அண்ணாவின் தலைமை உரைகள்/இன்பக் கனவு



1. இன்பக்கனவு


“பெரிய இடமாம், பெரிய இடம்! அலங்காரமான மாளிகையல்ல அய்யா, ஆடம்பரங்கள் நிரம்பிய இடங்களல்ல, உழைத்து வாழ்கிறானே ஏழைப் பாட்டாளி, அவனுடைய இதயம்தான் பெரிய இடம்! பயன் காணாது பாடுபட்டுப் பார் வாழப் பணி புரிகிறானே விவசாயி, அவனுடைய களங்கமற்ற உள்ளம்தான் பெரிய இடம்”, என்று நண்பர் எம்.ஜி. இராமச்சந்திரன் கூறுகிற பொழுது, மக்கள் மத்தியில் எழுந்த அலையோசை போன்ற கையொலி இருக்கிறதே அது, அறிவியக்கத் தோழருடைய உள்ளத்தையெல்லாம் மகிழ்வித்திருக்கும்.

நண்பர் எம். ஜி. ஆர். நடிகமணிகளிலே வீரம், விவேகம் நிரம்பிய தோழர். இல்லாதோரிடம் கருணை சுரக்கும் இயல்புள்ள அறிவியக்கவாதி. வாள் ஏந்தித் திரைப்பட உலகிலே, அவர் வந்து விட்டாலே, மக்களின் ஆரவாரத்தைக் கேட்க வேண்டாம்? அத்தகையவர், ஏழையாகக் கந்தலாடையும், நொந்த உள்ளமும் தாங்கி, இன்பக்கனவு' நாடகத்திலே சிந்தை குளிரும் சொற்களைப் பெய்து, நாட்டு மக்களின் நல்லாசியைப் பெற்று வருகிறார்.

நாடக நடிகர்கள், இன்று அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டையைப் போல, ஆங்காங்கேச் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களைப் பற்றி அறிந்த நம் போன்றோர்க்கு, வீதியில் விழியில் விசாரத்தோடு நிற்கும் அவர்களைக் காணும்போது, உள்ளத்திலே எழும் உணர்ச்சிப் போராட்டங்கள் ஏராளம். என்ன செய்வது ? அவர்கள் குறைகளைச் சுமக்கும் சுமை தாங்கியாகவே நாம் இருக்க முடியும். தவிர, நாமென்ன கற்பக விருட்சங்களுமல்ல; மணிமேகலை ஏந்தியிருந்தாளாமே அட்சயப்பாத்திரம் அது பெற்றவர்களுமல்ல. அதனால். ஆயாசம் அடைவோம் அவர்களைப்போல. இந்த ஆயாசத்தைத் துடைக்கும் நல் உள்ளத்துடன், அதே நேரத்தில் அந்த நடிகமணிகளின் மூலம் நல்ல கருத்துகளைப் பரப்ப வேண்டுமென்கிற ஆசையுடன் நண்பர் எம்.ஜி.ஆர். தமது அண்ணன் எம். ஜி. சக்ரபாணி அவர்களின் ஒத்துழைப்போடு, நடிகர் மன்றம் ஒன்றை நிறுவி, நாடகங்களை நடத்த முன்வந்திருக்கிறார். நற்பணியின் முதல் சித்திரம் " இன்பக்கனவு ".

நண்பர் இராமச்சந்திரன் அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். அவருடைய நடிப்பையும் நாடகத்தையும் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகவே கருதப்படும். உண்மைதானே எம். ஜி. ஆர். என்றால் அவர் தாங்கியிருக்கும் கொள்கை எதுவென்பதை நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டென்பதைக் கூறவா வேண்டும் ?

