அண்ணா கண்ட தியாகராயர்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




அண்ணா கண்ட

தியாகராயர்

 

அறிஞர் அண்ணாதுரை

 


 

பகுத்தறிவுப் பாசறை




சென்னை.

முதற் பதிப்பு : 1950.

 

விலை அணா 0—4—0.

 

ப்ரி பிரிண்டர்ஸ், 147 பவழக்காரத் தெரு, சென்னை - 1

 

முன்னுரை


அன்பின் நிறை உருவாம் டாக்டர் நடேசன், அறிவின் நிறை உருவாம் டாக்டர் டி. எம். நாயர் ஆகியவர்களிடையே செயலாற்றலின் நிறை உருவாய் நின்று திராவிடநாடு இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியார் ஸர்.பிட்டி. தியாகராயர். அவர்கண்ட கனா வெற்றி பெற்றுவரும் இந்நாளில், அவ்வெற்றி இயக்கத்தின் சிகரத்தில் நின்று அதன் தோற்ற வளர்ச்சிகளை அளந்து வருங்காலப் புத்தொளி கண்டு புதுக்கனாக் காணும் சிந்தனைக்கலைச் செல்வர் ஸி. என். அண்ணாத்துரை அவர்களின் சீரமைந்த கருத்துரை ஓவியமாக இச்சிறு நூல் திகழ்கிறது. தியாகராயரின் நினைவுநாட் சின்னமாகத் திராவிடநாட்டுத் தமிழர்க்கு களிப்பூட்டப்படும் இந் நன்முத்து வருங் காலத்தில் ஸர். பிட்டியின் புகழ் மணி மாலைகளுக்கும் நாட்டின் பிற நல்லறிஞர், நல்லியக்கங்களின் நிறைவாற்றல்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அவற்றின் ஒரு முனைமுகமாக விளங்குமாக.

—கா. அப்பாத்துரை.

 

பதிப்புரை


'வாழ்ந்து கெட்ட சமுதாயத்திற்கு ஒரு வழிகாட்டி; ஈராயிரம் ஆண்டுகளாக இருட்டறையில் வீழ்ந்து வெதும்பும் மக்கள் மன்றத்திற்கு ஒரு மணி விளக்கு; தாழ்வு மனப்பான்மையையும், அறிவின் அந்தகாரத்தையும் அகற்றவந்த அறிவுப் புரட்சி அண்ணல்; வாடிய திராவிட இனத்திற்கு வாழ்வு தரவந்த ஒரு ஞாயிறு' -இதுவே அண்ணா காணும் தியாகராயர் சின்னம்.

இதனை விளக்கித்தான் நீண்டதொரு அரிய சொற்பொழிவை அறிஞர் C. N. அண்ணாத்துரை M. A. அவர்கள் 30-6-50 அன்று திருவல்லிக்கேணி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சர். பி. தியாகராயரின் நினைவுநாள் கூட்டத்தில் ஆற்றினார். அந்தச் சொற்பொழிவே இச்சிறு நூல் வடிவில் வெளியிடப் பெறுகிறது, எல்லோர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தால்.

அந் நினைவு நான் /நாள்? கூட்டத் தலைவர் கா. அப்பாத்துரை M.A L.T. அவர்களே இதற்கு முன்னுரையும் எழுதித்தந்தது மகிழ்ச்சிக்குரியது.

சொற்பொழிவை எழுதி உதவிய அன்பர் அன்புப் பழம்நீ அவர்கட்கு எம் நன்றி,

பகுத்தறிவுப் பாசறையார்.

 

அண்ணா கண்ட தியாகராயர்

 

அன்புள்ள தலைவர் அவர்களே, தோழர்களே,

சர். பி. தியாகராயர் திருநாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்த தோழர்களுக்கு முதன் முதலிலே என்னுடைய மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இவ்வளவு இடைஞ்சலான இடத்திலே, இலட்சக் கணக்கான மக்கள், மறைந்த நம் மாவீரர் தியாகராயர் நினைவு நாளைக் கொண்டாடக் கூடியிருப்பதைக்கண்டு பூரிப்படைகிறேன். இந்த இடைஞ்சலான இடத்திலே நீங்கள் உட்கார்ந்து கொண்டு சர். பி. தியாகராயரின் நினைவு நாளைக் கொண்டாடுவதற்குக் காரணம் என்ன? அவர் பெயரைக் கேட்டவுடனேயே உங்கள் உள்ளத்தின் கண்ணே பெருமித உணர்ச்சி ஊடுருவிப் பாய்கிறது, வீழ்ச்சியுற்ற திராவிடத்திற்கு எழுச்சியூட்டி அதற்குப் புது உணர்ச்சி தந்த முதல் வீரர் அவர் என்ற காரணத்தால்!

நம்முடைய கட்சிச்சார்பாக நடைபெறும் கூட்டத்திற்கெல்லாம் சர்க்கார் ஒற்றர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை வரவேற்கிறோம். நம்மிடையே உள்ள சிறந்த உணர்ச்சியையும் சர்க்கார் ஒற்றர் அறிந்து செல்ல வேண்டும். அந்த நாளிலே சர். பி. தியாகராயர் ஏற்படுத்திய அறிவுப் புரட்சி இப்பொழுது எங்கும் பரவியிருக்கிறது. மக்களிடையே காணும் இந்த அறிவுப்புரட்சி எதிர் காலத்திலே சிறந்த பலனைத் தரும்.

