அண்ணா சில நினைவுகள்/அத்தான்! திராவிடநாடு வேண்டும்!

அத்தான்! திராவிட நாடு வேண்டும்!


ண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றவுடனே, வெளியிலிருந்து யாரையாவது நேர்முக உதவியாளராக நியமிக்கலாம் என்று சிந்திக்கப்பட்ட நேரத்தில், ப. புகழேந்தி அங்கே இருந்தாராம். எப்படியோ அந்தச் சமயத்தில் நான் அங்கு இல்லை. அண்ணா சொல்லியிருக்கிறார்கள்- “யாரையாவது போடுவதென்றால், நம்ம கருணானந்தம் அல்லது புகழேந்தி - இந்த மாதிரி ஆட்களைத்தான் போடணும். ஏன்னா, இவுங்க எப்பவுமே எதையும் எதிர்பார்த்து, நம்மகூட இருக்கலெ! இவுங்களாலெ எனக்கு எந்த பிராப்ளமும் ஏற்படாது!” என்று. அதன் பிறகு, நண்பர் கஜேந்திரனைப் போட்டு, அவரால் அண்ணாவுக்குப் பெருமையா சிறுமையா? உதவியா உபத்திரவமா? என்பது விவாதத்துக்குரிய பிரச்சினையானது!

சில நாள் கழித்து ஒருமுறை அண்ணா என்னிடம் நேராகவே கேட்டார்கள்:- “ஏய்யா! இப்ப, செய்தித் துறைக்கு ஒரு டைரக்டர் போடணும். நீ வர்றியா?” என்று. “இல்லையண்ணா! நீங்க முதலமைச்சரா இருக்கறதையும், மற்ற நம்ம தோழர்கள் அமைச்சரா யிருக்கறதையும், இப்ப நான் இருக்கிற தொலைவிலேயே இருந்து பார்க்கத்தான் நான் விரும்புறேன். ரொம்ப நெருங்கி வந்துட்டா, இந்த மரியாதை இருக்காது! என்னை மன்னிச்சுடுங்க அண்ணா!” என்று பவ்யமாகப் பகர்ந்தேன். “நீ இல்லேன்னா, நம்ம மாறன் அல்லது செல்வம் இவுங்களைப் போடலாம். பத்திரிகை அனுபவ முள்ளவர்கள்தான் பயன்படுவாங்க!” என்று அண்ணா சொன்னதன் மூலம், என்னைக் காப்பாற்றினார்களே, அது போதும் எனக்கு.

என்னைப் பொறுத்தவரையில் நான் என்றைக்கும் சுயமரியாதைக்காரன். 1952 முதல் முழுமையாக தி.மு.க. கைத்தறியாடை அணியுமாறு அண்ணா பணித்தது முதல் வேறு ஆடை அணிவதில்லை. அஞ்சல் துறையிலிருந்த போதே நண்பர் G. லட்சுமணனும் நானும் கருப்பு சிவப்புக் கரைபோட்ட கைத்தறி வேட்டியும் அங்கவஸ்திரமும் எப்போதும் அணிபவர்கள்.

தி. மு. கழகத்தின் பொதுக் கூட்டம், மாநாடு, தேர்தல் போராட்டம் எதுவாயினும் உதவியோ பதவியோ எதிர் பாராமல் என் பங்கைச் செலுத்தி வருபவன். எந்த நேரத் திலும் எந்தப் பயனையும் நன்றியையும் எதிர்பார்த்த வனல்லன். வாழ்நாள் முழுவதும் அரசுச் சம்பளத்தில் வாழ்ந்தவன். திராவிடநாடு கொள்கை என் குருதியில் கலந்துவிட்ட ஒன்று. என் மூச்சும் பேச்சும் அதுதான் என்பதற்கு, என் பழைய கவிதைகளே சான்று!

