அண்ணாவின் ஆறு கதைகள்/001-006
குழலோசையைக் கேட்டுக் குதூகலம் கொண்டு, குதித்தோடி; வந்த கோமதியைத் தழுவிக்கொண்டு, அருகே வந்து நின்ற அழகு மீனாவின் முகத்தைத் துடைத்து முத்தமிட்டுக் கமலத்தின் கண்களின் அழகைப் புகழ்ந்துரைத்து, அம்புஜம் வரக் காணோமே என்று ஆயாசப்பட்டுக் கோமளத்துக்கு நேற்று இருந்த கோபம் இன்று இல்லை என்று கூறி மகிழ்ந்து, சுந்தரியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். கோகிலத்தின் கழுத்தை நெறித்துவிடுவது போல அணைத்துக்கொண்டான். அருகே வர அஞ்சி சற்றுத் தொலைவிலே நின்ற மரகதத்தைப் போய் இழுத்து வந்து முத்தமிட்டான். கிருஷ்ணனுடைய குழலுக்கு அவ்வளவு சக்தி இருந்தது! அந்த “நாதம்” அவ்வளவு ஆனந்தமூட்டிற்று. குழலை அழகாய்க் கையிலெடுத்து இதழினில் பொறுத்தி இசை தொடுத்து, செவியின் வழியாக இருதயத்தில் புகுத்தி இன்ப வெள்ளத்திலே சுந்தரியையும், சுகுணாவையும், கருணாவையும், கமலாவையும் நீந்தும்படி செய்த கிருஷ்ணன், அதற்காகப் பெருமைப்படவுமில்லை, இந்த வெற்றிக்காக மகிழவுமில்லை. அங்கும் இங்கும் பார்த்தான். எதையோ காணவேண்டுமென்ற ஆவவலுள்ளவன்போல, இடையிடையேதான் இந்தச் சல்லாபங்கள்!
“போதாதோ புவனா! இன்னமுமா குழல் ஊத வேண்டும்! புவனா! வாடி, கிட்டே! வரமாட்டாயோ? சரி, போ,போ, நீ போய்விட்டால் என்ன? இதோ மாணிக்கத்தைக் கூப்பிட்டுக் கொள்கிறேன்” என்று கிருஷ்ணன் கூறிக்கொண்டே மாணிக்கத்தை நோக்கி நடந்தான். அதே சமயம், சற்றுத் தொலைவிலே, வேலியில் படர்ந்திருந்த கொடிகளுக்கிடையே எதையோ கண்டான், களிகொண்டான், மீண்டும் குழலை வாசிக்கத் தொடங்கினான். யாருக்காகக் குழலை வாசிக்க அவன் மனம் துடித்ததோ, அந்த லீலா வேலிக்கு அப்புறமிருந்து தன்னைக் கவனிப்பதைக் கிருஷ்ணன் கண்டுகொண்டான். அதனாலே ஏற்பட்ட மகிழ்ச்சியினால், அவன் மிக்க மதுரமாகக் குழலை வாசித்துக்கொண்டே, ஆனந்தத்திலே இலயித்துக் கண்களை மூடிக்கொண்டான். சில விநாடிகளுக்குப் பிறகு கண்களைத் திறந்து பார்க்க, லீலா இருந்த இடத்திலே ஓணான் உலவக் கண்டு, சோகமும், கோபமும் கொண்டு, வேலிக்கு அருகே சென்று பார்க்க, வேக வேகமாக லீலா போய்க்கொண்டிருக்கக் கண்டு, சலிப்படைந்து, கோமதியைக் கோலால் அடித்து, மீனாவின் முதுகிலே அறைந்து, சுந்தரி மீது கல்விட்டு எறிந்து, மரகதத்தின் காதைப் பிடித்துக் கரகரவென்றிழுத்து வந்து நிறுத்தி, ஊருக்குள் ஓட்டிக் கொண்டுபோய்ச் சேர்த்தான்!
ஆம்! கிருஷ்ணன், திரிபுரம் ஜெமீன் மந்தையிலே, வேலை பார்ப்பவன்! சுகுணாவும், சுந்தரியும், கோமளமும், கோமதியும், மந்தைச் சுந்தரிகளே! லீலா தவிர! லீலா, ஜெமீன்தாரர் வீட்டுப் பெண், மற்றவை, அவள் வீட்டு மாடுகள். கிருஷ்ணன், குழல் ஊதிக் குதூகலப்படுத்த எண்ணியது லீலாவை, நாலுகால் நளினிகளையல்ல!! ஆனால் அந்தப் பசுக்களின் இருதயம் வேறுவிதமாகவும், பாவையின் இருதயம் வேறுவிதமாகவும் அமைந்திருந்தது. ஜெமீன் மந்தைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட கிருஷ்ணன் குழல் ஊதுவதிலே மகா சமர்த்தன் என்றும், அவனுடைய இனிய இசையிலே, இன்புற்று மந்தையே மகிழ்ச்சியிலே மூழ்குவதாகவும் கேள்விப்பட்ட லீலா, ஒருநாள் சென்றாள் மாடுகள் மேயும் இடத்தருகே. குழலோசை அவளுக்கு இன்பமாக இருந்தது, ஒவ்வொரு நாளும் சென்றாள்! குழலின் இனிமையும், கிருஷ்ணனின் திறமையும் அபிவிருத்தி அடையத் தொடங்கிற்று. அதுமட்டுந்தானா? கிருஷ்ணனுடைய, நடை உடை பாவனையும் வயற்காட்டு ரகமாக இருந்தது மாறி வயற்காட்டுச் சீனுக்கு உடை தரிக்கும் இராஜபார்ட்டுக்காரருடையது போல மாறிக் கொண்டே வரத் தொடங்கிற்று! அன்று கிருஷ்ணன், லீலாவிடம் பேசிப் பார்க்கவேண்டும் என்று அதிக ஆவல் கொண்டிருந்தான். ஆனால் அன்று என்னமோ லீலாவுக்கு அவசரமான வேலை, அதிக நேரம் குழலைக் கேட்கவில்லை, போய்விட்டாள். அவளே போய்விட்ட பிறகு, இந்த அநாவசியமான பசுக்களுக்கு இங்கென்ன வேலை என்ற கோபத்திலேதான், மந்தையை ஊருக்கு விரைவாக ஓட்டிக் கொண்டு போனான், மனச் சங்கடம் கொண்ட மந்தை மன்னன்!
கிருஷ்ணன், தனி மனிதன், அதாவது காதலியைத் தேடித் தீரவேண்டிய கஷ்டமான கட்டத்திலே இருந்தவன்! காளையைக் கழுவி விடவும், பசுவுக்குப் புல்லிடவும், உதைக்கும் மாட்டுக்கு உத்தாவு தரவும், வலிகொண்ட வளைந்த கொம்பனுக்குச் சூடிடவும், வேறு ஆட்கள் இருந்தனர். கிருஷ்ணன், இவர்களுக்குத் தலைவன் மந்தையோடு செல்வது, மதுரகீதம் பொழிவது, இரவிலே இருதயத்துக்கு, “இன்னம் கொஞ்சம் பொறு, நெஞ்சமே! பொறுத்தார் பூமியாள்வார்!” என்று புத்தி கூறுவது, என்ற முறையிலே காலந்தள்ளி வந்தவன். மாட்டுப்பண்ணை விஷயமாகப் பிரத்யேக அறிவும் அனுபவமும் பெற்றவனென்று சிபார்சுக் கடிதம் பெற்றவன், சாதாரண ஆளிடமல்ல, சந்திபுரம் ஜெமீன்தாரிடம். அந்தக் கடிதமே, வேலையை அவனுக்குத் தரவைத்தது. சம்பளமோ அதிகம் தேவையில்லை என்று கூறிவிட்டான்! ஜெமீன்தாரர், கிருஷ்ணனுக்கு வேலை தந்ததற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம்! கிருஷ்ணன் மந்தை மன்னனான பிறகு, பட்டியிலே பல மாறுதல்கள்! மாடுகளுக்கெல்லாம் அவன் வருவதற்கு முன்பு, வளைந்தகொம்பன், வால்மொட்டை, மைக்கண்ணி, அரணைவாலான் என்று அநாகரிகப் பெயர்கள் இருந்தன. கிருஷ்ணன் பதவியிலே அமர்ந்த உடனே செய்த முதல் சீர்திருத்தம், பழைய பெயர்களை ஒழித்துவிட்டு, அழகாகச் சுகுணா, சுந்தரி, கோமளம், கோமதி என்ற புதிய பெயர்களை மாடுகளுக்குச் சூட்டியதுதான்! அவன் செய்த வேறு பல சீர்திருத்தங்களிலே ஒன்று, பிரதி சனிக்கிழமையும், மாட்டுப் பட்டியிலே, பாட்டுக் கச்சேரி நடத்துவது. இந்த விசித்திர சித்தனைப் பற்றி ஊரிலே வேடிக்கையாகப் பேசிக்கொள்வார்கள். அவன் கவலைப்படுவதில்லை. எந்தத் தொழிலானால் என்ன? மாடு மேய்ப்பவன், என்று. ஏன் அந்தத் தொழிலைப்பற்றி இழிவாகக் கூறவேண்டும்! மந்தை மன்னன்! என்று நான் கூறுவேன். அது சாதாரணமான, கேவலமான தொழிலல்ல. மகேசுவரனே, பசுக்களாகிய நமக்குப் பதியாக இருக்கிறார் என்று சைவசாத்திரம் கூறுகிறது, அரியின் அவதாரமான கிருஷ்ணன், மாடு மேய்ப்பவனாக இருந்தார். மாடுகளின் பொருட்டு மக்களின் மண்டை உடைந்த கதைகள் உண்டு, என்று கூறுவான்.
