அண்ணா சில நினைவுகள்/தலைமை திருமணத்தோடு போகாது

தலைமை திருமணத்தோடு போகாது

"கவிஞர் சத்திரம் இதுதானே? தெருவில் வந்து நின்ற காரின் சத்தத்தோடு போட்டி போடும் கனமான கட்டைச் சாரீரத்தில் யாரோ விசாரிக்கிறார்கள்! திருவரம்பூர் காமாட்சியின் குரல் மாதிரித் தோன்றுவதால் யாரோ தலைவர்கள்தாம் வந்திருக்க வேண்டும் என யூதித்து வெளியே ஒடினேன். முற்பகல் நேரம், நான் நினைத்தது முற்றிலும் மெய்யே! என்னை வியப்பில் ஆழ்த்திய வண்ணம் அண்ணா இறங்குகிறார்கள். தொடர்ந்து நடிப்பிசைப்புலவர் கே. ஆர். இராமசாமி, பின்புறத்திலிருந்து பெரியவர் பூவாளுர் அ. பொன்னம் பலனார், அவருக்குப் பின்னால் இருவர் எனக்கு அறிமுகமில்லாத ஆணும் பெண்ணுமாய் நடுத்தர வயதினர்!

எல்லாரையும் மரியாதையுடன் வரவேற்று, உள்ளே அழைத்துச் சென்று அமரச் செய்தேன். அண்ணாவோ வீட்டின் உட்புறத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தார்கள்.

ஆம். இது சத்திரம் போலத்தான் இருக்கும். மாயவரத்தில் நான் வசித்த 22 ஆண்டுகளிலும் 3 தெருக்களில், 4 வீடுகளில் குடியிருந்துள்ளேன். இது மிகமிகப் பெரிய வீடுதான். 1959-ல் சில நாட்களுக்குமுன் மாயவரத்தில் தி.மு.க. பொதுக்குழு நடந்தபோது, எல்லாத் தலைவர்களும் இங்கே தங்கியிருந்தனர். அவர்கள் மட்டுமல்ல, கலைஞரின் உதயசூரியன் நாடகக் குழுவினரும் இங்கே வசதியாகத் தங்கிட இடமிருந்தது. ஒரு காலத்தில் புகழ் மேவிய கூறைநாடு பட்டுப்புடைவைகளை நெய்வதற்கான தறிகள் இங்கே எத்தனை ஒடினவோ? இன்று இவ்வீட்டின் உரிமையாளர், இதை நிர்வகிக்க இயலாமல், எனக்குக் குறைந்த வாடகைக்கு அளித்திருக்கிறார். பொதுக்குழுவை இங்கேயே நடத்தியிருக்கலாம், முன்பே தெரிந்திருந்தால், என்றார் சம்பத்.

பொன்னம்பலனார் புதிதாக வந்தவர்களை எனக்கும் குடும்பத்தாருக்கும் அறிமுகம் செய்தார். என் துணைவி யார் பொறுப்பில் அவர்களை உட்புற அறையில் தங்கச் செய்தேன். கே. ஆர். ஆரும், காமாட்சியும் பிரம்மாண்டமான திண்ணையை அலங்கரித்தனர்.

“என்ன கருணை ஆனந்தம்? நான் ஒரு சொந்த வேலையா இப்ப வந்திருக்கேன். 2, 3 நாள் தங்குவோம். நீ உன் dutyயை adjust செய்துகொண்டு எங்களோடு இருக்க முடியுமா?” என்று அண்ணா என்னைக் கனிவுடன் வினவிட-இதைவிட எனக்கு வேற ஒண்னும் முக்கியமில்லே அண்ணா. அதெல்லாம் சரிசெய்து கொள்வேன்” என்றேன். “சரி, அப்படியானால்-நமது செம்பனார் கோவில் கணேசனை உடனே வரவழைக்க முடியுமா?” என்றவுடன், ‘இதோ ஆளனுப்புகிறேன்’ என்ற நான் ராசகோபாலனை அழைத்து, “அடேய், விளநகர் கணேசன் இங்கே லட்சுமி ஸ்டுடியோவில் இருக்கிறாரா பார். இல்லா விட்டால் நீயே செம்பனார் கோயில் போய், கையோடு அழைத்துவா” என்று விரைவாக அனுப்பினேன்.