அவர் விரும்பியிருந்தால்!

தியாகராயர் பெரிய செல்வந்தர்; பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பினால் வியாபாரத்தின் மூலம் பல இலட்சம் ஈட்டியிருக்கலாம். ஆனால் அவர் அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.


தியாகராயர் விரும்பியிருந்தால் சென்னையிலேயே பெரும்பாலான இடங்களை அவர் சொந்தமாக வாங்கியிருக்க இயலும். பணத்தின் மதிப்பு இன்றிருந்ததை விட அன்று பன்மடங்கு உயர்ந்திருந்தது. இன்றைய இலட்சம் அன்றைய ஆயிரம் ரூபாய்க்குச் சமமானது. அத்தகைய காலத்திலே பல இலட்சம் படைத்த அவர் நினைத்தால் இராமநாத் கோயங்காவைப் போலச் சென்னை நகரையே தன் முதலீட்டுப் பணமாக ஆக்கியிருக்கலாம். அவர் கூப்பிட்ட நேரத்திலே பணியாற்ற பல ஆட்கள் அவரிடம் இருந்திருக்கக்கூடும். எத்தனையோ சீமான்கள், சிற்றரசர்கள், வியாபார வேந்தர்கள் ஜெமீன்தார்கள் உண்டுகளித்து உல்லாச வாழ்வு வாழ்ந்து, களியாட்டத்தில் காலத்தைக் கடத்திக்கொண்டு இன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பதைப்போல தியாகராயரும் இருந்திருக்க முடியும்.


மேலும் தியாகராயர் விரும்பியிருந்தால், பழைய கோயில்களைப் புதுப்பிக்கும் வேலையிலோ, பளிங்கு மண்ட பம் கட்டும் வேலையிலோ ஈடுபட்டிருக்கலாம். அவர் விரும்பியிருந்தால் தெற்கிலுள்ள பழனியைப் போல வடக்கே ஒரு பழனியை உண்டாக்கியிருக்கலாம். இவைகளை ஏற்படுத்துவதற்குரிய பணம் அவரிடம் ஏராளமாக இருந்தது. அவர் இவைகளையெல்லாம் பெரிதாக மதிக்கவில்லை. தன்னுடைய சமூகத் தொண்டை தான் ஒரு பொருட்டாக மதித்தார். திராவிட சமூகத்திலே ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசியலிலே நம்மவர்கள் முதலிடம் பெறவேண்டுமென்று அவர் விரும்பினார். தியாகராயர் போக போக்கியத்தை விட்டு தாமாகவே கல்லும் முள்ளும் காட்டாறும் கருங்குழியும் நிரம்பிய பாதைவழி செல்லத் தொடங்கினார்.

வாடிய பயிருக்கு வந்த மழைத்துளி

சர். தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்கட்குத் தலைமை பூண்டு அவர்களின் தன்னுணர்விற்கு வழிகோலி அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டுச் சமுதாயத் துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்இடம்பெற்று உழைத்தார் நம்முடைய அடிப்படைக் கட்டிடம் பலமாக இருக்க வேண்டுமென்று அவர் அல்லும் பகலும் பாடுபட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் இன்று வளர்ச்சி பெற்றிருப்பதற்கு மூலகாரணமானவர் யார் ? நம் தியாகராயர். திராவிட இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்த பூமான் அவர்.

“நாமிருக்கும் நாடு நமதென்று அறிய வேண்டும். இங்கு நாம் அடிமைகளாக வாழ்வது அடாது” என்பதை அவர் உணர்ந்தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. வாடிய பயிருக்கு வந்த மழைத்துளிபோல, அலுத்த உடல் மீது இனிய தென்றல் போல, கொல்லும் காசத்தைக் கருவறுக்கும் மருந்து போல, அன்று தேய்ந்து வந்த திராவிடருக்கு ஆறுதல் அளித்து அவர்களின் புத்துயிர்களுக்குக் காரணமாகக் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதின் பலனை இன்று காண்கிறோம்.

சமுதாயப் புரட்சிக் கொடி!

இன்று நம் கழகத்துக்கு இலட்சக்கணக்கான அங்கத்தினர்கள், ஆயிரத்துக்குமேல் தொண்டர்கள், நூற்றுக்கணக்கான கழகங்கள், பத்துக்குமேல் பத்திரிகைகள், கணக்கற்ற புத்தகங்கள், இருக்கின்றன. ஆகவே பிராமணர் வலதுகையில் செருப்பு இருப்பதாக யாரும் நம்புவதில்லை. ஆனால் அன்று பிராமணர்களின் வலதுகையிலே நெருப்பு இருந்ததாக சொல்லப்பட்டது. இன்றோ எல்லோர் உள்ளத்திலும் தான் அத்தகைய நெருப்பைக் காண்கிறோம். தியாகராயர் அன்று பிரிட்டிஷாரை எதிர்க்கவில்லை! அவர் சென்ற பாதை-பார்ப்பனரல்லாதார் சேவை-அன்று என் பயங்கரபாதையாக இருந்தது எனில் அது அந்தக் காலத்தில் செப்பனிடப்படாத, புதிய, பலர் சென்றறியாத பாதை. சாஸ்திரிகளின் சீற்றம் எனும் குழிகளும், ஆச்சாரிகளின் ஆத்திரம் எனும் அந்தகார வளைவுகளும், மற்றும் எதிர்ப்பு, ஏளனம், சாபம், சூழ்ச்சி எனும் பல்வேறு தொல்லைகளும் சர்.பி. தியாகராயர் சென்ற பாதையில் அடிக்கடி உண்டு. அது அவருக்குத் தெரியும். நன்கு தெரிந்துதான் அவர் அந்தப் பாதைவழிச் சென்று, சமுதாயப் புரட்சிக் கொடியைப் பறக்கவிட்டார்.