கடந்த சில ஆண்டுகளாக முன்னேற்றக் கொள்கைகளை முரசொலிக்கும் ஆவல் எங்கும் பரவியிருக்கிறது ! இதனை நாடகங்கள் மூலமாகக் செய்ய வேண்டும் என்கிற ஆவல் சிறு குக்கிராமங்களில் கூடப் பரவியிருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு யார் காரணமென்பதை மற்றாரும் அறிவர். நாடகக்கலை தமிழ்நாட்டில் இந்த அளவாவது முக்கியத்துவம் பெறச் செய்தது திராவிட இயக்கத்தாருடைய பணி என்றுதான் சொல்ல வேண்டும். அதனை அவர்கள் கட்சிப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனால், தங்கள் கொள்கைகளை எடுத்துக்காட்டுவதற்கு நாடகமும் ஒரு சிறந்த சாதனமென்பதைஉணர்த்திய பெருமை, அதன்மூலம் அதிகமான மக்களிடம் கொள்கையைப் பிரச்சாரம் செய்த பெருமை அவர்களுக்குரியதாகும் என்று அண்மையில் ஒர் ஏடு தீட்டியிருக்கிறது. ஏட்டின் பெயர் சோவியலிஸ்டு. உண்மைதான் !

சீன் ஜோடனையையும், வேட்டுமுழக்கங்களேயும் வெள்ளிச் சாமான்களையும் நம்பாமல், நடிப்பையும் கருத்தையும் முதலீடாக வைத்து, நாம் நாடகக் கலைக்குப் பணியாற்றி வருகிறோம். அதனால்தான், நமது நாடகங்கள் மணமுள்ள மலர்களாக இருக்கின்றன. இந்துவின் ஆதரவும், கல்கியின் படவிளக்கமும் விகடன் விமர்சனமும், மந்திரிகளின் ஒத்துழைப்பும் சச்சிவோத்தமர்களின் ஆதரவுமிருந்தும், அந்த வட்டாரத்து நாடகங்கள் மணம்வீசவில்லை. காரணம் அவைகள் காகிதப் பூக்கள். நம்முடையவை கொள்கை மணம் கொண்ட ரோஜா மலர்கள்.

நாம் நாடகம் நடத்துவதை ஓர் அடிப்படையான கொள்கைக்கு ஆக்கம் தேடவே செய்கிறோம். உண்மை இது. மறுக்கவில்லை, மறைக்கவுமில்லை. அதனால்தான், நமது நாடகங்களிலே, நமது கொள்கைகள் கோலோச்சுகின்றன. இதனைக் கூடாது என்போரும், “கலை வேறு; அரசியல் வேறு;” எனக் கதைப்போரும், காதை மூடிக் கொள்வோரும், துவேஷப் பிரச்சாரம் செய்வோரும், தோள் தட்டுவோரும் இருக்கிறார்கள் நாட்டில். அவர்களுக்குத் தெண்டனிட்டுப் புன்சிரிப்பைப் பெற அல்ல, நாம் இந்தப் பாதை சென்றது. ஆகவே, அவர்களது எரிச்சலே நமக்கு எரு, ஆத்திரமே ஆனந்தம்.

இன்பக் கனவிலே அந்த நற்பணியைக் காண முடிகிறது. நடித்தோர் அனைவரும் நம்முடையவர்கள். எனவே, நறுமணமும், அருங்கொள்கையும் அரசோச்சுகின்றன. இந்த அரிய முயற்சியிலே, வெற்றி கண்டு வரும் எம்.ஜி.ஆரின் தீவிர எண்ணங்கள், இன்னும் பல நாடகங்களாக எழிலுருக் கொண்டு மக்களை மகிழ்விக்கும் என நம்புகிறேன். இன்பக் கனவு தரும் எல்லாருக்கும்—இசையமைப்பாளர் உட்பட—கண்டு மகிழ்ந்த மக்களைப் போல், நானும் வாழ்த்துகிறேன்.

வளர்க கலை!வாழ்க நற்பணி !!

வகைப்பாடு: கலை—நாடகம்.

(6-6-64 அன்று வேலூரில் நடைபெற்ற இன்பக் கனவு நாடகத்திற்குத் தலைமையேற்று ஆற்றிய உரை.
நன்றி : தென்னகம்)