அண்ணாவின் ஆறு கதைகள்/005-006

 


விபசாரியா?”– கோபத்துடன் இக் கேள்வி பிறக்கிறது.

"ஆமாம்”– சோகம் கப்பிய குரலில் பதில் வருகிறது.

கேள்வி கேட்டவர் திகைத்து நிற்கிறார். அவர், வெட்கத்தால் அவள் நிலைகுலைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார். பதிலோ அவ்விதமில்லை. அவள் பேச்சை நிறுத்தவில்லை.

“ஆமாம் – ஏன் என்றா கேட்கிறீர்கள் ? – அவள் குரலிலே சோகத்தையும் சிதைத்துக் கொண்டு, நகைச்சுவை வெளிவந்தது.

“இல்லை”– பயத்துடன் பேசலானார் அவர்.

“அந்தக் கேள்வியைக் கேட்டுவிடாதீர்!” – அவள் பேசுகிறாள் – பேச்சா அது! கேலி செய்கிறாள்!

“ஏன் தைரியமாகப் பேசும் பாவனையிலே, திகிலைத் திறையிட்டுப் பேசுகிறார் அந்த ஆசாமி.

“நான் ஏன் விபசாரியானேன் என்ற கேள்வியைக் கேட்டுவிட்டால், குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்க வேண்டிய வேலை உமக்கு ஏற்பட்டுவிடும்.” அவள் தான் கூறினாள் – ஆனால், கேள்வி கேட்டவரின் கண்களுக்கு, அவள் தென்படவில்லை – வேறு ஏதேதோ உருவங்கள் – தெளிவில்லை – ஆனால் பெண் உருவங்கள், புகைப்படலத்தால் மூடப்பட்ட உருவங்கள் தென்பட்டன. அவர்களெல்லாம் யார் ? வனஜாபோல இருக்கிறது! இல்லை, இல்லை, வாழை இலைத் தோட்டக்காரி முனி–இல்லையே–வளைந்தான் வீதி குப்பிபோல இருக்கிறதே–இப்படி எண்ணங்கள் அவர் மனதிலே. எதிரே நின்றவள் ஒருவள் தான் – அவர் கண்களுக்கு மட்டும் மாறி மாறித் தோன்றின – பல மாதரின் உருவங்கள் – அனைவரும், அவருடைய காமப் பசிக்கு விருந்தளித்தவர்கள் – அவரால் விபசாரியானவர்கள் அவரால் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியவில்லை. “வழக்கு மறுநாள்” என்று சுருக்கமாகக் கூறி விட்டு மாளிகைக்குள் போய் விட்டார். அவள் வெற்றிப் புன்னகையுடன் வீடு சென்றாள்.

மாளிகையிலே பிரத்யேக மகாநாடு – மண்டபத்திலல்ல – மாளிகையின் பின்புற மாட்டுக்கொட்டகையில்.

“ஆமா! ஏன் எஜமானரு திருதிருன்னு விழிச்சாரு? அந்தத் திருட்டுச் சிறுக்கி படபடன்னு பேசினா. இவர் கையிலே இருந்த தடிக்கம்பாலே அவளைச் சாத்துவதை விட்டு, ஏன் அவ எதிரே, தலையைத் தொங்கப் போட்டுகிட்டாரு?” – மருதாயி, உள்ளபடியேதான், சந்தேகம் போக்கிக்கொள்ளும்விதம் கேட்டாள். இந்தச் சகஜமான கேள்வி ஏனோ, அவள் புருஷன் பொன்னனுக்குக் கோபமுமூட்டிவிட்டது.

“ஏண்டி, உனக்கு கெட்ட எண்ணமும் கேடுகெட்ட புத்தியும் இருக்கு. பாவம், அவரே, என்னமோ, மனசு இளகி, அந்தப் பொம்பளையைச் சும்மா வாய் மிரட்டோடு விட்டாரு. நீ அவளை ஏன் அடித்துக் கொல்லலேன்னு கேட்கறயே ! மனசு ஏண்டி உனக்குக் கல்லாப்போச்சு!” என்றான் பொன்னன், விடுவாளா மருதாயி.

