அணியும் மணியும்/திரு.வி.க.வின்

11. திரு. வி. க. வின் நடையும்
சொல்லாட்சியும்

தமிழ் நடைக்குப் புத்துயிர் ஊட்டியவர் திரு. வி. க. பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றவர்கள் நீண்ட வாக்கியங்களையும், செயற்கையான சொற்றொடர்களையும் செந்தமிழ் நடை என ஒருபக்கம் இழுத்துச் சென்றனர். கொச்சை நடையைப் பேச்சு நடை என மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தமிழ் நடையைக் கொச்சைப் படுத்தினர். ஒரு சிலர் வட சொற்களைப் பெய்து தமிழை ஒரு கலப்பு நடையாக்கினர். தமிழ் நடை இதுதான் என்று தெளிவு படாமல் இருந்தது.

இந்த மாறுபட்ட நடைகளுக்குள்ளே உயிர்த்துடிப்புள்ள நடையை அமைத்துத் தந்தவர் திரு. வி.க. மேடைப் பேச்சை முதன் முதலில் இலக்கிய நடையில் பேசியவரே திரு. வி.க. எனலாம்.

திரு. வி. க. பெரியபுராணம், சிலப்பதிகாரம், தேவாரம், ஆழ்வார் பாடல்கள், கம்பன் கவி அமுதம் இவற்றில் தோய்ந்தவர். அதனால் அவர் சொல்வளம் நெகிழ்வு உடையதாகக் காலத்தோடு ஒட்டி இயங்குகின்றது. பனிக்கட்டிகள் உடைந்து அருவியாக இயங்கும் அருமையை இதில் காணலாம். திருக்குறள் சுருங்கச் சொல்லித் தெளிவுப்படுத்தும் நூல்; அதை ஒட்டிச் சிறு தொடர் கொண்டு விளங்குகிறது இவர் நடை. அதன் சொல்லாட்சியும் திரு. வி. க. வைப் பெரிதும் தாக்கி உள்ளது.

மற்றும் அவர் பத்திரிகைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் பல்லாயிரக்கணக்கான வாசகர்களை அவர் கருத்து எட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. சிறப்பாகத் தலையங்கங்களைத் தந்து தடைவிடைகளில் கட்டுரைகளை எழுதவேண்டிய சூழ்நிலை அவருக்கு அமைந்தது. எனவே பத்திரிகைத் தமிழை உருவாக்கியதே திரு. வி. க. தான்.

கலைஞனுக்கு வேண்டிய உணர்வும், கவிஞனுக்கு வேண்டிய ஓசையும், பேச்சாளனுக்கு வேண்டிய ஒழுங்கும், அரசியல்வாதிக்கு வேண்டிய ஆவேசமும், அறிஞனுக்கு வேண்டிய தெளிவும் அவர் நடையில் கலந்து இருந்தன.

திரு. வி. க. வின் நடை தனி நடை மற்றவர்களின் நடையினின்று முற்றிலும் வேறுபட்டது. எவ்வகையில் அது வேறுபட்டு இயங்குகிறது என்பது ஆய்வுக்கு உரியது.

அவருடைய வாக்கியங்கள் வினாக்களை எழுப்பி விடை தருவனவாக அமைந்துள்ளன. இஃது அவர் தனிச்சிறப்பு. வினாக்களை எழுப்புவதால் மற்றவர்களை அவை சிந்திக்கத் தூண்டுகின்றன. சிந்தனைகளைத் தூண்டிப் பின் அறிவு விளக்கம் தருகிறது. பசியை எழுப்பிப் பின் உணவினைத் தரும் பொழுது அது சுவைக்கிறது. உணர்வுக்கு ஊட்டமும் தருகிறது. அவருடைய வாக்கியங்கள் முன்னிலையாரை விளித்துக் கூறும் நேர்முக வாக்கியங்களாகும். அவர் சொல்ல விரும்பும் செய்திகள் வேகமாக வெளிப்பட்டுத் தக்க சொற்களைத் தேடி ஆற்றொழுக்காக வெளிப்படுகின்றன. எழுத வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை; பேச வேண்டும் என்ற ஆர்வமே அவரது எழுத்தில் தலையோங்கி நிற்கிறது. சுற்றிவளைத்துப் பேசும் படர்க்கை வாக்கியங்களை அவரிடம் காணமுடியாது. ‘என்று கருதப்படுகிறது’ ‘என்ற முடிவு செய்யலாம்’ என முடிக்கும் பற்றற்ற தன்னுணர்வு கலவாத புறநிலை வாக்கியங்களைக் காணமுடியாது. தெளிவாக அறுதியிட்டுக் கூறும் வாக்கியங்களே அவர் வாக்கியங்களாகும்.

