அண்ணாவின் நாடகங்கள்/கல் சுமந்த கசடர்



கல் சுமந்த கசடர்


காட்சி 1

இடம்:—வீரர் கூடாரம்.
காலம்:—காலை
உறுப்பினர்:—வீரர்.
நிலைமை:—ஒரு வீரன் பாடுகிறான் மற்றவர் இரசிக்கின்றனர். மற்றோர் வீரன் ஓடிவருகிறான். பாட்டைக் கேட்கிறான். கேட்டுவிட்டு.....


வீரன்: எதன்மேல் ஆணை? எதன்மேல் ஆணை?

பாடிய வீரன்: ஏன்? தாயின்மேல் ஆணை. தந்தைமேல் ஆணை. தமிழகமேல் ஆணை.

வீ: தமிழகமீது ஆணையா! உண்மையாகவா?

பா. வீ: என்ன நண்பா உனக்குத் திடீரென்று சந்தேகம் வந்துவிட்டது.

வீ: நண்பா! தாயின்மேல் ஆணையிட்டு, தமிழகத்தின் மானத்தைக் காக்கப்போரிடும் வீரர்கள் நாம். ஆனால் இதனை வெறும் வீண் பேச்சு என்று கருதுகிறார்கள்.

பா. வீ: யார் அத்தகைய அறிவாளிகள்!

வீ: நாம் வாயாடிகளாம். நமது மன்னனும் அப்படித்தானாம். நாம் ஏதும் செய்யமாட்டாதவர்களாம்.

பா. வீ: சொன்னவன் யார்? அதைக் கேட்கும்போது நீ மரமாகவா நின்றாய்?

வீ: இல்லை, காற்றென ஓடிவந்தேனிங்கு. பங்கப்படுத்தும் அந்த மாபாவிகளின் மண்டைக் கர்வத்தை மன்னனிடம் கூற ஓடோடி வந்தேன்.

பா.வீ: என்ன துணிவு! எவனுக்குப் பிறந்ததந்த ஆணவம்! எங்கே இருக்கிறான் அந்த மரமண்டைக்காரன்? அங்கத்திலா? கலிங்கத்திலா? எங்கேயிருக்கிறான்? யாரவன்?

வீ: தமிழனை, தமிழகத்தை, தமிழ் மன்னனான, நமது சேரன் செங்குட்டுவனை இழிவாகப் பேசியவர்கள் அங்கத்திலே இல்லை, கலிங்கத்திலேயில்லை, கங்கைக் கரையிலே உள்ளனர் அக்கயவர்கள், கனகன் விஜயன் என்பது அக்கசடரின் பெயர்.

பா.வீ: ஆரிய மன்னர்களா?

வீ: ஆம்! அந்தப் பதர்கள்தான். அடங்கிக் கிடந்த கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. கைகட்டி வாய்பொத்தி நின்ற கூட்டம் கொக்கரிக்கிறது. நமது தமிழரைக் கேவலமாகப் பேசுகிறது.

பா.வீ: ஆகா! வீரரை வீணர் கேலி செய்தனரா? போருக்கஞ்சாத நம்மை புரட்டர் கூட்டம் இகழ்ந்து பேசிற்றா? என்ன காலம்! என்ன கோலம்! கனக விஜயருக்கு காலம் முடிந்து விட்டதோ இந்தக் கர்வங்கொள்ள! புலியைப் பூனை போருக்கழைக்கிறதா? புறப்படுங்கள் போவோம் நமது பூபதியிடம், அந்தப் புல்லரின் விஷயத்தைக் கூறுவோம். போருக்குக் கிளம்புவோம்.

வீ: அந்த ஆரியமுடி தாங்கிகளை அடித்து நொருக்குவோம்.


காட்சி 2

இடம்:—சேரன் மாளிகை
காலம்:—காலை
நிலைமை:—சேரனும் ஒரு புராணீகனும் தனியாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர்: புராணீகன் இராமாயணக் கதையைக் கூறுகிறான்.


புரா: ஆரண்யத்திலே ஸ்ரீராமச்சந்திரர் சீதாபிராட்டியாரைத் தேடித்தேடியலைந்து அழுதுகொண்டிருக்கிறார். தம்பி லக்ஷ்மணன் அண்ணா! இது நம்முடைய போறாத காலம், தாங்கள் இதற்காக இப்படிப் புலம்புவதா? என்று கூறிட......

சேரன்: மறையவரே! என்ன சொன்னான் அந்த இலக்ஷ்மணன்? சீதையை எவனோ களவாடிக்கொண்டு போனானென்று தெரிந்துமா அண்ணனுக்குப் போறாதவேளை, போனால் என்ன என்று கூறினான்?

புரா: ஆமாம். இராமருடைய சோகத்தைத் தணிக்க......

சேரன்: சரி. பிறகு கூறும் கேட்போம்.