படித்த பயல் ஏன் இந்த வேலைக்கு வந்தான் என்று சிலர் அவனைக் கேட்டதுண்டு. கிருஷ்ணன், கோபப்படாமல், அவர்களுக்குப் பதில் கூறுவான், நான் படித்தவன் என்பது உண்மை! ஆகையினால்தான், இந்த வேலைக்கு வந்தேன் என்பான்.
“இந்தக் காலத்திலேதான் படித்தவர்களுக்கெல்லாம் ரொம்ப திண்டாட்டமாமே? வேலையே கிடைப்பதில்லையாமே! அதனாலேதான் பாவம் இந்தப் பிள்ளையாண்டான், ஜெமீனில் மாடு மேய்த்தாவது பிழைப்போம் என்று வந்திருக்கிறான். ஜெமீன்தாருக்கு யாராவது, இவன் படித்தவன் என்று நாலு நல்ல வார்த்தை சொன்னால் கணக்கப்பிள்ளை வேலைக்காவது வைத்துக் கொள்வார்” என்று சிலர் பரிதாபப்படுவதுண்டு.
“பைத்தியக்காரர்கள், மோட்டார் கம்பெனி ஏஜண்டாக இருக்க மாதம் இருநூறு தருவதாகச் சொன்னார்கள். முடியாது என்று கூறிவிட்டேன். மில்லிலே ஒரு வேலை இருப்பதாகச் சொன்னார்கள், வேண்டாம் என்று கூறி விட்டேன். இந்த மந்தை மன்னன் வேலைக்கு நான் வந்தது மதியற்ற செயல் என்று மதியிலிகள் நினைக்கின்றனர். வேலை ஏன் எனக்கு! குழலை ஊதிக் கொம்புள்ள பிராணிகளிடம் குதூகலத்தை ஊட்டுவதை விட்டு, சபைகளிலே சென்று என் திறமையைக் காட்டினால் வித்வானாகி விட முடியாதா, பணம் குவியாதா? நானாக, மனமுவந்து, இந்த வேலையைத் தேடிக்கொண்டேன். இந்த மட்ட ரகங்களுக்கு என் திட்டம் தெரியவில்லை, இவர்களைச் சட்டை செய்யப் போவதில்லை” என்று கூறுவான், கிருஷ்ணன், தன்னுடைய பட்டி ஆட்களிடம்.
“இது ஒரு தினுசான பைத்யம்!” என்ற முடிவுக்கு ஊரார் வந்துவிட்டனர்; உண்மைக்கும் ஊரார் நினைப்புக்கும் உறவு இருந்தது! அவனுக்கு ஒரு தினுசான பைத்யமிருந்தது உண்மைதான்! அந்தப் பித்தம், அலைகடலுக்கு அருகே, மணல் மேட்டின் மீது, அழகிய நிலவொளியிலே அவன் கேட்ட ஒரு அற்புதமான கதையினால் ஏற்பட்டது!!
“அடி அமிர்தம்! படித்து முடித்துவிட்டாயா அந்தக் கதைப் புத்தகத்தை” என்று கேட்ட லீலாவின் குரலிலே தோய்ந்திருந்த இனிமை, மணலைக் குவித்துத் தலையணையாக்கி, மனதை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, இருக்குமிடம் தெரிந்தால் இன்பமான மாலைக் கனவுக்குப் பங்கம் வந்துவிடுமே என்ற பயத்தால் கண்களை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்த வாலிபனுக்கு விருந்தாக இருந்தது, கண்களைத் திறந்தான், குரல் வந்த திக்கை நோக்கினான், இரண்டு இளமங்கைகள், பேசிக்கொண்டிருக்கக் கண்டான். சிந்தனையையும் செவியையும் அந்தப் பக்கம் செலுத்தினான். மங்கையரின் பேச்சு நிற்கவில்லை.
“படித்துவிட்டேன் லீலா ! என்ன அற்புதமான கதை தெரியுமோ அது! இன்பத்திலே இரண்டாவது இடம் இந்தக் குரலுக்கு கிடைத்தது.”
“என்ன கதை அது, அற்புதமான கதை !!”
“அற்புதம் என்றால் அற்புதமேதான்! கதையிலே வருகிற கதாநாயகியின் பெயர் என்ன தெரியுமோ?”
“அற்புதம் என்றே பெயரா அவளுக்கு”
“இல்லை ! அதிசயம்! என்று அவள் பெயர்”
“சரி, அந்த அதிசயவல்லி கதையைச் சொல்லடியம்மா அற்புதவல்லி !”
“சொன்னால் என்ன தருவாய்!”
“உன் புருஷனை விட்டு ஒரு முத்தம் தர சொல்லுகிறேன்” -
“போடி!”
இந்த இடத்திலே வாலிபன், மிகக் கஷ்டப்பட்டே சிரிப்டை அடக்கிக் கொண்டான்.”
“சொல்லடி என்றால், ... ”
“சொல்லட்டுமா?”
“ஜோதிடக்காரனைக் கூப்பிடட்டுமா. முகூர்த்தம் பார்க்க. சொல்லடி கதையை என்றால், என்னமோ பிரமாதமான பிகுவு செய்கிறாள்”
“சொல்கிறேன். நில்லடி, கிள்ளாதே, கிரீஸ் நாட்டுக் காதல் கதை அந்தப் புத்தகம்”
“கிரீஸ் நாட்டிலே கூட அதிசயம் என்று பெயர் வைத்தார்களா?”
“பெரிய கேள்வி கேட்டுவிட்டாய் போடி! கிரீஸ் நாட்டுக் கதை, அதைத் தமிழிலே யோகானந்த சாரதியார் மொழி பெயர்த்திருக்கிறார்”
“யோகானந்த சாரதியார், காதல் கதையைத்தானா மொழி பெயர்க்க வேண்டும். வேடிக்கைத்தான், கதையைச் சொல்லு”
“கிரீஸ் நாட்டிலே ஒரு ஊரிலே, அதிசயம் என்ற ராஜகுமாரி ஒருவள் இருந்தாள். அவள் நல்ல அழகி. உன்னைப் போல என்று வைத்துக் கொள்ளேன். ஆனால் உனக்கு இருப்பதுபோல, கிளிமூக்கு இல்லை அவளுக்கு?”
“ஏண்டி! நீ கதை சொல்லப் போகிறாயா. உதை வாங்கப் போகிறாயா?”
