அண்ணலாரும் அறிவியலும்/5
இயற்பியலையும் மருத்துவத்தையும் இணைத்து ஆராய்ச்சி
இப்னு அல் ஹைத்தாமின் கண்டுபிடிப்புகளால் கண்பார்வை இயல் தனிச்சிறப்புடைய துறையாகத் திகழ்ந்தது.இத்துறையின் வளமான வளர்ச்சிக்கு மற்றுமொரு காரணம் இவர் தமது ஆராய்ச்சிகளின் போது இயற்பியலையும் மருத்துவ இயலையும் இணைத்து ஆயத் தொடங்கியதாகும். இதன் விளைவாக ஒளியையும் ஒளியின் பிரதிபலிப்பான கண்ணையும் கூர்ந்து ஆராய நேர்ந்தது.
இவர் கண்களைப் பற்றி எழுதிய ‘கண் ணொளியியல்’(கிதாம் அல் - மனாசிர்) என்ற நூல் கண்களைப் பற்றி இடைக்காலத்தில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நூலாக இன்றும் மதிக்கப்படுகிறது.
இன்று கண்களை மூளையின் புற நீட்சியாக மருத்துவ உலகம் கருதுகிறது, இதே கருத்தை அடிப்படையாகக் கொண்டு பன்னெடுங்காலத்திற்கு முன்பு கண்ணொளியியல் ஆய்வுகள் செய்யப்பட்டன என்பது இன்று வியப்பூட்டும் செய்தியாகும்.
அறுவை மருத்துவத்திற்கு மயக்க மருந்து
அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தைப் பயன்படுத்தலாம் என முதன் முதலில் கண்டறிந்து கூறியவர் இப்னு அல் ஹைத்தாமே ஆவார்.இவர் இயற்பியலின் மாபெரும் வல்லுநராக திகழ்ந்து பல புதிய கண்டுபிடிப்புகளை ஆய்ந்தறிந்து உலகுக்கு உணர்த்தி வரலாறு படைத்தவரும் கூட, காற்று மண்டலம் பற்றிப் புதிய பல செய்திகளை ஆராய்ந்து அறிந்து கூறியவர். நீள் வட்ட மற்றும் கோளவடிவ ஆடிகள் பற்றியும் அவற்றில் ஏற்படும் கோட்டங்கள் பற்றியும் பலப்பல ஆய்வுகளை நிகழ்த்திப் புதிய தகவல்கள் பலவற்றைக் கண்டறிந்து கூறியவர். ஒளிப்பரப்புக் குறைவெல்லை பற்றிய கொள்கையான 'மியூ' பாதை விதியை முதன்முறையாக வகுத்த பெருமைக்குரியவர். இவரது அரிய கண்டுபிடிப்பான இவ்விதியைத்தான் பிற்காலத்தில் பெர்னார்ட் என்பவர் ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்தார்;அதையும் பின்னர் இயற்பியல் விஞ்ஞானிகளான ஸ்னெல் அவர்களும் டேக்கார்ட்டே அவர்களும் மேலும் குறைகளைந்து செம்மைப்படுத்திச் சீர் செய்து முறைப்படுத்தினார்கள். இவ்வாறு இத்துறையின் வளர்ச்சிக்குப் பல்லாற்றானும் அடிப்படைச் சக்தியாக விளங்கி வந்துள்ளார்.
தமது ஆராய்ச்சிகள் முழுமைக்கும் தேவையான பரிசோதனைக் கருவிகள் அனைத்தையும் இவரே தயாரித்துப் பயன்படுத்தினார் என்பது இங்குக் குறிப்பிடத்தக்க மற்றுமொரு செய்தியாகும்.
இயற்பியல் துறையின் பேரங்கமான வானவியல் வளர்ச்சியில் புதுப்புது அத்தியாயங்களை உருவாக்கிப் புதிய வரலாறு படைத்தவர்கள் இஸ்லாமிய வானவியல் வல்லுநர்களே என்பதை முன்பே கண்டோம்.