புரா: ஆரண்யத்திலே அலைந்து திரிந்து வருகையிலே, ஸ்ரீராமச்சந்திரருக்கு, வானர குலத் தலைவரான சுக்ரீவனுடைய சிநேகிதம் கிடைத்தது. சுக்ரீவனுக்கும் அவன் அண்ணன் வாலிக்கும் பகை. இராமர் வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டம் தருவதாக வாக்களித்தார்.

சேரன்: யார் வாக்களித்தது? மனைவியை இழந்து எப்படிக் கண்டுபிடிப்பது என்று மார்க்கம் தெரியாது மருண்டு போயிருந்த இராமன், வாலியைக் கொல்வதாக வாக்களித்தானா? என்ன மறையவரே! வேடிக்கையாக இருக்கிறதே. வாலியின் வீரதீர பராக்கிரமத்தைப் பற்றிப் பலர் கூறுவர்......

புரா: ஆமாம், ஆனால் ஸ்ரீராமச்சந்திரர் சாமான்யரோ, ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் அவதாரமல்லவோ!

சேரன்: அவதார புருஷருக்குத்தான் மனைவி பறிபோகும் ஆபத்து நேரிட்டது போலும்! சரி அந்த வேடிக்கை கிடக்கட்டும் வாலிக்கும் சுக்ரீவனுக்கும் பகை இருந்தது. அது கேட்ட இராமர்............?

புரா: வாலியைக் கொன்று சுக்ரீவனுக்குப் பட்டமளிக்க வாக்களித்தான்.

சேரன்: பேஷ்! உன் இராமன் பெரிய வஞ்சகனாக வல்லவோ காணப்படுகிறான்.

[புராணீகன் காதுகளைப் பொத்திக்கொள்கிறான்.]

சேரன்: ஆம் மறையவரே! அந்த வஞ்சகத்தைக் காதால் கேட்பதுகூடத் தகாதுதான். அண்ணன் தம்பிக்குச் சண்டை! இந்த ஆரிய இராமனிடம் அந்த வானரன் முறையிட்டான். நீதிமானாக, தர்மவானாக இருப்பின், இருவருக்குள் நேரிட்ட விரோதத்தைப் போக்கிச், சமரசம் உண்டாக்கியிருக்கவேண்டும். அப்பா வாலி! வா இப்படி, ஒரு தாய் வயிற்றிலுதித்த நீங்கள் இப்படி விரோதித்துக்கொள்வதா? இதேபார் என்னை என் பக்கத்தில் இருப்பது இலட்சுமணன். என் தம்பி. என்னைத்தான் என் சிற்றன்னை பதினாலு ஆண்டு காடு செல்லவேண்டுமென்றாள். நான் விரைவாகக் கிளம்பினேன். என் தம்பி இலட்சுமணன் என்னைவிட்டுப் பிரிய மனமின்றி, தானும் வனவாசம் ஏற்றான். இப்படி இருக்கவேண்டும் அண்ணன் தம்பி ஒற்றுமை என்று கூறியிருக்க வேண்டாமா? அதை விட்டான். அண்ணன் தம்பிக்குள் கிளம்பின சண்டைக்குள் புகுந்தான்.

[இதைக் கேட்டுக்கொண்டே வந்து நின்ற வில்லவன்]

வில்: மறைந்திருந்து அம்பெய்தி வாலியைக் கொன்றான்.

சேர: (திரும்பி) மறைந்திருந்தா?

வில்: (புராணிகரை நோக்கி) கூறுவதுதானே மறையவரே! மறைந்திருந்து, மரத்தின் பின்புறமிருந்துதானே, இராமன் வீர வாலியின்மீது அம்பெய்திக் கொன்றான்.

புரா: அப்படித்தான் கதை.....

வில்ல: இப்படி நெருக்கடியான கேள்வி கேட்டால் இது கதை. கேள்வி கிளம்பாத வரையிலே அது கடவுள் புராணம். மன்னா! இதுபோல நயவஞ்சகம், துரோகம், சதி முதலியவை நிரம்பிய பல கதைகள்தான் ஆரியருக்குள்ள புராணக் கதைகள்.

சேர: சேச்சே! என்ன இருந்தாலும் ஒரு வீரன், மன்னன், வாலியை மறைந்திருந்து கொல்வது மிக மோசம், கேவலம்.....

புரா: (வில்லவனை நோக்கி ) பேடித்தனம், கூறுமே வில்லவரே!

வில்ல: எனக்கு அந்தச் சிரமிமின்றி தாங்களேதான் கூறி விட்டீர்களே, அந்தக் கோழைத்தனமும் சுயநலத்தோடு கூடியது.

புரா: என்னப்பா நயநலம்? கிஷ்கிந்தையை இராமர் ஸ்வீகரித்துக் கொண்டாரோ? சுக்ரீவனுக்கல்லவோ பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.

