அட்லாண்டிக் பெருங்கடல்/உள்நாட்டுக் கடல்கள்


2. உள்நாட்டுக் கடல்கள்


ட்லாண்டிக் கடலுக்குப் பல பெரிய உள் நாட்டுக் கடல்கள் அதன் இரு கரைகளிலும் உள்ளன. இதனால் மற்றக் கடல்களில் இருந்து குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இது வேறுபடுகிறது. அதன் கிழக்கேயும் மேற்கேயும் உள்ள உள் நாட்டுக் கடல்கள் யாவை?

கிழக்கு

அதன் கிழக்கே வடகடல், பால்டிக்கடல், மையத் தரைக்கடல் ஆகியவை உள்ளன. இவை அதன் துணைக் கடல்களே. இவற்றில் மையத் தரைக்கடல் மார்மோரா கடல், கருங்கடல், ஆசோவ் கடல் ஆகியவற்றோடு தொடர்பு கொள்கிறது.

வடகடல்

இதற்கு ஜெர்மன் பெருங்கடல் என்னும் பெயரும் உண்டு. இது அதன் மூன்று பக்கங்களில் டியூடானிக் நாடுகளால் சூழப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டம், கிரேட் பிரிட்டன் ஆகிய இரண்டிற்குமிடையே இது மிக ஆழமற்றது. இதில் நீர்மூழ்குச் சமவெளி உள்ளது. இச்சமவெளியின் வெளிவரும் பகுதிகளே பிரிட்டிஷ் தீவுகள் ஆகும்.

இதன் முக்கால் பகுதி மணல் கரைகளால் ஆனது. இது ஆழமற்றதாக இருப்பதால், மிக விரைவாகப் புயல்கள் எழும், விழும். இதன் நீர் நீலங்கலந்த பச்சை நிறமுள்ளது. ஆனால், திறந்த கடலின் நீர் அடர்ந்த நீல நிறமுள்ளது. இதன் கரைகளில் பல துறைமுகங்கள் உள்ளன. இதன் கிளையே ஹாலந்தில் தென்கடலாக உள்ளது.

பால்டிக்கடல்

இதுவும் ஆழமற்றதே. இதன் பகுதிகள், உறையும். இதன் நீர் உப்பில்லாத நீரே. இதில் பெரிய ஆறுகள் கலக்கின்றன. ஆவியாதல் அளவும் குறைவு. ஆகவே, இதில் உப்பில்லை. இதில் காட், ஹெரிங் என்னும் மீன்கள் அதிகம் உள்ளன.

மையத்தரைக்கடல்

உலகிலேயே மிகப் பெரிய உள்நாட்டுக்கடல் இது. இதன் நீளம் 2,300 மைல். இதன் கரைகளில் பாதி ஐரோப்பாவிற்குரியது. அடுத்த பாதி சம அளவில் ஆப்பிரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் உரியது.

மற்றக் கடல்களைக் காட்டிலும் இதில் வளைகுடாக்கள், விரிகுடாக்கள், தீவுகள் அதிகம். இது நிலம் நோக்கி ஆழச் செல்வது. இதன் அளவை ஒப்பு நோக்க, இதில் கலக்கும் ஆறுகள் குறைவு. வெப்பக் காற்றுகளால் நீர் ஆவியாதல் அதிகம். ஆகவே, இதன் நீர்களில் உப்பு அதிகம்.

ஆவியாதலால் அதிக நீர் இழக்கப்படுகிறது. இந்த இழப்பு அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் நீரோட்டத்தினால் சரி செய்யப்படுகிறது. இதில் ஒரு மலைத்தொடர் நீருக்குக் கீழ் உள்ளது. இது மையத்தரைக்கடலை இரு வடி நிலங்களாகப் (basins) பிரிக்கிறது.

இதன் வட பகுதியில் வளைகுடாக்கள் நிறைய உள்ளன. இதன் நீர்கள் அடர்ந்த நீலநிறமுள்ளது. இதில் அலை எழுச்சிகளை மிக அரிதாகப் பார்க்கலாம்.

சூயஸ் கால்வாய் வெட்டியபின் இந்தியாவிற்கும் அதற்குக் கிழக்கேயும் செல்லும் வழி குறுகியது. இதனால் மையத்தரைக் கடலின் வாணிபம் மீண்டும் ஓங்கிற்று. இதன் கரைகளில் பல சிறந்த துறைமுகங்கள் உள்ளன. உலகத் துணைக் கடல்களில் மிக்க வரலாற்றுச் சிறப்பு உடையது இது. மூவாயிரம் ஆண்டுகள் வரை எல்லா நாகரிகத்திற்கும் இது பெரும் துணைக் கடலாக இருந்தது.

நன்னம்பிக்கை முனை 1486-இல் கண்டுபிடிக்கப் பட்டது. மையத்தரைக் கடலில் வாணிபமும் நடை பெறுவது கைவிடப்பட்டது. சூயஸ் கால்வாய் 1869-இல் திறக்கப்பட்டது. வாணிபப் போக்கு வரவு பெருமளவுக்கு அதன் பழைய வழிகளில் நடை பெறலாயிற்று.

கருங்கடல்

இதில் மூடுபனி, புயல்கள் உண்டு. இது மாரிக் காலத்தில் உறையும். இது பால்டிக் கடலைவிடப் பெரியது. இதன் வடிநிலம் மையத்தரைக் கடல் வடி நிலத்தைவிட மும்மடங்கு பெரியது. இதில் பல பெரிய ஆறுகள் கலக்கின்றன. இது மீன்பிடிப்பதற்கு ஏற்றது.

மார்மோரா கடல்

இது மிகச் சிறியது ; அதிக ஆழமுள்ளது.

மேற்கு

அட்லாண்டிக் கடலுக்கு மேற்கே உள்ள சிறந்த உள்நாட்டுக் கடல்களாவன : ஹட்சன் விரிகுடா, மெக்சிகோ வளைகுடா, கரிபீயன் கடல்.

ஹட்சன் விரிகுடா

ஹட்சன் நீர்க்கூட்டு இதை அட்லாண்டிக் கடலோடு இணைக்கிறது. இது வாணிபச் சிறப்பு உடையது.

கரிபீயன் கடல்

இதுவும் மெக்சிகோ வளைகுடாவும் மையத் தரைக் கடலை ஒத்தவை.

.