அண்ணா சில நினைவுகள்/புதிராகப் பார்த்த சினிமா
மாயூரத்திற்குக் காரிலேயே அண்ணா வந்துவிட்டார்கள் காலையிலேயே. நண்பர் G. R. அவர்கள் வீட்டில் தங்கி யிருந்தார்கள். கொத்தங்குடி ராமச்சந்திரன் (ஜி.ஆர்.) சரோஜா பரிமளத்துக்கு அண்ணன் முறை உறவினர்; காவேரி நகரில் வாடகை வீடுதான். நல்ல சைவ சாப்பாடு கிடைக்கும் அங்கே.
அண்ணா அன்றையதினம் மாலையில் காரைக்கால் பொதுக் கூட்டத்தில் பேசவேண்டும். “அண்ணா! காரைக் கால் கூட்டம் மாலையில் முன்நேரத்திலேயே தொடங்கி, 8 மணிக்குள் முடித்துவிடவேண்டும். அதற்குமேல் பேசினால் கேட்பவர்கள் எண்ணிக்கை ‘இரண்டு மடங்கு’ ஆகிவிடும்— என்று கலைஞர் கேலியாகச் சொல்வார். ஆனாலும் அது உண்மைதான். சீக்கிரம் புறப்படுவோம்” என்றேன்.
முன் இருக்கையில் அண்ணா. பின் இருக்கையில் ஜீயாரும் நானும். பேரளம் வழியாகக் கார் சென்றது. காரைக்கால் பொதுக்கூட்டம், நாங்கள் ஏற்கெனவே பேசிக் கொண்டவாறு 8 மணிக்கெல்லாம் முடிந்துவிட்டது. உடனே அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த வழக்கறிஞர் காரைக்கால் ராமசாமி வீட்டுக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். நண்பர் ராமசாமி பின்னாளில் சிறிது காலம் புதுவை மாநில முதல்வராக இருந்தாரென நினைவு. அண்ணாவின் வருகையினால் அளவிலாப் பூரிப்பும் பெருமையும் புளகாங்கிதமும் பொங்கிடத் தமது இல்லத்தில் பிரமாதமான பிரியாணி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் ராமசாமி. நேரம் நிறைய இருப்பதால், அண்ணாவுடன் சாவகாசமாகப் பேசிக்கொண்டிருக்க இயலும் என்று நம்பிய இராமசாமிக்கு ஏமாற்றம் ஏற்படுத்தும் வகையில், அண்ணா மிகவும் பரபரப்பும் விரைவும் வெளிப்பட, “ராமசாமி! சிக்கிரம் சாப்பாடு போடு! நாங்கள் போகவேண்டும்” என்றார்கள்.
எனக்கும் ஜீயாருக்கும் பகீரென்றது. ஏனென்றால், நாங்கள் இரண்டு பேருமே புலால் உணவை வெளியில் கிடைக்கிற இடத்தில் ஒருகை பார்க்கிற ஆட்கள்! பிரியாணி வாசனையோ ஆளைத் தூக்குகிறது. அண்ணா சாப்பிட விடமாட்டார்கள் போலத் தெரிகிறதே என்கிற ஏக்கம் எங்களுக்கு.
ஒருவாறு சாப்பிட்டதுமே, அண்ணா போய்க் காரில் அமர்ந்துவிட்டார்கள். எங்கள் இருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை; அண்ணாவிடம் கேட்பது நாகரிகமன்று. மாயூரம் சென்று ஒய்வெடுக்க வேண்டுமோ, என்னவோ? சரி, போகவேண்டியதுதான்!
கார் புறப்பட்டுத் திருநல்லாறு வரும்போது ஒரு டயர் பங்ச்சர் ஆகிவிட்டது. “என்னய்யா, என்னய்யா?” என்று அண்ணா பதைக்கிறார்கள். சீக்கிரமாகவே ஸ்டெப்னி சக்கரத்தை எடுத்து மாட்டி, டிரைவர் மீண்டும் பயணம் தொடர்கிறார். பேரளம் கண்ணுக்குத் தெரிகிறது. “இது பேரளம்தானே? சாயுங்காலம் வரும்போதே கவனிச்சேன். இந்தத் திருப்பத்திலே தெரிகிற தியேட்டரில் “அன்பே வா” நடக்கிறது. இதை ஊரிலேயே பார்க்க நினைச்சேன். பார்க்க முடியவில்லை. இங்கே பார்க்கலாமே என்றுதான் காரைக்காலில் அவ்வளவு அவசரப் படுத்தினேன். அப்போதே சொல்லியிருந்தால் உங்களுக்குச் சப்பென்று போயிருக்கும்; என்ன, பார்க்கலாமா?” என்றார் அண்ணா ஜீயாரிடம்.
