அசோகனுடைய சாஸனங்கள்/பதினான்கு சாஸனங்கள்

III. பதினான்கு முக்கிய சாஸனங்கள்.

இவை அசோகனின் 13. 14-வது ஆண்டுகளில் பிரசுரஞ் செய்யப்பட்டவை. இந்தப் பதினான்கு சாஸனங்களுக்கும் கருத்தில் ஒத்திருக்கின்றதும் பாஷையில் ஏறக்குறைய நெருங்கிய சம்பந்தமுள்ளதுமான ஆறு பிரதிகள் கிடைத்திருக்கின்றன. இவ்வாறு பிரதிகளைத் தவிர வேறு பல முற்காலங்களில் இருந்திருக்கலாம். பம்பாய்க்கு சமீபமாயுள்ள ஸொப்பாரா என்ற பழைய துறைமுகப் பட்டணத்தில் ஒரு பிரதி இருந்ததற்கு நமக்கு நல்ல லக்ஷியம் மட்டும் கிடைத்திருக்கிறது. இப்போது அங்கே எட்டாவது சாஸனம் எழுதப்பட்டுள்ள பாறையின் துண்டிருக்கின்றது.

பதினான்கு சாஸனங்களுக்குப் பிரதிகள் உள்ள இடங்களாவன:-

1. இந்தியாவின் வடமேற்குக் கோடியில் ஸிந்துநதி காபூல் நதியோடு சங்கமமாகும் பிரதேசத்தின் அருகில் ஷாபாஸ்கர்ஹி. இங்குள்ள பிரதி நல்ல ஸ்திதியில் இருக்கிறது. சமரஸபாவத்தைப்பற்றிய . 12.ம் சாஸனம் பாறையின் மற்றொரு பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிறது.எல்லா சாஸனங்களும் ஒருமித்து அரசனின் 14.வது பட்டாபிஷேக வருஷத்தில் இங்கு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2. பஞ்சாபில் ஜிலம் நதிக்கரையருகில் ஹஸாரர் ஜில்லாவிலுள்ள மான்ஸரா. இவ்விடத்திலும் ஷாபாஸ் கர்ஹியிலும் உள்ள சாஸனங்கள் கரோஷ்டி லிபியில் எழுதப்பட்டவை. அசோகனுடைய மற்ற லிகிதங்கள் எல்லாம் ப்ராம்மி லிபியில் எழுதப்பட்டவை,

3. இமயமலைச் சாரலில் முஸ்ஸோரி என்ற சுகவாஸ ஸ்தலத்தின் அருகிலுள்ள கால்ஸீ. இங்குள்ள பிரதி சுமாராய் நல்ல ஸ்திதியில் இருக்கிறது. ஒரு யானையின் படம் லிகிதங்களுக்குமுன் வரையப்பட்டிருக்கிறது.

4. குஜரத்தில் கத்தயவாட் தீபகற்பத்தின் நடுவிலுள்ள கிர்நார். அசோகனின் லிகிதமும் மற்ற லிகிதங்களும் இங்குள்ள மலையில் எழுதப்பட் டிருக்கின்றன. இங்கே 5-வதும் 13.வதும் சாஸனங்கள் மிகச் சிதைந்திருக்கின்றன,

5. முன் காலங்களில் கலிங்கம் எனப்படும் உரியர் நாட்டில் இரண்டு பிரதிகள் இருக்கின்றன. வடக்கே மஹாநதியின் முகத்தில் தவுளீ என்ற ஊரில் ஒரு நகலும்,

6. ௸ உரியர் நாட்டில் தற்காலம் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த கஞ்சம் ஜில்லாவில் ஜௌகட என்ற மலைக்கோட்டையில் மற்ற நகலும் இருக்கின்றன. இவ்விரண்டு ஸ்தலங்களிலுள்ள அசோக சாஸனங்களில் சில விசேஷங்கள் காணப்படுகின்றன, 1 முதல் 10 வரையுமுள்ள சாஸனங்கள் இவ்விரண்டு ஸ்தலங்களிலும், மற்ற நான்கு ஸ்தலங்களில் காணப்படுவதுபோலிருந்தாலும் 11, 12, 13-வது சாஸனங்களை விட்டுவிட்டு அவற்றிற்குப் பதிலாக இரண்டு புது சாஸனங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கலிங்கப் பிரஜைகளுக்கு மட்டும் பிரத்யேகமானவை பற்றி அவை மற்ற நான்கு இடங்களிலும் விடப்பட்டன போலும். இவ்விரண்டு சாஸனங்களை நாம் கலிங்க சாஸனங்களென்போம்.

1.கொல்லாமை

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் ஆக்கினையாக இத்தர்மலிகிதம் வரையப்பட்டது. இங்கே (என் தலைநகரத்தில்) யாதொரு பிராணியையும் பலியாகங்களுக்காக வதை செய்யக் கூடாது. ஸமாஜங்களில் நடக்கும் விருந்தும் தவிர்க்கப்படுகிறது. ஏனென்றால் ஸமாஜங்களில் பலவித தோஷங்களுண்டென்று தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனுக்குத் தெரியும். ஆனால் சிற்சில ஸமாஜங்கள் நல்ல வையென்று அவர் அபிப்பிராயப்படுகிறார். முன் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனின் மடப்பள்ளியில் லக்ஷக்கணக்காகப் பலவித உயிர்ப் பிராணிகள் கறிக்காக வதை செய்யப்பட்டு வந்தன. இக் கட்டளை இடப்படும் இச் சமயமும் தினமும் மூன்று பிராணிகள் கொல்லப்படுகின்றன. அவையாவன, இரண்டு மயில்களும் சிலவேளைகளில் அதிகப்படியாக ஒரு மானும். இனிமேல் இம்மூன்று பிராணிகள் கூட வதை செய்யப்பட மாட்டா.

மொத்தம் 8 வாக்கியங்கள்.

