அண்ணா சில நினைவுகள்/விருந்தின் இடையே வருந்தினார்
தம்பி பரமசிவம் என்னிடம் ஒரு வேண்டுகோளைச் சமர்ப்பித்தான். “அண்ணாவை என் வீட்டில் சாப்பிடக் கூப்பிட வேண்டும். நீங்கள் கேளுங்கள். எனக்குப் பயமாயிருக்கிறது” என்றான். “ஆட்சிப் பொறுப்பேற்றுச் சில வாரங்களே ஆகின்றன. நான் ஏற்கனவே இரண்டு தடவை அழைத்து, இதே சென்னையில் விருந்து நடத்தி விட்டேன். நீ இப்போது வந்து கேட்கச் சொல்கிறாயே? எனக்குக் கூடத் தயக்கமாயிருக்கிறதே! சரி தக்க நேரம் பார்த்துக் கேட்டு உனக்கு Phone செய்கிறேன். நீ இருக்கும்போது தான் நான் அவரை அழைக்க வேண்டும் என்பது அவசியமில்லை, நீ போ!” என்றேன்.
பரமசிவம் அப்போது சமையல் கேஸ் ஏஜன்சி வைத்திருந்தான். சென்னையிலுள்ள நம் இயக்கத் தலைவர் களின் வீடுகளில் எரிவாயு அடுப்புகளை அறிமுகம் செய்தவன் அவனே, எல்லாருக்கும் அவன் என் தம்பி. எனவே அறிமுகம்.
தஞ்சையில் என் எதிர்விட்டுப் பையன். பால்யத்திலேயே பெற்றோர் மறைந்தனர். என் தம்பியுடன் படித்தவன். என்னை அண்ணனென அழைத்தவன். அங்கிருக்க இயலாமல், படிப்பைத் துறந்து, பிரகதி ஸ்டுடியோவில் ஸ்டோர் கீப்பராகச் சென்னை வந்தடைந் தவன், நீண்ட காலத்துக்கு முன்பே சிவாஜிகணேசன், நாடகக் கம்பெனியிலிருந்த நாட்களில், தன்னைச் சினிமா வில் சேர்த்து விடுமாறு பரமசிவத்துக்குக் கடிதம் எழுதியது உண்டு. ராஜசுலோசனாவைப் பரமசிவம் காதலித்துத் திருமணம் செய்தபோது, நானும் கரந்தை சண்முக வடிவேலுவும் சென்னை வந்திருந்து, 1951-ல் செயிண்ட் மேரிஸ் ஹாலில் திருமணத்தைப் பதிவு செய்து, கலைஞர், மதியழகன் ஆகியோர் வாழ்த்துரைக்கச் செய்தோம். முதலாவது தி.மு.க. மாநில மாநாட்டில், ராஜசுலோசனா வின் பரதநாட்டியம் ஒரு நிகழ்ச்சியாக நடத்தியிருக்கிறோம்.
இருவரும் ஒரு மகனுக்குப் பெற்றோரான பின்னர், ஒத்துப் போக முடியாமல், மணவிலக்குப் பெற்றனர். 1965-இல் மந்தைவெளியில் தனியே வீடு கட்டினான். பின்னர், மலேசியாவிலிருந்து பத்மா என்னும் பெண்ணை மணந்திருந்த நேரம்; அண்ணாவும் கலைஞரும் விருந்துக்கு வந்தால் தனக்குப் பெருமையாயிருக்கும் என விழைந்தான் பரமசிவம்.
நான் அண்ணாவிடம் கேட்டபொழுது, “என்னய்யா, இது. நீ கேட்பதைத் தயங்காமல் ஒத்துக் கொள்கிறவன் நான்! ஆனால் பரமசிவம் வீட்டுக்கெல்லாம் என்னை ஏன் அழைக்கிறாய்? நான் மறுக்க வேண்டியிருக்கிறதே!” என்றார்கள் சற்றுச் சங்கடத்துடன். கலைஞர் உதவிக்கு வந்தார். “அப்படியில்லை அண்ணா! கருணானந்தம் ஏதாவது விருந்து சாப்பிட வேண்டும். அதற்கு நம்மைப் பயன்படுத்துகிறார்” எனக் கூறினார். நான் தொடர்ந்து “தவறில்லை அண்ணா. இது நான் நடத்தும் விருந்தாகவே கருதலாம். என் தம்பிதானே அவன். மேலும் இந்த விருந்து சைவம். வேறு யாரையும் அழைக்க மாட்டேன். என் நெருங்கிய சொந்தக்காரர்கள்தான் இருப்பாங்க” என்று சில பல விளக்கங்கள் தந்த பின்னர் அண்ணாவின் ஒத்துழைப்பைப் பெற்றேன். நண்பர் டார்ப்பிடோ ஏ. பி. சனார்த்தனம் என்னை அப்பூதியடிகள் என்று கேலி செய்வார். அந்த அளவு இயக்க நண்பர்களை உபசரிப்பதில் எனக்கு மகிழ்வு.
