அணியும் மணியும்/நன்மையும் உண்மையும்
இலக்கியம் உண்மை நன்மை அழகு என்ற மூன்று பொருள்களையும் ஒரு சேர உணர்த்துகிறது. தத்துவமும் விஞ்ஞானமும் உண்மையை மட்டும் உணர்த்தும்; நீதி நூல்கள் நன்மையை மட்டும் உணர்த்தும்; இசை ஓவியம் முதலிய கலைகள் அழகை மட்டும் உணர்த்தும். இலக்கியம் ஒன்றுதான் நன்மையோடு கூடிய உண்மையை அழகுணர்வோடு ஈந்து உள்ளத்துக்கும் அறிவுக்கும் விருந்து செய்து வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகிறது.
உண்மைக்கும் நன்மைக்கும் உள்ள வேறுபாடு மிகவும் நுட்பமானதாகும். நன்மை என்பது வாழ்க்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய அறப்பகுதிகளை வகைப்படுத்திக் கூறுவதாகும். உண்மை என்பது உலகத்தின் இயல்பை அறிந்து உணர்த்துவதாகும். இலக்கியம் காட்டும் உண்மை நன்மையோடு அமைந்து யாவருக்கும் பொருந்துவதாகவும், பலருக்கும் பயன்படுவதாகவும் அமைகின்றது. இலக்கியம் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து அனுபவத்தோடு உண்மைகளை உலகத்தின் நன்மை கருதி அழகு பட எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறு நன்மையோடு கூடிய உண்மைகளைத் தமிழ் இலக்கயம் ஆங்காங்கு எடுத்துக் காட்டுவதை நாம் காணமுடிகிறது. தொடர்நிலைச் செய்யுள்களான பெருங் காப்பியங்களாயினும் தனிநிலைச் செய்யுள்களான சங்கவிலக் கியங்களாயினும் இத்தகைய உண்மைகளை ஆங்காங்கு கூறாமலில்லை. சிலம்பின் அடியாகப் பிறந்த சிலப்பதிகாரம் சில அடிப்படையான உண்மைகளை உணர்த்துகின்றது. இதன் ஆசிரியரான இளங்கோவடிகள் தம் வாழ்க்கை அனுபவத்தில் கண்டது ஆகிய மூன்று பேருண்மைகளை அடிப்படையாக வைத்துத் தம் சிலப்பதிகாரக் கதையை அமைத்துள்ளார்.
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவத்தூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சிலப்பதிகாரம் உணர்த்தும் உண்மைகளாகும்.
இதைப் போலவே மணிமேகலை என்ற நூலும்,
பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்;
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்;
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது அறிக
என்ற உண்மையை ஆங்காங்கு உணர்த்திச் செல்கின்றது.
இவ்வாறு பெருங்காவியங்கள் சில உண்மைகளை எடுத்துக் கூறுவதை நோக்கமாகக் கொண்டு விளங்குவதைப் போலவே புறநானூறு முதலிய தனிப்பாடல்களும் பல உண்மைகளை எடுத்துக் கூறுகின்றன. இவை காட்டும் பொருள் பொதிந்த மொழிகள் வாழ்க்கையின் அனுபவமுதிர்ச்சியால் வெளிப்படுவனவாகவும், உலகவியல்பை எடுத்துக் காட்டுவனவாகவும் வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாகவும் அமைந்துள்ளன.
இவை ஒவ்வொரு புலவரின் வாழ்க்கையிலும் அவர் தம் சொந்த அனுபவமாகவும், அவர் தம் வாழ்வில் கண்ட பேருண்மைகளாகவும் அமைந்து, அவை உலகத்துக்குச் சொல்லும் நற்செய்திகளாக அமைகின்றன.வாழ்வில் பல்வேறு துறைகளைப் பற்றிப் பல்வேறு புலவர்கள் கொண்ட முடிவுகளை இவ்வுண்மைகள் விளக்குகின்றன. அவை அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு மட்டும் பொருந்துவனவாக அமையாமல், எக்காலத்துக்கும் ஏற்றவையாக விளங்குகின்றன. அவை அறிவின் தெளிவிலும், உணர்வின் உயர்விலும் தோன்றிச் செறிவும் திட்பமும் வாய்ந்து வாழ்க்கையைப் பற்றிய நுட்பமான செய்திகளைத் தெரிவிக்கின்றன.