I. ஸமாஜங்களைப்பற்றி கௌடலயம் என்ற அர்த்த சாஸ்திரத்தில் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. இவை பலகாலமாக ஏற்பட்ட ஜாதிமத ஸபைகள். விருந்துக்கச்சேரி, பாட்டு, கூத்துக்கள் இச் சபைகளில் அதிக மும்முரமாக நடந்துவந்தன, அரசன் இச்சபைகளைப்பற்றி மிக்க ஜாக்கிரதையா யிருக்கவேண்டுமென்று ௸ அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

2.பியதஸி ஜீவராசிகளுக்குச் செய்யும் பணிவிடை

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனால் ஆளப்பட்ட ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலும், அதுமட்டுமல்ல, சோழர், பாண்டியர், ஸத்யபுத்திரர், கேரளபுத்திரர் போன்ற அயல் அரசர் நாட்டிலும், மிக அப்பாலுள்ள தாம்பபம்னிI யவன ராஜன் அன்டியோக்கன்,2 மேல்சொல்லிய அன்டியோக்கனுக்கு அண்டை அரசர்கள்3 நாடுகளிலும் எல்லா இடத்தும் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் சிகித்ஸைக்காக இருவித ஏற்பாடுகள் செய்திருக்கிறான் ; அவையாவன, மனிதருக்கு வைத்தியசாலை மிருகங்களுக்கு வைத்தியசாலை. மேலும் மனிதருக்கு உபயோகமானதும் மிருகங்களுக்கு உபயோகமானதுமான மருந்து மூலிகைகள் எவையோ அவை கிடைக்கு மிடங்களிலிருந்து எங்கெங்கு கிடைக்கவில்லையோ அவ்விடங்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிர் செய்யப்படுகின்றன. கனி காய் கிழங்கு வகைகளும் வரவழைக்கப்பட்டுப் பயிராகின்றன. மனிதருக்கும் மற்றப் பிராணிகளுக்கும் சௌக்கியத்தைக் கொடுப்பதற்காகப் பாதையோ ங்களில் கிணறுகள் வெட்டவும் நிழல் கொடுக்கும் மரங்கள் வளர்க்கவும் செய்யப்படுகின்றன.

மொத்தம் 4 வாக்கியங்கள்.

1. இங்கு தாம்பபம்னி என்பது, திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள தாம்பிரபர்ணி நதியைக் குறிக்கவில்லையென்று தோன்று கிறது. இது சிலோன் தீவின் வடபாகத்தின் பெயராயுமிருந்தது. மகாவம்சம். அத். 6. இத் தீவே சாஸனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது போலும். ஸ்ட்ராபோ முதலிய கிரேக்க ரோம யாத்திரிகர்கள் சிலோன் தீவுக்கு தாப்ரபோனெ என்று பெயர் கொடுத்திருக்கின்றனர். அதனால் அசோகன் தாம்பபம்னி என்ற பெயரால் சிலோன் தீவையேகுறிப்பிடுகின்றான் போலும்.

2. அண்டியோக்கன் II (கி. பி. 261-246.) சந்திரகுப்த மௌரியனோடு போர்செய்து பின் சமாதானத்துக்கு வந்த ஸெல்யூக்கஸ்ஸினுடைய பேரன்.

3. அண்டியோக்கஸுக்கு நான்கு அண்டை அரசர்களைப் பற்றி 13-ம் சாஸனத்தில் காண்க.

3. அனுஸம்யானம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். நான் பட்டம் சூடிய பன்னிரண்டு வருஷங்களுக்குப்பின் இந்த ஆணையைப் பிறப்பித்தேன். என்னுடைய ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலும் யுக்தரும்1 ரஜூகரும் பிராதேசிகரும் ஐந்துவருஷங்களுக்கு ஒரு முறை அனுஸம்யானம்2 செய்யவேண்டும் ; எதற்காகவென்றால், தர்மத்தைப் போதிப்பதற்கும் தந்தம் வேலையைச் சரிவர முடிப்பதற்குமே. தாய் தந்தையரைக் கவனிப்பது மேன்மை; சினேகிதர், அறிமுகமானவர், உறவினர், பிராமணர், சமணர் இவர்களுக்கு ஈதல் மேன்மை ; பிராணிகளைக் கொல்லாமை, செலவில் சிக்கனம், செல்வத்தைக் கருதாமை மேன்மை.

பரிஷத்து சபைகள்3 கணனங்களைச் சார்ந்த யுக்தர்களை இக்கட்டளையை யனுசரித்து நடக்கும்படிச் செய்யவேண்டும்.4

மொத்தம் 5 வாக்கியங்கள்.

1. முன் 54-ம் பக்கம் பார்க்க. கௌடல்யம் அர்த்த சாஸ்திரத்திலும் யுக்தரின் வேலையைப் பற்றி விரிவாகக் கூறியிருக்கிறது.

2. அனுஸம்யானம் என்ற சொல்லின்கருத்தைப் பற்றி அபிப்பிராய பேதமுண்டென்பதை, முன் 55-ம் பக்கம் காண்க.

3. ஐந்து வகை பௌத்த பிக்ஷுக்கள் சேர்ந்த சமூஹத்துக்குப் பரிஷத்துக்கள் என்று பெயர்.

4. பரிஸாபி யுதே ஆஞபயிஸ்தி மணனாயம் ஹெது தொவ வ்யஞ்ஜனதோவ. வ்யஞ்னம் என்றால் அசோகனுடைய ஆணை, வாக்கியத்தின் கருத்து நன்றாக விளங்கவில்லை. கணனா என்றால் வரவு செலவு கணக்கு அதிகாரிகளென்று ஸ்ரீ. S. R. பந்தர்க்கர் கூறுகிறார். அவதாரிகை 56-ம். பக்கம் பார்க்கவும்.

4. தர்மத்தைப் பரவச் செய்தல்,

இதன் முன் பல வருடங்களாகப் பிராணி இம்சையும், பிராணிகளைப் பலியிடுதலும், சுற்றத்தாரை அசட்டைசெய்வதும், பிராமண சமணர்களை அவமதிப்பதும் அதிகரித்து வந்தன. இப்போது தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் தர்மத்தை வழிபட்டிருப்பதால் தர்மத்தின் ஜயபேரிகை முழங்குகின்றது. ஜனங்கள், யானைத்திருவிழா,தேர்த்திருவிழா, லக்ஷ தீபம் முதலிய உற்சவங்களைக் கண்டு களிக்கின்றனர். பல ஆண்டுகளாக ஒருபோதும் சம்பவியாத விசேஷம் தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் தர்மத்தைத் தழுவியதால் சம்பவித்திருக்கின்றது. பிராணிகளைக் கொல்லாமை, ஜீவராசிகளிடம் அஹிம்ஸை, உறவினரிடம் அன்பு, பிராமண சமணர்களிடம் கௌரவம், தாய்தந்தையருக்குச் சுச்ரூஷை, மந்திரக்கிழவருக்குச் சுச்ரூஷை என்ற நற்குணங்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசனது புத்திரர்களும் பௌத்திரர்களும் பௌத்திரரின் பிள்ளைகளும் கல்பாந்த காலம் வரையும் தர்மத்திலும் சீலத்திலும் வழுவாது நிலைநின்று தர்மத்தைப் போதிக்கக் கடவர். தர்மத்தைக் கற்பிப்பது உயர்ந்த காரியமே.சீலமில்லாதவன் தர் மத்தைத் தழுவி ஒழுகுவது கஷ்டமாம். ஆயினும் இவ்விஷயத்தில் மனிதன் உள்ளம் சீர்திருந்துவதும் முன்னிலும் கெடாமலிருப்பதும் இரண்டும் சிறந்ததே. மனிதர் தம் குணத்தை அதிகரிக்க முயல்வதற்கும் குணம் குன்றுவதைத் தடுப்பதற்குமே இது எழுதப்பட்டுள்ளது. தேவர்களுக்குப் பிரியமான பிரியதர்சி அரசன் முடிசூடி பன்னிரண்டு வருடங்களான பின் இங்ஙனம் வரையச் செய்தார்.

