அண்ணா சில நினைவுகள்/அவரே தொடுத்த கவிதை மாலை
“அடுத்த வாரம் பேராவூருணி செல்வதற்காக மன்னார்குடி வருகிறேனே; அப்போது, நீ தேர்ந்தெடுத்து வைத்திருக்கிற கவிதைகளை அங்கே எடுத்து வா! நான் பார்த்துத் தருகிறேன்” என்று அண்ணா அவர்கள் தம் அன்பான பரிவுரையை நல்கினார்கள், சென்னையில் பார்த்தபோது. 1966-ஆம் ஆண்டு மத்தியில் என்று நினைவு இது என்ன சங்கதி?
Story Poems எனப்படும் ஆங்கிலக் கதைப் பாடல்கள் நான் விரும்பிப் படித்தவை. அவை என்னை மிகவும் கவர்ந்தன. இந்தப் பாணியில் புரட்சிக்கவிஞர் போன்றார் இரண்டொன்று எழுதியிருந்தனர். ஆனால் தமிழகத்துக் கவிஞர்களுள் தமிழில் நிறையக் கதைப்பாடல்கள் எழுதியவன் நான்தான். எனக்கு மிக்க ஊக்கமும் உற் சாகமும் அளித்து, இத்தகைய கதைப்பாடல்களை எழுதும் ஒரு தேவையை ஏற்படுத்தித் தந்தவர் கலைஞர்தான். அப்போது அவர் நடத்திவந்த “முத்தாரம்” மாத இதழில், அட்டைப்படம் கே. மாதவன்; உள்ளே என் கவிதைஇரண்டும் கட்டாயம் இடம் பெறும்!
இப்படியாகத் தொடர்ந்து எழுதி வந்தபோது, ஒரு நாள் அண்ணா அவர்கள், “ஏன்யா! இந்தக் கவிதைகளை இப்படித் தனியே எழுதுவதால் பயனில்லை. அவ்வப்போது படித்து. மறந்துவிடுவார்கள். இவற்றில் சிலவற்றைத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும்’ என்று அரியதோர் ஆலோசனையை வழங்கினார்கள். செய்ய லாம். ஆனால் என் புத்தகத்தைப் பதிப்பிக்க எந்த publisher முன்வரப் போகிறார்?” என்றேன் சலிப்புடன். “நீ யார்கிட்டவும் போக வேணாம். நீயே print செய்துடு. இதோ பார். நீ நம்ம மாநாடுகளில் டிக்கட் விக்கப் போறியில்ல; அப்ப எடுத்திட்டுப் போனா, ஈசியா வித்துடலாம்!” என் உந்தி விட்டார்கள் என்னை; எனக்கும் ஆசை வந்து விட்டது!
ஊருக்குத் திரும்பியதும், கையில் கிடைத்த ஒரிஜனல் களைத் தேடி எடுத்து, ஒரு முப்பத்து மூன்று கவிதை களை ஒழுங்குடன் தாள்களில் எழுதித் தயாராக வைத்துக் கொண்டேன்; புத்தகம் எப்படி அச்சாக வேண்டுமோஅதற்கேற்ற டம்மி போல! அண்ணா குறிப்பிட்டவாறு மன்னார்குடி சென்றேன். மாலை 5 மணி இருக்கும் நாங்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டபோது. முன் இருக்கையில் அண்ணா. அவர்களுக்கு நேர் பின்புறம் நான். எனக்குப் பக்கத்தில் மன்னை மாமா. வேறு யாருமில்லை. நிசப்தமான சூழ்நிலை. கார் பட்டுக் கோட்டை வழியாகப் பேராவூருணி செல்லவேண்டும். மெதுவாக ஒட்டுமாறு சொல்லி வைத்திருந்தோம். சுமார் 35 மைல் தூரம்.