உலகில் போர் நிகழ்கிறதே என்று அன்றும் மனிதன் கவலைப்பட்டான்; இன்று அதைப் பற்றியே உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அன்று வாட்போர் செய்து ஆட்கனைக் கொன்று வெற்றியும் தோல்வியும் கண்டனர்; இன்று விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டு உலகம் அழியத்தக்க அணுக்குண்டுகளையும் போர்க் கருவிகளாக அமைத்துள்ளனர். தனி மனிதரும் நாடும் உலகும் அழிந்துவிடுமோ என்று உலகம் அஞ்சிக் கொண்டிருக்கிறது. எப்பொழுதும் இந்த உலகம் இதே போக்கில் தானா போய்க்கொண்டிருக்க வேண்டும்! இதற்கு ஒரு முடிவும் இல்லையா? வரலாறு வேறு எந்த நல்ல முடிவையும் காட்டக் கூடாதா என்று நம் உள்ளம் ஏங்குகின்றது. என் செய்வது? புறநானூறு அனுபவத்தோடு கூடிய ஒரு பேருண்மையை எடுத்துச் சொல்கிறது.
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
என்று எடுத்துக் கூறுகிறது.
உலகின் இயல்பை உள்ளதை உள்ளவாறு எடுத்துக் கூறிப் போரைப் பற்றிய கருத்தை வாழ்வின் பேருண்மையாக விளக்குகிறது. ஆனால் இந்த உலகத்திற்கு இவ்வுண்மையைத் தாங்கும் ஆற்றல் இருக்கிறதோ என்பதே பலரின் அச்சமாக விளங்குகிறது.
ஒருவனை ஒருவன் அடுதல் உலகத்தியற்கை என்பது உண்மையாகும். இந்த இயற்கையை வளர்த்து விட்டால் உலகம் வாழுமா என்ற கேள்வியே உலகமுழுவதும் எழுந்துள்ளது. உலகப் பேரரசுகள் இந்த இயற்கையை மாற்ற வழி ஏதும் செய்யாவிட்டால் உலகம் அழிந்து விடுதல் உறுதி. புறநானூறு உலகில் போர் இயற்கை என்று கூறுகிறது; நாம் அமைதி வேண்டும் என்று அவாவுகிறோம். இதற்கு உலகம்தான் வழி சொல்லியாக வேண்டும்.
நாடும் உலகும் பண்புள்ளதாகச் செய்ய வேண்டுமானால் மக்களின் பண்பு உயர வேண்டும். மக்களும் அவரை ஆளும் அரசியல் சூழலும் சிறந்தால்தான் நாட்டில் வளர்ச்சி உண்டு; மக்கள் வாழ்வில் ஆக்கம் உண்டு என்பது யாவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மையாகும். இந்த உண்மையைப் புறநானூற்றுப் பாடல் ஒன்று எடுத்துக் கூறுகின்றது. “நிலனே நீ ஓரிடத்தில் நாடாகுக; ஒன்றில் காடேயாகுக; ஒன்றில் பள்ளமேயாகுக: ஒன்றில் மேடேயாகுக எவ்வாறு ஆயினும் எவ்விடத்து மக்கள் நல்லரோ அவ்விடத்து நீயும் நல்லை! மக்கள் நலமல்லது நினக்கு என ஒரு நலம் இல்லை” என்று நிலத்தின் இயல்பை நிலத்தை விளித்துக் கூறுவது போன்ற அமைப்பில் இப் பாடல் விளக்குகின்றது. மக்களின் பண்பாடு சிறந்தால்தான் நாடு நாடாக இருக்க முடியும். பண்பாடு இல்லையென்றால் நாடு சிறக்காது. உழவும் தொழிலும் சிறக்க மக்களின் பண்பாடும் உழைப்பும் ஊக்கமும் இன்றியமையாதனவாகும். அப்பொழுது தான் வாழ்வு வளனும் பயனும் உடையதாக இருக்கும் என்ற கருத்து வற்புறுத்தப்படுகிறது.
நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ
அவலாகு ஒன்றோ; மிசையாகு ஒன்றோ;
எவ்வழி நல்லவர் ஆடவர்
மக்கள் சிறந்தாராயினும் அவர்தம் அரசியல் சிறக்கவில்லையென்றால் நாடு முன்னேற்றம் அடையாது என்ற கருத்தை மற்றொரு பாடல் வற்புறுத்துகிறது. அரசன் மக்கட்கு உயிர் போன்றனாக மதிக்கப்பட்டான். மக்கள் தலைவனாகிய அரசியல் தலைவன் கொள்ளும் முடிவுகளை ஒட்டியே நாட்டு நன்மையும் அமைந்திருக்கின்றன என்பது யாவரும் ஒப்புக் கொள்ளக்கூடிய உண்மையாகும். எல்லாப் பொறுப்புகளும் அரசியல் தலைவனையே சாருகின்றன. அவன் சிந்தனையையும் செயலையும் ஒட்டியே உலகத்தின் நன்மையும் அமைதியும் அமைந்திருக்கின்றன என்று புறநானூறு கூறுகின்றது. இன்றைய அரசியலிலும் இந்தப் பேருண்மையைக் காணலாம். ஓர் அரசியல் தலைவன் செய்யும் சிறு பிழையால் உலகத்தில் பெரும் போரை மூட்டி விடலாம்; அதனால் உலகத்தையே அழித்துவிடக் கூடும். அதனால்தான், ‘மன்னனாகிய உயிரை உடைத்து இப்பரந்த இடத்தையுடைய உலகம். இந்த உலகத்தார்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று: அரசனே உயிர் என்பதை அறிதல் அரசனது கடமையாகும், என்று புறப்பாடல் உணர்த்துகிறது.
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்;
அதனால், யானுயிர் என்பது அறிகை
என்று வேந்தனின் கடமையை உணர்த்துமாற்றால், அவன் உலகுக்கு உயிர் போன்றவன் என்பதை எடுத்துக்காட்டுகிறது. படைவன்மை மிக்க அரசன் உலகத்தை அழிக்காமல் இருக்க எல்லா வகையானும் முற்பட வேண்டும் என அறிவுறுத்துவார், ‘வேல் மிகு தானை வேந்தன்’ என இதன் ஆசிரியராகிய மோசிகீரனார் குறிப்பிட்டுள்ளார்.
உலகத்தில் பிறர்க்குத் தீமை செய்யாமல் இருத்தலே பேரறமாகும். நம்மால் பிறருக்கு நன்மை செய்ய இயலாவிட்டாலும் பிறர்க்குத் தீமையாவது செய்யாமல் இருத்தல் வேண்டும் என்று நன்மையோடு கூடிய உண்மையை மற்றொரு பாடல் அறிவுறுத்துகின்றது. வயது முதிர்ந்து வாழ்வின் நன்மையையும் தீமையையும் நன்கு கண்டவர்களும் இந்தச் சிறு உண்மையை மறந்து பிறருக்குச் சில சமயங்களில் தீமை செய்வது வியப்பாக இருக்கிறது என்று அப்பாடல் உணர்த்துகிறது.
“பல் சான்றீரே! பல் சான்றீரே! கயல்மீனின் முள் போன்ற நரை முதிர்ந்து திரைத்த கதுப்பினையும், பயனில்லாத முதுமையையும் உடைய பல் சான்றீரே! இயமன் பாசத்தாற் கட்டிக்கொண்டு போங்காலத்து நீர் இரங்குவீர்; அதனால் நல்வினையைச் செய்ய மாட்டீராயினும் தீவினையைச் செய்தலை நீங்குமின்; அதுதான் யாவரும் உவப்பது; அன்றியும் தல்ல நெறிக்கண் செலுத்துவதும் ஆகும்” என்று உணர்த்துகிறார் அதன் ஆசிரியர்.
பல்சான் றீரே! பல்சான் றீரே!
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பிற் பல்சான் றீரே!
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே
- 195
என்ற புறம்பாடல் சிறந்த அறத்தை மிக அழகாக வாழ்க்கையில் கொள்ளவேண்டிய பேருண்மையாக அறிவுறுத்துகிறது.