மொத்தம் 12 வாக்கியங்கள். பாஹியன் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாடலிபுரத்தில் மிக விமரிசையுடன் நடந்த இவ்வித திருவிழாக்களை வருணித்திருக்கிறான்.

5. தர்மமகாத்திரரின் அலுவல்கள்

.

தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் இப்படிச் சொல்லுகிறான். நன்மைகள் செய்வது மிகக் கஷ்டம். நற்கருமங்களைத் தொடங்குகிறவன் வெகு சிரமமான காரியத்தைச் செய்கிறான். பல நற்கருமங்கள் என்னால் செய்யப்பட்டிருக்கின்றன.1 என்னுடைய பிள்ளைகளும் பேரரும் யுகத்தின் முடிவுகாலம் வரையும் இவ் வண்ணமே நடப்பாராகில் சுகிருதம் செய்தவராவர். எவன் ஒருவன் தனது கடமையை அசட்டை செய்கிறானோ அவன் பாபத்தைச் சம்பாதித்துக் கொள்ளுகிறான். பாபம் செய்வது நிரம்ப சுலபம்.

ஆதிமுதல் இதுவரையும் தர்மமகாமாத்திரர் என்ற அதிகாரிகள் கிடையா, நான் முடிசூடி பதின்மூன்று வருடங்கள் சென்ற பின் தர்மமகாமாத்திரரை நியமனஞ் செய்தேன். எல்லா மதத்தினருக்கும் தர்மத்தைப் போதித்து, தர்மத்தைச் சேர்ந்த விஷயங்களைக் கவனித்து மேற்கெல்லைப் புறமுள்ள யவனர் காம்போஜர் காந்தாரர் ராஷ்டிரிகர் பிதேனிகர் முதலியோரையும் நோக்கி, இவர் பிரவிர்த்தி செய்து வருகின்றனர். சேவகர் பிராமணர் பணக்காரர், அனாதைகள், கிழவர் முதலியோருக்குத் தர்மத்தை யனுசரித்து2 உதவிகள் புரிந்து தர்மத்தை அனுசரித்தவர்களைக் கவலையிலிருந்து நீக்கி உதவுவதற்காகவும் இவர் பிரவிர்த்திசெய்து வருகின்றனர். வயது சென்றவராதலாலோ, அல்லது பிள்ளை குட்டிகளுடையவராதலாலோ, அல்லது குற்றமில்லாதவ ரென்று மதிக்கப்படுவதாலோ, கைதிகளையும் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய சிபார்சு செய்து அவர்களைக் கவலைகளிலிருந்து நீக்கி இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர். பாடலிபுரத்திலும், புறமேயுள்ள பட்டணங்களிலும், அந்தப்புர ஜனங்களிடையும், சேவகரிடையும், சகோதர சகோதரிகளிடையும், மற்ற உறவினரிடையும் இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர். எனது ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலும் தர்ம காரியங்களை மேற் பார்க்கவும் தர்மத்தை ஸ்தாபிக்கவும் தர்ம விஷயங்களைக் கவனிக்கவும் 2 தானங்களை நடத்தவும் இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர். இவ்வேற்பாடு வெகுநாள் நீடித்து நிற்கவும் எனது பிரஜைகள் இந்த ஏற்பாட்டை எந்நாளும் பின்பற்றவும் இந்த தர்மலிகிதம் எழுதப்பட்டது.

மொத்தம் 15 வாக்கியங்கள். இச்சாஸனத்தில் பொருள் விளங்காத பலசொற்கள்வருகின்றன. 12-வது வாக்கியம் உள்ளவற்றில் மிகக் கடினமாயிருக்கிறது. அங்கு படிவியானய (சீபார்சுசெய்ய?) கதாஹிகாரேஸு (குற்றமற்றவர்பால்) முதலிய பதங்களுக்குச் சரியான கருத்து இனிமேல் தீர்மானமாகவேண்டும். பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் கருத்தை மொழிப் பெயர்ப்பில் எழுதுகிறோம்.

1. அரசனால் செய்யப்பட்ட நற்கருமங்கள் ஏழாம் ஸ்தம்பசாஸனத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன. தர்மமகாமாத்திரரின் வேலையைப்பற்றி இங்கும் கூறப்படுகிறது.
2. தர்மத்தைச் சேர்ந்த விஷயங்கள் என்ற சொற்றொடர் தர்மயுதா என்பதன் மொழி பெயர்ப்பு. இச்சொல் இச்சாஸனத்தில் மூன்று தடவை வெவ்வேறு வேற்றுமையிலும் நான்காம் சாஸனத்திலும் ஏழாம் ஸ்தம்ப சாஸனத்திலும் வருகிறது. ஸ்ரீ. வின்ஸென்ட் ஸ்மித் வேறு வித்வான்களைப் பின்பற்றி இச் சொல்லுக்கு தர்மயுக்தர் எனப்படும் ஓர் வகை அதிகாரிகளென்று பொருள் கூறுகிறார். இந்த அதிகாரிகள் தர்மமகாமாத்திரரின் கீழ் தர்மகாரியங்களைக் கவனிப்பதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் போலும். இப் பெயர்ப்பு உசிதமென்று தோன்றவில்லை. தர்ம யுக்தமான, தர்மீயமான, தர்மத்தை யனுசரித்த, என்ற பொதுவான கருத்தே பொருந்துமென நமக்குத் தோன்றுகிறது.

