அண்ணா சில நினைவுகள்/கவிதை எழுதவா வரச் சொன்னார்?

கவிதை எழுதவா வரச் சொன்னார்?

மாயவரம் ரயிலடியிலிருந்து காந்தியும் நானும் ஆளுக் கொரு சைக்கிளில் புறப்பட்டு, வழக்கம்போல் கூறைநாடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். எதிரே லட்சுமி போட்டோ ஸ்டுடியோ பக்கிரிசாமி மிக விரைவாக ஒரு சைக்கிளில் வந்தவர், என்னைக் கண்டதும் தொப்பென்று குதித்து, “அண்ணே, ஒங்களெத் தேடிக்கிட்டு அண்ணா வந்தாங்க. நம்ம ஸ்டுடியோகிட்டெ காரை நிறுத்திக் ‘கருணானந்தம் இருக்காரா?’ எண்ணு கேட்டதும் எனக்குக் காலும் ஒடலெ, கையும் ஒடல்லே, வந்து உக்காருங் கண்ணா! இதோ போயி கூப்பிட்டு வந்துடறேன்னு சொல்றதுக்குள்ளே. ‘நான் அவசரமா திருச்சி போயிட் டிருக்கேன். அவரை வரச் சொல்லுங்க’ன்னு பேசிகிட்டே காரை எடுக்கச் சொல்லிட்டாங்க! கார் இதுக்குள்ள சித்தக்காடுதான் போயிருக்கும்!” என்று மூச்சு இரைத்த வாறே சொன்னார்.

சைக்கிளைத் திருப்பி, இருவரும் விரைந்தோம்! கண் மண் தெரியாத வேகத்தில் செலுத்தினோம்! ஒரு அசட்டு நம்பிக்கை, சித்தர்காடு ரயில்வே கேட் சாத்தியிருக்காதா என்று.

என்ன விந்தை! எங்கள் எதிர்பார்ப்பு வீண் போக வில்லை. கும்பகோணம், திருவாரூர், தரங்கம்பாடி ஆகிய மூன்று பக்க ரயில்வே லைன் ஒருங்கே செல்வதால், அந்தப் பெரிய ரயில்வே லெவல் கிராசிங் கேட் பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கும்! அன்றும் அப்படியே! அப்பாடி: அண்ணாவைப் பிடித்துவிட்டோம்! அண்ணாவுக்கு ஆச்சரியம் அடங்கவேயில்லை! “ஏன்யா, சைக்கிள்ள வந்தா காரைப் பிடிச்சிட்டிங்க? எவ்வளவு வேகமா வந்தீங்க? இது ரொம்பத் தப்பாச்சே!” என்றார். குரலில் ஒரளவு கண்டனமும் தொனித்தது. “என்னண்ணா வீட்டுக்கு வராம போறீங்களே?” என்றேன் சிறிது மூச்சு விட்டு, சிரம பரிகாரம் செய்தபின். “நேரமில்லியே. திருச்சி போயாகணும். ஆமா. மாநாட்டு வேலை தொடங்சி யாச்சே, நீ லீவு போட்டு வராம, இன்னும் இங்கேயே யிருக்கியே! நீ என்னா காந்தி?” எனக் கேட்ட அண்ணாவிடம் “நான் லீவு எடுத்துக்கிட்டு நாளைக்கே வந்துடறேன் அண்ணா! மாநாட்டுக்கு இன்னும் ஒரு மாசமிருக்கேண்ணு பார்த்தேன். சரி, பரவாயில்லை. காந்தி, பிறகு வரும்; டிக்கட் விற்பனைக்கு!” என்றேன்.

கேட் திறக்கப்பட்டது. அண்ணாவின் காரும் புறப் பட்டது. அதற்குள் அங்கு பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டது. இத்தனைக்கும், அந்த கேட்டிலிருந்து பார்த்தால் என் வீடு தெரியும். ஒரே தெருதான்!

காலியாகக் கிடந்த திருச்சி ரேஸ் கோர்ஸ் திடலின் ஒரு பகுதியில் பழைய பங்களா ஒன்று இருந்தது. அதில்தான் அண்ணா முகாமிட்டிருந்தார்கள். அன்பில், மணி, ராபி, அழகமுத்து, நாகசுந்தரம், பாண்டுரங்கன், முத்துக் கிருஷ்ணன்-எல்லாரும் சூழ்ந்திருந்தனர். கட்டடத்தினுள் ஒவியக்கூடம் ஒன்றில் கலைஞரின் ஆலோசனையுடன் சில ஓவியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்-வைத்தியலிங்கம், கருணா போன்றோர். பந்தல் வேலை நடந்து கொண் டிருந்தது. மாயூரம் விற்பன்னர்கள் முகப்பு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