மற்றொரு பாடல் உலகத்தில் சான்றோர்கள் இருப்பதால்தான் நல்ல நெறிகள் நிலைக்கின்றன என்றும், உலக வியல்பு ஓரளவு குன்றாமல் மக்கள் மக்களாக வாழமுடிகிறது என்றும் உணர்த்துகிறது. உலகில் தமக்கென வாழாமல் பிறர்க்காக முயலும் பெரியோர்கள் இருப்பதால்தான் இவ்வுலக இயல்பு கெடாமல் இருக்கின்றது என்ற கருத்தை வற்புறுத்துகிறது. இப்பாடல் அத்தகைய நல்லோர்களின் இயல்புகளைப் பற்றி விரித்துச் சொல்கிறது.
“இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும், அவர் தமியராக உண்ணார்; யாரோடும் வெறுப்புக்கொள்ளார்; பிறர் அஞ்சத்தகும் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அதுதீர்தற் பொருட்டுத் தம்மாலான முயற்சியைச் செய்வார்; புகழுக்காகத் தம்முயிரையும் கொடுத்துவிடுவர்; பழி வருவதாக இருந்தால் அதனால் உலக முழுவதும் பெறினும் கொள்ளார்; மனக்கவலை கொள்ளார். இத்தகைய மாட்சிகள் நிறைந்தவர் சான்றோர்” என்று அவர்தம் இயல்பை எடுத்துக் கூறுகின்றது.
உண்டால் அம்மஇவ் வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலாேமுனிவிலர்
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞசிப்
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளலர் அயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே
- 182
என்பது அப்புறப்பாடலாகும்.
இந்தக் கருத்தை மேலும் வற்புறுத்துவது போல மற்றொரு பாட்டு அமைந்திருக்கிறது. தனிமனிதனின் வாழ்வுக்குக் குடும்பம் எவ்வளவு இன்றியமையாததோ பொது வாழ்வுக்கு அரசியல் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவிற்குச் சான்றோரின் தொடர்பு உள்ளத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று பிசிராந்தையாரின் பாட்டொன்று அறிவிக்கின்றது. அவர் வாழ்வே அதற்குத் தக்க எடுத்துக்காட்டாகவும் விளங்கியிருக்கிறது. அவர் ஆண்டுகள் பலவாகியும் நரையில்லாமல் விளங்கி வாழ்க்கையில் இன்பமும் பொருளும் பெற்று அமைதியும் அறிவும் உற்றுச் சான்றோராக வாழ்ந்திருந்தார். அவர் தம் வாழ்வின் அனுபவத்தை உலகத்துக்குச் சொல்லும்பொழுது ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையையுடைய சான்றோர்கள், தாம் வாழ்ந்த ஊரில் வாழ்ந்ததால்தான் அத்தகைய மனவமைதி பெற முடிந்தது என்று கூறியுள்ளார்.
“ஆண்டுகள் பலவாகியும் நரையில்லாமல் இருப்பது எவ்வாறு இயன்றது என்று கேட்டால், மாட்சியுடைய என் மனைவியும் புதல்வரும் அறிவால் நிறைந்தவர்கள் யான் கருதியதைத் திறம்படச் செயலாற்றும் ஏவலிளைஞர் எனக்கு உள்ளனர். வேந்தனும் முறையல்லன செய்யாமல் நாட்டைக் காக்கும் நல்லாட்சியுடையன் யான் இருக்கும் ஊரில் ஆன்று அவிந்து அடங்கிய கொள்கையினையுடைய சான்றோர்கள் பலர் வாழ்கின்றார்கள்” என்று, தம் வாழக்கையின் அனுபவத்தை எடுத்துக் கூறுகின்றார்.
யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கா கியரென வினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே
- 191
பாண்டியன் அறிவுடை நம்பி பேரரசராக விளங்கியதோடு பெரும்புலவராகவும் திகழ்ந்தார். அவர் வாழ்வில் கண்ட பேரு மையாகக் குழந்தையின்பத்தை கூறுகின்றார். குழந்தையின்பத்தை அவர் சித்திரித்துக் காட்டும் காட்சி மறக்கமுடியாத ஒன்றாகும். திருவள்ளுவர் குழந்தையின்பத்தைப் பற்றிக் கூறும் பொழுது,
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள்
என்று குழந்தையின் சிறுகையால் அளாவிய உணவின் இனிமையைக் கூறுகின்றார். பாண்டியன் அறிவுடைநம்பி பாடிய குழந்தையின்பத்தைப் பற்றிய பாட்டு அவருக்கு அழியாப் புகழை அளித்துவிட்டது. அவர் பாடிய பாட்டு ஒன்றே ஒன்றுதான் கிடைத்திருக்கிறது. அந்த ஒரு பாட்டே அவரைப் புலவர் வரிசையில் வைத்து எண்ணக்கூடிய சிறப்பைத் தந்துவிட்டது.
“படைக்கப்படும் செல்வம் பல படைத்துப் பலரோடு உண்ணும் உடைமை மிக்க செல்வத்தை உடையராயினும், கையை நீட்டிக் கலத்தின்கண் கிடந்த உணவினைத் தரையிலே இட்டும், உடன் பிசைந்தும், வாயாற் கவ்வியும், கையால் துழவியும், நெய்யையுடைய சோற்றை உடம்பில் படச் சிதறியும், இங்ங்னம் இன்பத்தால் மயக்கும் மக்களை இல்லோர்க்கு வாழ்க்கையில் பயனாகிய பொருள் இல்லை”' என்ற கருத்து அமையப் பாடியுள்ளார்.
படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும், இடைப்படக்
குறுகுறுநடந்து சிறுகைநீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே
- 188
என்ற பாட்டு மழலை பேசும் குழவியின்பத்தை எடுத்துக்கூறி, குழந்தையில்லாவிட்டால் இல்லற வாழ்வில் இன்பமும் பயனும் இல்லை என்ற உண்மையை மிக அழகாகத் தம் அனுபவத்தோடு அமைத்துப் பாடியிருப்பது நமக்கு இன்பம் பயக்கிறது. ‘குறு குறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்’ என்று அழகாகத் தக்க சொற்களைக் கொண்டு குழந்தையின் செயல்களைக் காட்டியிருப்பது போற்றத்தக்கதாகும். குழந்தையின் செயல்கள் நம் அறிவை மயக்கும் இயல்பின என்று கூறுகிறார். “உச்சிதனை முகர்ந்தால் உன்மத்தம் ஆகுதடி” என்று பாரதியார் குழந்தை தம் அறிவை மயக்கும் செய்கையைக் கூறுவதும் இந்த மயக்குறு நிலைமையைத்தான் காட்டுகிறது போலும்.
இதுவரையில் பலர் தம் வாழ்நாட்களுக்குப் பிறகு நரகம் நண்ணாமல் இருக்கக் குழந்தைப்பேறு வேண்டும் என்ற தவறான கருத்தைக் கூறி வந்தனர். பாண்டியன் அறிவுடை நம்பி யாகலான் அவ்வாறு கூறாமல் தாம் வாழும் நாளிலேயே அடையும் இன்பப் பயன் குழந்தைப்பேறு என்ற கருத்தைச் சொல்லியிருப்பது அறிவோடு பொருந்துவதாக இருக்கிறது. ‘பயக்குறையில்லைத் தாம் வாழுநாளே’ எனக் கூறியிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
பக்குடுக்கை நன்கணியார் என்ற புலவரின் பாட்டு, உலகவியல்பை ஆராய்ந்து நாம் மேற்கொள்ள வேண்டிய மனவியல்பைக் காட்டி உள்ளத்தின் சோர்வைப் போக்குவதாக உள்ளது. இன்பமும் துன்பமும் இயற்கைப் படைப்பின் உண்மைகளாகும். மனிதரும் உலகத்தில் இன்பத்தையும் துன்பத்தையும் உண்டாக்குகின்றனர். சாவும் வாழ்வும், செல்வமும் வறுமையும், கொடுமையும் நன்மையும், இன்பமும் துன்பமும் வாழ்வில் காணப்படும் இயல்புகளாகும். இத்தகைய சூழ்நிலையைக் கண்டு உலகில் துன்பமும் கொடுமையும் சூழ்ந்திருக்கின்றனவே என்று உள்ளம் குன்றுவதால் நாம் அடையும் பயன் என்ன? உலகத்தின் இயற்கை அப்படித்தான் இருக்கும் என்ற உண்மையை உணர்ந்து, அதில் இனிமையைக் காணும் பெற்றி வேண்டும் என்று அவர் வற்புறுத்துவது உலகத்துக்கு உணர்த்தும் ஒரு நற்செய்தியாகும்.