வில்ல: பட்டங்கட்டினார்? எதற்கு? வானரப்பட்டாளத்தை அரக்கர் படைமீது ஏவ.

சேர: உண்மைதான், சுக்ரீவனுக்கும் இராவணனுக்கும் ஒரு விரோதமும் கிடையாது. ஆனால் சுக்ரீவனுடைய படைதான் இராவணப் படையைத் தாக்கிற்று.

வில்ல: இருதரப்பிலும் நஷ்டம், ஆரியப்படையோ அயோத்தியிலே நிம்மதியாக இருந்தது,

[இரு வீரர் ஓடிவந்து வணங்குகிறார்கள்.]

வில்ல: ஏன்? என்ன! ஏன் இப்படி அவசரம்?

வீரன்: மன்னா! வணக்கம். தமிழ் நாட்டை இழிவாகப் பேசுகின்றனர்.

வில்: எந்தப் பித்தர் பட்டியிலே கண்டாய் அந்தச் சத்தற்ற ஜன்மங்களை? தமிழரைத் தாழ்வாகப் பேசும் அளவு தலைக்கு வெறியேறிய தருக்கர் யார்?

வீரன்: கங்கைக் கரையிலே கனகன், விஜயன், என்று இரு ஆரிய மன்னர்கள் உள்ளனர்.

சேர: ஆரிய மன்னர்! ஆரியரிலே மன்னர்களும் உள்ளனர்!!

வில்: மன்னராக இருப்பதுடன், மமதையாளராகவும் உள்ளனர், அந்தப் பதர்கள். நமது தமிழ் மரபினைக் குறித்துக் கேவலமாகப் பேசினராம். கேலி செய்தனராம் தமிழ்க் குடியினரை. கேட்டீர்களா இந்தக் கெடுமதியாளர்களின் போக்கை! சிங்கத்தைக் கேலி செய்யும் செந்நாயைக் கண்டதில்லை. விழி பழுதானவன் வழி காட்டுவோனை கேலி செய்ததில்லை, வீணர்கள் வீரர்களைப் பழிக்கின்றனர்.

சேரன்: ஆகா! அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனரா? இடம் கிடைக்காது திண்டாடி இங்கே வந்த சடங்கள் இப்போது படமெடுத்தாடும் பாம்பாகிவிட்டனவா? ரோம் நாட்டு வீரரும், யவண நாட்டுத் தீரரும், தமிழரின் வீரத்தைப் பாராட்ட, கலிங்கமும், காந்தாரமும் வங்கமும் அங்கமும் மூவேந்தரின் திறத்தைப் பாராட்டியிருக்க, பிழைக்க வந்த கூட்டம் நம்மை இழிவாகப் பேசுவதா? தமிழகம் அவ்வளவு தாழ்ந்துவிட்டதா?

வில்: திக்கெட்டும் புகழ் பரப்பிய தீரனே!

சேர: போதும் நிறுத்து, எட்டுத்திக்கும், என் புகழ் பரவிற்றென்று, இங்கே நின்று புகழ்ந்து பேசுகிறாய், அங்கே அந்த ஆரியமன்னர் என்னையும், உன்னையும், நம்மைத் தாங்கி நிற்கும் தமிழகத்தையும் தாழ்வாகப் பேசினர்.

வில்: கட்டளை யிடுங்கள் காவலரே! அந்தக் கருத்தறியாக் கயவரின் குருதி கங்கையிலே கலக்கச் செய்கிறேன். வீங்கிக்கிடக்கும் தோள் எதற்கு? தூங்கிக் கிடக்கும் இந்த வாள் எதற்கு? தங்கள் தாளிலே அந்தத் தருக்கரின் முடியினைக் கொண்டுவந்து வைக்கிறேன். அவர்கள் நாடுகள் காடாகும். மாளிகைகள் மண்மேடாகும். வயல் வெளியாகும். பிணக் குவியலைக் காட்டுகிறேன்.

சேர: வில்லவா! உன்வீரப் பேச்சு என் மனப்புண்ணைக் கொஞ்சம் ஆற்றுகிறது. ஆனாலும் அறிவும் ஆற்றலும் அற்ற கூட்டம் ஆண்மையாளராம் தமிழரைக் கேலி செய்தது பற்றி எண்ணினால் என் உள்ளம் பதறுகிறது. எங்கிருந்து பிறந்தது அந்தத் துணிவு? வடநாடு இப்போது எந்த வகையிலே உயர்ந்துவிட்டது. ஏன் இந்த மமதை பிறந்தது?