வரிசைப்படி நான் ஒவ்வொரு கவிதையாக அண்ணா விடம் தருகிறேன். ஆழ்ந்து, உணர்ந்து படிக்கிறார்கள் மெதுவாக. முடித்தவுடன் பின்புறமுள்ள மன்னையிடம் தாளைத் தருகிறார்கள். அவர் அடுக்கி வைத்துக் கொள் கிறார். இப்படியாக 33 கவிதைகளையும் அண்ணா நிதான மாகப் படித்து முடிக்கவும், கார் பேராவூருணி பயணியர் விடுதியை அடையவும், திட்டுமிட்டு வைத்ததுபோல் சரியாக இருந்தது! ஏராளமான கூட்டம் எதிர்கொண்டு நிற்கிறது. அண்ணா கவிதைக் கனவுலக சஞ்சாரத்திலிருந்து விடுபடாமல், “ஏன்யா! சாதகப் பொருத்தம்’ அப்படிங்கற தலைப்பிலே ஒரு கவிதை எழுதியிருந்தியே- இந்தத் தொகுப்பிலே அதைக் காணோமே; எங்க அது?” என்று அண்ணா கேட்டதும், நான் அப்படியே விதிர் விதிர்த்துப் போனேன். அதிர்ச்சியில் எனக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. அண்ணா, கார் நின்றதைக்கூட உணராமல், என் முகத்தைத் திரும்பிப் பார்க்கிறார். மாமாவும் அண்ணாவின் அதியற்புதமான நினைவாற்றலைக் கண்டு வியந்துபோய், என்னையே கவனிக்கிறார்.
உண்மையில் எனக்கு அக்கவிதை மறந்தே போய் விட்டது! எப்போது, எதில் எழுதினேன் என்பதுகூட நினைவில்லை. “சரியண்ணா. அதையும் தேடி எடுத்து, இதோட சேர்த்துடறேன்” என்றுதான் ஈனசுரத்தில் சொல்ல முடிந்தது: பிறகும், அது எனக்கு அப்போது கிடைக்கவில்லை!
நூல் அச்சாகி வந்தது சென்னையில். எங்கெங்கோ அலைந்து திரிந்து Feather weight paper வெளிநாட்டுக் காகிதம் கிடைக்குமா என தினகரனும் நானும் தேடினோம். அது கிடைக்காமல், வேறொரு ஃபின்லாந்து நாட்டுக் காகிதத்தான் அகப்பட்டது அதில் அச்சியற்றினோம். “அண்ணா! நீங்கள் ஒரு அணிந்துரை தரவேண்டுமே!” என்று வேண்டினேன். கொடுக்கிறேன் கொடுக்கிறேன் எனத் தமது இயல்பின்படி நாளைக் கடத்தினார்கள் அண்ணா!
1966 ஆகஸ்ட் 30, 31 சிவகங்கையில் இராமநாதபுரம் மாவட்ட தி. மு. க. மாநாடு நடைபெற்றது. வழக்க்ம் போல நான் நுழைவுச் சிட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தேன். மாநாட்டின் இறுதியான சிறப்பு நிகழ்ச்சி, எப்போதும் அண்ணாவின் பேருரைதானே! அதற்குச் சற்று முன் கலைஞர் தமது சொற்பொழிவின் ஊடே, மாநாட்டு வசூல் தொகை எவ்வளவு என்பதைச் சொல்லி, அதற்கென ஒரு தனியான கைதட்டல் பெறுவதும் வாடிக்கையல்லவா? நான்தான் மொத்தம் எத்தனை ரூபாய் வசூல் என்பதைச் சொல்லும் அதிகாரி. சாயுங்காலமே கலைஞரிடம் ஒரு கண்டிவுன் போட்டேன்:- “என்னுடைய கவிதை நூலுக்கான அணிந்துரையை அண்ணாவிடமிருந்து இன்றைக்கே எழுதி வாங்கித் தரவேண்டியது உங்கள் பொறுப்பு. நாளை அண்ணா டெல்லி செல்கிறார். நீங்கள் எழுதிவாங்கி என்னிடம் தந்தால்தான் வசூல் தொகையைச் சொல்வேன். அணிந்துரை வராவிட்டால் இதுவும் வராது” என்று உரிமையுடன் சொல்லிவிட்டேன்!
மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. வேறு பேச்சாளர்கள் பேசுகிறார்கள். என் காதில் விழுகிறது. எனக்குள் டென்ஷனும் ஏறுகிறது. மேடையில் அமர்ந் திருந்த அண்ணா, ஏதோ எழுதுவதை, அங்குள்ளோர் கவனித்தார்களாம். பேசுவதற்கு முன்பு குறிப்பு எடுக்கும் பழக்கம் அண்ணாவுக்குக் கிடையாதே? என்ன எழுது கிறார் என்பது புதிராயிருந்ததாம்! கலைஞர் என்னுடைய நிபந்தனையை அண்ணாவிடம் நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லி, அணிந்துரை எழுதுமாறு செய்துவிட்டார் போலும் இடையூறு இல்லாமல் அண்ணா எழுது வதற்கும் கலைஞர் உதவியாயிருந்து, எழுதிய 5 காகிதங் களையும் சேர்த்துத் தென்னரசு மூலமாக என்னிடம் கொடுத்தனுப்பினார். அள்விலா மகிழ்ச்சிக்கடலில் அமிழ்ந்துபோன நான்-தயாராகக் குறித்து வைத்திருந்த டிக் கட்வசூல் மொத்தத் தொகை அளவைத் திரும்ப அவரிடமே தந்தனுப்பினேன்.