“கிளம்புவீங்கன்னு தெரியுமே எனக்கு! அந்தக் கோண வகுடுக்காரியைக் கண்டாத்தான் நீங்க கொளையற வழக்கமாச்சே. இந்தப் பாழாப்போன கண்ணு என்னா குருடாவாப் போச்சி. அவளும் பல்லைக் காட்டுவா, நீங்களும் வளையறதும் நெளியறதுமா இருப்பீங்க. நான் காணாததா இந்த கூத்து! அதனாலேதான் பாவம், உருகுது உங்களுக்கு. அவளுக்கு எஜமான் தண்டனெ தரக்கூடாதுன்னு தோணுது,”

“சரிதான் கிட்டி! நான் ஒரு பாவமும் அறியேன்.”

“அதுவுந்தான் தெரியும் எனக்கு. கூத்தாடிப் பார்த்தீங்க, பலிக்கலே!”

“கிடக்குது போ, மருதாயி, உன்கிட்ட இப்பச் சொல்லிப் போடறேன் நிஜத்தை. எனக்கும் அந்தப் பெண் மேலே கொஞ்ச நாளா கண்ணுதான்... இப்ப இல்லை ... அது உன்னைக் கட்டிக்கிறதுக்கு முந்தி......”

“சொல்றதுன்னு ஆரபம்பிச்சி, ஏன் பொய்யைக் கொட்டறிங்க, அவத்தான், என்னைப் பாக்கிற போதெல்லாம் கேட்பாளே, பெரிய சீமாட்டிபோலே. அது ஒரு தினுசா பேசுவா அடி மூச்சு கலந்து, " “ஏண்டிம்மா, உன் வீட்டுக்காரரு சௌக்கியமாடிம்மா”ன்னு.

“அப்படியா கேட்பா? ஆமா, நீ ஒருநாள் கூட என் கிட்டச் சொன்னதே இல்லையே.”

மாளிகைக் கூடத்திலேயோ, வழக்கை விசாரிக்கப்போய் விசாரத்தை வரவழைத்துக்கொண்ட மல்லீசுரர், எப்போதும் போல, திருவாசகத்தை, இனிய, மெல்லிய குரலில் படித்துக்கொண்டிருந்தார். படித்தார் என்று கூடக் கூறுவதற்கில்லை. அவருக்குத் திருவாசகம் மனப் பாடம் — எனவே பாராமலே பாடிக்கொண்டிருந்தார் என்று கூறலாம். கண், புத்தகத்தின் மீது நடமாடிற்று—எழுத்தல்ல தெரிந்ததுதோட்டம் — கிணற்றடி — நெல் உலர்த்தும் இடம் — பஜனை மண்டபம் — ஓட்டல் — இப்படிப் பல இடங்கள் தெரிந்தன! அவ்வளவும் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள்! அவரையும் அறியாமல், அவருக்குச் சிரிப்பு வந்தது.

“ ஏண்டி, சனியனே! என் பேரை இழுத்துவிட்டு விட்டாயோ?”

“இழுத்துவிடவேணுமா? ஐயாவுக்குத் தெரியாதா?”

“அடி பாவி! என்னடி நடந்தது?”—“ விசாரணை.”

“என்ன கேட்டார்? — “விபசாரம் நடந்ததாமே, உண்மையா? என்று கேட்டார்,”

“அவ்வளவு பச்சையாகவா கேட்டார்?”—“பச்சையாக மட்டுமா ! சுருக்கமாக, சுரீல் என்று கன்னத்திலே அறைவதுபோலக் கேட்டார் — ‘விபசாரியா ?’ என்று.”

“ நீ.....?” — “ஆமாம், என்றேன்,”

“தைரியமாக?'”— ” தைரியமாக மட்டுமில்லை ! ஏன் அனாவசியமான கேள்வியைக் கேட்கவேண்டும்? வேறே வேலை இல்லையா என்று அதட்டுகிறது போலக் கேட்டேன்.”

“எவ்வளவு தைரியமடி உனக்கு!”

