அஞ்சலி/ஜமதக்னி




ஜ ம த க் னி

நினைவு திரும்பியபோது அது தூக்கத்திலிருந்து விழிப்பா, மூர்ச்சையினின்று மீண்ட தெளிவா நிச்சயமாய்ப் புரியவில்லை. மரங்களின் இலைகளிலிருந்து இருண்ட ரகசியங்கள் புறப்பட்டுக் கொண்டிருந்தன. நிலவின் செங்கோளம் வானை உதைத்து எழும்பிக் கொண்டிருந்தது.

மாஞ்சி கண்களைத் தேய்த்துக்கொண்டாள். இமையின் உள்புறம் மின்னல்கள் வெட்டின. அவைகளின் ‘ பளீ ’ரில் பாச்சு குதித்து விளையாடினான். அரைஞாண் தவிர உடலில் வேறேதுமில்லை. விண்ணெனத் தெறித்த வயிறும், சோழிகளைக் குலுக்கினாற் போன்ற அவன் சிரிப்பும் அவள் மார்மேல் மோதின. அவன் கண்களை மறக்கவே முடியாது. ஒன்றில் ஒரே நட்சத்திர ஜொலிப்பு; மற்றதில் சற்று பஞ்சடைந்தாற்போன்று மங்கிய ஒட்டம். பிறப்பின் வார்ப்பே அப்படி.

மாஞ்சியையும் அறியாமல் தொண்டை கேவிற்று. அவள் சப்தமே அவளுக்கு அச்சமாயிருந்தது. குழந்தைகள் முழிச்சுண்டுடுத்தோ? எழுந்து விளக்கைத் துாண்டினாள். இல்லை. மீனாவும் நீனாவும் அயர்ந்து துரங்கிக்கொண்டிருந்தனர். நீனாவின் உதட்டோரத்தில் ‘சொள்’ வழிந்து காய்ந்தது. மீனா திறந்த வாயுடன் லேசாய்க் குறட்டை விட்டுக்கொண்டிருந்தாள்.

மாஞ்சி நீனாவின் பாவாடையைச் சரிப்படுத்தி, மீனாவின் வாயை மூடியிருத்தினாள். “எத்தனை தடவை தான் சொல்றது மீனா, வாயைத் திறந்துண்டு தூங்கா தேடின்னு?” ஆனால் தூங்கறவாளுக்குத் தூங்கறப்போ எப்படித் துரங்கறோம்னு தெரியும்?

எதிர்ப் படுக்கைப்பக்கம் அவள் கண்கள் சென்றன. அவள் கணவனைக் காணோம். படுக்கையை விட்டெழுந்து ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தாள். மொட்டை மாடியில் அவன் உருவம் தெரிந்தது.

“இத்தனை நாழிக்குமேலே என்ன பண்றேள்?”

பின்னால் அவள் குரல் திடீரெனக் கேட்டதும், சற்றுத் திடுக்கிட்டாற்போல் அவன் அவள் பக்கம் திரும்பினான்.

“ஓ நீயா?”

“பின்னே யாருன்னு நினைச்சேள்?”

மாஞ்சி உடம்பை ஒடுக்கிக் கொண்டாள்.

“உங்களுக்குப் பனி அடிக்கல்லே? சட்டைகூடப் போட்டுக்காமல் இப்படி நிக்கறேளே!”

“மாஞ்சி, இங்கே வா.”

அவள் கணவனின் விரிந்த கைகளின் வீச்சிற்குள் அடையும் போதெல்லாம் மாஞ்சிக்கு ஒர் உணர்ச்சி ஏற்படும்—ஆடு மாடுகள் மேய்வதற்கென ஏதோ வேலி போட்டுத் தடுத்த பரந்த அடைப்பிற்குள் நுழைவது போல். இத்தனைக்கும் ஜமதக்னி அவ்வளவு உயரம் என்றோ ஒற்றைநாடியென்றோ சொல்வதற்கில்லை. ஆயினும், இடுப்பிலிருந்து விசிறி எழுந்து விரிந்த மார்பிலிருந்து கைகள் முழங்கால் வரை நீண்டு தொங்கின. அந்த மார் விரிவும் கைவீச்சினாலேயே, நடையுடை பாவனைகளிலும், சில சமயங்களில், அவன் கால்களைச் சற்று அகல விரித்துப் பூமியில் அழுந்த ஊன்றி நிற்கும் தோற்றத்தில், அவன் உடல் முழுதுமே ஒரு வேகம் சுழன்று ததும்புவது போல் ப்ரமாதமான உணர்ச்சியைப் பார்ப்பவர் மனத்தில் தருவித்தது.

கன்னத்தை லேசாய் அவன் மார்மேல் தேய்த்துக் கொண்டாள்.

“உங்களுக்குத் துர்க்கம் வரல்லையா?”

“இல்லை. வா என்றால் வருமா?”

“தோ—! அதென்ன?”

அவள் கைகாட்டும் வழி, எதிர் வீடுகளின் மொட்டைமாடிகளுக்கு அப்பால், தோப்புகளினிடையில் ஒரு சுடர் ஆடிற்று.

“மாஞ்சி, உள்ளே வா.”

இருளில் அவன் முகத்தை அவள் பார்க்க முடியவில்லை.

“என்னது அது, இத்தனை நாழிக்குமேல்? எந்த விளக்கு அப்படி எரியறது?”

“மாஞ்சி, உள்ளே வா.”

“ஏன், சொல்ல மாட்டேளா?!”

அவன் குரல் இறுகிற்று.

“மாஞ்சி, அதுதான் பாச்சு.”

“அடே என் கண்ணே, பாச்சு!” மாஞ்சி நெருப்பை மிதித்தவளாய் விட்டாள்.

“நீயாடா எரியறே!”

“மாஞ்சீ!”

மீனாவும் நீனாவும் மாஞ்சியின் கதறலில் விழித்துக் கொண்டு ஒன்றும் புரியாமல் திகிலில் தாங்களும்கூடச் சேர்ந்து ஓலமிட ஆரம்பித்துவிட்டனர். கீழ்க்கட்டிலிருந்து தூக்கம் கலைந்த குரல்களின் முனகல்கள் எழுந்தன.

“மாஞ்சீ! பார் உன் வேலையை!—”

மாஞ்சி வாயுள் முன்றானையைத் திணித்துக்கொண்டு குழந்தைகளைச் சமாதானப்படுத்த முயன்றாள்.

“பாச்சு எங்கேம்மா? பாச்சு ஏம்மா என்கிட்டே தாச்சுக்கல்லே? பாச்சுவை எங்கேம்மா தூக்கிண்டு போயிட்டா ?”

“நீனா தூங்கு!—” மீனா தன் தங்கை வயிற்றைத் தட்டினாள்.

“பாச்சு ஒம்பாச்சி ஆயிட்டான்.”

மீனா நீனாவைவிடக் கொஞ்சம் பெரியவள். ஆதலால் நீனாவைவிட, சமயம், போது, விஷயம் அறிந்தவள். நீனாவுக்குப் பதிலும் சொல்ல அறிந்தவள். அத்துடன் மீனா கொஞ்சம் ‘அத்துரு’.

“பாச்சுவை இனிமே பார்க்கவே முடியாதா?”

“ஓ பார்க்கலாமே! இன்னும் பத்து நாளைக்கப்பறம் ஆத்துலே குத்துவிளக்கேத்துவாளே, அதுலே அவனைப் பார்க்கலாம். இப்போ நம்ம தூங்கலாம்—”

“மாஞ்சி பார்த்தையா, இதுகள் எவ்வளவு சுருக்கப் புது நிலைமைகளுக்குத் தங்களைச் சரிப்படுத்திக்கொண்டு விடறதுகள்! அதுகளின் பேச்சிலும் எவ்வளவு உண்மை இருக்கிறது! எனக்கும் மீனா சொன்னது போல்தான் இன்று காலை தோன்றிற்று. என்னையும் உன்னையும், மற்றும் காரியத்தை ஒப்பேற்ற வந்தவர்களையும் காரியத்தில் இயங்குபவர்களாகத் தனியாகப் பிரிந்துப் பார்க்க முடிந்தது. நான் சொல்வது உனக்குப் புரிகிறதோ? இதோ பாச்சுவின் உயிர் பிரிந்துபோய்விட்டது. அவனை உள்ளிருந்து என்னிரு கைகளிலும் ஏந்தி வந்து கூடத்தில் கிடத்துகிறேன். நீயும் மற்றவர்களும் என் பின்னாலேயே வந்து பாச்சுவின்மேல் விழுந்து ஏதேதோ சொல்லி அழுகிறீர்கள். வெளியிலிருந்து சேதி கேட்டு யார் யாரோ ஒடி உள்ளே வந்து அழுகிறார்கள். நான் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். அவனைப் பெற்றவன் நான். மனம் பாசத்தில் குழம்புகிறது. அப்படிக் குழம்பிக்கொண்டிருக்கையிலேயே, என்னென்னவோ சந்தேகங்கள். இங்கே இப்படி இடுப்பில் கையை வைத்துக்கொண்டு நிற்பது நானா? இதோ கூடத்தில் பயனற்று விழுந்து கிடப்பது என் வித்தா? சுற்றிச் சுற்றி வருவோரும் அழுவோரும் அவரவர் அவரவர் தாமா? மாஞ்சி மாஞ்சிதானா? பாச்சு பாச்சுவேவா! இப்போதான் பாச்சு இல்லையே! பாச்சு இல்லையானால் இதுவரை பாச்சுவாயிருந்தது யார்?

பாச்சு மறுபடியும் என்னுள்ளேயே புகுந்துகொண்டானா? மாஞ்சி, (ஸத்தியமாய் பாச்சுவின் சிரிப்பை என்னுள் நான் கேட்டேன்.)

குளிருக்கடக்கமாய்க் கம்பளியை இழுத்துக் கழுத்து வரை போர்த்துக்கொண்டாற்போல் பாச்சு ஆனந்தமாய் ஜதையில் நித்திரை செய்கிறான். துக்கம் பீறிடுகிறது.

எட்டிப் பார்ப்பது பாச்சுவின் முகமா, என் முகமா? நெருப்பைக் கொட்டுகிறேன். யார்மேல்? என்மேலா? நெருப்புப் பற்றிக் கொள்கிறது. எரிவது யார் பாச்சுவா நானா?

“போறும், போறும் போறுமே—!” மாஞ்சி செவிகளைப் பொத்திக்கொண்டு கதறினாள்.

“பாச்சுதான் ஒரு தினுசில்—ஆனால் இன்னொரு தினுசில், உண்மையான முறையில், பாச்சு இல்லை. நானா? இல்லை. ஆனால் உள்ளுக்கும் உள்ளுண்மையான முறையில் நான்தான் அப்படி எரிகிறேன். நான் மாத்திரம் இல்லை. வித்திலிருந்து வித்தாய் இறங்கிவந்து எனக்கு முன்னால் இதேமாதிரி தோன்றி மறைந்த எத்தனையோ நான்கள் திகுதிகுவென்று எரிகின்றன. எத்தனையோ நான்கள் அடங்கிய ஒரே நான் எரிகிறது.”

அவன் இரு கைகளிலும் முகத்தை புதைத்துக்கொண்டு தலையை உதறினான்.

“தான் உண்டாக்கிய நெருப்பில் நான் திருப்பித் திருப்பித் தன்னையே காய்ச்சிக்கொள்கிறது. காயக் காய விடுபடும் அழுக்குகள்தாம் நாம். பாச்சு, ஜமதக்னிநான்—மீனா—நீனா”

“ஹா—!” மாஞ்சி பயங்கரத்துடன் குழந்தைகளை அவன் பார்வையிலிருந்து மறைத்து அணைத்துக் கொண்டாள்.

“நீயும்தான்—”

“நீங்கள் என்ன சொல்றேள்? என்ன சாபமிடறேள்? அப்படிப் பார்க்காதேங்கோ—”

“மாஞ்சி, பார்! இன்றில்லாவிடில், என்றேனும் எத்தனையோ லட்ச நாட்கள் கழித்தாவது ஒருநாள் வரப் போகிறது.”

அவன் அவளையே பார்க்கவில்லை.

“கணப்புச் சட்டியின் நடு மையத்திலிருந்து கடைசியாய் எடுக்கும் தங்க உருண்டைபோல், இந்த மஹா சூளையிலிருந்து ஒரு லட்சிய புருஷன் வெளிப்படப் போகிறான். அந்த ஜோதி ஸ்வரூபம் உருவான பின் இந்தச் சூளைக்கு வேலையில்லை. அப்புறம் காலம்கூட இல்லை. அநித்யமான வாழ்க்கையை நித்யப்படுத்திய பிறகு காலம் எதற்கு? இந்தச் சிருஷ்டியின் லட்சிய புத்திரனே சிருஷ்டியின் அதிபதியாகவுமிருக்கப் போகிறான்—ஒ!” திடீரென அவன் தன்னையிழந்தான். விரலைச் சொடுக்கினான். “எனக்கே இப்பொழுது நான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நிச்சயமாய்த் தெரியவில்லை. ஆனால்—ஆனால்—”கையை வீசினான். வார்த்தைகள் ஒன்றன்பின் ஒன்று புரண்டுவந்த தடுக்கின.

