பூங்கா அல்ல. நகருக்கு உள்ளே இருக்கும் பூங்கா. பரவலான பூங்கா. மெய்யாகவே மிகப் பரவலான பூங்கா.
எட்டுக்கு எட்டு மீட்டரில். எங்கோ ஒரு மூலையில், கட்டப்படாமலிருக்கும் பொட்டலுக்கு, நாம் ‘பூங்கா’ என்று அருமையாகப் பெயரிட்டு விடுகிறோமே. அப்படிப்பட்ட பூங்கா ‘ஹைட் பார்க்.’ பல கிலோ மீட்டர் நீளமும் பல கிலோ மீட்டர் அகலமும் உடையது. புல் தரைகளும் பெரு மரங்களும் அடர்ந்தது. நெடுங் காலமாக அழிக்கப்படாமல், சிதைக்கப்படாமல் காப்பாற்றப்படுகின்றது. உலாவ ஏற்ற இடம் ; நிழலிலே ஒய்ந்திருக்க ஏற்ற இடம் இத்தனையும் எங்களைக் கவர்ந்தன. இம்முறைகளிலும் அதைப் பயன்படுத்தினோம் நாங்கள்.
இவற்றிற்கு மேலான சிறப்பொன்றும் உண்டு அப் பூங்காவிற்கு. அதுவென்ன ? பேச்சுரிமையைப் பெற்ற களம் அது. பேச்சுரிமையைக் காக்கும் களம் அது.
பிரிட்டன் கோனாட்சி நாடு. கோனாட்சி பெயரளவில் தான், மெய்யாக நடப்பது மக்களாட்சி.
அந்நாட்டை முற்காலத்தில் ஆண்ட மன்னர்களில் சிலர், கோனாட்சியைக் கோலாட்சியாக, கொடுங்கோல் ஆட்சியாக ஆக்கிவிட்டனர். அவர்கள் நினைத்தற்கு மாறாக, யாரும் மூச்சுவிடக்கூடாது. 'கப்சிப்' தர்பார் நடத்த முயன்றனர் பலித்ததா ? இல்லை.
அடக்குமுறை, கடுமையான அடக்குமுறை நேர்மாறான விளைவையே கொடுக்கும். ஆங்கிலேயப் பொதுமக்களும் கொதித்து எழுந்தனர் : எதிர்த்து முழங்கினர்; அரசின் அநீதிகளைக் கண்டித்தனர். அடி உதை பட்டனர். சிறையிலே அடைபட்டு, வாடி மடிந்தனர். தலையையும் கொடுத்தனர். இறுதியில் வெற்றியும் பெற்றனர். பொது மக்களுடைய பேச்சுரிமையை ஆழமாக நிலைநாட்டினர்.
இன்று அந்நாட்டில் முழுப் பேச்சுரிமை நிலவுகிறது. சட்ட நூல்களில் கிடக்கும் உரிமையல்ல, அங்கு நிலவுவது. எல்லாரும் அன்றாடம் பயன்படுத்தும் பேச்சுரிமையை அங்கே பளிச்சென்று காணலாம்.
பேச்சுரிமைப் போராட்டத்தில் சிறப்பு இடம் பெற்ற ஓரிடம், அந்த ‘ஹைட் பார்க்கி’ன் மூலையொன்று. அங்குத்தான் சில நூற்றாண்டுகளுக்கு முன், பேச்சுரிமைத் தலைவர்களும் தொண்டர்களும், அவ்வுரிமையை நிலைநாட்ட, அக்கால நடைமுறையில் இருந்த அரசியல் தவறுகளையும் பிறவற்றையும் கண்டிக்கும் களம் அமைத்து, போராடி வந்தனர்.
அக் களத்திலே பேச்சு மேடையில்லை. அன்றும் இல்லை; இன்றும் இல்லை. அன்றைய அரசியலில், சமுதாயத்தில், வாழ்க்கை முறையில் கண்ட தீங்குகளைப் பற்றிக் கொதிப்படைந்தவர்கள் அம் மூலைக்குச் சென்று, கருத்து முழக்கம் செய்வார்கள். பூங்காவிற்கு வந்தவர்களில் துணிந்தவர்கள் பேச்சாளரைச் சுற்றி நின்று கேட்பார்கள்.
