அதிகமான் நெடுமான் அஞ்சி/போரின் தொடக்கம்

10. போரின் தொடக்கம்


திகமானுக்குச் சேர மன்னனிடமிருந்து ஓலையைக் கொண்டு சென்றான் ஒரு தூதுவன். திடீரென்று, “உன்மேல்போரிடவருகிறோம்”என்றுசொல்லலாமா? “நம் நண்பராகிய காரிக்கு உரிய திருக்கோவலூரை அவரிடம் ஒப்பிக்க வேண்டும்; இல்லையானால் போருக்கு எழுவோம்” என்று ஓலை கூறிற்று. சான்றோர்கள் கூறிய அறிவுரையை ஒருவாறு ஏற்றுக்கொண்டு, இந்த முறையில் ஓலைபோக்கினான் பொறையன், அதிகமான் திருக்கோவலூரை மீட்டும் காரிக்கு அளித்துவிட்டால் போரே நிகழாமல் போகுமே என்ற நைப்பாசை அந்தச் சான்றோர்களுக்கு பெருஞ்சேரல் இரும்பொறையோ அதிகமான் பணிந்து வருவான் என்று எண்ணவில்லை. இதுவரையில் தோல்வியையே அறியாமல் வெற்றியிலே வளர்ந்தவன் அவன். அவன் இந்த ஓலையைக் கண்டு, “அப்படியே செய்து விடுகிறேன்” என்று கைப்பற்றிய ஊரைத் திருப்பிக் கொடுக்க முன் வருவானா ?

காரணமின்றிப் போரிட்டான் என்ற பழி வாராமல் இருக்கவே, இவ்வாறு ஒரு தலைக்கீட்டை வைத்து ஓலையனுப்பினான் சேரன். ‘அதிகமான் இசையமாட்டான்; போர் நடக்கத்தான் போகிறது; நமக்கே வெற்றி கிடைக்கும்’ என்று உறுதியாகக் கருதினான்.

தூதுவன் தகடூரை அடைந்தான். அவன் போவதற்கு முன்பே அதிகமானுக்குப் பொறையன் எண்ணம் தெரிந்துவிட்டது. ஒற்றர்கள் சேரன் தலைநகரில் நடைபெறும் போர் முயற்சிகளை அறிந்துவந்து முன்னமே சொல்லியிருந்தார்கள். ஆதலின் பொறையன் போரொடு வருவான் என்று ஒவ்வொரு நாளும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தான் அதிகமான். தூதோலே அவனிடம் வந்தது. படித்துப் பார்த்தான் . உடனே அமைச்சர், படைத்தலைவர், சான்றோர்கள் ஆகியவர்களை அழைத்து அவை கூட்டினான். மந்திரச் சூழ்ச்சியில் யாவரும் ஈடுபட்டனர்.

சில பெரியவர்கள் திருக்கோவலூரைக் கொடுத்து விடலாம் என்றார்கள். படைத்தலைவர்கள் அதற்கு இசையவில்லை. கடைசியில் போரையே வரவேற்பதென்று முடிவாயிற்று. “பாம்பின வாயில் புகுந்த தேரை மீண்டாலும் மீளும்; அதிகமான் கையில் சிக்கியது மீளாது என்பதைச் சேரன் தெரிந்து கொள்ளட்டும்” என்று விடை அனுப்பிவிட்டான்.

அதிகமான் கோட்டை பரந்து விரிந்த இடத்தை உடையது. மண்ணை அரைத்து வெல்லம், முட்டைப் பசை, வேறு பசைகள் ஆகியவற்றைக் கலந்து குழைத்து அமைத்தது. செம்பினால் செய்ததுபோன்ற வலிமையை உடையது. உறையூர், வஞ்சி, மதுரை என்னும் மாநகரில் உள்ள மதில்களைப்போன்ற சுற்று வட்டம் இல்லாவிட்டாலும் இக்கோட்டை மதில்கள் உறுதியானவை. உள்ளே மேடைகளும், அம்பை மறைவாக நின்று எய்யும் புழைகளும், குவியல் குவியலாக இரும்புத் துண்டுகளையும் வறுத்த மணலையும் வீசி எறியும்படியான மறைவிடங்களும் இருந்தன.

