அண்ணா சில நினைவுகள்/நழுவிப் போன நாடக மேடை

நழுவிப் போன நாடக மேடை

வாடிக்கையாக உடன்வரும் வேடிக்கை நண்பர் சி. வி. ராஜகோபாலுக்குப் பதில் இந்த முறை அண்ணா மாயூரம் வந்தபோது அவருடன் டி. கே. பொன்னு வேலுவைக் கண்டதும், வியப்பாயிருந்தது எனக்கு! அதிகம் பேசாமல், ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு, ஒரு பக்கம் ஒதுங்கக் கூடியவர் அவர். அண்ணா K. P. சண்முக சுந்தரம், பேராசிரியர் கந்தசாமி, டாக்டர் சந்திர சேகரன் சகோதரர்களின் வீட்டில் தங்கினார்கள். அங்கே கண்டிப்பாக மரக்கறி உணவுதான். ஒரே நாளில் பொன்னு வேலுவுக்கு bore அடித்து விட்டதாம். மெதுவாக “என்னிடம் வந்து “என்னங்க கவிஞர்! மாயவரம் வந்தால், கவிஞர் வீட்லெ வரால் மீன் குழம்பு ரொம்ப Famous என்று கேள்விப்பட்டேன். எப்ப உங்க வீட்லெ சாப்பாடு?” என்று கிசுகிசுத்தார்.

இதைக் கவனித்து விட்டார் அண்ணா. “என்ன கருணானந்தம்! பொன்னுவேலுவுக்கு என்ன வேணுமாம்? non விஜிடேரியன் சாப்பாடா? நீ கொடுத்து விடாதே! நான் சொல்றேன்; நாளைக்கு மதியம் உங்க வீட்லெ எங்களுக்குச் சைவ சாப்பாடு போடணும்! வத்தக் குழம்பு, ரசம், பருப்புத் துவையல், கீரை இந்தமாதிரி-உன் wife சில ஸ்பெஷல் அய்ட்டம்ஸ் செய்வாங்க இல்லியா-அதெல்லாம் செய்யச் சொல்லு: அதென்ன பொன்னுவேலு. உனக்கு அப்படி ஒரு பிடிவாதம், அவுங்க வீட்டுச் சைவ சாப்பாடு ரொம்பப் பிரமாதமாயிருக்கும்! மீன் சமையல் செய்யச் சொன்னா, நமக்காக, ஆனா, அவுங்க இஷ்டத்துக்கு மாறாக, ஆள்வச்சி செய்வாங்க, பேசாம இரு!” என்று கடிந்து கொண்டார் அண்ணா.

முளைக் கீரையில் பூண்டு சேர்த்துக் கடைவது வெண்ணெய்போல இருக்கும் என்று சொல்வார்களே அது -சீரக ரசம் மணத்துடன் தெளிவாகத் தோன்றும், ஆனால் சுவை மிகுதி. தண்ணீர் போலவே அண்ணா சூடாக அதைத் தம்ளரில் ஊற்றச் சொல்லிக் குடிப்பார்கள். சுண்டைக்காய் வற்றல், மணித்தக்காளி வற்றல் சேர்த்து, பூண்டு ஏராளமாய்ப் போட்டு, நிறைய மிளகு அரைத்து ஊற்றிக் காரமான ஒரு வற்றல் குழம்பு வைப்பதில் என் துணைவியார் ஸ்பெஷலிஸ்ட். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ஆர். ஒருமுறை இதை ஒரு டப்பாவில் கேட்டு வாங்கிச் சென்று, 2, 3 நாள் வைத்திருந்து சாப்பிட்டார்.

அதேபோல அண்ணா, பொன்னுவேலுவை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து, எங்கள் வீட்டில் சைவ உணவு சாப்பிட வைத்தார்கள். மிகவும் (Relaxed) ரிலாக்ஸ்டாக, வெறும் பனியன் அணிந்து, திண்ணையில் உட்கார்ந்து, நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் அண்ணா. கேட்டு மகிழ்ந்தோம் யாவரும்!