பேச்சு, தானாகவே முடியுமென்று சொல்ல முடியாது. அரசின் அடக்குமுறையாளர்களால், பேச்சாளர், பேசத் தொடங்கியதும், கைது செய்யப்படுவதும் உண்டு. விட்டுப் பிடிப்பதும் உண்டு. சிறிது நேரம் பேசியதும், தண்டிப்பதற்குப் போதிய ஆதாரம கிடைத்துவிட்டது என்று தெரிந்ததும் கைது செய்யப்படுவதும் உண்டு. கைது செய்யப்படாமல் ஒருவர் பேச்சு முழுவதும் பேசி முடித்தால், அநேகமாக அப்பேச்சில் உயிரோ கருத்தோ இல்லை என்றே பொருள். இப்படிப்பட்ட அடக்குமுறையை எதிர்த்துப் பல்லாண்டு, பலர், பேசிப் பேசி, அனுபவித்த சிறைத் தண்டனையாக, அடி உதையாகச் சொல்லவொண்ணாக் கொடுமைகளாகப் பெருவிலை கொடுத்து, பேச்சுரிமையைப் பெற்ற ‘குருகேஷத்திரம்’ ‘ஹைட் பார்க்கின் மூலையொன்று’
அக்காலம் முதல், அம் மூலையில், ஒரே நேரத்தில் பல பேச்சாளர்கள் பேசுவர்; விடுமுறை நாள்களில், ஒரே வேளை, பத்துப் பதினைந்து ‘கூட்டங்கள்’ அடுத்தடுத்து நடக்கும்; மற்ற நாள்களில் ஏக காலத்தில் ஐந்தாறு கூட்டங்கள் நடக்கும்.
அங்குப் பேச, யாருடைய அனுமதியும் தேவையில்லை. அங்கு, மேடை அமைக்கக் கூடாது. ஆகவே, பேச்சாளரே! அவரது தோழரோ, காலி சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைக் கொண்டுபோய், அங்கோர் இடத்தில் போட்டு அதன்மேல் நின்று பேசுவார். நிலத்தின் மேல் நின்றே பேசுவோர் பலர். உரிமையை நிலைநிறுத்தும் அவர்களுக்கும் மற்றொரு கட்டுப்பாடு உள்ளது.
அது என்ன ?
அங்கு யாரும் ‘மைக்’ அமைக்கக்கூடாது. ஒருவர், ஒலி பெருக்கி அமைத்துக் கொண்டு பேசினால், அருகில் நடக்கும் மற்றக் கூட்டங்களுக்கு, அது இடையூறாக இருக்கும். மற்றப் பேச்சாளர்களின் உரிமையை ஒலி பெருக்கி பறிக்கும். எனவே, அந்த இடத்தில், யாரும் ஒலி பெருக்கி வைத்துப் பேசக் கூடா தென்ற தடையுண்டு.
நானும் என் மனைவியும் இலண்டனிலிருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பேச்சுரிமைப் புனித பூமிக்குச் சென்றோம். கூட்டங்கள் நடக்கும் வகையைக் காணவே சென்றோம். பூங்காவிற்குள் நுழைந்ததும், ஒரு சிறு கூட்டத்தைக் கண்டோம். பதினைந்து இருபது பேர்களுக்கு மேல் இல்லை அங்கு. அதில் ஒருவர், ஆர்வத்தோடு பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவர் பேச்சைக் கேட்டோம். அவர் ஒரு யூதர். யூத சமயத்தைப் பற்றிப் பேசினார். தங்கள் 'கர்த்தர்' இனித் தான் வரப்போகிறார் என்றார். அவரை வரவேற்பதற்காக ஆயத்தஞ் செய்துகொள்ளச் சொன்னார். அத்தனை பேச்சுக் களையும் பதம் பார்க்க எங்களுக்கு ஆசை. ஆகவே, சில அடி துரத்தில் நடந்து கொண்டிருந்த அடுத்த கூட்டத்திற்கு நகர்ந்தோம். அங்கும் ஒருவர் ஆர்வத்தோடு பேசிக்கொண் டிருந்தார். அவர் கத்தோலிக்க கிருத்துவர். 'கர்த்தர்' ஏசுவாக, வந்ததைப் பற்றிப் பேசினார். அவரது கொள்கைகளைப் போப்பாண்டவர் விளக்கிக் கூறுவது போலவே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுவே விசுவாசத்திற்கு அடையாளம் என்றும் பேசிக்கொண்டிருந்தார். அப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சிலரே.
