அசோகனுடைய சாஸனங்கள்/ஸ்தம்ப சாஸனங்கள்
V. ஸ்தம்ப சாஸனங்கள்
ஸ்தம்ப சாஸனங்கள் என்பவை ஏழு பிரத்தியேகமான லிகிதங்கள். இவை அசோகனின் இருபத்தேழாவதும் இருபத்தெட்டாவதும் பட்டாபிஷேகவருஷங்களில் பிரசுரமானவை. ஸார்நாத் சாஸனம் ஒன்றைத் தவிர இச்சாஸனங்களே கடைசியாகப் பிரசுரஞ்செய்யப்பட்டவை. முன் அரசன் பிரசுரஞ்செய்த பல கட்டளைகளை உறுதி செய்ய இவை பிரசுரஞ்செய்யப்பட்டன போலும். தனது அரசாட்சியின் தன்மை எதுவென்பதும், அரசன் எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியாக நடந்து வருகிறானென்பதும், எல்லோருக்கும் அடக்கமுடைமை அவசியமென்பதும், ரஜூகரின் வேலையும், பிராணி இம்ஸை நிரவாணச் சட்டங்களும், ஸமரஸபாவத்தின் அவசியமும், முதல் ஆறு சாஸனங்களின் விஷயங்களாம். ஏழாவது சாஸனம் அசோகன் செய்த தான சீர்திருத்தங்களின் மதிப்புரையெனலாம். அரசன் கடைசியாக தனது ஜனங்களிடம் விடைபெற்றுக் கொள்வதுபோலத் தோன்று கின்றது இச்சாஸனம்.
முதல் ஆறு ஸ்தம்பசாஸனங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு பிரதிகள் கிடைத்திருக்கின்றன. இச் சாஸனங்கள் எழுதப்பட்டுள்ள ஸ்தம்பங்களாவன :—
1. டில்லி தோப்ரா ஸ்தம்பம். இது முன்காலங்களில் ஸிவாலிக் மலைச்சாரலில் தோப்ரா என்ற ஊரில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. பிரோஸ்ஷா (கி. பி. 1351-1388) என்ற துக்லக் அரசன் மிகுந்த பிரயாசையுடன் இதை டில்லிக்குக் கொண்டுபோய் அங்கே நாட்டினான். இந்த ஸதம்பத்திலுள்ள பிரதி ஏறக்குறைய நல்ல ஸ்திதியிலிருக்கிறது.
2. டில்லி மீரத் ஸ்தம்பம். இதுவும் ௸ பிரோஸ்ஷா மீரத்திலிருந்து டில்லிக்கு மாற்றியது, லிகிதங்கள் சிதைவுபட்டிருக்கின்றன.3. பிரயாகை ஸ்தம்பம். இதுவும் அதன் பூர்வ ஸ்தானத்திலிருந்து பெயர்க்கப்பட்டிருக்கிறது, முன் இது கௌசாம்பியில் நின்றிருக்க வேண்டுமென்று இதிலுள்ள லிகிதம் ஒன்று தெரிவிக்கிறது. ஸ்தம்ப சாஸனங்களன்றி வேறு இரண்டு லிகிதங்களும் இந்த ஸ்தம்பத்தில் இருக்கின்றன.
4. லௌரியா அரராஜ் ஸ்தம்பம். இதிலுள்ள லிகிதங்கள் மிகச் சுத்தமாகவும் அழகாகவுமிருக்கின்றன. லௌரியா, என்றால் சிவலிங்கமென்று கருத்து.
5. லௌரியா நந்தன்கர் ஸ்தம்பம். இந்த ஸ்தம்பத்தின் படம் 66-ம் பக்கத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. லிகிதங்கள் மிகச் சுத்தமாயிருக்கின்றன.
6. ராம்பூர்வா ஸ்தம்பம். இந்த ஸ்தம்பத்திலுள்ள லிகிதங்கள் சுமாராக வாசிக்கக்கூடியனவாம். இவ்வூரில் லிகிதம் ஒன்று மில்லாத ஸ்தம்பமும் ஒன்றிருக்கின்றது. இதுவும் அசோகனுடைய வேலைப்பாடென்று அனுமானிக்கப்படுகிறது.
கடைசியாகக் கூறப்பட்ட மூன்று ஊர்களும் பீகார் மாகாணத்தில் சாம்பரான் ஜில்லாவிலுள்ளவை, ஊர்கள் ஒன்றுக்கொன்று சமீபமாக உள்ளவையே.
