அண்ணா சில நினைவுகள்/உலகப் புகழ்பெற்ற படம்

உலகப் புகழ்பெற்ற படம்

“காலையிலே நேரத்தோட புறப்பட்டுப் போங்க சார்! அப்பதான் காஞ்சிபுரம் போயி, படம் எடுத்துகிட்டு, மத்தியான சாப்பாட்டுக்கு இங்கே திரும்பிடலாம்” என்று கலைஞர் விரைவு படுத்தினார். சாப்பாட்டைப் பற்றிக் குறிப்பிட்டால்தான் எனக்குச் சுறுசுறுப்பு வரும் என்பது அவரது (தவறான) கணிப்பு?!

“அப்படியா? இதோ புறப்பட்டேன்! எப்படியோ படம் எடுத்துகிட்டுதான் திரும்புவோம். ஆனா, எப்பத் திரும்புவோம் என்பது, எங்க கையிலே இல்லியே!” என்றேன்.

“இல்லே சார். அண்ணாவிடம் சொல்லியிருக்கிறேன், நீங்க கிளம்புங்க!” என்று தூண்டினார்.

உடனே ஒடிச்சென்று முன்சீட்டில் அமர்ந்தேன். ஃபியட்காரில் அதுதானே வசதி! பின் சீட்டில் புகைப்பு. நிபுணரும், அப்போது ஓரளவுதான் பருமனாயிருந்தவரும்இப்போது இருமடங்கு பெருத்து விட்டவருமான சுபாசுந்தரம், கேமரா சகிதம், முரசொலி யின் அதிகார பூர்வமான பிரதிநிதியாகத் தம்பி செல்வம்.

நேரே அண்ணா வீட்டில் போய் இறங்கினோம். உள்ளே போனதும், முற்றத்தின் முன்புறக் குறட்டின் மீது, ஒரு சாய்வு நாற்காலி (Easy chair)யில் அண்ணா ஒய்வாக அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் வேட்டி, மேலே வெற்றுடம்பு, கலைந்த தலை, மூன்று நாள் சவரத்தைக் காணாமல் முகத்தில் வெள்ளிக் கம்பிகள் முளைவிட்டிருந்தன.

என்னுடைய “பூக்காடு” புத்தகத்தைக் கையில் கொடுத்தேன். அருகிலிருந்த மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு படிக்கத் துவங்கினார்கள். சுந்தரத்திடம் கண்சாடை செய்தேன். ஒரு படம் பிடித்தார். Flash light வெளிச்சம் தெரிந்ததும், அண்ணா என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு நிமிர்ந்தார்கள். மறுபடியும் ஒரு Flash.

“‘முரசொலி’ மலருக்குப் படம் எடுக்க வந்திருக்கிறோம், அண்ணா!” என்றேன். உடனே சுந்தரத்தைப் பார்த்துக் கையமர்த்தினார், வேண்டாமென்று. எதிரில் அமர்ந்து கொண்டோம், கீழேயே.

“ஏன்யா, ‘பூக்காடு’ எவ்வளவு காப்பி வித்துது” என்றார் அண்ணா என்னை நோக்கி.

என்னண்ணா இது, நீங்க சொன்னபடிப் புத்தகங்களை நமது தி. மு. கழக மாவட்ட மாநாட்டுக்கெல்லாம் எடுத்துப் போனேன். நான் டிக்கட் விக்கிற கவுண்ட்டரிலேயே வைத்துக் கொண்டேன். பாதிதான் விலைக்குப் போயிற்று. மீதியை எனக்குத் தெரிந்த தோழர்கள்-நம்ம கவிஞரதுதானே - என்று சொல்வி இலவசமாய் எடுத்துப் போனார்கள்” என்றேன் சோகத்துடன்.

அண்ணாவோ, இது பரவாயில்லெய்யா. பாதி வித்தாகூட, நீ போட்ட முதல் எடுத்துவிடலாம்யா. ஆனா இது நான் நெனச்சமாதிரி பிரிண்ட்டாகலே என்றார்.

“ஆமாண்ணா, எனக்கும் இப்பதான் ஒரளவு புரியுது. அடுத்த எடிஷன் இன்னும் நல்லாப் போடலாம்” என்றேன் நான்.