விண்வெளி ஆய்வுக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லிம்களே
இன்று விண்வெளி ஆராய்ச்சிகளில் ஆயிரமாயிரம் வெற்றிகளை நம் விஞ்ஞானிகள் விளைவித்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் அதற்கான படிக்கட்டுகளை உருவாக்கி, வெற்றிச் சிரகத்தை எட்ட வழிகாட்டிய முஸ்லிம் விண்ணியல் விஞ்ஞான விற்பன்னர்களில் அல் பர்கனி,அபுல் இப்னு அமாஜு, அல் ஹஸன் அலி, ஷரப் அல், அல்தௌஸா, அப்துல் ரஹ்மான் அல் சூஃபி, அபுல் ரைஹான், முஹம்மது இப்னு அஹமத் அல்பிரூனி, முஹம்மது பர்கனி, ஜாபிர் இப்னு அப்ரா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
நாடாராய்ச்சியும் கடற்பயணமும்
விண் ஆய்வில் தேர்ந்து விளங்கியது போன்றே மண்ணுலக ஆராய்ச்சியிலும் திறம்பட்டவர்களாக விளங்கியவர்கள் முஸ்லிம்கள். பூகோள அறிவில் முன்னோடிகளாக அன்றைய முஸ்லிம்களே விளங்கினர் என்பதை வரலாறு மிகத் தெளிவாக உணர்த்திக் கொண்டுள்ளது.நாடாராய்ச்சியும் கடற்பயணமும் அன்றைய முஸ்லிம் களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தேவையே ஆய்வுக்குத் தாய்
பூகோள அறிவு பெறுவது அன்றைய முஸ்லிம்களின் இன்றியமையாத் தேவையாகவும் கடமையாகவும் அமைந்திருந்தது. ஏனெனில், இறைவணக்கம் புரியும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் புனிதமிகு மக்கா மாநகரில் அமைந்துள்ள கஃபா இறையில்லம் நோக்கியே தொழுகைகள் நடத்தப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய விதியாகும். இதனால் மக்காவுக்கு அப்பால் வாழும் மக்களுக்குக் கஃபாவின் திசையறிந்து தொழ வேண்டிய கட்டாயக் கடப்பாடு.
மேலும், உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது இறுதிக்கடமையான ஹஜ் கடமையை நிறைவேற்ற அரேபியா நாட்டில் மக்கா நகரிலுள்ள கஃபா இறையில்லம் நோக்கிச்செல்ல வேண்டிய இன்றியமையா நிலை.
சாதாரணமாக ‘தேவையே ஆய்வுக்குத் தாய்’ (Necessity is the mother of inventions) எனக் கூறுவர். இதன்படி, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும்போது தாங்கள் எந்த எந்தக் கடல்களைக் கடந்து செல்ல வேண்டும்; எந்த எந்த நாடுகளின் நிலப் பகுதிகளை, நீர்ப் பகுதிகளைக் கடந்து செல்ல வேண்டும்: ஆங்காங்குள்ள நில, நீர் நிலைமைகளையும் தட்ப வெப்ப நிலைகளையும், பாலைகள் மலைகள், காடுகள் பற்றிய தகவல்களையும், அவற்றினூடே செல்லக்கூடிய வழித்தடங்களையும் கண்டறிந்து செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை.
காலப்போக்கில் இஸ்லாம் பரவிய நாடுகளிலெல்லாம் இஸ்லாமிய ஆட்சியும் உருவாகியது. இந்நாடுகளிடையே வணிகத் தொடர்புகள் அதிகரிக்க பூகோள அறிவு வளர்ச்சி அத்தியாவசியமாகியது. எனவே, தனிப்பட்டவர்களும் அரசுத் தலைவர்களும் பூகோள அறிவு வளர்ச்சியிலே ஆர்வமும் முனைப்பும் காட்டினர்.
ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த அரபிகள்
முஸ்லிம்களின் பூகோள அறிவு வளர்ச்சிக்கு அவர்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டது பேருதவியாயமைந்தது. ஏழாம் நூற்றாண்டிலேயே கிழக்கே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிலம், நீர் வழியாகச் சென்றார்கள் என்ற குறிப்பு வரலாற்றில் காணக்கிடக்கிறது. தெற்கே ஆஃப்ரிக்காவின் தென்கோடிவரை சென்றுள்ளார்கள். மேற்கே கோனரித் தீவுகளுக்கும் வடக்கே ரஷ்யாவுக்கும் சென்றதாக வரலாறு கூறுகிறது. இன்னும் பால்டிக் நாடுகளும் ஐஸ்லாந்துக்கும்கூட அக்கால முஸ்லிம்கள் சென்று வந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
இத்தகைய பயணங்களின் விளைவாக உலகப்பூகோளப்படம் வரைய வேண்டிய கட்டாயத்தேவை அன்றைய முஸ்லிம் பூகோள அறிஞர் கட் கு ஏற்பட்டது.
உலகின் முதல் பூகோளப்படம்
பூகோளப்படம் வரைவதில் உலகிலேயே கிரேக்கர்கள் தான் சிறந்து விளங்கினார்கள். தாலமி வரைந்த பூகோளப்படம்தான் உலகின் முதல் பூகோளப் படம். ஆனால்,அதில் பல குறைகள் இருந்தன. அக்குறைகளைக் களைந்து தாங்கள் பெற்ற கடற்பயண, தரைப் பயண அனுபவ அடிப்படையில் திருத்தமான பூகோள வரை படத்தை உருவாக்க முனைந்தனர் முஸ்லிம்கள்.
இத்தகைய நோக்கத்தை நிறைவேற்றும் முறையில் பூகோள அறிவுமிக்க வல்லுநர் குழுவை அன்றைய கலீஃபா அல் மாமூன் அமைத்தார். இத்துறையில் தேர்ந்த சிந்தனையாளராகத் திகழ்ந்த அல் கவாரிஸ்மியின் தலைமையில் எழுபது நிபுணர்களைக் கொண்டது அக்குழு.
இந்தக் குழுதான் முதன் முதலாக தாலமியின் வரை படத்தைவிட தெளிவான, திருத்தமான உலகின் பூகோளப் படத்தை வரைந்தளித்தது. அதன் அடிப்படையில் உருவானதே இன்றையப் பூகோளப்படம்
முதல் பூகோள தகவல் களஞ்சியம்
இத்துறையில் அல் கவாரிஸ்மிக்கு அடுத்த நிலையில் முத்திரைப் பணியாற்றிப் பெரும்புகழ் தேடியவர் இப்னு அப்துல்லாஹ் அல் ஹமாபி எனும் பூகோளவியல் ஆய்வறிஞர் ஆவார். இவரை வரலாற்றாசிரியர்கள் சுருக்க மகா ‘யாகூத்’ என்று குறிப்பிடுவர். கி.பி. 1177 முதல் 1294 வரை வாழ்ந்ததாகக் குறிக்கப்படும் இவர் எழுதிய “மூஜம் அல் பல்தான்” எனும் நூல் அக்கால முஸ்லிம்கள் பெற்றிருந்த பூகோள அறிவின் திரட்சியை உலகுக்கு விண்டுரைக்கும் பூகோள தகவல் களஞ்சியமாகும். இக்காலத்தில் உள்ளதுபோல் அகர வரிசையில் அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நகரங்களைப் பற்றிய தொகுப்புஒன்றைத் தயாரித்து நூல் வடிவில் வெளியிட்டார்.