திராவிட வீரனே, விழி, எழு, நட!

தியாகராயர் நாட்டுப் பெருங்குடி மக்களைப் பார்த்துச் செய்த உபதேசம் பார்ப்பனீயத்துக்குப் பலியாகாதே என்பது தான். “மதத்திலே அவன் தாகு வேண்டாம், கல்வியிலே அவன் போதனை வேண்டாம், சமுதாயத்திலே அவன் உயர்வுக்கு உழைக்காதே, அரசியலிலே அவன் சூழ்ச்சிக்கு இரையாகாதே! திராவிட வீரனே, விழி, எழு, நட! உன் நாட்டை உன தாக்கு” என்றார் தியாகராயர். அன்று முதல் தியாகராயரின் உருவம் தென்னாட்டில் புரட்சியின் அறிகுறியாகிவிட்டது. இன்றோ நம்மிடம் பெரும்படையிருக்கிறது. பார்ப்பனீயத்தை எதிர்க்கும் பெரியபடை நம்மிடம் இருக்கிறது.

அவர் தூவிய விதை

அவர் களத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதாள் நாம் இன்று பணியாற்றி வருகிறோம். அன்று அவர் துணைக்கு டாக்டர் நாயர் கிடைத்தார். டாக்டர் நாயருடன் பார்ப்பனீயத்தை எதிர்க்க ஒரு நல்ல போர் முகாமை அன்று அவர் ஏற்படுத்திக் கொண்டார். பார்ப்பனீயம் என்றால் என்ன என்பதை அவர் மக்களுக்கு நன்கு எடுத்துரைத்தார். இதை நாம் இன்று நன்கறிகிறோம். பல ஆண்டுகளாக நாம் பார்ப்பனீயத்தை எதிர்த்து பல வெற்றிகளைக் கண்டிருக்கிறோம். இங்கு நாம் வெற்றிக் களிப்போடு கூடியிருக்கிறோம். ஆனால் நம் வெற்றிகளின் எதிரொலியாக எதிர்முகாமில் பரபரப்புக் காணப்படுகிறது. C. N. அண்ணாதுரை எந்த செக்ஷனிலே அகப்படுவான்? 153-லே அகப்படுவானா? எந்த சட்டப்பிரிவிலே அவனைப் பிடிக்கலாம் என்று தான் சர்க்கார் இருக்கிறார்கள். உண்மைபிலே இது நீதிப்படியல்ல. சர்க்காருக்கு ஏற்பட்டிருக்கும் பீதியாலேதான். சர்க்கார் நம்மைக்கண்டு மருளுவது பயத்தின் விளைவாகும். அன்று பார்ப்பனர் ஆதிக்கம் கண்டு பார்ப்பனரல்லாதார் அஞ்சினார்கள். இன்று அஞ்சுபவர் பார்ப்பனர்கள் தான். ஆனால் உண்மையில் அவர்கள் அஞ்சத் தேவையில்லை.

பார்ப்பனரை யல்ல-பார்ப்பனீயத்தை!

பார்ப்பன நண்பர்களே, பயப்படாதீர்கள் ! நாங்கள் உங்களுக்கு எதிரிகளல்ல! நாங்கள் எதிர்த்து வருவது பார்ப்பனீயத்தைத்தான். உங்களிடையே புகுந்த பார்ப்பனீயத்தைதான் நாங்கள் எதிர்க்கிறோம், எதிர்த்துக் கொண்டே நாங்கள் வளருகிறோம். இன்னும் வளர்ந்து கொண்டே செல்கிறோம். எங்கள் வளர்ச்சியைத் தடுக்காதே! தடை செய்யாதே ! எங்கெங்கு எங்கள் வளர்ச்சிக்குத் தடை செய்கிறாயோ, அங்கெல்லாம் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். உம்மிடையே பல்லாண்டுகளாக நீக்கமுடியாமலிருக்கும் பார்ப்பனீயத்தை ஒழித்து செம்மிடையே புதிய உறவு ஏற்படுத்திக்கொள்ள விரும்பினால் ஏற்படுத்திக்கொள். ஆனால் பார்ப்பனீயத்தை வளர்க்க விரும்பாதே! தியாகராயர் அன்று உண்டாக்கிய அறிவுப் புரட்சி இன்று எங்களிடையே எவ்வளவு தூரம் வளர்க்திருக்கிறது என்பதைக் கண்டு களி. பள்ளிக்கூடங்களிலே இடம் கிடைக்கவில்லையே என்ற பயம் உன்னிடம் குடி கொண்டிருக்கிறது. இதற்காக அல்லாடியையும் வைதீகவரதாச்சாரியையும் அழைத்துக்கொண்டு கோர்ட்டுக்குப் போகிறாய்! சட்ட புத்தகத்தைப் புரட்டிப்பார்க்கிறாய்! என்ன என்னவோ செய்கிறாய்! சட்டத்தில் வெற்றி பெற்று விட்டால் கூட என்ன ஆய்விடும்? அதனால் பிரச்னை தீர்ந்து விடுமா? நாட்டு மக்களிடையே உள்ள அதிருப்தியை அது பெருக்குமே அன்றிக் குறைக்காது. உங்களுக்குப் பள்ளிகளில் இடங்கிடைக்கவில்லை யென்றால் நேர்மையாக நீங்கள் செய்யவேண்டிய தென்ன ? இன்னும் அதிக பள்ளிகள், கல்லூரிகள் அமைக்க வேண்டுமென்று அரசாங்கத்தைக் கேளுங்கள். அதை விட்டுவிட்டுத் தகுதி-திறமை என்று கூறாதீர்கள். கெடுவழி செல்லாதீர்கள். இவை பிரச்னையைத் தீர்க்கும் வழிகளல்ல, பெருக்கும் வழிகள்.