ஏழாவது ஸ்தம்ப சாஸனத்துக்கு ஒரே பிரதிதான் கிடைத்திருக்கிறது. முதலாவது கூறப்பட்ட டில்லி தோப்ரா ஸ்தம்பத்தில் இந்த விகிதம் மற்ற ஆறு லிகிதங்களின் முடிவில் வரையப்பட்டிருக்கிறது. இது மற்ற எல்லா அசோக லிகிதங்களையும் விட நீண்டது ; இதைப் பத்து பிரத்தியேக சாஸனங்களின் தொகுதியென்றும் கூறலாம்.1.அரசன் ஆளுகையின் தன்மை.
தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். நான் முடி சூடி இருபத்தாறு வருஷங்களானபின் இந்தத் தர்ம லிகிதத்தை எழுதச்செய்தேன். தருமத்தில் மிக்க பக்தியும், மிக்க ஆத்ம சோதனையும், மிக்க பணிவும், (பாவத்தினிடம்) மிக்க பயமும், மிக்க முயற்சியும் இருந்தாலன்றி இம்மை மறுமைப் பயன்களை யடைத லரிது. ஆயினும், என் போதனையால் தர்மத்தில் விருப்பமும், அன்பும் நாடோறும் மிகுதியாக வளர்ந்துவருகின்றன ; இனியும் வளர்ச்சியடையும். எனது காரியதரிசிகள்1 யாவரும், உத்தம, அதம மத்திமர் எவராயினும், என் போதனைப்படி பிறரையும் நன்னெறியில் திருப்ப வேண்டும். சஞ்சல புத்தியுள்ளோருக்கு நன்னெறியைப் பற்றின போதனை அவசியம். அந்த மகாமாத்திரரும் இவ்விதமே (தருமோபதேசஞ் செய்து வர வேண்டும்). ஏனென்றால், தர்மத்தினாலேதான் பரிபாலனமுள்ளது; தர்மத்தினாலேதான் ஒழுங்குண்டு ; தர்மத்தினாலேதான் சௌக்கியமடையலாம்; தர்மத்தினாலேதான் காவல் (உள்ளது). இதுவே சட்டம்.
9 வாக்கியங்கள்.
(1) அந்த மகாமாத்திரரைப் பற்றியும் காரியதரிசிகள் அல்லது புலிஸர் அல்லது புருஷர்களைப்பற்றியும் அவதாரிகையில் விளக்கியிருக்கிறோம்.
பொருள் விளங்குவதற்காக ஏழாம் வாக்கியம் எட்டாவதாக எழுதப்பட்டிருக்கிறது.2. அரசனே எல்லோருக்கும் நிதர்சனம்.
தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். தர்மமே மேலானது. தருமம் என்பது யாது? பாவமின்மை1 , நற்செயல், இரக்கம், ஈகை, வாய்மை,பரிசுத்தம் என்பனவே. நான் பல மனிதருக்குப் பலவகையால் அகக்கண்ணை2 அளித்திருக்கிறேன். இருகாற் பிராணி, நாற்காற்பிராணி, பறவைகள், நீர்வாழ்வன முதலியவற்றிற்குப் பலவகையால் அனுக்கிரகங்களைச் செய்திருக்கிறேன். தண்ணீர்ப்பந்தலும் வேறு பல நற்செயல்களும் என்னால் செய்யப்பட்டிருக்கின்றன. ஜனங்கள் அறநெறியைப் பின்பற்றி நடக்கவும் இம்மார்க்கம் நிலைத்திருக்கவும் நான் இத் தர்மலிகிதத்தை வரையச் செய்தேன் ; இந்தப் போதனையை அனுசரிப்பவன் சுகிர்தத்தை அடைவன்.
9 வாக்கியங்கள்.
1. அப ஆஸினவம். அல்ப ஆஸினவம். ஆஸினவம் என்பது பெருந்தீங்கு என்னும் பொருளில் வழங்கும் பௌத்தர் பரிபாஷை. இதன் கருத்து அடுத்த சாஸனத்திலிருந்தும் விளங்குகின்றது.
2. சக்ஷுதானம்: தர்மபோதனை மூலமாக அகக்கண்ணையளித்தல்.3 ஆத்மபரிசோதனை.
தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். மனிதன் தன் நற்செய்கைகளையே சிந்தித்து, ‘இந் நற்கருமங்கள் என்னால் செய்யப்பட்டவை' என்று நினைத்துப் பெருமையடைகிறான். ஆனால் ஒரு போதும் தன் தீச்செயல்களை நினைத்து ‘மிகத் தீங்காகக் கருதப்படும் இப்பாவச்செயலைச் செய்தேனே' யென்று நினைப்பதில்லை. இவ்வித ஆத்மபரிசீலனை1 மிகவும் அரிது. ஆயினும் மனிதன் இவ்விஷயத்தைச் சிந்திக்கவேண்டும். கொடுமை2, கயமை, கோபம்3, அகம்பாவம்4, பொறாமை பெருங் கெடுதலுக்குக் கொண்டு செல்லுவனவாம். ‘நான் நன்னெறியில் நிற்க வேண்டுமே’ யென்று கருதி மனிதன் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். இவ் வுண்மை நன்கு உணரவேண்டுவதாம். அதாவது, ஒருவழி இம்மைக்கு ஏற்றது, மற்றொன்று மறுமைக்கு ஏற்றது.
8 வாக்கியங்கள்.
- 1. படிவேவம், ஆத்மபரிசோதனை.
- 2. 3. 4. மூலத்திலுள்ள சொற்களுக்குச் சரியான வடசொற்களாவன ; சண்டி, நிஷ்டூரம், க்ரோதம், மானம், ஈர்ஷ்யை.
4. ரஜூகரின் வேலை
தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். நான் முடிசூடி இருபத்தாறு ஆண்டுகளானபின் இத்தர்மலிகிதத்தை வரையச் செய்தேன். பல நூறாயிரம் ஜனத் தொகையையுடைய ஜனபதத்தை (நாட்டை) ஆளுவதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் எனது ரஜூகரை நான் தண்டனைக்கும் வெகுமதிக்கும் அதிபதிகளாகச் செய்திருக்கிறேன். எதற்காகவென்றால், ரஜூகர் தம் வேலையைத் தைரியமாயும், சமாதானமாயும் நடத்தித் தமது நாட்டிலுள்ள பிரஜைகளுக்கு நன்மையையும் சுகத்தையும் உபதேசஞ்செய்து அவர்களை அனுக்கிரகிப்பதற்காகவேயாம். அவர்கள் சுகத்தினுடையவும் துக்கத்தினுடையவும் தன்மையை உணர்ந்து நாட்டிலுள்ள குடி ஜனங்களுக்குத் தர்மீயமான நியாய விசாரணையை அவர் செய்யவேண்டும். ஏனெனில், இம்மைப் பயனையும் மறுமைப் பயனையும் சம்பாதித்துக் கொள்வதற்கே. ரஜூகர் என்னுடைய நன்மதிப்பை அடைய எண்ணி என்னைச் சேவிக்கின்றனர். பிரஜைகளுக்கு நியாயம் நடத்தி அதன் மூலமாகவும் ரஜூகர் என் பிரியத்தைச் சம்பாதிக்கக் கடவர். ஒருவன் தன் குழந்தையை நல்ல செவிலித் தாயிடம் ஒப்பித்தவுடன் ‘இவள் என் குழந்தையை நன்றாகப் பாதுகாத்து வருகிறாள்' என்று சமாதானமடைவதுபோல ரஜூகர் அவர்களுக்குட்பட்ட நாட்டின் நன்மையையும் சுகத்தையும் பாதுகாத்து வருகின்றன ரென்று நான் சமாதான மடைகிறேன். அவர் அச்சமில்லாமலும், அமைதியுடனும் வித்தியாசமில்லாமலும் தமது கடமையை நடத்திவர வேண்டும். இதற்காகவே நான் ரஜூகரை, தண்டனைக்கும் வெகுமதிக்கும் அதிபதிகளாகச் செய்திருக்கிறேன். நியாயவிசாரணை செய்வதிலும்[1] தண்டனை விதிப்பதிலும் சமத்துவம் விரும்பத்தக்கதன்றோ ? அதனால் தற்காலம் முதல் இச்சட்டம் செய்யப்பட்டிருக்கிறது. மரண தண்டனை தீர்ப்பாய் சாவை எதிர்பார்த்துச் சிறையிலிருக்கும் குற்றவாளிகளுக்கு, என்னால் மூன்று நாட்கள் அவகாசம் கொடுக்கப்படும். இந்நாட்களில் அவருடைய உறவினர் சிறையிலுள்ளோரின் விடுதலைக்காக மறுவிசாரணை ஏற்பாடு செய்யவோ (அல்லது) அவருக்கு மன்னிப்புக் கிடைப்பதற்கும், அவர்களுடைய 'மறுமையின் நன்மைக்காகவும் தாங்களே தானங்களைச் செய்து பட்டினிவிரதங்கள் அனுஷ்டிக்கவோ செய்யலாம். என் விருப்ப மென்னவெனின், சிறைவாஸத்தின் பொழுதும் இம் மனிதர் சீர்திருந்தி மறுமையின் பயனை அடைய வேண்டுமென்பதும், தர்மத்தை அனுசரித்தல், அடக்கம், தானங்களைப் பங்கிடுதல், முதலியன பற்பலவிதம் ஜனங்களிடையில் வளர்ந்து வரவேண்டும் என்பதுமே.
