காட்சி 1.

இடம் : அந்தமான் தீவில் கைதிகள் வேலை பார்க்கும் இடம்

காலம் : மாலை

பாத்திரங்கள்: நடராஜன், மற்றொரு கைதி.

[கிழக் கைதி ஒருவன் விறகு உடைத்துக் கொண்டே பாடுகிறான். இசை இன்பத்தில் மயங்கிய மற்றொரு வாலிபக் கைதி கிழவனை நெருங்குகிறான்.]

(கிழக் கைதியின் பாட்டு)
[இராகம்-கரகரப்பிரியா]

(தாளம்-ஆதி)

சிந்தையைக் கவர்ந்திடும் இந்திய நாட்டை இந்த
சென்மத்தில் காண்பேனோ?-எந்தன்
அந்திய காலம் வரை அந்த மான் தீவிலேயே
நொந்துயிர் வீழ்வேனோ? (சிந்தை)

கங்கை காவிரி யமுனை கோதாவரியோ டின்னும்
கணக்கில்லா நதியோடி-எங்கும்
பொங்கும் செழுமையும் களிப்பும் தரும் சென்ம
பூமியைக் காண்பேனோ? (சிந்தை)

வாலிபக் கைதி : ஆஹா என்ன இனிமை! என்னபொருள் நயம்! எங்கே இன்னுமொருமுறை பாடுங்கள் கேட்போம்! 

கிழக் கைதி: என்ன! என்பாட்டு அவ்வளவு இனிமையாகவா இருக்கிறது?

வாலிபக் கைதி: ஆமாம். அதிலும் தன் தாய் நாட்டின் பெருமையைக் கேட்பதில் உள்ள இன்பத்திற்கு ஈடு சொல்லவும் கூடுமா?

கிழக் கைதி: தம்பி இப்படி உட்கார்; உன் இஷ்டப்படியே பாடுகிறேன்.

[வாலிபக் கைதி உட்காருகிறான். கிழக் கைதி பாட்டின் பிற்பகுதியைப் பாடுகிறான்]

சிற்பம் ஓவியம் கீதம் காவியமோடு-பல
சீர்மிகும் கலைமேவி-இணை
செப்பரிய எனது செல்வத் தமிழ்த் தாய்நாட்டைத்
தெரிசித்து மகிழ்வேனோ?(சிந்தை)

பொன்னும் நவமணியோ டின்னும் பல பொருள்கள்
பொலிவுறும் தமிழ் நாட்டை-எந்தன்
கண்ணுக் காணாமல் என் வாழ்நாளை வீணே
கழித்திங்கு மாள்வேனோ? (சிந்தை)

வாலிபக் கைதி: ஐயா! நிம்மதியற்ற இந்த சிறைவாழ்க்கையில் இத்தனை நாட்களுக்குப் பிறகு இன்றைக்குத்தான் என் உள்ளத்தில் இன்ப மலர் அரும்புகிறது. என் தாய்நாட்டு இயற்கை இன்பங்களுக்கிடையே இருப்பதைப் போன்ற இன்ப உணர்ச்சியையே உண்டாக்கிவிட்டது தங்கள் இன்னிசை.

கிழக் கைதி: இயற்கைதானே!பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே” என்ற மணியுரை அறிஞர்களின் அனுபவ உண்மை யல்லவா? உம், அதிருக்கட்டும்; உன்னோடு தனித்துப் பேசவேண்டுமென்ற ஆசை, இன்றைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைத்தது. உன்னைப் பார்த்தால் உயர்ந்த குடும்பத்தில் உதித்த பிள்ளையைப்போல் தெரிகிறது. என் தலைவிதிதான் பதினேழு ஆண்டுகளாக இந்த அந்தமான் தீவில் படாத பாடெல்லாம் படுகிறேன். நீ இந்தச் சிறுவயதில் இவ்வளவு கொடிய தண்டனையடையும்படி என்ன குற்றத்தைச் செய்துவிட்டாய்?

வாலிபக் கைதி: ஐயா, இன்ப வேளையில் இந்தத் துர்ப்பாக்கியனின் வரலாற்றைக் கேட்டுக் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும் தங்கள் மனத்தையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம். பிறகு ஒரு நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம். இன்றைக்கு நம் நாட்டு அறிஞர்கள் யாராவது ஒருவரைப் பற்றிய கதையைச் சொல்லுங்கள் கேட்போம்.

கிழக் கைதி : தம்பி! ஒரு அளவுக்கு மேற்படும்போது இன்பம், துன்பம் இரண்டும் ஒன்றுதான். என்னைப் பொருத்தமட்டும் நிம்மதி குறைவென்பதொன்றுமில்லை. உன்னைப் பற்றிய வரலாற்றை அறிய என் மனம் அதிகமாக விரும்புகிறது.