வண்ண - பூகோள வரைபடங்கள்
பிற்காலத்தில் மேலை நாட்டுப் பூகோளவியல் அறிஞர்களால் பெரிதும் போற்றப்பட்டவர் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு அஹ்மது அல் முகத்தஸி எனும் முஸ்லிம் விற்பன்னராவார். மற்றவர்களைவிட இவரது பூகோளப் படைப்புகள் பெரும் புகழ் பெற்றதற்கு அடிப்படைக்காரணம், இவர் வரைந்த பூகோள வரைபடங்களில் பாலைப் பகுதிகளையும் பசுமை வளம் கொஞ்சும் இடங்களையும் கட ல்களையும் ஆறுகளையும் மலைகளையும் பல்வேறு வண்ணங்களைக் கொண்டு வரைந்து காட்டியமையாகும். அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய வணிக மார்க்கங்களையும் வண்ண நிறத்திலேயே சுட்டிக்காட்டிப் பார்ப்போருக்கும் படிப்போருக்கும் பூகோள செய்திகளை தெள்ளத் தெளிவாக விளக்க முயன்றதேயாகும்
இவரைப் பின்பற்றி கண்கவர் வண்ணங்களைக் கொண்டு மிகச் செம்மையான பூகோள் வரைபடங்களை வரைந்தவர். அபூ ஸைது அஹமத் இப்னு சாலிஹ் அல் பல்கி எனும் முஸ்லிம் பூகோளவியல் வல்லுநராவார்.இவரது பூகோளப் படத்தில் அக்கால வாணிகத்தில் தலைசிறந்த விளங்கிய நாடுகளாவன: இந்தியா, அரேபியா, மொராக்கோ , சிரியா, எகிப்து, அல்ஜீரியா போன்ற நாடுகளும், இந்நாடுகளுக்கு வணிகர்களையும் வணிகக்கப்பல்களையும் கொண்டு சென்று கரைசேர்த்த இந்தியப்பெருங்கடல், மத்தியதரைக் கடல் போன்றவைகளையும் மிகச் சரியாகக் குறித்திருந்தார். இவரது இப்படங்களையே அக்காலத்தில் பலரும் செம்மையானதாகக் கருதி ஏற்றுப் பின்பற்றினர். அல் இத்ரீஸ் என்பாரின் திருத்தமான வரைபடங்கள் நீண்டகாலம் ஐரோப்பியர்களால் ஏற்றுக் கொள்ளப்ட்டதாயிருந்தது. இவ்வாறு பூகோள வரைபடக்கலையில் தனித்தன்மை பெற்று விளங்கியவர்கள் முஸ்லிம்களாவர்.
முதன் முதலில் உலகம் உருண்டை எனக் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!
அல் மாமூன் கலீஃபாவாக ஆட்சி புரிந்தது ஒன்பதாம் நூற்றாண்டிலாகும். அவர் காலத்தில்தான் உலகம் உருண்டையானது என்பதை முஸ்லிம் விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள்
இப்புதிய கண்டுபிடிப்பின் விளைவாக. உருண்டையான உலகின் சுற்றளவு எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டது. கடலில் அடிக்கடி ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கடற்பயணத்துக்குத் திடீரென ஏற்படும் இடராக இருந்தமையால், இந்த ஏற்ற இறக்கங்கள் எவ்வப்போது, எதனால் ஏற்படுகின்றன என்பதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டன சந்திர, சூரிய இயக்கங்களைப் பற்றி ஆராய்ந்து, புதிய புதிய தகவல்களைக் கண்டறிந்து கூறினர். இவற்றைப் பற்றிப் பல புதிய நூல்களும் முஸ்லிம் விஞ்ஞானிகளால் அன்று உருவாக்கப்பட்டன. அவர்கள் பெற்ற பூகோள அறிவும் இயற்பியலறிவும் பிற்காலத்தில் இத்துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு வலுவான அடிப்படையாக அமைந்தன.
உலகம் உருண்டை என்பதை கலிலியோவுக்கு முன்னதாகக் கண்டறிந்து கூறிய அல் பிரூனி, உலகத்தின் சுற்றளவை அளப்பதற்கு வியக்கத்தக்கதோர் எளிய வாய்பாடை முதன் முதல் வகுத்தளித்தார்.