15 வாக்கியங்கள். இச் சாஸனத்தில் கஷ்டமான பல சொற்களும் வாக்கியங்களும் இருக்கின்றன. விசேஷமாக 14-வது வாக்கியத்தின் கருத்து மயக்கமாயிருக்கிறது. நிலபயிஸந்தி நிலபயிதா என்ற வினைச்சொற்களுக்குத் திரும்பி விசாரணை செய்வது, மன்னிப்புக்கொடுப்பது, என்று பொருள்கொண்டு இவ்வாக்கியம் மொழிபெயர்க்கப்பட் டிருக்கின்றது.
5.பிராணி இம்சை நிவாரணம்
தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இவ்விதம் கூறுகிறான். நான் முடிசூடி இருபத்தாறு வருடங்களான பிறகு இந்த ஜீவ ஜந்துக்கள் வதையிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்கின்றன. அவை யாவன :---- சுகம் (கிளி), சாரிகை, அருணம் (யானை), சக்கரவாகம், ஹம்ஸம் (அன்னம்), நந்தீமுகம், கெலாடம், ஜதூகம் (வௌவால்), அம்பாகபீலிகம் (சினை எறும்பு), துடி (ஆமை), அனஷ்திகமச்சம் (எலும்பில்லாத மீன்), வேதவேயகம், கங்காபுபூடகம், ஸங்குஜமச்சம், கபடஸயகம் (ஆற்று ஆமை), பம்னஸலம் (முள்ளம்பன்றி), ஸ்ரிமரம் லண்டகம், ஓகபிண்டம் (குரங்கு) பரஸதம் (காண்டா மிருகம்), ச்வேதகபோதம் (வெள்ளைப் புறா), கிராமகபோதம் (மாடப்புறா). உணவிற்காகாதனவும் வேறுவித உபயோகமல்லாதவையுமான நாற்கால் பிராணிகள் ஒன்றையும் கொலை செய்யக்கூடாது. பெண்ணாடு பெண்பன்றி போன்ற ஜந்துக்களை அவை சினையாயிருக்கும் போதும், பால் ஊட்டி வரும்போதும் கொல்லக் கூடாது; அவற்றின் குட்டிகளையும் ஆறு மாசம் வரையில் கொல்லக்கூடாது. சேவல்களை வருத்துதல் கூடாது. பதரை அத்துடன் சேர்ந்துள்ள ஜீவ ஜந்துக்களுடன் எரித்துவிடக் கூடாது. காடுகளில் சும்மாவாவது அல்லது பிராணிகளைக் கொல்லவாவது நெருப்புவைத்து விடக் கூடாது. ஜீவப் பிராணிகளுக்கு மற்ற ஜீவப் பிராணிகளை இரையாகக் கொடுத்து வளர்த்தல் கூடாது. மூன்று சாதுர்மாஸிய தினங்களிலும், தை மாதத்துப் பௌர்ணமியிலும், மற்ற மாதங்களில் மூன்று தினங்களிலும், அஃதாவது, சுக்லபக்ஷத்து சதுர்த்தசி, பௌர்ணமியை யடுத்த பிரதமையன்றும் மற்ற நோன்பு நாட்களிலும், மீன்பிடித்தல் மீன்விற்றல் தவிர்க்கப்படுகின்றன. இந்நாட்களில் யானைக்காவிலோ மீன் குட்டையிலோ இவைபோன்ற மற்ற ஜீவப்பிராணிகளின் நிலயங்களிலோ ஒன்றையும் கொலை செய்யக்கூடாது. அஷ்டமி, சதுர்த்தசி, பௌர்ணமி அமாவாசை நாட்களன்றும் பூச புனர்பூச நக்ஷத்திரங்களன்றும் மூன்று சாதுர்மாஸிய தினங்களன்றும் மற்ற சுபதினங்களிலும் மாடுகளுக்கு விதையடித்தல் கூடாது ; அது போலவே, வெள்ளாடு செம்மறியாடு பன்றி முதலிய பிராணிகளுக்கும் இவை போன்ற மற்றப் பிராணிகளுக்கும் விதையடித்தல்1 கூடாது. பூச புனர்பூச நாட்களன்றும் சாதுர் மாஸிய காலத்தில் சாதுர்மாஸ பக்ஷங்களில்2 குதிரைகளுக்கும் மாடுகளுக்கும் சூடுபோடுதல் கூடாது. நான் முடிசூடிய இருபத்தாறாம் ஆண்டுவரை இருபத்தைந்து முறை சிறை விடுதலை நடந்திருக்கிறது.