வில்: வடநாடு ஆரியக்காடாகி விட்டது. மன்னர் மன்னவா! அங்கு இப்போது போர் என்றால் மன்னரும், வீரரும். எதிரியை முறியடிக்க எவ்விதம் தாக்குவது? வட்டவடிவிலே படையை அமைப்பதா? விலாப்புறத்தில் தாக்குவதா? வில் வீரரை முதலிலே நிறுத்துவதா? வேழப் படையை அனுப்புவதா? என்று போர் முறை பேசிடுவர். புரோகிதக் கூட்டம் குறுக்கிட்டு, இன்ன யாகத்தை இவ்விதம் இன்றிருந்தே செய்தால் இந்திரன் வஜ்ராயுதத்தைத் தருவான். இத்தனை வேளை இத்தனை ஆயிரம் ஆரியருக்குச் சமாராதனை நடத்தினால் அக்கினி பகவான் அருள் புரிவான். எவன் எதிர்த்தாலும் வெற்றி நமக்கே கிடைக்கும் என்று புளுகுவர். மன்னன் மந்திரியைப் பார்ப்பான். மந்திரி பொக்கிஷக்காரனைப் பார்ப்பான். பூசுரன் செலவுக் கணக்கைக் கூறுவான். பொருளைப் பெறுவான். களத்திலே வீரர்களின் விழியிலே வேல்பாயும். பர்ணசாலைகளிலே அந்தணன் வயிற்றிலே வகைவகையான உண்டி பாயும். போரிலே வீரர் பல்லாயிரவர் ஆர்ப்பரிப்பர். ஆலயங்களிலே அந்தணர், அந்தி பூஜை அர்த்த ராத்திரி சேவை என்று காரியங்களிலே ஈடுபடுவர். வீரனின் இரத்தம் அங்கே சிந்தும். இங்கே வேதியக் கூட்டம் விலாப்புடைக்கத் தின்று, தின்றது செரிக்கச் சந்தனம் பூச, பூசிய சந்தனம் கீழே சிந்தும். அமளியிலே அங்கங்கள் அறுபடும்; இங்கு அரசாங்கப் பொக்கிஷம் அந்தணர் ஏற்பட்டால் குறைவுபடும். இந்த முறையில் ஆரியம் அங்கு வேலை செய்கிறது. அரசுகளை அழிக்கிறது அவனிகாவலா!

சேர: ஆற்றோரத்திலே ஆடு மேய்த்து, மலைச்சரிவிலே மாடு மேய்த்து மானையும் பன்றியையும் வெட்டித் தின்று, நெருப்பையும் நீரையும் கும்பிட்டு, சோமரசமும் சுரபானமும் பருகி, பௌண்டரீக யாகமும் பிறவும் செய்துகிடந்த கூட்டம், கோட்டைகளைத் தகர்த்து, கொத்தளங்களைத் தூளாக்கி படைபல வென்று தடைபல கொன்று தன்மானத்தையே தரணிவாழ் மக்கள் போற்றவேண்டும் எனப் பரணி பாடி வாழும் தமிழரை, நம்மை நிந்திப்பதா? பச்சை கண்டு இச்சை கொண்ட நச்சு நினைப்பினர் செங்குருதி பாய்ச்சி செந்தமிழர் வீரத்தை நிலைநாட்டி தங்கக் கோட்டைகளிலே வைரமணிகளென ஒளிவிட்டு விளங்கு வீரராம் தமிழரை, கேலிமொழி பேசுவதா? ஆஹா! அவ்வளவு துணிந்து விட்டதா அந்த ஆற்றலற்ற கூட்டம்! எவனுடைய தயவு கிடைத்துவிட்டதாம் அந்தப் பவதிபிக்ஷாந்தேகிகளுக்கு! யார் அவர்களுக்குத் துணை? தேவனா! மூவனா? தேய்ந்து வாழும் சந்திரனா? தெருப் புழுதியுடன் விளையாடும் வாயுவா? சாக்கடையிலும் சரசமாடும் வருணனா? எந்தக் கற்பனைக் கடவுளை நம்பி இந்தக் காரியம் செய்யத் துணிந்தனர்?

வில்: யார் முன்னின்று, ஆரிய மன்னருக்கு இந்தத் தைரியமளித்திருந்தாலும் சரி, மன்னர் மன்னவா! மண்ணிலே என் உடல் வீழ்வதாயினும் சரியே அந்த மாற்றார்களை மண்டியிடச் செய்வேன். இது உறுதி, சத்தியம். தமிழகத்தின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். போர் தொடுக்க உத்தரவு அளியுங்கள்.

சேர: ஆம்! போர்தான்.

காட்சி 3

இடம்:—பாசறை.
நிலைமை:—படை அணிவகுப்பு, மன்னர் பார்வையிட வருகிறார். படையினர் மன்னரை உற்சாகமாக வரவேற்கின்றனர்.


படையினர்: மன்னர் மன்னவன் வாழ்க! தமிழ் மாநிலம் வாழ்க! சேரன் செங்குட்டுவன் வாழ்க!