அந்த அணிந்துரையின் தொடக்கமே, அண்ணா என்னை நாட்டுக்கு அறிமுகப்படுத்தும் சிறப்புரையாகும்;
- ஆனந்தம் என்பார் எனதருமை நண்பர்.
- அருங்குணத்தின் பெட்டகம்
- அன்னைமொழி எனும்
- அணிகலனைப் பூண்ட அழகு நெஞ்சினர்.
- அலுவலகத்தில் அஞ்சல் அனுப்பும் பணியாளர்.
அடுத்த சில வரிகட்குப் பின்னர், நான் எப்பேர்ப்பட்ட கவிஞன் என விளக்குகிறார்!
- எண்ணத்தை எழிலுருவில் தந்திடும் ஆற்றலதை
- ஏற்ற முறையில் பெற்றுள்ள கவிஞர் அலர்.
- கவிதை, சிந்தனைக்குத் தேனளிக்கும்.
- அத்தேனே
- மாமருந்துமாகிவிடும்
- சீர் இழந்து தவிக்கின்ற தமிழ்ச் சமுதாயம் தனக்கும்.
இடையிலே ஒரிடத்தில் ‘கவிதை’ என்பதற்கு அண்ணா கூறும் இலக்கணம், கவிஞர் என்போர் அனைவரும் சிந்தை யிற் பதிக்க வேண்டிய சொற்களாகும் :
- அறிந்ததனை அறிந்தோர்க்கு அறிவிக்கும் போதினிலே
- அறிந்ததுதான் என்றாலும்,
- எத்தனை அழகம்மா! என்று
- அறிந்தோரையே மகிழவைக்கும் அருங்கலையே,
- கவிதையாகும்.
இதற்கும் பிறகு, என் கவிதைகளின் தனிச்சீர்மை என்ன என்பதையும் அண்ணா விண்டுரைக்கின்றார் :-
- அணிதெரியும் என்பதற்காய் ஆக்கித் தரப்பட்ட
- வணிகப் பொருள் அல்ல அவர் கவிதை சமூகப்
- பிணிபோக்கும் மருந்தளிக்கின்றார்,
- கவிதைத் துளி வடிவில்.
- பருகிட இனிப்பதது; உட்சென்றதும்
- பிணிபோக்கிப் புதுத்தெம்பு தருவதது.
இறுதியாக முற்றாய்ப்பு வரிகள் கட்டாணி முத்துகள் :
- இக்கவிதை நூலினைத் தந்தவர் என் நண்பர்.
- பெருமை அடைகின்றேன்
- இத்தகைய நண்பர்தனைப் பெற்றவன்
- நான் என்பதனால்.
- உங்கள் கரம் தங்கிடவேண்டும் இந்நூல்.
- உங்கள் கருத்தேறிட வேண்டும்
- இவர் கவிதைச் சுவை முழுவதும்.
- உங்கள் உணர்விலே புதுமை தந்திடவல்ல
- இக்கவிதை நூலதுவும்
- உமக்கேற்றதாகும் எனப் பரிந்துரைக்கும் வாய்ப்புப்
- பெற்றேன்;
- மிக்க மகிழ்ச்சி கொள்கின்றேன்.
- வாழ்க ஆனந்தன்!
- வளர்க அவர் கவிதை வளம் !
பின்னர் சென்னை திரும்பியதும், கலைஞர் தமது சிறப்புரையையும். உடனே எழுதித் தந்ததுடன், இந்தத் தொகுப்பு நூலுக்குப் “பூக்காடு” என்ற தலைப்பும் தந்தார். ஒவிய நண்பர் செல்லப்பனை உற்சாகப்படுத்த, உட்புறம் மட்டுமல்லாமல், வெளிப்புற அட்டையின் இரு பக்க ஓவியங்களையும் அவரையே வரைந்து தரச் சொன்னேன். அவருக்கு wrapper design அது முதல் முயற்சி!
இந்தப் ‘பூக்காடு’ நூல்தான் பரிசும் புகழும் நிறையப் பெற்றது பிற்காலத்தில்! இது அண்ணா தொடுத்த கவிதை மாலையல்லவா?