அண்ணாவின் தலைமை உரைகள்/பன்மொழிப் புலவர்



16. பன்மொழிப் புலவர்


பன்மொழிப் புலவர் அப்பாதுரை அவர்களின் மணிவிழாவிலே கலந்து கொள்வதிலே நான் மிகுந்த உற்சாகமடைவதற்கும், இதனை ஒரு நல்வாய்ப்பாகக் கருதுவதற்கும் காரணம், பல ஆண்டுகளாக அப்பாதுரையார் அவர்களுடன் நெருங்கிப் பழகி அறிந்தவன், அவருடைய தமிழ்த் தொண்டால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நற்பயனை உணர்ந்தவன், அவர்கள் குடும்பத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டவன் என்பதுதான். ஒருவரை நாம் மதிக்கும் நேரத்தில் மாற்றுக் கருத்துக்கொண்டவர்களும் மதிக்கிறார்கள் என்பதை அறியும்போது ஏற்படும் இனிமையைவிட, வேறு ஓர் இனிமை இருக்கமுடியாது.

அப்பாதுரையாரை நாம் எந்தக்கோணத்திலிருந்து பாராட்டுகிறோமோ, அதையல்லாமல் அவருடைய தனித் திறமையை அறிந்தவர்களும், அவருடைய தொண்டின் மேன்மையை அறிந்து பல்வேறு கோணங்களில் இருப்பவர்களும் பாராட்டிப் பேசுவதைக் கேட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

நம்முடைய அப்பாதுரையார் அவர்கள் ஆசிரியராகத் தம் பணியைத் துவக்கிய காலத்திலிருந்து அறப்போராட்டங்களில் ஈடுபட்ட கட்டம் வரை அவருடைய தனித்திறமையை அறிந்திருக்கிறோம். அவர் தமிழின் மூலத்தையே ஆராய முனைந்தவர். தமிழினத்தின் வரலாற்றைத் துருவித் துருவி ஆராய்வதன் மூலம், தமிழனத்திற்கும் மற்ற இனத்துக்குமிடையே, பகை மூட்ட அல்ல, தோழமையை ஏற்படுத்த அவர் அறிந்த அனைத்தையும் எழுதி ஏடாக்கினால், அவை இந்த மண்டபமே நிறையும் அளவுக்கு இருக்கும்.

நமது அப்பாதுரையார் அவர்கள் எந்த நேரத்தில் பார்த்தாலும் சிந்தனை, படிப்பு, எழுத்து என்று இப்படியே தம் வாழ்நாளை மிகச் சிறப்பாகக் கழித்திருக்கிறார். இந்த நாட்டில் அறிவாளன் என்று அறிந்தாலே ஆபத்து. அவன் என்ன பெரிய அறிவாளியா? என்று கேட்பதன் மூலம் தன்னிடம் அறிவு இருக்கிறது எனக் காட்டிக் கொள்ளச் சிலர் முனைவார்கள். இத்தகைய அறிவுப் பணி செய்வதே மிகச் சிக்கல். ஆனால், சிக்கலிலேதான் சுவை இருக்கும். மேனாடுகளில் எந்த அளவு இப்பணியில் ஈடுபடுகிறார்களோ, அந்த அளவுக்கு இங்கே ஈடுபடிவது என்பது மிகக் கடினம்.

பன்மொழிப் புலவர் அவர்கள் தம் வாழ்க்கையைக் கரடுமுரடான பாதையில் நடத்தி மிகத் தெளிவான தமிழறிவைத் தமிழகம் ஏற்குமளவுக்குப் பணி புரிந்திருக்கிறார். இவரது வாழ்க்கை பூந்தோட்டமாக அமைந்துவிடவில்லை. எனினும், வாலிப உள்ளத்தோடு மாற்றாரின் இழிமொழிகளையும் ஏசல் களையும் தாங்கிக் கொண்டு தம் பணிகளைச் செய்திருக்கிறார். நண்பர் கி. ஆ. பெ. விசுவநாதம் சொன்னதுபோல், இவர் விரும்பியிருந்தால் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகி இருக்க முடியும்.