மன்னன்: தமிழ் மாநிலம் வாழ்க! வீரர்காள்; உண்மை உரை அது. தமிழ் மாநிலம் வாழ அதன் கீர்த்தி பரவ உங்கள் குருதியைக் கொட்ட வேண்டுமென்று, கேட்டுக்கொள்ளவே இன்று இங்கே உம்மை அழைத்தேன். ஆரிய நாட்டின்மீது படையெடுக்க நாம் தீர்மானித்து விட்டோம். மண் பெண் பொன் என்ற மூன்றுக்காக மாநிலத்திலே போர் மூளுவது உண்டு. நாம் மண் வேண்டியோ, பெண் தேடியோ, பொன் கோரியோ போருக்குக் கிளம்பவில்லை. மாநிலத்தின் பூந்தோட்டம் தமிழகம். மறக்குடித் தமிழரின் மதிமுகவதிகள் மயக்கமொழி பேசி மஞ்சமிழுப்போனை தயக்கமின்றித் தழுவிடும் வழுக்கிவிழுந்த வனிதையரல்ல. வீரப்பெண்மணிகள்! பொன் நமது காலடியிலே! நமது மணி மாடங்களிலே தேனிடையூறிய செம்பவள இதழ்ச் சேயிழையார் தத்தமது காதலருடன் தென்றலையும் திங்களையும் வென்று வாழ்கின்றனர். மண் பெண் பொன் எனும் மூன்றிற்குமல்ல நாம் போரிடுவது. மானத்துக்கு பல்லைக்காட்டி வாழ்ந்த கூட்டம் தமிழகத்தின் எல்லையைத் தாண்டி ஓர் கொல்லையை ஆண்டு வருகிறது. அது புன்னகைப் பூந்தோட்டமல்ல. செந்தமிழ் செழிக்கும் சோலையுமல்ல; கங்கைக்கரையோரத்திலே கசடர் இருவர் கனகன், விஜயன் எனும் பெயரினர், அரசர்களாக உள்ளனராம், சீறிப்போரிடும் வேங்கைகள் உலாவும் காட்டிலே சிறுநரிகள் உள்ளதுபோல்! அங்கு அவர்கள் வாழ்வதை நாம் தடுத்தோமில்லை, பொருட்படுத்தவுமில்லை. மல்லிகைத் தோட்டத்தின் வேலி ஓரத்தில் உள்ள கள்ளி என்று அதனை மதித்தோம். அந்தக் கொல்லைக்காவலர் நாமெல்லாம் கல்லாகாதிருக்கும் இந்த நாளில், உமது கரத்திலே கட்கமும் கருத்திலே வீரமும், உடலிலே தமிழ் இரத்தமும், உயிரிலே தன்மானமும், விளங்கும் இந்த நாளிலே, நான் நெடுமரமென நின்றிருக்கும்போது, என் முன்னோர்களின் வீரதீர வெற்றிகளையறிந்து மறவாதிருக்கும் நான் மண்டலத்தை ஆளும் நாளில், அந்த மமதையாளர்கள், மனுசந்ததியார் தமிழரை, தமிழகத்தை, தமிழ் வீரத்தை தன்மானத்தைப் பழித்துப் பேசினர், இழித்துரைத்தனராம். என் ஆட்சியிலே நேரிட்டது இந்த அவமானம். நான் வெட்கப்படுகிறேன் வீரர்காள். போர்ப் புலிகளாகிய உங்களை ஆளும் பாக்கியம் பெற்ற நான் தமிழரின் வெற்றிச் செய்திகளை விருந்தாக அளித்திடுவது முறை. கோலளித்தமைக்கு நான் செய்ய வேண்டிய கடமை, கைம்மாறு. ஆனால் நான், உங்கள் முன்னால் மூவேந்தரில் முதல்வன் என்று பேசப்படும் நான், உங்கள் முன் இதோ நிற்கிறேன் ஆரியர் தமிழரை இழிவுபடுத்தினர் என்ற செய்தியைக் கூறிக்கொண்டு. வாள் ஏன் எனக்கு! முடி ஏன் எனக்கு? தமிழ் மண்ணிலே நான் வாழ்வானேன்? தோழரே! நான் ஓர் ஒதியமரம் என்பது போலும் அவர்தம் நினைப்பு: சேர மண்டலத்திலே வீரர் இல்லையா, இந்தச் செருக்கரின் சிரம் அறுக்க. போர் வீரர் கூட்டம் கூனி விட்டதா? போர்த்திறம் இழந்தோமா? தோள்வலியும் மனவலியும் போயினவா? முன்னோரின் புகழுக்கு நாம் மாசுகளா? முதுமொழிகளுக்கு கரையான்களா? ஆண்மையற்ற கூட்டமா? அஞ்சிவாழும் ஆமைகளா? நயவஞ்சக நரிகளா? நாமா? திரு இடத்தவரா? ஒருபோதும் இல்லை. நாம் ஏறுகள். நாம் தமிழர். கொலைவாளைத் தூக்குவோம் கொடுமை களைவோம். மாற்றானின் ஆயுதங்களை நமது மார்பு எனும் மதிலில் வீசச்செய்வோம், மகிழ்வோம். உமது குருதியைக் கொட்ட களத்திலே பிணமாவதானாலும் அதற்கும் அச்சாரம் வாங்கி விட்டேன். உங்கள் வீரத்தின்மேல் ஆணையிட்டேன்: ஆரிய மன்னருக்கு இறுதிச்சீட்டு அனுப்பி விட்டேன்; என்னாளிலே என் தமிழர் இழிமொழி கேட்டும், வாளாயிருந்தனர் என்ற வசை மொழியை என் இரத்தத்தைக் கொண்டு கழுவிடத் தீர்மானித்து விட்டேன். அதைக் காண வாரீர் என்று உம்மை அழைக்கிறேன். தமிழகம் காணிக்கை கேட்கிறது: வீரத்தை, தியாகத்தைக் கேட்கிறது: இங்கே வீரர்கள் இல்லையா? ஆண்மையாளரே! கிளம்புங்கள். சிங்காரத் தமிழகத்தைச் சின்னாட்கள் மறந்திருங்கள். காதலை, கவிதையை, காட்சியை, மறந்திடுங்கள். வானமே கூடாரம், தரையே பஞ்சணை ஆயுதங்களே தோழர்கள். இதற்கழைக்கிறேன் உம்மை. உயிரைக் கரும்பெனக் கருதுவோன் விலகட்டும். மானத்தைப் பெரிதென மதிப்போர் வாளை முத்தமிட வரலாம். வாகை சூடிடத் தமிழகம் நம்மை அழைக்கிறது. பெற்று வளர்த்து பெருமைப்படுத்திய தமிழகம் அழைக்கிறது. உங்கள் தந்தையர் நாடு அழைக்கிறது! வர இசைபவர் யார்?