“கதைதாண்டி சொல்கிறேன். அதிசயத்தை வர்ணிக்க வேண்டாமா, அழகான பெண் என்று இரண்டே எழுத்துக்களிலேயே முடித்து விடுகிறார் கதை எழுதியவர். ஆறு பக்கமோ ஏழு பக்கமோ எழுதியிருக்கிறார். படித்தால்தானே தெரியும் உனக்கு. கார் நிறக் கூந்தல், கமலக் கண்கள், வில் போன்ற புருவம், இன்னம் எல்லா அழகும் என்று வைத்துக் கொள்ளேன், அவளைக் கலியாணம்செய்து கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன”
“சரி பழைய கதைதான், பெற்றோர்கள் ஒரு இடம் பார்த்திருப்பார்கள். இவளுக்கு வேறு ஒருவன் மீது காதல் இருக்கும், இதனாலே வீட்டிலே சண்டை பிறந்திருக்கும், அவள் அழுதிருப்பாள், அதுதானே”
“அவள் அழுதாள், சண்டை நடந்தது அதெல்லாம் கதையிலே உள்ளதுதான். ஆனால், அரண்மனையிலே சண்டை நடந்தது, நீ சொல்கிறபடி அல்ல. அதுதான், அந்தக் கதையை அற்புதமான கதை என்று நான் சொன்னேன். அதிசயத்தை, அவளுக்கு இஷ்டமான புருஷனைக் கலியாணம் செய்து கொள்ளும்படி வீட்டிலே வற்புறுத்தினார்கள், அவளோ, அது முடியாது, நீங்களாகப் பார்த்து யாரை நான் கலியாணம் செய்துகொள்வது என்று ஏற்பாடு செய்யுங்கள், நானாகத் தேடிக்கொள்வது முடியாது, முறையாகாது, எனக்குத் தெரியாது என்று சொன்னாள்”
“அடடே! இது அதிசயமாகத்தான் இருக்கிறதடி. என்ன என்ன இன்னொரு தடவை சொல்லு”
"உனக்கு யார் மீது இஷ்டமோ அவனைக் கலியாணம் செய்துகொள் என்று வீட்டிலே வற்புறுத்தினார்கள். அவள் நான் யாரைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டுமென்று நீங்களே ஏற்பாடு செய்யுங்கள். நானாக வரனைத் தேடிக்கொள்ள முடியாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டாள். வீட்டிலே வற்புறுத்த, அதிசயம் ஒரேயடியாகக், கூனானாலும், குருடனானாலும், முடவனானாலும், முட்டாளானாலும், நீங்கள் பார்த்து யாரைக் கலியாணம் செய்துகொள்ளச் சொல்கிறீர்களோ, அவனைத்தான் மணம் செய்து கொள்வேன் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள்.”
‘ஏண்டி! அவளுக்கென்ன பைத்தியமா?’
“அவளுக்குப் பைத்தியமில்லை, அவளுடைய தகப்பனாருக்குப் பைத்யம்! அந்தப் பைத்தியக்கார அரசர், சாவதற்கு முன்பு, மந்திரி சேனாதிபதி பொக்கிஷதார் ஆகிய மூவரையும் கூப்பிட்டு, ஒரு சாசனம் கொடுத்தார். அதிலே, என் மகள், நீங்கள் தெரிந்தெடுக்கும் ஒருவனைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும், என்பது என் விருப்பம். அப்படி அவள் நடந்துகொண்டால் தான் இந்த மண்டலத்துக்கு அவள் இராணியாக வேண்டும். இதற்கு மாறாக, அவள் இஷ்டப்படி யாரையேனும், அவள் கலியாணம் செய்துகொள்வதானால் இந்த இராஜ்யத்தை அவள் ஆட்சி செய்யும் உரிமையை இழந்து விடவேண்டும். நீங்கள் வேறு ஒருவரையோ, உங்களில் ஓருவரையோ ராஜ்யாதிகாரியாக்கிக் கொள்ளலாம் என்று நாம் உத்தரவிடுகிறோம் –—என்று குறித்திருந்தார்.” “சரியான பைத்யமடி; அந்த அரசன்”
“இல்லை, அவனும் ஒரு காரியப் பைத்யம்தான் மந்திரி, சேதினாபதி, பொக்கிஷதார், ஆகிய மூவரும், அயோக்யர்கள் என்பது, அரசனுக்குத் தெரியும். தனக்குப் பிறகு, தன் ஒரே மகள், அதிசயம், இந்த அயோக்யர்களின் சதியினால் சங்கடப்படவேண்டிவரும் என்று அஞ்சினான் அதிசயத்துக்கு யார் புருஷனாக வருகிறானோ, அவனைப்பற்றி அவதூறுகள் கிளப்பி, மக்களைத் தூண்டி விட்டுத் தொல்லை விளைவிப்பார்கள் என்று பயந்த மன்னன், அதிசயத்துக்குக் கணவனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடமே தந்துவிட்டால், பிறகு, அவர்களாகப் பார்த்து யாரை அதிசயத்துக்குப் புருஷனாக்குகிறார்களோ, அதே ஆள்மீது அவதூறு கிளப்பினால் ஜனங்கள், அந்த மூவரையே குறை கூறுவார்களே தவிர அதிசயத்தின்மீது ஆத்திரப்பட மாட்டார்கள் என்று யோசனை செய்து தான் மன்னன், சாசனம் எழுதினான்.”
“அது சரி! ஆனால், அதிசயம், தானாக ஒரு புருஷனைத் தெரிந்தெடுத்துக் கொள்ளவும் உரிமை இருந்ததே சாசனப்படி!”
“இருந்தது, ஆனால் நிபந்தனை இருந்ததே. தனக்கு இஷ்டமானவனைக் கலியாணம் செய்து கொள்வதனால், இராஜ்யத்தை விட்டுவிட வேண்டும் என்றல்லவா சாசனம் இருந்தது. அதனுடைய கருத்து என்னவென்றால், அப்படி அதிசயத்துக்கு யார் மீதாவது உண்மையான காதல் ஏற்படுமானால், அது யாராவது ஒரு வீரமுள்ள அரச குமாரனாகத் தானே இருப்பான், அவனுக்காக அதிசயம் ஒரு இராஜ்யத்தையே தியாகம் செய்தால் நஷ்டமில்லை! அவன் வீரத்தால், அவள் இழந்த இராஜ்யமும் மீண்டும் கிடைத்து விடும் என்று அரசன் நினைத்தான்.”
“அது எப்படியடி அவன் அப்படி நினைக்கலாம்? அந்த அதிசயம் என்ன, அரசகுமாரனையே தானா காதலிப்பாள்? அரசகுமாரி அரச குமாரனைத்தான் காதலிக்க வேண்டும் என்று விதியா? சட்டமா? காதலுக்குப் பிறகு வேலையே இல்லையே. சீச்சீ! கதை எனக்குப் பிடிக்கவில்லை”
“கேளடி மேலே! அதற்குள் உன்னுடைய மெடலைக் கொடுக்க மறுக்கிறாய். பெரும்பாலும் அந்த அரசன் எண்ணியபடி தானே நடக்கிறது. இராஜகுமாரி இராஜகுமாரனைத்தானே மணம் செய்துகொள்கிறாள். உன்வரையிலே பாரேன். என்ன நடக்கும்? நீ ஒரு ஜெமீன்தார் மகள், இன்னொரு ஜெமீன்தாரன் மகனைத்தானே நீ கலியாணம் செய்து கொள்வாய்?”
“அது தான் தப்பு! என்னை நீ சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. என்னைப்பற்றியும் உனக்குத் தெரியவில்லை, காதலைப்பற்றியும் உனக்குத் தெரியவில்லை”
“காதலிலே நீ கரை கண்டவள்! யாராவது ஒரு ஜெமீன்தாரன் மகனைக் கலியாணம் செய்துகொள்ளாமல், உங்கள் தோட்டக்காரன் மகனைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறாயா?”
“தோட்டக்காரன் மகன் தானா? ஏன், எனக்குக் காதல் ஏற்பட்டால், எங்கள் மந்தையிலே மாடு மேய்ப்பவனைக்கூட நான் கலியாணம் செய்து கொள்வேன்”
"ஓஹோ! சரி, சரி, நீ பெரிய காதல் சுவை அறிந்தவள், உன் கதையை நடக்கிறபோது பார்ப்போம், நடந்த கதையைக்கேள். என்னமோ அந்த பைத்தியக்காரன் அப்படி ஒரு ஏற்பாடு செய்து விட்டு இறந்தான். உடனே, மூவர் தானே அரண்மனைக்குப் பொறுப்பாளியானார்கள். அவர்கள், எப்படியாவது அதிசயத்தை அவள் இஷ்டப்படும் கலியாணம் செய்து கொள்ளும்படி செய்து விட்டு, ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று சதி செய்யத் தொடங்கினார்கள். காதலின் மேன்மையைப் பற்றிய கவிதைகளை யெல்லாம் கொடுத்தார்கள், படிக்க. காதல் ரசமுள்ள நாடகங்களை அரண்மனையிலே நடத்தச் செய்து அதிசயத்தைக் காணச் செய்தார்கள். காதலை விளக்கும் சித்திரங்களைத் தயாரித்து அரண்மனையிலே நிரப்பினார்கள். அவர்கள் தங்களாலானதை எல்லாம் செய்து பார்த்தார்கள், அதிசயத்தின் மனதிலே காதல் முளைக்க வேண்டும் என்று முடியவேயில்லை. அவள் ஒரே பிடிவாதமாக, எனக்கேற்ற கணவனை நீங்களே தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி விட்டாள். அவளுக்குச் சாசனத்தின் தகவல் தெரியும் என்பது, அந்த மூன்று முட்டாள்களுக்குத் தெரியாது. அரசகுமாரி! நேற்று நமது நந்தவனத்திலே இன்னிசை பாடிய இளையவனிடம் தங்களுக்கு இஷ்டமா? என்று கேட்பார் மந்திரியார். “ஆமாம், இசைவாணனிடம் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு” என்று கூறுவாள் அறிவுள்ள அதிசயம். மணம் செய்து கொள்ள......” என்று தந்திரமாக வலைவீசும் பேச்சை ஆரம்பிப்பார் மந்திரியார். “தங்கள் உத்தரவு அதுவானால் தடையில்லை” தயக்கமின்றிக் கூறுவாள் அதிசயம்.