“ஆனால், புரிந்ததும் புரியாததுமாய் வலைக்குப் பின்னால் உருவம் மங்கலாய்த் தெரிகிறது. அந்த நிழல் சில சமயங்களில் மேலே தட்டுகையில் அந்தத் தகதகப்பே தாங்க முடியவில்லை—”

“அந்த நாள் எப்போ வரும்?” அந்த நாள் அடுத்த நானே விடியக் காத்திருப்பதுபோல் மாஞ்சி கேட்டாள். அந்தக் கணம் தன் துயரத்தைக்கூட மறந்தாள்.

அவன் புன்னகை புரிந்தான்.

“மாஞ்சி, சில சமயங்களில் நீ குழந்தைதான்! என்று என்றா கேட்கிறாய்? ஒருநாள்—அன்று; ஒரு குழந்தை. என்றென்று சொல்ல? யார், எப்படி என்று சொல்வது? என்றோ? ஆனால் ஒவ்வொரு பிறப்பும், இருப்பும், இறப்பும் அன்றைத்தான் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

“நீங்கள் என்ன சொல்றேள்?”—மாஞ்சிக்குத் தூக்கக் கலக்கம் ஆரம்பித்துவிட்டது.

“நாம் இறக்கவில்லை ஏனெனில் நம்மால் இறக்க முடியாது. உயிர் பிறந்தது எப்படியோ ஏனோ, பிறந்து விட்டது. பிறந்த பின், அதனால் இறக்க முடியவில்லை. இருந்துதான் ஆக வேண்டும். ஆனால் சரியாய் இருக்கும் முறையைத் தேடித் தேடி, இருந்து இருந்து, மாற்றி மாற்றி, மாறி மாறித் தவித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் நம் தவிப்பு.”

அவன் முகம் அனல் குழம்பிற்று. “இதுதான்—” திடீரென அவள் கையைப் பிடித்து மூர்க்கமாகத் தன் பக்கம் இழுத்தான். கண்கள் திரிகள்போல் எரிந்தன.

“ஏன், நீ கேட்ட நாள் நாளையாகவே இருக்கலாம்; இப்போது உன் வயிற்றில் உருவாகிவரும் உயிரே அந்தக் குழந்தையாயிருக்கலாம்.”

அவள் கூந்தலைப் பிடித்து இழுத்துத் தலையை நிமிர்த்தினான்.

“நாம் நம்மையறியாமலே நம்முடைய உண்மையான தன்மையை அறிய முயன்று கொண்டிருக்கிறோம். அந்தத் தன்மையை நம் பிள்ளையின் மூலம்தான் நாம் அறிய முடியும். தகப்பன்—பிள்ளை, தாய்—பிள்ளை, மறுபடியும் பிள்ளை, தகப்பன்; சங்கிலியின் ஒவ்வொரு கொக்கிதான் வித்திலிருந்த மரத்திலிருந்தொரு வித்து. ஆனால் வித்தெல்லாம் வித்தல்ல; ஒருநாள் முத்தானதொரு வித்து, ஒரே முத்து. அதுதான் அந்த நாள். மற்றதெல்லாம் அம்மகனுக்குக் காத்திருக்கும் வேளைதான்.”

மாஞ்சிக்கு மண்டை கிறுகிறுத்தது. அவன் மடியில் தலைகவிழ்ந்தாள். அவன் விரல்கள் அவள் கூந்தலின் வங்கிகளில் வளைந்து நெளித்தன விளக்கின் சுடர் குன்றி நீலமாகி அவர்களை இருள் சூழ்ந்தது.

***

நீனா ஒடிவந்து முழங்கால்களைக் கட்டிக்கொண்டாள்.

“அம்மா, அம்மா! அப்பா வந்துாத்தாடீ...”

பின்னாலேயே மீனாவும் வந்தாள்.

“அம்மா, ஆமாம்மா, அப்பா!”

ஜமதக்னி நீனாவின் காதைத் திருகினான்.

“ஏது, இன்றைக்குக் குழந்தைகளுக்கு அப்பாமேல் இவ்வளவு பிரியம்!”

“எல்லாம் காரணமாத்தான்—”

மாஞ்சி சிரித்திக்கோண்டே, கையில் தட்டுடன் சமையலறையிலிருந்து வந்தாள். அவளுக்கு மேல்மூச்சு வாங்கிற்று. நான்கு மாதங்களுக்கு முன்னிருந்ததைவிட, இடுப்பு இப்பொழுது நன்கு அகன்றிருந்தது.

“இந்தாங்கோ இன்னி டிபன்!”

கழற்றிக்கொண்டிருக்கும் சொக்காய்க்குள்ளிருந்து அவன் குரல் ‘என்னது?’ என்றது.

“கடலையுருண்டை. இன்னிக்கென்னவோ வாய்க்கு இது வேணும் போலிருந்தது.”

“கோலிக் கணக்கில் ஒரே அச்சில் இப்படி உருட்டுவதற்கு எவ்வளவு சாமர்த்தியம் வேணும்!”

“ஆமாம், குழந்தைகளுக்கு இதுக்குமேலே கொடுத்தால் உடம்புக்காகுமா? இல்லை, பெரிசாயிருக்கேன்னு புட்டுக் கொடுத்தா வாங்கிக்குமா நம்ம குட்டிகள்? என்ன அப்படிப் பார்த்துண்டே நிக்கறேள்?”

அவள் குரல் அவன் காதில் விழவில்லை. அவன் ‘அக்கா'வைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். பெரிது பண்ணிய புகைப்படத்திலிருந்து அக்கா சிரித்துக் கொண்டிருந்தாள். மாஞ்சி இந்த வீட்டில் புகுந்த நாளிலிருந்து அந்தப் பார்வை, கூடத்திலிருந்தே அவள் நடமாட்டங்களையும் செய்கைகளையும் ஊன்றிக் கவனிப்பதுபோல் அவளுக்குத் தோன்றும். பெரிய அழகில்லை. ஆனால் முகத்தில் நல்ல களை. பீறிடும் சிரிப்பை இழுத்துக் கட்டிய புன்னகையில், முக முழுதும் உள்ளொளி விட்டுப் பிரகாசிதத்து.

மாஞ்சி அக்காவைப் பார்த்ததேயில்லை. ஆனால் இப்போது அவளுக்கு ஏனோ நினைவு வந்தது. கணவனும் மனைவியுமாய்க் கையைப் பிடித்துக்கொண்டு சத்திரத்திலிருந்து வீட்டுள் நுழைந்ததும் நேரே ஜமதக்னி இந்தப் படத்தண்டை வந்து நமஸ்கரித்த பின்தான் தாயை வணங்கினான். அங்க அசைவில் அவள் பக்கம் அவன் முகம் தற்செயலாய்த் திரும்புகையில் அவன் கண்களில் ஸ்படிகம் வழிவது கண்டாள். தானும் படத்திற்கு விழுந்து கும்பிட்டு எழுந்திருக்கையில், படத்திலிருந்து அந்த அன்பு கனிந்த நோக்கு அவள் மேலும் குனிகையில், நெஞ்சை என்னவோ செய்தது. அது ஒரு நிமிஷந்தான். அனால் அதே பார்வைதான் அன்றிலிருந்து இன்னமும், மீனா—நீனா—பாச்சு—இவர்கள் எல்லோருக்கும் முன்னால் ஒண்ணு—அன்றிலிருந்து இன்னமும்.

ஜமதக்னி தட்டை எட்டி நகர்த்தினான். அவன் முகம் மாறிவிட்டது.

“அப்பா, நேக்கு அப்பா நேக்கு?”

“இந்தா எடுத்துக்கொள்ளுங்கள்—”

மாஞ்சிக்கு ஏனோ பயமாயிருந்தது, தான் ஏதோ தவறு இழைத்து விட்டாற்போல்.

“உங்களுக்குப் பிடிக்காதா?”

அவன் பதில் பேசவில்லை. கைகளை மடியின்மேல் நின்றாள். ஏனோ அவளுக்குப் பயமாயிருந்தது.

தன்மேல் கவிந்த படலங்களைச் சட்டெனக் கலைத்துக் கொண்டு ஜமதக்னி தலை நிமிர்ந்தான். அவளைப் பார்த்து சிறுநகை புரிந்தான்.

“ஏன் நிற்கிறாய் மாஞ்சி? உட்கார்”

மாஞ்சி நெற்றிப் பொட்டைத் தடவிக்கொண்டாள்.

முற்றத்தில் இருள் மடிமடியாய் விழுந்துகொண்டிருந்தது, சுவர்களில் விதவிதமாய்த் தோய்ந்த கறைகள் குழைய ஆரம்பித்துவிட்டன. தூணின் உச்சி பீடத்தில் கட்டிய கூட்டில் தாய்க்குருவியும் குஞ்சுகளும் “கீச்கீச்”

ஜமதக்னி எழுந்து படத்தின்கீழ் நின்ற குத்துவிளக்கை ஏற்றினான். அமுக்கி வைத்திருந்த உயிருடன் சுடர் திரியிலிருந்து குதித்தெழுந்தது. மாஞ்சிக்கு நெஞ்சு துள்ளிற்று. நெஞ்சைத் தொட்டுக்கொண்டாள். படத்தில் கண்கள் சிமிட்டிப் பளீரிட்டன.

அவன் அசைவற்று நின்றான். ஒடும் பாம்பை நெஞ்சில் அழுத்தினாற்போல் அக்கணம் நில்லென அந்தரத்தில் நின்றது ஒரு கணம்தான். ஸ்தம்பித்த நேரம் மறுபடியும் தான் இழந்த வேகத்தைப் பன்மடங்கு பெருக்கிக்கொண்டு வெள்ளமாய் இறங்கிற்று. மாஞ்சிக்கு மூச்சுத் திணறிற்று. மறுபடியும் நினைவு வருகையில் அவன் பேசிக்கொண்டிருந்தான்,

“—ததும் எனக்காக கடலையுருண்டை பண்ணினது எனக்குத் நினைவு வந்துவிட்டது. அதிலிருந்து இன்னமும் எது எதுவோ எங்கெங்கேயோ...”

அவனுடைய விசன மூச்சு, அரவுபோல் அவள்மேல் விழுந்து சுருண்டு கழன்று கொண்டது.

“இது ரொம்ப நாளைக்கு முன்னால்; எனக்கு ஒண்ணரை வயசிருக்குமாம். அக்காவுக்கு அப்போது பதினொன்று தாண்டிப் பன்னிரண்டு. இடையில் ஏதேதோ பிறந்ததாம். ஒன்றும் தங்கவில்லை. நாங்கள்தான் மிச்சம்.

“அம்மா வீட்டுக்கு விலக்கு, வாசலிலிருந்தபடி பதம் சொல்லிக்கொடுத்து என் சகோதரி சமைத்துக்கொண்டிருந்தாள். அக்கா அப்பொழுது முதற்கொண்டே ரோம்பகெட்டிக்காரியாம். கண் பட்டது கை செய்யும்.

“அன்றைக்கு என்னவோ தானே கடலையுருண்டை பிடிக்க வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். அம்மா ‘வேண்டாண்டி’ என்று வாசலிலிருந்த வண்ணம் கத்தக் கத்தக் கும்மட்டியில் வெல்லப்பாகு வைத்துவிட்டாள். அது சரியாக வருகிறதா என்று பார்ப்பதற்காகக் கொஞ்சம் கரண்டியில் எடுத்து ஜலத்தில் நனைத்து நூல் பார்த்து விட்டு என் நாக்கில் கைப்பாகைக் கொஞ்சம் இழுத்துவிட் டாள். நான் குழந்தை அவள் அந்தப்பக்கம் பார்த்துக் கொண்டிருக்கையில் நானே சப்பையில் நகர்ந்து வந்து காயும் பாகில் கையை வைத்துவிட்டேன்.

“க்றீச்”சசென நான் போட்ட அலறலில் அக்கா கைவேலையை அப்படியே கீழே போட்டுவிட்டு ஓடிவந்து என் கையைப் பிடித்து இழுத்த வேகத்தில் இசைகேடாய் வானாய் சாய்ந்து அத்தனை பாகும் அவள் கைமேல் கொட்டிவிட்டது.”

மாஞ்சி கன்னங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள்.

சமையலறையில் கோடியடுப்பில் கொள்ளிக்கட்டை சரிந்தது. தீ நாக்குகள் துள்ளி விளையாடின.

ஜமதக்னி தீக்குச்சியின் கட்டையால் விளக்குச் சுடரைத் துாண்டினான்.

“அக்காவுக்குக் கை சொஸ்தமான பிறகு கைக்கட்டை அவிழ்த்தபோது கை பார்க்கச் சகிக்கவில்லை. அதைப் பார்க்கும்போதெல்லாம்— அதுவும் அந்த முகத்தைப் பார்த்துவிட்டுக் கைமேல் கண்ணிறங்கும் ஒவ்வொரு தடவையும் எங்களுக்கு வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டும்.