14 வாக்கியங்கள், மூன்றாவது வாக்கியத்தில் இருபத்திரண்டு வகைப் பிராணிகள் கூறப்பட்டிருக்கின்றன, இவற்றில் சில பிராணிகளுடைய தமிழப்பெயர் நிச்சயமாய்த் தெரியாமையால் மூலத்திலுள்ள பெயரையும் எழுதியிருக்கிறோம்.
சௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திலும் (அதிக. II. அத். 26) பிராணி இம்சையைப்பற்றி இன்னும் விரிந்த சட்டங்கள் காணப்படுகின்றன.
(1) நோ நீலக்ஹிதவியே. வடமொழி, ந நிற்லக்ஷிதவ்யம். லக்ஷியமில்லாமற் செய்தல் கூடாது.
(2) சாதுர்மாத தினம் என்பது சாதுர்மாதத்தின் முதல் நாள் என்று முன் 127ம் பக்கத்தில் கூறியுள்ளோம். சாதுர்மாத பக்ஷம் என்பது முதற் பதினைந்து நாட்களென்று தோன்றுகிறது.
6. சுய மதத்தில் நம்பிக்கை .
தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இவ்விதம் கூறுகின்றான். நான் முடிசூடி பன்னிரண்டு வருடங்களானபின் உலகம் யாவும் நன்மையையும் சுகத்தையும் அடையும் பொருட்டு இந்தத் தர்ம லிகிதங்களை1 வரையச் செய்தேன். அவரவர் தம் தம் பண்டைய வழிகளைக் களைந்து தம்தம் தர்மத்தை வழிபட்டு அபிவிர்த்தியடைவாராக. உலகத்திலுள்ள மனிதவர்க்கம் யாவும் நன்மையையும் சுகத்தையும் அடையும் பொருட்டு நான் முயன்றுவருகிறேன்; எனது சுற்றத்தாரை மட்டுமல்ல, தூரத்திலுள்ளவர்களையும் சமீபத்தில் வசிப்பவர்களையும் கவனித்து வருகிறேன். ஏனென்றால், சில மனிதருடைய க்ஷேமத்தையாவது நான் காப்பாற்றியவனாக நேரலாமன்றோ. இவ்வுத்தேசத்துடன் நான் எல்லாக் கூட்டத்தாருக்காகவும் வேலை செய்து வருகிறேன். எல்லா சமயங்களும் பலவிதப் பூஜை மரியாதைகளோடுகூடிய எனது பணிவிடையைப் பெறுகின்றன. ஆனபோதிலும், யாவருக்கும் சுயமத நம்பிக்கையே முக்கியமென்பது எனது எண்ணம். நான் முடிசூடி இருபத்தாறு வருடங்களுக்குப்பின் இந்தத் தர்மலிகிதம் எழுதப்பட்டது.
10 வாக்கியங்கள்.
1. தர்மலிகிதங்கள் என்பதால் பதினான்கு சாஸனங்கள், உபசாஸனங்கள் கலிங்க சாஸனங்கள் யாவும் குறிப்பிடப்படுகின்றனபோலும். இவை அரசனது பதின் மூன்றாம் பட்டாபிஷேக வருஷத்தில் பிரசுரஞ் செய்யப்பட்டனவென்று இந்த லிகிதத்தினின்று ஏற்படுகிறது.