கோட்டையைச் சுற்றிலும் ஆழமான அகழியொன்று இருந்தது. அதன்மேல் வேண்டியபோது போடவும் போர் வந்தால் எடுத்துவிடவும் எளியனவாகப் பாலங்கள் இருந்தன. அகழியில் முதலைகளே விட்டு வளர்த்து வந்தார்கள். எவ்வளவு வலிமை இருந்தாலும் அகழியைத் தாண்டுவது அரிது. ஏதேனும் தந்திரம் செய்து அதைக் கடந்தாலும் மதிலின் மேல் ஏற முடியாது. மதில் வாயிற் கதவுகளோ வைரம்பாய்ந்த மரத்தால் ஆனவை. இரும்புத் தகடுகளாகிய போர்வையை உடையவை. மதிற் கதவுகளை யானைகளைக் கொண்டு முட்டி மோதித் திறப்பது பழங்காலப் போர் முறை. தம்கொம்புகளால் குத்தியும் மத்தகத்தால் மோதியும் யானைகள் கதவுகளை உடைக்கப் பார்க்கும். இந்த முறையில் தகடூரில் உள்ள கோட்டைக் கதவுகளைச் சிதைப்பது இயலாத செயல்.

அன்றியும் கோட்டையில் மற்றொரு வசதி இருந்தது. கோட்டையிலிருந்து வெளியே யாரும் அறியாமல் வரும்படியாக நிலத்துக்கு அடியில் ஒரு சுருங்கை வழி இருந்தது. அப்படி ஒன்று உண்டு என்பதை அதிகமானும் அவனுக்கு மிகவும் வேண்டிய சிலருமே அறிவார்கள். அவனுடைய மனைவிக்கும் தெரியும். ஏதேனும் தீங்கு கோட்டைக்குள் நேர்ந்து, வாயிலும் அடைபட்டிருந்தால் அந்தச் சுருங்கையின் வழியாக வெளியேறி விடலாம். எதிர்பாராதபடி கோட்டைக்குள் தீப் பற்றிக் கொண்டால் அது பயன்படும்.

அதில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டிருந்தால்தான் சமயத்துக்கு உதவுமென்று அதிகமான் அறிவான். ஆதலின், அவன் ஒன்று செய்தான் அடிக்கடி கோட்டை வாயில் சாத்திப் பூட்டப் பெற்ற நள்ளிரவில் அச்சுருங்கை வழியே புறப்பட்டுச் சென்று புறத்தே இருந்த நகரில் மாறுவேடத்தில் உலாவிவிட்டு வருவான். இதனால் நகர் சோதனையும் சுருங்கைச் சோதனையும் ஒருங்கே நிகழ்ந்தன.

போர் வரப் போகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட அதிகமான் தன் கோட்டையின் ஒவ்வோர் அங்குலத்தையும் கவனித்துச் செப்பஞ் செய்யலானான். அகழியின் கரைகளைச் சரிப்படுத்தினான். மதிலில் சிதைந்த பகுதிகளைக் கட்டுவித்தான். மற்றப் பகுதிகளைப் பின்னும் உறுதியாக்கினான். மதிலின் மேல் உள்ள பொறிகளைச் சீர்ப்படுத்தினான். அம்பு எய்யும் எப்புழைகளைத் தடை ஏதும் இல்லாமல் அமைக்கச் செய்தான். கோட்டைக்குள் இருந்த படை வீரர்களைப் போருக்கு ஆயத்தம் செய்யச் செய்தான். கோட்டைக்குள் இன்றியமையாதவர்களை மாத்திரம் வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியிலே நகரத்தில் போய் இருக்கச் சொன்னான். நகரில் இருந்த வீரர்களையும் படைக்கலப் பயிற்சியுடைய மைந்தர்களையும் அழைத்துக் கோட்டைக்குள்ளே இருக்கும்படி ஏவினான்.

