அண்ணா சில நினைவுகள்/பார்த்தேன்-சந்தித்தேன்-உரையாடினேன்
அறிஞர் அண்ணா அவர்களை முதன் முதலில் நான் எப்போது சந்தித்தேன்? அல்லது எப்போது பார்த்தேன்? அல்லது எப்போது பேசினேன்? இதயத்தில் இடம்பெற்று நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டிய நிகழ்ச்சி அல்லவா!
என்ன முட்டாள்தனமாக உளறுகிறேன்; இன்னும் இந்த மூடநம்பிக்கை அகலவில்லையே! அறிவியல் உரம் பெற்று வளர்ந்துள்ள இந்நிலையிலும், கவிஞர் கற்பனைக் கூற்றுகளை மெய்போல் கையாளுவதா? நெஞ்சின் ஒரு பகுதியில் இருக்கும் இருதயம், இரத்தத்தைத் துாய்மைப் படுத்தும் பணி ஒன்றை மட்டுமே செய்யக் கூடியது! நினைப்பதற்கும் மறப்பதற்கும் உரிய கருவிகள் நிலை கொண்டிருப்பது, மூளையின் கோடிக்கணக்கான நரம்பு மண்டலத்தின் ஏதோ ஒரு பகுதியில்தான், என்பதல்லவா விஞ்ஞான உண்மை!
திருத்திக் கொள்வோமா? உறங்கிக் கொண்டிருக்கும் நினைவாற்றல் உணர்வுகளைத் தட்டி எழுப்பி நடக்க விடுகிறேன், மூளையைக் கசக்கி!
1942-ஆம் ஆண்டு தஞ்சையில் பள்ளியிறுதிப் படிப்பு முடித்துக், கும்பகோணம் அரசினர் கல்லூரியில் நான் சேர்ந்த சமயம், என் சிறிய தகப்பனார் மகளைப் பட்டுக் கோட்டையில் திருமணம் செய்து கொடுத்தோம். அந்த மாப்பிள்ளை மாரிமுத்து பெரியவீட்டுப் பிள்ளை. அவர் அழைப்பின் பேரில் பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது, அவர்கள் வீட்டுக்கு எதிரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் அண்ணா பேசினார். எனக்கு முதல் ‘தரிசனம்’ அதுதான்! “திராவிட நாடு” இதழ் துவங்கிய நேரம். அதன் வளர்ச்சிக்குச் சுயமரியாதைக் கோட்டை யாகிய பட்டுக்கோட்டைத் தோழர்கள் திரட்டி வழங்கிய நிதியைப் பெற்றுச் செல்ல அண்ணா வந்திருந்தார். அதே கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் ஆனர்ஸ் மாணவர் நாராயணசாமி என்னும் தாடிக்கார இளைஞரும் பேசினார். ஆமாம் பிற்கால நாவலர் நெடுஞ்செழியன்! பட்டுக்கோட்டையில் அவர் தந்தையார் இராசகோபால் அலுவலில் இருந்தார் அப்பொழுது.
“அண்ணா பேச்சு எப்படி?” என் மாப்பிள்ளை எனது தொடையில் தட்டிக் கேட்கிறார். மயக்கத்தினின்று தெளிந்து, “எம். எஸ். சுப்புலட்சுமி கச்சேரி கேட்பதுபோல் இருக்கிறது” என்கிறேன். எனக்கு மிக உயர்வாகத் தோன்றிய உவமை, அதுவரையில் அது ஒன்றே !
அடுத்து, குடந்தையில் சீர்திருத்த நாடகங்களில் நடித்து வந்த எம். ஆர். ராதா அவர்களைப் பாராட்டி, 1943-ல் ஒரு வெள்ளிக் கேடயம் வழங்க மாணவர்கள் முடிவு செய்தோம். அண்ணாவை அதற்காக அழைத்து வந்தார் தவமணி இராசன். நான் டிக்கட் விற்பனையில் முனைந் திருந்ததால், அண்ணா எங்கள் கேடயத்தை ராதாவுக்கு வழங்கியபோதுகூட நான் மேடையருகே செல்லவில்லை. அப்போது மீதமான பணத்தைக் கொண்டுதான் திராவிட மாணவர் கழகம் அமைத்துத், தொடக்க விழாவுக்கு அண்ணா அவர்களையே அழைத்தோம்.