“எங்கள் உயிரை வாங்க வேண்டாம். எங்களுக்கு தெரியுமா இதெல்லாம்? சரியான வேலை தருகிறீர்கள், ஆள் தேடும் வேலை” என்று கோபிப்பார்கள் மூவரும் சில சமயம்.
“தேடித் திரிவானேன், ஓலை அனுப்பிப் பல தேசத்து மன்னர்களையும் வரவழைத்து விடுங்கள்” என்று யோசனை கூறுவாள் அதிசயம். அகப்பட்டுக்கொண்டாள் அரசகுமாரி என்று நினைத்து மந்திரியார், “ஆஹா அது செய்கிறோம். சகல மன்னரையும் தருவிக்கிறோம். அவர்களிலே யாருக்கு... என்று சுயம்வர இலட்சணத்தை மனதிலே புகுத்துவார். உங்கள் தந்திரம் என்னிடம் பலிக்காது என்று கூறுவது போல ஒரு தடவை புன் சிரிப்புடன் இருந்து விட்டு, உடனே, “யாருக்குத் தாங்கள் மாலையிடச் சொல்கிறீர்களோ, அவரை நான் மணம் செய்து கொள்வேன்” என்று கூறுவாள் அதிசயம். “அதற்கு ஒரு மந்தையை ஓட்டிக்கொண்டு வருவானேன்” என்று கோபிப்பார் சேனாபதி ஒரே இடத்திலே இருந்தபடி சிரமமில்லாமல் எனக்கு ஏற்றவன் யார் என்று நீங்கள் தேர்ந்தெடுக்கலாமல்லவா? என்று சாமர்த்தியமாகப் பதில் கூறுவாள் அதிசயம்"
“அது கிடக்கட்டும், அவளுக்கு உண்மையிலேயே யாரிடமும் காதல் ஏற்படவேயில்லையா?”
“நல்ல கேள்வி கேட்டு விட்டாய் போடி! எந்தப் பெண்ணுக்குத்தான் காதல் உண்டாகாது? எல்லோருக்கும் உண்டாகித்தான் தீரும். ஆனால் எத்தனை பெண்கள் தாங்கள் கொண்டுள்ள காதலை வெளியே சொல்லமுடியும்? சொல்லித்தான் என்ன பிரயோஜனம்? அவர்கள் இஷ்டப்படியா நடக்கும்? சேலைக்கும் நகைக்குமே இன்னமும், பெரியவர்கள் இஷ்டம் சட்டமாக இருக்கிறது. காதல் விஷயத்திலே, என்னடி செய்யமுடியும் பெண்கள்? கதைப் புத்தகம் படிக்கலாம்.”
“ஓஹோ, அதுதான் நீ கதை படித்துத் திருப்தி அடைந்து வருகிறாயோ?”
“போதுமடி சிரிப்பு, நான் கதை படித்துத் திருப்தி அடைவது இருக்கட்டும், நீ அதைக் கேட்டே திருப்தி அடைகிறாயல்லவா!”
“சரி, சரி, வாயாடாதே, கதையை முடி!!”
“எப்படியாவது கலியாணத்தை முடித்தாக வேண்டும் என்று துடித்தனர் மூவரும். இந்தச் சமயத்திலே, நீ கேட்டாயே, அதிசயத்திற்கு யார் மீதும் உண்மையான காதல் உண்டாகவில்லையா என்று அது ஏற்பட்டது. ஒரு சுந்தரமான புருஷன், அடுத்த இராஜ்யத்து இளவரசன், அவன் ஒரு நாள் அதிசயத்தைக் கண்டான்.”
“பஞ்சபாணம் பாய்ந்தது......”
“இல்லை! ஒரே ஒரு பாணம் பாய்ந்தது அதிசயத்தின் மீதல்ல, அவள் வளர்த்து வந்த மான் மீது, அரசகுமாரன் விட்ட பாணமல்ல, அவனைத் திருடன் என்று சந்தேகித்து அதிசயத்தின் பாதுகாப்புக்காகப் பூங்காவனத்திலே உலவி வந்த காவலாளி விட்டபாணம்.“
“அவன் என்ன, காவலாளி கண்டு திருடன் என்று நினைக்கும்படி அவ்வளவு கேவலமான உருவமுடையவனா?”
“நான் தான் முதலிலேயே சொன்னேனே, சுந்தரமான புருஷன் என்று, அங்கே அவன் மாறுவேடத்திலே வந்திருந்தான்”
“அப்படிச் சொல்லு.”
“மான் மீது பாணம் பாய்ந்தது. அரசகுமாரி அழுதாள். தான் விட்ட கணை தவறி மான் மீது பட்டது தெரிந்தால் உயிருக்கு உலை வருமென்று பயந்து காவலாளி ஓடிவிட்டான். மாறுவேடத்திலிருந்த மன்னன் மகன் அவளருகே சென்று தேறுதல் கூறிப், பாணத்தை மெள்ள எடுத்து விட்டுப் பச்சிலை பூசி,மானுக்குச் சிகிச்சை செய்து கொண்டே, தேனைக் கலந்து பேசத் தொடங்கினான்.”
“போதுமய்யா உமது பேச்சு! என் நந்தவனத்திலே நுழைந்ததுமன்றி. என் மானையுங் கொல்லப் பார்த்தீர்” என்று கோபத்தோடு பேசினாள் அதிசயம்.
“கணை விட்டது நான் அல்ல கையிலே வில் இல்லை, முதுகிலே அம்புறாத் துணியுமில்லை, பாருங்கள்” என்று விநாயகப் பதில் கூறினான் அரச குமாரன். அவள் பார்த்தாள்! வில்லும் அம்பும் இல்லை, ஆனால் அவளை வெல்லும் புன்னகையும் கண்களிலே காதல் ஒளியும் கண்டாள் மனதிலோர்வித இன்பம் புகக் கண்டாள், மானைத் தடவியபடி மௌனமாகக் குனிந்து நின்றாள். மானைத் தடவிக் கொடுத்த இருவரின் கரங்களும் சந்தித்தன, இருவரின் விழிகளும் உடனே சந்தித்தன. ஒருவரின் விழி மற்றவரின் இருதயத்தைத் தடவிப் பார்க்கத் தொடங்கின. காதல் பிறந்தது. அவளுக்குக் கவலையும் பிறந்தது. இளைஞனை மணந்தால் ராஜ்யத்தை இழக்க வேண்டும் என்ற கவலை இல்லாமற்போகுமா? “நீர் யார்? என்று கேட்டாள் ராஜகுமாரி, நானா? நான் ஓர் பாக்யசாலி !” என்றான் அரசகுமாரன். “ஊர்?” என்று கேட்டாள் அவள். பிறந்த இடம் வீணாபுரி, இப்போது இருக்குமிடம் "இன்பபுரி” என்றான் அவன். "கவியோ?" என்று அரசகுமாரி கேட்டாள். அவனுடைய பேச்சின் நடையழகைப் புகழ்ந்து. “கால்கள் இரண்டே காணாய்” என்று அவன் தன் புலமையையும் நகைச்சுவையையும் காட்டும் முறையிலே பதில் கூறினான்.”
“எனக்கு விளங்கவில்லையே !”
“கவி, என்றால் குரங்கு என்றும் ஒரு அர்த்தம் உண்டு அவள் அவனை நீர் கவியா என்று கேட்டதும் அவன் எனக்கு இரண்டே கால்கள், நான் குரங்கல்ல என்று கூறினான்.”