அண்ணா 1963-ல் ஒரு தடவை சொன்னது மறக்க வொண்ணாதது. “ஏன்யா! திராவிடநாடு பொங்கல் மலரில் ஒரு கட்டுரை எழுதப்போறேன். அதற்காக நமது கவிஞர்களின் கவிதைகளிலிருந்து சில அடிகளை மேற்கோள் காட்டத் தேர்ந்தெடுத்தேன். பொங்கல் விழா ஆகையால் பொதுவான வரிகளாயிருக்கட்டுமே என்று தேடினேன். கடைசியாக ஒன்றே ஒன்று கிடைத்தது. நீ ‘அத்தான்’ என்று தொடங்கினால் கூட, ‘ஆகையால் வேண்டும் திராவிடநாடு’ என்றுதான் உன் கவிதையை முடிக்கிறாய்” என்று கூறியது, என்பால் குறையல்லவே! என் நிறையே இதுதான்! அண்ணா தொடர்ந்து உரைத்தார்கள். இனி, சில கவிதைகளைப் பொதுவாகவும் எழுது!” என்று. அவ்வாறே அதற்குப் பின்னர் நிரம்ப எழுதியுள்ளேன்; அண்ணாவின் ஆணையை நிறைவேற்றுமுகத்தான்!

1956 “திராவிட நாடு” பொங்கல் மலரில் நான் இப்படி ஒரு கவிதையை எழுதியிருந்தேன்

உலகம் வியக்க நிலவிய புகழும்,
கழகம் வளர்த்த பழந்தமிழ் மொழியும்,
அறநெறி பரப்புங் குறள்நெறி தழுவிப்
பிறரைப் பணியாத் திறலும் படைத்த
தந்நேர் இல்லாத் தமிழக உழவர்–
பொன்னேர் பூட்டிச் செந்நெல் விளைத்தே
ஆண்டின் பயனை அடைந்திடும் பெருநாள்!
தூண்டிடும் உவகையில் துள்ளிடுந் திருநாள்!
ஆயினும், அன்னார் நாயினுங் கீழாய்
நலிந்துளம் நொந்து, மெலிந்துடல் வாடி,
வறண்ட பாலையில் இருண்ட வேளையில்
திரண்டெழுங் காற்றிற் சிக்கியோர் போலத்
திகைத்து மீளவும் வகையறி யாது,
சுதந்திரம் என்ற இதந்தரும் பெயரால்
கொடுங்கோல் ஆட்சிக்கு இடங்கொடுத்து உயர்த்தித்,
தாய்மொழி மறந்து, தனி அரசு இழந்து,
வாய்மை தவறி, வாழ்வினில் தாழ்ந்து,
உழைப்பதற் கேற்ற ஊதியம்-உயிருடன் த
தழைப்பதற்கான சாதனம் இன்றி,
நெடிய வறுமைக்கு அடியவர் ஆகி,
முன்னேறும் நிலை எந்நாள் வருமெனக்
கண்ணிர் சிந்திக் காத்திருக் கின்றார்!
பாட்டாளி மக்கள் படுத்துயர் தொலைத்து
நாட்டிலே இன்ப நன்னிலை பொங்க
மூட்டுவோம் உணர்வொடு முயற்சித் தீயே!

ஏழாண்டுகட்கு முன்னர் நான் எழுதிய இப்பாட்டை அண்ணா அவர்கள் தேடிப்பிடித்து, 1963 “திராவிட நாடு” பொங்கல் மலரில் தாம் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையின் இறுதிப் பகுதியில்...

“கருணானந்தம் தந்துள்ள கவிதைகாட்டுதல் போல்” என்ற தமது முகப்பு வரிகளுடன், என்னுடைய இந்தக் கவிதையிலிருந்து முதல் எட்டு வரிகளை மட்டும் எடுத்து, மேற்கோளாகக் காட்டியிருக்கிறார்கள்!

“அது சரி அண்ணா! நீங்கள்-முன்னே சொன்னிங்களே - ‘அத்தான்’ என்று ஆரம்பிச்சாலும் திராவிட நாடு வேண்டும்’னு முடிக்கிறதாக-அது எந்தக் கவிதையைப் பார்த்ததும் உங்களுக்குத் தோணிச்சுது அண்ணா? என்று கேட்டேன்.