மேலும், சூரியனைச் சுற்றி உலகம் சுழலுவது இயற்கையாக நிகழும் நிகழ்வே என்பதையும் அல் பிரூனி எண்பித்தார் புவியியல் ஊழிகள் ஒன்று மற்றொன்றைத் தொடர்ந்து தோன்றும் சுழல் வட்டம் என்பதைக் காரணகாரியங்களோடு விளக்கினார். இவ்வாறு இவர் தமது சமகாலத்திய அறிஞர்களைவிட காலத்தால் முற்பட்ட நோக்கும் போக்கும் உடையவராக விளங்கினார்.
கடல் அலைகள் மீது முழு நிலாவின் தாக்குறவைப் பற்றி அல் பிரூனி வெளியிட்டுள்ள கருத்துக்கள் பூரணச் சந்திர பௌர்ணமியன்று கடல் பொங்கிக் கொந்தளிப்பதற்கு இன்று என்னென்ன விஞ்ஞானக் கருத்துக்கள் கூறப்படுகின்றனவோ அவற்றை அப்படியே அன்றே பிரதி பலிப்பதாய் அமைந்திருந்தன என்பது வியப்பளிக்கு உண்மையாகும்
காபாவை நோக்கி
இஸ்லாமிய உலகிலுள்ள சுமார் 60 முக்கிய நகரப்பகுதிகள் அவற்றின் அட்சரேகை, மகரரேகைப் பட்டியலை அல் பிரூனி தயாரித்ததன் பயனாக மக்காவிலுள்ள காபா இறையில்லத்தை நோக்கி முறையாகத் திசை அறியதொழ முடிகிறது. இவ்வாறு துல்லியமாகத் திசை அறிய வழி கண்டதன் மூலம் புதிதாக மசூதிகள் கட்டும்போது சரியான திக்கில் 'மிஹ்ராப்' அமைக்க உலகெங்கும் உள்ள முஸ்லிம்களால் முடிந்தது.
கொலம்பஸ் எக்கு ஆதார சுருதி முஸ்லிம் வல்லுநர்களே!
அண்மையில் அமெரிக்காவிலும், கொலம்பஸ் முதன்முதலாகக் கால் பதித்த நாடுகளிலும் கொலம்பஸின் 500-வது ஆண்டு நிறைவு விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அன்றைக்கு அவரது நாடாராய்ச்சிக்கு புதுப்புது நிலப்பகுதிகளைக் கண்டறியும் முயற்சிக்கு கடவாய்வுப் பயணங்களுக்குத் தேவைப்பட்ட அனைத்து விவரங்களையும் தந்துதவியவர்கள் முஸ்லிம் அறிவியலாளர்களே என்பது வரலாற்றில் அழுந்தப் பதித்த தடயமாக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் கடல்வழி தமது நாடாய்வுப் பயணத்தை மேற்கொள்ளுமுன் அன்றுவரை முஸ்லிம் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட பூகோள ஆய்வுகளைப் பற்றி பல ஆண்டுகள் போர்க்சுக்களில் நன்கு கற்றறிந்த பின்னரே இந்தியப் பயண முயற்சியாக அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்டார் என்பது அவரது வாழ்க்கை வரலாற்றில் காணக்கிடக்கும் செய்தியாகும்.