“எவ்வளவு பயங்காளியாக இருந்தேன்! ‘செ! பயப்படாதே! நான் இருக்கிறேன் பயப்படாதே தலையா போய் விடும்? யாருக்குத் தெரியப்போகுது? எங்க அண்ணன் தானே, பெரியதனக்காரரு, உனக்கு ஒரு தொல்லையும் வராது. நான் இருக்கிறேன், பயப்படாதே’ என்று ஏறக்குறைய ஒரு மாதம் தைரியம் ஊட்டினீரே, அதனாலேதான் முதன்முறை என் கையைப் பிடித்து இழுத்தீரே, கத்தரித் தோட்டத்தில் அப்போது பயத்தால் வெட வெட என்று உதறிய நான், இன்று, உன் அண்ணன் எதிரே கல் சிலை போல நின்றேன்–கல்போலப் பேசாமலில்லை–பேசினேன்.”

“அண்ணன் என்ன சொன்னார்?” — “என்ன சொல்வார் ?”

“உயிரை வாங்காதே! நடந்ததைக் கூறு.” — ‘விபசாரி தானா’ என்று கேட்டார் — கேட்க......”

“தன் தம்பியால் விபசாரியாக்கப்பட்ட என்னை, அவர் தைரியமாக அந்தக் கேள்வி கேட்கவே, நான் கோபங் கொண்டு, ‘ஆமாம்! விபசாரிதான்! ஏன் விபசாரியானேன் என்று கேட்கிறீர்களா?’ என்று கேட்டேன்.”

“அடி பாதகி! நீயாகவா அவர் வாயைக் கிளறினாய்?”

“ஆமாம்! உன் அண்ணன் ஊமையானார் !”

“அப்பா! தப்பினேன்! அவர் ‘ஏன் விபசாரியானாய்? யாரால் நேரிட்டது?’ என்று கேட்டுவிட்டிருந்தால், என் கதி என்ன ஆவது? நான் தான் இதற்குக் காரணம் என்று கூறிவிட்டிருப்பாயல்லவா?”

“இல்லை! நான் அதைக் கூறியிருக்கமாட்டேன்.”

“அப்பா! பாதிப் பிராணன் வந்தது. என்னை எங்கே காட்டிக் கொடுத்து விடுகிறாயோ என்று பயந்தேன்.”

“உன்னை ஏன் காட்டிக்கொடுக்கப்போகிறேன் ! பைத்யம்! நீ, முதல் குற்றவாளி அல்ல! இரண்டாம் நம்பர் ! உன் இச்சைக்கு நான் இறையாவதற்கு முன்பே......”

.. ‘முன்பே ...? — முன்பே ......’

‘கள்ளி! கத்தரித் தோட்டத்திலே பத்தினி வேஷ மிட்டாயே! அதற்கு முன்பே கைகாரிதானா நீ? கழுதே! எவன் அந்தப் பயல்?

‘உன்னைவிடப் பெரியவர் வயதில்.......வயதில் மட்டுமல்ல அனுபவம், சாமர்த்தியம், அந்தஸ்து, படிப்பு சகலத்திலும். முட்டாளே! நான் உனக்கு கூத்தியாவதற்கு முன்பு, உன் அண்ணியாக இருந்தேன் — அதே தினத்திலே, உன்னைக் காணுமுன்பு — நீ கத்தரித் தோட்டத்தைக் காமக்கூத்தாடத்தக்க இடம் என்று எண்ணினாய் — உன் அண்ணன், காளி கோயில் பாழ் மண்டபமே போதும் என்றார்! நான் அலுத்துத் தூங்கிக் கொண்டிருந்தேன் அங்கு. காலைக் கும்பிட்டுக் கூடப் பார்த்தேன் ; தட்டி எழுப்பிக் கட்டிப் பிடித்தபோது......’

‘என் அண்ணனா !—.

‘ஏன்? அவனும் ஒரு ஆடவன்தானே! அதிலும் ஊருக்குப் பெரியவன் — ஏழைகளை விசாரித்துத் தண்டிக்க அதிகாரம் படைத்தவன்! நான் ஏழை, விதவை, பிறகு இரையாகத்தானே வேண்டும், உன் அண்ணன் போன்ற காட்டு ராஜாவுக்கு!’

‘என்னால் நம்பவே முடியவில்லையே......’