7. அசோகன் தன் ஆட்சியின்பொழுது
தர்மத்தின் பொருட்டுச் செய்ததான
காரியங்களின் மதிப்புரை.
சுருக்கம். இதில் பத்து உட்பிரிவுள்ளன. இவற்றை I,II,என்று குறிப்பிடுகிறோம். முதற் பிரிவில், முன்னிருந்த அரசர்கள் செய்த தர்மப்பிரவிர்த்திகள் பயனளிக்கவில்லையென்றும், இரண்டாவது பிரிவில் இன்னும் தீவ்ரமாய் முயற்சி செய்து தர்மத்தில் வெற்றியடையவேண்டுமென்ற அசோகனுடைய தீர்மானமும், மூன்றாவது பிரிவில் தர்மப்பிரசாரஞ் செய்வதற்கு அரசனால் செய்யப்பட்ட ஏற்பாடுகளும், நாலாவது பிரிவில் அரசன் ஸ்தம்பங்களை நாட்டி மகாமாத்திரர்களை நியமித்ததும், ஐந்தாவது பிரிவில் பிரயாணிகள் பிரயாணத்தின்போது சௌக்கிய மடைவதற்கான ஏற்பாடுகளும், ஆறாவது பிரிவில் தர்ம மகாமாத்திரரின் வேலையும், ஏழாவது பிரிவில் ௸ அதிகாரிகள் அரசனுடையவும் அரண்மனையிலுள்ள மற்றோருடையவும் தான தர்மங்களை நடத்தவேண்டுமென்றும், எட்டாவது பிரிவில் நன்னடக்கையைப்பற்றியும், ஒன்பதாவது பிரிவில் கண்ணோட்டத்தின் பயனைப்பற்றியும், கடைசியில் இக்கட்டளை எங்கும் விளம்பரம் செய்யப்படவேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கின்றன.
I. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். முற்காலங்களிலிருந்த அரசர்கள் தர்மத்தின் அபிவிர்த்தியோடு மனிதருடைய அபிவிர்த்தியும் இசைந்து போகச்செய்வது எப்படியென்று விரும்பினார்கள். ஆனால் மனிதனோ தர்மத்தின் அபிவிர்த்திக்குச் சரியாய் வளரவில்லை.
II. அதனால் தேவர்களுக்குப் பிரியனை பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். எனக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. முற்காலங்களில் அரசர்கள் தர்மத்தின் அபிவிர்த்தியோடு மனிதருடைய அபிவிர்த்தியும் இசைந்து செய்வது எவ்விதம் கைகூடுமென்று விரும்பினார்கள்? மனிதனோ தர்மத்தின் அபிவிர்த்திக்குச் சரியாய் வளரவில்லை. எவ்விதம் மனிதர் என் நோக்கத்தை அனுசரிப்பர் ? தர்மத்தில் மனிதருடைய அபிவிர்த்தியானது நான் நினைக்கும் வண்ணம் திருப்திகரமாய் இருக்கும்படி. செய்வதெப்படி? தர்மத்தின் வளர்ச்சியினால் நான் சிலரையாவது நல்வழிக்குக் கொண்டுவரலாமன்றோ .
III. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். இப்படி என்னால் நிச்சயிக்கப்பட்டது. 'தர்மத்தின் கொள்கைகளை நான் பரவச்செய்வேன் ; ஜனங்களுக்குத் தர்மத்தைப்பற்றிய ஞானத்தைப் புகட்டுவேன். இதைக் கேட்போர் நல்வழிப்பட்டுத் தாமும் அபிவிர்த்தியடைந்து தர்மத்தையும் வளரச் செய்வார்களன்றோ .' இதற்காகவே தர்மத்தின் கொள்கைகள் உபதேசிக்கப்படுகின்றன. என் காரியதரிசிகள் (புலிஸர்) என் பிரஜைகளைக் கவனித்து அவர்களுக்கு என் போதனையைப்பற்றி விரிவாக உரைப்பார்கள். பல நூறாயிரம் ஜனத்தொகையுடைய ஜனபதங்களின் தலைவராகிய ரஜூகரும் இவ்விஷயத்தில் என் 'கட்டளையைப் பெற்றிருக்கின்றனர். அவர் என் கட்டளை இன்னவையென்று என்னிடத்தில் விசுவாஸமுள்ள என் பிரஜைகளுக்குச் சொல்ல வேண்டும்.