எனக்கு ஒன்று என்றுமே மறக்காது.

எனக்கு வயது ஐந்து அல்லது ஆறு இருக்கும். அக்கா ஜன்னலண்டை உள்ளங்கையில் மோவாயோடு ஏதோ யோசனை பண்ணிக்கொண்டிருந்தாள் அவள் உட்கார்ந்திருந்த விசுப் பலகை கொஞ்சம் உயரம். அதன்மேல் நான் ஏற முடியாமல் ஏறி, அவள் மடியில் உட்கார்ந்துகொண்டு அவள் கைத் தழும்பைத் தொட்டுத் தடவிப் பார்த்து “என்ன அக்காது?” என்றேன்.

அவள் பதில் பேசாமல் கண்ணைக் கொட்டாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்னக்கா என்னையே இப்படிப் பாக்கறே? ஏங்க்கா அழறே?” கன்னத்தில் வழிந்த கண்ணிரை அப்படியே ஒரு விரலால் வழித்து விசிறி எறிந்தாள். ‘ஒண்னுமில்லேடா கண்ணு!’ என்று என்னை அப்படியே இறுக்கிக் கட்டிக்கொண்டாள். ‘அது நீடா!’

“எது, இதுவா?” கைத் தழும்பை மறுபடியும் நான் வியப்புடன் தடவினேன்.

அவள் பதில் பேசவில்லை. அவள் கன்னங்கள் குழிந்து பளபளத்தன. என் முகத்தை இறுகப் பிடித்துக்கொண்டு இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள். இப்போதும் என் எலும்பு உருகுகிறது.

அவள் வெளிச்சம் என்மேல் ஆடியவண்ணம் இருந்தது. அவள் பார்வையை வாசற்படியிலிருந்து பள்ளிக்கூடம் வரை தாங்கிச் செல்வேன். வீட்டுக்குத் திரும்புகையிலும் அந்தப் பார்வை எனக்காகக் காத்திருக்கும். அவள் கூட இல்லை. அவள் பார்வை. நடுக்கூடத்தில் ஏற்றி வைத்த விளக்குமாதிரி, தான் இருந்த இடத்திலிருந்து கொண்டே தன்னைச் சுற்றிலும் தன்னொளியை வீசிக்கொண்டிருப்பாள்.

இப்பொழுது தெரிகிறது. அவள் தன்னையே என்மேல் கொட்டிக்கொண்டு விட்டாள். அவளே அவளை, அன்று பற்றிய தீ உள்ளே பிடித்துக்கொண்டு எரிகையில் வேறு மாதிரியாய்த்தான் ஆகிவிட்டாள். பேச்சிலும் செய்கைகளிலும் ஏதோ ஒரு அர்ப்பணித்த தன்மை, ஒரு விரக்தி. அதனால் அவளுக்கு எங்களிடமில்லாத ஒரு முழுமை. எப்பவும் ஒரு சுறுசுறுப்பு, ஒரு கலகலப்பு. சிரித்துக் கொண்டு முகமலர்ச்சியாயிருப்பாள். ஆனால் அந்தச் சிரிப்பை அவள் சிரிக்கும்போதே அதைத் தன்னிடம் தனக்கென்று வைத்துக்கொள்ளாது எல்லோருக்கும் உடனே பங்காய் அள்ளிக் கொட்டிவிடுவது போன்றிருக்கும். உண்மையில் அவள் சாதாரணம் மீறியவளானாள். எதற்குத் தன்னை அப்படித் தனக்குள் அர்ப்பணித்துக் கொண்டு விட்டாளோ அதுவாய்த் தானாகிகொண்டிருந்தாள். அதன் வழியே தன்னை வேகமாய் விரட்டி கொண்டிருந்தாள்.

வயது ஏறஏற அதற்குத் தகுந்தாற்போல் நான் ஆகாயத்தை எப்படிச் சுண்டு விரலால் எட்டித் தொடுவது, சமுத்திரத்தைச் சாக்கடையாய் எப்படித் தாண்டுவது, ஒரே நாளில் விதை விதைத்துப் பயிராக்கிப் பழ மறுப்பது என்றெல்லாம் மாடிக் கட்டைச் சுவர் மேல் உட்கார்ந்து, சில சமயங்களில் யோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்.

‘அம்பீ!—’ என்று எதற்காகவாவது கூப்பிட்டுக் கொண்டே கைவளை குலுங்க மாடிப்படி தடதடவென ஏறி வருவாள்.

“என்ன அக்கா!”

“அக்கான்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்வேன்! அதுவும் லட்சுமின்னு ஆத்துலே பேரை வெச்சுட்டு!”

அவனுள் திடீரென பொட்டென உடைந்து ஜமதக்னி விக்கி விக்கி அழுதான். விளக்குச் சுடர் ஆடி ஆடி நெளிந்தது. கைகளுள் புதைந்த முகத்திலிருந்து உடல் வரை ஒரு ஜ்வாலை கிளை பிரிந்து அவன்மேல் ஓடிற்று.

“என்னால்தானே லட்சுமிக்கு இப்படி நேர்ந்தது! நான் ஏன் இப்படி இவளுக்குச் சாபமாய் விளைந்தேன்?” என்று சில சமயங்களில் என்னால் எண்ணாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் என் எண்ணங்களைக் கண்டுகொண்டு பந்தை உதைப்பதுபோல் அவ்வளவு அனாயாஸமாய்ச் சிரித்துக்கொண்டே அவைகளை என்னின்று உதறியெறிவாள்.

“என்னடா என் கையைப் பார்த்துப் பொருமிண்டு இருக்கே? நான் சில விஷயங்களில் விடுதலை ஆனவள். உங்கள் எல்லோரையும்விட மேலானவள் தெரியுமா?”

பாதி புரிந்ததும் புரியாததுமாய், புரிந்தாற்போல் சிரிப்பேன், தலையை ஆட்டிக்கொண்டு. கைப்பிடிச் சுவரின்மேல் வந்து உட்காருவாள், ஒரு காலை ஆட்டிக் கொண்டு ஒரு நிமிஷம்கூட அசையாது அவளால் இருக்க முடியாது.

“பார் உங்களுக்கெல்லாம் நான் தாயாயிருக்கேன். அப்பா உள்படத்தான். அம்மாவுக்குத்தான் கையாலாக வில்லையே, உங்களை யார் பாத்துக்கறா? நீங்கள் அத்தனைபேரும், என்னைப் பெற்ற என் அம்மாவையும் சேர்த்துத்தான் நீங்கள் என் குழந்தைகள். ஆனால் அப்பவே நான் உன் குழந்தை, உனக்கு நான் முன்பிறப்பு தான். ஆனால் உன்னைத் தவிர எனக்கு யார் கதி? எனக்குப் படிப்பில்லை, படிப்பில் ஆசையுமில்லை.உன் சோற்றில் ஒரு பங்கு எனக்குக் கொடுக்காமல் போயிடப் போறயா இல்லாட்டா நான்தான் விடப்போறேனா?

எனக்குத் துக்கம் தொண்டையை அடைக்கும். திடீரென எழும் வாஞ்சை தாங்க முடியாதபடி உடலை அழுத்தும்.

“ஏன் இப்படி வதைக்கிறாய்?”

“நான் உன்னை விடப்போவதில்லை, என் வேளை வரும் சமயத்தில் உன் மடியில் தலை வைத்துத்தான் உயிர் விடப்போகிறேன். ஒரே சமயத்தில் மாதாவும் குழந்தையுமாய் யாரால் இருக்க முடியும்? அந்தப் பராசக்தியாலும் என்னாலும்தான்! நான் நெருப்பில் குளிச்சவளடா!”

இப்படித்தான், ஒவ்வொன்றிலும் தன் சேகத்தை காவிய கனத்தைப் பூவின் இதழ்கள் போல் அவ்வளவு அழகுடன் மணத்துடன் லேசாய் அவளால்தான் முடியும்.

அப்பா எப்படியேனும் அவள் கையை மறைத்து யாருக்காவது கையைப் பிடித்துக் கொடுத்துவிட வேண்டுமென்று மலைப் பிரயத்தனங்கள் பண்ணினார். அநேகமாய்ச் சாதிக்கக்கூடச் சாதித்துவிட்டார். வரனுக்கு வடக்கே எங்கோ துார தேசத்தில் உத்தியோகம். .

“லட்சுமி, அவன் உன்னைப் பார்க்கவரும் வேளைக்கு நீ புிடில் கிடில் ஒன்றும் வாசிக்க வேண்டாம். கைமேல் மேலாக்கைப் போட்டு மறைத்துக்கொண்டு. மறைத்துக் கொள்வதற்காக மறைத்துக்கொண்டிருக்கிறேன் என்றும் காண்பித்துக்கொள்ளாமல் சாதாரணமாய் உட்கார்ந்து கொண்டிரு. எல்லாம் சரியாய்ப் போய்விடும்!”

“என்னப்பா! இதெல்லாம் எத்தனை நாளைக்கு முடியும்னு நினைக்கிறேள்?” லட்சுமி அலுப்புடனதான் பேசினாள்.

“இப்போ எனக்கு இத்தனை வயசுக்கு மேலே இனி மேல் என்ன! உங்கள் ஏற்பாடெல்லாம் சரிப்படாதப்பா. எல்லோரையும்போல் நான் இருக்கேனா? கலியாணமோ சத்தியத்தின் ஏற்பாடாய்ப் பண்ணறோம். அதைப் பொய்யில் சாதித்துவிட முடியுமா? ஏதோ பிச்சைக் கயிறுக்கு ஆசைப்பட்டு அப்புறம் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி அவஸ்தைப்பட எனக்கு உடம்பிலே சக்தியிருந்தாலும் மனசுலே இல்லே. அதை விட செத்துப் போயிடற்தே—”

அப்பாவுக்குக் கனகோபம் வந்துவிட்டது.

“எனக்கு அப்பவே தெரியுமே. இந்தமாதிரி மட்டந்தட்டிப் பேச உனக்குப் புத்தியும் உண்டு, அதற்குத் தகுந்தாற்போல் உனக்கு இடமும் கொடுத்தாச்சு. நீதான் சகலமும் அறிந்தவள் என்று பேசாதே. எங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எப்படியும் எனக்கப்புறம் தான் நீ பிறந்தாய் என்பதை மறந்துவிடாதே!”

லக்ஷ்மி பதில் பேசாமல் கையில் ஒரு பூவைத் திருகிக்கொண்டு நின்றாள். அப்பாவுக்கு அவசரம் கொஞ்சம் தணிந்தது.

“லக்ஷ்மி! லோகத்தில் எல்லோருமே பாவிகள் என்று நினைத்துக்கொள்ளாதே. எல்லோர் வீட்டிலும் ஒருசமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் எண்ணெய் காய்ந்து கீழே கொட்டியிருக்கும்; பால் பொங்கி வழிந்திருக்கும்; குத்துவிளக்கை ஏற்றும்போது முன்றானையில் தீப்பிடித்திருக்கும். முதலில் கொஞ்சம் கஷ்டமாயிருந்தாலும் அப்புறம், நீயும் கையில் ஒன்று ஏந்திக்கொண்ட பிறகுஎல்லாம் சரியாய்ப் போய்விடும். உன்னைவிட மோசமான ஊனம் ஏற்பட்டவர்களுக்கெல்லாம் விடிந்திருக்கிறது. உலகத்தில் ஈவு, இரக்கம், தயை அநுதாபம் எல்லாம் ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம்—எல்லாவற்றிற்கும் வழியிருக்கிறதடீ!”

லக்ஷ்மி எரிமலைபோல் சீறினாள்.

“இரக்கமும் தயையும் எனக்கு வேண்டாம்—” அவளுடைய திடீர் உக்ரத்தைக் கண்டு அப்பா பயந்து பின்னடைந்தார்.

“என்ன லட்சுமி இப்போ—?”

“உங்கள் வழியெல்லாம் எனக்குத் தெரியாதா? ஏதோ ரெண்டு காசைக் கூட வீசி எறியறதுதானே, உங்கள் வழி, ஏதோ உங்கள் கிட்டேயிருக்குன்னு! போங்கோ அப்பா இங்கே விட்டுப் போயிடுங்கோ! அம்பி, அப்பாவை வெளியே போகச் சொல்.

வெகுநேரம் கழித்து அறையுள் நான் மறுபடி போக நேர்ந்தபோது, இருட்டிக் கிடந்தது. விளக்கைப் போட்டேன். ஜன்னல் விளிம்பின்மேல் முழங்காலைக் கட்டிக்கொண்டு பதுங்கிய மிருகம்போல் உட்கார்ந்து கொண்டிருந்தாள். கண்களில் மங்கிய தணல்கள் நகநகத்துக் கொண்டிருந்தன.

நான் பக்கத்தில் போய் உட்கார்ந்தேன்.

“லக்ஷ்மி!”

அவள் தலை நிமிர்ந்தது. பார்வையில் என்னை அடையாளம் கண்டுகொண்ட சோடையில்லை. அந்நியனைப் பார்ப்பதுபோல் இருந்தது.