முதலில் அறிவுப் புரட்சி

திராவிடர் என்ற உணர்ச்சியும் திராவிட நாடு என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிதைந்து வந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப்போரிட்டுச் சீர் கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு ஒரு குறையுமில்லை. மற்ற பிரசாரங்களை விட அறிவுப் பிரசாரம் தான் முக்கியமானதென்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத் துவக்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு நாமளைவரும் பூரிப்படைகிறோம். இன்றைய தினம் திராவிட இனம் வளர்ந்திருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அன்று தியாகராயர் மத விஷயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை எதிர்க்கவில்லை. ஏனென்றால் முதலில் அவர், திராவிடர்களுக்கு தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன் முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத விஷயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.

அன்றும் இன்றும்

அந்த நாளிலே டாக்டர்களிலே சிறந்தவர் யார் என்றால் டாக்டர் ரங்காச்சாரிதான் சிறந்தவர் என்று கூறப்பட்டது. இப்பொழுது டாக்டர்களிலே சிறந்தவர் யார்? டாக்டர் குருசாமி. இதைக் கேட்டு நாம் பூரிப்படைகிறோம். அந்த நாளிலே ஆங்கிலத்தில் பேசுவதிலே யார் சிறந்தவர் என்றால் ரைட் ஆனாபிள் - சீநிவாச சாஸ்திரியார் என்று மயிலையும் திருவல்லிக்கேணியும் சொல்லிற்று. இன்று நம் திராவிடப் பெருங்குடி மக்களிலே சிறந்த பேச்சாளர் யார்? என்றால் சர். ஏ. இராமசாமி முதலியார் என்றே யாவரும் கூறுவர். சிறந்த பொருளாதார நிபுணர் யார்? என்று அன்று கேட்டால் யார் யாரையோ கூறுவர். இன்று நம் சர். ஆர். கே. சண்முகம் தான் அங்கனம் யாவராலும் போற்றப்படுபவர். அல்லாமலும் தமிழிலே சிறந்த பாடகர் யார்? அன்று எஸ். ஜி. கிட்டப்பா என்று கூறப்பட்டது ; இப்பொழுது எம். கே. தியாகராஜ பாகவதர். நகைச்சுவையிலே மன்னன் யார்? அன்று ஒரு சாமண்ணா இன்று நம்முடைய என். எஸ். கிருஷ்ணன் ஹிந்து பத்திரிகையிலே எழுதப்படும் தலையங்கங்களை விட சிறந்த தலையங்கங்களை ஆங்கிலத்தில் தீட்ட நம்மிடையே டாக்டர் கிருஷ்ணசாமி இருக்கிறார்.

இன்று நம் சமுதாயம் மாறி எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. இன்று நம் திராவிடப் பெருங்குடி இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு யார் காரணம் ? நம்முடைய தியாகராயர்தான். பேச்சுத் துறையிலே, பாடல் துறையிலே, வைத்தியத்துறையிலே, பொருளாதாரத்துறையிலே மட்டுமல்ல; எந்தத் துறையிலும் திராவிடர்கள் அவர்களுடைய வல்லமையைக் காட்ட முடியும். தியாகராயருக்குப் பின் நிலைமைகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. இன்னும் மாறும் கடலடியில் சென்று முத்தெடுப்பவர்கள் என்றும் திராவிட இனத்தவரே. வேண்டுமானால் நாம் எடுத்த முத்து ஒரு ஆரிய மங்கையின் காதுகளை அணி செய்யலாம். ஆனாலும் கடலிருக்கிறது. கடலுள்ள அளவும் முத்து இருக்கும். முத்து உள்ள அளவும் நாமும் இருப்போம். ஆகவே நமக்கு எதிர்காலம் எப்போதும் உண்டு. ஆனால் ஆரியம், அறிவு வளர்ச்சியடைந்தபின் ஆரியமாக வாழாது. ஆரியமாக மதிப்புப் பொது. சாக்ரடீஸ், வால்த்தோ , லெனின் ஆகிய மூவரது புரட்சியின் கூட்டுறவு தம் இயக்கம்.

விசித்திர வைதீகர்கனை வீதி சிரிக்கவைத்தார் சாக்ரடீஸ், சாக்ரடீசுக்குப் பின்னர்தான் வால்த்தேர் வைதீகத்தின் மடமையை வாட்டினார். மூடநம்பிக்கையை முறியடித்தார். உலகமுணராத வைதீகா் உலகம் தட்டை என்று நம்பினர். ஆனால் அது உருண்டை என்று அவர்கள் உணர வைத்தார் காலிலியோ. அதற்காக காலிலியோ அன்று தாக்கப்பட்டார். இவ்வளவு புரட்சிக்குப்பின் ரூசோ கிளம்பி மக்கள் மன்றத்துக்கு மதிப்புத் தரவேண்டுமென்றார். வேத புத்தகத்தை, விபசார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர் விக்ளிஃவ், ஜிவிங்கிளி, கால்வின் முதலியோர். பின்னர் முதலாளிகளின் கொடுமைக்காகப் போராடினார் காரல்மார்க்ஸ். காரல்மார்க்சுக்குப்பின் முதலாளிகளிடம் போராட லெனின் தோன்றினார்.