6. ஊக்க முடைமை.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். எல்லா வேளைகளிலும் ராஜகாரியங்களைக் கவனிப்பதும் விசாரணைகளைத் தானாக நடத்துவதும் வெகுகாலமாக நடைபெறவில்லை. இப்பொழுது எனது ஏற்பாடு பின்வருமாறு, எல்லா நேரங்களிலும் போஜன காலத்திலோ, அந்தப்புரத்திலோ சயன அறையிலோ, (யானை குதிரைகளின்) லாயங்களிலோ,ஸாரத்தியம் செய்து கொண்டிருக்கும்பொழுதோ,உத்தியான வனத்திலோ,எங்கும் ஜனங்களின் வழக்குகளை எனக்கு அறிவித்து நியாய விசாரணைசெய்ய பதிவேதகர் இருக்கின்றனர். சகல ஜனங்களுடைய காரியங்களையும் நான் கவனிக்கிறேன். வாய்மொழியாக அல்லது வேறுவிதமாக நான் ஓர் உத்தரவிட்டாலும், அல்லது அதிக அவசரமான செய்தி யொன்று மகாமாத்திரருக்கு அனுப்பவேண்டுமென்றாலும், அதிகாரிகளின் பரிஷத்தால்(கூட்டத்தால்) தீர்மானிக்கப்பட்ட வழக்கொன்றை திரும்ப விசாரணை செய்ய வேண்டு மென்றாலும் கொஞ்சமும் காலதாமதமின்றி விஷயங்களை உடனுக்குடன் எனக்கு அறிவிக்க வேண்டும். இதுவே எனது ஆக்ஞை. எனது ஜாக்கிரதையிலும் அரசாட்சி விஷயமான ஊக்கத்திலும் நான் ஒருபோதும் திருப்தி யடைகிறதில்லை. நான் சகல ஜனங்களுடையவும் நன்மையை கருதக்கடவேன். இதற்கு மூலகாரணம் ஜாக்கிரதையும் ஊக்கமுடைமையுமே2 சகல ஜனங்களுடையவும் நன்மையைக் கருதுவதைவிட மேன்மையான கருமமில்லை. எதற்காக நான் இங்ஙனம் பிரயாசையுடன் முயன்றுவருகிறேன்? ஜீவராசிகளுக்கு நான் செலுத்தவேண்டிய கடன் செல்லாவதற்கும் சிலருக்கேனும் இம்மையில் சுகமும் மறுமையில் சுவர்க்கமும் கிடைப்பதற்குமேயாம். இதற்காகவே இந்த தர்மலிபி வரையப்பட்டிருக்கிறது. எதற்காக ? என் கட்டளை நெடுங்காலம் நிலைபெறவும் என் புத்திரரும் பௌத்திரரும் இவ்விதமே உலகத்தின் க்ஷேமத்திற்காக உழைத்து வருவதற்குமே. விசேஷமான ஊக்கமிருந்தாலன்றி இது கஷ்டமான காரியம்.

மொத்தம் 17 வாக்கியங்கள், ஐந்தாம் சாஸனத்திற் போல் இங்கும் ஒரு வாக்கியம் கருத்து விளங்குவதற்குக் கஷ்டமாயிருக்கிறது. அது, 6-வது வாக்கியம்.

1. வினீதம் என்ற சொல்லுக்கு சிறுவண்டி யென்றும் கவாத்துப் பழகும் இடமென்றும் பழகின குதிரை யென்றும் பொருள் கூறப்படுகின்றன.“வினீதா : ஸாயு வாஹிந:" அமரம் II. 8.44.

2. உத்யானம் ஜாக்கிரதை. அர்த்தஸந்தீரணா அரசாட்சி விஷயமான ஊக்கம். கவனம் : கௌடல்யனுடைய அர்த்த சாஸ்திரத்திலும் இக்குணம் அரசருக்கு எவ்வளவு அவசியமென்று எழுதியிருக்கிறது (அதி. I. அத் 19.) ஆயினும் அரசனுடைய ஒவ்வொரு வேலைக்கும் நேரம் குறிப்பிட்டு அவனது தினசரியை மிக நுட்பமாகவிளக்கப்பட்டிருக்கிறது.

அசோகன் இவ்விஷயத்தில் பழைய வழக்கங்களின் நிபந்தனையை அங்கீகரிக்க வில்லையென்று இச்சாஸனத்திலிருந்து தெளிவாகும்.

7.தர்மத்தை முடியுமளவு அனுசரித்தல்.

தேவர்களுக்குப் பிரியனான பிரியதரிசி யரசன் எல்லா இடங்களிலும் சகல மதத்தோரும் சேர்ந்து வாழவேண்டுமென்று விரும்புகிறான். ஏனெனில், எல்லா மதங்களும் அடக்கமுடைமையும்1 மனத் தூய்மையும் அவசியமென்று சொல்லுவதில் ஒத்திருக்கின்றன. ஆனால், மனிதர் தம் மனப்போக்கிலும் பலவிதமாயிருக் கின்றனர் ; இச்சைகளிலும் பலவிதமாயிருக்கின்றனர். சில மதத்தினர் (என் கட்டளைகளை) முற்றிலும் பின்பற்றலாம். மற்ற வகுப்பார் சில பாகங்களைப் பின்பற்றலாம். அளவற்ற ஈகை எல்லோருக்கும் சாத்தியமில்லை ; ஆனாலும் அடக்கமுடைமை, மனத்தூய்மை,2 செய்ந்நன்றியறிதல், ஸ்திரபுத்தி இவை எக்காலத்தும் உயர்வைத் தருகின்றனவாம்.

மொத்தம் 5 வாக்கியங்கள்.

8. அசோகன் பொழுதுபோக்கு.

முற்காலங்களில் அரசர்1 வேடிக்கையாக யாத்திரைகள் போவதுண்டு. வேட்டையாடுதல் முதலிய பொழுதுபோக்குகள் இயல்பாயிருந்தன ஆனால் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் தான் முடிசூடிப் பத்து வருடங்களானபின் ஸம்போதியைப்2 பின்பற்றினான். அதனால், தர்மீயமான யாத்திரைகள் ஏற்பட்டன. இவற்றையொட்டி பிராமணரையும் சமணரையும் தரிசனம் செய்வதும் வெகுமதிகள்3 செய்வதும் பொற்காசுடன் ஞானச்சிரேஷ்டர்களைத் தரிசனம் செய்வதும் நாடுகளில் உள்ள குடி ஜனங்களைப் பார்ப்பதும் தர்மத்தை உபதேசம் செய்வதும் தர்மவிவாதம் செய்வதும் நடைபெற்று வருகின்றன. அதனால் தேவர்களுக்குப் பிரியனான பியதஸிக்கு சுகபோகங்களிற் கிடைக்கும் பங்கு முன்போன்றல்லாது இவ்விதமே ஆகும்.

