அண்ணா சில நினைவுகள்/தேதி கொடுக்க நிபந்தனையா?

தேதி கொடுக்க நிபந்தனையா?

“உனக்கு மன்னார்குடியில், 9.9.48 அன்று, பெண் வீட்டில் திருமணம் முடிவு செய்துள்ளோம். உன் அபிப்பிராயம் தெரிவிக்கவும்” —என்று என் தந்தையாரிடமிருந்து கடிதம் வந்தது நான் ஈரோட்டில் ஆர். எம். எஸ். சார்ட்டர். அன்பின் இருப்பிடமான என் தகப்பனாருக்கு எதிரில் நான் உட்காருவதில்லை; நேராக நின்றும் பேசுவதில்லை! அதே மரியாதை என் குடும்பத்தில் இன்றும் நிலவுகிறது. அதனால், நான் ஒரே வரியில் பதில் எழுதி னேன்:- “சுயமரியாதைத் திருமணம் நடத்த வேண்டும்; பெரியாரும் அண்ணாவும் வருவார்கள் என்று பெண் வீட்டாரிடம் சொல்லி விடவும்.”

ஆனால், என்ன காரணத்தாலோ, என் நிபந்தனையை என் வருங்கால மாமனார் காதில் முழுமையாகப் போடவில்லை என்பது, திருமணத்தன்றுதான் எனக்குத் தெரிய வந்தது.

திருமணத்துக்கான தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டது. நான் அய்யா வீட்டுச் செல்லப்பிள்ளையாக வளர்ந்து வந்த காலம் அது. அந்த நம்பிக்கையில், அய்யா அவர்களிடம் செய்தி சொல்ல மகிழ்வுடன் சென்றேன். கேட்டவுடன் மிகவும் களிப்புற்ற தந்தை பெரியார் அவர்கள், மணியம்மையாரை அழைத்து “மணி! தெரியுமா சேதி? நம்ம கருணானந்தம் இப்போ மாப்பிள்ளையாயிட்டார்” என்று சொல்லிக் கேலி பேசிவிட்டு, என்னைப் பார்த்துத், “தேதி என்ன சொன்னே?” எனக் கேட்ட வண்ணம் டயரியைப் புரட்டிக் கொண்டே வந்தவர்கள், “ஆகா—போச்சு போ! அண்ணக்கிதான் முல்லைக் கொம்மை வடிவேலு திருமணம்—நம்ம தொகரப்பள்ளி கிருஷ்ண மூர்த்தி மிட்டாதார் மகளையல்லவா தருகிறார்: எல்லாருமே வர்றதா ஒதுக்கிட்டோமே!” என்று, சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டார் அய்யா!

எனக்கு எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட ‘ஓ’ என்று. அழுதுவிடும் நிலைமை! ஏமாற்றத்தை எப்படித் தாங்கு வேன்? அய்யாவே என் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு— “எப்படியும் ஒத்துக்கிட்ட நிகழ்ச்சியெ நான் தவற மாட்டேன்னு ஒனக்குத் தெரியும்; நீயே அதை விரும்ப மாட்டேன்னு எனக்கும் புரியும் ! ஒண்ணு செய்! நம்ம அண்ணாத்தொரெய நீ கூட்டிக்கிட்டுப் போயிடு!” என்றார்கள்.

சிறிது நேர மவுனத்துக்குப் பின்னர், கண்களைத் துடைத்தவாறு, ‘சரிய்யா’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அண்ணா அன்றைக்குத் திருச்சியிலிருக்கிறார் என்பது தெரியும். “கே. ஆர், ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா” திருச்சியில் முகாமிட்டிருந்தது. அங்கு மேனேஜராகச் சிறிது காலம் அண்ணாவால் அனுப்பப் பட்டுக், குடும்பத்துடன் வாழ்ந்த சம்பத், டைபாய்ட் சுரத்தினால் தாக்கப்பட்டு, ஈரோடு திரும்பியிருந்தார். துணைவி சுலோச்சனா, கைக் குழந்தை நாகம்மா ஆகியோருடன். அவர் சொன்னார் உடனே போய் அண்ணாவைப் பாருங்கள் என்று.