‘நம்பிக்கை பிறக்கப் போய்க் கேள் உன் அண்ணனை. தைரியமிருந்தால் நாளைய தினம் விசாரணையின் போது, நான் யாரால் விபசாரியானேன் என்பதைக் கூறும்படி என்னையே கேட்கச்சொல்லு. வெட்டவெளிச்சமாக்கி விடுகிறேன் உங்கள் யோக்கியதை பூராவையும், வேலனும் நானும், வெளியூர் ஓடிவிடப் பிரயத்தனப்பட்டோம் என்று குற்றம் சாட்டி விசாரிக்கத் துணிந்தார் உன் அண்ணன். வேலன், குற்றம் செய்த என்னை — கொடுமைக்கு ஆளான என்னை — காப்பாற்ற, காளிமீது ஆணையிட்டுக் கைபிடித்தான், ஆத்தா எதிரிலே. இதோ பார்! தாலிகூடக் கட்டினான். இந்த ஊரிலே இருந்தாத்தான் ஏளனமாகப் பேசுவாங்க, வா, நாம் வேறே ஊருபோவோம் அங்கு புருஷனும் பெண் ஜாதியுமாக வாழ்வோனு சொன் னான், புறப்பட்டோம் — ஊர் கோடியிலே, நீ ஏவின வேட்டை நாய்களிடம் பிடிபட்டோம் — வேலனை அவர்கள் துடிக்க அடித்தனர் — என்னை விசாரணைக்குக் கொண்டு வந்து விட்டனர். நான் படவேண்டிய அளவு வேதனை பட்டாயிற்று விசாரணை நடக்கட்டும், ஊரறிய உலகறிய — உள்ளது அத்தனையும் வெளியாகட்டும்னு துணிந்துதான் பேசினேன். உன் அண்ணன் கோழை — எங்கே வெளியாகுதோன்னு பயந்து கிடக்கிறான். நீயோ, வேலன் கிடக்கறான் உடல் வீங்கிப்போய், ஓட இருந்தவளைக் கொண்டு வந்தாச்சி, இனி நமக்கு வேட்டை தான் என்று நினைக்கறே, நான் என்ன தீர்மானத்தோடு இருக்கிறேன் தெரியுதா?”

“என்னடி மிரட்டறே!‘’

தெளிவான பேச்சு இவ்வளவு தான்! பிறகு அமளி! வெற்றி அந்தப் பெண்ணுக்கு! காமுகன் இரத்த வெள்ளத்தில் கிடந்தான்!

“வேலா! போனது போகட்டும். அந்தப் பெண்ணை நான் மன்னித்து விடுகிறேன். நீ அவளைப் பெண் ஜாதியாக்கிக்கொண்டது நல்லதுதான். வேறே ஊருக்கு, விடிவதற்குள்ளே புறப்படணும். நம்ம வண்டி ரெடியா இருக்கும். கிளம்பு. வண்டிக்காரனிடம் இரகசியமாக விஷயத்தைச் சொல்லி இருக்கிறேன். பொழுது விடிந்தா, இந்தக் கிராமத்துப் பயலுக, கண்டது கண்டபடி பேசும். விபசாரம் போனவளைத் தாண்டித்தாகணும்னு பேசுவானுக. அதனாலே... ...‘’ — மல்லீசுரர் வேலனிடம் பேசிக்கொண்டிருந்தார் இதுபோல். ஓரு கோரச் சத்தம் கேட்டு இருவரும் திடுக்கிட்டனர்!

“யாரோ — கிணற்றிலே......” என அலறினான் வேலன்!

மல்லீசுரர் ஆட்களைக் கூவி அழைத்தார் தீப்பந்தங்களுடன் ஆட்கள் அங்கும் இங்கும் ஓடினர்.

காளிகோயில் கிணறு, படுபாதாளம்! அதிலேதான் அவள் வீழ்த்துவிட்டாள்.

இரண்டு பிணங்கள்! மல்லீசுரரின் அதிகாரத்துக்கு மேற்பட்ட வழக்கு! எனவே பக்கத்து ஊர் போலீஸ் அதிகாரி பிரசன்னமானார் பிரேத விசாரணைக்கு. மல்லீசுரரின் தம்பி மார்க்கண்டன், இரத்தம் கக்கி இறந்தான் — பிசாசு அறைந்தால், பிசாசுபிடித்தாட்ட, கருப்பி காளிகோயில் கிணற்றில் விழுந்து இறந்துவிட்டாள். இது பஞ்சாயத் தார் தீர்ப்பு .

 
 
"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணாவின்_ஆறு_கதைகள்/005-006&oldid=1470944" இலிருந்து மீள்விக்கப்பட்டது