பெருஞ்சேரல் இரும்பொறை படை எடுத்துவந்தால் எதிர் சென்று போரிட்டு அவனை ஓட்டுவதை அதிகமான் விரும்பவில்லை. அதற்குப் பெருமுயற்சி வேண்டும். தன் நாட்டுக்கு வெளியிலோ அல்லது உள்ளேயோ ஒரு போர்க்களம் உருவாகும். கைகலந்து போர் செய்யத் தொடங்கினால் பலர் மடிவார்கள். இவற்றிற்கெல்லாம் இடமின்றிப் பெட்டிக்குள் அடங்கிய பாம்புபோல் கோட்டைக்குள் இருந்தால், சேரன் வந்து கோட்டையை முற்றுகையிடுவான். மதிற்பொறிகளையும், மறைவிடத்திலிருந்து அம்புகளையும் ஏவி அந்தப் படைக்குச் சேதம் விளைவிக்கலாம். பகைப் படைகளால் அகழியைத் தாண்டவோ கோட்டையைக் குலைக்கவோ இயலாது. சில காலம் முற்றுகையிட்டுவிட்டுச் சோர்வடைந்து சேரன் தன் நாட்டுக்கே மீண்டு விடுவான். -இவ்வாறு தன் மனத்துள் ஒழுங்கு பண்ணிக்கொண்டான் அதிகமான்.

வந்த படை நெடுங்காலம் விட்டு அகலாமல் கோட்டையைச் சூழ்ந்து முற்றுகையிட்டிருந்தால் என்ன செய்வது என்ற கவலை அவனுக்கு இல்லை. இரகசியமாகச் சுருங்கை வழியே உணவுப் பண்டங்கள் வருவதற்கு ஏற்பாடு செய்யலாம் என்ற நம்பிக்கை இருந்தது. சான்றோர்கள் இந்தக் கருத்துக்கு இசைந்தார்கள். உயிர்ச் சேதம் கூடியவரையில் குறையவேண்டும் என்பதுதானே அவர்களுடைய கொள்கை?

கோட்டைக்கு வெளியே ஊர் விரிந்திருந்தது. பல வீதிகள் இருந்தன. நகர மக்களையெல்லாம் அழைத்து, போர் அணிமையில் வர இருப்பதைக் கூறினான் அதிகமான். முக்கியமான தலைவர்களை அழைத்து இன்ன இன்னபடி நடந்துகொள்ள வேண்டும் என்றான்.

அதிகமான் தனக்கு அவசியமாக இருந்தால் வேண்டிய மன்னர்களைத் துணையாகக் கூட்டிக்கொள்ளலாம் என்று கருதினான். சோழ மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஆள் அனுப்பினான். பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு வரபோகிறானென்றும், தான் கோட்டையிலிருந்தபடியே போர் செய்யப் போவதாகவும் தெரிவித்தான். ‘கோட்டைக்குள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு ஊறுபாடு யாதும் நேராது. ஒருகால் கோட்டைக்கு வெளியே வந்து போரிட வேண்டிய நிலை வந்தால் அப்போது உங்கள் உதவியை எதிர்பார்ப்பேன்’ என்றும் எழுதியனுப்பினான். ஔவையார் தூது சென்று நட்பு உண்டாக்கிய தொண்டைமானுக்கும் இப்படி ஓர் ஓலை போக்கினான். அவர்களிடமிருந்து இசைவான விடையே வந்தது. பாண்டிய சோழ மன்னர்களுக்குச் சேரனிடம் நட்பு இல்லை. ஆதலின் இந்தப் போர் பெரிதானால் தாமும் சேர்ந்து இரும்பொறையை வீழ்த்த வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.

அதிகமான் கோவலூரை விட முடியாது என்று சொல்லி அனுப்பியதைப் பொறையன் அறிந்தான். “போருக்கு வா!” என்று அழைத்த அழைப்பாகவே அவன் அதை ஏற்றுக்கொண்டான். படை, வஞ்சியை விட்டுப் புறப்பட்டது.