கூர்முனைப் பேனா கொண்டு அரண்மனைகளை, அஞ்ஞானிகளின் இருப்பிடங்களை, பழமையின் கோட்டைகளைத் தாக்கிய வீரன் வால்த்தேர் வெற்றி பெற்ற பின்னர் தான் புரட்சித்தேவன் லெனின் போராடி வெற்றிபெற முடிந்தது. சமுதாயத் துறையிலே வால்தேர் ஒரு புரட்சியை உண்டாக்கிய பின்னர்தான் மக்கள் லெனினை வரவேற்றார்கள்

முதலிலே சாக்ரடீஸ், பின்னர் வால்த்தேர், அதற்குப் பின் லெனின். இந்த மூன்று சம்பவங்களும் வேறுவேறு காலத்திலே நடைபெற்றன. இவ்வளவும் சமுதாயப் புரட்சிக்காகவே நடைபெற்றது. ஆனால் இவர்களிடையே வேறு சீர்திருத்தமில்லாமலில்லை. சாக்ரடீஸை அடுத்து பிளேட்டோ; வால்தேரையடுத்து ரூஸோ; மார்க்ஸை அடுத்து லெனின். இங்கனம் மூட நம்பிக்கை எதிர்ப்பும், அறிவுப் புரட்சியும் சமூகப் புரட்சியும் எங்கும் விரவியுள்ளன. ஆனால் நம் நாட்டில் இம் மூன்றையுமே நம் இயக்கம் ஒருங்கே நடத்த வேண்டியிருக்கிறது. இதனால்தான் நம் புரட்சி மூன்று புரட்சிகவின் ஒரு கூட்டாயிருக்கிறது.

முதன் முதலிலே மக்களுக்கு அறிவுப் புரட்சியை உண்டாக்கிய பின்னர் தான் மதம், கலை, கலாசாரம் ஆகியவற்றிலே அவர்களைத் திருத்தமுடியும், தியாகராயர் தான் முதலிலே நம்முடைய அறிவுக் கண்களைத் திறந்தார். அதைக் கொண்டுதான் நாம் இன்று மதத்தை எதிர்க்கிகிறாம். வேறுபல மூட பழக்கவழக்கங்களை முறியடித்தும் நாட்டின் நலிவைப் போக்கப் பாடுபடுகிறோம், இன்று நம் இயக்கம்,

“தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின் பொடியு மிகக் கலந்தே,
தனித்தநறுந் தேன்பெய்து பசும் பாலுந்தெங்கின்,
தனிப்பாலுஞ் சேர்த்தொரு தீம்பருப்பிடியும் விரவி
இனித்தாறு செய்யளைந்தே யிளஞ்சூட்டில் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும்”

இயக்கமாக மாறியிருக்கிறது. இப்படி மாறியிருக்கும் நம்முடைய இயக்கத்துக்கு சர்க்காரால் 144, 124, 153 போடப்படுகிறது.

பார்ப்பன அன்பர்களுக்கு

பார்ப்பனர்கள் ஆதிக்கத்தோடு இருந்த காலத்தில் நம்முடைய சிறுவர்கள் பல இடுக்கண்களிடையே படிப்புப் பெறமுடியாமலிருந்தது. அதைப் பயன்படுத்தி அவர்கள்தான் அதிகமாகப் படித்து வந்தார்கள்! பிராம்மண நண்பர்கள் நம்மைப்பார்த்து, “உங்கள் மாணவர்களே இனி படிக்கட்டும், நாங்கள் வேறு வேலையிலே ஈடுபடுகிறோம்” என்று சொல்லுவார்களா?

பிராம்மண நண்பனே,

நீ இப்படி சொல்லிப்பார், பார்க்கலாம்! இப்படி சொல்லுவாயா, சொல்லமாட்டாயே! “பல ஆண்டுகளாக நாங்கள் படித்தது போதும். வேத ஆகமங்களை கற்கப் போகிறோம். வருங்காலத்திலே அதற்கு நல்ல மதிப்பை நாங்கள் உண்டாக்கப்போகிறோம்” என்று வேத ஆகமம் படிப்பதிலே நாட்டம் செலுத்துவதுதானே ! இனி வேத ஆகமத்துக்கு நாட்டிலே மதிப்பு ஏற்படுமோ ஏற்படாதோ என்ற பயமா உனக்கு? கல்லூரிகளிலே உனக்குத்தக்க இடமில்லாததற்காக சி ஆருக்கு தூது அனுப்புகிறாய், சர். அல்லாடியைத் தேடி அலைகிறாய், நேருவுக்குத் தந்தி கொடுக்கலாமா என்கிறாய்! பதட்டத்துடன் படேலை நாடுகிறாய்.

இப்படியெல்லாம் நீ தூது போய் என்ன சாதித்துவிட முடியும்? மேலிடத்துக்குத் தூது சென்றுதான் பாரேன். வேண்டுமானால் ஹிந்து பத்திரிகையிலே ‘கல்வியும் பதவி களும்’ (Education and Employment) என்று தலையங்கம் எழுதச் சொல்.