‘பூக்காடு’ இரண்டாம் பதிப்பில் அண்ணாவின் அணிந்துரை கையெழுத்துப் பிரதியை. அப்படியே பிளாக் எடுத்து வெளியிட்டேன். அட்டையின் முன்புறம் அருமையான வண்ண ஒவியம். பின்புறம் அண்ணா பூக்காடு” படிக்கும் போட்டோ. ஆனால் (1972-இல்) இரண்டாம் பதிப்பு வெளியானபோது அண்ணன் எங்கே எங்கே??

அண்ணா வேண்டுமென்றே பேச்சைத் திசை திருப்புகிறார்கள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. “சரி யண்ணா! சட்டை போட்டுக்குங்க, படம் எடுக்கலாம்” என்றேன்.

“ஒண்ணும் அவசரமில்லேய்யா. எதிர் வீட்டு மாடியில் போய் மூணுபேரும் ரெஸ்ட் எடுங்க. செல்வம்! நெறய புக்ஸ் இருக்கும், பாரு! மத்தியானம் சாப்பிட்ட பிறகு போட்டோ எடுக்கலாம். அதுக்குள்ள ஆளை வரச்சொல்லி நானும் ஷேவிங் செய்துகொண்டு, குளிச்சி, ரெடியா வந்துடறேன்” என்றார்கள் அண்ணா. நல்லதுதானே ? எங்கள் மூவருக்கும் மறுத்துப் பேச வாயில்லை.

ஏமாற்றத்தை வெளிக்காட்டாமல் எதிர்மாடிக்குச் சென்றோம். என்ன விந்தை? அங்கே பெரும் புதையல் ஒன்று எங்களுக்காகக் காத்திருந்தது! என்ன அது?

அப்போதெல்லாம் அண்ணா நிறையக் கார்ட்டுன் படங்கள் வரைவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந் தார்கள். அப்படிப் பல்வேறு நேரங்களில் தீட்டிய எண்ணற்ற ஒவியங்கள் அறை முழுக்க இறைந்து கிடந்தன, அவற்றையெல்லாம் மூன்று பேரும் பொறுக்கி எடுத்து ஒழுங்காக அடுக்கி, ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித் தோம். பொழுது போனதே தெரியவில்லை. பசியையும் உணரவில்லை.

உணவுக்கு அழைப்பு வந்தது. அண்ணா முழுமையாக மாறியிருந்தார்கள். பளபளப்பான முகம். வாரி விடப்பட்ட தலை, சலவை வேட்டி சட்டை மேலாடை. சாப்பாடு முடிந்தபின் வீட்டு மாடியிலும் பின்புறமும் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார் சுந்தரம். (அண்ணாவும் நானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு படத்தை இன்னமும் எனக்குத் தரவில்லை சுந்தரம்?)

மாலையில் சென்னை திரும்பினோம். பிடிக்கப்பட்ட படங்கள் பின்பு “முரசொலி”யில் மலர்ந்தன. ஆனால், அன்று எடுக்கப்பட்ட படங்களிலேயே உலகப் புகழ் பெற்றது, நாங்கள் திடீரென்று எடுத்த முதல் படந்தான்; அண்ணா மேலாடையின்றி, இயல்பான தோற்றத்தோடு, ‘பூக்காடு’ படித்துக் கொண்டிருக்கும் போஸ். ஒவியர் செல்லப்பன் முகப்பு ஒவியம் தீட்டிய அட்டையுடன் கூடிய புத்தகம் அந்தப் “பூக்காடு.”

A. S. ராமன் ஆசிரியராகப் பணியாற்றிய நேரத்தில் Illustrated Weeklyயில் அண்ணாவைப் பற்றி வரலாற்றுப் புகழ் மேவிய கட்டுரை ஒன்றைத் தீட்டியபோது, சுபா சுந்தரம் கிளிக் செய்த இந்தப் படமே மிக முக்கிய இடம் பெற்றிருந்தது. அதற்குப் பின்பும் அந்த போட்டோ நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளது எல்லாருக்கும் நினைவிருக்குமே!

1971-இல் என்னுடைய பூக்காடு நூலுக்குத் தமிழக அரசின் முதல் பரிசு கிடைத்தது. ஆனால் எனக்கு அதனி லும் பன்மடங்கு மகிழ்வும் பெருமையும் ஏற்படுவது, அண்ணா அவர்கள் என்னுடைய சுவைஞர் என்பதைப் புறச்சான்றுடன் மெய்ப்பிக்கும் இந்த இயல்பான புகைப் படத்தைப் பார்க்கும் நேரத்தில்தான்!