“அம்பி,என் விஷயத்தில் நீ எவ்வளவு கெட்டவனாய் வேணுமானாலும் இருந்துக்கோ.ஆனால் என் மேல் உனக்கு இருக்கும் இரக்கத்தினால், அதற்காக என் மேல் பிரியமாயிருக்காதே. அது மாத்திரம் என்னால் ஸகிக்க முடியாது. கழுத்தில் கல்லைக் கட்டிண்டு கொல்லை கிணற்றில் இறங்கிடுவேன்.இது சத்தியம்— ஆமாம். சத்—”

“லக்ஷ்மீ!” “ஆமாம்.” சட்டென்று எழுந்து அறையின் ஒரு மூலையை வெறித்துக்கொண்டு நின்றாள்.

‘கண்டிப்பாய் நான் உன்னிடமிருந்து உன் இரக்கத்தைச் சகிக்கமாட்டேன். பார்! எனக்கென்று நான் எதையும் வெச்சுக்கல்லே. எல்லாத்தையும் எல்லாருக்கும் கொடுத்துவிட்டேன். உங்கள் இரக்கத்தை நான் விரும்பவில்லை. வாசலில் காத்துக்கிடக்கும் நாய்க்கு எச்சிற்கலை எரிவதுபோல்!"—

எனக்கு உடல் பறந்தது. “லக்ஷ்மி லக்ஷ்மி!”

என் அலறல் கேட்டு அவளுக்கு நனைவு சற்றுத் திரும்பிற்று.

“என்ன அம்பீ? என்னடா நான் பேசிண்டிருக்கேன்?”

அவள் தலை சுழன்றது. நான் தாங்கிக்கொண்டிராவிட்டால் மடேரென வீழ்ந்திருப்பாள். அவளை மெதுவாய்த் தரையில் கிடத்தினேன். அவளுக்கு நினை வில்லை. அன்றிரவு ஜூரம் கண்டுவிட்டது. ஜூரமா அது? மழு! ஊரிலிருந்த முலைப்பாலத்தனையும் கொண்டுவந்து நெற்றியில் நனைத்துப் போட்டும் மண்டையிடி தாங்கக் கூடியதாயில்லை. பக்கத்தில் சென்றாலே அனல் வீசிற்று. என் குழந்தை புரண்டு புரண்டு புழுவாய்த் துடித்தாள்.

“அம்பீ! அம்பி! தாங்க முடியல்லேடா! என் முதுகுத் தண்டே தீஞ்சு கருகிப்போச்சுடா! அம்பீ! அம்பீ!”

கடைசிவரையில் இதே அரற்றல்தான்.

“அம்பி, என்னைவிட்டுப் போயிடாதே! என் கிட்டேயே உட்காந்துக்கோ.இந்தா, இந்த பழத்தை உன் கையால் உறிச்சுக்கொடேன்.ஹய்யோ, என்னை ஒரு இடத்திலே இருக்கவிடலையே! இந்த ஈஸிச்சேரில் எடுத்து வையேன்!”

எப்படி அவள் அப்படி லேசாய் போனாள், குழந்தை மாதிரி!

என் மௌனமான வியப்பைப் புரிந்துகொண்டு புன்னகை புரிவாள்.

“பார்த்தையா! அன்னிக்கே சொன்னேனே ஒருநாள், ஞாபகமிருக்கா?”

“என்ன லக்ஷ்மி?”

“ஒண்ணுமில்லை” நினைவு மறுபடியும் எங்கோ சுற்ற ஆரம்பித்துவிடும்.

“இல்லேடா அம்பீ! சௌகரியமாயில்லே! என்னை மறுபடியும் படுக்கையில் போட்டுவிடு. அப்பான்னு கூப்பிட்றேனே! அம்பீ,எனக்காக நீ கண் முழிச்சுண்டாயிருக்கே?.அம்பீ தூங்குடா, தூங்கு.உனக்கு உடம்புக்காகாது. எனக்கு இப்பிடித்தானிருக்கும்.இன்னம் கொஞ்சநாள்தான் கொஞ்சநாள்தான்...”

ஜூரம் வந்து முப்பத்திரண்டாம் நாள்—அன்று வெள்ளிக்கிழமை விடியற்காலை. லட்சுமி தூங்கிக்கொண்டிருந்தாள் அல்லது கண்கள் மூடியிருந்தன. உடம்பை அம்மா தொட்டுப் பார்த்தாள். அவள் முகம் மலர்ந்தது.

“அம்பீ ஜூரம் விட்டுடுத்து!”

லட்சுமி கண்களைத் திறவாமல் புன்னகை புரிந்து கொண்டு எதையோ தேடுவதுபோல் கைகளை நீட்டினாள்.

“அம்ம்ழீ! அம்ம்ழீ!!”

லட்சுமிக்கு நாக்கு இழுத்துவிட்டது. ஒரே ஒரு தடவை மங்கிக்கொண்டிருக்கும் முழுச் சக்தியுடன் கண்களை விழித்து என்னைப் பார்த்து என் கழுத்தைக் கட்டித் தன் பக்கமாய் இழுத்துக்கொண்டாள். அவ்வளவுதான் அப்புறம் நினைவு தப்பிவிட்டது. நெஞ்சு கடைய ஆரம் பித்துவிட்டது. அடுத்த தெருவில் சிவாலயத்தில் காலைச் சந்திமணி அடிக்க ஆரம்பித்தது. லக்ஷ்மிக்கும் மூச்சு அடங்கிற்று. அவள் தூக்கத்தில் ப்ரமிக்கத்தக்க அழகுடன் பொலித்தாள்.

லஷ்மிக்கு நான்தான் கொள்ளியிட்டேன். அவளிஷ்டம் அப்படித்தானிருந்திருக்கும். அடுத்த நாள் அவள் அஸ்தியைச் சேர்த்த பானையைத் தோளில் தாங்கிக் கொண்டு நான் சமுத்திரத்துக்குச் செல்கையில் பானையில் எங்கோ கசிவு ஏற்பட்டு என் மார்பிலும் தோளிலும் அஸ்தி ஜலமும் பாலும் வழிய ஆரம்பித்தன. அந்த சமயத் தில் லக்ஷ்மிதான் அப்படி அகங்குளிர்ந்து என்னுள் இறங்குகிறாள் என்று நான் நினைத்துக் கொள்கையில் அதுதான் நிஜமாய் இருந்தது.

அவளுடைய கடைசி மூச்சிலும் என்னை ஸ்மரிக்கும் இந்த அற்புதமான அன்பிற்கு நான் லாயக்கா? ஒரு நாளல்ல, இருநாளில்லை. இந்தப் பூஜை விளக்கண்டை உட்கார்ந்துகொண்டு நான் சிந்திப்பதுண்டு.

மாஞ்சி, இந்த விளக்கை என்தாய் தன்னோடு கொண்டு வந்தாள் அதற்குமுன் இரு தலைமுறைகள் அவள் வீட்டில் இருந்தது. இப்படியே நின்றுகொண்டு எத்தனைக்கோ சாக்ஷியாய் இருந்திருக்கிறது. நான் ஒன்றிருமுறை கடுநோயாய் பாயில் விழுந்திருக்கையில், நான் சொஸ்தமாக வேண்டுமென்று ஏற்றி வைத்து லஷ்மி இதை வணங்குகையில், அவள் சொன்னதைக் கேட்டிருக்கிறது. ஆனால் அவள் விஷயத்தில் ஏன் ஏமாற்றிவிட்டது?

“ஆண்டவனே, நீயென்று தனியாயிருந்தால், நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாய்? இதோ இரவு வருகிறது.........”

அவன் குரலில் அற்புதமான கவிதை மிளிர்ந்தது. மாஞ்சி சுற்றுமுற்றும் பார்த்தாள். அவள் உட்கார்ந்திருந்த இடத்திலருந்து முற்றத்தில் கவிந்த இரவு தனியாய் ஆகாயத்திலிருந்து ஒரு கம்பளியை இழுத்துப் போர்த்துக் கொண்டு அப்போதுதான் எழுந்து வந்தாற்போலிருந்தது.

அவன் தன் வசமிலாது பேசினான்:

“பார், பார், மேலே பார் சின்னதும் பெரிதுமாய் விளக்குகள் ஏற்றிக்கொள்கின்றன. இத்தனை விளக்குகளையும் போட்டுக்கொண்டு என்னத்தை அவன் தேடிக் கொண்டிருக்கிறான்? பகல் வருகிறது. பகலே, உலகிற்கே ஒரே விளக்கான ஜோதியில் வருகிறது. முகம் கொடுத்துப் பார்க்கக்கூட முடியாத அந்த ராகசிய விளக்கைப் போட்டுக்கொண்டு இரவும் பகலுமாய் இன்னமும் எதைத் தேடுகின்றான்? இத்தனையும் போதாது என்று அவரவர் நெஞ்சில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, இத்தனை விளக்குகளும் இன்னும் வெளிச்சம் போதாமல் இன்னமும் ஒன்றையொன்று தேடிக்கொண்டிருக்கின்றன. ஆண்டவனே, நீ என்னத்தைக் கீழே சிந்திவிட்டாய்? காலமும் யுகமுமாய் நீ தேடும் பொருள் உனக்கே அகப்படாதோ...?”

மாஞ்சி திகிலடைந்தவளாய் அவன் தோளைப் பிடித்துக் குலுக்கினாள்.

“இந்தாங்கோ, என்னைப் பாருங்கோ-என்னைப் பாருங்கோளேன்!”

அவன் திடுக்கிட்டு விழித்தவன்போல், தலையை உதறிக்கொண்டு அவளை நோக்கினான்.

மாஞ்சி பேச்சை மாற்றுவதற்காக, “நீங்கள் இது மாதிரி விளக்கண்டை உட்கார்ந்திருக்கையில் ஒருநாள் நான் உங்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தேன்” என்றாள்.

“ஆமாம், நீ என் வாழ்க்கையுள் வந்தது எனக்கு மறந்துவிடுமா?” திடீரென மெதுவிட்ட அவன் கண்களில் பனி ஈரம் பளபளத்தது. அவள் கன்னத்தை விரல் நுனிகளால் தொட்டான். “மாதத்திற்கொரு முறை, பிறகு வருடத்திற்கு ஒரு தினம், லக்ஷ்மி இறந்த தினம், அம்மா ஒரு கன்னிப் பெண்ணுக்குச் சாதமிட்டு வந்தாள்.”

“அவர்களில் ஒருத்தியாய், நான் வந்தேனே பழமையின் நினைவின் அகிற் புகை புகுந்து படருகையில், அந்த இன்பப் போதையில், அவள் வார்த்தைகள் சற்று மழலையாய்க் குழறின. “நான் சாப்பிட்டப்பறம், உங்கள் அம்மா என்னை மணையில் ஒக்காரவெச்சு என் காலுக்குப் பச்சையிட்டு, கைக்கு வளையலிட்டு, கூந்தலைக் கோதி முடிஞ்சு அதில் ஒரு பூவையும் சொருகின சமயத்தில் அப்போத்தான் நீங்கள் இதோ இதே குத்துவிளக்கின் பாதத்தில் ரெண்டு கையினாலும், பூவைச் சொரிந்து தலை நிமிர்ந்தீர்கள். அப்போ உங்கள் பார்வை என்மேல் சாஞ்ச போது, என் நெஞ்சிலே நெருப்பை வெச்சாப்போல இருந்தது, அப்பா! இப்பொ நினைச்சாக்கூட உடல் சிலிர்க்கிறது...!”

அவன் நாட்டம் விளக்கின்மேல் நிலைத்திருந்தது. அதன் சுடரிலிருந்து அவனுக்கு மட்டும் தெரிந்து பொறி விட்டு புறப்படும் எழுத்துக்களை வாய்விட்டுக் குரல் நக நகக்கப் படித்துக்கொண்டிருந்தான்

“கன்னிப் பெண்ணாய் முதன் முதலாய் இந்த விளக்கின் சாட்சியாக இந்த வீட்டுள் கால் வைத்தாய். பிறகு இதன் சாட்சியாய் என் வாழ்க்கையுள் நுழைந்து இங்கேயே தங்கிப் போனாய். இவ்விளக்கெதிரில்தான் மீனாவையும் நீனாவையும் வளர விட்டாய். இதைத்தான் அவர்கள் முதன் முதலாய்ப் பார்த்தார்கள். இதுதான் அவர்களை வளர்த்து வருகிறது.”

“பாச்சு?” பழைய துக்கத்தின் புதிய வேகத்தில் மாஞ்சி உதட்டை இரத்தம் வரக் கடித்துக்கொண்டாள். கன்னங்களில் கண்ணிர் புலு புலுத்தது.