அதிகமான் படையை எப்படி எப்படி வகுக்க வேண்டுமென்பதைத் தன் படைத் தலைவர்களுக்குச் சொன்னான். கோட்டைக்குள் இருந்து பகைவர்கள் மேல் அம்பும் பிற படைகளும் வீசி ஓடச் செய்ய, இன்னதை இன்னபடி செய்யவேண்டும் என்று திட்டம் வகுத்தான். அவசியத்தி்னால் கோட்டையை விட்டு வெளியே வரவேண்டுமானால் அப்போது இன்னது செய்யவேண்டும் என்பதையும் வரையறை செய்தான். சேர மன்னன் படை புறப்பட்டுவிட்டது என்பதை ஒற்றரால் அறிந்தவுடன், எவ்வளவு உணவுப் பொருளைக் கோட்டைக்குள் சேமித்து வைக்கலாமோ, அவ்வளவையும் வைத்துக்கொண்டான். அகழியினுள் பாலங்களையெல்லாம் உள்வாங்கச் செய்தான். கோட்டைக் கதவுகளை மூடித் தாழிடச் சொன்னான்.

சேரன் படை வேகமாக வந்தது; யானைப் படையை முன்னாலே விட்டுப் பின்பு குதிரைப் படையை விட்டார்கள். அப்பால் தேர்ப்படை சென்றது. கடைசியில் காலாட்படை கடல்போலத் திரண்டு நடந்தது.

சேரன், அதிகமான் நாட்டுக்குள் வந்துவிட்டான். யாரும் அவனை எதிர்ப்பார் இல்லை. திடீரென்று எங்கிருந்தாவது படை வந்து தாக்குமோ என்று எதிர்பார்த்தான். ஒன்றும் வரவில்லை. தன் படை வருவதை முரசடித்துத் தெரிவித்தும் யாரும் எதிர்ப்படாததைக் கண்டு சேரன் வியந்தான்.‘ஒருகால் சமாதானம்செய்து கொள்ள விரும்புகிறானோ?’ என்றுகூட நினைத்தான். நாட்டுக்குள் படை நடந்துகொண்டிருந்தது. நாட்டு மக்கள் அவர்களை எதிர்கொள்ளவில்லை. போவதற்கு இடம் கொடுத்து விலகியிருந்தார்கள்.

படை தகடூரை அடைந்துவிட்டது. அதிகமான் கோட்டைக்குள் இருக்கிறான் என்பதை உணர்ந்தான் சேர மன்னன். யானைப் படைகளைக் கொண்டு கோட்டையைத் தாக்கவேண்டும் என்று தீர்மானித்தான். கோட்டைக்குமுன் அகழி இருந்தது. அதைத் தாண்டிச் சென்றால் தானே கோட்டையைத் தாக்கலாம்? கோட்டையோடு ஒட்டி ஆழமாக இருந்தது அகழி. கோட்டை மதிலுக்கும் அதற்கும் இடையே வெளியிருந்தால் அங்கே நின்று கோட்டையை இடிக்கலாம். அதற்கும் வழியில்லை. கோட்டை வாயில்கள் உள்ள இடங்களில் புதிய பாலங்களை அமைத்துச் சென்று யானைகளைக் கொண்டு கதவுகளை மோதிச் சிதைக்கலாம். பாலம் போட என்ன வழி? பெரிய பெரிய மூங்கில்களைக் கொண்டுவந்து போட்டுப் பாலம் கட்டவேண்டும் அதற்கு நேரம் ஏது? மூங்கில்களுக்கு எங்கே போவது?

‘அகழி ஒன்று இருப்பது நமக்கு நினைவு இல்லாமற் போயிற்றே!’என்று அவன் வருந்தினான். கோட்டையை முற்றுகையிடும்படி நேரலாம் என்பதையே அவன் எண்ணிப் பார்க்கவில்லையே! நேருக்கு நேர் போர்க்களத்தில் கை கலப்பதாகவே அவன் கற்பனை செய்திருந்தான். கோட்டை மதிலின் உயரத்தைப் பார்த்துப் பார்த்துப் பெருமூச் செறிந்தான். கீழ் இருந்தபடியே சில அம்புகளை எய்யச் சொன்னான்.