அதற்குள் அண்ணா வந்திருக்கும் செய்தி எப்படியோ பரவிட, கழகத்தார்களான கிட்டப்பா, பழனிச்சாமி எல்லாரும் என் வீட்டில் குழுமிவிட்டனர். அண்ணா, அவர்களைப் பார்த்து அன்புடன், “நான் ஒரு சொந்த வேலையா வத்திருக்கேன். இரண்டு நாள் இருப்பேன். அந்த வேலை முடிந்த பிறகு பார்க்கிறேன்” என்று அனுப்பி வைத்தார்.

கணேசனும் வந்துவிட்டார். தம்முடன் வந்தவர் களிடம் கணேசனை அறிமுகம் செய்த பின், அவர்களை யெல்லாம் உள்ளே போகச் சொன்னார். “ரொம்ப சங்கட மான மனசோடு நான் இப்ப வந்திருக்கேன்! கொஞ்சநாள் முன்னாலே, புதுக்கோட்டையில், இவர்கள் பெண்ணின் திருமணம் என் தலைமையில் நடந்தது. மாப்பிள்ளை செம்பனார் கோயில். உனக்குத் தெரியுமா?” என்று அண்ணா கணேசனைக் கேட்டார். “திருமணத்துக்கு நான் வரமுடியலே. பையனைத் தெரியும். பெயர்....B. T. வாத்தியாரா இருக்கான். நம்ம அனுதாபிதான்” என்றார் கணேசன். ஏராளமான சீர்வரிசைகளுடன், பெண்ணை மகிழ்வாக மணமகன் வீட்டுக்கு நம்பி அனுப்பியவர்கள், ஏமாந்தார்கள்! பெண் அங்கு வாழ முடியாமல் ஊருக்கே திரும்பிவிட்டது! இந்தச் சேதி உனக்குத் தெரியுமா?!“ என்னும்போது அவர் திடுக்கிட்டார். “தெரியாதண்ணா! ஏன்?” என்று கேட்டார்.

“அதைத்தான் நீ சரியாகத் தெரிந்து சொல்லணும். முடிஞ்சா, அந்தப் பையனை இங்கு அழைத்து வரணும். நிதானமா நடந்துக்கணும். போய் நாளைக்கு வா!”

எனக்கு விவரிக்கவொண்ணாத வியப்பு. ஒரு சீர் திருத்தத் திருமணத்தில் தலைமை தாங்குகிறவருக்கு இவ்வளவு பொறுப்புகளா? ஒரு புரோகிதர், தாம் நடத்திய திருமண மக்களைப் பற்றி இப்படி நினைத்துப் பார்ப்பதுண்டா?

கணேசன் மறுநாள் காலையில் தனியாக வந்தார். முகம் பிரகாசமாயில்லை. என்ன சங்கதி? பையன் நல்லவனென்று நினைத்தது தவறாகப் போய்விட்டதாம். துருவி விசாரித்ததில் மிகமிக ஒழுக்கக்கேடனாம்; ஏராளமான பெண்களுடன் உறவாம்! ஏற்கனவே மனைவி ஸ்தானத்தில் ஒரு பெண்ணும், அதற்கொரு பிள்ளையும் இருக்கிறார்களாம்! புதிய இந்தச் செய்திகளை ஒரளவு யூகித்திருந்தாலும் அண்ணா மனமொடிந்து போனார்! “அந்தப் மையன் வருவானா? நேரில் பேசிப் பார்க்கலாம்!” என்று சொன்னார் அண்ணா,