“பாச்சு?—” அவன் மோவாய் அவன் கையில் ஊன்றியது. “ஆம்; அவனும் இவ்விளக்கில் சேர்ந்தவன் தான். சுடரிலிருந்து ஒரு பொறி. இப்பொழுது தன்னில் ஒரு பொறி பெரிதாகிக்கொண்டு வருகிறது—பார்!!—”

அவன் கண்கள் ஜ்வலித்தன.அவன் சுட்டிக் காண்பித்துக்கொண்டிருக்கையிலேயே விளக்கிலிருந்து ஒரு சிறு சிநருப்புப் பந்து குதித்துக் கீழேயிறங்கிற்று. அந்தத் திரி கீழே விழுந்து எரிவதை மாஞ்சி பார்க்கையில், அவளையுமறியாது அவள் கை அவன் முழங்கையைத் தொட்டது. அவளுள் திடீரென்று ஏதோ பற்றிக் கொண்டாற். போலிருந்தது.

***

“விளக்கண்டை உட்கார்ந்திருப்பதைத் தவிர வேறு வேலையில்லையா உங்களுக்கு? உங்கள் பிள்ளை தொட்டிலில் கொக்கரிக்கிறான் பாருங்களேன் பாருங்கோ —அச்சு கண்ணாட்டி!”

மாஞ்சிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. குழந்தையின் விளையாட்டைக் கண்டு, அவள் குழந்தை மாதிரி கைகொட்டி நகைக்கிறாள். ஜமதக்னி முகம் திரும்பினான். மாஞ்சி இந்தத் தடவை ரொம்பவும் வாங்கிப் போய்விட்டாள். இந்தப் பிரசவம் ஏனோ தெரியவில்லை. ரோம்பவும் சிரமப்படுத்திவிட்டது. குழந்தை பிறந்து ஆறு மாதங்களாகிவிட்டன. அவள் இன்னமும் சரியாய்த் தேறினபாடில்லை. அவளை அப்படிக் காண்கையில், அவனறியாததோர் தாய்மை அவனுள் அலைமோதி எழும்பிற்று. அவளை ஏன் இப்போது ஆணின் கண்களுடன் பார்க்க முடியவில்லை?

மாஞ்சி குழந்தையைத் தொட்டிலிலிருந்து வாரிக் கொண்டு பின் பக்கமாய் வந்து, அவன் மடியில் பலவந்தமாய்க் கிடத்தினாள்.

“இப்பவாவது உங்கள் பிள்ளையைப் பார்க்கறேளா பார்க்கறேன்!”

அவன் அதன் கன்னத்தை நிமிண்டினான். அது அவன் மூக்கை எட்டிப் பிடிக்க முயன்றது. மாஞ்சி அவன் பக்கத்தில் உட்கார்ந்து கைகளை மடியில் ஊன்றிக்கொண்டாள்.

“பாருங்கோ பாருங்கோ, நீங்கள் புடிச்சுத் தள்ளினாலும் அவன் உங்களை விடமாட்டான்.”

“நான் அவனைப் பிடித்துத் தள்ளவில்லை. நான் யாரையுமே பிடித்துத் தள்ளவில்லை. ஆனால் உன் மாதிரி கெட்டியாய் அமுக்கிப் பிடித்துக்கொள்ளவும் விரும்பவில்லை.”

காரணம் புரியாமல், மாஞ்சிக்குப் ‘புர்’ ரென்று மூக்கைப் பொத்துக்கொண்டு கோபம் வந்துவிட்டது. அவன் மடியிலிருந்து குழந்தையை எடுக்க முயன்றாள். அவன் மெதுவாய்த் தடுத்தான்.

“ஏன்? என்ன அவசரம் இப்போ?”

“நீங்கள் எப்பவும் எதுக்கெடுத்தாலும் என்னைக் கேலி பண்ணிண்டிருக்கேள். அப்படி என்னவாம் நான் உலகத்துத் தாய்மார்களை விட வேறே மாதிரியா இருக்கேனாம்?”

“ஒஹ்-ஹோ!”

ஆமாம், நீங்கள்தான் உலகத்து ஆம்படையான் மாதிரி என்னிடமில்லை. ஏன், ஏன், ஏன் இப்படி என் விஷயத்திலே இருக்கேள்? அவளுக்கு அழுகை வந்து விட்டது.

“எப்படி இருக்கிறேன்?”

அவள் கைகள் ஆடித் தவித்தன.

“ஆமாம், அதுதான் சரி. திருப்பி என்னையே கேட்டுடுங்கோ!”

“உனக்கு என்ன வேண்டும், உனக்கில்லாமல் நான் என்னத்தைத் தனியாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்?”

இரு கைகளாலும் அவன் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள்.

“நீங்களே சொல்லுங்கோ. நீங்கள் பழையமாதிரி என்கிட்டே இருக்கேளோ? அதுவும் வரவர இந்தக் குத்து விளக்கண்டை உட்காந்துண்டு இந்தப் படத்தையும் இந்தச் சுடரையும் பார்த்துண்டு இருக்கறதைத் தவிர வேறென்ன பண்ணிண்டிருக்கேள்? நான்தான் கேக்கறேன், அப்படியென்ன அதில் நாங்கள் எல்லாம் காணாததைக் காணறேள்?”

அவன் தலை மெதுவாய்க் குனிந்தது.

பெருமூச்செறிந்த வண்ணம் மறுபடியும் தலை நிமிர்ந்தான். அவன் பார்வை சுடரைத் துளைக்க முயன்றது.

“என்னத்தைக் காண்கிறேன்? நான் இந்தச் சுடரைப் பார்த்துக்கோண்டேயிருக்கிறேன். கொஞ்ச நாழிகைக்குப் பிறகு இதைத்தவிர, இதன் பின்னாலும் முன்னாலும்,பக்கத்திலும் எல்லாமும் இருண்டுவிடுகின்றன. இச்சுடர் நாக்கு மாத்திரம் தனியாய் வயிற்றுப்பக்கம் சற்று அகன்று நீலவிளிம்பு கட்டிக்கொண்டு நிற்கிறது. அது நிற்பதற்கே ஆதாரமாயிருக்கும் திரி முதல் திருஷ்டிக்கு மறைந்து விடுகிறது. பிறகு இந்தச் சுடர் ஒன்றுதான், ஒன்றே தான்—”

“பிறகு, இச்சுடரின் வயிறு கொஞ்சங் கொஞ்சமாய் அகன்று, மடல் மடலாய் எண்ணற்ற இதழ்கள் குவிந்து அற்புதமான ஹ்ருதய புஷ்பமாய் மாறிவிடுகிறது” அவன் முகத்தில் அவன் வர்ணிக்கும் புஷ்பத்தின் செந்திட்டு படபடத்தது.

“பிறகு இவ்வளவு வேலைப்பாடுகள் நிறைந்த இப் பூ மலர்ந்து மெதுவாய் வாய் திறக்க, அதன் கிண்ணத்திலிருந்து விதவிதமான பழைய உருவங்களும், புது உருவங்களும் புறப்படுகின்றன. நான் அடையாளம் கண்டு கொள்ளும் உருவங்கள், கண்டுகொள்ளாத உருவங்கள், நேற்றைய உருவங்கள், இன்றைய உருவங்கள், இனி மேலாய உருவங்கள்—ஆனால் உள்ளுணர்வில் எனக்குத் தெரிந்த என் உருவங்கள்...”

“புரியல்லே, புரியல்லே!— எனக்கு வேண்டாம்! வேண்டாம்!” மாஞ்சி செவிகளைப் பொத்திக்கொண்டாள்.

“நீ கேட்டாய். நான் சொன்னேன்— அல்லது சொல்லப் பார்க்கிறேன். நான் இவைகளைப் பார்த்தேன் என்றால் இந்தக் கண்களால் பார்த்தேன் என்று அர்த்தமல்ல. இந்தக் கண்ணையும் மீறிய பார்வையில் பார்த்தேன்.”

“என்ன சொல்றேள்?”

அவள் முகத்தின் திகைப்பு வேதனையை விளைவித்தது. அவன் அவளைத் தன் பக்கமாய் இழுத்து, முகத்தில் முத்தமிட்டான்.

மாஞ்சி குழந்தைதான். அவள் கவனம் சட்டென மாறிவிட்டது. அவன் மடியில் கிடக்கும் குழந்தையின் முகத்தெதிரில் கையை விளையாட்டுக் காண்பித்துக் கொண்டு விரலைச் சொடுக்கினாள்.

“நம்ம பையனுக்கு என்ன பேர் வைப்போம்? பிச்சைன்னு வைப்போமா?”

அவன் புருவங்கள் சுளித்தன.

“நான் ஒருவனையும் பிச்சை கேட்கமாட்டேன். ஆம். ஆண்டவனைக் கூடத்தான்—முக்கியமாய் ஆண்டவனைத் தான்.”

திகில் மாஞ்சியின் அடிவயிற்றில் திடீரென்று ஜ்வாலை விட்டது. அவளையுமறியாது, அவன் மடியிலிருந்து குழந்தையைப் பிடுங்கிக்கொண்டு, தன்னோடு அனைத்துக் கொண்டாள்.

“ஏன், ஏன் இப்படித் தெய்வகுத்தம் பேசறேள்? இந்த மாதிரி நீங்கள் பேசினால்கூட எனக்கு ‘பக் பக்’ என்கிறது.”

“நீ புரிந்துகொள்ளவில்லை.”

“நான் ஒண்னும் புரிஞ்சுக்க வேண்டாம்.”

அவனை அவள் முகங்கொடுத்துக்கூடப் பார்க்க வில்லை. குழந்தையைத் தோள்மேல் போட்டுக்கொண்ட அதன் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவன் அவளைச் சற்று நேரம் உற்றுக் கவனித்துவிட்டு, வெளியே சென்றுவிட்டான். மாஞ்சி ஜன்னலண்டை போய் அவன் உருவம் மறையும்வரை, மறைந்த பின்னும், அவன் சென்ற திக்கை வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.

***

பெருமூச்சுடன் மாஞ்சி ஜன்னலிலிருந்து திரும்பினாள். அவளையறியாமலே இமைகள் நனைந்திருந்தன. இன்று ஏனோ இருப்புக் கொள்ளவில்லை. புரியாத ஒரு மனோ வேதனை.

வருடங்களுக்கு அவள்மேல் ஏன் தனி வைரம்? கூந்தல் ஒரு முடிச்சுக்குக்கூட வரவில்லை. இருக்கும் மயிரும் பாதிக்குமேல் அசிங்கமான நரை. உடல் சரிந்துவிட்டது. இத்தனைக்கும் அந்தப் பிள்ளைக்குப்பின் வேறு பேறுகூட இல்லை.

அவள் கணவனை ஓரக்கண்ணால் கவனித்தாள்—ஜமதக்னி குத்து விளக்கண்டை உட்கார்ந்து ஏதோ புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தான். அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. இவர் மாத்திரம் ஏன் கொஞ்சங் கூட மாறவில்லை? இந்த எண்ணம் இன்றுதான் புதிது போல் ஸ்பஷ்டமாய் மனதில் எழுகையில், அவளுக்கு அவள் கணவன்மேல் அசூயை தட்டிற்று. இருவரும் சேர்ந்து எங்கேயாவது வெளியில் போக நேர்ந்தால் அவளுக்கு வெட்கமாயிருந்தது. அவருடைய யௌவனத்தின் ரகசியந்தான் என்ன, முத்தளவில் நின்றெரியும் சுடர்போல்? எந்த எண்ணெய் அவரை மாத்திரம் அப்படிக் காப்பாற்றுகிறது?

ஒருநாள் தலைவலியென்று அவர் படுத்த ஞாபகம் அவளுக்கு இல்லை. ஆசையுடன் நெற்றிக்குத் தாய்ப்பாலிட்டு, ஜூரமடங்கப் பக்கத்தில் உட்கார்ந்து விசிறி விட்டு, நோய்க்குப் பணிவிடை செய்த நினைவு அவளுக்கில்லை; மருந்துக்குக்கூட.

அவள் கவனம் குத்துவிளக்கின்மேல் சென்றது. மங்கா விளக்கென சங்கற்பமா யில்லாவிட்டாலும் அது எரியாத வேளை அதிகமில்லை. அதை வாரத்திற்கு ஒருமுறை தேய்க்கும் நேரம் தவிர எப்படியோ அதை மாத்திரம் ஜமதக்னிதான் ஏற்றிக்கொண்டிருந்தான். அப்படித்தான் நேர்ந்தது. என்றேனும் அதைத் தான் ஏற்ற வேண்டும் என்கிற ஞாபகத்துடன் அவள் அவசரமாய்க் கூடதிற்கு வந்தால், அது முன்னாலேயே எரிந்துகொண்டு நிற்கும்! லக்ஷ்மி படத்திலிருந்து அவளைப் பார்த்துச் சிரிப்பாள். பல சமயங்களில் ஏமாற்றமாயிருக்கும். இந்த வீட்டில் இந்த விளக்கின் அதிகாரம்தானா?

“நான் ஒன்றும் அப்படிச் சொல்லவில்லையே!”

ஆனால் அவன்தான் ஏற்றிக்கொண்டிருந்தான்.

அவள் வருவது கண்டு புன்னகை பூத்தான்.

“என்ன ஒரு மாதிரியா யிருக்கிறாய்?”

“என்னமோ மாதிரியாயிருக்கு. ஏதேதோ பழசெல்லாம் நினைப்பெடுத்தது” என்று சொல்லிக்கொண்டே மாஞ்சி அசதியுடன் அருகே உட்கார்ந்தாள்.