அடுத்த கணம் உள்ளே இருந்து சோனாமாரியாக அம்புகள் வந்து விழுந்தன. ஏப்புழைகளின் பின்னிருந்து வீரர்கள் குறி பார்த்து அடித்தமையால் அம்புகள் சேரமான் யானைகளின்மீது வந்து தைத்தன. கோட்டையிலே பாதுகாப்பாக இருந்தார்கள் அதிகமான் வீரர்கள். அயலான் ஊரில் திறந்த வெளியில் இருந்தனர் சேரமான் படை வீரர்கள். முதலை தண்ண்ரீரில் இருந்தால் அதை யாரும் வெல்லுவது அரிது; யானையையும் இழுத்துவிடும். அது கரையில் வந்தாலோ எளிதிலே கொன்றுவிடலாம். அதிகமான் தண்ணீரில் இருந்த முதலையைப் போல இருந்தான். பெருஞ்சேரல் இரும்பொறையோ தரையிலே கிடந்த முதலை ஆனான்.

புறத்திலிருந்து விடும் அம்புகள் உள்ளே போய் விழுமேயன்றிக் குறி பார்த்து அடித்தால் தைப்பது போலத் தைக்குமா? சேரமான் வீர்ர்கள் அம்பை மதிலுக்குள் விட்டுக்கொண்டே இருந்தார்கள். உள்ளே இருந்தவர்களும் அம்பை எய்தார்கள்; சுடுமணலை வீசி விட்டார்கள்; இரும்புக் குண்டுகளை இறைத்தார்கள்; ஈட்டி முதலிய கூரிய படைக் கலங்களையும் மதிலின் மேல் இருக்கும் மேடையில் மறைந்திருந்து வீசினார்கள்.

அகழியை நெருங்காமல் விலகி நின்றார்கள் சேரன் படை வீரர்கள. அணுகினால் மேலிருந்து வந்த அம்புகளும் பிற படைகளும் அவர்களைக் கொன்றன. ஆதலால் விலகியிருந்து அம்பை எய்தார்கள். யானை முதலியவற்றைப் பின்னுக்கு நகர்த்தி வில் வீரர்கள் முன்னணியில் நின்றார்கள். அவர்கள் கவசம் அணிந்து கையில் கேடயத்தையும் வைத்திருந்தமையால், வரும் அம்புகளைத் தாங்க முடிந்தது.

“சான்றோர்கள் கூறியதைக் கேளாமல் வந்தது தவறு” என்று இரும்பொறை தன்னைத்தானே நொந்து கொண்டான். ஊருக்குப் புறம்பே ஓரிடத்தில் படை பாளையம் இறங்கியிருந்தது. முதல் நாள் இரவு சேரன் தன் பாசறையில் அமர்ந்திருந்தான். மலையமான் திரு முடிக்காரி, பிட்டங் கொற்றன், நெடுங்கேரளன் முதலிய படைத்தலைவர்கள் உடன் இருந்தார்கள்.

“எத்தனை காலம் புறத்தில் நின்று போர் செய்தாலும் அதிகமானை வெல்ல முடியாதுபோல் இருக்கிறதே! நாம் விடும் அம்புகள் யாவுமே வீணாகின்றன. அவர்கள் அம்புகளோ நம் யானைகளையும் குதிரைகளையும் மாய்க்கின்றன; வீரர்களையும் புண்படுத்துகின்றன. முதல் நாளிலேயே இந்தத் தடுமாற்றம் வந்தால் மேலே எப்படிப் போரை நடத்துவது?” என்று தளர்ச்சியைப் புலப்படுத்தும் குரலோடு பேசினான் சேரன்.

“நம்முடைய ஒற்றர்கள் இந்த அகழியையும் கோட்டையையும் பற்றித் தெரிந்துகொண்டு வந்து சொல்ல வில்லையோ?” என்று ஒரு படைத் தலைவன் கேட்டான்.

“அகழி இருக்கிறது, கோட்டை இருக்கிறதென்று கூறினார்கள். நான் அவற்றை நெஞ்சிலே பதித்துக் கொள்ளவில்லை. அவனுடைய நாட்டுக்குள்ளே புகுவதற்கு முன்பே நம்மை எதிர்ப்பான் என்று எண்ணினேன். அவன் படையைச் சூழ்ந்துகொண்டு எளிதிலே அடிப்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடித்தேன். இப்படி ஒரு நிலை நேரும் என்பதை எண்ணிப் பார்க்கவில்லை. அகழி மலைப்பாம்பு போலக் குறுக்கிடுவதை நான் எண்ணியிருந்தால் வேலையும் வாளையும் தொகுக்கும்போதே மலைநாட்டு மூங்கில்களையும் தொகுத்திருப்பேனே!” என்று அங்கலாய்த்தான் சேரன்.