6 வாக்கியங்கள்.

1.அசோகனுக்கு முன் ஆண்டுவந்தஅரசர்களைத் தேவானாம் ப்ரிய அல்லது தேவர் பிரியர் என்னும் பதத்தால் வட இந்தியப் பிரதிகளில் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.

2, ஸம்ஸோயி.-பௌத்தமதக் கிரந்தங்களில் எட்டுப் படிக ளுடைய ஞான மார்க்கத்தை வழிபடுகிறவனுக்கு ‘ஸம்போய பராயணன் ' என்று பெயர் வழங்குகின்றது. ஸம்போதி என்றால் பூர்ண ஞானத்தை அடைந்த நிலைமை. இச்சொல் கயையில் உள்ள போதி விருட்சத்தைக் குறிக்கிறதென்று ஸ்ரீமான் பந்தர்கர் அபிப்பிராயப்படுகிறார். இது பொருத்தமென்று தோன்றவில்லை.
3. தெய்ரர், தேரர், ஸ்தாவீரர் --பௌத்த பிக்ஷுக்கள் வசித்துவரும் மடங்களின் தலைவருக்கும் இப்பெயர் உண்டு; ஆனால், இச்சாஸனங்கள் பொதுவான கருத்தே கொள்ளத்தக்கதென்று நினைத்து, ஞானச்சிரேஷ்டர்கள், மந்தரக்கிழவர் என்று மொழி பெயர்த் திருக்கிறோம்.

9. உண்மைச் சடங்கு.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். மனிதர், மங்களம்I உண்டாகும் பொருட்டுச் சடங்குகள் செய்கிறார்கள். கஷ்டகாலங்களிலும் புத்திரரின் கலியாண காலங்களிலும் புத்திரிகளின் விவாககாலங்களிலும் மக்கட்பேறுற்ற காலங்களிலும் பிரயாணம் ஆரம்பம் செய்யும்போதும் இதுபோன்ற வேறு காலங்களிலும் ஜனங்கள் சடங்குகளைச் செய்கின்றனர். இவ் வேளைகளில், மகளிர், பலவும் பலவிதமுமானவும் இழிவும் உபயோகமில்லாததுமான சடங்குகளைச் செய்கிறார்கள். மங்கள கருமங்கள் (சடங்குகள்) அனுசரிக்கத் தக்கனவே. ஆனாலும், இப்படிப்பட்ட சடங்குகளினாற் சிறிதும் பயனில்லை. இதற்கு எதிராகத் தர்மம் என்ற சடங்கோ அத்யந்த லாபத்தை தருவதாக இருக்கிறது. அஃது என்னவெனில், அடிமைகளையும் சேவகர்களையும் அன்புடன் நடத்தல், குருமார்களைப் போற்றல், பிராணிகளிடத்தில் கருணைகாட்டல், பிராமணர் சமணர்களுக்குத் தானஞ்செய்தல் ; இவை யாவும் மேன்மையாம். இவையே தர்மகருமங்கள் எனப்பெயர் பெறும். (எல்லாரும் தந்தம்) தந்தைக்கும் மகனுக்கும் சகோதரனுக்கும் நண்பனுக்கும் எஜமானனுக்கும் தோழனுக்கும் அயலானுக்கும் 'இதுவே புனிதமானது, இதுவே நன்மையை நிலை நாட்டுவது, இவ்வித மங்களமே செய்யத்தக்கது' எனப் போதிக்க வேண்டும்.

A. இது நான் செய்யத் தக்கது; ஏனென்றால், இவ்வுலக விஷயமான சடங்குகளின் பிரயோஜனம் சம்சயமானது; அவற்றால் நினைத்த காரியம் கைகூடினும் கூடலாம் பயனின்றியும் போகலாம். எப்படியாயினும் அவை இவ்வுலகத்திற்குரியனவே. ஆனால், தர்மம் என்ற சடங்கோ அழிவுள்ளதன்று; அது இம்மையில் நினைத்த காரியங்களைக் கைகூடச் செய்யாவிடினும் பரலோகத்தில் அனந்தமான புண்ணியத்தை நிச்சயம் விளைவிக்கும். இகலோக உத்தேசங்களும் கைகூடுமாயின் தர்மம் என்ற சடங்குக்கு இரட்டைப் பங்கு லாபம் உண்டு. இம்மையில் காரிய சித்தியும் மறுமையில் எல்லையில்லாப் புண்ணியமும் தர்மச் சடங்கின் பயனாகின்றன.

B. ஈகை மிகவும் மேன்மை யென்று சொல்லப்படுகின்றது. தர்மத்தை தானஞ்செய்வதையும் தர்மத்தை அனுக்கிரகஞ் செய்வதையும் விடச் சிறந்த தானமும் அனுக்கிரகமும் கிடையா ; அதனால் சினேகிதனுக்கும் அன்பனுக்கும் உறவினனுக்கும் உபகாரிக்கும் இதுவே செய்யத்தக்கது; இதுவே மேன்மை; இதுவே சுவர்க்கத்தை அளிக்கக் கூடியது என்று சொல்ல வேண்டும்; சுவர்க்கம் அடைய முயல்வதைக் காட்டிலும் உயர்ந்த கருமம் என்ன இருக் கின்றது?

இந்தச் சாஸனத்தில் வடநாட்டுப் பிரதிகளுக்கும் மற்றப் பிரதிகளுக்கும் முதல் ஒன்பது வாக்கியங்கள் பொது, (A) என்ற பாராவில் உள்ள வாக்கியங்கள் ஆறும் வடஇந்தியப் பிரதிகளில் உள்ளவை. (B) என்ற பாராவின் வாக்கியங்கள் மற்ற மூன்று பிரதிகளிலும் உள்ளவை.

I. மங்களமுண்டாகும் பொருட்டுச் செய்யப்படும் சடங்குகள், ‘மங்களம்’ என்றே மூலத்தில் குறிக்கப்பட்டிருக்கின்றன.

10 உண்மையான புகழ்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் புகழிலும் கீர்த்தியிலும் அதிகப் பிரயோஜனமுள்ளதாக நினைக்கவில்லையெனினும் என்னுடைய ஜனங்கள் நெடுங்காலமளவும் தர்மத்தைக் கற்பித்தும் கேட்டும் தர்மத்தை வழிபட்டும் வாழ்ந்துவரத் தூண்டும் புகழையும் கீர்த்தியையும் விரும்புகின்றான். இவ்வொன்றிற்காகவே தேவர் பிரியன் பியதஸி அரசன் புகழையும் கீர்த்தியையும் வேண்டுகின்றான். தேவர் பிரியன் பியதஸி அரசன் எடுத்துக்கொள்ளும் பெருமுயற்சிகள் யாவும் மறுமைக்காகவே. ஏன்? எல்லோரும் பயத்திலிருந்து விடுபட வேண்டும்.1 அச்சமுடைமை புண்ணியத்திற்கு விரோதமானது.2 பெரியோருக்காயினும் சரி சிறியோருக்காயினும் சரி, நீடித்த முயற்சியாலும் யாவற்றையும் துறப்பதாலுமே 3 இது கிடைக்கின்றது. பிரத்தியேகமாகப் பெரியோருக்கு இது மிக அரிதாம்.