மதியம் அந்த விருந்து. அண்ணாவுடன் கலைஞரும் மன்னை மாமாவும் வந்தார்கள். முதலில் ஏதோ எண்ணி அண்ணா தயக்கம் காட்டியிருக்கிறார்கள், இங்கு வந்தபின் அந்தத் தயக்கம் காணப்படவில்லை. இயல்பாகப் பழகினார்கள். என் ஒரே தங்கையின் கணவர் பழநிவேலு, அவரது அக்காளின் கணவர் டி. ஆர். பாலசுப்ரமணியம், இவர்கள் எல்லாரையும் மற்றும் குடும்பத்தினரையும் அண்ணாவுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அப்போது பரமசிவம் எடுத்த புகைப்படங்கள் நன்றாக இருக்கின்றன, அவன் வீட்டு மாடியிலேயே எடுக்கப்பட்டவை.
அன்று அண்ணா அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட என் தங்கை கணவர் பழநிவேலு, ஏற்கனவே கலைஞருக்குத் தெரிந்தவர். தாம்பரம் ரயில்வே காலனி யில் பல ஆண்டுகள் வசித்தவர். முனு ஆதி தாம்பரத்தில் பால் வியாபாரம் செய்து வந்தபோதே தெரியும். அவர் அன்று மிகவும் களிப்புக்கடலில் மிதந்து கொண்டிருந்தார். சென்னை பெசண்ட் நகர் அமைக்கப்பட்ட போது, வீட்டுவசதி வாரியத்தின் முதல் தொகுதி வீட்டிலேயே குடியேறியவர். மஞ்சட்காமாலை நோய்க்குப் பலியாகி 1969-சனவரி 29 அன்று சென்னை பொது மருத்துவமனையில் இயற்கை எய்திவிட்டார். என் வாழ்வில் இதனினும் பெரிய சோகம் இதுவரை ஏற்படவில்லை. அண்ணா அவர்கள், நோயின் கடுமையான பிடியில் சிக்கி அவதிப்பட்டு, அடையாறு மருத்துவமனையில் இருந்த அதே காலகட்டத்தில், இவர் G. H-ல் இருந்தார். இரண்டு ஆடுகளில் ஊட்ட நினைத்த குட்டியைப்போல நான் பரிதவித்தேன். ஓரிடத்தில் வீட்டுத் தலைவர். ஓரிடத்தில் நாட்டுத் தலைவர். இருவர் நலிவும் நான் வருந்திக் குமைந்து நைந்துருகச் செய்தவையாகும். டாக்சியில், ஒருநாளில் பலமுறை, இரு இடங்களுக்கும் விரைவேன். ஆயினும், அண்ணா நம்மை ஏமாற்றிச் செல்வதற்கு நான்கு நாள் முன்னரே, என் வீட்டு மாப்பிள்ளை தனது நாற்பத்து அய்ந்தாவது வயதிலேயே எங்களைப் பிரிந்தார். துயரச் சிறுபொறி பெருந்தீயாக மாறிச் சுட்டெரித்ததில், என் உள்ளம் சாம்பலாகிப் பறந்தது அடுத்த சில நாட்களில்!
பரமசிவம் வீட்டில் அண்ணாவுடன் நாங்களெல்லாம் அமர்ந்து உணவருந்தியதையும், நின்றதையும் புகைப் படத்தில் காணுந்தொறும் என் மனம் அலைபாய்கிறது. இதற்குப்பிறகு அண்ணா அவர்களை எங்கும் விருந்துக்கு அழைத்துச் சென்றதாக நினைவில்லை எனக்கு!
ஆனால் முதலமைச்சர் அண்ணா, செங்கற்பட்டு மாவட்டத்தின் தலைநகராகக் காஞ்சிபுரத்தைத் தேர்ந்தெடுத்துப் புதிய வரலாறு படைத்தாரல்லவா? பல்லவர் புகழை மீட்டாரல்லவா? அதே மாவட்டத்தைச் சார்ந்த பக்தவத்சலம் முதலமைச்சராகியும் செய்யாத ஒன்றை அண்ணா சாதித்தாரல்லவா? அன்றைய தினம் காஞ்சி மாநகர் விழாக்கோலம் பூண்டிருந்தது. வாதாபியை வென்று திரும்பியபோது பல்லவ மன்னனுக்கு வரவேற்பளித்தது போல!
அரசு அதிகாரிகள் அனைவருக்கும், அன்று மதியம், அண்ணா ஒரு பெரிய விருந்தளித்தார்கள். ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில் என்று நினைவு. நூற்றுக்கணக் கான அலுவலர்கள் உள்ள பந்தியில் ஒரு ஓரத்தில் தரையில் அமர்ந்து நான் சாப்பிடத் தொடங்கினேன். அண்ணா என்னைத் தேடிக் கண்டுபிடித்துக் குனிந்து என் அருகில் வந்து, “அடடே sorry கருணானந்தம்! இது சைவ சாப்பா டல்லவா? சாப்பிட உட்கார்ந்துட்டியே! கொஞ்சம் இரு! ஒனக்கு மட்டும் பிரியாணி வாங்கிவரச் சொல்றேன். வெய்ட் எ மினிட்” என்கிறார், தமிழகத்தின் முதலமைச்சர்!
நான் “வேண்டாம் அண்ணா பரவாயில்லை; இதுவே நன்றாயிருக்கிறது!” என்று பதில் உரைப்பதற்குள் என் கண்களில் நீர் கசிந்து, உள்ளம் உருகிக் கரைகிறது. அன்பினை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து மகிழ்ந்து திக்கு முக்காடிப் போகிறேன்.
“அண்ணா, அண்ணா! உனை எண்ணாத மனமே யில்லை-நீதானே அன்பின் எல்லை! அண்ணா, அண்ணா!