திசைகாட்டிக் கருவி கண்டுபிடிப்பு
அன்றைய கடற்பயணங்களுக்கு இன்றியமையாத் தேவையாக அமைந்திருந்தது திசையறியும் திறன். அதுவரை பயணிகள் திசையறிய விண்மீன்களையும் கோள்களின் இருப்பிடத் திசையையுமே நம்பிப் பயணம் மேற்கொண்டனர். திசையறிய உதவும் ‘திசைகாட்டிக் கருவி,கண்டுபிடித்தது கடற்பயண வரலாற்றின் மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது. எளிதாகத் திசை அறிந்து விரைந்து கலம் செலுத்த இயன்றது. இத்தகு பெரும்பயன் அளிக்கவல்ல திசைக்காட்டிக் கருவியைக் கண்டுபிடித்த பெருமையும் முஸ்லிம் விஞ்ஞானிகளையே சாரும் இத்தகுசாதனையை மேனாட்டு அறிஞர்களான ஜார்ஜ் சார்ட்டன் ஃபிலிப் ஹிட்டி, சர் பர்ட்டன் போன்றவர்கள் குறிப்பிட்டுப் பாராட்டத் தவறவில்லை
ஐரோப்பியர் பெற்ற அரிய பாடம்
“முஸ்லிம்கள் பெற்றிருந்த பூகோள அறிவும் கண்டுபிடிப்புகளும், அவர்களது கடலாய்வு, நாடாராய்ச்சி,வணிகம் பொருட்டு உலகெங்கும் மேற்கொண்ட கடற்பயண அனுபவங்கள் ஐரோப்பியர்களுக்கு அரிய பாடமாகும்” என டேவிட் ஸ்டரைடர் அவர்கள் குறிப்பிட்டுள் ளது எண்ணத்தக்கதாகும்.
நீண்டகால கடல் ஆதிக்கம்
கடல் தொடர்பான இத்தகைய முயற்சிகளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டதன் விளைவாக, நீண்ட நெடுங்காலம் கடல் ஆதிக்கம் முஸ்லிம்களிடமே இருந்தது.
மத்திய காலத்தில் சுமார் 26,000 கப்பல்கள் அரபு வணிகர்களிடம் இருந்ததாக வரலாறு கூறுகிறது. அரபுநாட்டு வணிகர்கள் இந்தியா, சீனா, ஜாவா, சுமித்ரா,இலங்கை, ஆஃப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல பகுதிகளுக்கும் வணிக நிமித்தம் சென்று வந்தனர். இவ்வாறு அரபு வணிகர்களிடம் உலகக் கடலாதிக்கமும் இருந்ததை எளிதாக உணர முடிகிறது.
ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சூயஸ் கால்வாய் திட்டம்
சுமார் நூறு ஆண்டுகட்கு முன்பு எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாய் வெட்டப்பட்டதன் விளைவாக மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்க முடிந்தது.இதனால் ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சுற்றிக் கொண்டு இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகட்குச் செல்ல பலநாட்கள் செலவழிக்க வேண்டிய நிலை மாறி, இன்று சில மணிநேரங்களில் சூயஸ் கால்வாயைக் கடந்து. செங்கடலில் நுழைந்து இந்தியாவை அடைய முடிகிறது. இதனால மேற்கு கிழக்குக் கடல்வழி மிகக்குறுகிய ஒன்றாக அமைந்து விட்டது. இதற்குப் பெரும் காரண மாயமைந்துள்ள சூயஸ் கால்வாயை வெட்ட வேண்டும் என்று ஆலோசனை வழங்கியவர் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த டீ லெஸ்ஸப்ஸ் எனும் பொறியியல் அறிஞ்ராவார். ஆனால் அவருக்கும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே கலீஃபா ஹாரூன் அல் ரஷீத அவர்கள் சூயஸ் கால்வாயை வெட்டி மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைப்பதன் மூலம் மேற்குக்கும் கிழக்குமிடையிலான கப்பல் போக்குவரத்தைத் தட்டுத் தடங்கலின்றி நடத்தத் திட்டார் என்ற குறிப்பை அவர் கால வரலாற்று நூல்களில் காண முடிகிறதென்றால் முஸ்லிம்களின் அறிவியல் தொலைநோக்குப் பார்வை நம்மை வியக்க வைக்கிறது.அந்த அளவுக்கு அறிவியல் உணர்வும் சண்ணோட்டமும் ஆய்வறிஞர்களிடம் மட்டுமன்றி நாடாளும் தலைவர்களிடமும் காணப்பட்டதை அறிய வியப்பாக இருக்கிறது.