படையினர்: எல்லோரும்! எல்லோரும்.


காட்சி 4
(வீரர்கள் கீதம்)

இடம்:—பாதை.
[அடிப்போம், மடல் கெடுப்போம். முகத்திடிப்போம், குடல் எடுப்போம், இடுப்பொடிப்போம், சிரம் உடைப்போம், வசை துடைப்போம், உயிர் குடிப்போம், வழி தடுப்போம், பழி முடிப்போம், இனி நடப்போம்.]

கோஷம்: தூக்குவீர் கத்தியை, தாக்குவீர் எதிரியை

காட்சி 5

இடம்:—களம்,
உறுப்பினர்:—வீரன், வில்லவன்.


வீரன்: தலைவரே! மாற்றார்கள் மனம் மருண்டு விட்டனர். அவர்களின் படை வரிசை கலைகிறது. போர் வீரர்களின் முகத்திலே பயந்தோன்றிவிட்டது. நாம் முன்னேறித் தாக்கத் தாக்க எதிரியின் படை வரிசை பிண வரிசையாகி வருகிறது. எதிரிப் படைத் தலைவன், இறுமாப்பால் தமிழரைத் தாழ்வாகப் பேசிய கனகன் மிரண்டு ஓடுகிறான், விஜயன் பின்தொடர; நமது குதிரை வீரர்களை அனுப்பி அவனைப் பிடித்து விடுகிறேன். களத்திலே அவன் தலை உருளட்டும். அவன் பிணமாவதைக் கண்டு எஞ்சியுள்ள அவனது சேனையின் நெஞ்சு பஞ்சாகட்டும். தஞ்சம் தஞ்சமென்று அந்தப் பஞ்சைகள், நமது மன்னன் திருவடி பணிந்து கெஞ்சட்டும். கட்டளையிடுங்கள்! கண்கலங்கி நிற்கும் அந்தக் கதியற்றவரை, களத்திலே பிணமாக்கிக் கழுகுக்கு விருந்திடுகிறேன்.

வில்லவன்: வேண்டாம், வீரத் தோழனே! விரண்டோடும் விஜயனும், கதி கலங்கிய கனகனும் புறமுதுகிட்டு மிஞ்சியுள்ள சேனையுடன் ஓடட்டும்.

வீர: அங்ஙனமாயின் அவர்கள் தம் நகர் சென்று விடுவரே, பிழைத்துக் கொள்வரே!