‘வேண்டும் வேண்டாம்’ ‘கூடும் கூடாது’ என்று அறுதியிட்டுக் கூறும் வாக்கியங்கள் அவரிடம் மிகுதியாகக் காணப் படுகின்றன.

“துப்பாக்கி பீரங்கி வேண்டுமா?”

“வேண்டாம் வேண்டாம்.”

“பழந்தமிழ் நாட்டைப் புதுமுறையில் காண்டல் வேண்டும்”

“தொண்டர் கூட்டங்கள் அமைக்கப்படல் வேண்டும். தேவையானவற்றை நல்கல் வேண்டும்”.

வேண்டுகோள் வாக்கியங்கள் மிகுதியாக உள்ளன. “நடுக்கமின்றிக் கிராமங்களுக்கும் புறப்படுவார்களாக”.

அடுக்குத் தொடர்கள் அவர் வாக்கியத்தின் தனிச் சிறப்பாகும்.

“அவர்கள் வயிற்றில் வீரப்பிள்ளைகள் பிறந்தார்கள் - இந்நாளிலோ வெட்கம்; வெட்கம்”. “உண்மைத் தமிழ் நாட்டைக் காண எழுங்கள் எழுங்கள்”

“வேலையில்லை என்று எவரும் கருதல் வேண்டுவதில்லை; வேலை உண்டு; உண்டு”. வியப்புச் சொற்கள் இடையில் இடம் பெறுகின்றன. “நீண்டநாள் வாழ்விற்கு அல்லவை செய்யா அரசு வேண்டற் பாலது என்பதற்கு விரிவுரை வேண்டுங்கொல்! அங்கத்தினரைச் சேர்க்கும் தொண்டில் உடனே தலைப்படுங்கள் தலைப்படுங்கள்”

வினாவாக்கியங்கள் எழுத்தின் தொடக்கத்தின் அமைப்பாக நிற்கின்றன.

“இத்துணைச் சிறப்பு வாய்ந்த நமது தமிழ் நாடெங்கே? தமிழ்நாட்டின் வழக்க ஒழுக்கமெங்கே? அன்பு எங்கே? அரசு எங்கே? வீரத்தாய்மார் எங்கே? தமிழ்த்தாய் எங்கே? தமிழர்களே! உங்கள் பெருமை என்ன? உங்கள் ஆண்மை என்ன? உங்களுக்குள் எத்துணைப் பிளவு! எத்துணைப் பிரிவு”.

வினாவாக்கியங்களுக்கு இடைஇடையே வியப்பு வாக்கியங்கள் சேர்ப்பது அவர் இயல்பாக உள்ளது.

சொற்களை மாற்றுதல் அவரிடம் காணப்படும் ஓர் உத்தியாகும்.

சொற்களை மாற்றிச் சொல்வது கவிஞர்களுக்கு உரிய இயல்பு. தக்க சொல்லைத் தந்து மாற்றம் விளைவிப்பது அவர் தனிப்போக்காகும். அஃது இவரிடமும் காணப்படும்.

“திங்களில் அழகு ஒழுகுகிறது; பூக்களில் அழகு பொலிகிறது; பறவைகளின் அழகை என்னவென்று பன்னுவது! மகளிரோ அழகு மயமாகத் திகழ்கிறார்; குழவிகளோ அழகின் பிழம்பாக இலங்குகின்றன”

“குழந்தை ஓட்டையும் பொன்னையும் ஒன்றாகவே நோக்கும்; பாம்பையும் கயிற்றையும் பொதுவாகவே பார்க்கும் சேற்றையும் சோற்றையும் சமமாகவே காணும்”. நோக்கும், பார்க்கும், காணும் எனத் தனித்தனிச் சொற்களை அமைத்தல் காண்க. பின்னிப் பிணையும் வாக்கியங்கள் அவர் எண்ணத் தெளிவையும் கட்டுரைத் தன்மையையும் காட்டுகின்றன. கருத்துக்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணியும் வகையில் சங்கிலிபோல் இயங்குகின்றன.