“ஏன்? எத்தனையோ இருக்குதே! உதாரணமா, 1960 ‘திராவிடநாடு பொங்கல் மலரி’லே வந்த உன் கவிதையைத் தான் பாரேன்’ என்றார்கள் அண்ணா. எடுத்துப் பார்த்தேன். அது இதுதான் :

உள்ளதைத்தான் கேட்கின்றாள்!
நள்ளிரவில் மாளிகையின் பின்முற் றத்தில்,
நடுக்குகின்ற குளிர் தாக்கப் போர்த்துக் கொண்டு
வெள்ளிநிலா ஒளிவழங்க, விண்மீன் கூட்டம்
விசிறிவிட்ட வைரமென மின்னல் காட்டத்,
துள்ளிவரும் சிந்தனையின் அலைகளாலே
துயில்கெட்டுப் புரளுகையில், துணைவி வந்து...
பள்ளியறைக் காவியத்தைப் பாடு தற்குப்
பாங்கான நேரமென்று துவங்கி விட்டாள்:
“ஏனத்தான், எத்தனையோ கால மாக
எனக்காகக் கேட்டேனே, புடைவை எங்கே?
மானத்தை மறைப்பதற்குத் துகில் என் றாலும்,
மனங்கவரும் பட்டாடை அணிந்தா லென்ன?
வீணத்தான் பெட்டிகளில் பூட்டி வைத்தல் :
விரும்புவதை எடுத்தளிப்பீர்! நான்தான் உம்மை
வானத்தை வில்லாக்கித் தரச்சொன் னேனா !
வைத்திருக்கும் பொருள் தந்தால் வறண்டா போகும்?
கண்ணாடிப் பேழைக்குள் கண்ணைக் கவ்வும்
கணக்கற்ற பொன்னகைகள் இருக்கக் கண்டேன்!
எண்ணாத எண்ண மெல்லாம் எண்ணி யெண் ணி
ஏங்குகின்றேன்; இருப்பவற்றை அணிந்து கொண்டால்
புண்ணான என்மனமோ ஆறும்; நானும்
புதிதாக அணிமணிகள் செய்யச் சொல்லிக்
கண்ணான கணவருக்குத் தொல்லை செய்யேன்!
காண்பதையே கேட்கின்றேன் தந்தால் என்ன?
நல்ல நல்ல பருப்புவகை நவதான் யங்கள்
நம் வீட்டில் ஏராளம் குவித்து வைத்தோம்;
நெல்லரிசி களஞ்சியத்தில் நிறைய வுண்டு;
நேற்றுமுதல் சோறில்லை, கஞ்சி யுண்டோம்!
பலவிதமாய் காய்கனிகள் தோட்ட மெங்கும்
பசுமையுடன் குலுங்குகையில் பறித்தா லென்ன?
இல்லையெனச் சொல் வீரோ, அத்தான்! இங்கே
இல்லாத பொருளெதையும் கோர வில்லை!
முப்புறமும் அரண் சூழ்ந்த காவ லுக்குள்
மூன்றடுக்கு மேன்மாடம் முகிலைத் தீண்டும்;
எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்றுக் கண்
ஈன்றெடுத்த தாய்போல அருள் சுரக்கும்;
ஒப்புரவாய், ஒற்றுமையாய், இனிது பேசும்
உடன் வாழ்வோர் கடல் மணல்போல் ஏரா ளம்பேர்!
அப்படியும் நடுமனையில் இடமில் லாமல்
அநாதையென நடத்துகின்றீர், ஏனோ அத்தான்?
உள்ளதைத்தான் கேட்கின்றேன்; இருந்தும் நீங்கள்
ஒன்றையுமே அநுபவிக்கத் தருவதில்லை;
உள்ளதெல்லாம் உண்மையுடன் உரைப்பீர்!” என்றே
ஊடிநின்ற துணைநலத்துக் கென்ன சொல்வேன்!
“உள்ளதைத்தான் கேட்கின்றாய்! ஆனால் கண்ணே,
உரிமைநமக் கெதிலுமில்லை, அடிமை யாகி
உள்ளதெல்லாம் பறிகொடுத்தோம்! உணர்வு பெற்றால்
உரிமையுடன் உலவிடலாம், உலகில்!” என்றேன்.