அண்ணாவின் தலைமை உரைகள்/பின்னிப் பிணைந்துள்ள பிரச்சினைகள்



3. பின்னிப் பிணைந்துள்ள
பிரச்சினைகள்


1

வழக்கமாகத் தமிழில் பேசும் நான், அறக்குழுத் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க ஆங்கிலத்தில் பேசுகிறேன். கல்வியமைச்சர் நெடுஞ்செழியன் அவர்கள் தமிழில் பேசிய பிறகுதான், நான் பேசுகிறேன். எனவே, தமிழுக்கு முதலிடம் தந்த பிறகு, ஆங்கிலத்திற்கு இடமளிக்கிறேன்.

இங்கே மாணவர்கள் பரிசு வாங்கிச் சென்றதைப் பார்க்கும் பொழுது, நான் படித்த பொழுது பரிசு வாங்கிய காட்சிகள் என் நினைவுக்கு வந்தன.

காஞ்சிபுரம் பச்சையப்பரின் அறநிலையப் பணி, வகுப்பு வேறுபாடுகளைக் கடந்து, எல்லாருக்கும் பொதுவாக அமைந்துள்ளது. அந்தத் தூய பணி, சமுதாயம் முழுவதுக்கும் நன்மை பயப்பதாக அமைந்துள்ளது.

இப்பொழுதுள்ள மாணவர்களின் மனோபாவம், பழைய மாணவர்களின் மனோபாவம் போல இல்லை என்று சொல்லப்படுகிறது. இன்று, நேற்றாக இருக்க முடியாது. எனவே, இப்போதுள்ள மாணவர்கள், பழைய மாணவர்களாக இருக்க முடியாது. எப்படி ஒப்பிட்டுப் பார்த்தாலும், நம்முடைய மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களை விடச் சிறந்தவர்கள்.

இப்பொழுதுள்ள மாணவர்களைப் பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்புள்ள மாணவர்களோடு ஒப்பிட்டுப் பேசும்போது, 'அந்த மாணவர்கள் சிறந்தவர்கள்’ என்று சொல்வார்கள். ஆனால், அந்த மாணவர்கள் காலத்தில், அவர்களுக்கு முந்திய காலத்தில் இருந்தவர்கள்தான் சிறந்தவர்கள் என்று சொன்னர்கள்.

“கல்வியின் தரங் குறைந்து விட்டது” என்று கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல. தரத்தில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால், முன்பு இருந்த நிலையைவிட, இப்போது கல்வியின் தரம் வெகுவாக உயர்ந்திருக்கிறது. எங்கள் பதவிக் காலத்தில் மேலும் கல்வியின் தரத்தை நிச்சயம் உயர்த்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாடு கல்வியில் முன்நிற்கிறது என்னும் நற்பெயரை நாட்டப் பாடுபடுவோம்.

2

எல்லோரும் கல்லூரிப் படிப்பு வாய்ப்பு பெறும் பொருட்டு, இலவசப் புகுமுக வகுப்புப்படிப்பை அமுலாக்க வேண்டும் என்னும் எண்ணம் உலவுகிறது. ஆனால், போதுமான கல்லூரிகளைத் துவக்குவதும் அவற்றைத் துவக்க நிதி வசதிகளைக் காண்பதும் இடர்ப்பாடான சிக்கலாகும். இத்தகைய சிக்கல்களில் மாணவர்கள் சிந்தனையைச் செலுத்த வேண்டும். அவற்றை அலசி ஆராய வேண்டும். அப்போதுதான், தக்க சமயத்தில் தீர்வுகாண முடியும். மாணவர்கள் மாலை நேரங்களில் இத்தகைய பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். பழைய தலைமுறையினரை மாணவர்கள் அனுசரித்துச் செல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறானதாகும். 'ஜெட்' கால மாணவர்களே மிகவும் மந்தமாகச் செல்லும் காலத்துக்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை என்று குறைகூறக் கூடாது.

பிரச்சினைகளில் மாணவர்கள் ஆர்வங் காட்டுவதை நான் வரவேற்கிறேன். ஆனால், பிரச்சினைகளில் ஆர்வங்காட்டுவது வேறு; பங்கு பெறுவது வேறு.

இப்பொழுது பல்வேறு துறைகளில் மாணவர் கள் வளர்ச்சியடைந்துள்ளனர். இப்பொழுதுள்ள பிரச்சனைகள் வேறு. இன்று எந்தப் பிரச்சினையும் ஒன்றோடு மற்றொன்று இணைந்தாகவே இலங்குகிறது.

என்னுடைய வயதான நண்பர் ஒருவர், ”உணவுப் பிரச்சினையைத் தீர்க்கச் சுலபமான வழி இருக்கிறது ” என்றார், நல்லெண்ணத்தோடு அந்த வழியையும் என்னிடஞ் சொன்னார்

"பர்மாவிலிருந்து 4 அல்லது 5 கப்பல் நிறைய அரிசி கொண்டுவந்தால் போதும். அரிசிப் பிரச்சினை தீர்ந்துவிடும்” என்பதாகும் அது. சுலபமானது தான் அவருடைய யோசனை. உண்மையில் அது பலனளிக்ககூடியதுதான். ஆனால், பர்மாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நாம் நினைத்தால் முடியாது. அதற்கு அதிகாரம் டில்லியில் இருக்கிறது. இப்படிப் பிரச்சினைகள் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே, பிரச்சினைகள் பற்றித் தெரிந்து கொள்வதும் அதுபற்றி மற்ற மாணவர்களிடம் கலந்தாலோசிப்பதும் தவறாகாது. அறிவு முதிர்ச்சியும் வலிமையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுந் திறனும் மாணவர்கள் பெற ஆசிரியர்கள் உதவ வேண்டும். பேராசிரியர்கள்கூடச் சில பிரச்சினைகளைப் பற்றிக் கலந்து ஆலோசிக்கலாம். இப்படிப் பிரச்சினைகளைக் கலந்தாலோசிப்பது நாட்டுக்கு நன்மை பயப்பதாகவே அமையும்.