எங்களிடம் வந்து பழையபடி கலப்பையையும் ஏரை யும் எடுத்துக்கொண்டு கிராமப்புணருத்தாரண வேலையிலே ஈடுபடுங்கள் என்று சொன்னாலும் சொல், கிளர்ச்சி செய்! இதை யாரும் தடுக்கமாட்டார்கள். உனக்கு தைரியமிருந்தால் எதையும் நியாயப்படி—முறைப்படி கேள். அதற்கு நாங்கள் பதில் சொல்லுகிறோம்.

எங்களுக்குப் பின்

இன்று இருப்பதிலே நாங்கள் தான் மிதவாதிகள். (Moderate) இது தெரியுமா உனக்கு? எங்களுக்குப்பின் இருப்பது புயல் ! அந்தப் புயலை நாங்கள் அடக்கி நேர்வழியில் செலுத்துகிறோம். எங்களைப் புறக்கணித்தால் எங்களுக்குப் பின்னால் வருவது பெரும் புயலாகத்தான் இருக்கும். ஆகவே பார்ப்பன அன்பர்கள் இந்தப் பழைய முறைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.

இங் பக்தி அங்கு அணுசக்தி

இந்த நாளிலே அணுசக்தியும் அதற்கு மேற்பட்ட புதிய சக்திகளும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அணுசக்தியிலிடுபட்ட கழிவுப் பொருள்களை எங்கே போட்டு வைப்பது என்று பார்த்துச் சந்திர மண்டலம் அதற்கு ஏற்றதா என ஆராய்ந்து வருகிறார்கள் மேனாட்டாசிரியர்கள். அவர்கள் சந்திர மண்டலத்தைத் தங்கள் குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள். ஆனால் இங்கேயோ சந்திரன் ஆரணங்குகளுடன் லீலை பல புரிகிறான் என்ற கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. புதிய செய்திகள் தேடிக்கண்டு பிடிக்கப்பட்டு பக்தியாக்கப்பட்டு வருகின்றன. இந்த நாளிலே பத்திரிகையிலே விநோதமான செய்திகள் வருகின்றன

“துஷ்டர்களால் சுட்டெரிக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோயிலின் கர்ப்பக்கிரகத்தில் புரோகிதர் சென்று நாசமடைந்து அலங்கோலமாகக் கிடந்தவற்றை எடுக்கையில் 12 அடி நீளமுள்ள பெரிய பாம்பு ஒன்று உடைந்து போன விக்கிரகத்தின் கீழ் படுத்துக்கொண்டிருந்தது. சுற்றியிருந்தவர்கள் அப்பாம்பைத் தாக்க கற்களை எடுத் தனர். ஆனால் திருவாங்கூர் தேவஸ்தான போர்டின் தலைவர் பி. ஜி. என். உன்னித்தன், மெல்ல அந்தப் பாம்பினிடம் சென்று அதன் படத்தைத் தட்டிக்கொடுத்து “அய்யப்பா, தயவு செய்து போ” என்று உரத்த குரலில் சொன்னார். அந்தப் பாம்பும் அவர் காட்டிய திசையில் மெல்ல நகர்ந்து சென்றது.” இதுபோன்ற செய்திகள் பிரமாதமான தலைப்புகளுடன் பிரசுரிக்கப் படுகின்றன. கட்டம் கட்டியும்—பெரிய எழுத்தில் அச்சுகோர்த்தும் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்வம் தரப்படுகிறது. இந்தச் செய்தி தவறானது என்று அதற்குப்பின் செய்தி வருகிறது. ஆனால் இந்த மறுப்பு மட்டும் 3 காலத்தில் போடப்படுவதில்லை. எங்கோ மூலையில் இடுவார்கள்.

பத்திரிகையிலே இன்னொரு செய்தி வருகிறது. கோடம்பாக்கத்திலே ஒரு சாமியாரைப்பற்றி. சாமியார் சமாதியில் இறங்கப்போனாராம். சாமியார் தான் குறிப்பிட்ட தினத்தன்று இந்த இகலோகத்தைத் துறந்து பரலோகம் போய்விடவில்லை! சாமியார் சாகப்போவதைக் காண மக்கள் கூடியிருந்தனராம்—ஆனால் அவர் குறிப்பிட்ட நள்ளிரவு கடந்து வெகுநேரமாகியும் ‘தேகவிநியோகம்’ ஆகவில்லை! சீறியிருக்கின்றனர் மக்கள். “தெகிடுதத்தக்காரா, ஜோதியில் ஐக்கியமாகப்போவதாகச் சொன்னாயே—ஏன் இன்னும் சமாதி அடையவில்லை!” என்று சாமியாரை நோக்கிப் பாய்ந்திருக்கின்றனர். சாமியாரோ, "ஆத்மாவை அய்யன்பால் வைத்து அசையாது மோன நிலையிலிருப்பேன் என்று சொன்னேனே யொழிய, செத்துவிடப்போவகாகச் சொல்லவில்லையே” என்று ஏதேதோ ஏமாற்றுவித்தைகளைக் கொட்டியிருக்கிறார்—வேஷதாரிகளின் மோசப்பேச்சில் மயங்கிய மக்களோ, கொதித்து எழுந்திருக்கின்றனர் அக்கோவணாண்டியை நோக்கி, மக்களுக்கும்—சாமியாருக்குமிடையே போலீசார் வந்ததால் நிலைமை கட்டுக்கடங்கியிருக்கிறது. கோடம்பாக்கத்திலே ஒரு சாமியார் சமாதியிலிறங்கப்போன செய்தியையும் அய்யப்பன் கோயிலிலே பாம்பு வந்துபோன செய்தியையும் மக்கள் பகுத்தறிவுபெற்றுவரும் இந்த நாளிலே மக்களின் அறிவுத்தூதுவனாக இருக்கவேண்டிய பத்திரிகைகள் வெளியிடுவது நல்லதல்ல.