“இப்பொழுது நாட்டுக்கு எது தேவை? அஞ்சாமை தேவை; அஞ்சாமையால் உண்மை அரும்பும்; உண்மையால் உணர்வு பிறக்கும்; உணர்வால் சுய ஆட்சி கிடைக்கும்; சுய ஆட்சியால் உலக இன்பம் நுகரலாம்; உலக இன்பத்தால் பேரின்பம் பெறலாம். ஆதலால் வரம்பிலா இன்பத்துக்கு அடிப்படை அஞ்சாமை என்பதை ஈண்டு ஒரு முறைக்குப் பன்முறை வற்புறுத்துகிறோம்.” - இதில் அந்தாதித் தொடை முறையைக் காண முடிகிறது.

மீண்டும் மீண்டும் கூறல் உணர்வை மிகுதிப்படுத்துகிறது. அடுக்குத் தொடர்கள் அமைப்பது ஒரு புறம் இருக்க அதனையே வேறு தொடர்களில் கூறித் திரும்பக் கூறல் என்னும் உத்தியை அமைக்கக் காண்கிறோம்.

“எங்கணும் போர்! எங்கணும் பூசல்! எங்கனும் பிணக்கு! தமிழ்த்தாய் எரிகிறாள்; கரிகிறாள்; சாதிப் பூசலை நிறுத்துங்கள்! சமயச் சண்டையை நிறுத்துங்கள்”. இதில் மீண்டும் கூறல் அமைகின்ற சொல்லாட்சிகள் காண்க.

அவருக்கே உரிய சொல்லாட்சிகள் அடுக்கிக் கூறுதல், வியப்பிடைச் சொற்கள் பயன்படுத்தல் என்பதை அறிகிறோம். அதுமட்டும் அன்று. அவருக்கே உரிய சொல்லமைப்புகளும் உள்ளன.

வினைமுற்றுகள் பெரும்பாலும் ‘செய்யும்’ என்னும் வாய்பாட்டில் முடிகின்றன.

‘கூறுப உண்ப’ எனச் ‘செய்பு’ என்னும் வினைமுடிபுகளைச் சில இடங்களில் கையாள்கிறார்.

வினையெச்சங்களுக்கு மாறாகத் தொழிற் பெயர்களை அமைத்தல் அவர் தனி இயல்பு.

மகிழ வேண்டும் என்று கூறுவதை விட்டு; மகிழ்தல் வேண்டும் என்பர். நாடவேண்டும் என்று கூறுவதைவிட்டு நாடல் வேண்டும் என்றுதான் கூறுவர்.

‘சேர்க்கை வாழ்க்கை நடாத்துவோரும் ஆகின்றனர்’. - நெடில் வடிவங்களில் இனிமை உண்டாக்குகிறார்.

“அஃறிணை உயிர்கள் இயற்கை வழி வாழ்வை நடாத்துகின்றன.” இங்கே நடத்துதற்கு என்பதற்கு மாறாக நடாத்துதல் என்ற நெடிய வடிவத்தைப் பயன்படுத்துகின்றார். ‘நிழல்’ என்பதற்கு மாறாக நீழல் என்பதைப் பயன்படுத்துகின்றார்.

ஓசை இனிமைக்கு உயிரளபெடை வடிவங்களையும் அவர் பயன்படுத்துவதைக் காண்கின்றோம். ‘என்னை’ என்கின்ற வினாச்சொல்லை மிகுதியாக வழங்குதலைக் காண்கின்றோம்.

‘என்ன’ என்பதைப் பன்மைக்கும், ‘என்னை’ என்பதை ஒருமைக்கும் அவர் பயன்படுத்துவதை நாம் காண்கின்றோம். வியப்பை உணர்த்தும் வகையில் ‘என்னே’ ‘என்னே’ என்ற தொடர்களை வழங்குகின்றார்.

“சோழ நாட்டின் வளம் என்னே! என்னே!”

வினா என்பதோடு கடா என்ற சொல்லை வழங்குகிறார். ‘எற்றுக்கு’ என்பதும் அவர் தனி வழக்காகும்.

“காணமுயல்வது எற்றுக்கு
என்னும் கடா எழுகிறது”
-

இதற்கு எடுத்துக்காட்டாகும்.