தலைப்பு, முந்தியநாள் இரவு பொதுக் கூட்டம் முடித்துவிட்டு, மாயூரத்தில் ஒரு திரைப்படம் பார்த்தது பற்றி, படம் (பேர் நினைவில்லை) பார்க்கும்போதே அண்ணா குறிப்பிட்டார்கள் கவலையுடன், அந்தப் படத்தில் முக்கிய நடிகர்கள் இரண்டு பேரும் பார்ப்பனர். “இவுங்களெப் பார்த்தியா அய்யா. ஹீரோவா நடிக்கிறாங்களே. ஒரு ஆளுக்குக் கண்ணு இருக்கிற இடமே தெரியலே. இன்னொரு ஆள் மூக்கால பேசுறான். ஆனா ரெண்டுபேரும் பேசறது அசல் அக்ரஹாரப் பேச்சு. போட்டுள்ளது நாட்டுப்புற இளைஞர் வேடம். இதையெல் லாம் ஜனங்க ஏத்துக்கிறாங்க. ஆனா ஜனங்க மேல தப்பில்லே. கிடெச்ச எடத்தை நம்ம ஆளுங்க கோட்டை விட்டுட்டாங்களே!” என்றார் அண்ணா என்னிடம் தியேட்டரிலேயே.

இன்று என் வீட்டுத் திண்ணையில் அதே சப்ஜெக்ட் தொடர்ந்தது:-

ஒருகாலத்தில் Stage நம் ஆட்கள் கையில்தானே இருந்தது! பெரிய பெரிய நாடகக் கம்பெனிகள்-நவாப் ராஜமாணிக்கம், டி. கே. எஸ். சகோதரர்கள், பிறகு சக்தி நாடக சபா, என். எஸ் . கே. நாடக சபா, கே. ஆர். ஆர். நாடக மன்றம், தேவி நாடக சபா, வைரம் நாடக சபா, எம். ஆர். ராதா மன்றத்தார், எம். ஜி. ஆர். நாடக மன்றம், எஸ். எஸ். ஆர். நாடக மன்றம், சிவாஜி கணேசன் நாடகங் கள்-என்று பார்ப்பனரல்லாத தமிழ் நடிகர்கள் தமிழகத்து நாடக மேடைகளில் கொடிகட்டிப் பறந்தார்கள்.

சினிமாவளரத் தொடங்கியபோது கூட, எம். கே. தியாகஜபாகவதர், பி. யூ, சின்னப்பா, பிறகு கே. ஆர். ராமசாமி இவர்களெல்லாம் பாடி நடித்தவர்கள். அதற்கும் அப்புறம் எம்.ஜி ராமச்சந்திரன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜிகணேசன் நடிப்பிலே தலைசிறந்து விளங்கினார்கள்!

ஆனால், ஆனால், இன்றோ? நாடக மேடை அவர்கள் கையிலே! அனுபவமே இல் வாதவர்களைச் சினிமா நடிகராக்கி உயர்த்திவிட ஒரு கூட்டம் கட்டுப்பாடாக வேலை செய்கிறது. நம்மவர்களில் பலர் தாங்களாகவே கெட்ட பழக்க வழக்கங்களால் வீணாகி விட்டனர். ஆகவே நம் நண்பர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுக் கலைத்துறைக்கே சம்பந்தமில்லாதவர்கள் உள்ளே நுழைந்து விட்டனர். நாமும் வேறு வழியில்லாமல் இதுதான் தமிழ்த் திரைப்படம் என்று, பார்க்க வேண்டியதாகி விட்டது......”

அண்ணா காரில் ஏறும்போது பொன்னுவேலு என்னிடம் சொல்கிறார்:- “கவிஞர்! எங்கே நான் மறுபடி யும் உங்களிடம் மீன் குழம்பு சாப்பாடு கேட்டுவிடுவேனோ என்றுதான், அண்ணா இன்றைக்கு ஒரு Diversion கொடுத் துட்டார் என்று நினைக்கிறேன். Anyhow ஒரு நல்ல Serious Subject பற்றி இன்று ஆழமாகச் சிந்திக்கும்படி செய்துட்டார். Thank you வருகிறேன்” என்று அவரும் புறப்பட்டார்.

அண்ணா விடைபெற்றுச் சென்றபோது, முகத்தில் கவலை படர்ந்த தோற்றம் தென்பட்டது. என் வீட்டுப் பிள்ளைகள் ராசகோபால், ராணி, மாதவி, குலோத் துங்கன் நால்வருமே அதுவரையில் சாப்பிடாமலிருந்து, அண்ணாவின் பொருள் செறிந்த உரையாடலைக் கேட்டு மகிழ்வுற்றனர்.