மக்கள் மனத்தை மாய்த்துச்சாய்க்கும் மடமை ஒழிந்து மறுமலர்ச்சி தனது வேகமுத்திரையைப் பொறித்துக்கொண்டிருக்கிறது. உலகில் மூட நம்பிக்கை, முறியடிக்கப்பட்டு, முன்னேற்ற எண்ணங்கள் முகிழ்த்துக்கொண்டு வருகின்றன நாள்தோறும்.

இத்தகைய சூழ்நிலையை வளமாக்கி பாதையைச் செப்பனிடும் பொறுப்பு பத்திரிகையாளர்களுடையது, மதத்தை ஒழித்து, மூடப்பழக்கங்களை முறியடித்து, மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவே நாம் இன்று பாடுபடுகிறோம்.

நம்திட்டம்—அவர்கள் நிறைவேற்றுவார்கள்

சட்டசபையில் இனி அமரப்போகும் மந்திரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் நம்மவர்களாகவே இருப்பார்கள். நமக்கு வேண்டியது பதவி அல்ல! பதவியிலிருப்போர் நம்மவர்களாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள். நாம் நெடுநாளாக கூறிவரும் திட்டங்களை நாம் போய்த்தான் நிறைவேற்றவேண்டுமென்றில்லை. எதிர்பாராதபடி பிறர் நிறைவேற்றியே வருகிறார்கள். இனியும் இதுபோல பல சட்டங்களை நிறைவேற்றுவது உறுதி. திராவிடப் பெருங்குடி மக்களிடையே இன்று ஏற்பட்டுள்ள எழுச்சி வருங்காலத்திலே பெரும்பயன் அளிக்கும். அரசியல், பொருளாதாரம்—இவற்றிலே நாம் இனி நல்ல உயர்வை எதிர்பார்க்கமுடியும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை ஆதரித்து மந்திரி மாதவமீனனே அகில இந்திய ரேடியோவிலே பேசக்கூடிய நிலை வந்திருக்கிறது! கதராடையும் காந்திகுல்லாயும் தரித்திருக்கும் காங்கிரஸ்காரர்களிலே பலபேர் இன்று வகுப்பு வாரிப்பிரதிநிதித்துவத்தை ஆதரித்துப் பேசுகிறார்கள், சட்ட சபையிலே இனி எந்தக்கட்சி வந்தாலும் அந்தக் கட்சி நம் கழக வேலைகளைச் செய்யும்.

ஒருவனுக்கு ஒரு மனைவிக்குமேல் கூடாது என்று 25 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லடிபடப் பேசினோம். இப்பொழுது என்ன ஆயிற்று? சட்டமே வந்துவிட்டதே! முருகர் கடவுளாக இருக்கிற காரணத்தால் அவருக்கு விதிவிலக்கு ஏற்பட்டிருக்கிறது. முருகக்கடவுள் மனிதராக இருந்தால் இன்று சர்க்காரால் தண்டிக்கப்பட்டுச் சிறையிலே தள்ளப்பட்டிருப்பார்.

அன்று வீதியோரங்களிலே நின்று கொண்டு கலப்பு மணம் வேண்டுமென்று பேசினோம். இன்று காட்டிலே பல இடங்களிலே கலப்புமணம் நடைபெறுவதைக் காண்கிறீர்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டுமென்று பேசினோம். இன்று டில்லிவரை இதற்காகப் போராடுகிறார்கள். நம்முடைய மன எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது. மதுரையிலே சைவமதத்தை எதிர்த்தனர் என்ற காரணத்திற்காக 8000 சமணர்களை மதவெறியர்கள் கழுவேற்றினார்கள். இதனால் சமணர்கள் அழிந்துவிட்டார்களா என்ன?

வென்றது, வெல்வது அறிவு : அடக்கு முறையன்று

சர்க்கார் நம்மீது வீசும் அடக்குமுறை பெரிதல்ல. அடக்குமுறை ஆபத்தான கமட்டுமல்ல! அடக்குமுறை ஒரு விசித்திரமான சக்தி அதைக்கண்டு அஞ்சுபவர்கள் நாங்களல்ல. அடக்கு முறையைக் கொண்டே கட்சியை நடத்த முடியாது. மக்களை மடமையினின் றய மீட்போம், மனித சமுதாயத்தைப் பயம் என்ற சுடுகாட்டிலிருந்து வாழ்வு மாளிகைக்கு அழைத்துச் செல்லுவோம். “மனித உலகே எனது கடவுள். அதற்குச் சேவை செய்வதே என் மதம்” என்று முழக்கமிட்ட சாக்ரடீசுக்கு மதவெறி நச்சுக் கோப்பையைத் தந்தது, பரிசாக! ஆனால் அழித்தது மதவெறி, அதற்காக உயிர்விட்ட ஸாக்ரட்டீஸின் தத்துவமல்ல. உலகத்தைப்பற்றிய உண்மையை உணராதவர்களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ ! இன்று உலகம் இவர்களைப்பற்றி என்ன பேசுகிறது?