8 வாக்கியங்கள்.

1. ஸகலே அப பரிஸ்ரவே அஸ : யாவரும் அல்பமான பயமுடையவராதல் வேண்டும். அப-அல்ப.

2. ஏஸ து பரிஸ்ரவே ய அபுண்ணம். அச்ச முடைத்தல் தீங்கென்று கருத்துபோலும்.

3. ஸவம் பரிசஜித்ப. ஸர்கம் பரித்யஜ்ய. வடமொழி.

11 தர்மத்தின் தானம்.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இவ்விதம் சொல்லுகிறான். தர்மத்தைத் தானஞ் செய்வதைவிடப் பெரிய தானமில்லை. அதுபோலவே தர்மத்தில் நேசமும் தர்மத்தில் உறவும் தர்மத்தில் உரிமையும். அவை பின்வருமாறாம். தாய்தந்தையரைக் கௌரவித்தல், நண்பர் அயலார் உறவினர்களுக்கும் பிராமணர் சமணர்களுக்கும் ஈதல், பிராணிகளைக் கொல்லாமை, இவையே மேன்மை. இதுவே புனிதமானது ; இதுவே செய்யக் கடவது' என்ற செய்தியை எல்லாரும் தந்தைக்கும் மகனுக்கும் சகோதரனுக்கும் எஜமானனுக்கும் நண்பர் அயலார் உறவினருக்குங்கூட தெரிவிக்கவேண்டும். இப்படிப்பட்ட தானமூலமாக ஒருவன் இம்மைப்பயனை யடைவதுடன் மறுமைக்கும் - அனந்தமான புண்ணியத்தை யடைகிறான்.

7 வாக்கியங்கள்.

தவுளியிலும் ஜௌகடத்திலும் இச் சாஸனமும் பின்வரும் 12, 13-ம் சாஸனங்களும் கிடையா; ஆனால் ஒன்பதாம் சாஸனத்தினிறுதியில் 108-ம் பக்கத்தில் B என்ற பாராவிலுள்ள வாக்கியங்கள் ஆங்கு இச் சாஸனத்தின் கருத்தை ஒலிக்கச் செய்கின்றன.

12. சமரசபாவம்

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் எல்லாமதத்தினருக்கும் இல்லறத்தார் துறவிகள் எனப் பாராட்டாமல் கொடைகள் அளித்து பூஜை மரியாதைகள் செய்து வருகிறான். தேவர் பிரியன் வற்புறுத்துவது என்னவென்றால், தானம் முதலிய வெளி மரியாதைகள் பாராட்டப்படவேண்டுமென் றல்ல, சகல மதங்களுக்கிடையிலும் சமரசபாவம்1 உண்டாக வேண்டுமென்பதே. சமரசபாவம் என்பது பலவிதமாகும். அதற்கு மூலாதாரம் சொல்நெறியே2. அஃது எப்படிப்பட்ட தென்றால், காரணமின்றிப் பிறர்மதங்களைத் தூஷணை செய்வதையும் சுயமதத்திற்குப் பக்ஷபாதமான கண்யஞ் செய்வதையும் தவிர்த்தலே. சகல மதங்களிலும் ஓர் விஷயத்தில் அல்லது மற்றோர் விஷயத்தில் மேன்மையிருப்பதால் புறமதங்களுக்கு எல்லோருடைய மரியாதையும் உரியது.

இப்படிப்பட்ட நடக்கையால் சுயமதத்திற்கு கண்யம் ஏற்படுவதோடுகூட, புறமதங்களுக்கும் கண்யம் ஏற்படுகிறது. இதற்கு நேர் எதிராக நடப்பவன் புறமதங்களை அகௌரவம் செய்வதோடுகூடத் தன் சொந்த மதத்திற்கும் கேடு விளைத்துக்கொள்கிறான். அது எப்படி என்றால், சுயமதத்தின்பேரிலுள்ள பற்றுதலினால், ‘நான் எனது சுயமதத்திற்குப் பெருமை அளிப்பேன்' என்று கருதி ஒருவன் சுயமதத்தையே புகழ்ந்து மற்ற மதங்களைப் பழிக்கிறான். இவ்வித மனோபாவத்தால் தனது சுயமதத்திற்கே அவன் மிகுந்த கெடுதியைச் செய்து கொள்கிறான். ஆனால் சமதிருஷ்டி3 மிகுந்த சிலாக்கியம் அது என்னவெனின், நம் கக்ஷியைச் சேராதாரின் மதபோதனைகளுக்குச் செவி கொடுத்து நாம் அவற்றை மதிக்கவும் வேண்டும். தேவர்பிரியன் விருப்பம் இதுவே : எல்லா மதத்தினரும் ஆழ்ந்த கல்வி கேள்வி யுடையோராய், பரஸ்பர அன்புடையோராய் வாழ்ந்து வர வேண்டும். இதுபற்றி எல்லா மதத்தினருக்கும் பின்வரும் அறிக்கை செய்யப்படுகின்றது. தேவர்பிரியன் வெளிவேஷமான தானமரியாதைகளைவிட சகல சமயங்களுக்குள்ளும் சமரச பாவமும் பக்திபகுமானமுமே4 முக்கியமென நினைக்கின்றான்.

இதற்காகவே தர்மமகாமாத்திரரும் ஸ்திரீ மகாமாத்திரரும் வ்ருசபூமிகரும் 5 மற்ற அதிகார வர்க்கத்தினரும்6 வேலைசெய்து வருகின்றனர். இதன் பயனாவது, சுயமதம் அபிவிர்த்தி அடைகின்றது, தர்மமும் பிரகாசமாகின்றது.

ஆக 17 வாக்கியங்கள். I. ஸாரவிர்யி. 2. வவாதி.

3. ஸ்மவாய. 4. வஹுகா. பக்திபகுமானம் ; ல்ஹுகா. தூஷணைகள்.

