அண்ணாவின் தலைமை உரைகள்/நாட்டுக்கு நலந்தரும் பெண் கல்வி



23. நாட்டுக்கு நலந்தரும்
பெண் கல்வி


காலஞ்சென்ற பெரியார் எத்திராஜ் அவர்களின் திருவுருவப் படத்தை இந்த மண்டபத்தில் திறந்து வைப்பதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் திரட்டிய பெருஞ்செல்வத்தை மகளிர் கல்லூரிக்காகக் கொடுத்து உதவியது எல்லோராலும் பாராட்டத்தக்கதாகும். அவருடைய சட்ட நுணுக்க ஆராய்ச்சியும் தெளிவும் கனிவும் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு மிகநல்ல முறையில் விளங்கும். கல்வித் துறையின் வளர்ச்சிக்காக அரசினர் காட்டிவரும் அக்கறையோடு எத்திராஜ் போன்றவர்களும் கொடுத்து உதவிய பெருநிதியால்தான் தமிழகத்தில் இது போன்ற பல அறிவாலயங்கள் உருவாக முடிந்தது.

ஆடவர்களைவிட ஆரணங்குகள் கல்விபெறுவதால், ஒரு குடும்பத்தையே சிறப்பாக்கும் பணியை ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள். ஒரு கல்லூரிக்குக்கிடைக்கும் நல்ல பெயர், அந்தக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளின் திறமையைப் பொறுத்துத் தான் இருக்கிறது.

கல்வியில் முன்னேற்றமடையாவிட்டால், நாடு முற்போக்கை அடைய முடியாது. மாணவிகள் கல்வியில் தேர்ச்சிப் பெற்று நாட்டுக்கும் ஏற்றத்தைப் பெற்றுத்தருகிறார்கள். இங்கே பயிற்சி பெற்ற மாணவிகள் தனித்திறமையோடு விளங்குகிருர்கள் என்பதைக் கல்லூரி முதல்வர் எடுத்துக் கூறினார். மகளிர் குலத்திற்குத் தெளிவும் கனிவும் ஆகிய இரண்டும் இயல்பாக அமைந்திருக்கின்றன. அதை இன்னும் சற்று வளர்த்துக்கொள்வதற்குக் கல்வித் துறையில் மகளிர் ஈடுபடுவது இன்றியமையாதது ஆகும். அப்போதுதான் அவர்கள் பெற்ற தெளிவும் கனிவும் சமூகத்திற்கு மிகுந்த பயன்தரும். ஆகையால் தான் ஒவ்வொரு பெற்றோரும் பெண் குழந்தை பிறக்கின்ற நேரத்தில் தனி இன்பம் அடைகின்றார்கள். அண்மையில், எனது இரு புதல்வர்களுக்கும் குழந்தை பிறக்கப் போகிறது என்ற செய்தி கேட்டு, யாருக்குப் பெண் குழந்தை பிறக்கப் போகிறதோ, அந்தக் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய் பரிசு கொடுப்பதாக அறிவித்தேன். ஆனால், அந்தப் பரிசை இன்னுங் கொடுக்கவில்லை. அவர்கள் பெரியவர்களான பிறகு கொடுக்கலாம் என இருக்கிறேன்.[1]

பெண் குழந்தையாக இருந்தால், அந்தக் குழந்தை வளர்ந்ததும், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு உதவியாக இருக்கிறது. பெண் குழந்தையை விட, ஆண் குழந்தைக்குப் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டி இருக்கிறது. பெண்களுக்குக் கல்வி தேவை இல்லை என்று ஒரு காலம் இருந்தது. இதை இப்போது சிறுகதையில் எழுதினால் கூட, யாரும் நம்ப மாட்டார்கள். பெண்கள் படிக்காமல் இருக்கும் பொழுதே, இவ்வளவு திறமையுடன் இருக்கிறார்களே, படித்து விட்டால் என்ன ஆகுமோ என்பதால்தான் போலும், முன்பு அவர்களைப் படிக்க வைக்கவில்லை. இப்போது பெண்கள் படிக்கத் தொடங்கியவுடன், பலனைக் காண்கிறோம். கல்வித் துறையில் பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். அவர்கள் எந்தத்துறையில் ஈடுபட்டாலும் திறமையோடு விளங்குகிறார்கள். ஆடவர்களை காட்டிலும் அதிக வெற்றியைப் பெறுகிறார்கள். மருத்துவத் துறையிலும் ஆசிரியத் துறையிலும் பெண்கள் முழுவதுமாக ஈடுபட்டால் மிகுந்த பயன் உண்டாகும்.