“அந்தக் கோணல் பேச்சுப் பேசுவானேன் அவன். ஆளுக்கு குரங்கு புத்தி போலிருக்கிறது.”
“புத்தி சரியாகத்தானடி இருந்தது. பேச்சு குளறுமல்லவா, சம்பந்தா சம்பந்தமின்றித் தானே இந்த ஆண்கள் திடீரென ஒரு பெண்ணைக் கண்டால் பேசுவது,வழக்கம்”
“உண்மையான பேச்சு! பார்வை, பேச்சு, எது சரியாக இருக்கிறது, பெண்ணைக் காணும் ஆணுக்கு, சரி. கதையைச் சொல்லு.”
“இருவருக்கும் நெடு நேரம் பேச்சு நடந்தது, காதல் ஒப்பந்தம் ஆகி விட்டது”
“என்ன? அவனைக் கலியாணம் செய்துகொள்வது என்றா?”
“ஆமாம்! அவள் அந்தத் தீர்மானத்திற்கு வந்தான்.அவனோ, மகிழ்ந்தான். ஆனால் ஒரு யோசனை கூறினான். நமது காதல் இரகசியமாகவே இருக்கட்டும்.மூன்று முண்டங்களையும் சரியானபடி அவமானப்படுத்த வேண்டும். நான் முதலிலே, நல்ல படை திரட்டி வைத்து விடுகிறேன், உங்கள் இராஜ்யத்து எல்லையில், சாசனத்தின்படி சரியான புருஷனைத் தெரிந்தெடுக்கும்படி அவர்களை நீ வற்புறுத்தியபடி இரு. கடைசியில் யாரையாவது அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து உன் தலையிலே கட்டப் பார்ப்பார்கள். அவன் எப்படிப்பட்டவனானாலும், சம்மதித்து விடு. கலியாண ஏற்பாடுகளும் நடக்கட்டும், அந்தப் பந்தலிலேயே, மூவரையும் அவமானப்படுத்தி, நான் உன்னைக் கலியாணம் செய்துகொள்கிறேன் என்று அரசகுமாரன் கூறினான். அவர்களின் காதல் ஒப்பந்தத்தை முத்தங்களால் பொறித்துக் கொண்டனர்.
கோபமும் சலிப்பும் கொண்ட மூன்று சதிகாரரும், யாராவது தலையாட்டியைப் பிடித்து அதிசயத்துக்குக் கலியாணம் செய்துவிட்டு அவனை ஆயுதமாகக் கொண்டு அதிகாரத்தைத் தங்கள் கையிலே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டுக்குத் துணிந்து விட்டனர். அதற்காக ஒரு தலையாட்டியைத் தயார் செயது பழக்கியும் விட்டனர்.அவன் ஒரு சாதாரணப் போர்வீரன். முதலிலே பயந்தான், பிறகு ஆசை அவனைப் பிடித்துக் கொண்டது. சதிகாரரின் யோசனைக்கு இணங்கினான். அதிசயம் அவனை மணாளனாக ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தாள். கலியாண நாள் குறிக்கப்பட்டது. அதிசயம் தான் காதலித்த இளவரசனுக்கு ஓலை அனுப்பினாள். ஆபத்து நெருங்குகிறது, அடியாளைக் காப்பாற்றவாரும், எனக்கு இராஜ்யம் வேண்டாம், தங்களுடன் வாழும் ரசமான வாழ்க்கைதான் வேண்டும். எதையாவது எண்ணிக் கொண்டு, கடைசி நேரத்திலே, தாங்கள் கலியாணப் பந்தலுக்கு வராமலிருந்துவிட்டால் என் கதி என்னாகும்? யாரோ ஒரு வழிப்போக்கன், வஞ்சகன், அயோக்கியன் என்னைத் தொட நான் சம்மதியேன். மணப்பந்தல் பிணப் பந்தலாகும். மன்னா! மறவாதே! குரங்குக்குப் பூமாலையா? என்று எழுதியிருந்தாள். கலியாணத்திற்கு நாலு நாட்கள் இருக்கையிலே, மாப்பிள்ளையை மன்னன் மகன் இரகசியமாகச் சந்தித்து காதலின் மேலான தன்மையை விளக்கினான். அரசகுமாரியின் ஓலையைக் காட்டினான், தனது. படை பலத்தையும் உறுதியையும் எடுத்துக் கூறினான். எந்தக் காரணம் கொண்டும் அந்தக் கலியாணம் நடைபெறாது என்பதை அவன் மனதிலே பதியும்படி செய்து, தன்னுடைய ஏற்பாட்டுக்கு அவன் இணங்கினால், பரிசு தருவதாக வாக்களித்தான். போர்வீரன், காதலின் புனிதத் தன்மையையும், அரசகுமாரனின் போர்த்திறனையும் உணர்ந்துகொண்டு, அரசகுமாரனுக்கு உதவுவதாகச் சம்மதித்தான். எதுவும் நடைபெறாதது போலவே நடந்துகொள். மணப்பந்தலுக்கு நான் வருவேன், உன்னுடைய தோழனாக இருப்பேன், நான் எது சொன்னாலும் “ஆமாம்” என்று சொல், எது செய்தாலும் “சரி” என்று கூறு. உனக்கு ஒரு ஆபத்தும் வராதபடி நான் பார்த்துக் கொள்ளுகிறேன் என்று கூறினான். இருவரும் நண்பராயினர். சதிகாரருக்கு இது தெரியாது.
கலியாணம் ஆடம்பரமாக ஆரம்பமாயிற்று. புரோகிதன் உரத்த குரலிலே சுபவேளையிலே மந்திரங்களைக் கூறத் தொடங்கினான். மணப்பெண் நெருப்பின்மீது நடப்பவள் போல நடந்துவந்து சேர்ந்தாள். மாப்பிள்ளை கெம்பீரமாக அமர்ந்திருந்தான். தங்களின் சமர்த்தை தாமே புகழ்ந்து கொண்டு மூவரும் முடிதரித்த மன்னர் போல் உட்கார்ந்தனர். மாப்பிள்ளைத் தோழனாகத் தன் காதலன் இருக்கக் கண்டதும், அரசகுமாரிக்குத் தைரியம் பிறந்தது.
“முகூர்த்த வேளை நெருங்குகிறது, நடக்கட்டுமே” என்றார் மந்திரியார். மாப்பிள்ளைத் தோழனாக மாறுவேடம் பூண்டிருந்த அரசகுமாரன். “அரசே! இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்த இந்த மூன்று உத்தமர்களுக்கும் பரிசுகள் வழங்கிய பிறகே, மாலைசூட்டப் போவதாகச் சொன்னீர்களே” என்று மணக்கோலத்திலிருந்தவனை நோக்கிக் கேட்டான். முன் ஏற்பாட்டின்படியே அவன், “ஆமாம்”! என்றான். மூவரும் திகைத்தனர். “பரிசுகளைத் தரவோ?” என்று கேட்டான் இளவரசன். “ஆமாம்” என்றான் மாப்பிள்ளை. இளவரசன் தன் ஆட்களை அழைத்து ஏதோ கொண்டுவரச் சொன்னான். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மூன்று கழுதைகளைக் கொண்டுவந்து வேலையாட்கள் நிறுத்தினர். மூவருக்கும் அடக்கமுடியாத கோபம் பிறந்தது. மணவினைக்கு வந்திருந்தவர்களும், இதென்ன விந்தை என்று கூறினர். “அரசே! இந்தப் பரிசுப் பரிகளின் மீது இவர்களை ஏற்ற வேண்டியது தானே” என்று கேட்டான் இளவரசன், “ஆமாம்!” என்றான் தோழன். அரசகுமாரி சிரித்தாள், மக்கள் ஆத்திரமடைந்தனர், இதற்குள் ஊருக்குள்ளே, சிறு சிறு பிரிவாக வந்து சேர்ந்த இளவரசனின் படை, ஆத்திரமடைந்த மக்களை அடக்கத் தொடங்கிற்று. கழுதை மேல் பலாத்காரமாக மூவரையும் தூக்கிவைத்துக் கட்டச் செய்தான் இளவரசன். கலியாணப் பந்தலில் ஒரே குழப்பமாகிவிட்டது. சன்மானம் கிடைக்காமற் போகிறதே என்று புரோகிதர் புலம்பினார். உடனே மாறுவேடத்தைக் கலைத்துவிட்டு, நின்றான் இளவரசன். அவன் மீது சாய்ந்து கொண்டு புன்னகை புரிந்தாள் அதிசயம். பிறகு மக்களிடம், சாசனத்தின் முழு விவரத்தையும், சதிபுரிந்த மூவர் செயலையும் கூறினாள். மக்களின் கோபம் சதிகாரர் மீதுபாய்ந்தது. ஒருபுறம் கலியாண ஊர்வலம் நடந்து கொண்டிருக்கையில் மற்றோர்புறம் கழுதைமீது ஏறிய கனவான்களின் ஊர்வலம் நடந்தது. இராஜ ஊர்வலத்திலே கூட்டம் குறைவுதான்! இளவரசன் தனக்கு உதவிபுரிந்த நடிப்பு மாப்பிள்ளைக்கு நல்ல பரிசுகள் தந்தான். அதிசயராணியும் அவளை மணம் புரிந்துகொண்ட அழகேச மன்னனும் அனேக ஆண்டுகள் நீதிநெறி வழுவாமல் அரசாண்டு வந்தனர். அவ்வளவுதான் கதை. ஆனால் அதிலே உள்ள காதலைப் பற்றிய வர்ணனைகளைப் படித்தால் பெண்களுக்குப் பைத்தியம் பிடித்துவிடும்.”