வாஸ்கோடகாமாவின் வழிகாட்டி ஒரு முஸ்லிமே!
கொலம்பஸுக்கும் முன்னதாகக் கடல்வழியாக இந்தியாவை அடைய முனைந்தவர் வாஸ்கோட காமா. இஸ்லாமிய பூகோள விற்பன்னர்கள் அன்றுவரை கண்டறிந்து கூறிய அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் நன்கு தெரிந்துகொண்ட லாஸ்கோட காமாவின் வழிகாட்டியாக விளங்கியவர் அக்காலத்தில் திறம்பட்ட கடலாய்வாளராக விளங்கிய இப்னு மஜீத் எனும் முஸ்லிம் வல்லுநரே என்பது வரலாற்று உண்மை.
முதன் முதலாகக் தென்னாப்ரிக்காவின் தன்னம்பிக்கை முனை வழியாக இந்திய மேலைக் கடற்கரைப் பகுதியான கள்ளிக்கோட்டையை வந்தடைந்த ஐரோப்பிய நாடாய்வாளர் வாஸ்கோட காமாவே ஆவார்.அவரது இந்தியக் கடல்வழிப் பயண வெற்றிக்கு எல்லாவகையிலும் உறுதுணையாயமைந்தவர்கள் முஸ்லிம் ஆய்வறிஞர்களே என்பது அவரது பயண வரலாற்றில் காணும் உண்மையாகும்.
இந்தியப் பெருங்கடலிலும் அட்லாண்டிக் பெருங்கடலிலும் பலமுறை நெடும் பயணம் மேற்கொண்டதோடு ஆஃப்ரிக்கக் கண்டத்தையே கடல் வழி வலம் வந்த சிறப்புக்குரியவர்கள் சுலைமான் அல் மஹ்ரி எனும் மாலுமியும் இப்னு மஜீத் எனும் கப்பல் தலைவருமாவார்.இவர்கள் எழுதி வைத்துள்ள பயணக் குறிப்புகள் கடற்பயண மாலுமிகளுக்கும் கடலாய்வாளர்களுக்கும் வழிகாட்டிப் படைப்புகளாக அமைந்தனவெனலாம். இப்னு மஜீதின் நூல்கள் கடற்பயண வழிகாட்டி நூல்களாலேபல காலம் பயன்படுத்தப்பட்டது.
மூன்று கண்டங்களில் முஸ்லிம்களின் வணிக ஆதிபத்தியம்
மத்திய காலத்தில் அரபு வணிகர்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் வணிகக் கப்பல்கள் கடல்களில் இடையறாப் பயணம் செய்தவண்ணம் இருந்தன என்றும் கண்டோம். இன்னும் சொல்லப் போனால் ஆசியா, ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, ஆகிய மூன்று பெருங் கண்டங்கடலாதிக்கமும் வணிக ஆதிபத்தியமும் முஸ்லிம்களின் கரங்களிலே அடக்கமாயிருந்தன என்றுதான் சொல்ல வேண்டும். பதினொராம் நூற்றாண்டின் இறுதி வரை உலகச் சந்தைகளாக மூன்று முக்கிய நகரகங்கள் விளங்கின. அவை பாக்தாது, பொக்காரா, சாமர்கண்ட் ஆகிய நகரங்களாகும் இங்கு உலகம் முழுவதிலிருந்து வணிகர்களும் வணிகப் பொருட்களும் குவிந்து பின் அங்கிருந்து மற்ற இடங்களுக்குச் சென்றதாக வரலாறு கூறுகிறது
பொருட்களோடு அரபுச் சொற்களும் ஏற்றுமதி
பிறநாட்டுப் பொருட்களுடன் தங்கள் நாட்டின் தனி உற்பத்திப் பொருட்களான கம்பளங்கள், பட்டுத் துணிமணிகள், அலங்கார விளக்குகள், உலோகக் கட்டாரிகள் ஊசிகள் போன்றவற்றையும் பெருமளவில் கொண்டு சென்று விற்பனை செய்தனர். பொருட்களோடு தங்கள் அரபு மொழிச் சொற்களையும் அங்கே விட்டு வந்துள்ளனர் என்பதை இன்றும் ஐரோப்பிய மொழிகளில் வழங்கிவரும் 'மான் சூ' ‘கேபிள்’ ‘அட்மிரல்’ போன்ற அரபிச்சொற்கள் கட்டியங் கூறிக்கொண்டிருக்கின்றன.