வில்: நண்பா! அவர்கள் ஓடித் தம் நகர் செல்லட்டும். அவர்களைத் துரத்திக்கொண்டு நாம் அந்த நகருக்குள் நுழைவோம். அவர் தம் அரண்மனை மாடியிலே அரசக் குடும்பக் குமரிகள் ஓடிவரும் மன்னரைக் கண்டு ஈதென்ன கோலம், நமது கொற்றவன் இவ்வளவு கோழையா என்று கூறட்டும். வளையணிந்த மாதரின் விழியும் மொழியும், கேலியை ஏவட்டும். வெட்கம் அந்த வேந்தரின் விலாவைக் குத்தட்டும். வெட்கி வியர்த்து வெட வெடத்துக் கிடக்கும் அந்த வேளையிலே நாம் சென்று அவர்களைப் பிடிப்போம். அரண்மனையிலோ அழுகுரல் கிளம்பட்டும். ஆற்றல் மறவரோடு போரிட்டால் அழிவு கிடைக்குமென்பதை ஆரியச்சேரி அறியட்டும். ஓடவிடு அந்த ஓடெடுத்து வாழ்ந்த வேந்தர்களை.

காட்சி 6

இடம்:—களத்தில் ஓர் பகுதி.
உறுப்பினர்:—தமிழ் வீரன்—ஆரிய வீரன்.
நிலைமை:—தமிழ் வீரன், பயந்தோடும் ஆரியனைப் பிடித்திழுத்து முதுகில் ஒரு அறை கொடுத்து.


தமிழ் வீரன்: ஏ ஆரியப்பதரே எங்கே உங்கள் வீரம், யோகம், யாகம்! அக்கினியாஸ்திரமெங்கே! (மறுபடி அடிக்க.)

ஆரிய வீரன்: (முதுகைத் துடைத்துக்கொண்டு அலறி)ஐயோ! இதுதான் அக்கினியாஸ்திரம்.

த. வீ: எது?

ஆரி. வீ: இதோ என் முதுகிலே சுரீரென்று கொடுத்தீர்களே நெருப்புப் போல.....

த. வீ: முண்டமே! ஓடிப் போ, பாமரமக்களிடம் பச்சைப் புளுகு பேசுவது, எம்மிடம் அக்கினியாஸ்திரம், வருணாஸ்திரம் உள்ளன என்று,

(அழுகிறான் ஆரியன்.)

இதோ கண்களிலே நீர் பெருகுவதைப் பார்? வருணாஸ்திரம்! சீ......போரிட லாயக்கோ, பழக்கமோ, பயிற்சியோ அற்ற கூட்டம், வாலாட்டத்திலே மட்டும் குறைவில்லை.

காட்சி 7

இடம்:—களம்.
உறுப்பினர்:—கனக விஜயன், வில்லவன், வீரர்.
நிலைமை:—நாலு பக்கமும் தமிழ் வீரர்கள் கனக விஜயரை சுற்றி வளைத்துக் கொள்கின்றனர். கனக விசயர் ஓடப்பார்த்து முயன்று முடியாததால் பணிகின்றனர். அதுசமயம் வில்லவன் கோதை வந்து சேருகிறான்.


வில்லவன்: விடாதீர்கள்! விடாதீர்கள்!! அந்த விப்பிரரை (அருகே வந்து கனக விசயரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு) சீறிப் போரிட்ட சிங்கங்களே! செருக்கைக் கக்கிய சழக்கரே! நெருப்புடன் விளையாடத் துணிந்த ஏமாளிகளே நில்லுங்கள்! தலையைக் கொஞ்சம் நிமிர்த்துங்கள்! உங்கள் முகத்தை நான் கொஞ்சம் பார்க்கிறேன். (முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்து விட்டு) ஆகா! வீரம் வழிந்தோடுகிறது! அந்தக் கண்களிலே தீரத் தீப்பொறி பறக்கிறது! சீச்சீ வெட்கமில்லை உங்களுக்கு! வீரதீர கெம்பீரனாம், எமது மன்னன்மீது, போரிட எப்படியடா துணிவு கொண்டீர்கள். எதை நம்பி இறங்கினீர்கள், இந்த ஆபத்தான விளையாட்டில்! நீங்கள் செய்த குற்றத்திற்காக, இங்கேயே, இப்போதே, உங்கள் உடலைக் கூறு கூறாக்கி, நாய்க்கும், நரிக்கும் விருந்திடுவேன். ஆனால் நயவஞ்சகராகிய உங்களின், இந்த நிலையைக் காணவேண்டும் என் தமிழர், என்ற ஆசையால் நீங்கள் இன்னமும் பிணமாகாதிருக்கிறீர்கள். வஞ்சனையைக் கக்கும் உமது கண்கள், எமது தமிழரின் கண்கள் உமிழும் வீரக் கனலால் குருடாகட்டும்! மலையெனத் திரண்டுள்ள எம் தமிழ் வீரரின் தோளைக் கண்டதும், அவர் தம் தாளிலே வீழ்ந்து, பணிய வாருங்கள். தமிழகத்தைத் தாழ்வாகப் பேசியவன் கதி என்னாயிற்று என்பதை உலகு உணரட்டும். கர்வம் பிடித்துத் தமிழரை ஏசிய நீங்கள் கல் சுமந்து வாரீர் தமிழகத்திற்கு. உங்கள் தலையிலே ஏற்றிவைக்கும் கல்கொண்டு, வீரப் பெண்மணி கண்ணகிக்குக் கோவில் கட்டுவோம். வீரர்காள் தமிழகத்தின் மானத்தைக் காத்த தோழரே, ஏற்றுங்கள் கல்லை, இந்த கயவர் சிரமீது. சுமக்கட்டும்! இந்தச் சூது தவிர வேற்றியாக் கூட்டம்! தமிழகத்தின் புகழின் பாரம் தெரியட்டும். புறப்படுக.