“அதென்னடி அம்மா, பெண்களுக்குத்தானா அவ்வளவு சபலபுத்தி. அவர்கள் தானா காதல் விஷயமாகப் படித்தால் பைத்தியமாவார்கள். ஆண்கள் படித்தால் மட்டும் பைத்தியம் பிடிக்காதா ?
“ஆண்களுக்குப் பரிந்து பேசுவதாகவா நீ நினைத்துக் கொண்டாய்? போடி அசடே! பெண்களுக்குக் காதலைப் படித்தால் பித்தம் பிறக்கும். ஆண்கள் அதுபோலப் படிக்கவே தேவையில்லை அவர்களுக்குத் தான் பெண்ணைக் கண்டாலே பித்தம் தானாகப் பிறந்து விடுகிறதே”
“அப்படிச் சொல்லு! அற்புதமான கதைதாண்டி, நான் கூடப் படிக்க வேண்டும். மனதுக்கு இசைந்தவன் மாடு மேய்ப்பவனாக இருந்தாலும் அவனோடு வாழ்வதுதான் இன்பம்”
✽✽✽
அமிர்தம், அன்று சொன்ன கதை. கிரேக்க ஆசிரியர் எவரும் எழுதியதல்ல! யோகானந்தரின் மொழி பெயர்ப்புமல்ல. அவளுடைய கற்பனை! இந்த அற்புதமான கதையைக் கேட்ட போது முளைத்தது கிருஷ்ணனுக்கு பித்தம், கிருஷ்ணன் கதை பேசிக்கொண்டிருந்த கன்னியர் போலவே, கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்தவன்தான். கடலோரத்திலே வழக்கப்படி மாலை வேளையிலே உலவச்சென்று இந்த உல்லாசிகளின் கதையைக் கேட்டான். கதையின் போக்கை விட, லீலாவின் காதல் விளக்கம் அவனுக்கு மிக மிகப் பிடித்தது. மந்தையிலே மாடு மேய்ப்பவனானாலும்! ஆஹா! எவ்வளவு உயர்தரமான உத்தமமான, தெய்வீகக் காதல் இது என்று எண்ணி எண்ணிப் பூரித்தான். மாடு மேய்த்துத்தான் இப்படிப்பட்ட மங்கையைப் பெற முடியும் என்றாலும் சரி, இவளுடைய காதலையே பெறுவது என்று தீர்மானித்தான் அவனுக்கு அடுத்தநாள் முதல், ஸ்நோவும், பவுடரும், செண்டும், சிகரெட்டும், தையற் கூலியும், வாஷிங் கம்பெனிப் பாக்கியும், செலூன் செலவும் அதிகரித்து விட்டது காதல், காதல், காதல் பிறந்திடில் காசுபோதல் என்றாகி விட்டது. கிருஷ்ணன் F. A. வின் நிலைமை.
பர்மாவிலே வியாபாரம் செய்யச் சென்ற அவன் தகப்பனாரின் கதியோ, படுமோசமாகிவிட்டது. பெருத்த நஷ்டம், ஊர் திரும்பினார், பட்டை விபூதியும், பழிதீர்த்த ஈசுவரர் கோயில் படிக்கட்டுமே கதி என்று கிருஷ்ணனின் கல்லூரிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அந்தப் படிப்பு இடையிலே பட்டுப்போனதே யொழிய காதல் படிப்பு துளிர்விட்டபடியே இருந்தது. காதற்கதைகளை ஆசிரியராகக் கொண்டான். தோட்டக்காரியை மணந்துகொண்ட மன்னன் கதை, குதிரைக்காரனை மணந்துகொண்ட ராஜகுமாரி சரித்திரம் முதலியவைகளைப் படித்தான் பரிட்சைக்குத் தயாராக! ஓரு கதாசிரியர் எழுதினார். “பார்த்தவுடனே ஒரு மங்கையின் மனதிலே உன்னைப் பற்றி மதிப்புப் பிறக்க வேண்டுமானால் உடை, உடை, உடை அதுதான் முக்கியம். தம்பி நீ தரித்திரத்திலே புரண்டாலும், எந்த மங்கையிடம் வெற்றி பெற விரும்புகிறாயோ.அவள் காணும்போது, உன் உடை உயர்தரமானதாக நாகரீகமாக. கூடுமானால் ஆடம்பரமாக இருக்கவேண்டும்” என்று புத்தி கூறினார். ஏழ்மைக்கும் விலை உயர்ந்த உடைக்கும் பொருத்தமிராதே, என்பது பற்றிய கவலையை அந்த ஆசிரியர், வாசகருக்கே விட்டுவிட்டார். ஏழையாக இருந்தாலும் ஆடம்பர உடையைப்பெறும் விதம் என்ன என்பது பற்றியும் அவர் எழுதவில்லை! வேறோர் ஆசிரியர், “படாடோபமாக உடை அணிந்தவர்களைக் கண்டாலே பாவையர் விரும்ப மாட்டார்கள்” என்று எழுதி விட்டார்”. மற்றொருவர், ‘பணிவு! பணிவு! அந்தப் பூஷணம் உங்களிடம் உண்டா என்றுதான் பெண் இனம் கேட்கிறது. அவர்களைக் காணும்போதே ஒரு பணிவு, ஒப்புக்காவது, பாவனைக்காவது, உங்களுக்கு இருக்க வேண்டும். பேச்சிலே, செயலிலே, நடை உடை பாவனையிலே பணிவு காட்டினால், இணங்காத பெண் இகபரம் இரண்டிலுமில்லை” என்று தீட்டிவிட்டார். "காதலிலே வெற்றிதானே வேண்டும்! இதோ அதற்கு மார்க்கம்” என்ற பீடிகையுடன் துவக்கினார் இன்னுமொருவர், கிருஷ்ணன் அதைப் படித்து மனதைக் குழப்பிக்கொண்டான். எருமை மிதித்த சேறுபோலாகிவிட்டது அவன் மனம். “பகலவனைக்கண்டு பங்கஜம் மலரும், அவளை மகிழ்விக்க அருகே இரு. எப்போதும் இரு. பிறகு அவள் உனக்குச் சொந்தம், இது அயன் விதி” என்றார் மற்றோர் மேதாவி, இது மிகப் பிடித்தமாக இருந்தது கிருஷ்ணனுக்கு. இவைகளை எல்லாம்விட, கிருஷ்ணனைச்செயலிலே இறங்க வைத்தது, வேறோர் விற்பன்னரின் ஏடு. அவர் தீர்மானமாகச் சொன்னார் தமது கைகண்ட முறையை. “ இது கைகண்ட முறை, காலம்கண்ட முறை கவி கண்டமுறை, கடவுள் கண்டமுறை” என்று ஆரம்பமாயிற்று அவருடைய நூல்.