Iv. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி இப்படிச் சொல்லுகிறான். இதே உத்தேசத்துடன் தர்ம ஸ்தம்பங்களை நான் நாட்டியிருக்கிறேன் ; தர்ம மகாமாத்திரரை நியமித்திருக்கிறேன் ; தர்மத்தின் சாரத்தை நான் போதித்து வருகிறேன்.
v. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். மிருகங்களுக்கும் மனிதருக்கும் நிழல் கொடுக்கப் பாதைகளில் ஆலமரங்களை நான் நட்டு வளர்த்திருக்கிறேன். மாந்தோப்புக்களை உண்டுபண்ணியிருக்கிறேன். அரைக் கோசத்துக்கு ஒருதடவை கிணறுகள் வெட்டிச் சாவடிகள் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்களுக்கும் மனிதருக்கும் சுகத்தைக் கொடுக்கும்பொருட்டு நான் பற்பல தண்ணீர்ப் பந்தர் களை வைத்திருக்கிறேன். ஆனால் சுகானுபவம் என்பது அல்ப விஷயம். என் பிரஜைகளுக்கு நான் செய்திருப்பதுபோலவே பண்டை அரசர்களும் மனிதருக்குப் பல நன்மைகள் செய்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய உத்தேசம் உலக மானது தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டுமென்பதே.
VI. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி இப்படிச் சொல்லுகிறான். என் தர்ம மகா மாத்திரரிடம் பல நற்காரியங்களை நான் ஒப்பித்திருக்கிறேன். கிருகஸ்தர்களுக்கும் துறவிகளுக்கும் பற்பல மதஸ்தர்களுக்கும் வேண்டிய உபகாரங்களை அவர் செய்து வருகின்றனர். மேலும் (பௌத்த) சங்கத்தின் காரியங்களையும் அவரிடம் சேர்ப்பித்திருக்கிறேன். அதுபோலவே பிராமணர் ஆஜீவகர்களுடைய காரியங்களையும் அவரிடம் ஒப்புவித்திருக்கிறேன். அதுபோலவே நிர்கிரந்திகளின் (ஜெயினரின்) காரியங்களையும் அவரிடம் ஒப்புவித்திருக்கிறேன். எல்லா மதத்தாரின் காரியங்களையும் அவர் கவனித்து வரவேண்டும். சாதாரண மகாமாத்திரர் தந்தம் வேலையை மட்டும் பார்ப்பார்கள். தர்ம மகாமாத்திரரோ எல்லா மதங்களின் காரியங்களையும் பார்வையிட வேண்டும்.
VII. தேவர்களுக்குப் பிரியனான பியதஸிராஜன் இப்படிச் சொல்லுகிறான். முன் கூறப்பட்ட தர்ம மகாமாத்திரரும் மற்ற மகாமாத்திரர்களும் எனது தானங்களையும் என் ராணியாரின் தானங்களையும் நடத்திவரவேண்டும். இங்கேயும் (பாடலிபுரத்திலும்) மாகாணங்களிலுமுள்ள ராஜக் கிருகங்களில் வசிப்போருடைய தானங்களுக்குத் தகுதியான வழிகளைக் காண்பிப்பதும் இவ்வதிகாரிகளின் அலுவலாம். என் புத்திரர், ராஜகுமாரர்கள், ராணியின் புத்திரர் செய்யும் தானங்களையும் இந்த அதிகாரிகளே நடத்தவேண்டும். இப்படிச் செய்வதால் தர்மகாரியங்களும் தர்மத்தின் அனுஸரணையும் விர்த்தியடைகின்றன. தர்மத்தின் அனுஸரணை எப்படிப்பட்டதென்றால் அது பின் வருமாறு. இரக்கம் ஔதாரியம் சத்தியம் தூய்மை வணக்கம் பரிசுத்தம் என்றவையே தர்மத்தின் அனுஸரணை. இவை மனிதருள் வளர்ந்து வரும்.