5. வருவஹூமிகர் என்ற சொல்லுக்குப் பசு மிருகங்கள் கட்டியிருக்கும் தொழுக்களைப் பரிசோதிக்கிற அதிகாரிகளென்று பொருள் கூறப்படுகிறது, ஸ்ரீ, ஜயஸ்வாலின் அபிப்பிராயப்படி இவர் ஓர் வகை தர்ம அதிகாரிகள் போலும், அலைந்து திரிகின்ற ஜனங்களிடையிலும் எல்லைப் பிரதேசங்களில் வசிக்கும் காட்டு ஜாதியாரிடையிலும் தர்மப் பிரசாரஞ்செய்ய நியமிக்கப்பட்டவர், (இந்தியன் ஆண்டிக்குயரி, 1918, பக்கம் 55).

6, நிகாயா, மூன்று நாலு அதிகாரிகள் அடங்கிய கம்மிற்றிகள்

13. தர்மத்தின் வெற்றி.

முடிசூடி எட்டு வருடங்களானபின் தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் கலிங்கத்தை ஜயித்தான். அப்போது நூற்றைம்பதினாயிரம் ஜனங்கள் கைதி செய்யப்படவும் பதினாயிரம் ஜனங்கள் மாண்டுபோகவும் அதிலும் பல மடங்கு ஜனங்கள் வேறு விதத்தில் இறக்கவும் நேர்ந்தனபோலும். கலிங்கத்தைக் கைப் பற்றின பிறகு தேவர் பிரியன் தர்மத்தில் பற்றுள்ளவனாய், தர்மத்தை விரும்பி, தர்மத்தை வழிபட்டு வாழ்பவனாயினான். இப்போது அவன் கலிங்கத்தை ஜயித்ததற்கு மிகவும் வியசனமடைகின்றான். ஜயிக்கப்படாத ஒரு ராஜ்யத்தைக் கைப்பற்றுவதென்றால் ஜனங்களுக்கு, கொலையும் சாவும் சிறையும் ஏற்படுகின்றன. இவ்விஷயம் தேவர் பிரியனுக்கு அதிகமான வருத்தத்தையும் பச்சாத்தாபத்தையும் செய்திருக்கிறது.


தேவர் பிரியன் இன்னும் அதிகம் வியசனமடைவதற்குக் காரணமிருக்கிறது. இங்கேயும் (கலிங்கத்திலும்) பிராமணர், சமணர், மற்றும் பற்பல மதத்தினர், இல்லறத்தோர், எல்லோரும் வசித்து வருகின்றனர். பெரியோருக்குச் சுச்ரூஷை, தாய் தந்தையருக்கு சுச்ரூஷை, குருசுச் ரூஷை, நண்பர் அயலார் உற்றார் உறவினரிடமும் அடிமை சேவகர்களிடமும் அன்பு, முதலிய குணங்கள் இவரிடையிலும் வேரூன்றிக் காணப்படுகின்றன. இப்படிப்பட்டவர்களுக்குக் கொடுமையும் சாவும் அன்பரிட மிருந்து பிரிதலும் நேரிட் டிருக்கின்றன. சிலர் தப்பித்துக்கொண்டபோதிலும், தமது நண்பரோ, அயலாரோ, உற்றாரோ, உறவினரோ கொடிய துன்பத்தை அடைந்திருக்கின்றனர் ; இவ்விதமும் மனிதருக்குக் கஷ்டம் நேர்ந்திருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் நேர்ந்துள்ள கஷ்டங்களுக்காக தேவர் பிரியன் மிகுந்த வருத்தத்தை அடைகின்றான். ஏனென்றால் ஏதாவது ஒரு மதத்தில் நம்பிக்கையில்லாத மனிதரே யில்லை.

கலிங்கத்தில் அப்போது ஜனங்களுக்கு நேர்ந்த சாவு, கொடுமை, சிறைப்பாடு முதலிய கஷ்டங்களில் நூறில் ஒரு பங்கு அல்லது ஆயிரத்தி லொருபங்கு கஷ்டம் இப்போது நேருமாகில் தேவர் பிரியன் மிகுந்த வியாகுலத்தையடைவான். தேவர் பிரியன், தனக்குச் செய்த தீங்கையும் கூடுமளவும் பொறுத்துக்கொள்ள வேண்டுமென்று நினைக்கிறான். தேவர் பிரியன், ராஜ்யத்துக் குட்பட்டு வசித்துவரும் காட்டு ஜாதியாரை அன்புடன் நடத்திக் கடாக்ஷிக்கின்றான். ஏனெனின், அப்படிச் செய்யாவிடின் மற்றொரு சமயம் அவன் அதற்காகப் பச்சாத்தாபப்படும்படி நேரலாம். நான் அவருக்குச் சொல்வதென்ன? தீய வழிகளைத் தவிருங்கள், வருந்தாதேயுங்கள் என்பதே. சகல ஜீவராசிகளுக்கும் அடக்கம், அமைதி, சமாதானம், சந்தோஷம் முதலியன கிடைக்கவேண்டுமென்பது தேவர் பிரியன் விருப்பமாம்.

தர்மம் மூலமாகவுள்ள வெற்றியே முக்கியமானவெற்றியென்பது தேவர்பிரியன் கொள்கை. இவ்வித ஜயம் தேவர் பிரியன் இங்கேயும்(தனது ராஜ்யத்திலும்), எல்லா இடத்தும், எல்லைப் புறமுள்ள ராஜ்யங்களிலும், அறுநூறு யோஜனைக் கப்பாலுள்ள அரசன் அந்தியோக்கன் நாட்டிலும், அந்தியோக்கனுக்கு அப்பாலுள்ள துலமாயன்1, அந்தேகினன், மகன், அலகஸுதரன் என்ற பெயருடைய நால்வர் (4) ராஜ்யங்களிலும், தெற்கு, சோழர், பாண்டியர், தாம்பிரபர்ணி முதலிய பல நாடுகளிலும், இங்கே அரசனது ஏகாதிபத்தியத்து மாகாணங்களிலுள்ள யவனர்2, காம்போஜர், நர்பக தேசத்து நாபபந்தியர், போஜர், பிதேனிகர், ஆந்திரர், புலிந்தர் முதலிய ஜனங்களிடையிலும் எங்கும், தேவர் பிரியனின் தர்மபோதனையைச் செவியுற்று மனிதர் அதைப் பின்பற்றி வருகிறார்கள். தேவர் பிரியனுடைய தூதர் பிரவேசியாத எல்லைப் பிரதேசங்களிலும் மனிதர் தர்மத்தின் போதனையைக்கேட்டு அதைப் பின்பற்றி நல்வழியை அடைகின்றனர்; இப்படியே இன்னுமடைந்து வரவும் செய்வர்.