“காதலில் வெற்றி! வெற்றியில் காதல்! கேளப்பா, கேள். பசு, பாம்பு, பாலர், புலி முதலியவற்றை அடக்கக் கூடிய வித்தையைக் கூறுகிறேன் கேள். பெண்ணின் பிரேமையைப் பெற வழியென்ன என்று கூறுவதை விட்டு, உம்மை யாரய்யா, புலியையும் பாம்பையும், அடக்கும் வழியைக் கூறச்சொன்னது என்று. கேட்கிறாயா? கேட்பாய்! எனக்குத் தெரியும் நீ கேட்பாய் என்று. அட பைத்தியக்காரா! புலியையே, பாம்பையே குத்த வரும் காளையையே, மயக்கி அடக்க நான் மார்க்கம் கூறினால், துடியிடையும், பெடைநடையும், குளிர்மனமும் கூத்தாடும் கண்களும் கொண்ட பெண்களையா அந்த முறையினால் மயக்க முடியாது! யோசித்துப் பார்! இரும்பைப் பிழிய வழி சொல்லுகிறேன், கரும்பைப் பிழிய முடியுமோ இதனால் என்று கேள்வி கேட்பாயோ? புரிந்ததா, இனிக் கேள் முறையை. பாம்பும் புலியும், பசுவும் பாலரும், கொலையாளியும் மத யானையும், இசையினால் கட்டுப்பட்டு விடும், அடங்கிவிடும், அடிபணியும், அன்பு காட்டும்; இலக்கியங்கள் சான்று பகரும், வரலாறுகளைப்படி, இன்றும் காணலாம், இசையில் இனிமையால் காதலிலே வெற்றி கண்டவர்களை, இசையைப் பயின்றாய் இன்பவல்லியை வென்றாய் என்று உலகு கூறும். இசைவாணனாகிவிடு. அம்முறையிலும் சிறந்தது குழல்! யாழ் அதைவிடச் சிறந்தது. சற்று சிரமம், குழலைக் கையிலே எடு, கருங்குழலியரைக் காணிக்கை பெறு என்று கூறுவேன். கண்ணன் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். என் அப்பன் சாமள வர்ணன் அந்தக் குழலின் உதவியினால், கோகுல மணிகளை, கோபிகா ரத்தினங்களை, மயக்கி மகிழ்வித்து, மகிழ்ந்து, நம்மையும் மகிழ்விக்கிறானன்றோ ! குழல் இல்லையேல், கோபிகா ஸ்திரீகளுடன் கண்ணனின் காதற்களியாட்டங்கள் இல்லை. அந்த ஆட்டம் இல்லையேல், கண்ணன் இல்லை, கண்ணன் இல்லையேல் கீதை யில்லை, கீதையில்லையேல் நமது மதம் இல்லை, நமது மதம் இல்லையேல், நாம் இல்லை!” என்று முடித்தார் அந்த மூதறிஞர். கிருஷ்ணன் செயலில் இறங்கினான், குழலை எடுத்தான், பலருடைய செவிகளுக்குக் குடச்சல் நோயைத் தந்தான். ஜெமீன்தார் வீட்டுப்பெண்ணை வீழ்த்த வேண்டுமென்ற விரதத்தைக் கொண்டான், சரிகம பதனியை ஓய்வின்றி ஊதினான், வர்ணம், கீர்த்தனம் எனும் கட்டங்களை விரைவாகத் தாண்டினான், நாதம் ஜிலு ஜிலுப்பாக இருக்கிறதென்பதற்காக கச்சேரி சான்சு வரத் தொடங்கிற்று. சில பஜனைக்கோயில்களில், போயிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய கடலை தேங்காய்மூடி கழுத்துப் பூச்சரம் ஆகியவற்றைத் தியாகம் செய்தான். குழலில் போதுமான பயிற்சி கிடைத்தது என்று தைரியம் பிறந்ததும் ஜெமீன் வீட்டு மந்தை மன்னனானான், மாடுகளை மயக்கப் பழக்கினான், மாதும் மயங்கினதாகத்தான் கருதினான்.
கிருஷ்ணனின் குழல் லீலாவுக்குக் களிப்பூட்டிற்று காதலை ஊட்டவில்லை, கல்லூரிப் படிப்பை முடித்தானதும், லீலா தனது காதல் நினைவுகளைத் தூக்கி எறிந்தாள். சாயம்போன சேலையைப் பழய பிரேமைக்காக எந்தப் பெண் அணிந்து கொள்வாள்.
இன்று கேட்போம், நாளை கேட்போம், என்று ஏங்கிக் கிடந்த கிருஷ்ணனிடம் ஒரு நாள், லீலா வலியவந்து பேசலானாள்.
“குழல் வாசிப்பு மிக அருமையாக இருக்கிறது” என்றாள் லீலா, உன் குரலின் இனிமையைவிடவா, என்று பேசவேண்டும் காதல் விளக்க நூலின் படி. ஆனால் அவன் எண்ணத்தை எடுத்துரைக்க நாவிற்கு துணிவில்லை.
“இது என்ன பிரமாதம்!” என்று கூறினான். “நான் ஒவ்வொருநாளும் அந்த வேலிப்பக்கம் நின்று கேட்டுக் களிப்பது வழக்கம்‘’ என்று லீலா கூறினாள். ”நீதானே, என் நாதத்துக்கே ஜீவன்! என் தீபத்தின் திரியே! வாழ்க்கையின் வழியே! இன்பத்தின் இருப்பிடமே! இருதய பீடத்தின் தேவியே! என்று அர்ச்சிக்கும்படி அவனுடைய ஆசிரியர்கள் — காதல் விளக்க ஏடுகள் — தூண்டின, பயனின்றி.
“தங்கள் குழலின் சக்தியை நான் பரீட்சிக்க விரும்புகிறேன்‘’ என்று லீலா சொல்லிவிட்டு, அவனுடைய பேச்சுக்கு எதிர்பார்த்து நின்றாள். சில விநாடி அவன் பேசவே இல்லை. ”இனிமேலா பரீட்சிக்க வேண்டும் என் குழலின் சக்தியை. ஜெமீன் இதோ, என் காலடியிலே கிடக்கிறதே, குழலின் “சக்திக்குப் பரிட்சை இனியுமா?” என்று எண்ணினான், பூரித்தான்.
“அடுத்த ஊரிலே” என்று ஆரம்பித்தாள் லீலா.
“என்னை விட அழகாகக் குழல் வாசிப்பவர் இருக்கிறாரா?” என்று பயந்து கேட்டான் கிருஷ்ணன்.
“இல்லை! உங்களுடைய கானத்துக்கு ஈடு எங்கிருக்க முடியும் ? நான் உண்மையைச் சொல்லுகிறேன், நீங்கள் மந்தையிலே மாடு மேய்ப்பவராக மாறுவேடத்திலே இருக்கிறீர், மதுசூதனரின் மறு அவதாரம் நீர் ” என்றாள். லீலாவின் கரத்திற்குப் பதில் குழல் ! அவளுடைய அதரத்திற்குப் பதிலாகக் குழலைத் தன் உதட்டிலே பொருத்தினான், கண்ணே, மணியே, காதல் கொண்டேன் என்று கூறுவதற்குப் பதிலாகக் குழலிலே சாரிபமகரிச நிதனிசாச என்று ஆரம்பித்தான்.
“கொஞ்சம் இதைக் கேளுங்கள் ” என்று கூறி ஆரம்பத்திலேயே கானத்தைக் கொலை செய்து விட்டாள் லீலா .
“அடுத்த ஊரிலே அமிர்தம் என்று ஒரு தாசி இருக்கிறாள், கொஞ்சம் படித்தவள். பெரிய கர்வம் பிடித்தவள். சங்கீதத்திலே மகா புலியாம் அவள்.எந்த வித்வானையும் மதிப்பதில்லையாம், அதிலும் குழல் வாசிப்பவர்களைக் கேவலப்படுத்துகிறாளாம். இவ்வளவு இனிமையான குழல் வித்வானான நீர் எப்படியாவது அவளுடைய கர்வத்தை அடக்கவேண்டும். தங்கள் வித்தையின் திறமைக்கு இது ஒரு பிரமாதமான காரியமல்ல. எப்படியாவது அவளை மயக்கி, அவள் வீட்டிலே தங்கிவிடவேண்டும். “அவள் தங்களிடம் காதல் கொண்டு கதறவேண்டும். அந்த வெற்றியை எனக்குக் கடிதமூலம் தெரிவிக்கவேண்டும். தங்கள் செலவுக்கு இந்தத் தொகை, நாழியாகிறது, நான் வருகிறேன். ஜெயத்தோடு திரும்பவேண்டும், யோசிக்க வேண்டாம்” என்று கூறி, ஒரு பணமுடிப்பைக் கிருஷ்ணனிடம் தந்துவிட்டு கடைக் கண்ணால் அவனைச் சித்திரவதை செய்து விட்டுச் சென்றாள் அந்த சிங்காரி, மறுக்கவோ நேரமில்லை, மனமுமில்லை. “உன்னைப் பலரும் புகழக் கேட்டால் அவள் மனம் - அதாவது நீ காதலிலே வெல்ல வேண்டுமென்று நினைக்கிறாயே அவளுடைய மனம்—உன்னிடம் வற்றாத, மாறாத காதலைச் சொரியும்” என்று அவன் படித்திருக்கிறான். எனவே தாசி அமிர்தத்தை வெற்றி கொள்ளச் சென்றான். ஜெமீன் வீட்டு லீலாவே. காதலால் தாக்குண்டபோது, இவள் எம்மாத்திரம் என்ற துணிவு பிறந்தது.