அப்பாடா! எங்களுக்குப் புதிர் விடுபட்ட நிம்மதி. “கொஞ்சம் நீங்கள் காரிலேயே இருங்க அண்ணா. மேனேஜர் எனக்குத் தெரிஞ்சவர்தான் போய் இடம்
இருக்காண்ணு பாத்துட்டு வர்றேன்” என்று இறங்கிப் போனார் ஜியார். இரவுக்காட்சி தொடங்கிவிட்டிருந்த நேரம் என்னிடம் சொல்கிறார் அண்ணா: கம் செப்டம் பர் கதைண்ணு சொன்னாங்க. ஏவி.எம். நல்லா எடுத் திருக்காங்களாம். அதான் பாக்க நெனச்சேன்.........”
இதற்குள் கொட்டகை உரிமையாளர், மேலாளர் இரு வருமே காருக்கருகில் பரவசத்துடன் வந்து வணக்கம் தெரி வித்து, உள்ளே அழைத்துப் போனார்கள். படத்தைப் பார்த்துக்கொண்டே அண்ணா, ஆரம்பிச்ச பிறகு வந்தது நல்லதாப் போச்சு, இல்லேண்ணா கூட்டம் சேர்ந்துடும்’ என்று சொல்லி முடிப்பதற்குள், சிங்கிள் புரொஜெக்டர் ஆகையால், ஒரு ஸ்பூல் முடிந்து, ஸ்லைடு போட்டார்கள். ஒரே கைதட்டல், ஆரவாரம்! என்ன என்று வியப்புடன் பார்த்தோம்.
எங்கள் தியேட்டருக்கு
விஜயம் செய்திருக்கும்
அறிஞர் அண்ணா அவர்களை
வரவேற்கிறோம்.
வணக்கம். நன்றி!
என்று, சிலைடு போடப்பட்டிருக்கிறது! உடனே படம் தொடர்ந்ததால் தொந்தரவில்லை; ஆனால் இடைவேளையில் மக்கள் அண்ணாவைப் பார்க்க வந்து விட்டார்கள். “படம் முடியுமுன்னே போய்விடலாமய்யா” என்று அண்ணா கிசுகிசுத்தார். அவ்வாறே பேரளத்திலிருந்து புறப்பட்டுக் கொல்லுமாங்குடி கடந்து சிறிது தொலைவு சென்றிருப்போம். அண்ணா பேசிக்கொண்டு வந்தார்: “இந்தப் படத்திலே பரவாயில்லேய்யா. இன்னொரு படத்திலே ஜவ்வாது மேடைகட்டிண்ணு ‘ரெண்டு பேரும் ஒவரா விழுந்து புரண்டு......’ “ஆம்மாண்ணா! நான் ஆணையிட்டால் என்று நினைக்கிறேன். குடும்பத்தோட பார்த்தப்ப எனக்கும் கஷ்டமாத்தான் இருந்தது” என்றேன்.
காரோட்டி, திருச்சி சின்ன பாண்டு (ரங்கன்) திடீரென்று காரை ஓரங்கட்டி நிறுத்தித் தொப்பென்று கீழே குதித்து, நடுச்சாலையில் உட்கார்ந்து, வாந்தி எடுக்க ஆரம்பித்தார். சே! பாண்டு அப்படிப்பட்ட ஆளில்லையே என்ற சந்தேகம் எனக்கு! அண்ணாவும் பதறிப் போனார்கள். “ஒண்ணுமில்லே, புகையிலை வாய்க்குள் போய்விட்டது” என்று சொல்லிக்கொண்டே தரையில் படுத்துவிட்டார்.
இரவு இரண்டு மணி. அக்கம்பக்கத்தில் வீடும் இல்லை. போக்குவரத்தும் இல்லை. ஜியாருக்கும் எனக்கும் கார் ஓட்டத் தெரியாது. அண்ணாவுக்குச் சிறிது தெரியும். அவர் ஸ்டிரியங்கில் போய் உட்கார்ந்துவிடப் போகி றாரே என்ற அச்சத்தில், பாண்டுவிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். தண்ணீர் பாட்டில் எடுத்து முகத்தில் தெளித்து விட்டேன்.
பயத்தைப் போக்கிக் கொள்ள ஏதாவது பேசவேண்டுமே. “மாயூரம் எட்டு மைல்தான் இருக்கிறது. இப்படியே பேசிக்கொண்டே இருட்டில் நடந்து போனால் பொழுது புலர மாயூரம் போய்ச் சேர்ந்துவிடலாம்” என்றேன் நான். இந்த நகைச்சுவையை யாரும் ரசிப்பதாகத் தெரிய வில்லை. அரைமணி ந்ேரம் திகைப்பினூடே கழிந்தது.
பாண்டு மெல்ல எழுந்து, “மன்னிச்சுக்குங்க அண்ணா. சரியாப் போச்சு” என்று சொல்லிக் காரில் ஏறினார். நாங்களும் நம்பிக்கையுடன் ஏறினோம். பிறகு அசம்பாவிதம் ஏதுமில்லை. மாயூரம் 10 நிமிடத்தில் போய் ஒழுங்காகச் சேர்ந்தோம். சஸ்பென்சாக ‘அன்பே வா’ பார்க்க ஆசைப்பட்டதில் எவ்வளவு இடைஞ்சல்கள் அண்ணாவுக்கு!