அவர் சில காட்சிகளை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். “ஒரு மனையின் கண் மணமுழவு, மற்றோர் இடத்தில் சாப்பறை. காதலரோடு வாழும் மகளிர் பூவணியணிகின்றனர். பிரிந்த மகளிர் வருந்தித் தனிமையுறு கின்றனர். இத்தகைய மாறுபட்ட வாழ்க்கை நிலைகளைப் படைப்புக் கடவுள் பண்பில்லாமல் படைத்து விட்டான். இந்த உலகத்தின் இயற்கை மிகவும் கொடிது; இவ்வியற்கைப் படைப்பில் கொடுமையிருந்தாலும் அதனியல்பை உணர்ந்த வர்கள் எப்படியாவது வாழ்வில் இனிமையைக் காண வேண்டும்” என்று வற்புறுத்துகிறார்.
ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர்
பைத லுண்கண் பணிவார்பு உறைப்பப்
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்
இன்னா தம்மஇவ் வுலகம்
இனிய காணகஇதன் இயல்புணர்ந்தோரே
- 194
பூங்குன்றனார் என்ற புலவர் வானிற் பறக்கும் பறவையைப் போல் உள்ளம் உயர்ந்து உலகமெல்லாம் ஒன்று எனவும், மனித இனம் ஒன்று எனவும் காணும் காட்சிகள் நம் உள்ளத்தை உயர்த்துகின்றன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கூறும்பொழுது உலகத்தில் உள்ள நாடுகளை ஒற்றுமைக் கண்ணோட்டத்தோடு காணும் காட்சியும், மக்களினம் எல்லாம் உறவினர் என்று கொள்ளும் கொள்கையும் பெறப்படுகின்றன. இன்றைய உலகத்துக்குத் தமிழுலகம் அறிவிக்கும் நற்செய்தி இதைவிட வேறு ஒன்றும் இருக்க முடியாது. உலகத்தில் போரும் பூசலும் நீங்க வேண்டுமென்றால் இந்தக் கொள்கை யாண்டும் பரவவேண்டும்.
“எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தினர்; கேடும் ஆக்கமும் தாமே வரினல்லது பிறர்தர வாரா. நோதலும் அது தீர்தலும் அவற்றை யொப்பத் தாமே வருவன. சாதலும் புதிதன்று; வாழ்தலை இனிதென உவந்ததுமிலம்: வெறுப்பு வந்துவிட்டது இன்னாது என்று இகழ்ந்ததும் இலம். வளமான பெரிய ஆற்றில் நீர்வழிப்படும் மிதவைபோல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைத்திறம் அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தனம்; ஆகலின் மாட்சியினையுடைய பெரியோரை வியத்தலும் இலம்; சிறியோரைப் பழித்தல் அதனினும் இலம்” என்று கூறுகின்றார்.
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; மின்னொடு
வானந் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
என்பது இக் கருத்தை அறிவிக்கும் பாடலாகும்.
இவற்றைப் போன்ற பல நன்மையோடு கூடிய உண்மைகள் புறநானூற்றில் சிதறிய முத்துகளைப் போல ஆங்காங்குக் கிடக்கின்றன. வாழ்வின் அனுபவத்தோடு அமைந்து, வாழ்க்கைக்கு வழிகாட்டுவனவாக நின்று, சிறந்த கருத்தமைந்த இத்தகைய மொழிகளைப் பொருள்மொழிகள் என ஆன்றோர் வழங்கி வந்தனர். உண்மைப் பொருள்களைக் கூறும் இப்பொருள் மொழிகள் பொன்மொழிகளாக விளங்கி இலக்கியவளத்தை மிகுவித்துக் கற்போர்க்கு ஊன்றுகோல் போல் நின்று. வாழ்க்கையில் வழுக்கிவிழாமல் நன்மை செய்கின்றன என்று கூறலாம்.