✽✽✽
பாரிஸ்டர் நவநீதகிருஷ்ணனின் பிரேமாவதியாக இருந்த அமிர்தம் சங்கீதத்தில் பிரியம் கொண்டவள், வித்வான்களிடம் விசுவாசம் காட்டுபவள், பழய உருப்படிகள், புதிய மெட்டுகள், அபூர்வ இராகங்கள் ஆகியவற்றைக் கேட்டு ரசிப்பது, பாடங் கேட்பது, பாரிஸ்டர் பாதித் தூக்கத்திலே இருக்கும்போது, மஞ்சத்திலே படுத்தபடி மெல்லிய குரலிலே பாடி இன்புறுவது. கச்சேரிகளுக்குப் போகக் கூடாது என்பது பாரிஸ்டரின் கடுமையான உத்திரவு. ரிஜிஸ்டர் கலியாணம் செய்து கொள்ளப் போவதாக அவர் வாக்களித்திருந்தார். புதிதாக ஒரு வித்வான் வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அமிர்தம், அவருடைய கச்சேரியைக் கேட்க ஆவலானாள். ஊரிலே, வேறு யாரும் கச்சேரி ஏற்பாடு செய்யாமற்போகவே, பஜனைக் கோயில் நிர்வாகிக்குக் கொஞ்சம் பணம் கொடுத்தாள், கச்சேரி நடந்தது. கேட்டு ரசித்தாள். முடிவில் வித்வானைக் கும்பிட்டு, வீட்டிற்கு அழைத்தாள். அன்று கிருஷ்ணன் சில பழைய உருப்படிகளை வாசித்திருந்தான். கிரஹப் பிரவேசமானதும், கிருஷ்ணன், தன் வித்தையின் திறமையை விளக்குவதிலே கண்ணுங் கருத்துமாக இருந்தான், சில கீர்த்தனங்களைப் பாடம் செய்துகொள்ள விரும்பினாள் அமிர்தம். குழல் இருந்தது, குரல் கிடையாது கிருஷ்ணனுக்கு. எனவே குழலிலே வாசித்துக் காட்டி அமிர்தம் குரலிலே அதைப் பொருத்திப் பாடிக் காட்டி உருப்படி பாடமாவது சிரமமாகவுமிருந்தது, நாளும் பிடித்தது. பாரிஸ்டருக்கும் கோபம் வளர ஆரம்பித்தது.
“இது யார் அமிர்தா, ஒரு கிராக்! அவன் குழலும் குரலும் மகா வேதனையாக இருக்கே. என்ன, இங்கேயே அவன் குடியேறிவிட்டானா? பாதி ராத்திரியிலே எழுந்து உட்கார்ந்து கொண்டு ஊத ஆரம்பித்து விடுகிறானே. உனக்கு இதெல்லாம் வேடிக்கையாக இருக்கா” என்று ஆரம்பித்தவர் நாளாகவாகச் சுருதியை உயர்த்தினார். இரண்டோர்நாள் அமிர்தத்தின் முதுகிலே பாரிஸ்டர் தாள வரிசையும் பழகினார்!
“அனாவசியமாக வம்பு செய்கிறார். வீணாக சந்தேகம் வைத்துக்கொள்கிறார். வேதனையாக இருக்கிறது” என்று கஷ்டப்பட்டாள் அமிர்தம். சங்கீதத்தின் விளைவாகச் சச்சரவு நடைபெற்றது.
“ஆமாம்! அந்த ஆள் இங்கேதான் இருப்பான், அதை நீங்கள் தடை செய்யக் கூடாது” என்று ஒரு நாள் அமிர்தம் துணிந்து கூறினாள், பாரிஸ்டரின் சுபாவத்தைத் தெரிந்துகொள்ளாமல், பாரிஸ்டர் நவநீத கிருஷ்ணன் கோபமாகப் போய் விட்டார்.
★★★
பாரிஸ்டர் நவநீத கிருஷ்ணன், லீலாவின் மாமன், சித்ரபுரிச் சீமான் சிவந்தபாதத்திற்கு இரண்டு மக்கள். ஒருவர் நவநீதகிருஷ்ணன், மற்றொன்று கற்பகம். கற்பகத்தின் ஒரே மகள் தான் லீலா. அமிர்தத்தைக் கண்டு சொக்கிய பாரிஸ்டர், லீலாவைக் கலியாணம் செய்து கொள்ளும்படி தன் தமக்கை கற்பகம் வேண்டிக்கொண்டதை நிராகரித்து விட்டவன். அவ்வளவு பிரேமை கொண்டிருந்தான் அமிர்தத்திடம். அமிர்தத்திடம் கோபித்துக் கொண்டு சித்ரபுரி சென்று சோகத்திலே மூழ்கிய பாரிஸ்டருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
சென்றேன்! கண்டேன் ! வென்றேன்!! குழல் இனிது! அதன் மகிமை பெரிது! அமிர்தம் இப்போது என் அடிமை. நான் இல்லாவிட்டால் அமிர்தம் இல்லை! இது சத்தியம், பணத்தை வாரி வாரி வீசி, அவளை ஒரு இராணி போல வைத்திருந்த பாரிஸ்டர் நவநீத கிருஷ்ணன் பிடித்தான் ஓட்டம், நான் இங்கே இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டான், நடக்குமா? மோகனத்திலே ஒரு கிருதி, பந்துவராளியிலே ஒரு பதம் வாசித்தேன், அமிர்தம், “அவரை அனுப்ப முடியாது” என்று பாரிஸ்டரின் முகத்திலே அறைந்தாள், நீட்டினான் கம்பி. காதலால் கட்டுண்டு கிடக்கிறாள் கர்வத்தைக் கண்டாங்கியாகக் கொண்டிருந்த அமிர்தம்.
இப்படிக்கு, குழலால் காதலில் வெற்றிகண்ட கிருஷ்ணன்.
✽✽✽
இக்கடிதத்துடன் மற்றோர் கடிதம் இணைக்கப்பட்டடிருந்தது.
அன்புள்ள நவநீத்!
என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேவலம் ஒரு குழலூதியினால் உங்கள் இன்ப வாழ்வு (???) கெட்டுவிட்டதற்காக வெட்கப்படுகிறேன். என்ன செய்வது? அவன் தங்களை அவள் வீட்டிலிருந்து விரட்டி விட்ட பெருமையை இங்கே ஓருவனுக்குக் கடிதம் எழுதினான். அது வெளியாகாதிருக்கக் கொஞ்சம் சிரமப்பட்டேன். அது என் கடமை. அவன் அதுபற்றி இங்கு கடிதம் எழுதுவானேன் என்று யோசிக்கலாம். உமது உள்ளத்தைக் கொள்ளைகொண்ட கள்ளியின் வீட்டிலே தங்களைத் தோற்கடித்தவன் வேறு யாருமல்ல, இங்கே எங்கள் ஜெமீனில் மந்தை மேய்த்துத் திரிந்த கிருஷ்ணன் என்பவன் தான்.
இப்படிக்கு,
லீலா.
★★★
பாரிஸ்டர் நவநீதகிருஷ்ணன் வெட்கமடைந்தான். உண்மையில் துக்கமும் கொண்டான். அக்காவுக்குத் தூதுக் கடிதம் அனுப்பினான். மறு திங்கள், பாரிஸ்டர் நவநீதகிருஷ்ணனுக்கும் லீலாவுக்கும் விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது. கலியாண விஷயம் வெளியானதும் உன்னால் அவரை இழந்தேன் என்று கூறி அமிர்தம் கிருஷ்ணனை விரட்டினாள் குழலால் மதியிழந்தேன் என்று கூறிக் குளறினான் கிருஷ்ணன் குழல் என்ன செய்யும்? இவனுடைய மதி குறைந்ததற்கு அதுவா காரணம்!