“வீடே இன்னிக்கு ஒரே வெறிச்சுன்னு இருக்கு. வீட்டில் ஒருத்தருமேயில்லை பாருங்கோ. நீங்களும் வேளியிலே போயிட்டேள்னா, அப்புறம் நானும், இந்தக் கூடத்துச் செவுர்களுந்தான் பாக்கி, சே! ஒரோகு சமயத்திலே எதுக்காக இந்த உடம்போடு உசிர் ஒட்டிண்டிருக்குன்னுகூட அலுப்பாயிருக்கு!”

“உடம்போடு உயிர் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. உயிரோடுதான் உடம்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது. உடம்பைவிட உயிர் ரொம்ப ரொம்பப் பெரிது.”

“சரி, அப்படித்தான் இருக்கட்டுமே. எனக்கு இப்போ தர்க்கம் பண்ணச் சக்தியில்லை.”

“ஏதாவது ஒரு விஷயம் சொன்னால், யார் சொன்னாலும் சரி, அது ‘கரெக்ட் டாயிருக்கணும்” என்றான் சிரித்துக்கொண்டே.

“அது சரி, எல்லாம் ஒங்க ‘கர்ரெக்டை’ப் பத்திக்கூட நினைப்பு வந்தது.”

“என்னது?”

கைப் புத்தகத்தைச் சட்டெனப் ‘பட்’டென மூடினான்.

அவ்வளவுதான் மாஞ்சிக்குத் துக்கம் உடைத்துக் கொண்டது. பெருங் குரல் எடுத்து விக்கி விக்கி அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஜமதக்னி கைகளை மடிமேல் கோர்த்துக்கொண்டு, அமைதியால், விளக்கைப் பார்த்துக்கொண்டு மௌனமாயிருந்தான்.

அவள் அழுகை மெதுவாய் அலை அடங்கியது. முன்றானையால் கண்களை இழுத்துத் துடைத்து மூக்கை உறிஞ்சிக் கொண்டாள்.

“இன்னிக்கு என்னவோ, எனக்கு இப்படி இருக்கு—”

“மாஞ்சி, எப்படியும் ஒன்று நான் சொல்கிறேன். இதை நிஜம் என்று வைத்துக்கொள். நீ எதை நினைத்துக் கொண்டு அழுதாலும் சரி, ஒவ்வொன்றின் நியதி இந்த இந்த மாதிரி என்று எனக்குச் சில நிச்சயமான தீர்மானங்கள் உண்டு.”

“யார் இல்லேன்னா?”

“அப்படி வெறும் வாய் வார்த்தையால் சொன்னால் மாத்திரம் போதாது; காரியத்திலும் இருக்க வேண்டும். காரியத்தைக் குறிக்காத வெறும் வார்த்தைகள் என்ன பிரயோசனம்? அதைவிட அவ் வார்த்தைகள் குறிக்கும் எண்ணங்கள் எழாமல் இருந்தாலே நல்லது.”

“ஆமாம், சுலபமாய்ச் சொல்லிப்பிடறேள். நல்லதோ பொல்லாதோ எண்ணங்கள் மனசுலே வரத்தையும் போவதையும் நீங்கள் தடுக்க முடியாது. எங்கே, ஒரு எண்ணங்கூட எண்ணாமல், நீங்கள் ஒரு நிமிஷம் ஒரு வினாடி இருந்துடுங்களேன், பார்க்கலாம்!—”

அவன் சிந்தனையில் ஆழ்ந்தான்.

கொஞ்ச நேரம் இருவரும் பேசவில்லை. மாஞ்சி அவன் மடிமேல் மெதுவாய்க் கைவைத்தாள்.

“இப்போது என்னத்தைப்பத்தி யோசனை பண்ணறேள்? உங்கள் பாஷையில் இந்த விளக்கில் என்னத்தைப் பார்க்கறேள்?”

அவன் சிரிக்காமல், தவமேறிய முகத்துடன் சுடரைப் பார்த்துக்கொண்டு, “நீ எதற்காக அழுதாய் என்பதைப் பார்க்கப் பார்க்கிறேன்” என்றான்.

என்ன பார்க்கிறேள்?

மாலையிருள் பந்துபந்தாய்த் திரள ஆரம்பித்து விட்டது. விளக்குச் சுடர் மூச்சு விட்டுக்கொண்டு பெரிதானாற் போலிருந்தது. மற்ற விளக்குகளை ஏற்ற எழுந்திருக்க மாஞ்சிக்கு அச்சமயம் மனமில்லை. குத்து விளக்கின் சுடர் ஒளி அவளைக் கவ்விற்று. அவன் குரல் கனம் கூடத்தில் தழைந்து நிறைந்தது.

“என் எதிரில் இப்பொழுது ஒரு கலியாணம் நடந்து கொண்டிருக்கிறது.”

“யாருடைய கல்யாணம்?”

“யாருடையது உனக்கு வேண்டும்?”

“நீனாவா?”

“சரி. இதோ நீனா வருகிறாள், கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்டிருப்பது உண்மையில் அவளுக்கு ரொம்பவும் பாந்தமாயிருக்கிறது. கோவில் அம்பாளுக்கு அலங்காரம் பண்ணினாற் போலேயே இருக்கிறது. மாப்பிள்ளைக்குப் பஞ்சக்கச்சம் அவ்வளவு ஏர்வையாயில்லை. இருவரும் வந்து உன்னிடம் தேங்காயைக் கொடுத்து நமஸ்காரம் பண்ணுகிறார்கள்—”

மாஞ்சி பெருமூச் செறிந்தாள். “குழந்தை எங்கே இருக்கிறாளோ, என்ன பண்றாளோ, இருக்காளோ, இல்லையோ? வளர்த்து தத்தம்னா தத்தமே பண்ணிப்பிட்டோம்!”

“ஏன் அப்படியெல்லாம் நெனைச்சுக்கறே? இருக்க வேண்டிய இடத்தில இருந்துகொண்டு நன்றாய், சௌக்கியமாய் இருக்கிறாள் என்று நினைத்துக்கொள்ளேன்.”

“எப்படி நினைச்சுக்கறது? தண்ணிதாண்டி எங்கேயோ அவள் ஆம்படையான் ஆப்பிரிக்காவுக்குப் போறான்னு கூடச் சேர்த்து அனுப்பிச்சாச்சு. நான் செத்தாலும் அவள் வரமுடியாது. அவளுக்குத்தலை வலிச்சாலும் நாம் போக முடியாது. எழுதிப் போட்ட வரி போறத்துக்கோ வரத்துக்கோ வேளைக்கு வாரம் பிடிக்கும், குழந்தையை நான் நிறுத்தி வெச்சிண்டிருப்பேன். நான் சொன்னத்தை அவள் கேட்டிருப்பாள். நீங்கதான் குறுக்கே நின்னு அவள் மனசைக் கலைச்சு, காடோ மலையோ கண்காணாத இடத்துக்கு அனுப்பிச்சுட்டேள். ஊரில் இருக்கிறவா அத்தனைபேருக்கும் உள்ளூர் சம்பந்தம் அகப்படல்லையா? உங்களுக்கு மாத்திரம் இப்படித்தான் கிட்டனுமா?”

“சம்பந்தம் பண்ணுகையில் அவன் ஆப்பிரிக்கா போவதாயிருந்ததா? அப்புறம் அவனுக்கு வெளிச் சீமைக்குப் போனால் உத்தியோகம் உயரும் என்றிருந்தால் அது என் குற்றமா? அல்லது உன் சௌகரியத்திற்காக, அவன் இங்கேயே தங்கிவிட வேண்டுமா? ஏன் பெண்ணைப் பெற்றுவிட்ட தாய்மார்கள் நியாயமே தனி நியாயமா யிருக்கிறது? தங்கள் பெண்கள் எல்லாம் அல்லிகளாய்த் தானிருக்க வேண்டும் என்று ஏன் ஆசைப்படுகிறார்கள்!”

“நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லுங்கோ. என்னைப் பொறுத்தவரையில், நீனா நமக்கு உசிரோடு செத்துப்போயாச்சு. அவள் திரும்பிவர அன்னிக்கு, நானும் உசிரோடிருந்தால், நான் புது நீனாவைப் பெத்து எடுத்ததாகவே நினைச்சுக்கவேண்டியதுதான்.”

“ததாஸ்து! அப்படி நேர்ந்தால், உன் சந்தோஷம் இரட்டிப்பு மடங்கு ஆகாதா?” .

“சந்தோஷத்தைச் சொல்லுங்கோ. நீங்களும் அந்த நீனாவுக்கு அப்பா என்கிறதை உங்களுக்கு நான் ஞாபகப் படுத்தறேன்.”

“அவர்கள் இருவருக்குமிடையில் குறுக்கே நிற்க நீ யார், நான் யார்?”

“அதான் நீங்கள் தவறே பண்ணமாட்டேளே!” என்று மாஞ்சி ஏளனம் பண்ணினாள்.

ஜமதக்னி விளக்குச் சுடரையே கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தான். அவன் புருவங்கள், தீர்க்கமான மனோலயத்தில் நெற்றி நடுவில் சந்தித்தன.

“என்னெதிரில் இப்பொழுது இன்னொரு காட்சியைப் பார்க்கிறேன். ஒரு சின்னப்பயல், எட்டு வயசுப் பயல், துடிப்பயல், நான் எதிரில் இல்லாத வேளையில் பெற்றவள் இல்லாத செல்லமெல்லாம், சொல்லச்சொல்லக் கொடுத்துக் கெடுத்த பயல் எதற்கோ தன்னைக் கண்டித்த தாயைக் கன்னத்தில் ஓங்கி அறைகிறான்—”

மாஞ்சி அந்த நிமிஷந் தான் அடிபட்டாற்போல் கன்னங்களைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். அவன் குரலின் சொடுக்கு “சுரீல்” என்றது. ஒரு குரலுக்கு இவ்வளவு மகிமையா என்ன! இத்தனை வருஷங்கள் கழித்தும், எப்படி அந்தக் காட்சியை உள் கண்ணெதிரில் இவரால் அந்தத் தீர்க்கத்துடன் கொண்டுவர முடிகிறது?

“நான் நல்ல வேளையாக அகஸ்மாத்தாய் அந்த இடத்தில் வந்தேனோ, கண்கூடாய்ப் பார்க்க முடிந்தது. இல்லாவிடில் நீ அவனுக்காக மறைத்த எத்தனையோ குற்றங்களுடன் இதையும் மறைத்திருப்பாயல்லவா? நானும் வந்தேன், அவனும் பிழைத்தான்.”

“போறுமே இப்போ நினைச்சுண்டாக்கூட வயிறு கொதிக்கறது, அவனை வெடுக்குனு என்கிட்டேருந்து பிடுங்கிண்டு, உங்கள் இடுப்பு பெல்டை அவிழ்த்து அதை தொங்கத் தொங்கப் புடிச்சுண்டு, இன்னொரு கையாலே அவனை முன்னாலே தள்ளிண்டு நீங்கள் மாடிக்கு ஏறின காட்சி என் கண் முன்னாலே இப்போ நிக்கறது. அது ஏன் கோபம் வந்தால் வாய் திறக்க மாட்டேன்கிறேள்? கண் கொதிச்சுண்டு மூஞ்சி மாத்திரம் ஒரு மாதிரியா ஆயிடறது. மாடிலேருந்து அடிக்கு அடி அவன் கதறலும், துடிச்ச துடிப்பும் ஐயோ...!” மாஞ்சி தலையை உதறிக்கொண்டு செவிகளைப் பொத்திக்கொண்டாள்.

“நான் அவனையா அடித்தேன்?”

“உங்கள் நெஞ்சு உரத்தை நான் என்னென்று சொல்லுவேன்?” ஆவேசம் வந்தவளாய் மாஞ்சி கத்தினாள். “குழந்தை உடம்பை ரத்தக் கிளறி ஆக்கி விட்டு, அன்னிக்கு ராத்திரி அவனுக்குச் சோறும் போடக் கூடாதுன்னு உங்களுக்குத்தான் அதிகாரம் இருக்குன்னு ஆக்கினை பண்ணிவிட்டு, கொடியடுப்புலே குண்டு சொம்பில் குழந்தைக்கு கொதிக்கிற சாதத்தை அப்படியே காலாலே உதைச்சுக் கொட்டிவிட்டு—அதுவும் அடுப்பை, சீதேவியைக் காலால் உதைச்சுட்டுப் போயிட்டு, இத்தனையும் பண்ணிவிட்டு, என்கிட்டேயே வந்து அவனையா அடிச்சேன்னு கேக்கறேள்! ஹும், நாளாயிடுத்துன்னா மறந்துபோயிடுமா?

அவன் அவளை இழுத்து மார்புடன் மூச்சுத் திணற இறுக்கிக் கொண்டான்.

“மாஞ்சி மாஞ்சி, உனக்கு என் மேல் ஆசையில்லையா?”

