அண்ணாவின் தலைமை உரைகள்/மாநில மைய அரசு உறவுகள்



9. மாநில மைய அரசு உறவுகள்


மாநில, மத்திய அரசுகளின் தொடர்பு பற்றி இங்கே விவாதிக்கப்பட இருக்கிறது. “தொடர்பு” என்பதே ‘நீக்கப்பட முடியாதது, இருந்து தீர வேண்டியது’ என்றுதான் பொருள் தரும். இல்லையென்றால், இருவருடைய தொடர்பு ஒருவருக்கு மட்டுஞ் சொந்தமாக மாறி விடும், ஆகையால், மாநில—மத்திய அரசுகளின் தொடர்பு பற்றிய சிந்தனை, விரிவாகப் பரந்து காணத் தெளிவான கண்ணோட்டத்தைப் பெற வேண்டும்.

35 நான் முதலமைச்சர் பொறுப்பில் இருப்பதால், திரு. சந்தானம் அவர்கள் கூறிய கருத்துக்களை விமர்சனம் செய்ய முடியவில்லை. நான் கூறுகிற கருத்து தமிழக அரசினர் கருத்து என்று கருதப்படுகிறது என்பதால்தான் விமர்சிக்க முடியவில்லை, இதுபோன்ற கழகங்களும் சங்கங்களும் இக்கருத்து உரையை விவரமாக விவாதிக்க வேண்டும், தம்முடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். திரு. சந்தானம் அவர்கள் சொன்ன கருத்துக்களில் எனக்குக் கவர்ச்சிக் கருத்தாகத் தோன்றியது. ‘மாநில அரசுகளின் பிரதிநிதிக்குழு’ பற்றியதாகும். மாநிலச் சட்டமன்றங்களின் இரு அவைகளிலுமுள்ள உறுப்பினர்களைக் கொண்டு மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள் பற்றி அரசுக்கு ஆலோசனை கூறக்கூடிய அரசியல் சட்டப் பரிசீலனைக் குழுவைப் பற்றிச் சந்தானம் எடுத்துரைத்தார். இது கவர்ச்சியான யோசனை ஆகும். ஒரு மாநில அரசாங்கத்திற்கும். மற்ற மாநில அரசாங்கத்திற்கும், மத்திய அரசாங்கத்திற்கும் ஏற்படுஞ் சிக்கல்களைத் தீர்க்க இக்குழு அமைந்தால் பெரிதும் பயன்படும். மாநில அரசாங்கங்களுக்கு மதிப்பில்லாமல் போனதற்கு மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டுமென்னுங் கருத்து ஒரு கசப்பான உண்மையாகும். ஆனால், அதை நான் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். 36 மாநில அரசுகளிடமிருந்து வரி வசூலிப்பதை மத்திய அரசு பிடுங்கிக் கொள்ளும் போக்கு ஒரே அரசியல் கட்சி எல்லா இடங்களிலும் ஆண்டபோது சரியானதாக இருக்கலாம். இப்பொழுது பல கட்சிகள் வெவ்வேறு மாநிலங்களில் ஆளுவதால், அக்கருத்துச் சரியானதாக இருக்காது. சிலர் "யார் வரி வசூலித்தால் என்ன? அந்தப் பணம் இந்தியாவுக்குள்தானே இருக்கிறது?" என்று விசித்திர வாதம் புரிகிறார்கள். அப்படிப்பட்ட வாதத்திற்கு முன்பு கைத்தட்டல் கிடைத்திருக்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்திற்குச் சொல்லி வைத்துத்தான் கைதட்டல் பெற முடியும். இன்னுஞ் சில ஆண்டுகள் சென்ற பிறகு, சொல்லி வைத்தாலும் கைத்தட்ட மாட்டார்கள். அதன் பின்னும் மேலுஞ் சில ஆண்டுகள் சென்றால் கைத்தட்டுபவர்களையே சந்தேகிப்பார்கள். "திருநெல்வேலியில் களவாடியது திருச்செந்தூரில் இருக்கலாம். திருச்செந்தூரில் களவாடியது திருவல்லிக்கேணியில் இருக்கலாம். களவாடப் பட்ட பொருள்கூட, இந்த நாட்டிலேதான் இருக்கிறது. ஆகவே, களவாடப்பட்டது பற்றிக்கவலைப்படவேண்டாம்” என்று எவரும் கூறத் துணியமாட்டார்கள். ஒருவருக்குரிய பொருளை எடுத்தாலும் ஒருவருக்குரிய உரிமையை எடுத்துக் கொண்டாலும், திருட்டு திருட்டுதான். ஆகையால், உரிமைகளை மதித்து மாநில அரசுகளும், மத்திய அரசும் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டும். ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டுமே தவிர, ஒன்றாக்கப்பட்டு விடக் கூடாது.

கலந்துரையாடியே பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண வேண்டும். அடிமை மனப்பான்மை வந்து விடக் கூடாது. சொல்பவர் ஒருவர்; கேட்பவர் பலர் என்னும் நிலை அமையக் கூடாது. இந்த முறையில்தான் இனி மேல், இந்திய அரசியல் முறை அமைய வேண்டும்.

“மாநில அரசுகளுக்கு அதிக அதிகாரம் வேண்டும்” என்று நான் கூறினால், பிரிவினைக் கொள்கையை முன்பு வலியுறுத்தியவன் என்பதால், பழைய கோரிக்கைகளுக்கு இப்படி வடிவம் தந்து பேசுகிறேன் என்பார்கள். ஆனால், திரு. கே.எஸ். சந்தானம் போன்றவர்கள் பேசினால், அப்படிப்பட்ட கருத்துத் தோன்றுவதற்கு இடமில்லை.

மத்திய, மாநில அரசாங்கங்களின் தொடர்பு பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அந்தச் சிந்தனை இல்லாவிட்டால், ஆபத்து வந்து சேரும் என்னும் அச்சமும் தோன்றியிருக்கிறது,

வகைப்பாடு : ஜனநாயகம்—கருத்தரங்கு.
(24-4-67 அன்று திருவல்லிக்கேணிப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆற்றிய தலைமை உரை.)