மாலையில் அந்த ‘மணமக’னோடு கணேசன் வந்துவிட்டார். சும்மா என் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லியே அழைத்து வந்தாராம். அண்ணா அவர்களையும், தன் மாமனார் மாமியார், மற்ற பெரியவர்களையும் பார்த்ததும் பையன் பயந்துபோய்விட்டான். அப்போதும் எல்லாரையும் உள் அறைக்குப் போகச் சொல்லிவிட்டு, அண்ணா அந்தப் பையனிடம் அருளொழுகப் பேசினார். எப்படியோ அவன் திருந்தி நல்ல ஒழுக்கமுள்ளவனாக மாறி, அந்தப் பெண்ணோடு மட்டும் வாழ்க்கை நடத்த மாட்டானா என்ற ஆதங்கம் அண்ணாவின் உரையாடலில் தொனித்தது. ஆனால்...... ஆனால்...... அவன் சொல்கிறான்: “என்னால் முதல் சம்சாரத்தைக் கைவிட முடியாது. இந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொள்கிறேன். தடையில்லை” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் இது காறும் பொறுமையின் உச்சியில் நின்ற அண்ணா, கணமும் காக்க முடியாத வெகுளியின் உச்சிக்கே சென்று, உரத்த குரலில், “நீ பெரிய தசரதச் சக்கரவர்த்தி! எத்தனை பெண்டாட்டி வேணும்னாலும் வச்சிக்குவியோ? ஒழுக்கம் எவ்வளவு சிறந்ததுண்ணு யோசிச்சுப் பார்த்தியா? நீயெல்லாம் படிச்சது ஒரு படிப்பா? நீ வாத்தியார் உத்தி யோகம் பார்க்கிற லட்சணம் இதுவா? என்கிட்டவே இப்படிச் சொல்ல உனக்கு எவ்வளவு துணிவு? உன்னிடத்தில் இனி அந்தப் பெண் எப்படி வாழும்?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். நான் கணேசனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டேன்; இல்லாவிடில் அண்ணாவின் பேச்சுக்கு மாறாக, அவர் செயலில் இறங்கி விடுவார் போலிருந்தது! “சரிசரி, நீ எழுந்து வெளியே போப்பா! நீ எல்லாம் ஒரு மனுசனா?” என்று நான் சொல்லிக் கொண்டே அந்தப் பையனை வெளியில் அழைத்துச் சென்றேன்; காமாட்சி மச்சான், கே. ஆர். ஆர் ஆகியோர் வாயிலில் நிற்கிறார்களே என்கிற அச்சத்தினால்! ஆனால் அவனோ, கவிழ்ந்த தலையுடன் சென்று...... சே!

பெட்டி பெட்டியாய் நகைகள், லாரி லாரியாய்ச் சாமான்கள், சீர்வரிசை திருமண போட்டோ ஆல்பத்தை என் துணைவியும் நானும் கணேசனும் பார்த்தபோது திகைத்துவிட்டோம். இவற்றுக்கு ஆசைப்பட்டு, முன்னரே காதலியுடன் குடும்பம் நடத்தியவன், யோக்கியன்போல் வேடமிட்டு, ஏமாற்றியிருக்கிறான். இந்தப் பெண் வந்த பிறகும் வீட்டு வேலைக்காரிகள், மாட்டுத் தொழுவம் கழுவும் பெண் ஆகியோரிடமும் விளையாடியிருக்கிறான் காமவெறியன். அந்தப் பெண்ணின் பெற்றோர்க்கு, அண்ணாவும் நாங்களும் மிகவும் ஆறுதல் மொழிகள் சொன்னோம். சட்டரீதியான மணவிலக்குப் பெறுவதென முடிவு செய்யப்பட்டது.

வந்த மூன்றாவது நாள் அண்ணா புறப்பட்டார்கள், ஆர்வம் குன்றிச் சோர்வு மேலிட்ட முகத்துடன்! அவர்களை வழியனுப்பி வைத்தபோது, இத்தனை ஆண்டுகளாக நான் பார்த்துப் பழகிவந்த அந்த அறிஞர் அண்ணா கண்முன் தெரியவில்லை. இலட்சக்கணக்கான தம்பிமார்களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்கேற்று, துயர்களைந்திட அயர்வின்றிப் பணியாற்றும் அருளாளர், அன்பாளர்-ஈடு இணையிலாத இனத்தின் தலைவர் - தனித்த-பெரு மகனார்-அய்யோ நினைக்க நினைக்க என் விழியூற்றுப் பீரிட்டுப் பார்வையை மறைத்தது! நீண்ட நேரமாயிற்று என் கண்ணிரருவி வறண்டு போக!