அவன், கண்களில் அவன் கண்ணுள் தன் பிம்பம் காண்கையில் மாஞ்சி குழப்பமடைந்தாள். நினைவு தடுக்கிற்று. அக் கேள்வியின் மிருக வேதனையில் அவளுக்கு அழுகை வந்தது.

“ஏன், அப்படிக் கேட்கிறேள்?”

“ஆம், அப்படித்தான் கேட்பேன். உனக்கு என் மேலிருக்கும் ஆசை உண்மையானால் இதை நீ நிச்சயம் நம்புவாய். நான் அவனை அடித்தது உண்மை. ஆனால், வலியெல்லாம் என்னுடையதுதான். வலியின் அடையாளங்கள் அவன்மேல்தான், ஆனால் வலியின் வலி எனக்குத் தான். சத்தியமாய் அப்படித்தான்.”

“நீங்கள் என்ன சொல்றேள்?”

மௌனமாய்ச் சிந்தித்துவிட்டு, அவளைத் திடீரெனத் தன் ஆலிங்கனத்தினின்று விடுவித்தான். அவன் பெருமூச்செறிந்த அவன் கஷ்டம் என்னென்று அவளுக்கும் புரியவில்லை.

“நான் அதற்குச் சொல்ல வரவில்லை” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தாள். ஆனால் அவன் கவனிக்கவில்லை. தான் எழுப்பும் பழைய நினைவுகளுள் புகுந்துகொண்டிருந்தான்.

“இப்போது பார்க்கிறேன், மீனாவின் கல்யாணத்தை.”

“அது இன்னொரு வயிற்றெரிச்சல்! கலியாணத்தின் போதே சம்பந்திப் பேர்களோடு தீராத மனஸ்தாபமா நேர்ந்தாச்சு. அபசகுணம்மாதிரி நம்பெண் மணப்பாயில் நின்னுண்டிருக்கிறத்திலேயே குத்துவிளக்கில் முன்றானையைப் பற்ற வெச்சுண்டுட்டா. ஒரே கூக்குரலாய்ப் போயிடுத்து. கலியான வீட்டிலே அடிச்சு விழறான்னு பேச்சுக்குச் சொல்லுவா, கண்கூடா ஆயிடுத்து. எப்போ கூரைப்புடவை பத்திண்டதோ, எனக்கு அப்பவே தெரிஞ்சிடுத்து, நம் மீனா வாழ்க்கை உருப்பட்ட மாதிரிதான்னு. நினைச்சமாதிரியே ஆயிடுத்து.”

மாஞ்சி தன்னிரக்கத்தில் சூள் கொட்டினாள்.

“விளக்கண்டை நிற்காதே என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்டால்தானே! சிரித்துக்கொண்டே எங்கோ பார்த்து நின்றால், விளக்கு விளையாடுகிறது.”

“அது சரி ஏதோ எல்லாத்துக்கும் ஒரு சமாதானம் உங்கள் கிட்ட இருக்கே! நீங்கள் பதில் சொல்ல முடியாத கேள்விகளே உலகத்தில் கிடையாது இல்லையா? உங்கள் காரியங்களுக்கும் அப்பீல் கிடையாது இல்லையா?”

“நீ எந்தக் காரியத்தைச் சொல்கிறாய் என்று எனக்குத் தெரியும்”

“பேஷ்!” என்றாள் மாஞ்சி. “நிஜமாவே நீங்கள் எனக்குப் புரியவில்லை. உங்களைப்போல், அப்படியே உங்களையே பாதியா வெட்டிக் கொடுத்துடறாப் போல, பிரியமாயிருக்கிறவாளையும் நான் பார்த்ததில்லை. அதே சமயத்தில், சில வேளைகளில், சாதாரண இரக்கம்கூட இல்லாத கொடுமை படைச்சவரையும் நான் கண்ட தில்லை. இல்லாட்டா அன்னிக்குக் குழந்தை வந்து வாசலில் கண்ணீரும் கம்பலையுமா நிக்கறா; அவள் மூஞ்சியிலேயே கதவைச் சாத்தி வாசற்படி ஏறாதேன்னு உங்களைத் தவிர எந்தத் தகப்பன் சொல்லுவான்?”

“அவள் சாதாரணமாய் எல்லாப் பெண்களும் பிறந்தகத்துக்கு வர மாதிரி வரவில்லையே!”

“ஆமாம் இருக்கட்டுமே; புக்ககத்தில் கோவிச்சுண்டு வத்துட்டான்னுதான் வெச்சுக்கோங்களேன். உள்ளே அவளைக் கூப்பிட்டு ‘என்னடிம்மா சொன்னான்னு கேட்டு, ஒருநாளாவது வெச்சுண்டிருந்து, அடுத்த நாள்—நீங்கள் போனால் உங்கள் கௌரவம் குறைஞ்சு போயிடறதாயிருந்தால்—நான் கொண்டுபோய் விடமாட் டேனா? அவளை அவாதான் என்ன சொன்னாளோ, என்னத்தைப் பண்ணினாளோ?”

“ஏன் பெண்ணைப் பெற்ற எந்தத் தாயாரின் நியாயமும் தனி நியாயமாயிருக்கிறது? மீனா என் பெண் என்று நினைக்கவே எனக்கு வெட்கமாயிருக்கிறது.”

“உள்ளே விடமாட்டேன்னு நெருப்பா நின்னேளே, நம் பெண் அப்படியே இங்கேயும் அடைக்கலத்துக்கு ஒத்தருமில்லேன்னு எங்கேயாவாது குளத்திலே குட்டையிலே விழுந்திருந்தால் என்ன செய்யறது?”

“என்ன செய்வது? என் பெண் போய்விட்டாளே இவ்வளவு அசட்டுத்தனத்துடன் என்று அழுவேன். ஆனால் நம் மானம்—அவளுடையதும்தான்—அவள் சாவோடு பிழைத்ததே என்று சந்தோஷப்படுவேன். ஆனால், நல்ல வேளையாய் மீனா அவ்வளவு பெரிய அசடு இல்லை. இங்கே அவளுக்கு செவிசாய்ப்பார் யாருமில்லை என்று கண்டுகொண்டாள். மரியாதையாய்த் தன்னி டத்துக்கே போய்ச் சேர்ந்துவிட்டாள். அதுதான் சரி. நல்ல வேளையாக அவள் வீட்டார் அவளை ஏற்றுக் கொண்டார்களே அதைச் சொல்லு! மீனாவுக்கு சாக நிஜமாவே எண்ணமிருந்தால் அவள் வீட்டுப் புழக்கடையிலேயே பெரிய கிணறு இருக்கிறது. இது வரையில் அவள் அதில் மிதப்பதாய்த் தகவல் இல்லை. வீட்டுக்கு உள்ளேயே தான் சந்தோஷமாய் வளைய வருகிறாள் என்று கேள்வி. கையில் வேறு ஒன்று ஏந்திக்கொண்டிருக்கிறாள்—”

“நான் இன்னும் என் பேரனைக் கண்ணால்கூடக் காணவில்லை—” மாஞ்சி மூக்கை உறிஞ்சினாள்.

அவன் மறுபடியும் மெதுவாக அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டான்.

“நான் இப்போது காட்சியை மாற்றப்போகிறேன். இது உனக்குப் பிடித்த காட்சி.

“எது?”

“நாம் இருவரும் ஒரு பெரிய கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறோம். வரிசை வரிசையாக முன்னாலும் பின்னாலும் வாத்தியார்களும் மாணவர்களும். எல்லோரும் மேடைமீது ஒருமுகமான கண்ணாயிருக்கிறோம். ஒரு வாலிபன், தூய வெள்ளையுடுத்து; அம்புபோல், நிமிர்ந்த உருவில் மேடையில் ஏறுகிறான். பலத்த கரகோஷம். தலைவர் எழுந்து நின்று அவன் தோளில் ஒரு கைவைத்து, அவனைக் கைகுலுக்குகிறார். தங்கப்பதக்கத்தை அவன் மார்பில் சொருகுகிறார். எல்லோரும் எழுந்து நின்று மேஜையை ஓங்கித் தட்டி குதுகலத்துடன் ஒரே ஆரவாரம். தலைவர் ஏதோ பேசப் பார்க்கிறார். வாய் அசைவது தெரிகிறதே தவிர, பேச்சு இம்பெருங் கோஷத்தில் மூழ்கிவிடுகிறது. அவர் பேச்சைத் தொடரமுடியாது சிரித்துக்கொண்டு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நின்றுவிடுகிறார். அவர் நிலை கண்டதும் கூட்டத்தின் ஆர்ப்பாட்டம் இரட்டிப்பாய்ப் பெருகிவிட்டது. உன்னைப் பார்க்கிறேன். உன் கன்னத்தில் தாரைகள் ஓடுவது தெரியாமல் நீ விக்கி விக்கி சிரிக்கிறாய், அழுகிறாய், சிரிக்கிறாய்.”

“நீங்கள் மாத்திரம் என்னவாம்? உங்கள் முகத்தில் குழம்பியிருந்த குங்குமத்தை வழித்தெடுத்தால், ஆறு மாதம் இட்டுக்கொள்ளலாம்.”

அவன் பார்வை விளக்கின் சுடரில் ஊன்றியது.

“நம் மகன். என் மகன்” என்றான்.

“ஆமாம் அவன் காலேஜ் முடிந்து வந்ததும் அவசரமாய் மூட்டை கட்டி வெளியூருக்கு அனுப்பிவிட்டேளே! அதுவும் கொஞ்ச நஞ்ச தூரமா? இன்னிக்கு ராத்ரி வண்டியேறினால், முழுசா நாலு ராத்ரி, மூணு பகல் பிரயாணம், அதில் வண்டி ரெண்டு மாற்றல்...”

“என் மகன் உருப்பட வேண்டாமா, உருவாக வேண்டாமா?”

“அதென்ன மேல்படிப்போ? உங்களுக்குத்தான் ப்ரீதி.”

“ஏன் இப்படி அலுத்துக்கொள்கிறாய் மாஞ்சி? எல்லோருக்கும் அவரவர் நிறைவு பெறக்கூடிய துறையில் வேண்டிய சந்தர்ப்பங்களும் சௌகரியங்களும் கிடைக்கின்றனவோ? கிடைக்கும்போது பயனடையாவிடில் பிறகு பிறவியால் என்னதான் பயன்? உன் பிள்ளை இன்னும் புகழுடன் திரும்பி வருகையில் உனக்கு வேண்டியிருக்காதா?”

“என் பிள்ளை எனக்கு என்றைக்கும் ஒண்ணுதான். அன்றைக்குக் கல்சட்டியில் தயிரையும் பழையதையும் ஒட ஒடப் பிசைந்து, ‘அடிக்குழம்பு ஆனை போலே’ என்று சொல்லிப் போட்ட நாளிலிருந்து, இன்னிக்குக் கோட்டையும் சூட்டையும் அவசரமாய் மாட்டிண்டு, கீழே உட்கார முடியாமல், மேஜையிலே என்னிக்காவது சாப்பிட நேர்ந்தால்—நீங்கள் கரிச்சாலும் சரி அந்த நாளும் ஒண்ணுதான். என் மகன் என்றும் ஒண்ணுதான் எனக்குத் தெரியும். எனக்கு வேறேதும் தெரியவும் வேண்டாம்.”

“ஓ!”

“அத்தோடு நீங்கள் சொல்ற நாளுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கோ? இன்னிக் கதையைச் சொல்லுங்கோ. வீடெல்லாம் எவ்வளவு வெறிச்சுனிருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? வீட்டின் வெறிச்சை மாற்ற எந்தக் குழந்தை ஒடி விளையாடிண்டிருக்கு?”

“ஏன், பெற்றுப் பெற்று பெற்ற வயிறு இன்னும் அலுக்கவில்லையா?”

“நீங்கள் அவரவர்க்கு அவரவர் நிறைவு என்று சொல்கிறீர்களே, எங்களுக்கு எங்கள் தாய்மையில்தான் நிறைவு. ஒரொரு சமயத்தில் பானுவின் நினைப்பு வந்துவிட்டால், அவன் நின்ன இடத்தையும், சுவத்திலே சாய்ஞ்ச இடத்தையும் தொட்டுத் தொட்டுத் தடவி, கன்னத்தை அந்த இடத்தில் வெச்சு கண்ணீர் விடுகிறேன். என் வேதனையை நீங்கள் அறிய முடியுமோ?”

“நாம் பெற்றதால் மாத்திரம் நம் மகன் நமக்குச் சொந்தமாகிவிடமாட்டான். ஒரு வயதுக்குமேல், அவரவர் அவரவர்க்கே சொந்தமில்லை.”

“மறுபடியும் ஆரம்பிச்சுட்டேளோன்னோ உங்கள் பாஷையை? ஆ, அதென்ன சப்தம்?”

“ரீ...ங்...ங்...ங்!”

தந்தியின் நாதம்போல் ஒரு ஓசை எங்கிருந்தோ மெல்லியதாய்க் கிளம்பி பெரிதாய் வீங்கிக்கொண்டே நெருங்கிற்று.

“ரீ ...ங் ...ங் ...ங்!”