1.12.1943 அன்று விடியற்காலை 3 மணி. போட் மெயிலில் வந்து இறங்கிக் குளிருக்காகத் தலையில் மூடிய மேல் துண்டு சகிதம் தோற்றமளித்த அந்த குள்ள உருவத்தை, அண்மையில் நின்று அப்போதுதான் பார்த்தேன். வரவேற்று, திரு. வி. சின்னத்தம்பி அவர்கள் வீட்டில் தங்கவைத்த மாணவர்களாகிய எங்களிடம், “காலையில் வாருங்கள்” என்று சொல்லி உறங்கச் சென்று விட்டார் அண்ணா.
10 மணிக்கு வி. சி. வீடு சென்றேன் நான் மட்டும். ஒரு மேசைக்கு முன்னர் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார் அண்ணா. எதிரில் போய் நின்று, வணக்கம்’ என்று கைகுவித்தேன். எங்கள் கல்லூரி பிரின்சிபால் டாக்டர் கே. சி. சாக்கோ முன்னிலையில் கூட நான் இவ்வளவு பயத்தோடு நின்றதில்லை; அவர் தான் எங்களிடம் பயந்து போயிருந்தார்!
“உக்காருங்க. உங்க பேரென்ன?"—அண்ணா.
“உட்காருங்கள். உங்கள் பெயர் என்ன?” —ஆகா! எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதன் நான்; விசுவரூபம் எடுத்த வாமனன் போல! அண்ணாவே என்னை வாங்க போங்க’ என்கிறாரே-பெருமை பிடிபடவில்லை! அந்த விரிந்து பரந்த நெற்றியின் கீழே கரிய பெரிய விழிகளின் காந்த மின்ஆற்றல், என் சிறிய கண்களான இரும்புத் துண்டைக் கவ்வியிழுக்க, அப்படியே போய் ஒட்டிக் கொண்டேன் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு. அந்த ஒரு முறை-ஒரே முறைதான் அண்ணா என்னை ‘வாங்க போங்க’ என்றது. அதன் பிறகு இந்த ‘அந்நியத்தனம்’ அகன்றது. ‘வாய்யா போய்யா’ எனும் அந்நியோந்தியம், பிறந்து விட்டது. நானும் வணக்கம் சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.
தன்வயமிழந்த நிலையில் தடுமாறித் தத்தளித்து, ஒரளவு தெளிவு வரப்பெற்று, “என் பெயர் கருணானந்தம், சீனியர் இண்ட்டர் படிக்கிறேன் அண்ணா: காலேஜ் லிட்டரரி அசோசியேஷன்ல, மாலை 3 மணிக்குப் பேசப் போறீங்களே—தலைப்பு என்னண்ணு கேட்டு வரச் சொன்னார் பிரின்சிபால்!“
“The New Life” உடனே சொன்னார்.
குறித்துக் கொண்டேன். “மாலையில் காலேஜ் மீட்டிங் முடிந்தவுடன், டவுண்ஹாலுக்கு அடுத்த முனிசிபல் பள்ளிக் கூட மைதானத்தில்தான் திராவிட மாணவர் கழகத் தொடக்க விழா. நான் அங்கிருப்பேன். உங்களைத் தவமணி இராசன் கல்லூரிக்கு இட்டுச் செல்வார்” என்று சொல்லி விடைபெற்றேன்.
மாலை 5 மணிக்கு இங்கே வந்துவிட்டார் அண்ணா. ஆங்கிலப் பேருரையைக் கேட்டு மகிழ நான் போக முடிய வில்லை. இங்கே கூட்ட ஏற்பாடு நான்தானே! நண்பரும் வழிகாட்டியுமான சீராமுலு, அண்ணாவுடனும் கூட்டத் தலைவரான தமிழாசிரியர் சானகிராமனுடனும், எங்கள் திராவிட மாணவர் கழகச் செயல் வீரர்களைப் படம் எடுக்க முனைந்தார். Group Photoவுக்காக நாற்காலியில் உட்கார்ந்திருந்த அண்ணாவின் தூரப் பார்வையில், தொலைவில் ரோட்டில் சென்றுகொண்டிருந்த இருவர், தனித்துத் தென்பட்டனர். “தம்பி கருணானந்தம்! அதோ பார்-திருப்பூர் மொய்தீனும், மூவலூர் ராமாமிர்தம் அம்மாளும் போகிறார்கள், கூப்பிடு!“ என்றார்.
எழுந்தோடி அழைத்து வந்து, நான் அமர்ந்த நாற்காலியை அவர்கட்குத் தந்து, பின்புறம் நின்று கொண்டேன். அந்த போட்டோ இருக்கிறது என்னிடம்.
இப்படியாகக், குடந்தையில்தான் அண்ணாவைக் கண்டதும், சந்தித்ததும், உரையாடியதும், ஒருங்கிணைந்து உடன்பிறந்த தம்பியானதும், நிகழ்ந்தன எனக்கு!