புவியீர்ப்பு விசையை முதன் முதல் கண்டுபிடித்த முதல் முஸ்லிம் விஞ்ஞானி
இயக்கவிதி பற்றியும் ஒளிச் சிதறல் பற்றியும் ஐசக்நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு பன்னெடுங் காலத்துக்கு முன்பே இப்னு அல் ஹைத்தாம் கண்டறிந்து கூறியதோடு, இக் கண்டுபிடிப்புப் பற்றிய விவரங்களை எழுத்துருவில் நூலாகவும் எழுதி வைத்துள்ளார். மரத்திலிருந்து கீழே விழுந்த ஆப்பிள் பழம் மேலே செல்லாமால் கீழ் நோக்கிப் பாய்ந்து விழுந்ததுக்குக் காரணம் அதை பூமியின் - மண்ணின் மையப்பகுதி ஈர்த்து இழுப்பதேயாகும் என 'புவியீர்ப்பு விசைத் தத்துவத்தை ஐசக் நியூட்டன் கண்டறிந்து கூறுவதற்குப் பல நூறு ஆண்டுகட்கு முன்பே கி பி , 1122 ஆம் ஆண்டுவாக்கில் அல் காஸினீ என்பவர் கண்டறிந்து கூறினார். காற்றுக்கும் எடை உண்டு என்பதையும் கண்டறிந்து கூறியவரும்இவரே யாவார்.
வானில் தோன்றும் வானவில்லில் இடம்பெற்றுள்ள வண்ணங்கள் உருவாவதற்கான காரணங்களைக் கண்டறிந்து கூறிய குத்புத்தீன் அஸ்ஷராஸீயே ஒளிச் சிதறல்களைத் தடுக்கும் கண்ணாடி வில்லைகளை கண்டுபிடித்தளித்தார்.
ஒளி செல்லும் வேகம்
வெப்பம், ஆற்றல், இயக்கம் ஆகியவற்றின் இயல்பு பற்றி நன்கு ஆராய்ந்து சில அடிப்படை அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து கூறி இப்னு அலி சினா (கி.பி.980-1037) ஒளியானது ஒளிபிறங்குகின்ற மூலங்களில்லிருந்து கணக்கிடப்படக்கூடிய வேகத்தில் வெளிப்படுகிறது என்ற விஞ்ஞான உண்மையையும் கண்டறிந்து கூறியவராவார்.
ஃபெர்மார்ட்டுக்கு முன்னோடியான ஊடு பொருள் வழிடி ஒளி புகும் கோட்பாடு
‘கண்ணொளியியல் தந்தை’ எனப் போற்றப்படும் இப்னு அல் ஹைத்தாம் ‘கண்ணொளியியலில் ஓர் ஒளிக்கதிர் ஓர் ஊடு பொருள் வழியாகச் செல்லும்போது,விரைந்து செல்லும் பாதையையே தேடுகிறது’ எனக்கண்டறிந்து கூறினார். இக்கோட்பாடே பிற்காலத்தில் இத்துறையின் பெரும் அறிவியல் வல்லுநராகத் திகழ்ந்த ஃபெர்மார்ட் என்பவருக்கு முன்னோடிக் கோட்பாடாக அமைந்தது.