அந்த ஒசையின் கதியில் இருவர் கண்களும் வசியமாகி, அதைப் பின்பற்றிச் சுழன்றன.

ஒரு சுட்டு விரலளவுக்கு நீளமாய், பருமனாய் வண்டு முங்கி முங்கி, எழுந்து கூடத்தை வட்டமிட்டது. அதன் நிழல் கூடத்துச் சுவர்களில், வண்டைவிட வேகமாய்ச் சுழன்று பாய்ந்தது. திடீரென தளம்வரை ஒரே வேகத்தில் செங்குத்தாய் எழும்பிக் கூரையில் மோதுண்டு நேரே விளக்குச் சுடரில் வீழ்ந்தது. விளக்கு குப்பென்றுத அணைந்தது. எண்ணெயின் பொசுங்கல் நாற்றம் கிளம்பிற்று. கூடம் கும்மிருட்டில் மூழ்கியது.

கரும்பலகையில் இரும்பாணியால் கோடு கிழித்தாற் போல் ஒரு அமானுஷ்யமான கீறல் சப்தம் மாஞ்சியிடமிருந்து கிளம்பிற்று.

“தந்தி ஸார்...!”

அதற்கப்புறம்தான் வாசந்கதவை அவசரமாய்த் தட்டும் சப்தமே கேட்டது. விளக்கைப் போட்டுக்கொண்டு ஜமதக்னி வாசலுக்கு ஓடினான். ஆனால் அதற்குள் மாஞ்சி ஸ்மரணை யிழந்துவிட்டாள்.

***

மாஞ்சி வரண்ட கண்களுடன் மேற்கூரையைப் பார்த்தவண்ணம் கூடத்தில் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் பார்வை நிலைகுத்தி வெளிச்சமற்று இருந்தது. இரண்டு வாரங்களாக அப்படித்தானிருந்தாள். ஆகாரத்தை வாயில் ஊட்டினால்தான் செல்லும். மூச்சு உண்டு, மற்றபடி பேச்சில்லை; உணர்வில்லை.

ஜமதக்னி கையில் ஒரு கடிதத்தைப் பிரித்தபடி வந்து பக்கத்தில் உட்கார்ந்தான்: “மாஞ்சி பார் என்னைப் பார்—”

அவள் முகத்தை மெதுவாய்த் தன் பக்கம் திருப்பினான். அவன் கை அசைத்தபடி முகம் அசைந்தது, அவ்வளவுதான்,

“மாஞ்சி, பார்— என்னையே பார்! என்னையே பார்த்துக்கொண்டிரு, ஆ! அப்படித்தான்—” தொண்டையில் எழுந்த தழு தழுப்பை அடக்க முயன்றான்.

“உனக்கு இந்தக் கடிதத்தைப் படிக்கப் போகிறேன். இது வந்து மூன்று நாட்களாகின்றன. இதை அவசியமாய் நீ கேட்க வேண்டும். இது நம் பானுவைப் பற்றியது.”

அவள் விழிகள் தம்முள் அர்த்தத்தையும் அடையாளங்களையும் கூட்டத் தவித்தன. அதைக் கவனித்தபடி அவன் மேலும் சொல்லிக்கொண்டே போனான்.

“இது நம் பானுவின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தது. பிரின்ஸிபால் எழுதுகிறார்:

“தங்கள் பதில் தந்தி கிடைத்தது. தங்கள் தீர்மானத்தின் விவேகத்தை நான் பாராட்டுகிறேன். ஆம், தற்சமயம் தாங்கள் இங்கு வருவதில் பயன் ஒன்றுமில்லை. ஸ்ரீ பானுமூர்த்தியின் அஸ்திகூடச் சரியாய்க் கிடைக்கவில்லை. அவரைச் சுற்றி மாத்திரம் தனி உக்கிரத்துடன் வலைமாதிரி நெருப்பு சூழ்ந்துவிட்டது.

ஸ்ரீ பானுமூர்த்தியின் மரணத்தை விஸ்தரிக்க இஷ்டமில்லாவிடினும் அவசியமான சில விவரங்களை மாத்திரம் கொடுக்கக் கடமைப் பட்டவனாயிருக்கிறேன்.

மாலை வேளையில் அவர் தன் சஹாககளுடன், காலேஜுக்குத் திரும்பி லந்துகொண்டிருக்கையில் திடீரென்று எல்லோரும் ஒரு வீட்டு மாடி ஜன்னலிலிருந்து ஒரு பெரும் ஜ்வாலை கொடிமாதிரி வேகமாய் ஆடுவதைக் கண்டனர். காற்றுவாக்கில், கண்ணிமைக்கு முன், வீடு முழுதும் எரிய ஆரம்பித்துவிட்டது. பானுமூர்த்தி வீட்டுக்குள் ஓடினார். கீழ்க்கட்டுக் குடித்தனங்கள் வெளியே ஒடி வந்துவிட்டன. மாடியில் ஒரு குடித்தனம் தம்பதிகளும் நான்கு குழந்தைகளும் கதவைத் திறக்க முடியாமல் உள்ளே தவிக்கின்றனர். நெருப்பின் கர்ஜ்ஜனையுடன் அவர்களின் கூக்குரல்களும் கேட்கின்றன. பானு, தைரியமாய், எல்லோரும் தடுக்க, உதறிவிட்டு, புகைக்கும் நெருப்புக்குமிடையே படியேறி கதவை மோதியுடைத்து உள்ளே ஓடினார். உள்ளிருந்த பெரியவர்களிருவரையும், குழந்தைகளையும் அவர்தான் வெளிப்படுத்தினார். குழந்தைகளை ஒவ்வொன்றாய்த் தூக்கிக் கீழே எறிய, கீழிருப்பவர் தாங்கிக்கொண்டனர். அதற்குள் அந்த அம்மா “ஐயோ கைக்குழந்தை” என்று அலறினாள். உள்ளே தொட்டிலைத் தேடிக்கொண்டு மறுபடியும் ஓடினார், அவ்வளவுதான். உள்ளே இனி யாரும் வராதே எனத் தடுக்கிறமாதிரி மேலிருந்து இரு பெருந் தூலங்கள் குறுக்கும் நெடுக்குமாய் விழுந்து நெருப்பு பற்றிக் கொண்டு, உள்ளே மாட்டிக்கொண்டவர்களுக்கு முத்திரை வைத்துவிட்டன.

ஒருவருமே ஒன்றும் செய்வதற்கில்லை. நெருப்பணைக்கும் வண்டி வந்த வேளைக்கு வீடு சாம்பல். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரும் வைக்கோற் போர் வேறே.

உங்கள் கஷ்டத்தில் எங்கள் எல்லோருடைய பணிவான அனுதாபத்தைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிருவருக்கும் தேறுதல் சொல்லும் துயரமில்லை இது.

ஆனால் உங்கள் மகன் எங்கோ தெரியாத இடத்தில் அனாதையாய் மரணம் அடைந்தான் என்று நீங்கள் எண்ணலாகாது. பானு என்றுமே ஒரு தேஜஸ்வி; தன் மறைவின் ஜோதியில் எங்கள் எல்லோர் மனதிலும் மறவாத இடம் பெற்றுவிட்டார்.

நாங்கள் அனைவரும் இரவு முழுதும் எரிந்த இடத்திலேயே காத்துக் கிடந்தோம். அங்கு நனையாத கண்களில்லை. மறுநாள் உங்கள் மகன் நினைவில் காலேஜ் மூடியது. இவ்விவரங்கள் உங்களுக்கு ஆறுதல் அளிக்க முடியாது. ஆனால் உங்கள் மகன்மேல் எங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரிந்தால் அதில் எங்களுக்கு ஒரு ஆறுதல்.

ஸ்ரீ பானுமூர்த்தியின் அறையைப் பூட்டி இத்துடன் சாவியை அனுப்பியிருக்கிறேன். அவருடைய உடைமைகள் அவர் கடைசியாக விட்ட நிலை கலையாமல் அங்கு இருக்கின்றன. அவைகளை எடுத்துச்செல்ல, என்று உங்களுக்கு மனம் வரமுடிகின்றதோ அன்று உங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறோம். பானுவின் தந்தையைத் தெரிந்த பெருமையை அடைந்தவர்களாவோம்.

ஜமதக்னி மெதுவாய்த் தலை நிமிர்ந்தான். மாஞ்சியின் கண்கள் மாடிக் கூரையிலிருந்து இறங்கி அவன்மேல் பதிந்திருந்தன. அவைகளில் கண்ணிர் வழிந்தோடி இருந்தது.

“மாஞ்சி.”

“என் குழந்தை எப்படித் துடிச்சானோ? அந்தக் கடைசித் தருணத்தில் என்ன நினைச்சானோ? ஐயோ! இதையெல்லாம் நினைக்க எனக்கு இன்னும் நினைவு இருக்கே! எனக்குப் பைத்தியம் ஏன் பிடிக்கமாட்டேன் என்கிறது?”

அவள் குரல் அமைதியாய்த் தானிருந்தது. அதுவே தான் அதன் பயங்கரமாயிருந்தது.

அவன் கையைப் பற்றி இழுத்துத் தன் வயிற்றில் வைத்துக்கொண்டாள். நெருப்பாய்க் கொதித்தது.

“இந்த வயிறு இதுவரை அஞ்சு தடவை திறந்தது. திறந்ததுதான் மிச்சம். என் குழந்தைகளால் நான் என்ன சுகத்தைக் கண்டேன்? நமக்கே ஏதோ சாபும் தொடர்கிறதா?”

அவள் தன் முகத்தில் அறைந்தாற்போல், கன்னத்தைத் தொட்டுக்கொண்டான். அவன் இப்போது பேசுகையில் அவளோடு பேசவில்லை. தனக்குள் உரக்கச் சிந்தனையில் ஆழ்ந்தாற் போலானான்.

“சின்னப் பொழுதில், நானும் என் வயதுப் பையன்களும் என்னவோ கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தோம். பள்ளந்தோண்டிப் பச்சை வேர்க்கடலையை வைக்கோல் போட்டு சுட்டுக்கொண்டிருந்தோம், அப்போது சப்பாத்திக் காட்டிலிருந்து ‘புஸ்’ ஸென்று சப்தம் கிளம்பிற்று. எல்லோரும் பயந்து ஓடிவிட்டார்கள். நான் மாத்திரம் நின்றேன். என்னெதிரே, நல்ல பாம்பு படமெடுத்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. எனக்கு வாயைக் கட்டிவிட்டது. ஆனால் பயம் என்று பெரிதாய் ஏற்படவில்லை. எனக்கு எப்படி அந்த எண்ணமும், அந்தத் துணிச்சலும் வந்ததோ தெரியவில்லை. என் வயதுக்கு அது இயற்கைகூட இல்லை. சட்டென அதைத் தொண்டையைப் பிடித்து நெருப்புக் குழியில் போட்டுவிட்டேன். அது துடித்துத் துடித்து உடலைப் பின்னிப் பின்னி உயிரோடு சாவதை நாங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களுக்கு அதுவே ஒரு விளையாட்டாயிருந்தது

நாளடைவில் மறைந்துவிட்டது அந்த சம்பவம். இன்று, இப்பொழுதுதான் நினைவு வருகிறது.”

மாஞ்சி வெடிப்பாய்ச் சிரித்தாள்.

“என் பிள்ளை சாவதற்கு நீங்கள்தான் காரணம். நீங்கள்தான் எமன். உங்கள் எண்ணத்தில் நீங்கள்தான் தெய்வம் இல்லையா? உங்கள் குழந்தைகள் உங்கள் இஷ்டப்படி நீங்கள் பிசைந்து பிடித்துவைக்கும் மண் இல்லையா? நெருப்பாய் நின்று நெருப்புக்கே கொடுத்தாச்சு...”

“இல்லை... இல்லை... இல்லை!!!”

ஜமதக்னி துடித்தான். அவளைப் பிச்சை கேட்பது போல், அவன் இரு கைகளும் ஏந்தின.

“என்ன இல்லை?”

“மாஞ்சி!”

இரத்தம் மண்டையில் வேகமாய்ப் பாய்ந்தது. தலை சுழன்று அப்படியே கீழே சாய்ந்துவிட்டான்.

விழிப்பு வந்தபோது அந்தியிருள் கூடத்தில் கவித்திருந்தது. மாஞ்சி ஏதோ காரியமாய் கூடத்தில் நடமாடுவது தெரிந்தது. திடீரென்று குளுமையான ஒளியில் கூடம் அகன்று விரிந்தது.

தன் நினைவைக் கூட்டி ஊன்ற முயன்றான்.

மாஞ்சி குத்துவிளக்கை ஏற்றிக்கொண்டிருந்தாள். திரியைத் தூண்டி விளக்கை ஏற்றிவிட்டு அவனண்டை வந்து உட்கார்ந்து, தலையைத் தூக்கித் தன் மடிமீது வைத்துக்கொண்டாள்.

அப்பா! அவன் கண்ணிர் மடையுடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=அஞ்சலி/ஜமதக்னி&oldid=1026625" இலிருந்து மீள்விக்கப்பட்டது