அண்ணா சில நினைவுகள்/பத்தாயிரம் ரூபாயில் ஒவியக் காட்சி
“இந்த விருகம்பாக்கம் மாநாட்டுலே ஒனக்குத் தனியா ஒரு பொறுப்பு குடுக்கப்போறேன். நீ இப்பவே இங்க வந்து தங்கிடு. நீ வழக்கமா செய்ற வேலைகளைத் தவிர இது! ஒன்னயே முழுக்க நம்பி ஒப்படைக்கிறேன். இரண்டு பாயிண்ட் இதிலெ. ஒண்ணு, சிக்கனமா செய்யணும். ரெண்டு, தினமும் எங்கிட்ட கன்சல்ட் பண்ணிக்கிட்டபிறகு, முடிக்கணும்! என்ன கருணானந்தம், தயாரா?” என்று கேட்கிறார்கள் அண்ணா; நுங்கம் பாக்கம் இல்லத்தில்தான்.
“என்னண்ணா, சஸ்பென்சாகப் பேசுறீங்க! நீங்க. எது சொன்னாலும் தயார்தான். (அரசாங்க) வேலையிலே இருந்து கிட்டே, பகுதி நேரம் கட்சிப் பணி செய்யலாம்னு நீங்க சொன்னதாலேதானே, 1946-ல் நான் வேலக்கே. போனேன். எப்போதுமே நான் பின்வாங்கியதில்லியே அண்ணா?” எனச் சற்றுத் தழுதழுத்த குரலில் பேசினேன்.
“உன்மேல எனக்குச் சந்தேகமிருந்தா சொல்லியிருக்கவே மாட்டேனே. விஷயம் அதில்லே. கோயமுத்துரர் மாநாட்டிலே நம்ம...... யை நம்பி (அண்ணா, அவர் பெயரைச் சொன்னார்கள். பெரியவர், போகட்டும்? நான் அவர் பெயரைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை; இப்போது அவர் உயிரோடுமில்லை.) இந்த வேலையை ஒப்படைச்சேன். ஒரு லட்சம் ரூபாய் செலவு கணக்குக் காண்பிச்சாரே தவிர, உருப்படியா ஏதுமே செய்யலே. வேறொண்ணுமில்லேய்யா, உனக்குப் பிடிச்ச வேலைதான். எக்சிபிஷன் அமைக்கிறது. இந்தத் தடவை ஒரு பத்தாயிரம் ரூபாயிலேயே முடிச்சுடனும். உனக்கு, வசதியா, பக்கத்துத் தெருவிலேயிருக்கிற ஒரு கல்யாண மண்டபத்தை வாங்கித் தர்றேன், நம்ம பொள்ளாச்சி ஒவியர் அந்தப்பையன் வர்றதாக் கடிதம் போட்டிருக்கார். ஒங்கிட்டே ஒரு டீம் ஒவியர்கள் இருப்பாங்களே அவுங்களை அழைச்சிக்கோ. தினம் காலையில் என்னிடம் வந்து, ஐடியா கேட்டு, ஸ்கெச் வரைஞ்சி காட்டிட்டு, எழுதச் சொல்லு. ரொம்ப இம்ப்ரெஸ்சிவா செய்யணும்.”
“முழு நேரமும் இதிலே ஈடுபட்டு, ஒங்களுக்குத் திருப்தியாக் கண்காட்சியை அமச்சி, அதுக்கப்புறமா நான் டிக்கட் விக்கிற வேலக்கிப் போறேண்ணா. இண்ணக்கே, ஊருக்குப் போயி, வீவு போட்டுட்டு வந்துடறேண்ணா. இன்னும் ஒரு மாசம்தானே இருக்கு” —உரையாடல் அவ்வளவுதான்!
வக்கீல் சுந்தரம் பொறுப்பிலிருந்தது S. A. P. ஹால், நுங்கம்பாக்கம் வில்லேஜ் ரோடில்; அதை முழுமையாக ஒரு மாத வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். அங்குதான் ஒவியக்கூடம். அப்போது அங்கு மாநகராட்சி உறுப்பினரான எம். எஸ். ராமச்சந்திரன் எனக்கு உதவினார். மாயூரம் ஒவியர், நான் எப்போது கட்சிப் பணிக்கு அழைத்தாலும் வந்து, தன் திறமையைக் காண்பித்து, முத்திரை பொறிக்கும் வல்லுநரான P. T. ராஜன் வந்து விட்டார். பிறகென்ன?
நான் வழக்கம்போல் கலைஞர் வீட்டில் தங்கல். அப்போது அவரிடமிருந்த ஹெரால்டு காரில் காலையில் வந்து அண்ணா வீட்டில் இறங்கிக் கொள்வேன். அண்ணாவைச் சந்திப்பதில் அப்போதெல்லாம் எனக்குச் சிறப்பான முதலிடம். கருத்துகளையும் கட்டளைகளையும் ஏற்றுக் கொண்டு, அடுத்த தெருவிலுள்ள ஓவியக் கூடம் சென்றால், இரவு வரை நேரம் போவதே தெரியாது! என் நண்பர் மீசை கோபாலசாமி தனக்குத் தெரிந்த தச்சு வேலைத் தோழர் ஒருவரைக் கொண்டு வந்தார். ஒவியர்கள் உட்பட உழைப்பவர் அனைவர்க்கும், அருகிலேயே எளிய உணவுக்கு ஏற்பாடு. சம்பளம் யாருக்கும் கிடையாது. எடுபிடி ஆள் கிடையாது. எல்லாம் நாங்களே. நானே!
இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கிய இலக்கு! மிகமிகப் பெரிய பேனரில் போலீசார் துப்பாக்கிச்சூடு, சின்னச்சாமி முதலியோரின் தீக்குளிப்புக் காட்சிகள், அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்களின் உருவங்கள், செயல்கள். பாளை தனிமைச் சிறை. இப்படியாக மக்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கவல்ல. கணக்கற்ற ஒவியங்கள், சிற்பங்கள், பல நிறங்களில் உருப்பெற்றன.
இடையிடையே நான் விருகம்பாக்கத்துக்கு ஓடுவேன். என் நண்பர் நீலநாராயணன்தானே வரவேற்புக்குழுத் தலைவர். அவருக்கு உதவியாக அங்கேயே தங்கியிருந்தார். கோ. செங்குட்டுவன். இவர்களோடு கலந்து, பந்தல், முகப்பு, அலங்காரம், சோடனை ஆகிய பணிகளிலும் என் பங்கினைச் செலுத்துவதையும் நான் நிறுத்தவில்லை. அப்படியாக ஒரு காலைப் பொழுதில், என்னோடு நீல நாராயணனும் அண்ணாவைக் காண வந்தார். நான் விரைந்து மேலே ஏறி, அண்ணா படுத்திருந்த அறைக்குள் நுழைந்த போது, அண்ணா தூங்கவில்லை; உட்கார்ந்திருந்தார் வெற்றுடம் போடு! நான் மட்டுந்தான் வந்திருப்பதாக எண்ணி “எங்கேய்யா அந்த நீல நாராயணன்?” என்று கேட்ட வேகத்தைப் பார்த்து, அவர் என்னோடு வந்ததையே சொல்லவில்லை. அவரும் மாடிப்படியிலேயே நின்று, மறைந்திருந்து, அண்ணாவின் குரலை மட்டும் கேட்கிறார்!
“என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க நீங்கள் எல்லாரும்? நான் ஒருத்தன் இங்கே இருக்கிறேனல்லவா? எனக்குத் தெரியாம, எனக்குப் பிடிக்காத சங்கதியைச் செய்திருக்கீங்க! உங்களுக்கெல்லாம். அவ்வளவு தைரியம் வந்திடுச்சா? இனிமெ யாரும் எங்கிட்ட வராதீங்க, போங்க!” என்கிறார் அண்ணா. முகம் சினத்தால், கொதிக்கிறது!
“என்னண்ணா விஷயம்” என்று கேட்கிறேன். என் வாயிலிருந்து வந்த சத்தம் எனக்கே காதில் விழவில்லை!
“யாரைக் கேட்டுக்கிட்டு மெயின் எண்ட்ரன்ஸ் முகப்பு அந்த ஆளைப் போடச் சொன்னிங்க? நல்லா மூக்கை உடைச்சி அனுப்பிட்டாராமே! அவர் போட மாட்டேண்ணு சொன்னது தப்பில்லே? நீங்க அவருகிட்டே இப்ப போனது தப்பு! நான் டிசைன் வரைஞ்சி குடுத்த மாதிரி, 1967 என்று நுழைவாயில் முகப்பு போடுங்க. என்ன செலவானாலும் நாமே செய்வோம்! நீ போ! அவரை வரச் சொல்லு!” என்று, என்னைத் துரத்தாத குறைதான்!
நான் புரிந்து கொண்டேன். நீலநாராயணன் தவறு செய்து விட்டதாக அண்ணா நினைக்கிறார். அவர் வந்து வாங்கிக் கொள்ளவேண்டிய வசவுகளை, அவர் சார்பில் நான் வாங்கி, அவரிடம் சேர்ப்பிக்கவேண்டும். இங்கும் தபால் வேலை? அண்ணா கோபத்தை நான் தாங்கிக் கொள்வேன்! அவர்களால் முடியாது! மேலும் இது என்னைத் திட்டியது அல்லவே!
மெதுவாகக் கீழிறங்கி, அங்கு நடுக்கத்துடன் நின்றி ருந்த நீலத்திடம், என் தலைமீது சுமந்து வந்த ஒரு சுமையை இறக்கி, அவர் தலைமீது வைப்பது போல் பாவனை செய்தேன். அந்த நிலையிலும் அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது. வெளியில் சென்றோம் விரைந்து.
மாநாட்டுக்கு முந்திய நாள்-அதாவது 28.12.1966 அன்று எல்லோரும் ஊர்வல ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்று விட்டனர். ஒவியக்கூடத்தில் தயாரான வற்றை, நானே லாரிகளில் ஏற்றிச் சென்று, பந்தலுக்குள் தனியே அமைத்த ஓவியக் கண்காட்சிக் கொட்டகையில் இறக்கி, நானே சுமந்து, மாட்டி, fix செய்தேன்.
அடுத்த நாள் ஏ. கோவிந்தசாமி ஒவியக் கண்காட்சி யைத் திறந்து வைத்தார். இங்கு நுழைவுக்கட்டணம் வெறும் பத்து பைசாதான். அப்படி வைத்தும், அந்த நான்கு நாட்களில், இடைவேளை நேரங்களில் வந்து கண்காட்சி காண முடிந்தவர்கள் மட்டும் ஒரு லட்சம் பேர்! ஆச்சரியமல்லவா? வசூல் பத்தாயிரம் ரூபாய்!
அண்ணா அவர்களிடம் செலவுக்குப் பெற்றுக் கொண்ட பத்தாயிரம் ரூபாயைத் திருப்பித் தந்த போது, அண்ணா அளவற்ற மகிழ்வு பூண்டவராய், என்னைப் பாராட்டித் தட்டிக் கொடுத்து எல்லாருடைய முன்னிலையிலும் புகழ்ந்துரைத்த போது, நான் பட்ட சிரமங்களெல்லாம் மறைந்து என் கண்கள் ஆனந்தக் கண்ணிர் உகுத்தன.