அடுத்த கூட்டத்தில் பிராடெஸ்டண்ட் கிருத்துவர் ஒருவர், தம் சமயப் பிரிவின் சிறப்புக்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிலரோடு நாங்களும் சேர்ந்து சிறிது கேட்டோம். மெல்ல நழுவினோம்.
சில அடி துரத்தில் வேறொருவர் பேசிக்கொண்டிருந்தார். அங்கும் முப்பது நாற்பது பேருக்குமேல் கூடவில்லை; அவர்களோடு கலந்து நாங்களும் பேச்சைக் கேட்டோம்.
சமயச் சொற்பொழிவுகளையும், சமயங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தார். உழைத்துப் பிழைக்க முடியாதவர்கள், ஆண்டவனைப் பற்றிப் பேசிப் பிழைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார் ; பெரியார் பாணியில், சமயங்களை யெல்லாம் சாடினார். அங்கிருந்து அடுத்ததற்கு விரைந்தோம். ஏதோ உள்ளுர் விவகாரம் பற்றி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சு காரமாகவே இருந்தது. இப்படி உள்ளுர், பிராந்தியச் சிக்கல்கள் பற்றிய கருத்துரைகள், இரண்டொன்றையும், சிறிது சிறிது கேட்டுவிட்டு, ஒரு பெருங்கூட்டத்திற்கு வந்து சேர்ந்தோம் அன்று நாங்கள் கண்ட அத்தனைக் கூட்டங்களிலும் பெரியது அது. கூடியிருந்தார், அதிகம் இருந்தால், இருநூறு பேராக இருக்கலாம். பத்தும் பதினைந்தும், முப்பதும் முப்பத்தைந்துமே கண்ட யாருக்குமே இருநூறு பேர் கொண்ட கூட்டம் பெரிதாகத்தானே இருக்கும். அக் கூட்டத்தின் பேச்சாளர், ஒரு நீக்ரோ. அவர் ஆத்திரத்தோடு பேசிக்கொண்டிருந்தார். நின்று கேட்டோம்.
வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவிற்கு வந்து நீக்ரோக்களை அடிமைப்படுத்தி வருவதை வன்மையாகக் கண்டித்தார். சில நிமிடங்களுக்குப் பிறகு இனி வெள்ளையர் எவரும் ஆப்பிரிக்காவில் காலடி வைத்தால், அவ்வெள்ளையரின் கழுத்தை அறுத்து இரத்தத்தை உறிஞ்சப் போவதாக ஆர்ப்பரித்தார். இதைக் கேட்ட நாங்கள் பதறிப்போனோம். ‘கலாட்டா’ ஆகி விடுமென்று அஞ்சினோம், மெல்ல நழுவி விடலாமாவென்று கருதினோம். சுற்றுமுற்றும் பார்த்தோம். வெள்ளையர் யாரும் வெகுளவில்லை, துடிக்கவில்லை, அஞ்சவில்லை.