உள்ளது சிறத்தல், இயற்கையோடியைந்த இன்ப அன்பு வாழ்க்கை முதலியன அவர் அமைக்கும் தனித் தொடர்களாகும்.

‘விரிவுரை வேண்டுங்கொல்’

கொல் என்பது வியப்பிடைச் சொல்லாக வந்துள்ளது. வியப்புச் சொல் இடைஇடையே வருவது இயற்கையாகிறது.

ஆக்கச் சொல் போட்டு வாக்கியங்கள் முடிப்பது என்ற நியதிக்கு அவர் கட்டுப்படவில்லை. ‘அதுவே நமது தலையாய கடமை’ என்று முடிப்பாரேயன்றி, ‘கடமையாகும்’ என்று பொதுவாக முடிப்பதில்லை.

‘அதுவே ஒத்துழையாமை’ என்று முடிப்பாரேயன்றி ‘ஒத்துழையாமை ஆகும்’ என்று முடிப்பதில்லை. வியங்கோள் வினைமுடிபுகள் மிகுதியாக இடம் பெறுகின்றன.

‘ஊக்கம் கொள்ளுவோமாக’
‘அடங்கியிருத்தல் காண்க’

தற்கிளத்தல் வாக்கியங்கள் மிகுதியாக உள்ளன.

‘கேட்டுக் கொள்கிறேன்.’
‘முயலுமாறு வேண்டுகிறேன்’
‘சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்’
‘ஆண்டவனை வழுத்துகிறேன்’
‘நான் கூறுவேன்’

இவையெல்லாம் தற்கிளப்பு வாக்கியங்களாகக் கொள்ளலாம்.

முன்னிலை அறிவுரை வாக்கிய முடிபுகளை மிகுதியாகக் காணலாம்.

‘தணிக்க முந்துங்கள்’
‘காட்ட முந்துங்கள்’

வினையெச்சங்களை அடுக்கிக் கூறுதல் அவர் தனிச் சிறப்பாகும்.

‘மக்கள் இரத்தத்தில் ஊறி ஊறி ஒன்றியது’

கூட்டு அமைப்புகள் அவர் தனிச் சிறப்பாகும். ‘கருதினர் எழுதினர், புரிந்தது’ என்பதற்கு மாறாக.

‘கருதலாயினர், எழுதலாயினர், புரியலாயிற்று’ என்று தொழிற்பெயரோடு ஆக்கச் சொல் பிணைந்த கூட்டுவினை அமைப்பாக அமைத்தல் காண்கிறோம். சிறப்பாகத் தொழிற் பெயர்களை ஆளுதல் அவரிடம் மிகுதி எனலாம்.

‘சென்றனர்’ என்பதற்கு மாறாகப் ‘போந்தனர்’ என்ற சொல் வழக்கை ஆளுவதையும் பார்க்கின்றோம்.

எதிர்மறை வாக்கியங்களால் உடன்பாட்டுப் பொருளை அறிவிப்பது அவர் சொல்லாட்சித் திறனாகும்.

“துறவு பேசாமல் போகவில்லை என்று குறிப்பிடுகின்ற திருவள்ளுவர், துறவு பேசவில்லையோ என ஐயுதல் கூடும். அவர் துறவு, பேசாமல் போகவில்லை” என்று எதிர்மறையில் முடிக்கின்றார்.

கவிதை நடை

உரைநடையில் உணர்வு கலந்து அது கவிதை நடை ஆகிறது. அவர் கவிதைகள் பக்தி மனப்போக்கிலும், தத்துவ விசாரணைகளிலும் அவர் இறுதிக் காலத்தில் அமைந்து விட்டன. அவை பிறருக்கு என்று எடுத்துக் கூறப்பட்ட செய்திகள் அல்ல; தனக்கும் தன் மனத்துக்கும் எழுப்பிக் கொள்ளும் வினாக்களாகவும், விசாரணைகளாகவும், வேண்டுகோளாகவும் அமைந்து விட்டதால், உரை நடையைப் போல எழுச்சி மிக்கனவாக அமையவில்லை. அவற்றைக் கவிதைகள் என்று சொல்லுவதைவிடச் சிந்தனைக் குவியல்கள் என்று கூறலாம்.

திரு. வி. க. நடை தமிழ்நடைக்குக் கலங்கரை விளக்கமாக ஒளிதந்து பழமையைப் புதுமையோடு பிணைக்கிறது.