“இப்போது மலைநாட்டிலிருந்து மூங்கில்களை வருவிக்க இயலாதா?”

“அதற்கு அங்கே ஆட்கள் இருந்து வெட்டி அனுப்ப வேண்டும். மூங்கில்களை வண்டியில் போட்டு வந்தால் இங்கே வர எவ்வளவோ காலம் ஆகும். அதுவரையில் நாம் இங்கே கையைக் கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? மேலிருந்து வரும் அம்பினால் புண்பட்டுக்கொண்டே இருக்கலாமா?” -சேரன் வஞ்சிமா நகரத்தில் பேசிய பேச்சுக்கும் இதற்கும் எத்தனை வேற்றுமை ! அப்போது எத்தனை மிடுக்காகப் பேசினான்! அவன் குரலில் இப்போது சோர்வு தட்டியது.

“மன்னர்பிரான் இவ்வாறு மனம் இழந்து பேசுவது தகாது. தாங்களே இப்படிப் பேசினல் படைவீரர்களுக்கு உள்ள ஊக்கம் தளர்ந்துவிடும். இன்றுதான் போரைத் தொடங்கியிருக்கிறோம். நமக்கு ஒன்றும் பெரிய தீங்கு நேர்ந்துவிடவில்லை. மேலிருந்து வரும் படையினால் துன்பம் நேராத வகையில் நம்மை நாம் காத்துக் கொள்வதுதான் இப்போது முதல் வேலை. அது எளிதேயன்றி அருமையான காரியம் அன்று. எல்லாப் படைகளும் அங்கே போய் நிற்க வேண்டியதும் அவசியம் அன்று.”-இவ்வாறு காரி கூறினான்.

“ஏன்?” என்று தலை நிமிர்ந்து கேட்டான் சேரன்.

“அதிகமான் படைகள் நேருக்கு நேர் நின்றால் அப்போது நம் படைகள் முழுவதையும் எதிரே நிறுத்த வேண்டும். இப்போது சரியான முறையில் போரா நடக்கிறது?அவன் உள்ளே பாதுகாப்பாக இருக்கிறான். நாம் வெளியிலே நிற்கிறோம். சில படை வீரர்களைக் காவலர்களைப் போலக் கோட்டையைச் சுற்றி நிறுத்தினால் போதும். உடம்பு முழுவதும் மூடும் கவசங்களை அணிந்து அகழியினின்றும் நெடுந்துாரம் தள்ளி நின்றால், மேலிருந்து வரும் படைக்கலங்களால் ஒன்றும் செய்ய இயலாது. நாம் போரை இன்னும் தொடங்கவே இல்லையே! என்று காரி கூறினான்.

“பொறியில் அகப்பட்ட எலியைக் கண்டு வெளியில் வரட்டும் என்று பார்த்து நிற்கும் நாயைப் போல நாம் இருக்க வேண்டும் என்று சொல்கிறீரா?” என்று சேரமான் கேட்டான்.

“அந்த உவமை ஒரு விதத்தில பொருத்தமானது தான். உள்ளே இருப்பவனை வெளியிலே இழுத்துவர ஏதாவது வழி உண்டானால் செய்யலாம்.இல்லையானால், இந்தக் கோட்டையையும் அகழியையும் சூழ்ந்து நின்று காவல் செய்வதுதான் இப்போது செய்யக் கூடியது.” காரி கூறுவது நடைமுறைக்கு ஏற்றதென்பதைச் சேரமான் உணர்ந்தான். அத்தனை படைகளையும் குவித்துக்கொண்டு கோட்டையை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நிற்பது பேதைமை என்பது அவனுக்குத் தெளிவாயிற்று. காரியின் சொற்களை ஏற்றுக்கொண்டான்.