அண்ணாவின் தலைமை உரைகள்/நிலை இதுவே



11. நிலை இதுவே


கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று கோரினீர்கள். தமிழக அரசுக்குக் கிடைக்கும் ஒரு சில பெரிய வருவாய்களில் அதுவும் ஒன்றாகும். அந்த வரி இல்லையென்றால், மாநில அரசு இயங்க முடியாது.

நான் திரைப்படத் தொழிலை நசுக்க மாட்டேன். அந்தத் தொழிலுக்கு இப்போது செய்ய எண்ணி இருக்கும் நல்ல காரியங்களைக் கொஞ்சம் தள்ளிப் போடுகின்றேன். தமிழக அரசுக்கு இருக்கும் தொல்லைகள் அகன்றதும், திரைப்படத் தொழிலை வாட்டும் வரிகளைக் குறைப்போம். திரைப்படத் தொழிலின் குறைகளை நான் மிகவும் நன்றாக அறிந்தவன்.

தமிழ்த் திரைப்படங்களுக்கு மாநில அரசு பரிசு கொடுத்துப் பாராட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதைச் சுணக்கம் இல்லாமல் செய்வோம். ஆனால், அப்படிப் பரிசு பெற்ற படங்களுக்கு இப்போது வரி விலக்கு அளிக்க முடியாது.

மகாபலிபுரத்தில் படம் எடுக்க ஏராளமான பணம் வசூலிக்கப்படுகிறது. அந்த உரிமை மைய அரசிடம் உள்ளது. அது தமிழக அரசுக்குக் கிடைத்தால், கட்டணத்தை திண்ணமாகக் குறைப்போம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தணிக்கைக் குழுவிற்குத் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெட்ட வேண்டியதை, வெட்டாமல் விடுகிறார்கள். வெட்டக் கூடாததை வெட்டித் தள்ளுகிறார்கள். இந்நிலை மாற வேண்டும்.

வரியைக் குறைப்பதால் மட்டும், திரைப்படத் தொழில் வளர்ந்து விடாது. பதினைந்தாயிரம், இருபதாயிரம் என்று படப்பிடிப்புக்குச் செலவழித்து விட்டு, நடிகர்களுக்காகக் காத்திருக்கிறார்கள். நடிகர்கள் வரவில்லை என்றால், செலவழித்த பணம் வீணாகிறது. இது போன்ற செலவுகளை எல்லாம் குறைக்க வேண்டும்,

அமெரிக்கா, தென் அமெரிக்கா, மையக் கிழக்கு நாடுகள் ஆகியவற்றிற்கு இந்தியத் திரைப்படங்களை அனுப்புவதன் மூலம், வெளிநாட்டுச் செலவாணியை ஈட்ட மைய அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

திரைப்படத் தொழிலுக்கு இன்றியமையாப் பொருட்களை இறக்குமதி செய்வதில் உள்ள கட்டுப்பாடுகளை கொஞ்சம் மைய அரசு தளர்த்தலாம்.

பெரிய தொழிற்சாலைகளின் வருமானங்கள் எல்லாம் மைய அரசுக்குப் போய் விடுகின்றன. இந்த நிலையில், தமிழக அரசு பற்றாக்குறை வரவு-செலவுத் திட்டம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நெய்வேலி நிலக்கரித் தொழிற்சாலை, திருச்சிக் கொதிகலத் தொழிற்சாலை, பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை போன்ற பெரிய தொழில்கள் எல்லாம் மைய அரசிடம் உள்ளன. அந்த வருமானம் மைய அரசுக்கே போகிறது.

தமிழக அரசிடம் இருப்பது பேருந்துப் போக்குவரத்தும், கதர்த் தொழிலும்தான். இந்த இலட்சணத்தில், நிதி நிலைத் திட்டத்தில் துண்டு விழாமல் இருக்க முடியுமா? இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தில் ரூ. 8 கோடி துண்டு விழுந்திருக்கிறது. நிலை இதுவே. இருந்தாலும், இயன்ற வரை தமிழக அரசு உதவும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வகைப்பாடு : பொருளாதாரம்— திரைப்படத் தொழில் முன்னேற்றம்.
(9-5-67 அன்று சென்னைத் திரைப்பட உற்பத்தியாளர் சங்க விழாவில் ஆற்றிய தலைமை உரை.)