இப்படிக் கிடைத்துள்ள எங்கும் பரந்த வெற்றி எனக்குச் சந்தோஷத்தைக் .தர்மத்தாலுள்ள வெற்றி திருப்தியையும் களிப்பையும் தருகின்றது. ஆனால், இச்சந்தோஷம் அற்பமே. மறுமை யின்பத்தை அளிக்கும் காரியமே முக்கிய மென்பது தேவர் பிரியன் கருத்தாகும். இத் தர்ம லிகிதத்திலுள்ள கட்டளை எதற்காகவென்றால் எனக்குப் பின் வரும் புத்திரரும் பௌத்திரரும் ‘நாடுகளைப் புதிதாகக் கைப்பற்றுவதே வெற்றி' யென்று நினையாமலிருப்பதற்காகவே. அவர்கள் வெற்றியை விரும்பினபோதிலும் பொறுமையையும் குறைந்த தண்டனைகளையும் உடையோராய், தர்மத்தின் வெற்றியையே வெற்றியெனக்கொள்பவராய் மாறவேண்டும். இது, இம்மை மறுமைகளுக்குப் பிரயோஜனமுள்ளது. எல்லோருக்கும் நன் முயற்சியும் சந்தோஷமும் உண்டாக வேண்டும். இம்மை மறுமைகளின் க்ஷேமத்தையும் அவர் தேடிக்கொள்வர்ராக.

இம் மொழிபெயர்ப்பு ஷாபாஸ்கெர்ஹி பாடத்தை அனுசரித்தது. இங்குள்ள 32 வாக்கியங்களில், 6 முதல் பாராவிலும், 7 இரண்டாவது பாராவிலும், 7 மூன்றாவது பாராவிலும், 3 நான்காவது பாராவிலும், மிகுதியான 9 கடைசிப் பாராவிலும் வந்துள்ளன.

1. அன்டியோக்கஸ்ஸைப்பற்றி 95 - ம் பக்கம் காண்க, துலமாயனுக்கு ஆங்கிலத்தில் ப்டாலமி என்று உச்சரிப்பு. இவன் எகிப்துதேசத் தரசன். இவன் காலம் கி. - மு. (285 - 247) இவன் மிகப் பெருமையும் வீரமும் வாய்ந்த அரசன். இவனுடைய ஸதஸில் சாஸ்திரங்களும் காவ்யங்களும் மிகுதியாக பாராட்டப் பெற்றன. க்ஷேத்திர கணித ஆசிரியனான யூக்லிட் என்ற பெயர்போன புலவன் இவனால் ஆதரிக்கப் பெற்றவன், அக்காலத்தில், செங்கடற் கரையோரத்தில் பல துறைமுகங்கள் ஏற்பட்டன. மகன் என்ற பெயர் ஆங்கிலத்தில் மகாஸ் என வழங்கும். அவன் எகிப்துக்கு மேற்குள்ள கைரினே தேசத்து அரசன்; தாய் வழியில் துலமாயன் சகோதரமுறையினன். காலம் கி.-மு.285-258. அலகஸுதரன், அலெக்ஸாந்தர் ; கிரீக் தேசத்து எப்பைரஸ் என்ற நாட்டின் அரசன். இவன் அந்தியோக்கனுக்குப் பகைவன், அந்தியோக்கனைப்பற்றி இரண்டாம் சாசனக் குறிப்பிற் காண்க. அந்தேகினன் அந்திகோனாஸ். காலம் 277-238 ; இவன் மாஸிடோணியா தேசத்து அரசன்.

2. யவனர், காம்போஜர். இவர் எங்கிருந்தவ ரென்பதையும் எப்பாகத்தில் வசித்து வந்தன ரென்பதையும் படத்திற் கண்டு கொள்க. சிலரைப்பற்றி நமக்கு ஒருவித தெளிவும் உண்டாகவில்லை. உ-ம். ‘நாலுக தேசத்து நாலுபம்தியர்.’

“யவனர் நாடொன்று தவிர்த்து மற்ற நாடுகளுள் பிராமணர் சமணர் இல்லாத நாடே யில்லை” இந்த வாக்கியம் மான்ஸராவிலும், கால்ஸியிலும் ! 3-ம் வாக்கியத்தின் பின், அதாவது இரண்டாவது பாராவின் இறுதியில் வருகின்றது. யவனர் நாட்டில் அப்போது பிராமணர் சமணர் வசிக்கவில்லை என்ற சரித்திர உண்மை இதிலிருந்து கிடைக்கின்றது.

14. முடிவுரை.

தர்மத்தைப்பற்றிய இந்த லிகிதங்கள், தேவர்களுக்குப் பிரியனான பிரியதரிசி அரசனால் சில இடங்களில் சுருக்கமாயும் சில இடங்களில் (சுருக்கமும் பெருக்கமு மில்லாமல்) நடுத்தரமாயும் சில இடங்களில் விரிவாயும் வரையப்பட்டன. எல்லா விஷயங்களும் ஓரிடத்தில் திரட்டிச் சேர்க்கப்படவுமில்லை. இந்த இராஜ்யம் மிகவும் விரிந்துள்ளது ; எழுதப்பட்ட லிகிதங்கள் பல ; எழுதவேண்டுவனவும் பல. அவற்றின் மாதுரியத்தால் சில வாக்கியங்களை அடிக்கடி திரும்பத்திரும்பக் கூறியிருக்கிறோம். ஏனென்றால், இவற்றிற் கூறியபடி ஜனங்கள் ஒழுகவேண்டுமென்றே. ஆங்காங்கு எழுத்து சிதைந்திருத்தலாலோ அரை குறையாயிருப்பதாலோ வெட்டினவனுடைய தவறுதலாலோ லிகிதம் சரியில்லாமலிருக்கலாம்.

6 வாக்கியங்கள்.

நமக்குக் கிடைத்துள்ள அசோக லிகிதங்களில் எழுத்துப் பிழை, லிகிதம் அரைகுறையாக விடப்படுதல் முதலிய குற்றங்கள் இல்லையென்றே கூறலாம். ஷாபாஸ்கர்ஹியிலுள்ள ஆறாம் சாஸனத்தில் ஒரு வாக்கியம் இரண்டு முறை எழுதப்பட்டிருத்தல் எழுதினவனுடைய குற்றமென்றே சொல்லவேண்டி யிருக்கிறது.