“வந்துட்டியா! ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக் க. எல்லா எடத்தையும் நல்லா சுத்திப்பார் ! ஒரு மூலையிலே போயி உக்காந்து, அப்படியே இதையெல்லாம் வர்ணிச்சி, ஒரு கவிதை எழுதி கிட்டு வா! இண்ணக்கே கஞ்சீவரம் அனுப்பி, அடுத்த வாரம் திராவிடநாடு ஏட்டிலே அது வெளியாகணும்!” என்று அண்ணா என்னை வரவேற்று வரச்சொன்னதே இதற்குத்தான் என்பது போலவும் ஆஸ்தான கவிஞருக்கு அரசன் கட்டளை போலவும் அண்ணா எனக்கு ஆணை (சோதனை யா?) பிறப்பித்தார்,

அன்று மாலை “திராவிட நாடு” அலுவலகத்துக்கு ‘டிரங்க்கால்’ போட்டு அண்ணா பேசினார். “கட்டுரை அனுப்பியிருக்கிறேன், மாநாட்டுப் பணிகள் நடந்து வருவதுபற்றி. அதை அப்படியே போடணும். அப்புறம் நம்ம கருணானந்தம் கவிதை ஒண்ணும் அத்தோட வருது. அதையும் நல்லா full page போடணும்” என்று, பத்திரிகாசிரியர் தோரணையில் விளக்கங்கள் அறிவித்தார்.

அந்தக் கவிதை “திராவிட நாடு” 13.5.1956 இதழில் வெளியாயிற்று. அதிலிருந்து சில வரிகளை நினைவு கூர்வது பொருத்தமாயிருக்குமே:
அழைப்பு


தென்னகத்து நன்னகராம் திருச்சி, தம்பி!

திராவிடத்தின் மையத்தில் திகழும் பேரூர்!

முன்னொருநாள் சோழனது மூதூர் ஈதாம்!

முட்டவரும் பகையெதையும் வெட்டும் வீரர்

இன்னமுந்தான் இருக்கின்றார் இங்கே என்றால்,

என் மீது தவறில்லை; எழுந்து பாராய்!

இந்நகரின் தென்திசையில் பரந்தி ருந்த

எழிலான திடலெங்கே? இன்று காணோம்!


வள்ளுவரின் பெயராலே நகராம், இங்கே!

வானம்போல் விரிந்த பெரும் பந்தல் ஒன்று,

வள்ளுவரின் புகழ்போல வளருந் தன்மை,

வரலாறு காணாத புதுமை யாகும்!

வள்ளுவரின் குறள் போன்ற வடிவம் கொண்டோர்,

வாயிலிலே நிறுத்தி வைக்க இருசிங் கங்கள்,

வள்ளுவர் நூல் நயம்போல உயர்ந்த தூண்கள்,

மாடங்கள் அமைக்கின்றார் மரத்தால் செய்து!


அண்மையிலே, அறிவகத்தின் அறையில் கூடி,

அருமையுடன் பெருங்கலைஞர் ஆய்ந்து கூற,

வண்ணமிகு ஒவியங்கள் வரைந்து வைத்து,

வாழ்ந்துகெட்டோர் வரலாறு விளக்கு தற்குக்,

கண்கவருங் காட்சியொன்று காட்ட எண்ணிக்

கண்துயிலா துழைக்கின்றார், அன்புத் தோழர்!

மண்திருத்திப், புதரழித்து, மன்றம் கட்ட

மகிழ்வுடனே பலதோழர் உழைக்கின் றார்கள்!

மூச்செல்லாம் தமிழுக்கே முயற்சி யாவும்

முன்னோர்கள் ஆண்டநாட்டை மீட்ப தற்கே!

பேச்செல்லாம் பிறர் வாழ! பிறந்த நோக்கம்

பேடிகளின் ஆதிக்கம் ஒடச் செய்ய!

திச்சொல்லால் பயனில்லை; திருத்திப் பார்ப்போம்!

திராவிடரின் மரபென்றும் எடுத்துச் சொல்வோம்!

ஏச்செல்லாம் பூச்செண்டு மாலையாகும்

என்றுரைக்குத் தலைவரெலாம் இங்கே தானே!


குன்றாத செல்வங்கள் எல்லாம் உண்டு;

குனியாமல் வாழ்ந்ததற்கு வரலா றுண்டு!

அன்றாட நிகழ்ச்சிக்கும் வடநாட் டான்யால்

அடிபணிந்து கிடக்கின்ற உணர்வும் உண்டு!

என்றேனும் ஒருநாளில் மீட்சி பெற்று

எமதரசு காண்பதற்கும் ஏக்கம் உண்டு!

ஒன்றாக இவற்றையெல்லாம் சேர்ப்ப தற்கு

உதவிடும்நாள் மே.திங்கள் பதினேழாம் நாள்!


மலைகளிலே கிடைக்கின்ற மணிகள் தேடி,

மண்ணுக்குள் புதைந்திருக்கும் பொன்னும் சேர்த்து

அலைகடலில் ஆழ்ந்துறையும் முத்தும் வைத்து

அணிகலன்கள் அமைக்கின்ற தொழில்வல்லார் போல்


நிலைமறந்தோர் பழங்கால சரிதம் தேடி

நெஞ்சத்திற் புதைத்திருக்கும் உணர்வைச் சேர்த்து

தலைகனத்தோர் ஆட்சிக்கு முடிவு வைத்துத்

தனிநாடு சமைத்திடுவோர் தயார்தான், வாராய்!