மே மாதம் தூத்துக்குடி மாநாட்டுக்கு அண்ணா போகாமல், அவர்மீது களங்கம் கற்பிக்கப்பட்டு, பின்னர் அய்யா-அண்ணா ஊடல் ஒரளவு சரியாகியிருந்த காலம் அது. திருச்சிக்கு ரயிலேறிச் சென்றேன். வழக்கப்படியே அண்ணா சங்கரன் பங்களாவில் தங்கியிருந்தார். சங்கர னுடைய தம்பி, சாம்புவிடம் விவரத்தைச் சொன்னேன். அண்ணாவிடம் அழைத்துப் போனார்.

எனக்குத் திருமணம் என்றதும், நகைப்போடு என்னைத் தட்டிக் கொடுத்த அண்ணா, தேதியைக் கேட்டதும்-“அடடே! செப்டம்பர் ஒன்பது, நான் நம்ம வடிவேலு திருமணத்துக்குப் போக வேண்டுமேமாப்பிள்ளை சும்மாயிருந்தாலும், அவர் தம்பி முல்லை சத்தி கோபக்காரராயிற்றே!” என்று தயங்கினார் அண்ணா. “அய்யா சொல்லிவிட்டார் அண்ணா, உங்களை நான் அழைத்துப் போகலாம் என்று!” -நான்.

“வாயால்தானே சொன்னார்? வேறு நேரமாயிருந் தால் அய்யாவின் வாய்மொழியே எனக்குப் போதும்! ஆனால் இப்போதுள்ள இந்தக் குழப்பமான சூழ்நிலையில் நான் ஒத்துக்க மாட்டேன். நான் உன்னை நம்பாமல் இதைச் சொல்லவில்லை என்பதும் ஒனக்கே தெரியுமய்யா! அய்யாகிட்டேருந்து ஒரு லெட்டர் வாங்கி வந்துவிடு. நான் ரெட்டிப்பு மகிழ்ச்சியோட ஒன் திருமணத்துக்கு வந்துடறேன்”— என்று சொல்லி முடித்த அண்ணாவைப் பார்த்து, சாம்புவும் தலையாட்டி ஆமோதித்தார்.

வேறு வழி? அடுத்த ரயிலுக்கே ஈரோடு திரும்பி, அய்யாவிடம் ஒடிப்போய், விவரத்தைச் சொன்னேன். ஒரு மிகச் சிறிய துண்டுத் தாளில் “கருணானந்தம் திருமணத்துக்கு நீங்கள் போகலாம். ஈ.வெ.ரா” என்று எழுதித் தந்தார் அய்யா. இப்படி இருவரும் என்னைத் தவிக்க விடுகிறார்களே என்று நொந்து கொண்டே, மீண்டும் திருச்சிக்கு ரயிலேறி, அதிகாலை சாம்பு வீடு சென்றேன். எவ்வளவு அலைச்சல்?

அங்கு பெரிய கும்பலொன்று குழுமியிருந்தது! என்ன விசேடம்? அண்ணாவுக்குப் பக்கத்து நாற்காலியில் நான் அதுவரை பார்த்திராத சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்கள்! கடிதத்தை அண்ணாவிடம் கொடுத் தேன். சிரித்துக் கொண்டே, என்னை ம. பொ. சி.யிடம் அறிமுகப் படுத்தினார். “இவர் திருமணத்துக்கு, என்னை அழைக்க வந்திருக்கிறார். நான் ஒரு நிபந்தனை விதிச்சேன். அதைச் செய்து விட்டார்; இப்போது இன்னொரு நிபந்தனை!......"