ஜார் அரசனின் கொடுங்கோன்மையைக் களைந்து சமதர்மக் கொடியைப் பறக்கவிட்ட லெனினைப்பற்றி இன்று உலகம் என்ன பேசுகிறது?

மாஜி மந்திரி ஓமந்தூரார் இப்பொழுதுள்ள சர்க்காரைப்பற்றி விவசாயிகளிடையிலே என்ன பேச்சுப் பேசுகிறார் என்பது தெரியுமா உங்களுக்கு! மந்திரி அவிநாசி யார் இந்தி ஏகாதிபத்தியத்தை வன்மையாகக் கண்டித்திருப்பதைப் பார்த்தீர்களா? நிலைமை எவ்வளவு மாறியிருக்கிறது பாருங்கள்.

நாம் எவ்வளவோ வெற்றிகளைப் பெற்று வருகிறோம். திராவிட நாடு–ஜாமீன் வழக்கிலே நாம் பெரும் வெற்றி பெற்றோம். மக்கள் மன்றத்திலே இப்பொழுது பல வெற்றிகளைப் பெற்று வருகிறோம். எனெனில் நம் வாதத்தில் நேர்மை உண்டு. ஆம் அத்துடன் வாதாடுவதிலே நாம் திறமைசாலிகள் என்பதும் உண்மையே. அதையும் மறைப்பானேன்! வாதாடுவதிலே திறமையுள்ளவர்கள் என்பது மட்டுமல்ல, வெற்றிக்குக் காரணம். நம்முடைய வழக்குகள் நியாயமானவை, நேர்மையானவை. ஆதலால் தான் அவ்வளவு சுலபத்திலே நமக்கு வெற்றி கிடைக்கிறது.

தியாகராயர் வகுத்த அடிப்படை

தியாகராயர் தான் நாம் வெற்றிமேல் வெற்றி பெற வழிகாட்டினார். இருட்டு அறைகளிலும் காட்டு நிலத்திலும் கூட்டம்கூடி இயேசுநாதர் உபதேசத்தைக் கேட்டு உலகம் உயர்ந்தது போல, தியாகராயரின் சொற்கள் தென்னாட்டில் மெள்ள மெள்ள ஏழை எளியோர் குடிசையில் குடி புகுந்து பின்னர் மாளிகைகளிலெல்லாம் சென்று மக்கள் மன்றத்திலே புதியதோர் எழுச்சியை உண்டாக்கி விட்டது.

சர். தியாகராயர் புதுமை பல செய்து காட்டினார். அதிலே தலை சிறந்த புதுமைதான் இந்தப் பார்ப்பனரல்லாதார் புரட்சி. அது மிக அபூர்வமான வெற்றியைக் திராவிடருக்குத் தந்தது.

தியாகராயரைப்பற்றிய தொகுப்பு நூல் ஒன்று நமக்கு மிகமிகத் தேவை. திருவல்லிக்கேணி திராவிட—முன்னேற்றக் கழகத்தார் இந்த நல்ல பணியிலே ஈடுபட வேண்டும். தியாகராயரின் குடும்பத்தாரிடமும் தியாகராயரின் அன்பர்களிடமும் சென்று அவரைப்பற்றிய முக்கியமான குறிப்புகளைச் சேகரித்து அடுத்த ஆண்டிலே தியாகராயரைப்பற்றி அழகிய தொகுப்பு நூலை வெளியிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். சர். பி. தியாகராய செட்டியார், டாக்டர். நடேச முதலியார் ஆகிய இருவரின் சரித்திரமே இன்னும் எழுதப்படவில்லை. தமிழ் ஆராய்ச்சியிலும் தமிழ்த்தொண்டிலும் ஈடுபட்டிருக்கும் நம்முடைய அறிஞர் கா. அப்பாதுரை அவர்கள் இந்தப் பணியிலே ஈடுபடவேண்டுமென்று அவரையும் அன்புடன் வேண்டிக் கொள்ளுகிறேன்.

கூட்டம் கூடி நாம் பேசுவதோடு நில்லாமல் இது போன்ற ஆக்கவேலைகளிலும் ஈடுபடவேண்டுமென்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தியாகராயர் வாழ்க்கைக் குறிப்புகளோடு டாக்டர். நடேச முதலியார் அவர்களின் வாழ்க்கையையும் சேகரிக்க முற்படுங்கள். நம்மை விட்டுப் பிரிந்த இவ்விரு பெரியார் சரித்திரமும் அவசியம் எழுதப்பட வேண்டும்.

மறைந்த நம் மாவீரர்—வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் நினைவு நாளை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடிய உங்களை மனமுவந்து பாராட்டுகிறேன்.

தியாகராயர் நம்மைவிட்டுப் பிரிந்தார். ஆனால் அவரது ஞாபகம் நம்மை விட்டுப் பிரியாது. சர். பி. தியாகராயர் அரும்பாடுபட்டு வளர்த்த கொள்கைகளைக் கடைப்பிடித்து அதனின்றும் வளர்ச்சி பெற்று உயர்ந்தோங்கி வந்திருக்கும் திராவிடர் இயக்கம் வெற்றி மேல் வெற்றி பெறும் சான்ற உறுதியோடு நீங்கள் வீடுசெல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டு என் பேச்சை முடிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணா_கண்ட_தியாகராயர்&oldid=1548023" இலிருந்து மீள்விக்கப்பட்டது