வாலிபக் கைதி : ஐயா! தங்கள் விருப்பத்தைத் தடுக்க நான் விரும்பவில்லை. வாருங்கள் இப்படி உட்கார்ந்து பேசலாம்.

[இருவரும் ஒரு பாறைமீது உட்காருகிருர்கள்.]

வாலிபக் கைதி : என் சொந்த ஊர் தூத்துக்குடி. என் தந்தை ஒரு பெரிய கப்பல் வியாபாரியாகவும் செல்வந்தராகவும் இருந்தார். எங்கள் ஊரில் என் தந்தைக்கு அபரிமிதமான செல்வாக்கும் மதிப்பும் இருந்தன எங்கள் குடும்பமும் செல்வபோகத்தில் திகழ்ந்தது. இன்னிலையில் எங்கள் கப்பல் ஒன்று புயலில் சிக்கிக் கவிழ்ந்தது. கோடிக்கணக்கான ரூபாய் இதில் நஷ்டம்; வியாபாரம் நொடித்தது. நஷ்டத்தை ஈடு செய்ய எங்கள் நில புலன்களெல்லாம் விற்றுக் கொடுக்க வேண்டியதாயிற்று. கெளரவத்தோடும் நாணயத்தோடும் வாழ்ந்த என் தந்தைக்கு இச்சம்பவம் பெரும் மனச் சோர்வை உண்டாக்கியது. மனேவியாதியின் காரணமாகவே அவரும் இம் மண்ணுலக வாழ்வை நீத்தார். பலரும் மதிக்க, செல்வத்தில் திகழ்ந்த எங்கள்ம் குடும்பம், அதே ஊரில் சிறுமையிலும் வறுமையிலும் சில நாள் அல்லலுற்றது.

கிழக் கைதி : உம், அப்புறம்............”

வாலிபக் கைதி: எனக்கோர் தாய் மாமன் இருந்தான். அவன் பணக்காரன்; வறுமையையும் தனிமையையும் நீக்கிக் கொள்ள நினைத்த என் தாய், தன் அண்ணன் பொன்னம்பலம் பிள்ளை இருக்கும் ஊராகிய ஷண்முகநாத புரத்துக்கு, எஞ்சிய சில பொருள்களோடு எங்களையும் அழைத்துக் கொண்டு போனாள். நாங்கள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் எங்களிடத்தில் அன்பும் மதிப்பும் காட்டிய அதே திவான்பகதூர் பொன்னம்பலம் பிள்ளை, அன்று எங்களைப் புறக்கணித்தார். எங்கள் ஏழ்மையைக் கண்டு ஏளனம் செய்தார். வேறு வழியில்லாத என் தாய் எஞ்சிய பொருளில் ஒரு சிறு வீட்டை வாங்கிக்கொண்டு எளிய வாழ்க்கை நடத்த ஆரம்பித்தாள். நானும் என் தங்கையும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தோம். இருந்த பொருள்யாவும் தீர்ந்துவிடவே பள்ளிப்படிப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உத்தியோக வேட்டையில் இறங்கினேன். அலையாத இடம் இல்லை. கேட்காத ஆபீஸ் இல்லை. ஒன்றும் பயனில்லை. வேலையில்லாது வீணாகக் கழியும் என் வாழ்நாளை நல்ல வழிகளில் செலவழிக்க எண்ணினேன். சீர்திருத்தக் கழகமொன்று நிறுவி என்னாலான பொது ஜனத் தொண்டுகளைச் செய்து வந்தேன். ஏழைகளை இம்சித்துப் பொருள்சேர்க்கும் என் மாமனுக்கு இதனால் என்மீது ஆத்திரம் அதிகரித்தது. என் பொதுப் பணியும் அதோடு வறுமையும் பெருகிக்கொண்டே வந்தன. ஏழைகள் என்னை வாழ்த்தினர். பணக்காரர்கள் தூற்றினர். எங்கள் சங்கத்தின் மூலம் பல விதவா விவாகங்களும் கலப்பு மணங்களும் நிகழ்ந்தன. வெளியுலகம் தெரியாத என் தாய் என்னைச் சதா தூஷிப்பாள். என் தங்கையின் திருமணத்தைக் குறித்தும், எங்கள் வறுமையைப் பற்றியும், நான் கவலையின்றிச் சுற்றுகிறேனென்பது என் தாயாரின் எண்ணம். ஆம்; அன்று ஒரு முக்கியமான பொதுக்கூட்டம்; அதற்காக நான் வெளியே புறப்பட ஆயத்தம் செய்து கொண்டிருந்தேன்.

[கைதி சொல்லும் கதையின் பிற்பகுதி நிகழ்ச்சியாக வருகிறது.]

"https://ta.wikisource.org/w/index.php?title=அந்தமான்_கைதி/1&oldid=1073485" இலிருந்து மீள்விக்கப்பட்டது