எழுந்து ஓடி விடலாமா என்றிருந்தது எனக்கு. பெண் கொடுப்பவர் கூட இப்படி என்னைச் சோதிக்கவில்லை; நம்ம அண்ணா ஏன் நம்மை இப்படி வாட்டி வதைக்கிறார்? என்று சிறிது கோபமே வந்தது. எதிரே தரையில் அமர்ந் திருந்த கே. ஆர். ஆர். நாடகக் குழுவினருக்கு மத்தியில், இராம. வீரப்பன் இருந்தார். எனக்கு நெருங்கிய நண்பராயிற்றே-அவரிடம் சென்று உட்கார்ந்தேன்.

“சாம்பு ஒரு டைம்பீஸ் வேணும்” என்றார் அண்ணா, கையில் அதை வாங்கிக் கொண்டபின், ஒரு கற்றை தாள்கள் - ஏதோ எழுதப்பட்டுள்ளவை - எடுத்தார்: என்னிடம் கொடுத்தார்! “இதோ பார்! சின்ன வேலை தான். இண்ணக்கி இவரும் நானும் (ம. பொ. சி. யும், அண்ணாவும்) திருச்சி ரேடியோவில் ஒரு உரையாடல் நிகழ்ச்சி நடத்துறோம்; பத்திரிகை உலகம் பற்றி. இரண்டு பேருக்கும் உள்ள பேச்சுகளை இதோ எழுதி வச்சிருக்கேன். வீரப்பனும் நீயும்—நானும் ம. பொ. சி. யுமா இருந்து—இந்த டயலாகைப் படிச்சி, நேரம் எவ்வளவு ஆகுதுண்ணு பாக்கணும். கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். எதைக் குறைக்க வேணுமோ—பிறகு பார்க்கலாம்! ரெண்டு பேரும் சத்தமாப் படிங்க” என்றார்.

வீரப்பன் விரும்பியவாறு அண்ணாவின் பகுதியை அவரிடம் தந்தேன் :—

“வணக்கம் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் அவர்களே’ என்று கம்பீரமாக அவர் ஆரம்பித்தார். அவருக்கென்ன கஷ்டம்! சோதனைக்கு உள்ளாகி உட்கார்ந்து கிடப்பவன் நானல்லவா? “வணக்கம் அறிஞர் அண்ணாத்துரை அவர்களே” என்று நான் தொடங்கி யதும்-அண்ணா குறுக்கிட்டு, “நான்தான் உன் கல்யாணத்துக்கு வர ஒத்துக்கிட்டேனே. நல்லாப் படிய்யா!” என்றார் புன்னகை தவழ.

படித்து முடித்து விடைபெற்றுக் கிளம்பினேன். மாலையில் இதை எந்த ரேடியோவில் கேட்பது? அப்போ தெல்லாம் வீட்டுக்கு வீடு ஏது ரேடியோ? தஞ்சையில் திலகர் திடல்-திருச்சியில் இப்ராகிம் பார்க்-இது போலப் பொது ரேடியோ மட்டுந்தான்! மேலப் புவி வார்ட் சாலை யில் நின்று, கேட்டேன்.

நேரம் போதாமல் கடைசிப் பகுதியை அண்ணா விரைவாகப் படிப்பது புரிந்தது. சிரித்துக் கொண்டே மன்னார்குடி செல்லத் திருச்சி ஜங்ஷன் நோக்கி நடந்தேன். எந்த நிகழ்ச்சிக்கும் தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள அண்ணா அவர்கள், என்னுடைய திருமணத்துக்காக, முதல் நாள் இரவே மன்னார்குடி வந்து தங்கிவிட்டார்.

அன்பர்களைத் தான் சோதனைக்கு உள்ளாக்குவார்களோ—தலைவர்கள்? ஆனால் இந்தச் சோதனையால் எனக்கு வேதனை ஏற்படவில்லை-அண்ணா முன்கூட்டி வந்து சிறப்பித்தது எனக்கு ஒரு சாதனையே!