காட்சி 8

இடம்:—பாதை.
உறுப்பினர்:—கனகன்-விசயன்-வீரர்.
நிலைமை:—கல் சுமந்து கொண்டு கனக-விசயர். தமிழ் வீரர் உருவிய வாளுடன் வருகின்றனர்.

வீரர்: நட-நட! நட-நடடா நயவஞ்சக நரியே! வாயால் கெட்ட வகைகெட்ட மூடரே! நடவுங்கள்!

[எதிர்ப்புறமிருந்து வருபவருக்கு]

வீரர்: புதியபொதி மாடு! சேரன் செங்குட்டுவன், கங்கைக் கரை ஓரத்திலே மேய்ந்து கொண்டிருந்த இந்தப் பொதிமாடுகளை, தமிழகத்துக்குக் கல் சுமக்கச் செய்தான்.

காட்சி 9

இடம்:—சேரன் கொலு மண்டபம்
நிலைமை:—வீரர்கள் வருகை


வீரர்: மன்னர் மன்னவா வெற்றி! வெற்றி!!

வில்லவன்: வெற்றி வீரரின் தலைவனே, வணக்கம். தமிழரை இழித்துப் பேசிய கனக-விசயரைக் கைது செய்து வந்துள்ளேன். இதோ அந்தக் கசடர்.

சேரன்: கனகன்! விசயன்! காவலராம் இவர்கள்! கடும் போரிடத் தெரியுமாம்!! ஏடா மூடர்கள்! கங்கைக் கரையிலே காலந்தள்ளுவதை விட்டு, ஏன் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டீர்? என்ன காரியம் செய்கிறோம் என்பது தெரியாது, சிறு செயல் புரிந்தீர், வேங்கையின் வாலை மிதித்தால், அதன் பற்களால் கொல்லப்படுவோம், என்று தெரியாதவன் ஏமாளியல்லவா? ஆரியரே! உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உங்கள் இனத்தவர் எதையும் விட்டுக் கொடுக்கத் தயாராவீர்கள். போர் என்றால் புகை கிளம்பும் யாகம் செய்வீர்கள்! ஆண்டவனிடம் அஸ்திரம் கேட்பீர்கள்! வாள் வீசத்தெரியாத உங்களுக்கு ஏன் இந்த வம்பு? தமிழரைப் பொன் கேட்டீர் கொடுத்தோம். வாழ இடம் கேட்டீர், தந்தோம்! அந்த வாழ்வு பெற்ற பின்னர் தமிழரையா இகழ்ந்து பேசினீர்?

கனகன்: மன்னவா? உம் அடி பணிகிறோம்.

சேரன்: இதிலென்ன ஆச்சரியம்! உமது பரம்பரை, தலை முறையாக வீரரின் காலடியிலே, வீழ்ந்ததன்றி வேறு வரலாறு ஏது எடா மூடர்களே! உமது வீரத்திற்கு ஒருசான்று கூறமுடியுமா? ஒரே ஒரு சான்று!! வீரரென்று வாயாரப் புகழ்வீர் சிலரை, அவர்கள் யாவரும் இறைவனின் அருளால் அந்த வெற்றிகள் யாவும் கிடைத்தன என்றுதானே கதை. வீரத்திற்குச் சான்று எங்கே? வில்லவா இந்த வீணரை, நமது மக்கள் காண ஊரெங்கும். அழைத்துச் சென்று, பிறகு, சிறையிலே தள்ளு, தமிழ் வீரர்களே! உங்களுக்கு, என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் உங்களைக் கண்டு பூரிக்கிறது. வில்லவா! உன்வீரம் தமிழகத்துக்கு அழியாப் புகழ் அளித்துவிட்டது. உன்வெற்றி, தமிழர்மீது வீசப்பட்ட மாசினைத் துடைத்து விட்டது. இதோ பரம்பரையாகச் சேரக் குடியினருக்குச் சொந்தமாக இருந்து வந்த வீரவாள், உன்கையில் இனி இருக்கட்டும்.

[வில்லவன் வாளை ஏந்தி முத்தமிட்டு]

வில்ல: இந்த வாள் தமிழகத்தின் உயர்வைக் காக்கப் பயன்படட்டும். வீரக்குடியின் வெற்றிவாளை ஏந்தும் யோக்யதையை நான் பெறுவேன் மன்னர் மன்னவா.

[பணிந்து செல்லல்]