மிகப் பெரிய ஜனநாயக நாடு இது. ஆனால், மிகவும் ஏழ்மையான நாடு. நமது ஏழ்மையுடன் ஜனநாயகத்தைச் சரிகட்டுவது எப்படி?

ஜனநாயகத்தில் ஒரு நபருக்கு ஓர் ஒட்டு என்று நிலை உள்ளது. ஆனால், ஒரு நபரின் அதிகார வரம்பிற்குள் அநேக ஒட்டுகள் உள்ளன. இதற்குப் பண பலம். சாதி இதர அம்சங்கள் முதலியவை காரணங்களாகும்.

5

தமிழக அரசு உடனடியாக உணவுப் பிரச் சினைக்குத் தீர்வு காண வேண்டிய நிலையிலுள்ளது. அடுத்து விலைவாசிப் பிரச்சினை. விலைவாசியைக் கட்டுப்படுத்தும்போது, உருவாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்தவேண்டும். தொழில் வளர்ச்சியைக் கவனிக்க வேண்டுமானால், வரிப்பளுவைக் குறைக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு மொழிப் பிரச்சினையைக் கவனிப்பதா, மொழிப் பிரச்சினையைத் தீர்த்த பிறகு இப்பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுப்பதா என்பதை மாணவர்களே சொல்லட்டும்.

இங்கே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மட்டும் இருந்தாலும், மாணவர் சமுதாயம் முழுவதையும் கேட்டுக் கொள்கிறேன். எந்தப் பிரச்சினைக்கு முதலில் முடிவுகாண வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். நேரிலே சொல்ல முடியா விட்டால் கடிதத்தின் வாயிலாகவாவது எழுதுங்கள்.

மொழிப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாவிட்டால் இந்த அரசு, பதவி விலகத் தயங்காது. இப்பொழுதுள்ள பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்ட பின்னரே, மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான சூழ்நிலை உருவாக வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்திப் பிரச்சினையில் மிகப் பிடிவாதமாக இருக்கும் ஜனசங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூட, இப்பொழுது ஒரளவு மாறி இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

முன்னாலே ஆட்சியில் இருந்தவர்களுக்கும் இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். முன்பு இருந்தவர்கள் யார் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். "எல்லாம் எங்களுக்குத் தெரியும். யாரும் எங்களுக்குச் சொல்ல வேண்டாம்” என்பார்கள் ஆனால், நாங்கள் அப்படியல்ல. எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டுக் கொள்வோம். மாணவர்கள் தோழமையை மட்டுமல்ல, துணையையும் தமிழக ஆட்சி விரும்புகிறது. உங்களுடைய ஆலோசனைகளையும் அவற்றை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்னுங் கருத்துக்களையும் தாருங்கள். எங்களால் முடியாவிட்டால்"முடியவில்லை, முடியாததற்கு இன்னன்ன காரணங்கள்" என்று சொல்லவும் கூச்சப்படமாட்டோம்.

மாணவர்களே மட்டும் ஆலோசனை கேட்க வில்லை. எல்லாத் தரப்பிலும் கேட்கிறோம். முடிந்தால் சில பிரச்சினைகளில் ஐரோப்பியநாடுகளில் கையாளப்படும் பொது வாக்கெடுப்பு முறையை அமுல் நடத்த முயலுவோம்.

முன்பு தமிழக மக்கள் மட்டுமே இந்தியை எதிர்த்தார்கள். இப்பொழுது தமிழக அரசும் இந்தியை எதிர்க்கிறது. மக்களின் உணர்ச்சிகள் மெய்ப்பிக்கப் பட்டுவிட்டன. இந்தநிலையில் மைய அரசு நம் பக்கம் வரும் என்னும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. தலைமை அமைச்சராகி இருக்கும் திருமதி இந்திரா காந்தி அவர்களிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மொழிப் பிரச்சினையில் அவர் அவ்வளவு பிடிவாதமாக இருக்கமாட்டார் என்று நான் எண்ணுகிறேன்

கடந்த காலத்தில் மாணவர்கள் அவர்களது அரசியல் அல்லது மொழி உணர்ச்சிக்காகப் பழி வாங்கப்பட்டதற்கு வருந்துகிறேன்.

இந்தி எதிர்ப்பில் உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய பிறகுதான், கோட்டைக்குச் சென்று பதவியை ஏற்றுக் கொண்டோம். அந்தத் தியாகிகள் இட்ட பிச்சையே தி.மு.க. அமைச்சரவை என்று நாங்கள் கருதுகிறோம். எங்களுடைய அறிவால் மட்டும் அடைந்தது அஃது என்று நினைக்க வில்லை.

வகைப்பாடு : ஜனநாயகம்—பிரச்சினைகள்

(26-2-67 அன்று சென்னைப் பச்சையப்பன் கல்லூரி அறநிலையக் காப்புக்குழுவின் 124-வது ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை)


மாணவர்

வயலுக்கு நாற்றங்காலில் பயிரை வளர்ப்பார்கள்.
அது போல், எதிர்கால வயலுக்கேற்ற நாற்றங்கால்
பயிராகப் பள்ளிப் பிள்ளைகள் இருக்கிறார்கள்.

பேரறிஞர் அண்ணா