ஒவ்வொன்றையும் பற்றி, “ இப்படிச் செய்வது சரியா ? " என்னும் எண்ணம் அவருடைய உள்ளத்தில் ஊடுருவிக் கொண்டிருக்கும். சிறிது காலம் பள்ளி ஆசிரியராக இருப்பார். பிறகு அது பிடிக்காமல் இதழாசிரியராவார். அதன் பிறகு, தமிழ்ப்

F–8 பாதுகாப்புப் பணியில் குதிப்பார். பின்னர்ப் போராட்டத்தினால் பயனில்லை எனக் கருதி ஏடுகளை எழுதியளிக்க எண்ணுவார். அந்தந்த நேரத்தில் தோன்றுவதில் ஈடுபடுவார்.

பாடுபவர், பல்வேறு இசை நுணுக்கங்களையும் எப்படி ஒரு குறிப்பிட்ட சுதிக்குள்ளாகவே நிறுத்துகிறாரோ, அதேபோல் இவரும் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டாலும் தம் வாழ்நாளை ஒரு சுதிக்குள்ளாகவே, தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும் என்னுங் கட்டத்திற்குள் ஒரு குறிப்பிட்ட கட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார். இது மிகப் பெரிய விரும்பத்தக்க இலட்சியமாகும்.

மாறுபட்ட கருத்துடையவர்களும் தமிழ்மொழிப் பிரச்சினையில் இன்று ஒன்றுபடுகிறார்கள். நானும் குன்றக்குடி அடிகளாரும் தோற்றம், பேச்சு, நட வடிக்கைகள், இருக்குமிடம் ஆகியவற்றால் மாறு பட்டவர்கள் என்றாலும் எங்கள் இருவரையும் தமிழ் ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுதான் நாம் கையாள வேண்டிய சுதி. இதற்குள் எல்லாவற்றையும் நாம் காட்டலாம். இது ஏற்படத் தமிழ்நாட்டில் முப்பது ஆண்டுகள் பாடுபட வேண்டியிருந்தது. இதற்கு அடங்கி நடப்பவர் எத்தனைபேர் என்பதை நாம் கணக்கெடுத்துப் பார்த்தால் பயனின் அளவைக் காணலாம். இந்தச் சுதியை நமக்குத் தந்தவர்களில் அப்பாதுரையாரும் ஒருவர். அ ப் ப டி ப் ப ட் ட மு ைற யி ல் அமைவதுதான் அடிப்படையான தொண்டு. மேலைநாடுகளில் ஒரே ஒரு புத்தகம் எழுதினாலே, ஒருவர் தம் வாழ்நாளைக் கழித்துவிட முடியும். அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு. இங்கோ ஒர் ஆசிரியர் ஒரு புத்தகத்தை வெளியிட்டார் என்றாலே வீடு மாற்றுவதைப் பார்க்கிறோம். அந்தப் புத்தகத்தை அச்சிடுவதற்கு அவர் பட்டகடனை அடைக்க முடியாமல், கடன்காரர்களுக்கு அஞ்சித் தென் சென்னையில் வீடு இருந்தால், வடசென்னைக்கும் வடசென்னையில் வீடுஇருந்தால் தென்சென்னைக்கும் குடிபோவார். அப்படிப்பட்ட நிலை இங்கிருக்கிறது. இங்குப் புத்தம் எழுதுவதும் அதன்மூலம் வருவாய் தேடுவதும் அவ்வளவு கடினம்.

புலமைக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள தொடர்பினை அருள் துறையில் தேர்ச்சி பெற்ற குன்றக்குடி அடிகளாரே சொன்னது எனக்கு மெத்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர் சொன்னபடி நாட்டில் நிலைமை ஏற்பட்டிருந்தால், நாம் இன்னும் பயனைச் சற்று அதிகமாகப் பெற்றிருக்க முடியும்.

புத்தகம் வாங்கும் பழக்கம் எல்லோருக்கும் ஏற்படவேண்டும். அப்பாத்துரையாரின் நூல்களை ஏடுகளை வீடுதோறும் வாங்கி வைக்க வேண்டும். அப்பாத்துரையார் எழுதிய நூல்களில், தென்னாட்டுப் போர்க் களங்கள் என்னும் நூல் என்னை மிகவும், கவர்ந்த நூலாகும். அந்த நூலின் ஒரே ஒரு ஏட்டை எழுத அவர் எத்தனை ஆயிரம் ஏடுகளைத் தேடிப் பார்த்திருக்கவேண்டும், எத்தனை ஆயிரம் கவிதைகளை, புத்தகங்களைச் சேகரித்துப் பார்த்திருக்க வேண்டும். என்பதை எண்ணியெண்ணி வியந்தேன்.