VIII. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். என்னால் என்னென்ன நற்காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவோ அவற்றையெல்லாம் என் பிரஜைகளும் பின்பற்றியிருக்கிறார்கள். இனிமேலும் பின்பற்றி நடப்பார்கள். தாய்தந்தையருக்குச் சுச்ரூஷை வயோதிகரிடத்தும் உபாத்தியாயர்களிடத்தும் பணிவு, பிராமணர் சமணர்களுக்கு ஈகை, ஏழை அனாதை முதலிய தாழ்ந்தோரை இரக்கத்துடன் நடத்தல், அடிமை வேலைக்காரர்களிடம் பக்ஷம் முதலிய குணங்கள் ஜனங்களிடத்தில் வளர்ந்திருக்கின்றன ; இக்குணங்கள் இன்னும் அதிகமாய் விர்த்தியடையும்.
IX. தேவர்களுக்குப் பிரியனான பியதஸி ராஜன் இப்படிச் சொல்லுகிறான். இங்கு சொல்லப்படும் தர்மத்தின் அபிவிர்த்தி ஜனங்களிடத்தில் அதிகமாகக் காணும்போது அதற்கு இரண்டுவித காரணங்கள் சொல்லலாம். முதலாவது தர்மீயமான சட்டங்கள். இரண்டாவது கண்ணோட்டம்3. இவ்விரண்டில் தர்மீயமான சட்டங்கள் அவ்வளவு பிரயோஜன முள்ளனவல்ல, கண்ணோட்டமே. மேன்மையானது; ஆனபோதிலும், நான் பலதர்மீயமான சட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறேன். இன்னின்ன பிராணிகளை வதை செய்யக்கூடாதென்றும் வேறு பற்பல தர்ம நியமங்களும் என்னால் பிரசுரஞ்செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் தர்மத்தில் பிரியம் ஜனங்களிடம் வளர்ந்து காணப்படுவதும், ஜீவ ஜந்துக்களின் வதை கிரமமாக நின்றுவருவதும், பலியிடுதல் குறைந்திருப்பதும் என் கண்ணோட்டத்தின் பயனின்றி வேறன்று. என் புத்திரரும் பௌத்திரரும் அவர் பின்வரும் சந்ததியார் எல்லாரும் இதைப் பின்பற்றுவதற்கும் எனது நோக்கம் சந்திரசூரியர் உள்ளவரையில் நிலை நிற்பதற்கும் இச்சாஸனம் எழுதப்பட்டது. இப்படி அவர்கள் என் கருத்தைக் காப்பாற்றுவாரானால் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் சுகம் கிடைப்பது நிச்சயம். நான் முடிசூடி இருபத்தேழு வருடங்களுக்குப்பின் இந்தத் தர்மலிகிதம் வரையப்பட்டது.
X. இதைப் பற்றி தேவர் பிரியன் சொல்லுகிறான். எங்கெங்கெல்லாம் ஸ்தம்பங்கள் அல்லது பாறைகள் இருக்கின்றனவோ அங்கங்கெல்லாம் இந்தத் தர்மலிகிதத்தை என்றென்றைக்கும் நிலை நிற்கும்வண்ணம் எழுதவேண்டும்4.
41 வாக்கியங்கள். இம்மொழிபெயர்ப்பு மூலத்தை வாக்கியம் வாக்கியமாக அனுசரிக்கவில்லை.
(1) கோசம்' அல்லது குரோசம் ஒரு யோஜனை தூரத்தின் கால்பாகம். ஒரு யோஜனை கிட்டத்தட்ட எட்டு மைல், அதனால் ஒரு கோசம் இரண்டு மைல். அரைக்கோசத்துக்கு ஒரு கல் வீதம் ஒவ்வொரு மைலுக்கும் ஒருகல் ஆகிறது.
(2) ஆபான. தண்ணீர்பந்தல்.
(3) நிலபதி, விஜ்ஹதி, என்பதற்கு கண்ணோட்டம், மன்னிப் பளித்தல், என்று பொருள் கூறலாம். இச்சொல்லின் வினை உருபுகளை நான்காம் ஸ்தம்ப சாஸனத்தின் உரையில் குறிப்பிட்டிருக்கிறோம்.
(4) அசோகன் காலத்தில் இந்த சாஸனத்துக்குப் பலபிரதிகள் இருந்திருக்க வேண்டுமென்று இதிலிருந்து தெளிவாகின்றது.
குறிப்புகள்
தொகு- ↑ 1. வியோஹால.. நியாய விசாரணைசெய்தல்.