மருந்தைவிடக் கனிவுதான் நோய்க்கு மருத்தாகும். அப்படிப்பட்ட கனிவு இயற்கையாக பெண்ககளிடம் அமைந்திருப்பதை பார்க்கலாம்.

"மற்றத் துறைகளில் ஈடுபட்டால் வெற்றியைப் பெற மாட்டார்களா?" என்னும் ஐயப்பாடிருக்கும். அது தேவையில்லை. அதிலும் வெற்றிபெறுவார்கள். என்றாலும் மகளிர் ஆசிரியத்துறையிலும் மருத்துவத் துறையிலும் ஈடுபடுவது தனிச்சிறப்பாகும்.

திருவள்ளுவரை எந்த அளவுக்குப் பாராட்டுகிறோமோ, அதற்கு ஒப்பாக ஒளவையாரையும் தமிழகம் கருதி இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தில் எந்த நாட்டிலும் பெண்பாற் புலவர்கள் இருந்ததில்லை. அப்போது தமிழகத்தில் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் தனிச்சிறப்பு, நிலைாயன பெருமை அந்த நாட்டிலுள்ள இலக்கியக் கர்த்தாக்களையும் கற்றறிவாளர்களையும் பொறுத்திருக்கிறது. அதை வெறும் அரசியல் வாதிகளால் மட்டும் பெற்றுவிட முடியாது.

வெளிநாடுகளுக்குச் செல்கிற நேரத்தில், உங்கள் நாட்டில் எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்று யாரும் கேட்பதில்லை. எத்தனை மந்திரிகள் அதிகமாக இருக்கிறார்களோ, அந்த நாட்டில் திறமை அதிகமாக இருக்கும் என்று யாரும் கணக்கிடுவதில்லை. அப்படிக் கணக்கு எடுக்கப்படுமானால். பீகார் மாநிலத்திற்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்.

ஒரு நாட்டின் நிலையான பெருமைக்கும் செல்வத்துக்கும் ஊன்றுகோலாக இருப்பது கல்வியே. எத்தனை மருத்துவர்கள் இருக்கிறார்கள்? எத்தனைப் பொறியியல் வல்லுநர்கள் இருக்கிறார்கள்? எத்தனைப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் ? என்று தான் எந்த நாட்டிலும் கேட்பார்கள். அவர்கள் ஈட்டித் தருகிற வெற்றிதான் நாட்டின் பெருமையை உயர்த்த முடியும்.

இந்த நாடு ஏழ்மை நிரம்பிய நாடாக இருந்தாலும், வள்ளல் தன்மை உள்ள நாடாகும். தன்னுடைய நலத்தைக் குறைத்துக் கொண்டு. மற்றவர்களுக்கு உதவுவதில் அக்கறை கொண்டவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் தங்களைத்தாங்களே தியாகம் செய்கிறார்கள்.

என்னுடைய அனுபவத்தில் நான் படித்தபோது இப்படிப்பட்ட கட்டம் இருந்ததில்லை. என்னுடைய வரலாற்றுப் பேராசிரியர் உலகத்திலுள்ள பெருவீரர்களைப் பற்றி எல்லாம் சொல்லும்போது, வெளியே எட்டணா, ஆறணா என்று பண்டங்களின் விலையைக் கூறுவதும் காதில் விழும். இவ்விரண்டுக்கும் இடை யில், நான் கல்வி கற்றேன். இன்று அந்த நிலை இல்லை,

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று சொல்வார்கள். ஆனால், இன்று யாம் பெறாததை எம்முடைய மக்கள் பெறட்டும் என்று, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தத் தலைமுறை தியாகஞ் செய்து வருகிறது. ஒரு தலைமுறை தன்னைத் தியாகம் செய்து கொண்டால்தான், இன்னொரு தலைமுறைக்குப் பலன் கிடைக்கும். குழந்தைகளுக்கு நோய் வந்தால், தானே மருந்து சாப்பிடுவார்கள் தாய்மார்கள். இத்தகைய உண்மைத் தியாக உள்ளம் தாய் குலத்திற்கு உள்ளதைப் போல், வேறு யாருக்கும் இருக்க முடியாது.

ஆண்டுக்காண்டு மகளிர் கல்வி பெரு எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. கல்வித் துறையில், இந்த அரசாங்கம் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. மகளிர் நல்ல முறையில், கல்வியில் தேர்ச்சி பெற்று, இந்த நாட்டின் பெருமையை உயர்த்தித் தர வேண்டுமென்று அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

வகைப்பாடு : பெண் கல்வி
(26-2-68 அன்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி, கல்லூரிநாள் விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)



  1. அண்ணா இயற்கை எய்தியதால் நிறைவேறவில்லை.