புத்தகம் எழுதுவோரை ஏனைய நாடுகளில் எல்லாம் வித்தகர்களாகப் போற்றுகிறார்கள். இந் நாட்டிலோ, “ புத்தகம் எழுதி, இருந்த பணத்தைப் பாழாக்கிக் கொண்டவர்கள் ” என்னும் பழிச் சொல் தான் கிடைக்கும். இந்த நிலையிலும் நமது அப்பாதுரையார் அவர்கள் தமிழ் மொழிக்கு ஏற்றந்தரும் பல அரியநூல்களை எழுதி இருக்கிறார்.

நம்மால் மதிக்கத் தக்கவர்களின் வாழ்க்கை வரலாறு முழு அளவுக்குத் தமிழகத்தில் இல்லை. திரு. வி. க. போன்றவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் குறிப்பெடுத்துத் தொகுத்து ஏடாக்கி நூலாக்கித் தருவதில் இன்றைய புலவர் பெருமக்கள் ஈடுபடவேண்டும். மறைமலையடிகளைப் பற்றியோ தியாகராய செட்டியார் பற்றியோ வாழ்க்கைக் குறிப்புகள் இல்லை. தமிழ்ப் பெரும் புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள் நம்மிடத்திலே இல்லை. அப்படிப்பட்ட பெரியார்களின் வரலாற்றை மறந்துவிட்டால் நம்முடைய மரபு பிறகு மறையும். மரபு என்பது இப்போது மறதி என்றாகி விட்டது.

3

பண்டைத் தமிழ் மன்னர்களைப் பற்றிச் சரியாக எந்த நூலிலும் குறிப்பிடப்படவில்லை. நமது பள்ளிச் சிறுவர்களின் பாடநூலைப் பார்த்தால், இராச இராச சோழனுக்கு, இராஜேந்திர சோழன் மகன்’ என்று சொல்வாருமுண்டு. ‘தம்பி’ என்பாரும் உண்டு என்றிருக்கும்.

“கரிகால் வளவன் உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டான் என்பது உண்மை” என்பாரும் உண்டு. “இல்லை” என்பாரும் உண்டு என்று இப்படித்தான் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய பணியில் ஈடுபட்டு, ஆராய்ச்சி நடத்திடப் பல்வேறு அலுவல்களைக் கொண்டுள்ள என்னால் முடியாது. வரலாற்று ஆசிரியர்கள்தாம், இந்தப் பணியை மேற்கொண்டு உண்மையான தமிழ் வரலாற்றை உருவாக்க வேண்டும்.

கல்வெட்டுக்களில் காணப் படுவதையும், இலக்கிய ஏடுகளில் உள்ளதையும், இன்ன பிற சான்றுகளைக் கொண்டும், தமிழக வரலாற்றைத் தொகுத்துக் கொடுக்கும் பணியைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்னும் சில திங்கள்களில் உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற விருக்கிறது, அதற்குள், இந்தப் பணியைச் செய்து முடித்தால், வெளி நாடுகளிலிருந்து வருபவர்க்கு, ‘இதுதான்’ எங்கள் நாட்டு வரலாறு என்று எடுத்துக் காட்ட முடியும்.

தமிழ்நாட்டில் உள்ள ஊர்களைப் பற்றியும், ஆறுகளைப் பற்றியும் வரலாறு இல்லை. இந்த வரலாற்றை எல்லாம் தொகுக்கின்ற பணியில், திரு.ஆர்.பி. சேதுப் பிள்ளை ஆர்வங் காட்டினார். ‘அவருடைய பணி ஆகாது’ என்று கருதியோ, என்னவோ காலம் அவரை அழைத்துக் கொண்டு விட்டது.

இத்தகைய பணியைச் செய்து முடிக்கக்கூடிய குழு ஒன்று அமைக்கப்பட்டால், அதற்குத் தலைமை தாங்கிப் பணியாற்றுவதற்கு, முழுத் திறமை பெற்றவர் பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரேயாவார் என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தகைய ஒரு நல்ல செயலில், குழு அமைத்துப் பணியாற்றுஞ் செயலில், நண்பர் மகாலிங்கமும், குன்றக்குடி அடிகளாரும் ஈடுபடுவது நல்ல பயன் அளிக்கக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு—நல்லறிஞர்கள்.
(20-9-67 அன்று சென்னையில் நடந்த பன்மொழிப் புலவர் அப்பாதுரையார் மணிவிழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)