அப்போது அங்கிருந்த இளந்தம்பதிகள் எங்கள் கண்களில் பட்டனர். கணவன் மனைவியிடம் கூறினார் ; “கண்ணே! இவர் ஏதோ உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார். அதற்குக் காரணமும் இருக்க வேண்டும். நாம் பொறுமையாக இருந்து, காரணத்தைக் கேட்போம். இதைக் கேட்ட மனைவியும் புன் முறுவலோடு கவனமாகக் கேட்டார். பேச்சு நீண்டது. ஆனால், சூடு சிறிது தணிந்தது. நாங்களும் மெதுவாக நழுவிவிட்டோம். மேலும் சில சிறு கூட்டங்களைக் கடந்த பின், ஐம்பது பேருடைய கூட்டம் ஒன்றை அடைந்தோம். அது, அராஜகக் கூட்டம். “ஆட்சிகள் அத்தனையும் மக்கள் உரிமையைப் பறிக்கின்றன. உரிமையை இட்லர் பறித்தாலும் ஒன்றே, சர்ச்சில் எடுத்துக் கொண்டாலும் ஒன்றே, அட்லி அடக்கினாலும் ஒன்றே. ஆகவே ஆட்சிமுறை வேண்டா. தேர்தலில்நாள் குறித்திருந்தார்கள்-யாருக்கும் ஒட்டுப் போடாதீர்கள். இதைக் கேளாமல் சிலர் ஒட்டுப் போட்டால் பெருங்கெடுதி இல்லை. யார் வெற்றி பெற்றாலும், இலட்சம் வாக்குகளுக்குப் பதில் ஆயிரம் ஒட்டுகளே பெற்று, வென்றால். தலை கொழுத்துத் திரியமாட்டார். வாக்கினைப் பயன்படுத்தியவர்களைவிட, பயன்படுத்தாதவர் பல பேர் என்ற தெளிவு நிதானத்தைக் கொடுக்கும்”-இப்படிப்பட்ட போக்கிலே ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.
அவர்கள் தேர்தலைப் பற்றியோ, இக்கருத்தைப் பற்றியோ கவலைப்படாமல், விரைவில் விலகிப் போனோம். வீடு திரும்ப, மீண்டும் வந்த வழியே சென்றோம். முன்னர் பார்த்த கூட்டங்களில் சில முடிந்துவிட்டன. நீக்ரோவர் பேசிய கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மறுபடியும் அங்குச் சில நிமிடங்கள் நின்றோம். கூட்டத்தினரைக் கவனித்தோம் பலர் ஏற்கெனவே இருந்தவர்களே. யாரும் துடிப்போ, கிளர்ச்சியோ கொள்ளவில்லை. கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
வெளிநாட்டார் ஒருவர், இலண்டனுக்கு வந்து அங்குள்ள வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்டு, அவ் வெள்ளையரையே அவ்வளவு மிரட்ட விடலாமா ? ஏன் அப்படி விட்டு வைக்கிறார்கள் ?’ என்று எங்களுக்கு ஐயம். அதைப் பல ஆசிரியர்களிடமும் மற்றவர்களிடமும் வெளியிட்டோம் .
அவ்வளவு பேச்சுரிமை இருப்பதைப் பற்றிப் பெருமிதம் கொண்டனர் ; புன்முறுவல் பூத்தனர். அதற்குச் சிறிதளவும் தடை விதிக்கக்கூடாதென்று அழுத்தந்திருத்தமாகக் கூறினர். ‘அதைக் கட்டுப்படுத்துகிறோம் ; இதைக் கட்டுப்படுத்துகிறோம்’ என்று நல்லெண்ணத்தோடு, தொடங்கி, நம்மை அறியாமலேயே எல்லார்க்கும் பல விதத் தளைகளை மாட்டி விடுவோம். ஆகவே இருக்கிற உரிமையிலே சிறிதும் கை வைக்கக்கூடாது !’ என்ற போக்கிலே இருந்தது அவர்கள் பதில்.
நினைக்க நினைக்கச் சுவைக்கும் அக்காட்சியையும் கருத்தையும் சில அறிஞர்களிடம் கூறும் வாய்ப்பு அவ்வப்போது கிட்டிற்று. எதெதற்கோ படபடக்கும், துடிதுடிக்கும், குமுறும், அனிச்ச மலர்களாகிய நம்மவர்க்குச் சொல்லலாமா?